7 எச்சரிக்கை

7 எச்சரிக்கை

தூரிகையின் பயத்திற்கு எல்லையே இல்லை அவள் பயத்தில் நடுங்கி கொண்டிருந்தாள். தற்போது நடக்கும் விஷயங்களை வைத்து அந்த பிரைவேட் நம்பர் காரன் அவளை மிரட்டுகிறான் என்றால், அவன் அவளை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறானா? அப்படி என்றால் அவன் அவளுக்கு அருகில் தான் இருக்கிறானா? அவன் ஏதாவது செய்து விட்டால் என்னாவது? நிச்சயம் செய்வான். ஏன் செய்ய மாட்டான்? அவன் அதையெல்லாம் செய்யக்கூடியவன் தானே? அவன் ஒரு கொலைகாரன். கொலையே செய்கிறான் என்றால், எதையும் செய்வான் தானே? அவன் சம்பந்தப்பட்ட வழக்கை கையாளும் ஓவியனுடன் அவள் நெருக்கமாய் இருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை.  அவள் ஓவியனிடம் எதுவும் சொல்லி விடக்கூடாது என்பது தான் அவனது எண்ணம். அவளே அந்த வழக்கில் மாட்டிக்கொண்டிருக்கும் போது, அவளால் எப்படி ஓவியனிடம்  எதையும் சொல்ல முடியும்? அவள் கொண்டு சென்ற கத்தியை அங்கு தவறவிட்டு வந்துவிட்டாள். ஒருவேளை அந்த கத்தி, ஓவியனின் கையில் கிடைத்தால் என்னாவது? ஃபாரன்சிக் நிபுணர்களின் உதவியுடன், அதிலிருந்த கைரேகையை வைத்து அவன் நிச்சயம் கண்டுபிடித்து விடுவான். ஆனால், ஒருவேளை அந்த கத்தி கொலைகாரனிடம் கிடைத்திருந்தால் என்ன ஆவது? அவன் அதை அவளுக்கு எதிராய் பயன்படுத்தி விட்டால் என்ன நடக்கும்? ஓவியனிடமிருந்து விலகி இருப்பதை தவிர அவளுக்கு வேறு வழியில்லை.

மறுநாள்

அன்று ஞாயிற்றுக்கிழமை. ஓவியனை எப்படி தவிர்ப்பது என்று புரியாததால் அன்று முழுவதும் தனது வீட்டை விட்டு வெளியே வரவில்லை தூரிகை. ஆனால் ஓவியனை தவிர்ப்பது அவ்வளவு ஒன்றும் சுலபமான விஷயமல்ல. அவளது வீட்டு கதவை அவனே வந்து தட்டினான். கதவைத் திறந்த தூரிகை, பேசாமல் நின்றாள்.

"உங்களுக்கு ஏதாவது வேணுமா?"

"எனக்கு ஒன்னும் வேண்டாம்"

"வெஜிடபிள் செல்லர் வந்திருக்காரு. உங்களுக்கு ஏதாவது வேணும்னா நீங்க அவர்கிட்டயே வாங்கிக்கலாம்"

சரி என்று தலையசைத்த தூரிகை, உள்ளே சென்று காய்கறி வாங்க கூடையும், பணமும் கொண்டு வந்தாள். அவள் வரும் வரை அவளுக்காக காத்திருந்தான் ஓவியன்.

"மேகா என்ன பண்ணிக்கிட்டு இருக்கா?"

"அவ கார்ட்டூன் பாத்துக்கிட்டு இருக்கா"

கதவை சாத்திக்கொண்டு, காய்கறி வாங்க அவள் கீழே சென்றாள். ஆனால் ஓவியன் அங்கேயே நின்றிருந்தான். தூரிகையை தேடிக்கொண்டு மேகா வரலாம் என்று அவன் எதிர்பார்த்தான். அவன் நினைத்தது சரி தான். சில நிமிடத்தில்,

"அத்தை..." என்று கூப்பிட்டபடி வெளியே வந்தாள் மேகா.

