வெளிச்சப் பூவே - 2

சிங்கப்பூர்.

கேஸினோ எனப்படும் சூதாட்ட விடுதி.

கருநிற உடையணிந்த ஆஜானுபாகுவான ஆட்களால் பாதுகாக்கப்பெற்ற 'விஐபி லவுஞ்ச்' எனும் பிரமுகர் பகுதி.

கைகளில் மதுபானக் கோப்பையுடன் கால்கள் தள்ளாட ஆடிக்கொண்டிருந்த யுவதிகள் கூட்டத்தின் மத்தியில், ரூலட்(roulette) விளையாட்டு மேசையின் எதிரில், குப்பியில் இருந்த தேன் நிறத் திரவத்தை கண்ணாடிக் கோப்பையில் நீந்திய ஐஸ்கட்டிகளின் மீது கவிழ்த்து அதை ஒரே மிடக்கில் வாயில் கவிழ்த்துக்கொண்டு கண்திறந்தான் அவன்.

"209"

சக்கரத்தில் சுற்றிச் சுழன்ற செந்நிற உலோகப் பந்து அவன் சொன்ன எண்ணிற்குரிய கட்டத்திலேயே வந்து விழுந்தது. ஆர்ப்பாட்டக் குரல்கள் அவனைச்சுற்றி எழுந்தன. எங்கிருந்தோ மீண்டும் ஒரு கோப்பை மது அவனது கைக்கு வந்தது. கூடவே ஒரு குவியல் ப்ளாஸ்டிக் சில்லுகளும்.

"ஒவ்வொண்ணும் பத்தாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள சிப்ஸ். மொத்தம் நூறு."
சிங்கப்பூர் வாடை கலந்த தமிழில் சொன்னவாறே அவனைப் பார்த்தார் சூதாட்ட விடுதியின் உரிமையாளர்.

மதுவை வாயில் ஊற்றிக்கொண்டவன், கைகளிரண்டாலும் அந்தச் சில்லுகளை அள்ளி இரைத்தான் மக்களின் பக்கம்.

"என்ஜாய்! கமான் எவரிபடி! வாழ்க்கையை அனுபவிப்போம் வாருங்கள் என் இனிய நண்பர்களே!!"

ஏற்கனவே ஒலித்த கூக்குரல் இப்போது பன்மடங்காக, ஆட்டமும் பாட்டமும் மதுவோட்டமும் நிரம்பி வழிந்தது அவ்விடுதிக்குள். எலெக்ட்ரானிக் இசைக்கேற்ப நடனமாடிக் கொண்டிருந்த வேளையில் இடுப்பு பாக்கெட்டில் வைத்திருந்த கைபேசி விர்ரென அதிரவும் அதை எடுத்துக்கொண்டே பிரமுகர்களுக்கு மட்டும் உண்டான பகுதிக்குள் கதவைத் திறந்துகொண்டு பால்கனி போன்ற இடத்தில் சென்று நின்றான் அவன்.

"இன்னிக்கு என்னோட விடுமுறை நாள். என்னையும் என் விஸ்கியையும் கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க."

"..."

"ஏ.ஐ. மாடல். யெஸ், தெரியும். சிங்கப்பூர்லயே நாமதான் முதல் ஆள், இந்த ஹைடெக் மார்க்கெட்டிங்கை பயன்படுத்தறதுக்கு. நாளைக்கு ஹெட்லைன் நம்ம கம்பெனி தான். இண்டியாவுலயும் இதுதான் ஹெட்லைன்ஸா இருக்கப் போகுது."

".."

"ஹஹா.. நான் ஜீனியஸ்னு எனக்குத் தெரியும். இதை சொல்லவா ஃபோன் பண்ணின? ஃபோனை வை."

அழைப்பை அணைத்த நேரம் மீண்டும் கைபேசி சத்தமிட, இப்போது திரையில் ஒளிர்ந்த இந்திய எண்ணைக் கண்டு சற்றே துணுக்குற்றான் அவன்.

***

பரபரப்பாக அவன் அலுவலகத்துக்குத் திரும்பி வர, சற்றுமுன் அழைத்த காரியதரிசி திகைப்பாகப் பார்த்தார் அவனை.

"சார்.. என்ன சார் ஆச்சு? நீங்க சொன்னபடி நான்–"

"க்விக்! நான் உடனே இந்தியா கிளம்பியாகணும்."

