8 அடுத்தது என்ன?
8 அடுத்தது என்ன?
இனி ஓவியனுடன் பேசுவதில்லை என்ற முடிவுக்கு வந்தாள் தூரிகை. மேகாவையும் எச்சரிக்கை செய்தாள்.
"மேகு... இனிமே நீ ஓவியன் சார் கூட பேசக்கூடாது சரியா?"
"ஏன் அத்தை? அவர் எவ்வளவு நல்லவரு...?" என்றாள் சோகமாக.
"நான் சொல்றதை கேளு. பேசக் கூடாதுன்னா பேச கூடாது தான்"
"ஆனா ஏன்ன்ன்ன்? எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு" என்று குரல் உயர்த்தினாள் மேகா.
"அப்படின்னா, அத்தையை உனக்கு பிடிக்காதா?"
"ரொம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்"
அவளது கைகளை பற்றிக் கொண்ட தூரிகை,
"நீ அவர்கிட்ட பேசினா, அத்தையும் சாமி கிட்ட போயிடுவேன்" என்று அழுதாள்.
அவளது தண்ணீரை துடைத்து விட்ட மேகா,
"அப்படி சொல்லாத அத்தை... அம்மாவும் அப்பாவும் தான் சாமிகிட்ட போயிட்டாங்க... நீயும் போகாத"
"அதுக்கு தான் சொல்றேன், அவர்கிட்ட பேசாத"
ஒன்றும் கூறாமல் அழுதாள் மேகா.
"உன்னை நான் நல்லா பாத்துக்குவேன்... சமைக்க கூட கத்துகிறேன்... பார்க்குக்கு கூட்டிக்கிட்டு போறேன்... சரியா?"
சரி என்று அழுதபடி தலையசைத்தாள் மேகா. தனது இக்கட்டான நிலையை எண்ணி நொந்தபடி அவளை கட்டிக்கொண்டு அழுதாள் தூரிகை. ஓவியனிடமிருந்து விலகி நிற்க பொருத்தமான காரணம் ஒன்றையும் தேடிக்கொண்டாள்.
மறுநாள் காலை
பள்ளிக்கூடம் செல்ல தயாரானாள் மேகா. அவளது பள்ளிக்கூட பேருந்து வரும் நேரத்திற்கு சற்று முன்பாகவே, அவளை அழைத்துக்கொண்டு கிளம்பினாள் தூரிகை. அப்பொழுது, தனது கைபேசியில் பேசியபடி தனது வீட்டின் கதவை ஓவியன் பூட்டுவதை பார்த்த மேகா, பட்டென்று தலையை குனிந்து கொண்டாள். அது ஓவியனுக்கு சொல்லவொண்ணா ஆச்சரியம் அளித்தது.
"ஹாய், குட்மார்னிங்" என்றான் ஓவியன்.
தூரிக்கையோ, மேகாவோ அதற்கு பதில் அளிக்கவில்லை. லிஃப்டில் ஏறுவதற்கு பதிலாக, அவர்கள் படியிறங்கி சென்றது அவனை மேலும் ஆச்சரியப்படுத்தியது. அவர்களை நோக்கி விரைந்த அவன்,
"என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?" என்றான்.
"சார், தயவு செய்து புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. யாருடைய துணையும் இல்லாம, தனியா வாழற என்னை மாதிரி ஒரு பொண்ணு, உங்களை மாதிரி கல்யாணம் ஆகாத ஒருத்தர்கிட்ட பேசி பழகுறது நல்லதில்ல. மத்தவங்க பேசறத காது கொடுத்து கேட்க முடியல சார்... இதுக்கப்புறம் நீங்க என்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டீங்கன்னு நம்புறேன்"
அதிர்ச்சி மேலிட, விக்கித்து நின்றான் ஓவியன். அவளுக்கு செல்லவதற்கு வழி கொடுத்து, பின்னே நகர்ந்தான். அவனது பார்வை மேகாவின் மீதே இருந்தது. படி இறங்கியபடி மேகா அவனை நோக்கி பாவமாய் பார்த்துக் கொண்டு சென்றாள். அது அவன் இதயத்தை சம்மட்டியாள் அடித்தது.
