வெளிச்சப் பூவே - 1
சென்னைப் பெருநகரின் தென்புறம் சற்றே நெரிசல் குறைந்த பெரும்பாக்கம் சாலை.
மற்ற கட்டிடங்களைக் காட்டிலும் பத்துப் பதினைந்து மாடிகள் அதிகம் கொண்டு தலைதூக்கிப் பளபளத்த அந்தக் கண்ணாடி மாளிகை மீது ஆளுயர எழுத்துக்களாலான வெள்ளி நிறப் பெயர்ப் பலகை.
JK Logitech.
தென்னிந்தியாவின் முதன்மையான மென்பொறி நிறுவனங்களில் ஒன்று. ஆண்டுக்கு சுமார் ஐநூறு கோடிகள் நிகர லாபம் காட்டும் அந்த நிறுவனத்தில் ஒரு வேலை கிடைப்பதற்காக தமிழகத்திலுள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரி மாணவர்களும் கனவுகளுடன் காத்திருந்தனர். பங்குச்சந்தைகளில் அவர்களின் பங்குகளை வாங்க வணிக வல்லுனர்கள் நாள்தோறும் முண்டியடித்தனர்.
காலை அலுவலகப் பணிநேரம் தொடங்கி விட்டதன் அடையாளமாய் கழுத்தில் டை கட்டிய கனவான்கள் தங்கள் தோள்பை சகிதமாக அலுவலகத்தினுள் நுழைய, கட்டிட காம்ப்பவுண்டிற்குள் விர்ரென விரைந்து நுழைந்த நீலவண்ண வெஸ்பாவில் வந்திறங்கினாள் அவள்.
மாநிறத்தினும் அடர்வான கோதுமை நிற அழகி. வெளிர்நீல முழுக்கை சட்டையும், இடையோடு ஒட்டிய பென்சில் ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். தோளைத்தாண்டி நீண்ட கூந்தலை அள்ளி குதிரைவால் போட்டு, உயரத்தை உயர்த்திக்காட்ட இரண்டரை இன்ச் தடிமனில் ஹீல்ஸும் அணிந்திருந்தாள்.
பார்க்கிங் பகுதியிலிருந்து முகப்பு வாசலுக்குப் பரபரப்பாக நடந்து வந்தவள், தானியங்கி சென்சார் கதவு திறக்க எடுத்துக்கொண்ட ஒன்றரை வினாடிகளில் சிறிய நெடுமூச்சை விட்டுத் தன்னை சமன்படுத்திக்கொண்டு, புன்னகையொன்றை இதழ்களில் ஏற்றிக்கொண்டு நளினத்தின் பிரதிபிம்பமாய் நடந்து வந்தாள் அலுவலகத்தினுள்.
காண்போர் கண்கள் இருகணங்கள் பதிந்து மீளும்படி எழிலாக வந்தவளை எதிரே கண்ட யாவரும் நட்புடன் வணக்கம் கூறினர்.
"ஹாய் பத்மினி! அந்த ஐடெல் கம்பெனி மெர்ஜர் என்ன ஆனது?"
"நேத்தே ஃபைனலைஸ் பண்ணி டீலை முடிச்சாச்சு. பேப்பர்ஸ் எல்லாம் சேர்மன் டேபிள்ல சம்மிட் பண்ணியாச்சு."
"சூப்பர்! அந்த மெர்ஜர் முடியவே முடியாதோன்னு நாங்க மண்டைய பிச்சுக்கிட்டு இருந்தோம்! ஆனா நீ..? நைட்டோட நைட்டா அதையும் முடிச்சிட்டு, லீவ் எடுக்காம இன்னிக்கும் டாண்ணு வந்துட்டியே! மினி, யு ஆர் தி பெஸ்ட்!"
"தேங்க்ஸ். புது சேல்ஸ் டீம் இன்னிக்கு வர்றதா சொன்னாங்களே!? செமினாருக்கு எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சா?"
