4
கதவு தட்டவும் திறந்தவுடன் கன்னத்தில் பளாரென்ற அரை விழுந்தது. தன்னை அறைந்தது யார் என்று மிரட்சியுடன் மருதினி பார்க்க, அவளின் மாமியார் தான் கோபமாய் நின்று கொண்டிருந்தார்.
"ஏண்டி எவ்வளவு திமிரு இருக்கும் உனக்கு? உம் புருஷன் உங்களுக்குன்னு ஒன்னும் சொத்து சேர்த்து வச்சுட்டு போகலை. ஏதோ என் சின்ன மகன் ரகு பெரிய மனசு பண்ணி உனக்கும் உன் புள்ளைக்கும் சோறு போட சம்மதிச்சா உனக்கு என்ன அவ்ளோ கொழுப்பா? சாப்பாடென்ன மரத்துலையா காய்க்குது? இல்ல உங்கப்பன் சம்பாரிச்சுட்டு வந்து கொட்டுறானா? அவ்ளோ சாப்பாட்டை தட்டில் போட்டு சாப்பிடாம திறந்து போட்டு வேஸ்ட் பண்ணி வெச்சுருக்க? நீ செஞ்ச வேலைக்கு இன்னைக்கு முழுக்க உனக்கு சாப்பாடு கிடையாது. தரித்திரம் தரித்திரம் எங்கிருந்து தான் கூட்டிட்டு வந்தானோ தெரியலை என் உயிரை எடுக்குது." என்று திட்டி கொண்டே அச்சாப்பாட்டை சாப்பிட்டார்.
அப்பொழுது தான் உள்ளே வருபவன் போல் ரகு வர, அவனின் பார்வையில் உடலெல்லாம் எரிவது போல் தோன்றவும் எதுவும் பேசாமல் வேகமாய் தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் மருதினி.
"இவ்ளோ திட்டறேனே கொஞ்சமாவது வாய திறக்குறாளா பாரு? அவ்ளோ அழுத்தம் பிடிச்சவ. எனக்குன்னு எங்கிருந்து தான் வந்து சேர்ந்தாளோ? எல்லாம் என் தலையெழுத்து." என்று திட்டிக்கொண்டே மகனை பார்த்தவர்.
"நீ என்னடா இந்நேரத்துல வந்துருக்க?" என்றார்.
"ஆபிஸ்ல ஒருத்தர் இறந்துட்டார்ம்மா. அதான் அறைநாள் லீவ். நீ ஏன் இவ்ளோ லேட்டா சாப்பிடற? டைமுக்கு சாப்பிடுன்னு எத்தனை முறை சொல்றேன். அப்புறம் மஞ்சு போன் பண்ணா." என்றான்.
"நீ சாப்பிடியா? சாப்பாடு போட்டு தரவா?என்னவாம்? எப்போ வராளாம்?" என்றார் சாப்பிட்டு கொண்டே.
"வேண்டாம். நான் சாப்பிட்டேன். அவங்க அம்மாக்கு உடம்பு சரியில்லையாம். ரெண்டு நாள் கழிச்சு தான் வருவேன்னு சொன்னா." என்றான் மருதினியின் அறைபக்கம் பார்த்துக்கொண்டே.
"ஹம்.. இருக்கட்டும் இருக்கட்டும் அம்மாக்கு உடம்பு முடியலைன்னா அவ தானே பார்த்துக்கணும். நீயும் போய் ஒரெட்டு பார்த்துட்டு வராது தானே?" என்றார்.
"இல்லம்மா நாளைக்கு எனக்கு லீவ் தான். வீட்ல தான் இருப்பேன். ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதை கண்டிப்பா முடிச்சே ஆகணும்." என்றான் மர்ம புன்னகையோடு.
அவனின் வார்த்தைகளில் ஏனோ உடலெல்லாம் பதற தொடங்கியது மருதினிக்கு. இனி இங்கு இருப்பது நமக்கு பாதுகாப்பு இல்லை. அழுது அழுது சோர்ந்து போனாள்.
இரவு அனைத்து வேலைகளையும் முடித்த பின் மெதுவாக மாமியாரிடம் வந்தவள் தயங்கியபடி பயத்துடன், "அத்தை!" என்றாள்.
படுப்பதற்காக கட்டிலில் கால் நீட்டி உட்கார்ந்திருந்தவர், "ஏய் இங்க வா." என்றார்.
அருகில் சென்றதும், "கால் என்னவோ ரொம்ப குடையுது. கொஞ்சம் அந்த தைலத்தை போட்டு கால் அழுத்திவிடு." என்றார்.
