2

அம்மா!" என்று குழந்தை மீரா கூப்பிடுவது கூட கேட்காமல் சுவற்றை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் மருதுனி.

"அம்மா!" என்று மீண்டும் தன் பிஞ்சு கரங்களால் அவளை தொட்டு உலுக்கி குழந்தை கூப்பிடவும், ஆசையாய் மகளை அணைத்து கொண்டு, "என்னடா தங்கம் என்ன வேணும்?" என்றாள் சோகங்களை மறைத்து புன்னகையை வரவழைத்துக் கொண்டு.

"பாட்டி அங்...க நீ இல்லே...ன்னு திட்டுறாங்கம்மா... உன்...னை கூப்பிடறாங்கம்மா." என்று தன் பிஞ்சு மொழியில் கூறியதும் பயத்தில் வியர்த்து கொட்டியது. அடித்து பிடித்து எழுந்தவள் வேகமாய் வெளியே சென்று மாமியாரை பார்த்தபடி தூணோடு சாய்ந்து நின்றாள்.

"ஏண்டி அறிவுகெட்டவளே! நீ என்ன பெரிய மகாராணின்னு நினைப்பா? நீயா வரமாட்டியா? உன்னை ஒரு ஆள் வெத்தலை பாக்கு தட்டுல வச்சு கூப்பிட்டா தான் வருவிங்களோ? தரித்திரம் தரித்திரம்... நீ உள்ள போய் உட்கார்ந்துகிட்டா வீட்டு வேலையெல்லாம் யார் செய்றது? உங்கப்பனா வந்து செய்வான்."

உலகே சென்று வந்தவர் தன் அழுக்கு துணிகளை அவளின் முகத்தில் வீசி, "இங்க பாருடி மஞ்சு அவங்க பிரெண்ட பார்க்க போயிருக்கா. உன்னை மாதிரி அப்பா அம்மா இல்லாத அனாதையா அவ? அதான் அப்படியே அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டு சாயந்திரம் தான் வருவா.  நானும் கோவிலுக்கு போய்ட்டு வரேன். அதுக்குள்ள வீட்டை பெருக்கி சுத்தம்மா துடைச்சுருக்கனும். சமையல் எல்லாம் முடிச்சுரு. எல்லார் துணியும் போட்டு துவைச்சு காய வச்சுடு. எந்த வேலையும் செய்யாம தண்டமா சாப்பிட்டா உடம்புல ஓட்டாதும்பாங்க. அதுவுமில்லாம நீ வீட்ல தண்டமா தான இருக்க... இந்த வீட்ல ஓசி சோறு சாப்பிடறதுக்காகவாது என்னை ஏமாத்தாம கொஞ்சம் விசுவாசமா வேலை செய்ய பாரு. சும்மா மசமசன்னு நிக்காம போய் வேலையை பாருடி. நான் வரும்போது எல்லாம் முடிச்சுருக்கனும். இல்ல உருச்சு உப்புகண்டம் போட்ருவேன் ஜாக்கிரதை." என்று ஒய்யாரமாய் வெளியேறினார் கமலம்.

அவர்களின் பேச்சுக்கள் ஒன்றும் மருதினிக்கு புதிதல்ல... இதெல்லாம் கடந்த மூன்று மாதங்களாக அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்று தான்.

'மிரு!நான் இருக்கும்போது இனி எதுக்காகவும் கலங்கக்கூடாதுடா பட்டு. இனி உனக்கு நான் தான் எல்லாமே... அம்மா அப்பா எல்லாம். புரிஞ்சுதா?' தலைகோதி நெற்றியில் இதழ் பதித்து தன் கழுத்தில் மங்கல்யத்தை கட்டியபோது பிரபு கூறிய வார்த்தைகள். அன்று அவ்வளவு இதமாக இருந்தது.