"என்னாச்சு சார், நாளைக்கு நம்ம சாப்ட்வேர் லான்ச் இருக்கே.. இப்ப திடீர்னு–"

அவன் எரிச்சலாக உச்சுக்கொட்ட, காரியதரிசி அமைதியானார்.

"எங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லை மேன்! அவருக்கு நான் தேவை. இப்ப நான் அவரோட இருக்கணும். என் அப்பாவை விட இந்த வேலை எதுவும் முக்கியமில்லை எனக்கு. நான் போகணும்.."

அவன் கைகள் அனிச்சையாக நடுங்கின. கால்சட்டைப் பாக்கெட்டில் கைகளை விட்டுத் தன்னை சமன்படுத்திக்கொள்ள முயன்றான்.

"அவர் என் அப்பா. என்னோட ஹீரோ. இந்த உலகத்துலயே எனக்கு முக்கியமானவர் அவர்தான். இங்க நான் இருக்கறதே அவரோட வார்த்தைக்காகத் தான். அவருக்கு எதாவது ஒண்ணுன்னா, நான் அவர் பக்கத்துல இருக்கறதுதானே நியாயம்? சும்மா சாவகாசமா நாலு மணிநேரம் கழிச்சு ஒருத்தன் கால் பண்ணி எனக்கு விஷயத்தை சொல்றான்… அதுவும், அவசரம் ஒண்ணுமில்ல, பொறுமையா கிளம்பி வான்னு வேற!"

கோபம் குறையாமல் அவன் கத்திக்கொண்டிருந்த போதே, கைபேசியில் காணொளி அழைப்பில் சண்முகம் அழைத்தார் அவனை.

திரையில் அப்பாவின் புன்னகை முகத்தைக் கண்டவன் சற்றே சாந்தமாகி, "டாட்.." என்றான் ஆதுரமாக.

"தர்ஷன்.. அப்பாவுக்கு ஒண்ணும் இல்ல. 'ஆன்ஜினா'ன்னு சொல்ற நெஞ்சுவலி. அவ்ளோதான். பைபாஸ் பண்ணியிருக்கோம்ல, அப்ப இதெல்லாம் வர்றது சகஜம் தான். நீ அங்கே மேனேஜரைத் திட்டிட்டு இருக்காத. பொறுமையா உன் கடமைகளை முடிச்சிட்டு, அடுத்த வாரத்துக்குள்ள கிளம்பி வந்தா போதும்."

"இல்லை டாட்.. நான் உடனே–"

"நாளைக்கு பெரிய லான்ச் ஈவண்ட் ஒண்ணு உனக்கு இருக்கில்ல? இப்ப போயி அதுக்கு தயாராகு. என்னை நான் கவனிச்சுக்குவேன் தர்ஷன். நீ கம்பெனியை கவனிக்கணும். லான்ச் நல்லபடியா முடிஞ்ச பிறகு நீ வந்தா போதும்."

அப்பாவின் பேச்சுக்கு மறுப்பு சொல்லாமல் தலையாட்டினான் அவன். அவனது கண்ணில் தெரிந்த கரிசனத்தை அவரும் கண்டார்.

"தர்ஷன், கம்பெனி மொத்தமும் உன்னை நம்பி காத்திருக்கு. அதனால வரும்போது எல்லாத்துக்கும் தயாரா வா. பதறாம இருக்கப் பழகு. நாளைக்கு உதவும் அது உனக்கு."

திரையில் அவர் முகம் மறைய, கைபேசியைத் தூரப் போட்டவன் அலமாரியை அலங்கரித்த மதுக்குடுவையை எடுத்து வாயில் கவிழ்த்துக்கொண்டான் விரக்தியாக.

***

மறுநாள் காலை. இந்தியா.