ஓவியனை பார்த்து பளிச்சென்று சிரித்தாள்.

"அத்தை உங்க வீட்டுக்கு வந்து இருக்காங்களா?" என்றாள்.

புருவத்தை உயர்த்தி, இல்லை என்று தலையசைத்தான் ஓவியன்.

"அவங்க எங்க போனாங்க?"

"வெஜிடபிள்ஸ் வாங்க போயிருக்காங்க"

"நானும் போக போறேன்"

"போகாத இரு. அவங்க இப்போ வந்துடுவாங்க"

"இல்ல நானும் போவேன்"

"சரி, இரு. நான் கூட்டிக்கிட்டு போறேன்"

*என்னை தூக்கி கொள்* என்பது போல் கைகளை உயர்த்தினாள் மேகா. அவளை தூக்கிக் கொண்டு லிஃப்டில் புகுந்தான் ஓவியன். அவர்கள் தரைதளம் வந்து பார்த்த பொழுது, காய்கறிகாரரை சுற்றி பெரிய கூட்டம் இருந்தது. ஓவியனின் கையில் இருந்து கீழே இறங்கி, பக்கத்தில் இருந்த பூங்காவிற்குள் விளையாட ஓடினாள் மேகா. அங்கு ஒரு ஊஞ்சல் காலியாக இருக்கவே அதில் ஏறி அமர்ந்து கொண்டாள். ஓவியன் ஊஞ்சலை ஆட்டி விட துவங்க, கலகலவென சிரித்தபடி சந்தோஷமாய் ஆட துவங்கினாள் மேகா. அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த தூரிகை, பதட்டம் அடைந்தாள். அவர்களை யாராவது பார்க்கிறார்களா என்ற எச்சரிக்கைடன் சுற்றுமுற்றும் பார்த்தாள்.

கூட்டம் அதிகமாக இருக்கவே, அவளுடைய முறைக்காக அவள் காத்திருக்க வேண்டியது அவசியமானது. இந்த இடைப்பட்ட நேரத்தில், ஓவியனுடன் சந்தோஷமாய் விளையாடி தீர்த்தாள் மேகா. பயத்தை மீறிய ஒரு சந்தோஷம் தூரிகையின் முகத்திலும் எட்டிப் பார்க்கத்தான் செய்தது. தன்னை பூங்காவிற்கு அழைத்துச் செல்லும்படி மேகா அவளை அடிக்கடி தொந்தரவு செய்து கொண்டிருப்பாள். தூரிகைக்கும் அவளை பூங்காவிற்கு அழைத்துச் சென்று விளையாட வைக்க வேண்டும் என்று விருப்பம் தான். ஆனால் தனியாக இருக்கும் தன்னை, அவள் வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

தூரிகையின் முறை வந்தது. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மட்டும் வாங்கிக் கொண்டாள். அவளுக்குத் தான் சமைக்கத் தெரியாதே...! அவள் வாங்கி வைத்திருக்கும் ரெடிமேட் உணவுகளை சமைக்க இதுவே போதுமானது அல்லவா...!

அவற்றைப் பார்த்த ஓவியன், முகத்தை சுளித்து

"இது போதுமா?" என்றான்.

"ஆங்... போதும்" என்றாள்.

"அத்தை, எனக்கு இன்னைக்கு நூடுல்ஸ் வேண்டாம்... சாப்பாடு செஞ்சு கொடு" என்றாள் மேகா.

தன் விழிகளை விரித்து *சும்மா இரு* என்பது போல் அவளுக்கு சைகை செய்தாள் தூரிகை.

"இன்னைக்கு என் வீட்டில் சாப்பிடுங்க" என்றான் ஓவியன்.

"இல்ல சார். நோ தேங்க்ஸ்" என்றாள் தூரிகை அவசரமாய்.

"ஏன்? நான் நல்லா சமைப்பேங்க..."

