வெளிச்சப் பூவே - 6
"என்னடா.. மினி எப்படி?"
வீட்டின் கூடத்தில், சோபாவில் அமர்ந்தபடி காலணிகளைக் கழற்றிக்கொண்டிருந்த தர்ஷன் தந்தையை நிமிர்ந்து பார்த்தான்.
என்னதான் அவனது எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக மினியின் பணித்திறமை இருந்தாலும், அதை வாய்விட்டு ஒப்புக்கொள்ள மனம் ஒப்பாமல் வெறுமே தலையாட்டினான்.
சண்முகம் முகம் கசங்கினார். "அப்டினா?"
"So far so good."
அவர் ஏதோ வாதிட வாய்திறக்க, தெய்வானை பத்மினியின் பெயர் கேட்ட மாத்திரத்தில் விறுவிறுவென உள்ளிருந்து வந்தார் இருவரையும் முறைத்தபடி.
"அவளைப் பத்தி பேசாமலே இருக்க முடியாதா உங்களுக்கு!? ஏன்தான் அவ பேரை எடுத்து என் பாவத்தைக் கொட்டிக்கறதுல உங்களுக்கு அத்தனை அவலாதியோ!! ஐயோ ராமா!!"
தர்ஷன் முகம்சுழிக்க, சண்முகமும் வெகுண்டார்.
"உனக்கு அந்தச் சின்னப் பொண்ணு மேல என்னதான் வஞ்சம்!? அப்படிப் போட்டு சபிக்கறியே, உன்னை அத்தைன்னு மரியாதையா கூப்பிடறதைத் தவிர அவ வேற எதாச்சும் பண்ணியிருக்காளா? அவளுக்கு உன் வெறுப்பெல்லாம் தூசி மாதிரி. ஆபிஸ்ல தினமும் உன்னை மாதிரி ஆயிரம் பேரை ஒத்தை சிரிப்பால சமாளிக்கறா, தெரியுமா?"
தெய்வானை ஆங்காரமாகச் சிரித்து ஏதேதோ வசவுகளைத் தெறிக்க, சண்முகமும் பதிலுக்குக் கத்தினார்.
தர்ஷனின் நெற்றிப்பொட்டில் விண் என்று வலிக்கத் தொடங்கியது. பற்களைக் கடித்துக்கொண்டு அமைதியாக இருவரையும் விட்டு எழுந்து செல்ல அவன் முயல, தெய்வானையோ கண்களைக் கசக்கிக்கொண்டு தர்ஷனிடம் வந்து அவன் தோளைப் பிடித்துக்கொண்டார்.
"பாருடா.. இந்த வீட்டுல எனக்கு பேச்சு சுதந்திரம் கூட கிடையாது. ஏதோ என்பாட்டுக்கு வாய்விட்டுப் புலம்பினா போதும், உங்கப்பாவுக்கு ஆத்திரம் வந்துடும். என்னைத் திட்ட மட்டும் உங்க அப்பாவுக்கு சலிக்கவே சலிக்காது. இப்படியே போச்சுன்னா நான் வீட்டை விட்டு எங்கயாச்சும்–"
"நீங்க போக வேணாம் மாம். நான் போறேன்."
சட்டென தர்ஷன் அவ்வாறு கூறவும் தெய்வானை அதிர, சண்முகமும் சற்றே திகைத்தார்.
"தர்ஷா.. என்னடா சொல்ற?"
"ஐம் ஸாரி டாட், சின்ன வயசுல இருந்து இங்கே இல்லாததாலோ என்னவோ, இங்க எனக்கு பிடிக்கலை. எனக்கேத்த மாதிரி இந்த வீடு இல்லை. ஸோ, நான் வேற இடத்துல தங்கப் போறேன். வீக்கெண்ட்ல மட்டும் வீட்டுக்கு வர்றேன்."
தர்ஷனின் மனம் புரிந்து சண்முகம் அமைதியானார். ஆனால் தெய்வானை வாளாதிருக்கவில்லை.
"என்ன விளையாடறியா தர்ஷா? உன் சிங்கப்பூர் கதையெல்லாம் இங்க வேணாம். இந்தியாவுக்கு வந்துட்டு நம்ம வீட்டை விட்டு நீ வெளிய போயி ஹோட்டல்ல தங்கினா, பத்திரிக்கை நியூஸெல்லாம் உன்னைப் பத்தி எப்டி கேவலமா பேசும் தெரியுமா?"
"நான் ஹோட்டல்ல தங்குறதா சொல்லலியே மாம்.."
"பின்ன?"
