வெளிச்சப் பூவே - 7

கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்திருந்தது.

மேலாளர் தண்டபானியின் அறையில் கூடியிருந்த அனைவரும் அவரையே எதிர்பார்ப்புடன் பார்த்திருந்தனர்.

“என்ன சார்.. ஒரு வருஷம் பரீட்சைக் காலம் முடியப் போகுது, ஆனா இன்னும் தர்ஷனை ஒண்ணும் பண்ண முடியலையே?”

“ஆமா சார்.. எவ்வளவோ தினுசு தினுசா பிரச்சனைகளை உருவாக்கினோம். ஆனா எப்படியோ எல்லாத்தையும் சமாளிச்சிட்டான். எல்லாம் அவனோட செக்ரெட்டரி பண்ற வேலை! அவ‌ இருக்குறதால இவன் பேர் வாங்கிடறான். போர்ட் மீட்டிங் வெச்சா கண்டிப்பா சேர்மன் ஆகிடுவான்.”

“அட, பயப்படாதீங்கய்யா! தர்ஷனுக்கு இதுவரை நாம தான் இதையெல்லாம் செய்யறோம்னு தெரியாது. இப்படியே மறைமுகமா அவனை அடிப்போம். போர்ட் மீட்டிங்கை தள்ளிப் போடுவோம். அவனுக்கு இருக்கற ஒரே வீக்னஸ்: பொண்ணுங்க. அதைச் சொல்லி அவனைத் தகுதியிழக்க செஞ்சிடுவோம். தனியா நாலு கேள்வி கேட்டோம்னா அவனே கழண்டுப்பான் பயந்துக்கிட்டு!”

கொஞ்சம் நம்பிக்கை வந்து சிரித்தனர் அவர்கள். தண்டபானி பெருமையாக அறையை நோட்டம் விட்டார்.

“அடுத்த சேர்மன் நான் தான்! அதை தடுக்க யாராலும் முடியாது!”

***

"மினி. ஷீ இஸ் அமேசிங்! என்னைப் புரிஞ்சுக்கிட்ட ஒரே செக்ரெட்டரி அவ தான். என் வாழ்க்கைல அவளை மாதிரி பர்ஃபெக்ட்டான பொண்ணைப் பார்த்ததே இல்லை! வேலைன்னு வந்துட்டா புயல் மாதிரி செய்வா!"

வந்திருந்த பிரமுகர் சிரித்தார்.

"நீங்களே சொன்ன பிறகு, எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை. நைஸ் டூ மீட் யூ, மிஸ்.மினி... என்னோட கம்பெனி எக்ஸிக்யூட்டிவ் உங்களை கான்டாக்ட் பண்ணிக்குவார். அப்ப நான் கிளம்பறேன்."

அவருக்கு விடைகொடுத்துவிட்டு தர்ஷனிடம் திரும்பினாள் அவள்.

"ஸ்யூரா பாஸ், இந்த க்ளையண்ட்டையும் நானே டீல் பண்ணவா?"

"யெஸ் மினி, இவங்க நம்மளோட நூறாவது க்ளையண்ட்.. ஒரே வருஷத்துல இத்தனை கார்ப்பரேட் டீல்ஸை சைன் பண்ண முடியுமான்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு. இந்த டீலையும் நீயே பர்ஃபெக்ட்டா ஃபைனல் பண்ணிட்டனா, இது கம்பெனியோட வரலாற்று சாதனை!"

"பண்ணிடலாம், டோன்ட் வரி! உங்க லஞ்ச்க்கு நேரமாச்சு, போலாமா பாஸ்?"

"ஹ்ம், அதை முடிச்சிட்டு நான் வீட்டுக்குப் போறேன். டாடியை பார்க்கணும். அப்பறம், எனக்கு ஹேர் அப்பாயின்ட்மெண்ட் சொல்லிடு, சாஷாவோட எனக்கு டேட் இருக்குல்ல?"