"பண்ணிட்டே இருக்கோம் மினி.. உன் ஹெல்ப் கொஞ்சம் வேணும்"
"ஸ்யூர். நான் சேர்மனைப் பார்த்துட்டு வந்துடறேன், வந்ததும் இதை பார்க்கறேன்."
நிற்காமல் பேசிக்கொண்டே ஒவ்வொரு துறையாக நடந்தவள் அதனுடனே வெவ்வேறு இடங்களில் தரவுகளை சேகரித்து எடுத்துக்கொண்டு ஒழுங்குபடுத்திக்கொண்டே விரைந்தாள் நிறுவனத் தலைவரின் அலுவலக அறைக்கு.
மின்தூக்கியில் பயணித்து இருபதாவது மாடியை அடைந்தவள், அங்கே வெளியே இருந்த வரவேற்புப் பகுதியில் 'பத்மினி' எனப் பெயர்பொரித்த தனது மேசையில் சில தரவுகளை வைத்துவிட்டு, அங்கிருந்த கணினியில் தன் வருகையைப் பதிவிட்டுவிட்டு, இருபதடித் தொலைவில் தளத்தின் நடுநாயகமாக இருந்த நிறுவனர் அறையின் கண்ணாடிக் கதவை விரலால் இருமுறை தட்டித் திறந்துகொண்டு புன்னகையோடு உள்ளே நுழைந்தாள்.
"குட்மார்னிங் சார்."
முதல்வர் இருக்கையில் அமர்ந்திருந்த அறுபதைத் தொட்ட மனிதர் அவளைக் கண்டதும் மலர்ந்து சிரித்தார்.
"வாடா கண்ணா.. நேத்து விடிய விடிய உட்கார்ந்து இந்த மெர்ஜரை ட்ராஃப்ட் பண்ணியாமே? செக்யூரிட்டி மேனேஜர் சொன்னாரு, ஆபிஸுக்கு முதல் ஆளா வந்துட்டு கடைசி ஆளா கிளம்புறாங்கனு! கலக்கிட்டடா மினி! பர்ஃபெக்ட்டா இருக்கும்மா எல்லா பாயிண்ட்டும்! என் மினின்னா மினி தான்!"
பத்மினி புன்னகைத்தாள்.
"தேங்க்ஸ் சார். என் வேலையைத் தான் நான் செய்தேன் சார்."
"சாரென்ன சாரு! உன் சொந்த மாமன்டா நானு.. எத்தனை தடவை நானும் சொல்றது, என்னை மாமான்னு கூப்பிடுன்னு!"
அவரது குரலில் ஆற்றாமை தொனிக்க, பத்மினியோ முகமாற்றம் காட்டாமல் தரையைப் பார்த்தபடி, "ஆபிஸ்ல நீங்க சேர்மன், நான் உங்களுக்கு கீழ வேலை பாக்குற செக்ரெட்டரி. அந்த மரியாதை எப்பவும் இருக்கும் சார். மத்த இடத்துல மாமான்னு தானே கூப்பிடறேன்?" என வினவினாள்.
"ஹூம்.. என்னவோ போ! 'சேர்மன் எங்க மாமா'ன்னு நீ ஒரு வார்த்தை சொன்னா இந்த ஆபிஸே–"
"சொன்னாலும் சொல்லலைன்னாலும் நான் உங்க தங்கச்சி பொண்ணுதான மாமா.. அதுல மாற்றமில்லையே? அதைவிடுங்க, உங்க மெடிசன் எல்லாத்தையும் ஒழுங்கா சாப்பிட்டீங்களா?"
சண்முகம் ஏதோபோல் சிரித்தபடி, "ஹிஹி.. சாப்ட்டனே.." என்க, பத்மினி ஒற்றைப் புருவத்தை உயர்த்தினாள் சந்தேகமாக.
"நிஜமாவே சாப்பிட்டீங்களா, இல்லை பொய் சொல்றீங்களா?"