"ம்ம்" என்றவள் எதுவும் பேசாமல் தைலத்தை தேய்த்து விட்டாள்.
"அத்தை." என்றாள் மறுபடியும் மெதுவாக.
"என்னடி சும்மா அத்தை சொத்தைன்னு மனுசன தூங்க விடாம." என்று மீண்டும் கண்களை மூட, "நாளைக்கு கோவிலுக்கு போய்ட்டு வரவா?" என்றது தான் தாமதம் வேகமாய் எழுந்து அமர்ந்தவர், "எதுக்கு கோவிலுக்கு? எவனாவது பார்க்க வரேன்னு சொன்னானா?" என்றார் வெடுக்கென்று.
"இல்லல்ல நாளைக்கு மீரா பாப்பாக்கு பிறந்தநாள்... அதான் ஒரு அர்ச்சனை மட்டும் செஞ்சுட்டு வந்துடுறேனே." என்றாள் கெஞ்சலாய்.
"ஆமா இப்போ அதுக்கு பிறந்தநாள் ஒன்னு தான் கேடு. அது பிறந்தநாளுக்கு கோவிலுக்கு போலன்னு யார் அழுதா? என்னைக்கு நீயும் அதுவும் வந்திங்களோ என் பிள்ளைக்கு எல்லாம் போச்சு. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ஒழுங்கா வெந்ததை தின்னோமா அமைதியா மூலைல இருந்தோமான்னு இருக்கணும். புரிஞ்சுதா? இல்ல அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது?" என்று மறுபடியும் படுத்து கொண்டார்.
அவரின் வார்த்தைகள் மனதை மிகவும் காயப்படுத்த, அவரின் அறையை விட்டு வெளியே வர, ரகுவின் அறை வாசலில் நின்றபடி அவளை பார்த்திருந்தான். அவனின் பார்வை சரியில்லை என்பது மட்டும் தெரியும் ஆதலால் எதுவும் பேசாமல் வேகமாய் தனதறைக்குள் நுழைந்து கதவை அடைத்த பின் தான் நிம்மதியான மூச்சு வந்தது.
அன்றைய நாள் முழுவதும் உண்ணாததால் உடல் சோர்வில் பசியோடு அழுத படி உறங்கி போனாள்.
நடுஇரவில் தன் காலில் ஏதோ ஊர்வது போல் இருக்க உறக்கத்தில் உதறினாள். சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே போல் இருக்க பதறியடித்து எழுந்து அமர எதிரே ஓர் உருவம் அவளிடம் நெருங்கி அமர்ந்து இருப்பது தெரிந்தது. பட்டென்று அவ்வுருவத்தை தள்ளிவிட்டு விளக்கை போட ரகு போதையோடு எழுந்து நின்றிருந்தான்.
அவளின் அறையில் அவனை கண்டதும் சர்வ நாடியும் அடங்கி போனது. உள்ளுக்குள் பயத்தில் உதற தொடங்கியது. இருந்தும் தைரியத்தை வரவழைத்து கொண்டு, "இங்க என்ன பண்றிங்க? வெளிய போங்க." என்றாள் கோபமாய்.
"முடியாது." என்றான் குரல் குழறியபடி. அவ்வாடையில் குமட்டியது மருதினிக்கு.
"இது உங்க ரூம் இல்ல. உங்க ரூமுக்கு போங்க. இங்க எதுக்கு வந்திங்க?"
"எனக்கு வேணுமன்ற பொருள் இங்க தான் இருக்கு." என்று அருவெறுப்பாய் சிரிக்க, "இங்க உங்க பொருள் எதுவும் இல்லை. என்ன வேணும் உங்களுக்கு? முதல்ல வெளிய போங்க." என்றாள்.
"நீ தான் வேணும்." என்று மேலும் நெருங்கினான் அவளின் மச்சினன் ரகு என்கிற ராகு.
அவனின் கரம் அவள் தோள் மீது பட, துடித்து போனவள் வெடுக்கென தட்டி விட்டாள்.
"என்ன பண்றிங்க?" என்றாள் ஆற்றாமையுடன்.