"ஸ்யூர் பாஸ். ஈவ்னிங் சாஷாவை பிக்கப் பண்ண எந்தக் காரை அனுப்பணும்?"

"அவளுக்கு ஏனோ பென்ஸ் பிடிக்கல. சென்ட் தி ரோல்ஸ் ராய்ஸ்."

"எஸ் பாஸ். ஹாவ் ஃபன்!"

"நீயும்தான் இந்த மீட்டிங்கை எல்லாம் விட்டுட்டு சாட்டிங் டேட்டிங் எதாச்சும் பண்ணலாம்ல? எத்தனை காலம்தான் இப்டி வேலையே கதின்னு கிடக்கப் போற? Live a little Mini!"

அவன் நாடகத்தனமாக சொல்ல, அவள் மரியாதைக்காகச் சிரித்தாள். அவனோ தன்பாட்டில் கைபேசியில் எதையோ பார்த்தபடி தரைத்தளத்தில் நின்ற தன் காருக்கு நடந்தான்.

மினி தனது அலுவலக அறைக்குத் திரும்பி வந்தாள். பக்கத்து சீட்டில் இருந்த கிருத்திக் அவளைக் கண்டதும் புன்னகைத்தான். தனது மேசையிலிருந்த ஒரு கட்டு ஃபைல்களை எடுத்து நீட்டினான்.

"இதெல்லாம் உனக்காக. என்ஜாய்."

"ம்ம். ஸ்பூர்த்தி எங்கே?"

"இப்பதான் காபி குடிக்கறேன்னு கிளம்பி கீழ போனா.. நமக்கும் வாங்கிட்டு வரச் சொன்னேன், ஆனா எருமை மறந்துட்டு தான் வரும் பாரேன்!"

"கூட போயிருக்க வேண்டியதுதானே?"

"ப்ச், அப்புறம் நீ மட்டும் தனியா இருப்பியா?"

மினி விளையாட்டாக அவன் தலையைக் கலைத்தாள். "பாசக்காரன்டா நீ!"

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. அவகூட காபி குடிக்க போனா அவளை சைட்டடிக்கற பயலுங்க எல்லாம் என்னை என்னவோ வில்லனை பாக்குற மாதிரி பாக்குறானுங்க.. அதான், அவனுங்க வயித்தெரிச்சல் நமக்கெதுக்கு..?"

தலையாட்டி சிரித்துவிட்டு அவள் தரவுகளில் லயித்தாள், காதுகளில் இசையூட்டி பூட்டிக்கொண்டு.

சிறிதுநேரத்தில் காபிக் கோப்பையுடன் வந்தாள் ஸ்பூர்த்தி.
"பாஸோட கார் கிளம்பறதைப் பார்த்தனே..? அதுக்குள்ள மீட்டிங் முடிஞ்சிருச்சா என்ன?"

"ம்ம், இந்த க்ளையண்ட்டையும் என்னையே பார்த்துக்க சொல்லிட்டுப் போயிட்டார்."

"என்ன மினி, அப்ப CEO-ன்ற முறைல அவரு என்னதான் பண்றார்? சும்மா அவரோட லேப்ல உக்காந்து எதையாச்சும் தட்டிட்டு இருந்தா போதுமா?"

"அது மட்டுமா பண்றாரு, மாசம் ஒரு பொண்ணோட ஊர்சுத்தவும் போயிடறாரே? பாவம், அப்பறம் கம்பெனியை பார்க்க டைம் எப்படி இருக்கும்?"

கிருத்திக்கையும் ஸ்பூர்த்தியையும் மினி கண்ணால் அமைதியாக்கினாள்.
"அவர் சொல்றதை செய்யறதுதான் நம்ம வேலை. அதை பண்ணுவோம்."

"எங்களை அப்பாயிண்ட் பண்ணது வேணா அவரா இருக்கலாம்.. ஆனா எங்களை இன்னும் இங்க வெச்சிருக்கறது உன்னோட மனசு தான் மினி."

