9 குட்டி தேவதை

9 குட்டி தேவதை

ஓவியனை தனது இல்லத்தில் பார்த்த ஆஸ்பயர் பிரமோட்டர்ஸ் மேனேஜர் அகோரமூர்த்தியின் முகம் வெளிரி போனது. கிட்டத்தட்ட, ஓவியனை பிடித்து தள்ளிக்கொண்டு வெளியே வந்தார் அவர்.

"சார், நீங்க இங்க என்ன சார் பண்றீங்க?"

"உங்க ஆபீசுக்கு போயிருந்தேன். நீங்க லீவுல இருக்கிறதா சொன்னாங்க. நீங்க தான் லீவ்ல இருக்கும் போது எந்த ஃபோனையும் அட்டென்ட் பண்ண மாட்டேன்னு சொல்லி இருந்தீங்களே...! அதனால தான் உங்களை நேரில் பார்த்துட்டு போலாம்னு வீட்டுக்கு வந்தேன்"

"நான் தான் நான்சியை பத்தி எனக்கு தெரிஞ்ச எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேனே... அப்புறம் ஏன் சார் இங்க வந்தீங்க?"

அப்போது, இருபது வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருத்தி, வீட்டினுள்ளிருந்து எட்டி பார்க்க, அவளை உள்ளே செல் என்பது போல் கண்களால் எச்சரித்தார் அகோரமூர்த்தி கோபமாய். அந்தப் பெண் விடுவிடுவென உள்ளே சென்று விட்டாள். அவள் அகோரமூர்த்தியின் மகள் என்று புரிந்து கொண்டான் ஓவியன்.

"நம்ம மாடிக்கு போய் பேசலாமா சார்?" என்றான் அகோரமூர்த்தி.

அதற்கு சம்மதம் தெரிவிக்கும் தொணியில், தன் தலையை லேசாய் சாய்த்து அவரைப் பார்த்தான் ஓவியன். அகோரமூர்த்தி முன்னே நடக்க, அவரை பின் தொடர்ந்தார்கள் ஓவியனும், முருகனும்.

"சொல்லுங்க சார்..."

"நாங்க, நான்சியோட இன்கமிங் அண்ட் அவுட்கோயிங் கால் லிஸ்ட்டை எடுத்திருக்கோம்"

அகோரமூர்த்திக்கு குப் என்று வியர்த்தது. அவர் முகத்தை கைகளால் துடைத்துக் கொண்டார்.

"அவங்க உங்க கிட்ட தான் வேலை செஞ்சுகிட்டு இருந்தாங்க. ஆபீஸ்ல குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் உங்க கூட இருந்திருக்காங்க. அதுக்கு மேல அவங்க கூட ஒரு நாளைக்கு மூணு, நாலு தடவை ஃபோன்ல பேச வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது?"

"அஃபிஷியலா பேசினோம் சார்..."

"எப்படி? நான் எப்பவும் உன் கூடவே இருக்கணும்... உன்னோட வெல்வெட்டு கன்னத்தை தொட்டு பாக்கணும்... நீ மறுபடியும் என் படுக்கையில் வேணும்..."

அவனது பேச்சை தடுத்து,

"சார் ப்ளீஸ்..." என்றான் அகோரமூர்த்தி.

"இன்னொருத்தன் பொண்டாட்டி கிட்ட நீங்க இப்படி எல்லாம் பேசினீங்கன்னு உங்க வைஃபுக்கு தெரிஞ்சா, அவங்க என்ன நினைப்பாங்க? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்களுடைய ஒரே ஒரு பார்வையை புரிஞ்சுகிட்டு, எதுவுமே பேசாம, உங்களுக்கு மரியாதை கொடுத்து உள்ள போனாங்களே உங்க பொண்ணு, அவங்க என்ன நினைப்பாங்க? நீங்க அவங்க அம்மாவை ஏமாத்துன கீழ்த்தரமான மனுஷன்னு தெரிஞ்சா, அதே மரியாதையை உங்க பொண்ணு உங்களுக்கு கொடுப்பாங்கன்னு நினைக்கிறீங்களா? இதையெல்லாம் நெனச்சு நீங்க வெட்கப்பட வேண்டாமா?"

தலை குனிந்தான் அகோரமூர்த்தி.