தனது அக்காவுக்கு ஏற்பட்ட விபத்திற்கு பிறகு, பெற்றோரை இழந்த மேகவை சந்தித்த பிறகு தான் அவன் மனம், ஓரளவுக்கு பழையதை மறந்து, சந்தோஷபட துவங்கி இருந்தது. அவன் தன்னைத்தானே அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்த அதே கேள்வியை, நேற்று தூரிகையும் அவனிடம் கேட்டாள். *உங்கள் அக்காவின் குழந்தையை எப்படி கவனித்துக் கொள்ள போகிறீர்கள்?* ஒரு பெண் துணை இல்லாமல் பச்சிளம் குழந்தையை வளர்ப்பது என்பது அவ்வளவு லேசு பட்ட காரியம் அல்ல. பெற்றவர்கள் இல்லாமல் இந்த சமுதாயத்தில் வளர்வது என்பது மிகவும் கொடுமையான விஷயம். அவனும், அவனுடைய அக்காவும் அந்த அனுபவத்தை பெற்றவர்கள் தான். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே தனது பெற்றோரை இழந்தான் ஓவியன். அவனுடைய அக்கா தான் அவனை கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாகியவர். இது அவனுடைய முறை, அவனுடைய அக்காவிற்கு நன்றி செலுத்த...! அவரது குழந்தையை வளர்ப்பதன் மூலம், அதை ஈடுகட்ட நினைத்திருந்தான் ஓவியன். தன் பெற்றோர்கள் இறந்து விட்டார்கள் என்பது கூட புரியாமல் அவர்களை எழுப்ப முயன்ற மேகாவை பார்த்தபொழுது அவன் உள்ளம் வலித்தது. ஆனால் தூரிகை கூறுவதும் தவறில்லை. சில சமயங்களில், இந்த சமுதாயம், நரகத்திற்கு இணையாய் மாறுகிறது. மனிதர்களின் தேவை என்ன என்பதை உணர மறுக்கிறது... அவர்களது மன வேதனையை உணராமல் பொல்லாப்பு பேசுகிறது... யாரையும் குறை கூறிப் பயனில்லை அதன் *டிசைன்* அப்படி.
மீண்டும் தன் வீட்டுக்கே சென்றான் ஓவியன். மேகாவை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தூரிகை தன் வீட்டுக்கு வந்த பிறகு, அவன் செல்வது என்று தீர்மானித்தான். அவளது பின்னால் இவன் செல்வதை பார்த்தால், அதற்கும் கூட யாராவது ஏதாவது கூறக்கூடும். அவளை நோக்கி யாரும் விரல் நீட்ட அவன் காரணமாய் இருக்கக் கூடாது. இதன் பிறகு, அவளை தொந்தரவு செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்தான்.
சோபாவில் சாய்ந்தமர்ந்த அவன், கண்களை முடிக்கொண்டான். தன் வீட்டின் கதவை யாரோ தட்டுவதை கேட்டு, திடுக்கிட்டு கண் விழித்தான். அவன் முகம் சட்டென்று மலர்ந்தது. ஒருவேளை, அது தூரிகையாக இருக்குமோ என்று அவன் மனம் எண்ணியது. ஓடி சென்று, கதவை அகல திறந்தான். அங்கு பிரின்ஸ் நின்று கொண்டிருந்ததை பார்த்து முகம் சுருக்கினான். அவன் நாளை தானே வருவதாக கூறியிருந்தான்?
"எப்படி இருக்க மாப்ள?" என்று அவனை அணைத்துக் கொண்ட பிரின்ஸ்,
"காலேஜ் டைம்ல இருந்ததைவிட, இப்ப செம ஹேண்ட்ஸமா இருக்க மச்சி" என்றான்.
அவன் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான் ஓவியன்.
"எத்தனை கேர்ள் ஃபிரண்ட்ஸ்?" என்ற பிரின்ஸை பார்த்து முறைத்தான் ஓவியன்.
"அது தான் மச்சான் இப்போ ட்ரெண்ட்... சாட் பண்ண ஒருத்தி... டேட் பண்ண ஒருத்தி... அப்புறம்..."
"ஷட் அப்... நாளைக்கு தானே வரேன்னு சொல்லி இருந்த? உன் வேலையை விட்டுட்டு இன்னைக்கே எப்படி வந்த?" என்றான் ஓவியன், அவனது அர்த்தமற்ற பேச்சுக்கு இடம் கொடுக்காமல்.
"நாளைக்கு தான் வரேன்னு சொல்லி இருந்தேன். ஆனா இந்த மர்டர் கேஸ், என்னோட வேலையை விட செம த்ரில்லிங்கா இருக்கும் போலிருக்கு... அதான் உடனே வந்துட்டேன்"
அதைக் கேட்ட ஓவியனின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.
"இரு இரு... இந்த கேஸை பத்தி உனக்கு எப்படி தெரியும்? நான் தான் உன்கிட்ட எதுவுமே சொல்லலையே...?"
"நீ எனக்கு எதுவும் சொல்லல. ஆனா கொலைகாரன் சொன்னான்..."
"என்ன்ன்னனனது....????" மேலும் அதிர்ந்தான் ஓவியன்.