"உன் மேல எனக்கு ஒரு கண்ணு இருக்குன்னு நீ இந்த வீட்டுக்குள்ள வந்ததுலர்ந்து உனக்கும் தெரியும். எப்போ எனக்கான நேரம் வரும்னு காத்திட்டு இருந்தேன். இப்போ தான் வந்திருக்கு. நீயும் சின்ன வயசு தான. பாவம் எங்க அண்ணன் இல்லாம என்ன பண்ணுவ? உனக்கும் ஆசையெல்லாம் இருக்கும்ல? நான் உனக்கு துணையா இருக்கேன். நீ எனக்கு ஒத்துழைச்சா உன்னையும் உன் பிள்ளையையும் நான் நல்லா பார்த்துகிறேன். நான் அவளை படிக்க வைக்கிறேன். எல்லாம் செய்யறேன்." என்றான் வாயெல்லாம் பல்லாக.
கோபம் தலைக்கேற, "என் புருஷன் இல்லைன்னு என்னை மிஸ் யூஸ் பண்ண பார்க்கிறியா? எப்பவும் ஒரே மாதிரி அமைதியா இருக்க மாட்டேன். முதல்ல இங்க இருந்து போய்டு. இல்ல என்னை காப்பாத்திக்க எந்த எல்லைக்கும் போவேன். என்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி இரு அதான் உனக்கும் நல்லது." என்றாள் வெறுப்புடன்.
"என்ன என்னை கொலை பண்ணிடுவியா? பண்ணிட்டு நீ ஜெயிலுக்கு போய்ட்டா உன் பொண்ணை யார் பார்த்துப்பா? அதுவும் அப்பனும் ஆத்தாலும் இல்லாம ரோட்ல உன்னை மாதிரி அனாதையா நிக்குமே... யாரும் இல்லாம அனாதையா என் தயவுல இருக்கும்போதே உனக்கு இவ்ளோ திமிரா? இங்க இருக்கணும்னா என்னை அனுசரிச்சுட்டு போய் தான் ஆகணும். நாளைக்கு காலைல வரைக்கும் தான் உனக்கு டைம். நீயே முடிவு பண்ணு. இங்க இருக்க போறியா? இல்ல ரோட்டில் நிக்க போறியா? அப்படியே போனாலும் உன்னை சும்மா அனுப்பிடுவேன்னு நினைக்காத... என் பொண்டாட்டி நகையை திருடிட்டேன்னு சொல்வேன் ஏன் புருஷன் இல்லன்னு என்னை .... துணைக்கு கூப்பிட்டேன்னு சொல்லுவேன்... நானும் எதை வேணா சொல்லுவேன். ஒழுங்கா சம்மதிக்கிற வழியை பாரு." என்று அவள் விலகினாலும் கன்னத்தை தட்டி விட்டு ஏளன புன்னகையோடு வெளியே தள்ளாடி கொண்டே சென்றான்.
அவன் சென்றதும் கதவை தாழிட்டவள்,
"மீராப்பா... பாருங்க. எங்க அம்மா அப்பா போன பிறகு என் பாதுகாப்புக்கு இங்க கூட்டிட்டு வந்திங்க. இப்போ நீங்க இல்லன்னவுடனே உங்க வீட்லயே எனக்கு பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு நாளை கடத்துறது ஒவ்வொரு யுகம் மாதிரி இருக்கு. இதிலிருந்து எனக்கு விடுதலை எப்போன்னு தெரியலையே?" எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து போய்விட வேண்டும் என்ற முடிவோடு கதறினாள் மருதினி.
மறுநாள் காலை, வழக்கம் போல் ஏச்சுக்களை வாங்கியபடி வேலை செய்து கொண்டிருந்தாலும் என்ன நடக்குமோ? எப்படி இங்கிருந்து வெளியேறுவது? என்பதிலேயே இருந்தது.
"அரைமணி நேரத்தில் வெளிய வேலை இருக்கு போகணும். மதியம் சாப்பாட்டுக்கு வந்திடுவேன்." என்றான் மருதினியின் பின்னழகை பார்த்தபடி.
"சரி டா" என்றவர்.
"ஏய் இந்தாடி. இங்க ரெண்டு வீடு தள்ளி ஒரு சீமந்தம் போய்ட்டு அரைமணி நேரத்துல வந்துருவேன். சீக்கிரம் வேலையை முடிச்சு வை." என்று சீவி சிங்காரித்து வெளியேறினார் மாமியார்.
அவர் வெளியேறவும் வேகமாய் குழந்தையோடு அருகில் இருந்த கோவிலுக்குள் சென்று அமர்ந்து விட்டாள்.
'நான் யாருக்கு என்ன பாவம் பண்ணேன். என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி ஆச்சு? எங்க போறது? இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் வெளிய போனவுடனே மகி இருக்க இடத்துக்கே போய்டனும்.' என்று கண்ணீரில் கரைந்தாள்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top