25
ரேணு குழப்பமாகப் பார்க்க, மனோ தனது தோள்பையிலிருந்து ஒரு கவரை எடுத்து நீட்டினான்.
"என்னதிது?"
"பிரிச்சுப் பாரு."
க்ளோப் தொலைக்காட்சி அலுவலகத்திலிருந்து மனோரஞ்சன் என்ற பெயரிட்டு வந்திருந்தது அந்தக் கவர். ரேணு யோசனையோடே அதைப் பிரித்து உள்ளிருந்த காகிதத்தை எடுத்தாள்.
அவள் படிக்கும்வரை பொறுமைகாக்கப் பிடிக்காமல், "க்ளோப் டிவி ஆஃபிஸ்ல இருந்து மன்னிப்புக் கடிதம். என்னைக் காரணமில்லாம வேலைல இருந்து நிறுத்தினதுக்கு. மறுபடியும் என்னை அங்கேயே வரச்சொல்லி கேக்கறாங்க. இந்தமுறை கேமரா அசிஸ்டென்ட் மட்டும் இல்ல, சீனியர் கேமராமேன்." என்று சொற்களைக் கொட்டினான் வேகவேகமாக.
ரேணு புன்னகைத்தாள்.
"தயவுசெய்து அந்த வாய்ப்பை விடாமப் புடிச்சிக்கோ. இப்ப நடந்ததை எல்லாம் மறந்துட்டு அங்க போய் செட்டில் ஆகிடு!"
"லூசு! நான் சொல்லவர்றதை முழுசாக் கேளு. இவ்ளோ அவசரமா நம்மளை மறுபடி சேனலுக்குக் கூப்பிடறாங்கன்னா என்ன அர்த்தம்?"
"நம்மளை இல்ல; உன்னை."
கசப்பல்ல, ஆனால் கொஞ்சம் சோகம் இருந்தது வார்த்தையில்.
மனோ எரிச்சலாகத் தலையசைத்தான்.
"நான் டிமாண்ட் பண்ணப் போறேன். ரேணுவும் என்கூட வந்தா மட்டும்தான் மறுபடி அங்க வருவேன்னு. அவங்க கண்டிப்பா உன் வேலையைக் குடுத்துதான் ஆகணும்."
"மனோ..."
ரேணு அதிருப்தியாகத் தொடங்க, மனோ கையுயர்த்தி அவளை நிறுத்தினான்.
"நியாயமா பார்த்தா, உன்னைத் தான் அவங்க கெஞ்சிக் கூப்பிடணும் திரும்ப. உன்னைமாதிரி திறமையான ரிப்போர்ட்டர் எல்லாம் சேனலுக்கு எவ்வளவு வேல்யுபிள் தெரியுமா? இவங்க என்னடான்னா, உன்னைப்போய் மிஸ் பண்ணறாங்க.."
ரேணு வறட்டுச் சிரிப்பொன்றை வெளியிட்டாள்.
"நான் புலிட்ஸர் அவார்டே வாங்குனாலும், மறுபடி என்னை அந்தச் சேனல் பக்கம் விடமாட்டாங்க!"
மனோ கேள்வியாக ஏறிட்டான் அவளை.
"ப்ளீஸ் ரேணு.. அப்படி என்னதான் நடந்துச்சு? நாலு மாசம் முன்ன... நரேஷோட பர்த்டேவை கொண்டாடினோம் ஆபிஸ்ல.. அப்பறம் நீயும் இன்னும் ரெண்டு எடிட்டர்களும் மறுநாள் வரவேண்டிய நியூஸ் ரீலை ரெடி பண்ணிட்டு இருந்தீங்க.. நாங்க கிளம்பிட்டோம்.. அப்பறம் என்ன நடந்தது? அடுத்த நாள்ல இருந்து உன்னைக் காணோம். யாருக்குமே நீ எங்க போனன்னே தெரியல. ஃபோன் பண்ணாலும் எடுக்கல. சீஃப் எடிட்டர் எங்கிட்டக் கூட ஒருதடவை கேட்டாரு. அப்பறம் திடீர்னு ஹெச்ஆர்ல இருந்து சர்க்குலர்– நீ வேலையை விட்டுட்டுப் போயிட்டதா. என்னத்த பண்ணித் தொலைச்ச? என்ன நடந்தது அன்னிக்கு??"
மூச்சுவிடாமல் அவன் கேட்க, ரேணு பெருமூச்சு மட்டும் விட்டாள். கண்கள் குளமாகியிருந்தன.
"மனோ.. நான் ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன். என் வாழ்க்கைல, நான் மறுபடி நினைச்சே பாக்கக் கூடாதுன்னு நினைக்கற நாள் அது. மறுபடி மறுபடி அதமட்டும் ஞாபகப்படுத்தாத ப்ளீஸ்... எப்ப எனக்கா தோணுதோ, அப்போ சொல்றேன். அதுவரைக்கும் பேச்செடுக்காத. ப்ளீஸ். உன்னைக் கெஞ்சிக் கேக்கறேன்."