அவர் அசவுகரியமாக நெளிந்தார். அவரது பதிலுக்குக் காத்திராமல் பக்கவாட்டில் இருந்த குட்டி அலமாரியிலிருந்து மருந்துப் பெட்டியை எடுத்தவள், அன்றைய காலை வேளைக்கான மாத்திரைகள் அப்படியே இருப்பதைக் கண்டாள்.
"என்ன மாமா இது? மாத்திரை ஏன் சாப்பிடல?"
"ஹிஹி.. பத்மினி.. அது வந்தும்மா.. மறந்துட்டேன்.."
"மாமா.. நீங்க மறந்துடுவீங்கனு தெரியும்! உங்க மெடிகேஷனை நீங்க கரெக்டா எடுத்துக்கணும்னு டாக்டர் உங்களைவிட எங்கிட்ட தான் ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்கார். இந்தாங்க!"
"நீ இருக்கும்போது எனக்கு எதுக்குடா வேற மருந்தெல்லாம்… நான் நல்லா இருக்க நீ போதும்டா!"
"மாமா.. இப்டி பேசியெல்லாம் எஸ்கேப்பாக முடியாது நீங்க! அந்த டேப்லெட் கண்றாவியா கசக்கும்னு தெரியும் எனக்கும். என்ன பண்றது, சாப்ட்டு தான் ஆகணும். கண்ண மூடிட்டு கபக்னு முழுங்கிடுங்க பாக்கலாம். குட் மாமா.."
"ரொம்ப கேவலமான டேஸ்ட்டுடா.. நாக்கெல்லாம் ஒருமாதிரி இருக்கும்டா" எனச் சிணுங்கினார் அவர் சிறுகுழந்தை போல. அவளோ தாய்போல உருட்டி மிரட்டி ஒருவழியாக மருந்துகளைப் புகட்டி, அதைத் துப்பிவிடத் தப்பிவிடாமல் தடுத்து முழுங்க வைத்த பின்னர்தான் புன்னகைத்தாள்.
"அவ்ளோதான். இதுக்குப் போயா இவ்ளோ பயம்?"
"தினம் தினம் தின்னு பாரு, அப்பத் தெரியும்!"
"நீங்க இருக்கறப்ப எனக்கெதுக்கு மாமா வேற மருந்தெல்லாம்!"
கண்சிமிட்டிப் பழிப்புக் காட்டிவிட்டு அவள் செல்ல, வாஞ்சையாகப் பார்த்தவரின் கண்ணிலோ கண்ணீர் பளபளத்தது.
***
"ஹாய் மினி.. மெர்ஜர் வேலை முடிஞ்சது போலிருக்கே? சேர்மன் ஃபோன் பண்ணி இப்பதான் பேசினார்.."
பேசிக்கொண்டே வந்த பெரியவரை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தாள் மினி.
"வாங்க அன்வர் அங்கிள்.. சாரைப் பார்க்க வந்தீங்களா?"
அப்போது வெளியே வந்த சண்முகம், முகத்தை சுணக்கி, "ஆமா.. அவனையெல்லாம் அங்கிள்னு கூப்பிடு.. என்னை மட்டும் சார்,சார்னு கூப்பிடு.." என முனகியவாறே வந்தார்.
மினி தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
"வேலைல சேர்ந்த நாள்ல இருந்து என்னைக் கவனிச்சுக்கிட்டவர் அன்வர் அங்கிள்.. உங்ககிட்ட செக்ரெட்டரியா இருக்கறதுக்கு முன்னவே, அங்கிள்தான் என்னோட மெண்ட்டார்; என்னோட குரு. அதனால, அவர் எப்பவும் எனக்கு அங்கிள்தான் சார். நீங்க என் மரியாதைக்குரிய 'சேர்மன் சார்' தான் சார்."
அன்வர் அட்டகாசமாகச் சிரித்துவிட்டு மினியை ஏறிட்டார் பெருமிதமாக.
