வெளிச்சப் பூவே - 4
தந்தையைத் தேடி அருகே சென்றவன், மெதுவாக அவர் காதருகே குனிந்தான்.
"டாட்.. உங்க செக்ரெட்டரி அப்டினு.. ஒரு பொண்ணு.. இங்க.."
அவர் மலர்ந்து புன்னகைத்து, "மினியை பார்த்துட்டயா? நானே அவளை உனக்கு காட்டணும்னு இருந்தேன்.. எங்க போனா அவ?" எனத் தேடினார் அங்குமிங்கும்.
"ஆமா.. யார் டாடி அந்தப் பொண்ணு? எங்கயோ பார்த்த மாதிரி இருக்கா.."
அவனை நம்பமுடியாமல் பார்த்துத் தோளில் தட்டினார் சண்முகம்.
"பத்மினியை ஞாபகமில்லையாடா? உன் ஜெயா அத்தையோட பொண்ணு! என்னடா, கொஞ்ச வருஷம் பாக்கலன்னா சொந்தத்தை மறந்துடுவியா?"
"அத்தை பொண்ணா? அவ வெறும் செக்ரெட்டரின்னுல்ல என்கிட்ட சொன்னா!?"
"ப்ச், மினி எப்பவும் அப்படித்தான். ஆபிஸ்ல வெறும் செக்ரெட்டரி தான். வெளியே தான் அவளுக்கு உறவு முறையெல்லாம். உனக்கு ஜெயா அத்தை ஞாபகமிருக்கா?"
"லைட்டா. சின்ன வயசுல, கல்யாணமான பின்னால ஓடிப் போன--"
சண்முகத்தின் முகத்தில் கோப ரேகைகள் படரத் தொடங்க, தர்ஷன் அவரை ஆசுவாசப்படுத்தினான்.
"ஓகே, ஓகே. சொல்லலை. காம் டவுண் டாட். உங்க தூரத்து சொந்தம். ஒரே ஊரு. அந்த அத்தை … போன பிறகு நீங்க தானே அந்தப் பொண்ணை படிக்க வெச்சீங்க? ஏன், ஒழுங்கா படிக்கலையா? உங்ககிட்ட வேலை பாக்கறா?"
அவன் சாதாரணமாகக் கேட்க, சண்முகம் வெடித்துச் சிரித்தார். பத்மினி கரிசனமாக அருகில் வர, தர்ஷன் நெற்றியைத் தேய்த்தான் அசட்டுத்தனமாய்.
சண்முகமோ விடாமல், "மினி.. உன்னைப் பார்த்து, ஒழுங்கா படிக்காததால எங்கிட்ட செக்ரெட்ரியா வந்துட்டியான்னு கேட்கறான்டா இவன்!" என மாட்டிவிட, தர்ஷன் அதில் இம்சையாக உச்சுக்கொட்ட, பத்மினி சலனமின்றி முறுவலித்தாள்.
சண்முகம் யாரையோ பார்த்து விலகிச் சென்றார். தர்ஷன் அசவுகரியமாகப் புன்னகைத்தான்.
அவளோ இதழோரக் குறுநகையுடன் தலைசரித்து பார்த்தாள் அவனை.
"நான் ஐ.ஐ.எம் பெங்களூர்ல எம்.பி.ஏ கோல்ட் மெடலிஸ்ட்."
அவன் முகம் அதிர்ச்சியில் விரிந்தது.
"வாவ்... அப்பறம் ஏன்.. இங்க ஒரு... செக்ரெட்ரியா.. ஐ மீன்.. உங்க தகுதிக்கேத்த வேலை எத்தனையோ இருக்கும்போது..?"
அவள் மெலிதாகப் பெருமூச்செரிந்தாள்.
"மாமாவால தான். என்கிட்ட ரொம்ப ரெக்வெஸ்ட் பண்ணினார், அவர்கூட வொர்க் பண்ண சொல்லி. ஆனா போஸ்ட் பெருசா இருந்தா, நெபோடிஸம், பேவரிடிஸம்னு அவர் மேல ஆயிரம் பழி விழும். என் திறமைக்கும் அது களங்கமா இருக்கும். அவர் பேச்சையும் தட்டக் கூடாது, எனக்கும் மனசாட்சி உறுத்தக் கூடாது. அதான், செக்ரெட்டரி."
"இருந்தாலும்..."
அவன் அசவுகரியமாக இழுக்க, அவளோ வாய்விட்டு இலகுவாக சிரித்தாள்.