"நான்சிக்கு என்னாச்சுன்னு சொல்லுங்க"

"எனக்கு தெரியாது சார்"

"நான் உங்களுக்கு மரியாதை கொடுத்து பேசிகிட்டு இருக்கேன்னு நினைக்காதீங்க. நான் நெனச்சா, உங்களை அரெஸ்ட் பண்ணி, பட்டவர்த்தனமா போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போய் எல்லா உண்மையும் கக்க வைக்க முடியும். ஆனா, உங்களை மாதிரி தப்பான ஒருத்தனை நம்பினதுக்காக, உங்க வைஃப்க்கும் உங்க மகளுக்கும் தண்டனை கொடுக்க நான் விரும்பல. அவங்க மேல உங்களுக்கு உண்மையிலேயே கொஞ்சமாவது அக்கறை இருந்தா, உண்மையை சொல்லுங்க"

"அவளை யாரு எரிச்சான்னு எனக்கு தெரியாது சார். அவ செத்த அடுத்த நாள், எனக்கு ஒரு *பிரைவேட் நம்பர்ல* இருந்து ஃபோன் வந்தது"

பிரைவேட் நம்பரா? நிமிர்ந்து நின்றான் ஓவியன்.

"அவன் என்னை மிரட்டினான், சார்"

*மேலே சொல்* என்பது போல் அவனை பார்த்தான் ஓவியன்.

"நான் மறுபடியும் யார் கூடவாவது தொடர்பு வச்சுக்க நினைச்சா, எனக்கும் நான்சியோட முடிவு தான்னு சொன்னான். என் பொண்டாட்டிக்கும், குடும்பத்துக்கும் உண்மையா இருக்கணும்னு சொன்னான். நான் முழுக்க முழுக்க அவனுடைய கண்காணிப்பில இருக்கிறதாகவும்... நான் என் குடும்பத்துக்காக நேரம் ஒதுக்கணும்னு சொன்னான்"

யோசனையுடன் தன் கண்களை சுருக்கினான் ஓவியன்.

"அப்புறம்?"

"என்னோட ஃபோனை அவன் டிராக் பண்ணிக்கிட்டு இருக்கான்னு எனக்கு தெரியும் சார். அடிக்கடி எனக்கு ஃபோன் பண்ணி நான் செய்ற வேலையைப் பத்தி என்கிட்டயே பேசுறான்..."

"இப்பவும் பேசுறானா?"

"ஆமாம் சார்... நீங்க வந்து என்னை விசாரிச்சிட்டு போனதை பத்தி கூட கேட்டு என்னை ரொம்ப கேளி பண்ணான் சார்..."

"என்னன்னு?"

அமைதியானான் அகோரமூர்த்தி.

"நான் கேட்டது காதுல விழவில்லையா?"

"நானும் நான்சியும் பேசின எல்லா ரெக்கார்டையும் உங்களுக்கு அனுப்பி வச்சிடுவேன்னு சொன்னான். நான் எப்படிப்பட்டவன்னு உலகத்துக்கு தெரியவச்சு என் மானத்தை வாங்குவேன்னு சொன்னான்"

"நான்சியோட புருஷன் என்ன செய்றாரு?"

"அவன் ரொம்ப மணி-மைண்டட் சார். எப்ப பாத்தாலும் பணம் பணம்னு ஓடிக்கிட்டு இருப்பான். அந்தப் பொண்ணு கூட நேரம் செலவிடனும்னு நினைச்சதே இல்ல. அந்தப் பொண்ணு ரொம்ப தனிமையா உணர்ந்தா சார்"

"அந்த சந்தர்ப்பத்தை நீங்க உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கிட்டீங்க... நாலு புகழ்ச்சியான வார்த்தையை தூக்கி போட்டு... இல்லையா?" என்றான் ஓவியன் காட்டமாக.

மீண்டும் தலை குனிந்தான் அகோரமூர்த்தி.

"ஏன்???? எவ்வளவு அழகான குடும்பம்... அவங்களைப் பத்தி ஒரு தடவை கூட நீங்க யோசிச்சே பாக்கலையா? உங்க வயசு என்ன? இன்னும் ஒன்னு ரெண்டு வருஷத்துல உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுவீங்க இல்ல? உங்களுக்கும் நான்சிக்கும் இருந்த உறவைப் பத்தி அவ புருஷனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்? அவன் உங்களை வெட்டி போட மாட்டானா? உங்களை பழிவாங்கணும்னு, அவன் உங்க பொண்ணு மேல கை வச்சா உங்களுக்கு பரவாயில்லையா? உன்னோட காம வெறிக்கு உன் பொண்ணு பலியாகணுமா?" என்றான் மரியாதையை கைவிட்டு.

