28

கையில் காகிதப்பொட்டலத்தோடும்,  கண்ணில் சோர்வோடும் நின்றிருந்த மனோவைப் பார்த்தாள் ரேணு. காலையில் நடந்த வாக்குவாதமெல்லாம் மறந்துபோய் ஓடிச்சென்று அவனைத் தோளோடு அணைத்துக்கொண்டாள் அவள். அந்நாளின் பாரங்கள் மொத்தமாக மனதை அழுத்திட, விசும்பத் தொடங்கினாள் அவள். மனோ அவளை அணைத்துக்கொண்டு ஆறுதல் கூற முயன்றான்.

"ரேணு.. ரொம்ப ரொம்ப சாரிடி.. என்னவோ கோவத்துல அப்படிக் கத்திட்டேன். நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாதுடி.. சாரி"

அவளோ இன்னும் சத்தமாக அழுதாள்.
"எங்கயாச்சும் கண்காணாத எடத்துக்கு ஓடிப் போயிடலாம்போல இருக்கு மனோ.. என்னால முடியல."

"ஷ்ஷ்.. இப்ப என்ன ஆச்சு? ஜஸ்ட் ஒரு நியூஸ் தானே அது..? அது போனா என்ன? அதுக்காகவெல்லாம் இப்படி அழுவாங்களா? ரிலாக்ஸ் ரேணு. கையில கொஞ்சம் சேவிங்ஸ் இருக்கு... முடிஞ்சவரை சமாளிக்கலாம். நீ அழறத நிறுத்து மொதல்ல. வா, வீட்டுக்குள்ள போலாம்.. எவனாவது தெருவுல இருந்து பார்க்கப் போறான்.."

அவளை அழைத்துக்கொண்டு படியேறிச்சென்று கதவைத் திறந்து உள்ளே நுழைந்து, இரண்டு நாற்காலிகளை எடுத்துப்போட்டு அவளை அமரவைத்துத் தானும் அமர்ந்தான் அவன். சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்து அவள் கையில் ஒன்றைத் தந்தவன், பைக்குள் கையை விட்டு, கண்ணாடி மதுக்குடுவை ஒன்றையும் எடுத்தான்.

ரேணுவுக்கு வாயில் வைத்த உணவு புரையேறியது.
"என்னடா இது?"

"மருந்துன்னு வச்சிக்கயேன். உனக்கு வேணாம்னா விடு."

ஜெர்ரியின் வார்த்தைகள் ஏனோ அப்போது காதில் ஒலித்தன.
"ஆல்கஹால் எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு ஆகாது ரேணு. பிரச்சனையை மறக்கத் தான் அது உதவும். ஆனா தள்ளிப் போடப் போட, பிரச்சனைகள் பெரிசாத்தான் வளரும்.."

அதையே மனோவிடம் சொன்னாள் அவள்.

"வேணாம் மனோ. நம்ம பிரச்சனைக்கு இது தீர்வு கிடையாது... இது ஜஸ்ட் அதை மறக்கடிக்க மட்டும்தான் உதவும். என்னத்துக்கு இது நமக்கு?"

மனோ விரக்தியாக சிரித்தான்.

"மறக்கடிச்சாலே போதுமே... வேறென்ன வேணும் எனக்கு?"

ரேணு அவன் கையிலிருந்த பாட்டிலைப் பிடுங்க முயன்றாள். அவனோ அதை அவளுக்கு எட்டாத தூரத்தில் பிடித்துக்கொண்டான்.
"ரேணு. நீ வேணாம்னு சொல்லிட்ட, நான் வற்புறுத்தல. நான் வேணும்னு சொல்றேன், நீயும் தடுக்காத. நான் இங்க சரக்கடிக்கறதுல உனக்குப் ப்ராப்ளம்னா, நான் கிளம்பிப் போறேன்."

அவன் எழ முயல, அவனது தோளைப் பிடித்துத் தடுத்தாள் அவள்.
"இங்கேயே சாப்ட்டுப் போ. ஆனா போதை தெளிஞ்சப்புறம் தான் வண்டியைத் தொடணும்."

அவன் முறுவலித்துத் தலையசைத்தான். தொலைக்காட்சியில் ஏதோவொரு நகைச்சுவைக் காட்சியில் லயித்துச் சிரித்தவாறே சாப்பிட்டு முடித்தனர் இருவரும்; மனோ மட்டும் மதுக்கோப்பையுடன்.

"ப்ச்.. பாதி பாட்டிலை காலி பண்ணிட்ட மனோ.. போதும். கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம். லேட்டானா நீ எப்படி வீட்டுக்குப் போறது?"