"என்னோட பெஸ்ட் ஸ்டூடண்ட் நீதான்டா கண்ணா. உன் சேர்மனை விட நான் தான் உனக்கு செல்லம்னு கேட்க எவ்ளோ ஹேப்பியா இருக்கு தெரியுமா?"
பேசிவிட்டு சண்முகத்தை வீம்பாகப் பார்க்க, அவரும் போலியாக முறைக்க, பத்மினி இருவரையும் பார்த்துச் சிரித்துவிட்டாள் பட்டென.
"போதும் சார்.. ரெண்டு பேரும் கிளம்புங்க போர்ட் மீட்டிங்க்கு! மெர்ஜரை விடிய விடிய உட்கார்ந்து எழுதி முடிச்சதே உங்களோட மீட்டிங்க்காகத் தான். ஸோ, லேட் ஆக்காம சீக்கிரம் போங்க!"
இருவரும் தோழமையான புன்சிரிப்போடு பத்மினிக்குக் கையசைத்துவிட்டு செயற்கூட்டத்திற்குக் கிளம்ப, பத்மினி தனது வேலைக்குத் திரும்பினாள்.
மதியம் வரை ஓரிடத்தில் நில்லாமல் ஓடி ஓடித் தனக்கான பணிகளை நிறைவாகச் செய்து தனக்குள்ளாகவே அவற்றின் தரத்தை மெச்சிக்கொண்டு தேவையான அறிவுரைகள், செயல்முறைகளை பிறருக்குச் சொல்லித் தந்து அவர்களின் நன்றியை எல்லாம் சின்னதொரு தலையசைப்பில் ஏற்றுக்கொண்டு கைநிறையக் கோப்புகளுடன் தளராமல் மீண்டும் தன் மேசைக்கு வந்து கணினித் திரையில் கண்பதித்து வேலையில் மும்முரமானாள் பத்மினி.
கூட்டம் முடிந்து வந்து, மதியம் வரை சண்முகமும் தன்னறையில் அமர்ந்து வருங்காலத்திற்கான வியாபார ஒப்பந்தங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். உணவு வேளை வந்துவிடவும் கொஞ்சம் வேலையை நிறுத்திவிட்டு நிமிர்ந்தார் அவர். கண்ணாடிச் சுவரின் வழியே கவனத்தோடு கணினியில் தட்டச்சு செய்துகொண்டிருந்த பத்மினியைக் கண்டு பெருமையுடன் புன்னகைத்தவர், அவளை அழைப்பதற்காகக் கைநீட்ட எத்தனிக்க, திடீரென இடது கையில் மின்னல் தாக்கியதுபோல வலித்தது.
மின்விசிறி சுழன்றடிக்க, குளிர்சாதன பெட்டியும் முழுவீச்சில் ஓடிக்கொண்டிருக்க, ஆயினும் ஏனோ அறையே காற்றில்லாமல் ஆனதுபோல இருந்தது அவருக்கு.
நெஞ்சு முழுக்க ஏதோ அழுத்தம் சேர்ந்ததுபோல் இருந்தது. கண்கள் லேசாக இருண்டுகொண்டு வந்தது.
நெற்றியில் சேர்ந்த வியர்வையைத் துடைத்தவாறு மெல்ல எழ முயன்றார் அவர்.