குற்ற உணர்ச்சி பிடுங்கித் தின்ன கண்களை மூடினான் அகோரமூர்த்தி.

அவர்கள் பேசியதை எல்லாம் ரெக்கார்டிங் செய்து கொண்டிருந்த முருகன், மனதிற்குள் ஏதோ வித்தியாசமாய் உணர்ந்தான். எப்பொழுதெல்லாம் கள்ள உறவு பற்றியும், காமம் பற்றியும் பேசுகிறானோ, அப்பொழுதெல்லாம் ஓவியன் தன் கட்டுப்பாட்டை இழந்து கோபம் கொள்வதை கவனித்தான் அவன்.

"போகலாம் வாங்க முருகன்"

இருவரும் வந்து ஜிபில் ஏறி அமர்ந்தார்கள்.

"இவரை என்ன சார் பண்ண போறீங்க?" என்றான் முருகன்.

"நான் என்ன செய்யணும்னு நீங்க நினைக்கிறீங்க?" என்று பதில் கேள்வி கேட்டான் ஓவியன்.

"இந்த ஆளோட முகத்திரையை கிழிக்கணும் சார். இப்படிப்பட்ட ஆளுங்க எல்லாம் சமுதாயத்தில மரியாதையாதயோட நடமாடவே கூடாது..."

"ம்ம்ம்ம்"

"ஆனா, எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியல சார்"

"என்ன?"

"இந்த கொலைகாரன் வித்தியாசமானவனா இருக்கான் சார். பொம்பளைங்களை கொலை செஞ்ச அவன், ஆம்பளைங்களை மட்டும் எதுக்காக சார் எச்சரிச்சி விட்டுட்டான்? நான்சி செஞ்சது தப்புன்னா, அகோரமூர்த்தி செஞ்சதும் தப்பு தானே சார்? பொம்பளைங்களை மட்டும் தண்டிக்கிறது எந்த விதத்துல சார் நியாயம்?"

"நீங்க அப்படி நினைக்கிறீங்களா?"

"நீங்க அப்படி நினைக்கலையா சார்?"

"எனக்கு தெரிஞ்சு, நான்சிக்கு கிடைச்சது ரொம்ப சாதாரண தண்டனை. அவளுக்கு சாவு ரொம்ப சுலபமா கிடைச்சிடுச்சு. ஆனா அகோரமூர்த்தியோட கதை அப்படி இல்ல. எந்த நேரத்துல, உண்மை வெளியில் தெரிஞ்சு, மானம் போகுமோன்னு தினம் தினம் செத்து செத்து பிழைச்சுகிட்டு இருக்கான். தலைக்கு மேல கத்தி தொங்கிக்கிட்டு இருக்கும் போது, அந்த ஆளால நிம்மதியா தூங்க கூட முடியாது. இதுக்கு பதில், அந்த ஆளை போட்டு தள்ளிட்டு போயிருக்கலாம்..."

"செய்றதையெல்லாம் செஞ்சிட்டு, இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்?" என்றான் முருகன்.

"வருத்தப்படுறானா? அந்த ஆளு வருத்தப்படுறது தப்பு செஞ்சதுக்காக இல்ல... செஞ்ச தப்பு வெளியில தெரிஞ்சி மாட்டிக்கிட்டோமேன்னு தான்... ஒருவேளை அது வெளியில தெரியாம இருந்திருந்தா, அந்த ஆளு மறுபடியும் தப்பு செய்வான்" என்றான் கோபம் கொந்தளிக்க.

அவன் கூறுவது சரி என்பது போல் தலையசைத்தான் முருகன்.

அப்பொழுது அவர்கள் சென்று கொண்டிருந்த ஜீப், லிட்டில் ஏஞ்சல்ஸ் கான்வென்ட்டை கடந்தது. புத்தம் புது மலர்கள் போல் இருந்த குழந்தைகள், வரிசையில் காத்திருந்தார்கள். அந்த பள்ளியின் செக்யூரிட்டி அந்த பிள்ளைகளை வரிசையில் நிறுத்திக் கொண்டிருந்தார். அவர்கள் பள்ளி பேருந்துக்காக காத்திருப்பது போல் தெரிந்தது. அதில் இருந்த ஒரு *லிட்டில் ஏஞ்சலை* கண்ட போது ஓவியனின் விழிகள் விரிந்தன. சமீபத்தில் அவன் வாழ்க்கையில் நுழைந்து, அவன் புன்னகைக்கு காரணமான மேகா தான் அந்த குட்டி தேவதை.