"ஆமா. ஏழு நாள் கான்ட்ராக்ட்ல வந்த எங்களை, பாஸ் கிட்ட பேசி உன்கூட சேர்ந்து நிரந்தரமா வேலை பார்க்க வெச்சது நீ தான்.. ஸோ, உனக்காக வேணா செய்யறோம்."

ஒருகணம் வாஞ்சையாக இருவரையும் பார்த்தவள், “ம்ஹூம், வேலைன்னு வந்துட்டா, சம்பளம் தர்ற பாஸ் தான் நமக்கு கடவுள். நன்றியெல்லாம் நமக்குள்ள இருக்கட்டும். விசுவாசம் மட்டும் தர்ஷனுக்கே இருக்கட்டும்” என முடித்து வைத்தாள்.

****

“சாஷாவுக்கு நாளைக்கு ஒரு ஈவண்ட் இருக்கு, என்னை அவளோட டேட்-ஆ இன்வைட் பண்ணியிருக்கா. ஸோ, என்னோட மீட்டிங் ஷெட்யூலை க்ளியர் பண்ணிடுங்க.”

மாலை ஆறு மணியளவில் திரும்பி வந்த தர்ஷன் மூவருக்கும் பொதுவாகக் கட்டளைகள் பிறப்பித்துவிட்டுச் செல்ல, மினியைத் தவிர இருவரும் சிணுங்கினர்.

தர்ஷனின் காதுபடாமல், “இவர் பாட்டுக்கு ஆர்டர் போட்டுட்டு பென்ட்ஹவுஸ் போயிடுவார். ஆறு மணிக்கு கூப்பிட்டு மீட்டிங்கை மாத்தினா அடுத்தவன் என்ன நினைப்பான்? மொதல்ல கால் அட்டென்ட் பண்ண ஆள் இருப்பானா ஆபிஸ்ல?” எனப் பொரிந்து தள்ளினாள் ஸ்பூர்த்தி.

பத்மினி ஏதோ சொல்ல வர, “நீ பேசாத!! எல்லாம் நீ கொடுக்கற இடம் தான்! இல்ல, முடியாதுன்னு ஒரு நாளாச்சும் சொல்லியிருக்கியா அவர்ட்ட? எது சொன்னாலும் ஸ்மைல் பண்ணிட்டு தலையாட்டி கேட்டுக்க வேண்டியது. ஹூம்!” என அவளையும் தாளித்தாள்.

“ஸ்பூர்த்தி.. ரிலாக்ஸ். நீ கிளம்பு. நானும் கிருத்திக்கும் பாத்துக்கறோம்.”

அவள் கிருத்திக்கைத் திரும்பிப் பார்க்க, கட்டை விரலை உயர்த்தி சம்மதம் தெரிவித்தான் அவனும்.

“என்னவோ போ!” எனத் தோளைக் குலுக்கிவிட்டு கைப்பையை எடுத்துக்கொண்டு அவள் வெளிய விரைய, கிருத்திக் மினியிடம் வந்தான்.

“அவ சொல்றதும் சரிதானே.. வேலைல இருக்கற லாஜிக்கல் இஷ்யூஸை பாஸ்கிட்ட சொல்லித் தானே ஆகணும். அவர் கேட்கறதை எல்லாம் அமைதியா செஞ்சுக்கிட்டே இருந்தோம்னா, இது எங்கே போய் முடியும்?”

“கிருத்திக், வருத்தப்பட்டு சுமக்க இந்த வேலை எனக்கு பாரம் இல்லை. இஷ்டம். என்னால முடிஞ்ச வரைக்கும் நான் முயற்சி பண்றேன். யு நோ, முயற்சி செஞ்சா முடியாதது எதுவும் கிடையாது. நீயும் கிளம்பறதுன்னா–”

“என் விசுவாசம் உன்னோடு தான். நான் உனக்காக செய்றேன், அவருக்காக இல்ல.”