"ஆபிஸோட டாப் ஃப்ளோர். இருபத்தியோராவது மாடி. இப்ப வெறும் கான்ஃபரன்ஸ் ஹாலா இருக்கு. நான் அதை என் லேப் ப்ளஸ் பென்ட்ஹவுஸா மாத்திக்கலாம்னு இருக்கேன்."
"ஏன்டா.. அம்மாவோட இருக்கப் பிடிக்கலையா உனக்கு? நம்ம வீட்டைப் பிடிக்கலையா? ஐயோ.. ஒத்தைப் பையனைக் குடுத்தியே ஆண்டவா.. இன்னிக்கு அவன் வீட்டை விட்டுட்டுப் போறேன்னு எல்லாம் பேசறானே.."
தெய்வானை புலம்பவும் நெற்றியைத் தேய்த்துக்கொண்ட தர்ஷன், "I'm an adult. எனக்கு என் வாழ்க்கைய வாழ சுதந்திரம் இருக்குன்னு நான் நம்புறேன். கம்பெனிக்காக சிங்கப்பூரை விட்டு இண்டியா வந்திருக்கேன். ஐயாயிரம் மைல் தாண்டி வந்தவன், ஒரு அம்பது கிலோமீட்டர் தூரமா போனா ஒண்ணும் தப்பில்லை. Get over it" என்றான் கடுமையாக.
அதற்குமேல் பேச முடியாது அமைதியாகிப் போனார் தெய்வானை.
****
"இன்னிக்கு ஏழாவது நாள், இல்ல? ஆல் தி பெஸ்ட் சொல்லணுமா, கன்கிராட்ஸ் சொல்லணுமா?"
காலையில் பார்க்கிங்கில் அவளை சந்தித்த சுல்ஃபி கேட்க, அவனுடன் நடந்து வந்தவள் மெலிதாகச் சிரித்தாள். "பொறுத்திருந்து பார்ப்போம்."
"ஆனாலும் இவ்ளோ தன்னடக்கம் உனக்கு ஆகாதுடி! எப்படித்தான் உன் உழைப்புக்கு க்ரெடிட் எடுக்காம இருக்க உன் மனசு ஒத்துக்குமோ!"
"கடமையை செய்; பலனை எதிர்பார்க்காதே."
"கலியுக கண்ணபிரான் தான் நீ! ஒத்துக்கறேன் தாயே!"
சிரிப்புடன் இருவரும் மின்தூக்கியில் சென்று அவரவர் தளத்தில் இறங்க, மினியின் பணிமேசை அருகிலேயே கிருத்திக் நின்று காத்திருந்தான்.
"ஜட்ஜ்மெண்ட் டே மாதிரி இருக்கு. வயிறெல்லாம் கலக்குது எனக்கு. நீங்க மட்டும் ஹாயா வரீங்க??"
"நடப்பதெல்லாம் நன்மைக்கே. பயப்படாம போயி வேலையை பார்ப்போம் வாங்க கிருத்திக்."
"எப்படித்தான் இத்தனை ஸ்ட்ரெஸ்லயும் அசராம வேலை பாக்கறீங்களோ! எனக்கு இப்பவே முடியெல்லாம் நரைச்சிடும் போல இருக்கு!"
"ஹாஹா.. நீங்க ஏன் டென்ஷனாகறீங்க? எதுவா இருந்தாலும் நான் கவனிச்சுக்கறேன். இன்னிக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான எக்ஸிக்யூட்டிவ்ஸ் மீட் இருக்கு. இதுக்காகத் தான் நாலு நாளா நாம கஷ்டப்பட்டோம். நான் போயி மீட்டிங் ஹால் ரெடியான்னு பார்த்துட்டு வரேன். பாஸ் வந்ததும் அழைச்சிட்டு வாங்க. ஓகே?"
"ஓகே…. அ... மினி?"
"ம்ம்?"
"நீங்க ஜெயிக்கணும் மினி. ஆல் த பெஸ்ட்."
அழகாய்ப் புன்னகைத்தாள் மினி. "தேங்க்ஸ் கிருத்திக்."
அவள் சென்ற சில நிமிடங்களிலேயே தர்ஷன் வந்தான். அலுவலக அறைக்குள் நுழைந்தவன் தனது கணினியில் ஏதோ பார்த்துக்கொண்டிருக்க, கிருத்திக்கும் ஸ்பூர்த்தியும் வந்தனர்.
"குட் மார்னிங் பாஸ். பத்மினி மேடம் மீட்டிங் ஹாலை செக் பண்ண முடியல ோயிருக்காங்க. நீங்க வந்ததும் கூட்டிட்டு வர சொன்னாங்க."