ரேணு பாட்டிலை அவனிடமிருந்து நகர்த்திட, அவனோ மீண்டும் அதைத் தன்புறம் இழுத்துக்கொண்டான். ரேணு ஆயாசமாக சாய்ந்தாள் நாற்காலியில்.

"வீட்டுக்காரங்களுக்கு தெரிஞ்சதுன்னா அவ்ளோதான்.. ஏற்கனவே சிங்கிளா இருக்கற பொண்ணுக்கு வீடு தர யோசிச்சாங்க.. அட்வான்சை ரெண்டுமடங்கா தர்றேன்னு சொல்லித்தான் வீட்டை வாங்கினேன். இப்ப மட்டும் இங்க நடக்கற கூத்து தெரிஞ்சதுன்னா.. கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளிடுவாங்க!"

"ஹ! அதென்ன ரேணு.. அடுத்தவன் கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளறதை இந்த ஊரு ஆளுங்க ஹாபியாவே வெச்சிருக்காங்க? எங்க போனாலும் விரட்டறானுக..!?"

"இது உன் ஊரும்தான்.. மறந்தாச்சா?"

"ப்ச்.. சென்னைன்னு சொல்லிக்கறதுதான்... ஆனா சென்னை இல்ல, செங்கல்பட்டு."

"அடப்பாவி.. மூணு வருஷமா சென்னைன்னு தானடா சொன்ன!? குடிச்சதும் உண்மைய உளறுது பாரு ஓட்டவாய்!"

"ஹெஹ்ஹெஹ்ஹே" போதையில் சிரித்தான் அவன். ரேணு எழுந்தாள்.

"எனக்குத் தலை வலிக்குது. தூங்கணும். குடிச்சது போதும், கொஞ்சம் வெந்நீர் வெச்சுத் தர்றேன், அதைக் குடி.."

அவள் எழப்போக, மனோ வேகமாக அவள் கையைப் பிடித்திழுத்து அமர்த்தினான்.

"வெய்ட் வெய்ட்.. ரேணு.. எனக்கொரு மாஸ்டர் ப்ளான்! இந்த கேஸை நாம சால்வ் பண்ணுவோம்!"

"ஹான்.. சரிதான்.. சால்வ் பண்ணலாம்.. இரு சுடுதண்ணி வெச்சிட்டு வர்றேன்"

"ஏய், நான் சீரியஸா சொல்றேன்.. இந்தக் கொலைகாரனை நாம கண்டுபிடிக்கலாம். இன்னும் ஒரு மாசத்துக்குள்ளாற! ஒவ்வொரு ஸ்டெப்பையும் டாக்குமெண்டரியா எடுத்துட்டு, கொலைகாரனைப் பிடிச்ச பின்னால டிவில அதை டெலிகாஸ்ட் பண்ணலாம்.. இந்த நெட்ஃப்ளிக்ஸ், ஹெச்.பி.ஓ சேனல்ல எல்லாம் செய்வாங்களே... அந்தமாதிரி!"

"என்ன சரக்குடா அடிச்ச? இது வேற லெவல் போதையா இருக்கு!?"

மனோ எழுந்து தடுமாறிக்கொண்டே சென்று, சிங்க்கில் தண்ணீரெடுத்து முகத்தில் அடித்துக் கழுவினான். பானையில் குடிதண்ணீர் முகர்ந்து குடித்துவிட்டு, விறுவிறுவென ரேணுவிடம் வந்தான்.

"தெளிவா இருக்கேன், போதுமா? நான் சொன்னதை கொஞ்சம் யோசிக்கறயா?

இதுவரை எத்தனையோ கவர் ஸ்டோரியை தேடிப் போயிருக்கோம் நாம.. உனக்கு ஞாபகமிருக்கா, அந்த மந்திரி பொண்ணைக் கடத்துன கேஸ்ல, போலீஸ் நமக்குத் தகவல் சொல்ல மறுத்தப்போ, நீயா உட்கார்ந்து எல்லா டேட்டாவையும் படிச்சு, அது ஒரு நாடகம்னு கண்டுபிடிச்சியே..? நம்ம சேனல்தானே அதை எக்ஸ்க்ளூசிவா எடுத்து நியூஸ் போட்டாங்க! எத்தனை அகதா க்ரிஸ்டி, ஆர்தர் கோனன் டாய்ல் கதை புக் படிச்சிருப்போம், நம்மால இதை சால்வ் பண்ண முடியாதா?"