"ஒரு சீக்ரெட் சொல்லட்டா? இங்கிருக்கற எக்ஸிக்யூட்டிவ்ஸை விட, என்னை தான் மாமா நிறைய டெசிஷன்ஸ் எடுக்க விடுவார். மாமாவைத் தவிர யாரும் என்னைக் கேள்வியும் கேட்க முடியாது. அதிக பவர், கம்மி டென்ஷன். இதைவிட நல்ல போஸ்ட் கிடைக்குமா என்ன?"
"வாவ்."
"இனி உங்களுக்கு செக்ரெட்டரியும் நான்தான். கவலைப்படாதீங்க, நான் தேவையில்லாம உங்களை சங்கடப்பட வைக்க மாட்டேன்; I know my limits. உங்களுக்கு தேவையான ஹெல்ப்பை மட்டும் செய்யறேன்."
திரும்பி வந்த சண்முகமோ அவசரமாக இடையிட்டார்.
"டேய், உன்னை விட கம்பெனியை பத்தி மினிக்கு நல்லா தெரியும். ஸோ, அவ பேச்சை காதுல வாங்கி நடந்துக்கோ தர்ஷன்!"
அவன் இறுக்கமாக வாய்மூட, மினியோ தோளைக் குலுக்கினாள் சாதாரணமாக.
***
மாலையில் தன் வீட்டு பால்கனியில் செடிகளுடன் அமர்ந்திருந்த நேரத்தில், வாசல் மணி இடைவிடாமல் அடித்து அமைதியைக் கலைக்க, மினி நெற்றியைத் துடைத்தவண்ணம் எழுந்து வந்தாள் கதவைத் திறக்க.
“கதவைத் திறக்க இவ்வளோ நேரமா? தூங்கிட்டயா என்ன?”
“ஹாய் மோகன், வித்யா வரல?”
“கீழ்வீட்டு ஆன்ட்டியோட பேசிட்டு இருந்தா..” எனச் சொல்லிக்கொண்டிருந்த போதே வந்துவிட்டாள் வித்யாவும் படியேறி.
முகம் ஏதோ சுருங்கியிருந்தது.
“பெருசுங்களுக்கு வேற வேலையே இல்ல! எப்பப்பார், விசேஷம் உண்டா, சேதி உண்டான்னு அதே கேள்வி! இருந்தா நானே சொல்ல மாட்டனா?”
கணவனை முறைத்தபடி அவள் மினியுடன் வீட்டினுள் செல்ல, “நான் என்ன பண்ணேன்..?” எனப் பாவமாகக் கேட்டபடி மோகனும் உள்ளே வந்தான்.
“விடு விது, அவங்களுக்கு வேற வேலையில்ல. அவங்களா குழந்தையை வளர்க்கப் போறாங்க, அவங்க கேட்டதும் பெத்துக்க!?”
“ரைட். கல்யாணம் பண்ணவங்களுக்கு குழந்தை பெத்துக்கத் தெரியாதா?”
மோகன் வித்யாவின் தலையை சமாதானமாக நீவிவிட்டபடி சொல்ல, மினி இருவருக்கும் தண்ணீர் எடுத்து வந்தாள்.
சிறிது நேரம் ஆனது வித்யா ஆசுவாசமாக. திருமணமாகி ஆறு மாதங்களே ஆகியிருந்தாலும், பார்க்கும் ஆட்களெல்லாம் இதே கேள்வியைக் கேட்டு அவளைக் கடுப்பேற்றுவதால் இப்போது கோபம் அதிகரித்திருந்தது.
மினியும் வித்யாவும் பள்ளிப் பருவத்திலிருந்தே நல்ல சினேகம். இளங்கலை கல்லூரிப் படிப்பும் இணைந்தே தான். மோகன் அவளது வீட்டில் பார்த்து நிச்சயித்த வரன் தான் என்றாலும் ஏதோ முன்ஜென்மத் தொடர்பு போல அப்படியொரு நெருக்கம். வித்யாவைப் போலவே மோகனும் மினிக்கு நல்ல தோழனானான்.
“கோயிலுக்கு வந்தோம்.. அதான் வழியில உன்னையும் பார்த்துட்டுப் போலாம்னு வந்தோம். ஏன் இப்பல்லாம் ஃபோனே பண்றதில்ல?”
“ஒண்ணும் பெருசா இல்ல, ஆபிஸ்ல கொஞ்சம் வேலை, அவ்ளோதான்.”
“உங்க மாமா பையன் திரும்ப வந்துட்டானாமே?"