தார்சாலையைத் தனது ஓடுகளமாக்கி அனல்கிளப்பிப் பறந்த பல்சர் பைக் ஒன்று சர்ரென வந்து நின்றது நிறுவனக் கட்டிடத்தின் முகப்பில். பின்னிருந்து பார்க்கையில் 'Zulfi_rockss' என்ற நியான் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு நீல ஹெல்மெட் தென்பட, அதைக் கழற்றிய கைகளில் லெதர் கையுறைகள் தெரிய, 'Converse' காலணிகள் அணிந்த காலால் சைட்ஸ்டாண்ட் இட்டு பல்சர் பைக்கை பார்க்கிங்கில் இளைப்பாற விட்டுவிட்டு, காலைப் பணியாளர்கள் யாவும் கச்சிதமான ஃபார்மல் உடைகளுடன் தாமதப் பதற்றத்தோடு நடந்துசெல்லுகையில் அவர்களுக்குப் பொருந்தாமல் பளீரென பச்சைநிற டீஷர்ட்டும் ஜீன்ஸ் பேன்ட்டும் அணிந்தவனாய் ஆடவன் ஒருவன் துள்ளலான நடையுடன் உள்ளே நுழைந்தான்.

"ஹாய் சுல்ஃபி!"

"ஹாய் மச்சி!!"

சுல்ஃபி என்றழைக்கப்பட்ட அவ்விளைஞன் கையசைத்துவிட்டு, ஏழாவது மாடியில் இருந்த 'டெவலப்பர்ஸ் பே' என்ற கணிப்பொறியியல் மொழியாளர்கள் பணியிடத்திற்குச் சென்று தனது வருகையைப் பதிவிட்டுவிட்டு, மணியைப் பார்த்தான். பத்தரை.

தாமதிக்காமல் படியேறி மேல்தளம் சென்றவன், தனக்கு வேண்டிய முகத்தைக் கண்டவுடன் கண்கள்மின்ன வந்தான் நெருங்கி.

"ஓய் மினி.. ஹாய்!"

மினி தனது வேலையிலிருந்து நிமிர்ந்து பார்த்து இனிமையாகப் புன்னகைத்தாள்.

"ஹாய்.. ஐயா எங்க இந்தப் பக்கம்?"

"ஏன்.. உன்னைப் பார்க்க வரக் கூடாதா?"

"சீஃப் டெவலப்பருக்கு எங்களை எல்லாம் கண்ணுக்குத் தெரியுதா?"

"கண்ணுக்கு உன்னை மட்டும்தான் தெரியுதுன்னு சொன்னா நம்புவியா?"

"ஆஹான்.. சேர்மனைக் கூப்பிடட்டா?"

சிரிப்பு மறைந்து கரிசனம் தோன்றியது அவன் முகத்தில்.
"மினி, சார் எப்படி இருக்கார்? எல்லாம் ஓகேவா?"

ஆறுதலாகத் தலையாட்டினாள் மினி.
"இப்ப நல்லா இருக்கார். போர்ட் மீட்டிங் போயிருக்கார். நேத்து ஈசிஜி எடுத்த பிறகுதான் எனக்கு மூச்சே வந்தது."

"இனி என்ன நடக்கும்? போர்ட்ல இருக்கற எல்லாருமே அவரை ரிடையராக சொல்லி வற்புறுத்துவாங்க தானே? எப்படான்னு அலையுறானுங்க ஒவ்வொருத்தனும்!"

"அப்படியெல்லாம் யார் வேணா வந்து உக்காந்துர முடியாது சுல்ஃபி. கம்பெனியோட வாரிசு யார்னு தேர்வு பண்ற உரிமை அவருக்கும் இருக்கு. வோட்டிங் எடுத்து தான் எதையும் முடிவு பண்ணனும்."

"அப்போ… அவரோட முடிவு தானா?"

மினி பெருமூச்சு விட்டாள். "அது நடக்காத கனவுன்னு நான் நிறைய தடவை சொல்லிப் பார்த்துட்டேன். நானே சொல்றேன், தர்ஷன் தான் நமக்கான விடை. அவன்தான் கம்பெனியோட எதிர்காலம்."

அவன் மறுப்பதற்காக வாய்திறக்க, தலையை இடவலமாக ஆட்டித் தடுத்தாள் மினி.

செயற்கூட்டம் மூன்று மணிநேரம் நடக்க, அதன் இறுதியில் சண்முகம் சோர்வாக வெளியே வந்தார். அவர் முகத்தைக் கண்ட பத்மினி நடந்ததைப் புரிந்துகொண்டாள்.

லாபி அதீத பரபரப்போடு இயங்கிக்கொண்டிருக்க, புகைப்படக் கருவிகள் ஏந்திய பத்திரிகையாளர்கள் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தனர். அவர்களை வழிநடத்தி, அழைத்துச்சென்று அவர்களுக்கான அறிவிப்பு அறையில் அமர வைத்துக் கொண்டிருந்தனர் உதவிப் பணியாளர்கள்.