"பரவாயில்ல, இருக்கட்டும் சார்"

ஓவியனின் விரலை பிடித்துக் கொண்ட மேகா,

"நீ வீட்ல நூடுல்ஸ் செஞ்சு சாப்பிடு அத்தை. நான் அங்கிள் கூட சாப்பிடுறேன்" என்றாள்.

"மேகு... இப்படி எல்லாம் செய்யக்கூடாது"

"ஏங்க? அவ குழந்தை தானே? அவங்க அம்மாவோட சமையலை சாப்பிட்டு பழகின குழந்தை. அவ ஃபாஸ்ட் ஃபுட் வேண்டாம்னு சொல்றதுக்காக நீங்க சந்தோஷப்படுங்க"

"உங்களுக்கு எதுக்காக சார் வீண் சிரமம்?"

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல"

 மேகாவை பார்த்த ஓவியன்

"போலாமா டா கண்ணா?" என்றான்.

"நான் பொண்ணு... கண்ணா இல்ல" என்றாள் மேகா.

"ஓகே பொண்ணு போகலாமா?" என்றான் சிரித்தபடி

பயத்துடன் தங்கள் சுற்றுப்புறத்தை அலசினாள் தூரிகை, கடவுளை வேண்டியபடி. மேகாவை அழைத்துக் கொண்டு தனது இல்லம் வந்தான் ஓவியன். வாசலில் நின்ற அவன்,

"உங்களுக்கு பேசிக் குக்கிங் ஸ்கில்ஸ் சொல்லிக் கொடுக்கணுமா, எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல" என்றான்.

"இல்ல சார். நான் யூடியூப் பார்த்து கத்துகிறேன்" என்றாள் தூரிகை. 

"சரி "

மேகாவுக்காக டிவியை ஆன் செய்தான் ஓவியன். ஆனால் மேகா அதை பார்க்க விருப்பம் காட்டவில்லை. சமையல் அறைக்கு வந்து, ஓவியன் செய்து கொண்டிருந்த வேலையை கவனிக்கலானாள்.

"என்ன சாப்பிடுற?"

"ம்ம்ம்...  சப்பாத்தி"

"ஓ... உனக்கு சப்பாத்தி பிடிக்குமா?"

"ரொம்ப... உங்களுக்கு சப்பாத்தி செய்ய தெரியுமா?"

"ஓரளவுக்கு தெரியும்"

"உங்க அம்மா சொல்லிக் கொடுத்தாங்களா?"

இல்லை என்று தலையசைத்த அவன்,

"அக்கா சொல்லிக் கொடுத்தாங்க" என்றான்.

"உங்க அக்கா எங்க இருக்காங்க?"

அந்த கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று அவனுக்கு புரியவில்லை. இதுவரை அவனுடைய அக்காவை பற்றி அவன் யாரிடமும் வாய் திறந்தது இல்லை. ஆனால், ஏனோ இந்த குட்டி பெண்ணிடம் அதை மறைக்க அவனுக்கு தோன்றவில்லை.

"அவங்க ஹாஸ்பிடல்ல இருக்காங்க" என்றான் வெங்காயத்தை நறுக்கியபடி.

"அவங்களுக்கு ஜுரமா?" என்றாள் மேகா சோகமாய்.

"இல்ல"

"அப்புறம் ஏன் ஹாஸ்பிடல் இருக்காங்க?"

"அவங்களுக்கு பாப்பா பிறக்க போகுது" உண்மையை கூறினான் ஓவியன்.

"வாவ்... பாப்பாவா? என்ன பாப்பா?" 
 
"பாய் பேபி"

"பாப்பாவ பாக்க என்னை கூட்டிக்கிட்டு போறீங்களா?" என்றாள் ஆவலாய்.

"பாப்பா பிறந்த பிறகு கூட்டிக்கிட்டு போறேன்"

"எங்க அம்மா கூட எனக்கு தம்பி பாப்பா பிறப்பான்னு சொன்னாங்க. ஆனா அதுக்கு முன்னாடியே அவங்களை சாமி கூட்டிக்கிட்டு போயிட்டாங்க"

அவளை வேதனையுடன் பார்த்தான் ஓவியன்.