"மாமா பையன் இல்ல. சேர்மன் பையன்."
“ப்ச். ஓவரா பண்ணாத மினி. தர்ஷனை பத்தி சொல்லு, ஆளு எப்படி இருக்கான்? அமெரிக்க சாப்பாட்டுக்கு ஆள் நல்லா பெருத்துட்டானா? சிங்கப்பூர்ல அடிக்கடி கிசுகிசுவுல சிக்கிக்குவானாமே?”
“எல்லாமே தெரிஞ்சிக்கிட்டு என்கிட்ட கேள்வி கேக்கறியே?”
“எப்படி நழுவுறா பாரேன்! ஓய், சொல்லப் போறியா இல்லியா?”
“என்ன சொல்லணும்?”
“தர்ஷனைப் பத்தி”
சோபாவில் கால்மடக்கி அமர்ந்தாள் மினி. ஒருகண யோசனைக்குப் பிறகு, “நல்லா இருக்கான், நல்லா பேசறான். கம்பெனியை நல்லா பாத்துப்பான்னு தோணுது. அது போதும்,” என்றாள்.
வித்யா சந்தேகமாக, “தர்ஷனை மட்டும் உங்க கம்பெனி போர்ட் ஏத்துக்குமா? இப்ப ஜஸ்ட் சி.ஈ.ஓ போஸ்ட்ல தானே வந்திருக்கான்.. அப்ப சேர்மன் ஆக முடியலைன்னு தானே அர்த்தம்?” என்றாள்.
“தர்ஷனை ஒரு வருஷம் சி.ஈ.ஓ-வா வச்சு கவனிச்சு, அதுக்கப்பறமா வாக்கெடுப்பு நடத்தி அவனை சேர்மன் ஆக்கலாமா வேணாமான்னு முடிவு பண்ணுவாங்க.”
“ஓஹோ.. அந்தக் கவலையில தான் நீ இப்படி வாடிப் போயிட்டயா?” மோகன் இடையிட்டான்.
மினி, “வாட்!?” என்றாள் குழப்பமாக.
வித்யாவும் ஆமோதிப்பாக, “வர வர உன்னை ஒழுங்காவே கவனிச்சுக்க மாட்டீங்கற பத்தூ.. மூஞ்சியெல்லாம் டையர்டா இருக்கு,” என்றாள்.
“ஹிஹி,” மினி அசட்டையாக சிரித்தாள்.
"ப்ச்.. கண்ணெல்லாம் கருப்புப் பிடிச்சிருக்கு பார்.."
"கன்ஸீலர் போட்டனே.. சரியா அப்ளை பண்ணலையோ.."
"ப்ச், கன்ஸீலர் என்னத்துக்கு? கண்ணை மூடித் தூங்கினா ஆகாதா? எட்டு மணி நேரமாச்சும் தூங்கணும் மினி."
"ஹான்.. எட்டு மணி நேரம்?? போதுமா? இன்னும் நாலு மணி நேரம் சேர்த்தித் தூங்கட்டா?”
மோகன் முறைக்க, மினி பழிப்புக் காட்டினாள் உதட்டை சுழித்து.
“சரி, விடு. கம்பெனிக்கே உன் உடல், பொருள், ஆவி, எல்லாத்தையும் குடு. அதுக்காகவாச்சும் இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இரு. போற போக்க பாத்தா காத்தோட கரைஞ்சிடுவ போலயே!”
“காத்துல கரைஞ்சாலும் பேயா வந்து உன்னோட தான் இருப்பேன், பாத்துக்க.”
“அப்பவாச்சும் தூங்குவியா?”
மூவரும் வாய்விட்டு சிரிக்க, அன்றைய பொழுது இனிதே கழிந்தது.
***
அலுவலத்திற்குக் காலை பத்து மணியளவில் தனது ரோல்ஸ் ராய்ஸ் மகிழுந்தில் வந்து இறங்கியவன் பிரமுகர்களுக்கான பிரத்யேக மின்தூக்கியில் வந்து நிர்வாகத் தலைவருக்கான தளத்தில் தரையிறங்கினான்.
வழிநெடுக நின்ற பணியாளர்கள் யாவரும் பணிவாக வணக்கம் வைக்க, நிமிர்ந்த கம்பீர நடையுடன் தனது அலுவலக அறைக்கு வந்தான் தர்ஷன்.