"ஜிப்பை நிறுத்துங்க" என்றான் ஓவியன்.

வேலு பிரேக்கை அழுத்தவும், ஜிப்பை விட்டு வெளியே குதித்து அவளை நோக்கி சென்றான் ஓவியன். அவனைப் பார்த்தவுடன் தாமரை போல் மலர்ந்த மேகாவின் முகம், உடனே, வாடிய மொட்டாய் தலை கவிழ்ந்தது.

அவனைக் கேள்வியுடன் பார்த்த செக்யூரிட்டியிடம், தன் வழக்கமான ஆயுதத்தை நீட்டினான் ஓவியன்... அவனுடைய அடையாள அட்டை.

"நான் அசிஸ்டன்ட் கமிஷனர் ஓவியன்"

"சொல்லுங்க சார்"

"நான் மேகா கிட்ட பேசணும்"

"நீங்க பாப்பாவை உங்க கூட கூட்டிகிட்டு போறீங்களா சார்?"

"இல்ல... "

"பஸ் வர்ற நேரமாச்சு. கொஞ்சம் சீக்கிரம் பேசி முடிச்சிடறீங்களா சார்?"

"சரி"

மேகாவின் முன் முழங்காலிட்டு அமர்ந்தான் ஓவியன். அவனைப் பார்த்தவுடன் தலையை குனிந்து கொண்டாள் மேகா. அவள், அவனை ஓரக்கண்ணால் அழகாய் பார்த்த பொழுது, புன்னகை புரிந்தான் அவன்.

"நான் கேட்கிற கேள்விக்கு நீ பதில் சொன்னா, முதல்ல மாதிரியே நம்ம ஃபிரண்ட்ஸா இருக்கலாம். சொல்றியா?"

மாட்டேன் என்று சோகமாய் தலையசைத்தாள் மேகா. அது ஓவியனை ஆச்சரியப்படுத்தியது.

"ஏன்? என்னை உனக்கு பிடிக்கலையா?"

ரொம்ப பிடிக்கும் என்பது போல் தன் கைகளை விரித்து காட்டினாள் மேகா முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு.

சில நொடிகள் யோசித்த ஓவியன், முருகனை நோக்கி கையசைத்தான். அவனை நோக்கி ஓடிவந்தான் முருகன்.

"நான் சொல்றதை அவ கிட்ட கேளுங்க"

"சரிங்க சார்"

மேகாவை நோக்கி திரும்பிய ஓவியன்,

"நீ என்கிட்ட பேச வேண்டாம். இந்த அங்கிள் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு"

முருகனைப் பார்த்து பளிச்சென்று சிரித்த மேகா, சரி என்று தலையசைத்தாள்.

தன் முன் ஓவியனையே மண்டியிட செய்திருக்கும் இந்தக் குட்டி பெண் யார் என்று வியந்தான் முருகன்.

முருகனின் காதில் சில கேள்விகளை ரகசியமாய் கூறினான் ஓவியன். அதை மேகாவிடம் கேட்டான் முருகன்.

"நேத்து ராத்திரி, அத்தையை அழ வச்சது யாரு? யாராவது ஏதாவது சொன்னாங்களா?"

"ஒரு ஃபோன் வந்தது, அதுக்கப்புறம் தான் அத்தை ரொம்ப அழுதாங்க"

ஃபோன் என்றதும் துணுக்குற்றான் ஓவியன். தூரிகைக்கு ஃபோன் செய்தது யார்?

"அப்புறம் என்ன ஆச்சு?" என்றான் முருகன்.

ஓவியனை சுட்டிக்காட்டி,

"நான் இனிமே அங்கிள் கிட்ட பேச கூடாதுன்னு சொல்லிட்டாங்க"

"ஏன்?"

"தெரியாது... நான் அங்கிள் கிட்ட பேசினா, அம்மா அப்பாவை கூட்டிக்கிட்டு போன மாதிரி, அவங்களையும் சாமி அவங்க கிட்ட கூட்டிகிட்டு போயிடுவாங்களாம்..." என்றது அந்த குழந்தை பாவமாய்.