"ப–பத்மினி.. அம்மா பத்மினி…"
மேசையைப் பிடித்தபடி அவர் சாய்ந்து தடுமாற, கண்ணாடிச் சுவரின் வழியே அதைக் கண்டு, உடனே அசம்பாவிதத்தை உணர்ந்தவளாய் மின்னல் வேகத்தில் பத்மினி ஓடி வந்தாள். கைத்தாங்கலாக அவரைப் பிடித்து அலுவலக அறையில் போட்டிருந்த சோபாவில் படுக்க வைத்தவள், கணமும் தாமதிக்காமல் தொலைபேசியில் மருத்துவரை அழைத்தவாறே அறையின் ஜன்னல்களைத் திறந்துவிட்டாள். திரும்பி வந்து மேசை ட்ராயரில் மருந்துகளைத் தேடி எடுத்து நைட்ரேட் மாத்திரையைப் பிரித்து அவர் நாக்கினடியில் வைத்தாள். அவரது கைகளைப் பிடித்து அழுத்தம் கொடுத்தபடியே மறுகையால் செக்யூரிட்டி பட்டனை அழுத்தி ஆட்களை வரவழைத்தாள் அவரை ஆம்புலன்ஸிற்கு கொண்டுசெல்ல.
"எல்லாரையும் அலர்ட் பண்ணுங்க. எலவேட்டரை க்ளியர் பண்ணுங்க! மெடிக்கல் ரூம்ல இருக்கற ஸ்ட்ரெட்சரை எடுத்துட்டு வாங்க!"
ஆட்கள் வெளியே ஓட, பணியாளர்கள் அல்லோகல்லோலப்பட, குழப்பம் நிலவியது அலுவலகம் முழுதிலும்.
இத்தகைய சூழலிலும் பதறாமல் தான் செய்யவேண்டிய வேலைகளை தக்க முறையில் செய்யும் பத்மினியை அலுவலகமே வியப்பாகப் பார்க்க, அவளோ மனதினுள் கூச்சலிடும் பயத்தையும் பதற்றத்தையும் முகத்தில் காட்டாமல் மாமாவுக்குத் தைரியம் சொல்லிக் கொண்டிருந்தாள் நம்பிக்கையான தொனியில்.
"மாமா.. உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. நான் இருக்கேன். உங்க கூடவே தான் இருக்கேன்."
பத்து நிமிடத்தில் மருத்துவரே வந்துவிட்டார். அதற்குள் சண்முகமும் சற்று ஆசுவாசமாகி அமர்ந்திருந்தார்.
இரத்த அழுத்தமானியை அவர் கையில் மாட்டி அளவு பார்த்தபடியே மருத்துவர் பேச்சுக்கொடுத்தார்.
"அட்டாக்கா, இல்ல வெறும் வலி தானான்னு ஈசிஜி எடுத்து பார்த்தா தான் தெரியும். உங்களுக்கு ஏற்கனவே நான் பைபாஸ் சர்ஜரி பண்ணின அப்போவே சொல்லியிருந்தேன், கம்ப்ளீட் ரெஸ்ட் தேவைன்னு. கேட்காம ஆறு மாசமா ஆபிஸே கதின்னு கிடந்தா இப்படித்தான் சார் ஆகும்."
"நான் முடிக்க வேண்டிய சில கடமைகள் இருக்கு எனக்கு–"
அதற்குள் அன்வர் அவசரமாக ஓடி வந்தார் சண்முகத்தைப் பார்க்க. பத்மினியைக் கண்டவர் அவளிடம் விபரம் விசாரிக்க, அவளோ மருத்துவரைக் கண்காட்டினாள். அவர் மருத்துவரிடம் திரும்பினார்.
"டாக்டர்…"
"வெளிய போய்ப் பேசலாம்."
***
மினி கைகட்டி நின்றாள், பார்வையை ஜன்னலின் வழி திருப்பியபடி.
"தினமும் காலைல ஒண்ணு, நைட்ல ஒண்ணுன்னு தந்தீங்க. என் கடமையை கரெக்டா செஞ்சிடறேன் நான்; அவர் காலை மாத்திரையை மிஸ் பண்ணதே கிடையாது. வீட்ல தான் என்ன நடக்குதுன்னு தெரியல."
மருத்துவர் அதிருப்தியாகப் பார்த்தார்.
"அவரைப் பொறுப்பா பாத்துக்க அங்க யாரும் இல்லையா என்ன?"
அன்வர் பெருமூச்சு விட்டார்.