"மனோ.. அது போலீஸோட வேலை. நாம ஜஸ்ட்.. ஜர்னலிஸ்டுங்க தான். நம்ம வேலை, நடந்த செய்தியை சேகரிக்கறது; செய்தியை உருவாக்கறது இல்ல. நான் அன்னைக்கு ஏதோ லாஜிக் இடிக்குதேன்னு அந்தக் கேஸைத் தொடப்போய், அது ஹோக்ஸ்னு தெரியவந்தது.. அது எதேச்சையா நடந்தது... நீயும் நானும் நாலு புக்கைப் படிச்சிட்டு டிடெக்டிவ் ஆகிட முடியாது.

உன் மனசு எனக்குப் புரியுது. திடீர்னு வேலையில்லாம போனது, உன்னை பாதிச்சிருக்கு. எனக்கும் மொதல்ல அப்படித்தான் இருந்தது. எதையாச்சும் செஞ்சு எப்படியாச்சும் மேல வந்துட மாட்டோமான்னு மனசு துடிக்கும்.. ஆனா செய்ய ஒண்ணுமே இருக்காது, அதை ஏத்துக்கக் கஷ்டமா இருக்கும். கொஞ்சம் பொறுமையா இரு மனோ.. நமக்கும் ஒரு வழி கிடைக்கும்."

"ஐயோ ரேணு...! நான்தான் சொல்றனே, இதுதான் அந்த வழி!! நாம செய்யறதுக்கு ஒண்ணுமே இல்லைன்னு சொல்றயே, அப்ப ஏன் இதை செய்யக்கூடாது!? எப்படியும் வேலை இல்லாம நடுத்தெருவுல நிக்கத்தானே போறோம், இதையும் முயற்சி பண்ணிட்டு அந்த நெலமைக்கு வருவோமே!? என்ன கெட்டுடப் போகுது? இனி போறதுக்கு என்ன இருக்கு??"

"நிறைய இருக்கு. மனோ, எனக்கு என் பழைய, சந்தோஷமான லைஃப் திரும்ப வேணும். அதைநோக்கி போகணும்னு நான் ஆசைப்படறேன். நீ அதுக்கு நேர் எதிரான பாதையில நம்மளை இழுத்துட்டுப் போற. ப்ளீஸ் யோசி மனோ.."

"ரேணு, Once you hit rock bottom, the only way out is up. சங்கம் சேனலை மறுபடி மக்கள் ஏத்துக்கற சேனலா மாத்தலாம், மறுபடி நீயும் ஒரு பெரிய ஜர்னலிஸ்டா மாறலாம், மறுபடி உன் லைஃப் திரும்பக் கிடைக்கலாம். நம்ம ப்ளான் ஜெயிச்சா, இது எல்லாமே நடக்கும்."

ரேணு யோசித்தாள். பழைய வாழ்க்கை... நிம்மதியான தூக்கம்... நிலையான வேலை... நிறைவான மனம்... அவனது வார்த்தைகள் தூண்டில் புழுவாக அவளை இழுக்க, ரேணு மீனாக அதில் மாட்டிக்கொண்டு தலையாட்டினாள்.

"என்ன செய்யப் போறோம்?"

மனோ உற்சாகக் கூச்சலிட்டான். "யெஸ்! வூஹூ!"

"ஷ்ஷ்! ஓனருக்குக் கேட்டுடப் போகுது!!"

"சரி, நாளைக்குக் காலைல மொத வேலையா, உன் ஃப்ரெண்ட் அந்த டாக்டரைப் போயி பார்ப்போம். நமக்கு உதவி செய்யச் சொல்லி கேப்போம். அவன் ஒத்துக்கிட்டதும் இதுவரை நாம கம்பைல் பண்ணின டேட்டாவை வச்சு ஒரு க்ரைம் போர்ட் ரெடி பண்ணி, அதுல இருந்து க்ளூ எதாச்சும் கிடைக்குதான்னு தேடுவோம். வழக்கமா போலீஸ் செய்யற முதல் வேலை, பழைய கிரிமினல் ரெக்கார்ட்ஸை புரட்டறதுதான். அதனால, செங்கல்பட்டுக்குப் போயி, எங்க மாமா வேலைபாக்கற ஸ்டேஷன்ல இருந்து, போலீஸ் ரெக்கார்ட்ஸை ஆக்சஸ் பண்ண முடியுமான்னு பார்ப்போம். ஓகேவா?"

ரேணு சிரித்தாள்.
"டாக்டர் ஜெர்ரி நமக்கு ஹெல்ப் பண்ண ஒத்துக்குவான்னு, எப்படி இவ்ளோ ஷ்யூரா இருக்கு நீ?"

மனோவும் பதிலுக்கு சிரித்தான்.
"அவன் உன்னைப் பாக்குற பார்வையை நான் பாத்திருக்கேனே.."


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top