கோபத்தில் பல்லை கடித்தான் ஓவியன். அவன் முருகனுக்கு சைகை காட்ட, மேகாவின் பள்ளி அடையாள அட்டையில் இருந்த கைபேசி எண்களை பார்வையிட்டான் முருகன்.

"அப்பா பேரு கார்மேகம். அம்மா பேரு கொண்டல். அவங்க ரெண்டு பேரோட ஃபோன் நம்பர் இல்லாம, மூணாவது நம்பரை பெர்மனென்ட் மார்கர்ல எழுதி இருக்காங்க சார்"

தன் அண்ணனும், அண்ணியும் இறந்த பிறகு, தன்னுடைய கைபேசி எண்ணை, அதில் தூரிகை தான் எழுதியிருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டான் ஓவியன்.

"அந்த மூணு நம்பரையும் நோட் பண்ணிக்கோங்க"

அந்த மூன்று எண்களையும் ஒரு துண்டுத் தாளில் எழுதி அதை ஓவியனிடம் கொடுத்தான் முருகன். அதை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டு பிரின்சுக்கு ஃபோன் செய்தான் ஓவியன்.

"சொல்லு மச்சி"

"நான் உனக்கு ஒரு ஃபோன் நம்பர் அனுப்பி இருக்கேன். நேத்து ராத்திரி அவ கிட்ட பேசினது யாருன்னு எனக்கு தெரியணும்"

"கண்டுபிடிச்சிட்டா போச்சு... நீ கொடுத்த மத்த எல்லா நம்பரோட சாட்டிங்கையும் எடுத்துட்டேன்"

"சரி, நான் இப்ப வரேன்"

தன் வீட்டை நோக்கி விரைந்தான் ஓவியன். நேற்று இரவு, தூரிகைக்கு ஃபோன் செய்தது யார் என்பதை பற்றி தெரிந்து கொண்டே ஆக வேண்டும் அவனுக்கு. வீட்டை அடைந்து கதவைத் தட்டினான். அவசரமாய் ஓடி வந்து கதவை திறந்தான் பிரின்ஸ். ஓவியன் எதுவும் கேட்பதற்கு முன்,

"மச்சி, யாருடா அந்த பொண்ணு?" என்றான்.

"ஏன்? என்னாச்சு?"

"நேத்து அவ கிட்ட பேசினது கொலைகாரன், மச்சான்"

"என்னடா சொல்ற?" என்று அதிர்ந்தான் ஓவியன்.

"நேத்து மட்டுமில்ல. இதுக்கு முன்னாடி அதே பிரைவேட் நம்பர்ல இருந்து அவளுக்கு ரெண்டு தடவை கால் வந்திருக்கு."

"எப்ப வந்திருந்தது?"

அந்த தேதிகளை கூறினான் பிரின்ஸ். அவளுக்கு முதல் அழைப்பு வந்தது, நான்காவது கொலை நடந்த இரவு. அன்று தான், தூரிகை தாமதமாக வீட்டிற்கு வந்து, தான் சினிமாவுக்கு சென்றதாக பொய் கூறியது. உடனே தூரிகையிடம் சென்று, அதைப் பற்றி கேட்க வேண்டும் என்று நினைத்தான் அவன். ஆனால், அதை அவன் பிரின்ஸ் முன்னால் செய்ய முடியாது. ஏனென்றால், நடந்தது என்ன என்பதை முதலில் அவன் அறிந்து கொள்ள வேண்டும். அதனால், பேச்சை மாற்றினான்.

"மத்த காண்டாக்ட் எல்லாம் என்ன ஆச்சு?"

"செம இன்ட்ரஸ்டிங் மச்சான்... எல்லாருக்குமே யாரோ ஒருத்தர் கூட தொடர்பு இருந்திருக்கு. அவங்க ஃபோனே பழியா கிடந்திருக்காங்க."

கொலையானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் பெயர்களை படித்த ஓவியன் துணுக்குற்றான், அதில் *கார்மேகம்* என்று இருந்ததை பார்த்து.

"இந்த கார்மேகத்தோட ஃபோன் நம்பர் என்ன?" என்றான் மேகாவிடமிருந்து முருகன் சேகரித்துக் கொடுத்த எண்கள் இருந்த தாளை தன் பாக்கெட்டில் இருந்து வெளியில் எடுத்தபடி.

அந்த எண்ணை பிரின்ஸ் கூற, அதை சரி பார்த்த ஓவியன் அதிர்ச்சியில் உறைந்தான். அது முருகன் எழுதிக் கொடுத்த அதே எண்...

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top