பட்டென எழுந்து தான் அமர்ந்திருந்த ஸ்டூலை உதைத்துத் தள்ளினான் மனோ.
"ஆமா. எதைப்பத்தியும் பேசக்கூடாது உங்கிட்ட! வேலையைப் பத்தி பேசக்கூடாது! உங்கப்பாவைப் பத்திப் பேசக்கூடாது! ஒரு வருஷமா காணாமலே போயிருக்கானே, அவனைப் பத்தியும் பேசக்கூடாது!! உன் ஃப்ரெண்டா இருக்கறது எவ்ளோ கஷ்டம் தெரியுமாடீ? உன்னைப் பைத்தியம்னு சொன்னானே அந்த டாக்டரு... தப்பே இல்ல!! தயவுசெஞ்சு நீயா ஒரு மெண்டல் ஹாஸ்பிடல்ல சேர்ந்துடு! இல்ல உன்னை சுத்தி இருக்கறவங்களையும் நீ இழுத்துட்டுப் போயிடுவ!!"
ரேணு கண்களை இறுக்க மூடிய நிலையில் உறைந்திருக்க, மூடிய இமைகளின் ஓரத்தில் கண்ணீர் கன்னத்தில் வழிந்தது. மனோ வெளியேறிவிட்டான் என்பது அவன் கதவை அடித்துச் சாத்திய ஓசையில் தெரிய, கண்களை மெல்லத் திறக்க முயன்றாள் அவள்.
கண்ணீர்த் திரைபடர்ந்த வேறு சில காட்சிகள் கண்களுக்குள் விரிந்தன.
"ரேணு.. நான் எம்.டி பேசறேன்.. ஒருநிமிஷம் என் ரூமுக்கு வரமுடியுமா?"
"இப்பவா சார்..? எடிட்டர்ஸ் கிளம்பிட்டாங்களே சார்.. மணி பதினொன்னு ஆகப்போகுது.. நியூஸ்ஸ எதாச்சும் சேஞ்ச் பண்ணனும்னா எடிட்டர்ட்ட கேக்கணுமே--"
"அதெல்லாம் நான் சொன்னேனா..? நீ மட்டும் வா ரேணு."
சட்டென்று யாரோ மூச்சுக்குழலை விரல்களால் இறுக்குவதைப் போல உணர்ந்தாள் அவள். இதயம் படபடவென அடித்துக்கொள்ள, மூச்சு விட முடியாமல் திணற, கைகள் நடுங்கிடத் தொடங்க, பின்னந்தலை வேறு வெடிப்பதுபோல வலித்தது. நெஞ்சக்கூட்டில் நுரையீரலுக்குப் பதிலாக யாரோ பாறைகளை வைத்துவிட்டதைப்போல கனக்க, தரையில் நிலைதடுமாறி விழுந்தாள் அவள்.
கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.
உயிர்வாழத் தேவையான உறுதியோ ஆசையோ எங்கேயெனக் கண்டுபிடிக்க முடியவில்லை அவளால்.
'இப்போதே நீ இறந்துவிட்டால் கூட, கேட்க நாதியில்லை. தினம்தினம் வாழ்ந்து வதைபட்டுப் போவதற்கு, இப்போது இறந்துவிட்டால் கூட நலம்தானே?'
முயற்சிகளையெல்லாம் விட்டுவிட்டுத் தரையோடு சரிந்து அவள் தளர்ந்தபோது, அவளது கைபேசி அடித்தது.
காதை அடைந்த ஓசை கண்களைத் திறக்கச் செய்திட, உயிர்வாழக் கிடைத்த கடைசி வாய்ப்பைப் பறிப்பதுபோல பாய்ந்து அதை எடுத்தாள் அவள். யாரென்றெல்லாம் பார்க்கவில்லை. எடுத்துக் காதில் வைத்தாள்.
"ஹலோ, ரேணு..? நான் ஜெர்ரி பேசறேன்.."
சாந்தமான, தயக்கமான எலிக்குரல்.
ரேணுவிற்குப் பேச சக்தியில்லை. பதற்ற மூச்சுக்கள் மட்டும் விட்டாள்.
"ரேணு.. ஆர் யூ தேர்?"
"ஹ.. ஹ...ஹல்... ஹலோ?"
மூச்சுத்திணறலுக்கு நடுவே அந்த ஒற்றை வார்த்தையை எப்படியோ கொண்டுவந்து கைபேசியில் விட்டாள் அவள், அவன் வைத்துவிடுவானோ என்ற பயத்தில்.
அவளது அபாயக்குரல் எதிர்முனையைக் கரிசனமாக்கியது.
"ரேணு, ஏன் வாய்ஸ் ஒருமாதிரி கேக்குது..? மூச்சுத் திணறலா? எங்கயாச்சும் ஓடிட்டு இருக்கியா?"
"ஜெ..ஜெர்ரி.. ஹெல்ப் மீ.. எனக்கு திடீர்னு மூச்சு முட்டுது.. நெஞ்சை என்னமோ அழுத்தற மாதிரி இருக்கு.. தலை வலிக்குது.. டாக்டர்தானே நீ.. என்ன ஆச்சு எனக்கு?"