ஆனால் இன்று, என்று அவள் காதல் கணவன் வேலைக்கு சென்று திரும்பி வரும்போது எதிர்பாரா விபத்தொன்றில் இவர்களை விட்டு மண்ணுக்குள் போனானோ அன்று ஆரம்பித்தது மருதினிக்கு மாமியார் வடிவில் ஏழரை.

"அப்போவே தலைபாடா அடிச்சுகிட்டேன். இந்த ராசியில்ல்லாதவள கல்யாணம் பண்ணாதடான்னு... கேட்டானா என் மகன். ஏற்கனவே அப்பன் ஆத்தாளை முழுங்கிட்டு தான் வந்தா. இவ ராசி சரியில்லாம போன நேரம் என் புள்ளைய ஒரேடிய கொன்னு புதைகுழில தள்ளிட்டாளே... இந்த பாவினால என் புள்ளைய வாரி மண்ணுக்கு கொடுத்துட்டேனே..?" என்று அன்றிலிருந்து ஆரம்பித்தவர்... நாளுக்கு நாள் வசவுகள் தொடர் கதையாகி இன்னும் அதிகரித்ததே தவிர குறையவில்லை.

அவர் இவ்வளவு பேசியும் எதையும் உணரும் நிலையில் இல்லை அவள். இந்த உலகில் பெற்றோருக்கு பிறகு தனக்கு அன்பை கொடுத்த கணவனின் மரணம் அவளை பெரிதும் பாதித்திருந்தது. அந்த துயரத்திலிருந்து இன்னும் மீண்டு வரமுடியாமல் தவித்து கொண்டிருந்தாள். இப்பொழுது மருதினியின் எண்ணமெல்லாம் அவளின் கணவன் மட்டுமே நிறைந்து இருந்தான்.

"ஏன் பா என்னை விட்டுட்டு தனியா போனீங்க? உன்கூட எப்பவும் நான் இருப்பேன்னு சொல்லி தானே இங்க கூட்டிட்டு வந்திங்க... இப்போ நீங்க மட்டும் என்னை விட்டுட்டு போய்ட்டீங்க. நரகம் மாதிரி இருக்கு இங்க. நீங்க இல்லாம எனக்கு ஒரு நொடி கூட வாழவே பிடிக்கலை. நம்ம குட்டி பாப்பா மட்டும் இல்லைன்னா நான் இந்நேரம் உங்கக்கூடவே வந்திருப்பேன்." என்ற வார்த்தைகள் மட்டும் அவளின் மனதையும் மூளையையும் ஆக்ரமித்திருந்தன.

உள்ளுக்குள் அழுதாலும் புரண்டாலும் வேலைகளை அவள் தானே செய்ய வேண்டும். தன் நினைவுகளை ஒரு புறம் ஒதுக்கி வைத்தவள் கண்களை துடைத்து கொண்டு பிள்ளைக்கு விளையாட பொருட்கள் கொடுத்துவிட்டு வீட்டு வேலைகள் ஒவ்வொன்றாய் செய்ய ஆரம்பித்தாள். அவ்வளவு வேலைகள் செய்தாலும் மனவலியை விட உடல் வலி பெரிதாய் தெரிவதில்லை.

வேலைகளை முடித்து கையோடு குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி தூங்க வைத்தாள். தானும் குளித்து உடைமாற்றி வந்தவள் சாப்பிடலாம் என்று சாப்பாட்டை தட்டில் போட்டு கொண்டிருந்தாள்.

காலையில் இருந்து சாப்பிடாதது வேறு மிகவும் களைப்பாக இருந்தது.

தன் கழுத்தில் ஏதோ வித்தியாசமாக ஊர்வது போல் இருக்க அதிர்ச்சியாய் பதறி திரும்பி பார்த்தாள்.

அங்கே நிற்பவனை கண்டு முகம் வெளுத்து பயத்தில் மேடையோடு ஒடுங்கியவள்.