அவன் கை வைக்கும் முன்பே கதவு திறந்துகொள்ள, மறுபுறமாக நின்றிருந்த பத்மினியை அங்கே கண்டதும் காலையில் கிளம்பும்போது தந்தை தந்த அறிவுரை நினைவுக்கு வந்தது.
"முதல் நாள் கம்பெனிக்கு போற… ஆல் த பெஸ்ட் தர்ஷன். எதுவா இருந்தாலும் பத்மினியை கேளு. எப்ப என்ன சந்தேகம்னாலும் அவளை கன்ஸல்ட் பண்ணு."
சற்றே கசப்பு தோய்ந்த புன்னகையை அவள்புறம் தெளித்தவன், அவள் சொன்ன 'குட்மார்னிங்'கிற்கு வெறும் தலையசைப்பை மட்டும் தந்தான்.
நேராகச் சென்று தந்தையின் சீட்டில் அமர்ந்தவன், நாற்காலியை சரிபார்ப்பதுபோல முன்னும் பின்னும் ஒருமுறை அசைந்தான்; திருப்தியாக நிமிர்ந்தான்.
எதிரில் கைகளை லேசாக சேர்த்துப் பிடித்தபடி பவ்வியமான முறுவலுடன் நின்ற பத்மினியை ஏற இறங்கப் பார்த்து, "என்ன மிஸ்.பத்மினி, டியூஷன் எடுக்கத் தயாரா வந்திருக்கீங்க போலிருக்கே!?" என்றான்.
இல்லை என்று தலையாட்டினாள் அவள்.
"உங்களுக்குத் தேவையானதை செய்ய வந்திருக்கேன் சார்."
"ம்ம், எங்கப்பா மாதிரி நான் கிடையாது. என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியாது.."
அவள் மீண்டும் தலையாட்டினாள்.
"தர்ஷன் சண்முகம். வயது இருபத்தி எட்டு. Child prodigy. சயன்டிஸ்ட் மூளை. சின்ன வயசுல இருந்தே கம்ப்யூட்டர் மேல ஆர்வம். பதினெட்டு வயசுல அமெரிக்காவுல MITல சேர்ந்தீங்க, மூணே வருஷத்துல டிகிரி முடிச்சு மெடல் வாங்கினீங்க. நாஸாவுல வேலை கிடைச்சும் கூட அங்க போகாம, ஏ.ஐ பத்தி கத்துக்கணும்னு ஆஸ்திரேலியா போனீங்க. அப்பறம் அப்பா பேச்சைக் கேட்டு சிங்கப்பூர்ல நம்ம கம்பெனி R&D ப்ரான்ச்சை பாத்துக்கிட்டீங்க. இன்னும் சயன்ஸ் மேல காதல் போகல. எப்பவும் எதாச்சும் புதுசா இன்வெண்ட் பண்ணனும்னு துடிப்பீங்க. நாளுக்கு ஆறு மணிநேரம் நீங்க லேப்ல இருப்பீங்க.."
"வாவ்.." என்றான் அவன் தன்னிச்சையாக. "எப்டி.. இதெல்லாம்?"
"கொஞ்சம் படிச்சேன், இண்டர்நெட்ல. ஆக்சுவலா நிறைய இன்டரெஸ்டிங் விஷயங்கள் கிடைச்சுது. பகல்ல க்ரீன் டீ. ராத்திரிக்கு விஸ்கி. கேஸினோ இஷ்டம், உங்க கேல்குலேஷன் திறமைகளை காட்ட. MITல மூணு வருஷத்துல இருபது பொண்ணுங்களை டேட் பண்ணீங்க, ஆஸ்திரேலியாவுல கணக்கு சரியா தெரியலை. சிங்கப்பூர்ல முதல் வருஷமே கவர்னர் பொண்ணோட ஒரு ஸ்காண்டல் நடந்தது, அப்பறம் ரீசண்ட்டா ஒரு செனேட்டரோட தங்கச்சியோடவும். கரெக்டா?"
அவன் உதட்டை வளைத்துக் குறும்பாகச் சிரித்தான்.
"இதான் கொஞ்சம் படிக்கறதா?"
அவளும் லேசாகப் புன்னகைத்தவாறு, "உங்களை மாதிரி ஜீனியஸை பத்தி ஓவர்நைட்ல எப்டி சார் தெரிஞ்சுக்கறது? கொஞ்சம் கொஞ்சமா தான் கத்துக்கணும்" என்றாள்.
வஞ்சப்புகழ்ச்சி போலில்லாமல், இயல்பான தொனியில் தான் இருந்தன வார்த்தைகள். அது ஏனோ அவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால் அதை வெளிக்காட்ட விரும்பவில்லை அவன்.