"அவன் என்னை சேலஞ்ச் பண்ணியிருக்கான் மச்சி..."
"சேலஞ்சா?"
"கிட்டத்தட்ட... மறைமுகமா..."
"தலையை சுத்தி மூக்கை தொடாம, நேரா விஷயத்துக்கு வா..."
"ஒரு *பிரைவேட் நம்பர்ல* இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தான். அதை நான் ட்ராக் பண்ண எவ்வளவோ முயற்சி பண்ணேன். ஆனா என்னால அது முடியல. இது தான் முதல் தடவை, என்னால ஒரு விஷயத்தை செய்ய முடியாம போறது... அவன் வெறும் தைரியசாலி மட்டுமில்ல, பெரிய கில்லாடியா இருக்கணும். இல்லன்னா, நான் ஒரு ஹேக்கர்னு தெரிஞ்ச பிறகும், எனக்கு தைரியமா மெசேஜ் அனுப்பி இருப்பானா?"
தனக்கு வந்த குறுஞ்செய்தியை ஓவியனிடம் காட்டினான் பிரின்ஸ்.
*இந்த வழக்கிற்கு உங்களை வரவேற்கிறேன். என்னை கண்டுபிடிக்க வாழ்த்துக்கள் - கொலைகாரன்*
"பாத்தியா, எவ்வளவு தைரியம் அவனுக்கு...! நான் இந்த கேசுக்குள்ள வந்ததை நினைச்சு பயப்படாம, என்ஜாய் பண்றான் மச்சான். இவன் என்ன ரகம்னே புரியலையே..."
அதைப்பற்றி ஆழ்ந்து யோசித்தான் ஓவியன்.
"உன்னோட போலீஸ் மூளைக்கு ஏதாவது எட்டுதா?"
"இந்த கேஸ் பாப்புலர் ஆகணும்னு அவன் நினைக்கிறான்"
"அப்படின்னா?"
"அவன் பிடிப்படறதைப் பத்தி கவலைப்படல. ஆனா, அவன் என்ன செய்யிறான், எதுக்காக செய்யிறான்னு எல்லாருக்கும் தெரியணும்னு நினைக்கிறான்"
"அப்படின்னா, நம்ம அவனை நெருங்க, ரொம்ப நாள் எடுக்கு போலிருக்கே..."
"நம்ம அவனை நெருங்க தேவையில்ல. நான் சொல்றதை செய்"
"யா, வெயிட்டிங்..."
இறந்தவர்களின் கைபேசி எண்களை பிரின்ஸிடம் கொடுத்தான் ஓவியன்.
"இந்த நம்பர்ஸ் சம்பந்தப்பட்ட எல்லா டீடைல்ஸும் எனக்கு வேணும். இன்கம்மிங் அண்ட் அவுட்கோயிங் கால்ஸ் லிஸ்ட், மெசேஜஸ், வாட்ஸ் அப் சாட், ஃபேஸ்புக் டீடைல்ஸ் எல்லாத்தையும் எடு"
"புடிச்சிட்டேன்... செத்தவங்களோட கேரக்டர்ஸை தெரிஞ்சுக்க நினைக்கிற... கரெக்டா?"
ஆமாம் என்று தலையசைத்தான் ஓவியன்.
"சரி, எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு கப் காபி கொடு. அதுக்குள்ள எடுத்துடலாம்"
"காபி போடுற டைம்குள்ள எல்லாத்தையும் எடுத்துடுவியா?" என்றான் திகைப்புடன்.
"எல்லா கேஸ்லையும் அப்படியெல்லாம் நான் செய்றதில்ல... அதுக்காக செய்ய முடியாதுன்னும் இல்ல..."
"அவ்வளவு பெரிய தில்லாலங்கடியா நீ?"
"பொண்ணுங்களை பார்த்து ஜொள்ளு விடுற பிரின்ஸை மட்டும் தானே உனக்கு தெரியும்? அவனுக்குள்ள இருக்கிற ஹேக்கரை பத்தி இன்னைக்கு நீ தெரிஞ்சிக்குவ"
தன் உதடு மடித்து, புருவம் உயர்த்தினான் ஓவியன்.
தான் கூறியதை போலவே, இறந்தவர்களைப் பற்றி சகலத்தையும் உருவிவிட்டான் பிரின்ஸ். அதை செய்ய அவனுக்கு பெரிதாய் நேரம் எடுக்கவில்லை தான். ஆனால், ஒவ்வொருவரை பற்றியும் படித்து முடிக்க, குறைந்தபட்சம் ஓவியனுக்கு தனித்தனியாய் அரை நாள் தேவைப்படும் என்று தோன்றியது. பெருமூச்சி விட்டான் ஓவியன்.