"என்... ன... வேணும் உங்களுக்கு?" என்றாள் பயத்துடன்.

"சாப்பிடணும். பசிக்குது." என்றான் அவளை மேலிருந்து கிழ்வரை பார்வையால் பருகிக்கொண்டே.

"நீங்க போங்க. நான் எடுத்துட்டு வரேன்." என்றாள் கொஞ்சம் பயம் தெளிந்து.

"இல்ல நான் இங்கேயே இருக்கேன். நீங்க தாங்க." என்றான் ரகு.

எதுவும் பேசாமல் தனக்கு போட்டு கொண்டிருந்த சாப்பாட்டு தட்டில் குழம்பை ஊற்றி அவனிடம் நீட்டினாள்.

தட்டை வாங்கிய பொழுது வேண்டுமென்று அவள் கரத்தினை தீண்டிட துடித்துடித்து வெடுக்கென உருவி கொண்டாள் மருதினி.

தட்டில் சாப்பாடு போடவும், "ஒஹ்... நீங்களும் இன்னும் சாப்பிடலையா? வாங்க ஒண்ணா சாப்பிடலாம்." என்று அங்கேயே நின்றான்.

சோர்வில் எடுத்த பசியெல்லாம் எங்கோ காணாமல் போனது. அவனுடன் ஒன்றாக ஒரே இடத்தில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு சாப்பிடாமல் பட்டினியாக இருக்கலாம் என்று தோன்றியது. அவனும் நகராமல் அங்கேயே நிற்க என்ன செய்வது என்று யோசித்தவள்.

"பாப்பா எழுந்துட்டா... நான் அப்புறம் சாப்ட்டுக்குறேன். நீங்க சாப்பிடுங்க." என்று அவனின் பதிலுக்கு காத்திராமல் வேகமாய் அறையை நோக்கி சென்றாள்.

திருமணமாகி வந்த புதில் இருந்தே அவனின் பார்வை சரியில்லை.
இதை பற்றி சில நேரம் கணவனிடம் கூறலாம் என்று தோன்றும்... இருந்தாலும் தேவையில்லாமல் நம்மால் குடும்பத்திற்குள் எதற்கு ஒரு சண்டை என்று உணர்ந்து தான் சொல்லாமல் ரகுவிடம் இருந்து ஓரடி தள்ளியே இருந்தாள்.

அவள் கணவனின் மறைவுக்கு பின் இன்னும் பயம் பற்றி கொள்ள அவன் இருக்கும் திசை பக்கம் கூட தலை வைப்பதில்லை. முடிந்தவரை அவன் கண்களில் படாமல் இருக்க முயற்சி செய்வாள். அப்படி இருக்க இன்று அத்தை இல்லாததும் அவன் மனைவி இல்லாததும் வசதியாகிட உடனே வந்து நின்று விட்டான்.

'நாம உள் பக்கமா லாக் பண்ணிருந்தோமே எப்படி வந்தான்?' என்று எவ்வளவு யோசித்தாலும் பதில் தெரியவில்லை. இனி இவனிடம் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எண்ணியவள் பசியோடு அமர்ந்துவிட்டாள்.

வெளியே சென்றால் அவனின் பார்வை தன் மேல் ஊர்வது அருவெறுப்பை தந்தது. தனக்கு இதிலிருந்து விடுதலையே இல்லையோ? இன்னும் போக போக எப்படி சமாளிக்க போகிறோம் என்ற பயம் விஸ்வரூபம் எடுத்தது.

அவளின் எண்ணங்களை களைப்பது போல் கதவு தட்டப்படவும் அவன் தான் கதவை தட்டுகிறானோ என்று பயந்து திறக்காமல் மேலும் ஒடுங்கி விழிமூடி அமர்ந்து கொண்டாள்.

கதவும் நிற்காமல் தட்டவும் உடல் நடுங்கியபடி மெல்ல சென்று கதவை திறந்தாள்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #family#love