பத்து நிமிடத்தில் அலுவலக பணியாளர்கள் புடைசூழ வந்தார் சண்முகம். பத்மினி ஓரமாக பின்தொடர்ந்தாள்.

பத்திரிகையாளர்களை வணங்கிவிட்டு மேடையேறினார் அவர்.

"நான் அதிகாரப்பூர்வமாக ரிடையர் ஆகப் போறேன். என் கம்பெனியோட அடுத்த வாரிசு, என் பையன் தர்ஷன். கூடிய சீக்கிரமே சிங்கப்பூர்ல இருந்து வந்து JK Logitech நிறுவனத்தோட CEO-வாக அவன் உங்களை விரைவில் சந்திப்பான். நன்றி."

பத்திரிகையாளர்களின் பலதரப்பட்ட கேள்விகள் கலந்து கூச்சலாக மாற, அவரோ கண்டுகொள்ளாமல் கைகூப்பிவிட்டு, தொங்கிய முகத்துடன் வெளியேறிவிட, பத்மினி சற்றே சஞ்சலப்பட்டாள்.

குழப்பம் ஏற்படுமுன் அருகே நின்ற அன்வர் சட்டென மேடையேறினார்.

"ஸாரி, சண்முகம் சாருக்கு இப்ப உடல்நிலை சீரா இல்லை, அவர் ரெஸ்ட் எடுக்கணும். உங்களுக்கு கேள்விகள் இருந்தா எங்கிட்ட கேட்கலாம், நான் பதில் சொல்றேன்."

"நீங்க யார் சார்?"

"அன்வர் பாஷா. கம்பெனியோட வைஸ் ப்ரெஸிடென்ட். சாரோட ஃப்ரெண்ட்."

"எதனால சார் இந்த திடீர் முடிவு? இதனால கம்பெனி பாலிஸிகள்ல எதாவது மாற்றம் வருமா?"

"முழுக்க முழுக்க சண்முகம் சாரோட ஹெல்த்துக்காக எடுத்த முடிவுதான் இது. தர்ஷன் ஒண்ணும் சாதாரண பையன் கிடையாது. அமெரிக்காவுல, MIT யுனிவர்சிட்டில படிச்சுப் பட்டம் வாங்கி, இப்ப சிங்கப்பூர்ல நம்ம கம்பெனியோட R&D யூனிட்டை கவனிச்சுக்கிட்டு இருக்கார். இன்னிக்கு காலைல சிங்கப்பூர்லயே முதல்முறையா 'ஏ.ஐ. பேங்கிங் சாப்ட்வேர்' ஒண்ணை லான்ச் பண்ணியிருக்கார். காலைல இருந்து அதுதான் ஹெட்லைன்ஸ் அங்கே! ஸோ, அவரோட திறமையைப் பத்தி நான் தனியா எதுவும் சொல்லத் தேவையில்ல.
அவர் வந்தபிறகு கண்டிப்பா இன்னொரு மீட் இருக்கும். அதுல அவரே தன்னோட பிஸினஸ் பாலிசியை உங்களுக்கு ஷேர் பண்ணுவார். நன்றி"

தனியே நின்றபோது பத்மினி பெருமூச்செரிந்தாள்.

சண்முகம் முகத்தில் கவலைக்கோடுகள் பெருகிக்கொண்டிருந்தன. அரைநாள் தான் அவரை பணி செய்ய அனுமதித்திருந்தாள் பத்மினி. உருட்டி மிரட்டி மாத்திரைகளை முழுங்கச் செய்வது போலவே, அவரை அதட்டி ஃபைல்களைப் பிடுங்கி வீட்டிற்கும் போக வைத்தாள்.

"நத்திங் டூயிங் மாமா! சேர்மனோட உடல்நலம் சரியா இருந்தா தானே கம்பெனி நல்லா இருக்கும்; வொர்க்கர்ஸும் சந்தோஷப்படுவாங்க? நீங்க உங்களுக்காக இல்லைன்னாலும் எங்களுக்காக ரெஸ்ட் எடுங்க. இப்ப டெஸ்க்கை விட்டு எழுந்திரிங்க!"