"ம்ம். ஒன் மினிட்."
கடைசிக் கட்ட சரிபார்ப்புகளை செய்தவன், சட்டென நிமிர்ந்தான்.
"பேப்பர்ஸை பத்து காப்பி எடுக்க சொல்லி நேத்தே சொன்னனே, எங்கே?"
கிருத்திக்கும் ஸ்பூர்த்தியும் திருதிருவென விழித்தனர். தர்ஷன் அதிருப்தியாகப் பார்த்தான்.
"மினியோட டேபிள்ல இருக்கும். போய் எடுத்துக்கிட்டு வாங்க."
ஸ்பூர்த்தி வேகமாக ஓடினாள் பிரிண்டரைத் தேடி.
சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்து கைநிறைய தாள்களுடன் அவள் வர, கிருத்திக் பாதியை வாங்கிக்கொண்டான். மினி அதற்குள் எதிரில் வந்துவிட்டாள். சற்றே புருவம் தூக்கி சந்தேகமாகப் பார்த்தாலும், தனக்குள் தலையசைத்துவிட்டு தர்ஷனுக்குக் காலை வணக்கம் சொன்னாள்.
"குட்மார்னிங் பாஸ்.. எல்லாரும் வெய்ட் பண்றாங்க. போலாமா?"
"லெட்ஸ் கோ"
செயற்கூடத்தில் அவனை வரவேற்று, "ஆல் த பெஸ்ட் தர்ஷன்" என்றார் ஆடிட்டர்.
"தேங்க்ஸ் அங்கிள். குட் மார்னிங் எவரிபடி.."
உத்வேகத்துடன் தொடங்கி உற்சாகமாக அவனது திட்டங்களை விவரித்துக்கொண்டே வந்தான் அவன். மினி காரியதரிசிகளுக்கான மேசையில் அமர்ந்து உன்னிப்பாக அவனைக் கவனித்துக் கொண்டிருக்க, அதுபோலவே அனைவரின் கவனமும் அவன்மீதே இருந்தது.
அவன் கண்ணால் ஆணையிட, கிருத்திக்கும் ஸ்பூர்த்தியும் எழுந்து ஃபைல்களை ஒவ்வொரு பிரமுகருக்கும் வழங்கினர்.
"இப்ப உங்க முன்னாடி இருக்கறது, கம்பெனியோட அடுத்த அஞ்சு வருஷத்துக்கான என்னோட விஷன். என் ஐடியாஸ். இதுல–"
திடீரென கூட்டத்தில் சலசலப்பு.
"மிஸ்டர் தர்ஷன்.. உங்க விஷன்ல ஏதோ ப்ராப்ளம் போல தெரியுதே.." என்றார் ஒரு மேலாளர் ஏளனத்துடன்.
தர்ஷன் திடுக்கிட, மினியும் கரிசனமாக எழுந்தாள்.
மற்றொருவர், "ஃபைல்ல ஃபர்ஸ்ட் பேஜ் மட்டும் தான் பத்துப் பக்கத்துலயும் இருக்கு.. இந்த அரைகுறை ப்ளானை வெச்சிக்கிட்டா கம்பெனியை வளர்க்கப் போறீங்க?" என அவர் பங்குக்கு மொழிய, மினி அவசரமாக ஆடிட்டர் கையிலிருந்த தரவுகளை வாங்கிப் பார்த்தாள்.
சொன்னது போலவே பத்துப் பக்கங்களிலும் ஒரே பிரதி தான் அச்சாகியிருந்தது. பிரமுகர்கள் தங்களுக்குள் நகைத்துக்கொள்ள, மினி அதிர்ச்சியாக ஸ்பூர்த்தியை நோக்க, அவளோ மிரட்சியோடு அமர்ந்திருந்தாள் தலைகுனிந்து.
தர்ஷனின் கண்கள் சிவக்க, கைகள் முறுக்கேறின. காரியதரிசிகள் அமர்ந்திருந்த பெஞ்ச்சின் பக்கம் திரும்பியவன், இருவரையும் சுட்டெரிக்கும் பார்வை பார்த்தான்.
"யார் இதை செஞ்சது?"
மவுனம்.
"கேட்கறேன்ல!?"
அவன் கத்தவும் இருவரும் எழுந்தனர்.
"அ.. அது.. நான்–"
ஸ்பூர்த்தி நடுக்கமான குரலில் ஏதோ சொல்ல வர, அதற்குள் சட்டென மினி முன்வந்து, "ஸாரி பாஸ், நான்தான் காரணம்" என்றாள் சலனமற்ற குரலில்.