“நானும், உனக்காக செய்றேன்,” என வாசலில் குரல் வர, இருவரும் திரும்பினால் அங்கே ஸ்பூர்த்தி நின்றாள்.

மினி புன்னகைக்க, கிருத்திக் கண்களை சுழற்றினான்.

“சுப்பு.. எனக்காக ஒண்ணு செய்யறயா?

“ஒண்ணு என்ன, ஒன்பது கூட செய்யறேன்.. சொல்லு, என்ன?"

"தயவுசெஞ்சு எனக்காக ஒரேயொரு தடவை செத்துப் போயிடு.. ப்ளீஸ்."

கையிலிருந்த பையை அவனை நோக்கி எறிய, அவன் குனிந்து தப்பித்துவிட்டுக் கெக்கலி காட்ட, இவள் சென்று கையாலேயே ஆசைதீர பிடரியைப் பிடித்து உலுக்க, அவன் அலற, மினியோ சிரிப்புடன் தலையசைத்துவிட்டு எழுந்து வேலையை கவனிக்கச் சென்றாள்.

***

நான்கைந்து நாட்கள் கடந்திருந்தன.

“பாஸ், ஹெச்.ஆர் மீட்டிங்க்கு டைம் ஆச்சு. உங்களுக்காக காத்திருக்கோம்.”

ஒரே கட்டிடத்திற்குள் இருந்த தர்ஷனின் பெண்ட்ஹவுசிற்கு இண்டர்காமில் அழைத்து மினி தகவல் சொல்ல, சோம்பல் ததும்பும் குரலில், “போரடிக்கும். நான் வரல” என பதில் வந்தது அவனிடம்.

“அன்வர் அங்க்கிள் வந்திருக்கார்.” முகம் சுழிக்காமல் விளக்கினாள் அவள். எதிர்முனை சிணுங்கலாக, “ப்ச், வரேன் வரேன்” என்று அழைப்பைத் துண்டிக்க, சின்ன நெடுமூச்சுடன் அலைபேசியை அதன் இடத்தில் வைத்தாள் அவள்.

“கம்பெனி சி.ஈ.ஓ… இப்படி விட்டேத்தியா இருந்தா எப்படிம்மா? ஹெச்.ஆர் மீட்டிங் கம்பெனிக்கு எவ்வளவு முக்கியம்னு தெரியாதா?”

“இல்லை அங்க்கிள்.. பாஸ் கொஞ்சம் டையர்டா–”

“ப்ச், சண்முகம் சார் பைபாஸ் சர்ஜரி பண்ணின அடுத்த நாளே ஆபிசுக்கு வந்தவர்.. அவர்ல பாதியாச்சும் இருக்க வேணாமா அடுத்த சேர்மனுக்கு?”

ஒப்புக்கொண்டு தலையாட்டினாள் அவள். தர்ஷன் இறங்கி வந்தான் மின்தூக்கியில், கண்ணைக் கவரும் கருநீல கோட்-சூட் அணிந்து. தர்ஷனின்‌ கவர்ச்சியை மட்டும் எந்தக் குறையும் பாதிப்பதில்லை.

பளிச்சிடும் புன்னகையை வீசியபடி மினியின் மேசையருகே வந்தான்.

“ஹாய் அங்க்கிள்”

“மினி, உங்க பாஸ் வந்துட்டாரு. இப்ப மீட்டிங் போலாம்.”

அன்வர் முன்னே நடக்க, தோளைக் குலுக்கியபடி தர்ஷன் பின்செல்ல, மினியும் கையில் குறிப்பேட்டுடன் பின்தொடர்ந்தாள்.

மனித வளத்துறை செயற்கூட்டம் முடிந்த பின்னர் கைகளை முறுக்கி சோம்பல் முறித்தபடி எழுந்து வந்தான் தர்ஷன்.