"சரி, நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் இதை என் ஆஃபீஸ்ல போய் படிச்சுக்கிறேன்"
ஓவியனிடம் அந்த விபரங்கள் அடங்கிய பென்டிரைவை கொடுத்த பிரின்ஸ்,
"பிரிண்ட் அவுட் எடுத்துக்கிட்டா, படிக்க உனக்கு ஈசியா இருக்கும் மச்சான்" என்றான்.
"ஆமாம்... எடுத்துக்குறேன்"
"சரி, நான் கொஞ்ச நேரம் தூங்குறேன் மிச்ச கதையை அப்புறம் பாக்கலாம்" என்றான் பிரின்ஸ்.
"நடத்து"
வெளியே வந்த ஓவியனால், தனது எதிர் வீட்டை கவனிக்காமல் இருக்க முடியவில்லை. மேகாவின் வருத்தம் தோய்ந்த முகம், அவனது கண் முன்னால் வந்து சென்றது. மேகா தன்னிடம் பேசாமல் இருக்கும் அளவிற்கு, தூரிகை மேகாவிடம் அப்படி என்ன கூறியிருப்பாள்? மேகாவை அவ்வளவு சுலபமாய் சமாதானப்படுத்தி விடமுடியாதே...! ஏனென்றால், தூரிகை கூறிய காரணம், மேகாவால் அவ்வளவு சுலபத்தில் புரிந்து கொள்ளக்கூடியது அல்ல. தன்னுடன் இருப்பதை, மேகா எந்த அளவிற்கு விரும்பினாள் என்று அவனுக்கு தெரியும். இன்று காலை கூட, அவள் பார்த்த பார்வையில், ஏக்கம் தெரிந்தது. அதைப் பற்றியெல்லாம் யோசித்தபடி அலுவலகம் வந்து சேர்ந்தான் ஓவியன்.
பிரின்ஸ் தன்னிடம் வழங்கிய பென்டிரைவை முருகனிடம் கொடுத்து *பிரிண்ட் அவுட்* எடுக்கச் சொன்னான் ஓவியன். முருகன் சிரித்தான்... அது ஆஸ்பெயர் ப்ரமோட்டர்ஸில் பணிபுரிந்த நான்ஸியின் கைபேசியில் இருந்த விபரங்கள். அதிசயத்துப் போனான் முருகன்.
"சார், கடந்த ரெண்டு வருஷத்துல, ஒரே நம்பர்ல இருந்து, கிட்டத்தட்ட ரெண்டாயிரம் இன்கமிங் காலுக்கு மேல வந்திருக்கு சார்"
"அந்த நம்பரை நோட் பண்ணி, ஈஸ்வர் கிட்ட குடுங்க. அந்த நம்பர்ல இருந்து வந்த எல்லா சாட்டிங்கையும் பிரிண்ட் அவுட் எடுங்க"
"எஸ் சார்"
"ஈஸ்வர், அந்த நம்பர் யாருடையதுன்னு கண்ட்ரோல் ரூம்ல கேட்டு தெரிஞ்சுக்கோங்க" என்றான் ஓவியன்.
"எஸ் சார்" என்றான் ஈஸ்வர்.
முருகன் எல்லாவற்றையும் பிரிண்ட் அவுட் எடுக்க துவங்கினான். அதேநேரம் *கண்ட்ரோல் ரூமுடன்* தொடர்பு கொண்டு, அந்த எண் யாருடையது என்பதை தெரிந்து கொள்ள முயன்றான் ஈஸ்வரன். அதிலிருந்த ஒரு பிரிண்ட் அவுட்டை எடுத்து, தன் பார்வையை அதில் ஓட்டிய ஓவியன், முகம் சுளித்தான். அது, *ஓரல் செக்ஸ்* சம்பந்தப்பட்டதாய் இருந்தது. ( செக்ஸ் பற்றி, எந்த ஒளிவு மறைவும் இல்லாமல், விவாதிப்பது, வெளிப்படையாய் பேசுவது ஓரல் செக்ஸ்)
அதேநேரம், அந்த எண்ணுக்கு சொந்தக்காரன் யார் என்பதை கண்டுபிடித்தான் ஈஸ்வரன்.
"சார், இது ஆஸ்பயர் ப்ரமோட்டர்ஸ் மேனேஜர், அகோர மூர்த்தியோட நம்பர் சார்"
அதைக் கேட்ட முருகன், அதிர்ச்சியுடன் ஓவியனின் பக்கம் திரும்பினான். தன் கைகளை கட்டிக்கொண்டு அவனைப் பார்த்து புன்னகைத்தான் ஓவியன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top