"வாட்?? ரேணு? எதாவது அடிபட்டுச்சா உனக்கு? ஆக்சிடெண்ட்..?"
"நோ. வீட்டுல தான் இருக்கேன். மனோ திடீர்னு-- கத்துனான்.. அப்பறம்-- திடீர்னு-- இப்படி ஆச்சு.."
"ரேணு.. நீ சொல்றத வச்சுப் பார்த்தா, உனக்கு 'பானிக் அட்டாக்' வந்திருக்கு"
"இ.. இது என்ன, ஹார்ட் அட்டாக் மாதிரியா?"
"நோ.. இது சைக்காலாஜிக்கல். கடந்தகால நினைவுகள், சோகங்கள், அதிகப்படியா தாக்கும்போது இப்படி நடக்கும். ரேணு.. மூச்சை நல்லா இழுத்து விடு. கண்ணை நல்லாத் திற. நீ உன் வீட்டுல, பாதுகாப்பா இருக்கன்னு உன் மூளைக்கு சொல்லு. மூச்சு விடு. ப்ரீத்!"
மூச்சுவிட முயற்சித்துப் பார்த்தாள் அவள். இன்னும் தொண்டையை எதுவோ அடைத்ததுபோலத் தான் இருந்தது. மூச்சுப் போகவில்லை. கண்களைத் திறந்தாள். தனது அறையைப் பார்த்தாள். சுவரில் மாட்டியிருந்த அவளது புகைப்படத்தில் விகல்பமற்றுச் சிரித்துக்கொண்டிருந்த ரேணுவையும் மனோவையும் பார்த்தாள். அடுப்படியில் நேத்துத் தாளித்து வீணாக்கிய வெங்காய-தக்காளிக் கலவையைப் பார்த்தாள்.
"ப்ரீத் ரேணு.. பொறுமையா மூச்சை இழுத்து விடு."
காதில் ஜெர்ரியின் கரிசனக்குரல் மீண்டும் பேசியது.
'நீ சாமானியப் பெண் இல்லை ரேணு. சாதிக்கப் பிறந்தவள். உன்னை வீழ்த்த முயற்சிக்கும் அனைவரின் முன்னிலையும் வாழ்ந்து காட்டத் துணிந்தவள். எது போனாலும் பார்த்துக்கொள்ளலாம்.. பிழைத்துவிடு இப்போதுமட்டும்!!'
மூச்சுவிடு என் முட்டாள் மூளையே! எதுவந்தாலும் பார்த்துக்கொள்ளலாம். நாளை சாதிக்கவேண்டுமென்றால், இப்போது உயிரை விடாதே! காற்றை சுவாசி, தண்ணீர் அருந்து, எழுந்து நில், வாழ்!!
மீண்டும் மெதுவாக மூச்சுவிட முயன்றாள் அவள். இம்முறை மூச்சிழுக்க முடிந்தது. காற்று நெஞ்சை அடைந்தபோது மொத்த நெஞ்சமும் குளிர்ந்தது.
மீண்டும் ஒருமுறை மூச்சிழுத்துவிட்டாள்.
மீண்டும்.
மீண்டும்.
இப்போது சீராக வந்தது சுவாசம்.
படபடப்புக்கூட கொஞ்சம் மட்டுப்பட்டது. பின்னந்தலை அழுந்தவில்லை.
கண்களைப் புறங்கையினால் துடைத்துக்கொண்டாள் அவள்.
"ரேணு..? ரேணு!? இருக்கியா?"
கைபேசியை நன்றியாகப் பார்த்துவிட்டுக் காதில் வைத்தாள் அவள். "இருக்கேன்."
எதிர்முனை நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
"நான் எனக்குத் தெரிஞ்ச ப்ரைவேட் சைக்கியாட்ரிஸ்ட் ஒருத்தர்கிட்ட அப்பாயின்மெண்ட் வாங்கிடறேன். எவ்வளவு சீக்கிரமா முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவரைப் போய்ப் பார்க்கறது உனக்கு நல்லதுன்னு நினைக்கறேன்."
கண்ணீர் தொட்ட குரலில் "தேங்க்ஸ்" எனக் கரகரத்தாள் அவள்.
"நான் இப்பக் கூப்பிட்டது வேற விஷயமா. ஹைவேஸ் கேஸ் க்ரைம் ப்ராஞ்ச்சுக்குப் போயிடுச்சு. அந்த இன்ஸ்பெக்டர் காலைல ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தார். உன்னைப் பார்க்கணும்னு சொன்னார்.. உன்னால அண்ணா நகர் வரமுடியுமா?"
கழுத்தை வளைத்து நெட்டியெடுத்துக்கொண்டு எழுந்தாள் அவள்.
"ஒன் அவர் டைம் குடு. வந்துடறேன்."
"ஸ்யூர்."
அவன் அழைப்பை வைத்துவிட, கலைந்த கூந்தலை அள்ளி முடிந்தவள், கண்ணில் புதிய உத்வேகத்துடன் வெளியே கிளம்பினாள்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top