தர்ஷனின் பார்வையில் அனல் பறக்க, கை முஷ்டியை முறுக்கியவாறு ஓரடி அவளை நெருங்கி வந்தான். மறைக்க முயன்றாலும் கண்கள் காட்டிக்கொடுத்த பதற்றத்துடன் அவள் நிற்க, "ஹவ் டேர் யூ!?" என இரைந்தான் அவன்.
அறையில் இருந்த அனைவருமே திகைத்து முகம் சுழிக்க, பத்மினியும் பின்வாங்கினாள்.
"தர்ஷன்.. லீவ் இட்" என்றார் ஆடிட்டர்.
பத்மினியும் வேண்டினாள். "ரெண்டு நிமிஷம் பாஸ்.. நான் மறுபடி–"
"நான்சென்ஸ்! பண்ற வேலைல பத்து பர்செண்ட் கவனம் இருந்திருந்தா இப்படி ஒரு கேவலமான, முட்டாள்தனமான விஷயத்தை யாராவது செஞ்சிருப்பாங்களா? இது என்னோட முதல் ஜாயிண்ட்-எக்ஸெக் மீட்டிங். இந்த தப்பை வெச்சு எல்லாரும் என்னை மோசமா ஜட்ஜ் பண்ண மாட்டாங்களா? எவ்ளோ கவனமா என் விஷனை அவங்க முன்னால ப்ரெசண்ட் பண்ணனும்னு மெனக்கெட்டேன்.. இப்டி என்னை ஹ்யுமிலியேட் பண்ற..
எவ்வளவு திமிர் இருந்தா, எவ்வளவு தலைக்கணம் இருந்தா, இப்படியொரு ப்ளண்டரை செஞ்சிட்டு கொஞ்சம் கூட வருத்தமே காட்டாம தெனாவெட்டா ஸாரி சொல்லுவ? யாரைக் கேட்டாலும் மினி மாதிரி உண்டான்னு பெருமை பேசுவாங்களே, அவங்க குடுத்த இடம்தானே இதெல்லாம்??
எப்ப உன்னை நீ ஓனர் ரேஞ்சுக்கு நினைச்சுக்க ஆரம்பிச்சயோ, அப்போவே உன் கரியர் முடிஞ்சு போச்சு. இதுக்கு மேல உன் முகத்தைப் பாக்க புடிக்கல. ஸோ ஜஸ்ட்.. லீவ். கெட் அவுட்."
புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது அங்கே. பத்மினி திரும்பி மேசையைச் சுற்றி அமர்ந்திருந்த பிரமுகர்களிடம் மீண்டும் ஒருமுறை 'ஸாரி' என்றுவிட்டு வெளியேறினாள்.
ஸ்பூர்த்தியும் கிருத்திக்கும் அச்சடித்தாற்போல நிற்க, ஆடிட்டர் இருவரிடமும் ஏதோ கிசுகிசுக்கவும் அவர்கள் வெளியேறினர்.
"ஐம் ஸாரி எவரி ஒன். இது ஒரு எதிர்பாராத சம்பவம். துரதிர்ஷ்டவசமா இந்த மீட்டிங் தடைப்பட்டாச்சு. இனிமேல் இப்படி நடக்காது. ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் அஸ். தர்ஷன்.. நீங்க கொஞ்சம் நிதானமாகுங்க."
யாரையும் ஏறெடுத்துப் பாராமல் சோர்வாக வெளியேறினான் தர்ஷன்.
****
சுமார் ஒருமணி நேரம் கடந்திருக்கும்.
ஸ்பூர்த்தியும் கிருத்திக்கும் தர்ஷனின் அறைக்கதவைத் தட்டி உள்ளே நுழைந்தனர்.
"பாஸ்.." என இழுத்தனர் ஒருசேர.
நெற்றியைத் தேய்த்தவன் ‘என்ன’ என்பதாய் கண்ணால் வினவ, ஸ்பூர்த்தி கிருத்திக்கைப் பார்த்தாள். 'சொல்லு' என்பதுபோல அவன் கண்காட்டினான்.
"அந்த ஃபைலை தப்பா ரெடி பண்ணது நான்தான் பாஸ். மினி கிடையாது."
ஒருவழியாக சொல்லிவிட்டாள் ஸ்பூர்த்தி.
தர்ஷன் அதிர்ச்சியாக நிமிர, கிருத்திக் தொடர்ந்தான்.