"மினி.. இன்னும் கொஞ்ச நேரம். இதுதான் கடைசி.. ப்ளீஸ்டா.."

"மாமா.. உங்க செக்ரெட்டரின்ற முறையில சொல்றேன். திடீர்னு ஒரேயடியா ரிடையர் ஆகி வேலையை நிறுத்திட்டா உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். ஸோ, கொஞ்ச கொஞ்சமா குறைச்சுக்கலாம். ரெண்டு நாள்ல தர்ஷன் வந்துடுவார். அதுக்குள்ள நீங்க ரிடையர்மெண்ட்டுக்கு ரெடியாகணும்."

"ரிடையர்மெண்ட் பார்ட்டி தான் வலுக்கட்டாயமா நடத்துறீங்களே… சரி, அந்த ஏற்பாடெல்லாம் எப்படி நடக்குது?"

"சர்ப்ரைஸ். இப்ப சொல்ல மாட்டோம்."

அவர் வாய்விட்டு அலுத்துக்கொண்டார். ஆயினும் மேசையிலிருந்து எழுந்துகொண்டார் நல்லபிள்ளையாக.

பத்மினியின் கைகளைப் பிடித்துக்கொண்டவர், "மாமா போயிட்டாலும் கம்பெனியை நல்ல முறையில நீ பாத்துக்கணும் மினி. தர்ஷனுக்கு அறிவு அதிகம்; ஆனா அனுபவம் கம்மி. அவனுக்கு நீ துணையா இருந்து எல்லாத்தையும் கத்துத் தரணும்.." என்றார் உருக்கமாக.

"மாமா.. இது நம்ம கம்பெனி. நீங்க சொல்லவே வேணாம்; நான் பாத்துக்குவேன். நீங்க மனசை ரிலாக்ஸா வெச்சுக்கோங்க.. எல்லாம் நல்லபடியா நடக்கும்."

"ஹ்ம்.. தர்ஷனை நீயும் பார்த்து நாலஞ்சு வருஷம் ஆகிடுச்சுல்ல?"

பத்மினியின் கண்களில் அரைநொடி மட்டும் சின்னதொரு வெளிச்சம் தோன்றி மறைந்தது. சிறு புன்னகையுடன், "அமெரிக்கா கிளம்பினபோது பார்த்தது. நியூசிலாண்ட், சிங்கப்பூர்னு எங்கெங்கேயோ போயிட்டு வர நாலஞ்சு வருஷம் ஆகிடுச்சு" என்றாள்.

சண்முகம் வாஞ்சையாகத் தலையசைத்தார் ஆமென.
"இனி எங்கேயும் போக மாட்டான். இங்கயே தான் இருப்பான். நம்மகூட."

பத்மினியும் ஆமோதித்துத் தலையசைத்தாள், இதழோரம் மலர்ந்த முறுவலை மறைத்தபடி.

***

ஜி.எம் அறையில் வழக்கத்தை விடக் கூடுதலாக ஆள்கூட்டம் இருந்தது. மேசையில் நேற்று வந்த வணிக நாளிதழின் தலையங்கம் திறந்து கிடந்தது. தர்ஷனின் புகைப்படமும், "வசீகர வாரிசு வருகை" என ஆங்கிலத்தில் தலைப்பும் இட்டிருந்த கட்டுரையை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார் தலைமை மேலாளர் தண்டபாணி.

காளைமாடு போல புஸ்ஸென்று மூச்சு விட்டபடி கோபத்தை அவர் காட்ட, அவரது ஆதரவாளர் கூட்டமும் தங்கள் பங்குக்கு அதை வெறித்துப் பார்த்தனர்.

"இத்தனை வருஷமா மருந்துக்குக் கூட கம்பெனி பக்கம் எட்டிப் பாக்காத கத்துக்குட்டிப் பயல்.. இன்னிக்கு திடீர்னு முதலாளி ஆகிடுவானா? 'போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ்'னா என்ன, விரல் சூப்பிட்டு வேடிக்கை பாத்துட்டு இருப்பாங்கனு நினைச்சானா?"

"அதான சார்!? நீங்க மீட்டிங்ல எப்படி இந்த முடிவுக்கு சம்மதிச்சீங்க? வோட்டிங் வெச்சு அந்தாள் மூஞ்சில கரியை பூசியிருக்கலாம்ல?"