எதிரில் தண்டபானியைப் பார்த்ததும் மினி இறுக்கமாய் நிற்க, அன்வரும் முகம்சுழித்தார்.

தண்டபானி சிரித்தபடி தர்ஷனின் அருகில் வந்தார்.

“அடடே தர்ஷன், ஒரே பில்டிங்ல இருந்தும் இப்படி அதிசயமா தான் சந்திக்க முடியுது. நலமா?”

“ஃபைன் சார்.”

"அப்பறம், டேட்டிங் லைஃப் எல்லாம் எப்படி இருக்கு?"

தர்ஷன் லேசாக வெட்கப்பட்டு சிரித்தான்.
"இட்ஸ் குட்."

அதிருப்தியை முகத்தில் கூடுமானவறை காட்டாமல் அன்வர் தலையசைத்தார்.

தண்டபானி மூவரையும் பார்த்து நக்கலாகச் சிரித்துவிட்டுச் சென்றார்.

***

வாரக் கடைசியன்று மாலை மினியை அழைத்துப் போவதற்காக மேல்தளம் வந்த சுல்ஃபி, அவர்கள் அனைவரும் தர்ஷனின் திசையையே பார்த்துக்கொண்டு நின்றதைக் கண்டான். சந்தேகமாக அருகில் சென்றான்.

கண்ணாடி அறைக்குள் அங்குமிங்கும் பரபரப்பாக நடந்தபடி யாருடனோ கைபேசியில் பேசிக்கொண்டிருந்த தர்ஷனைக் காண முடிந்தது.

சுல்ஃபி கேள்வியாகப் புருவத்தை உயர்த்தினான்.
"என்னவாம்?"

கிருத்திக் நக்கலாகச் சிரித்தான்.
"சாஷாவோட ப்ரேக்-அப் ஆகிடுச்சு."

ஸ்பூர்த்தி முகத்தை சுளித்தாள்.
"ஹ்ம். இத்தோட எட்டாவது ப்ரேக்-அப். அப்டி என்னதான் நடக்குமோ செலெப்ரிடி லைஃப்ல!"

"போரடிக்கும் போல, ஒருத்திய மட்டுமே லவ் பண்ணினா!" —இது சுல்ஃபி.

"ப்ச், சுல்ஃபி! இது நம்ம பேச வேண்டிய பேச்சில்லை. நமக்கு வேலை இருக்கு, வா போலாம்."

மினி அவனைக் கைப்பிடித்து இழுக்க, சிணுங்கிக்கொண்டே பின்தொடர்ந்தான் அவனும்.

"ஏன் மினி நீ இப்ப்…படி இருக்க? லைஃப்னா கொஞ்சம் ட்ராமா வேணும்ல? சும்மா பேசக் கூட கூடாதா? ஊர்ல இருக்க எல்லா பத்திரிக்கையும் பேசத் தானே போகுது?"

"அவங்க பேசினா, நாமளும் பேசணுமா?"

"தர்ஷனும் மனுஷன்தானே? சாமிக்குத்தம் ஆகிடுமா என்ன, அவனைப் பத்தி பேசினா?"

"சுல்ஃபி, அவரு கையில கட்டியிருக்க வாட்ச்சோட விலை என்ன தெரியுமா.. உன் ஒரு மாச சம்பளம். கால்ல போட்டிருக்க ஷூ? மூணு மாச சம்பளம். அவங்களோட வாழ்க்கையே வேற. அதை விவரிக்கவோ, விமர்சிக்கவோ நமக்கு நேரமில்லை; அவசியமும் இல்லை. நாம நம்ம வேலைய மட்டும் பார்ப்போம், ரைட்டா?"

"என்னால உன்னைப் புரிஞ்சுக்கவே முடியலடி!"

"என்னைப் புரிஞ்சுக்கிட்டு நீ என்னடா பண்ணப் போற!" என அவள் சிரிக்க, சுல்ஃபியும் தலையசைத்து சிரித்துவிட்டான்.

***

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top