"இவளுக்கு காப்பி மிஷினோட செட்டிங்ஸ் சரியா தெரியாது. பட் நீங்க சொன்னதும் தட்ட முடியாம காப்பி எடுக்க போயிட்டா. நடந்தது எதுவும் தெரியாது மினிக்கு. ஆனா திடீர்னு நீங்க கேக்கவும் மினி தானா வந்து செய்யாத தப்பை செஞ்சதா சொல்லிட்டா."
எதுவும் சொல்லத் தோன்றாமல் சிலையாய் சமைந்து அமர்ந்திருந்தான் தர்ஷன்.
"ஸாரி பாஸ்."
கிருத்திக்கும் ஸ்பூர்த்தியும் தலைதாழ்த்தி வெளியேற, தர்ஷன் நிலைக்கொள்ளாமல் தவித்தான்.
அங்குமிங்கும் எழுந்து நடந்தவன், அந்த ஏழு நாட்களாக அவள் செய்த அபரிமிதமான செயல்களை நினைத்துப் பார்த்தான். அவளது பணிக்கு நியாயமான பாராட்டை வழங்காமல் தவிர்த்த தன் தலைக்கனத்தை மனசாட்சி எடுத்துக்கூற, உள்ளுக்குள் ஏதோ உறுத்தியது.
"மினி.. என் ரூமுக்கு வா."
இண்டர்காமில் அழைத்த இரண்டாவது நிமிடம் அவன்முன் இன்முகத்தோடு நின்ற பத்மினியை நம்பமுடியாத பார்வை பார்த்தான் அவன்.
"ஏன் மினி, அந்த ஃபைலை சொதப்பினது ஸ்பூர்த்தி. அதை என்கிட்ட சொல்லாம நீ ஏன் அமைதியா திட்டு வாங்கின மினி!?"
"அ.. அதெப்படி பாஸ்? எல்லார் முன்னாலும் அப்படி.. ப்ளேம் பண்ணினா, அவளுக்கு எவ்ளோ சங்கடமா இருக்கும்.. சின்னப் பொண்ணு பாஸ்.. அவ்ளோ திட்டினா தாங்க மாட்டா. தப்பே பண்ணாத மனுஷங்க யாரு… தப்புகள் பண்ணிப் பண்ணி தான் கத்துக்க முடியும்.. அவளும் சீக்கிரமே கத்துக்குவா."
தர்ஷன் ஆற்றாமையுடன் எழுந்து அங்குமிங்குமாக நடந்தான்.
"சரி, அவளைக் காப்பாத்தறதுக்காக செஞ்ச, ஓகே. அப்புறமாவது தனியா என்கிட்ட உண்மையை சொல்லியிருக்கலாம்ல?"
மினி மென்முறுவலுடன் தலையாட்டினாள் மறுப்பாக.
"ஒரே தப்புக்கு ரெண்டு பேர் எதுக்கு திட்டு வாங்கணும்? டைமும் எனர்ஜியும் வேஸ்ட் ஆகாதா? நடந்ததுல எனக்கு வருத்தமில்ல; ஆனா உங்க திட்டு அவளுக்கு விழுந்திருந்தா, அந்த நேரம் அவளுக்கு அது ரொம்பவே கஷ்டமா இருந்திருக்கும். அவளுக்கு நான் பொறுமையா எடுத்து சொல்லணும்; அதே நேரம் அவளால வந்த உங்க கோபமும் தீரணும். ஸோ, என்னை திட்டினதுதான் கரெக்ட். நீங்க அதை நெனச்சு ஒண்ணும் ஃபீல் பண்ணாதீங்க. நான் வேலைல நடக்கறது எதையும் பர்சனலா எடுத்துக்க மாட்டேன்."
இப்போது முழுக்க முழுக்க மரியாதை மட்டும் வெளிப்படும் பார்வை பார்த்தான் தர்ஷன்.
"சும்மா 'எனக்கென்ன தெரியும்'னு மழுப்பாம எல்லாத்தையும் ஏத்துக்கற.. பாராட்டோ திட்டோ, எது கிடைச்சாலும். மினி, நீ ஒரு அற்புதமான செக்ரெட்டரி. அப்பா உன்னை நம்புறதுல தப்பே இல்ல! உன்னைவிட, இந்த போஸ்ட்டுக்கு தகுதியான ஆள் எங்கே தேடுனாலும் கிடைக்கவே மாட்டாங்க!"
அவளுக்குக் கைகுலுக்கக் கைநீட்டினான் அவன்.
"நீயும் நானும் சேர்ந்து… நிறைய சாதிக்கப் போறோம்."
***
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top