"ப்ச், அந்தக் கிழவனுக்கு இப்படி திடீர்னு நெஞ்சுவலி வரும்னு யார் கண்டா!? அனுதாப வோட்டு வாங்கி தர்ஷனுக்கு தாரை வார்த்துக் குடுத்துடுவான் சீட்டை! அதான், இப்போதைக்கு probationary nominationல அவனை CEOவா செலக்ட் பண்ணியிருக்காங்க. சேர்மன் ஆகணும்னா ஒரு வருஷம் காத்திருக்கணும். சுண்டக்காய் பயல்.. அவனை ஓட ஓட விரட்டிட மாட்டோமா நாம??"

சரியாக அவர் கத்திக்கொண்டிருந்த நேரத்தில் அவரைக் காண வந்திருந்தாள் மினி, கையில் அலுவலகத் தரவுகளுடன்.

கதவைத் திறந்த உடனேயே முகத்தில் அறைந்தாற்போல வந்து தாக்கிய எதிர்மறைப் பேச்சுக்கள் அவள் காதில் விழுந்து திகைக்கச் செய்தாலும், தேர்ந்த காரியதரிசியாக அவள் சலனமற்ற முகத்துடன் உள்ளே நுழைந்தாள்.

அவளைக் கண்டதும் ஏதோ அருவருப்பான பொருளைப் பார்த்ததுபோல மூக்கைச் சுழித்தார் தண்டபாணி.

"வந்திருக்கு பாரு, சேர்மனோட எடுப்பு" என சத்தமாகவே சபிக்க, சிலர் நகைக்க, பின்மண்டையில் விர்ரென சூடேறியது  அவளுக்கு.

தேவையில்லாமல் மீண்டும் சீண்டினர்.
"ஏய்.. என்ன மண்ணு மாதிரி நிக்கற? எதுக்கு உள்ள வந்த?"

"பேப்பர்ஸ்–"

"என்ன, எங்களை வேவு பார்க்க வந்தியா? சேர்மன்கிட்ட என்னைப் பத்தி வத்தி வெக்கப் போறியா?"

"ஸாரி சார்.. எனக்கு அந்தப் பழக்கம் கிடையாது. எனக்குக் குடுத்த வேலையை செய்யவே நேரம் பத்தலை.. இதுல அடுத்தவங்களைப் பத்தி புரணி பேசறதுக்கு அவசியமென்ன? வேலை இல்லாம வெட்டியா இருந்தா.. இப்படி உக்கார்ந்து பேசிட்டிருக்கலாம்."

மிகமிகப் பணிவான குரலில் அவள் இழிவுரைக்க, எதுவும் செய்ய முடியாது கையைப் பிசைந்தபடி குமுறினர் மற்றவர்கள்.

தண்டபாணி ஆத்திரமாக, "திமிரா? இதையெல்லாம் வேற எங்கயாச்சும் வெச்சிக்க. என்கிட்ட வேணாம்" என்றிட, அவள் அலட்டிக்கொள்ளாமல், "பிசினஸ் பேப்பர்ஸ் கிடைச்சா நான் கிளம்பிடப் போறேன்.. எனக்கென்ன சார் ஆசை, இங்க இருந்து உங்ககிட்ட பேசிட்டிருக்க! உங்கள்ட்ட பேசத் தான் கூடவே இவ்ளோ கூட்டம் இருக்கே" எனத் தோளைக் குலுக்கினாள் விளையாட்டுத் தொனியில்.

"ஹேய்.."

வேகமாக எழுந்து ஆவேசமாக அவள் முன்னால் வந்து கோயில்மாடு போல மூச்சு விட்டார் அவர். ஏதும் பேசுமுன், "சேல்ஸ் மீட்டிங்க்கு டைம் ஆச்சு சார்" என அவரது உதவியாளர் இடையிட, அவரை முறைத்துவிட்டு பத்மினியின் பக்கம் திரும்பினார்.

"சேர்மன் உன் பக்கம் இருக்கார்னு ரொம்ப ஆடாத. உனக்கும் ஒரு முடிவு வரும்."

அச்சுறுத்திவிட்டு அவர் செல்ல, மினி புன்னகை முகம் மாறாமல் நின்றாள், கண்களில் மட்டும் அணையாமல் ஒளிர்ந்த நெருப்போடு.

***

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top