"பொண்டாட்டிக்கு லேடீஸ் க்ளப், ஷாப்பிங், அதை விட்டா சொந்தக்காரங்க வீடு. மூத்த பொண்ணை கட்டிக் குடுத்தாச்சு. அடுத்ததா ஒரு பையனும் பொண்ணும் இருக்காங்க. பையன் வெளிநாட்டுக்கு போயிட்டான். பொண்ணு காலேஜ் படிக்கறா. அவளுக்கு அவ ஃபோனை பாக்குறதுலயே நேரம் போகுது.. இதுல அப்பாவை எங்க பார்ப்பா?"
மருத்துவரோ வியப்பாகப் பார்த்தார்.
"கோடி கோடியா சொத்து சேர்த்து வெச்சிக்கிட்டு, அதை அனுபவிக்க ஆயுசு இல்லாமப் போறதெல்லாம் கொடுமை. நான் மார்னிங் டோஸை அதிகமா தர்றேன். கவனமா பாத்துக்கங்க. எதாவதுன்னா கால் பண்ணுங்க."
"ஸ்யூர், தேங்க்ஸ் டாக்டர்"
மருத்துவர் சென்றதும் அனைவரும் சண்முகத்தின் அறைக்குத் திரும்ப, விரல்களால் நெற்றிச் சுருக்கங்களைத் தேய்த்தபடி விட்டத்தைப் பார்த்திருந்தார் அவர்.
பத்மினி சென்று அவர் கரத்தைத் தொட்டாள்.
"மாமா. நீங்க ரெஸ்ட் எடுத்தாகணும். எந்த டென்ஷனும் இல்லாம."
"ப்ச், எனக்கு ஒண்ணுமில்லம்மா.. நீ பயப்படாத. நான்–"
"வேற வழியில்ல மாமா.. தர்ஷனைக் கூப்பிட்டு தான் ஆகணும்."
"மினி.. என்னம்மா நீயும்–"
"ஆறு மாசம் பேசிப் பார்த்தீங்க இல்லையா? எதுவும் நடந்ததா? அவங்களுக்கு தர்ஷன் தான் வேணும். குடுத்துடுங்க மாமா. தர்ஷனுக்கே குடுத்துடுங்க."
உறுதியுடன் அவள் சொல்ல, வேதனையுடன் தலையை ஆட்டினார் அவர், ஒப்புக்கொண்டதாக.
"தர்ஷனை வரச் சொல்லுங்க."
அன்வரிடம் திரும்பிக் கட்டளையிட்டார் சண்முகம்.
********
சொன்னது போலவே புதனன்று வந்துவிட்டேன்!
முப்பது அத்தியாயங்கள் கொண்ட சின்னக் கதைதான், எழுதிமுடித்த கதைதான். எனவே அத்தியாயங்கள் தவறாமல் வரும். தைரியமாக வாசிக்கலாம், ஹிஹி.
உங்கள் மேலான கருத்துக்களை அடியேனுடன் பகிர்ந்தால் இன்னும் ஆர்வமாக எழுதுவேன்.. மற்ற கதைகளும் விரைவாக வரும்.
அப்புறம், மருத்துவத் துறை பற்றி கொஞ்சம் அனுபவமுள்ள யாரேனும் இருந்தால் எனக்கொரு சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும்: முதுகலை (அதாங்க பி.ஜி.) படிக்காமல் எம்பிபிஎஸ் மட்டும் வைத்து வாழ்க்கையை ஓட்ட முடியாதா? கட்டாயம் மறுபடி காலேஜுக்குப் போய் தான் ஆகவேண்டுமா?
எனக்குப் பெரிதாக விருப்பமில்லை.. ஆனால் படித்தே ஆகவேண்டும் என்கிறார்கள் அனைவரும். பார்க்கலாம்.
வாக்களிக்க மறக்காதீர்! நன்றி!
அனைவருக்கும் எனது அன்பு.
மது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top