அதை அங்கீகரிக்காமல், "இங்க பாருங்க பத்மினி.. அப்பா இருந்தப்ப வேணா நீங்க சுதந்திரமான சீக்ரெட் எக்ஸிக்யூட்டிவா இருந்திருக்கலாம். ஆனா இப்ப நான் வந்துட்டேன். உங்களுக்கு ஒரு வாரம் ட்ரையல் டைம். என்னோட செக்ரெட்டரியா மட்டும் வேலை. உங்க வேலை திருப்தியா இருந்தா, நீங்க அப்டியே கன்டின்யூ பண்ணலாம். இல்லன்னா, கேள்வி கேட்காம கிளம்பிடணும். புரியுதா?" என்றான்.
மினியின் முகத்தில் மிக லேசான சலனம் தோன்றி மறைந்தாலும், அசராமல், "கண்டிப்பா சார்! இது உங்க கம்பெனி, உங்க முடிவு. உங்க ட்ரையலுக்கு நான் உட்படறேன்.. வரேன்," என்றுவிட்டு வெளியே வந்தாள்.
சிறிது நேரத்திலேயே தர்ஷனின் அறையிலிருந்து இண்டர்காம் அழைப்பு ஒலிக்க, பத்மினி அதை ஏற்றுக் காதில் வைத்து, "எஸ் சார்?" என்றாள் கரிசனமாக.
"என்னோட டேபிள்ல ஏன் கசகசன்னு பேப்பர்ஸா இருக்கு?"
"கம்பெனி பேப்பர்ஸ் தான் சார்.. கடைசியா முடிச்ச டீல் பேப்பர்ஸ். நீங்க பார்ப்பீங்கனு–"
"Just mail it, no? Guys... try to be efficient."
அதிருப்தியும் ஏமாற்றமும் கலந்ததாய் அவன் குரல் இருக்க, மினிக்கு ஏனோ அவமானமாக இருந்தது.
"ஸ்யூர். இப்ப வந்து பேப்பர்ஸை க்ளியர் பண்ணிடறேன்."
அலைபேசியை வைத்துவிட்டு நெடிதாகப் பெருமூச்சு விட்டாள் அவள்.
****
மாலை ஐந்து மணிக்கு பத்தாவது மாடியில் இருந்த அலுவலக சிற்றுண்டியகமான 'கேஃபடீரியா'வில் சோர்ந்துபோய் அமர்ந்திருந்தாள் மினி.
"ஓய்.. என்னாச்சு?"
"வா சுல்ஃபி.. உட்கார்."
"ம்ம்.. நீ ஏன் டல்லா இருக்க மினி? என்ன ஆச்சு உனக்கு?"
"புது முதலாளி வந்திருக்கார். தெரியும்ல?"
"ம்ம், காலைலயே பார்த்தோமே.. ஆளு நல்லா அம்சமா இருக்கான்னு எல்லாரும் பேசிக்கறாங்க. எனக்கென்னவோ சுமாராத் தான் தெரிஞ்சான்."
சுல்ஃபியின் ஒருமை விளிப்பு ஏனோ சிரிப்பை வரவழைக்க, இருந்தாலும் முறைத்து அவன் தோளில் தட்டினாள் அவள்.
"ப்ச். மரியாதை."
"சரி, என்னவாம் அந்தாளுக்கு?"
"நேத்து நல்லா தான் பேசினார், பார்ட்டியில. இன்னிக்கு என்னவோ காலைல இருந்து ஒரு மாதிரி… அந்நியமா பேசறார்.. அதான்.."
"அந்நியன் மாதிரி ஏதோ மெண்டல் டிஸார்டரா இருக்கும்.. விட்டுத் தள்ளு. பெரிய சீட்ல வந்து உட்கார்ந்தாச்சுல்ல, துரைக்கு ஈகோ வந்திருக்கும்."
"இல்ல.. தர்ஷன் அப்டிப்பட்ட ஆள் இல்ல.."
"என்னவோ வருஷக் கணக்கா பழகின மாதிரி பேசறியே!" எனச் சிரித்தான் சுல்ஃபி.
பத்மினியின் முகம் லேசாக வாடி மீண்டது.
"மினி.. என்னடி?"
"ஒண்ணுமில்ல."
அயர்ச்சியாக எழுந்து செல்பவளைப் புரியாமல் பார்த்தான் அவன்.
..
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top