"உங்க அக்கா என்னை அவனோட விளையாட விடுவாங்களா? நான் அவனை நல்லா பார்த்துக்குவேன். உங்க அக்கா உங்களுக்கு சமையல் சொல்லிக் கொடுத்த மாதிரி, நானும் அவனுக்கு கலரிங் எல்லாம் சொல்லித் தருவேன்"

மெல்லிய புன்னகையுடன் அவள் தலையை வருடி கொடுத்தான் ஓவியன். இந்த சிறிய குழந்தையின் மனதில் தான் எவ்வளவு ஆசைகள்...!

"உங்களுக்கு உங்க அக்காவை பிடிக்குமா?"

"ரொம்ப பிடிக்கும்"

அப்பொழுது அவன் கையில் இருந்த கத்தி, தவறி கீழே விழுந்தது. அதை எடுக்க குனிந்தவன், அப்பொழுது தான் தூரிகை அங்கு நின்று கொண்டிருப்பதை கவனித்தான். அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

"உங்க அக்காவை டெலிவரிக்காக ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கீங்களா?" என்றாள்.

இல்லை என்று தலையசைத்தான் ஓவியன்.

"இப்போ நீங்க சொன்னீங்களே..."

"அவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகி கோமா ஸ்டேஜ்ல இருக்காங்க"

"அவங்க பிரக்னண்டா இருக்காங்களா?"

 மீண்டும் ஆமாம் என்று தலையசைத்தான்.

"எத்தனை மாசம்?"

"இது அவங்களுக்கு எட்டாவது மாசம்"

"எப்படி இருக்காங்க?"

"நான் அவங்களை அட்மிட் பண்ணப்போ எப்படி இருந்தாங்களோ, அதே மாதிரி தான் இருக்காங்க"

"அவங்க ஹஸ்பண்ட்?"

"ஆக்சிடென்ட்ல இறந்துட்டார்" என்ற போது அவன் குரலில் கோபம் வெளிப்பட்டது.

"அதே ஆக்சிடென்ட்லயா?"

"இல்ல. அக்கா கோமா ஸ்டேஜ்க்கு போன கொஞ்ச நாள்ல, வேற ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டார்"

"குழந்தையோட கண்டிஷன் எப்படி இருக்கு?"

"மெடிக்கல் சப்போர்ட்ல தான் வளந்துக்கிட்டு இருக்கான்"

"அவன் பிறந்த பிறகு நீங்க என்ன செய்வீங்க? எப்படி அவனை கவனிச்சுக்க போறீங்க?" என்றாள் அக்கறையும் கவலையும் கலந்த குரலில்.

"தெரியல..."

"என்னோட வாழ்க்கை மட்டும் தான் கஷ்டமானதுன்னு நினைச்சேன்..." என்று அதை முடிக்காமல் நிறுத்தினாள் தூரிகை.

சப்பாத்திகளை உருட்ட துவங்கினான் ஓவியன். சற்று நிறுத்திவிட்டு,

"நீங்க ட்ரை பண்றீங்களா?" என்றான்.

வேண்டாம் என்று அவசரமாய் தலையசைத்தாள் தூரிகை.

"அவங்க சப்பாத்தி செய்ய சொன்னா, ஆஸ்திரேலியா மேப் தான் செய்வாங்க" என்று கலகலவென சிரித்தாள் மேகா.

ஓவியன் வாய்விட்டு சிரிக்க, அவளை பார்த்து முறைத்தாள் தூரிகை.

"உனக்கு ஆஸ்திரேலியா மேப்பெல்லாம் தெரியுமா?" என்றான்.

"அம்மா அப்படித்தான் அத்தையை கிண்டல் பண்ணாங்க"

"அப்படின்னா இது அடிக்கடி நடக்குமா?" என்றான் ஓவியன் சிரித்தபடி.

"எப்பவுமே நடக்கும்" மறுபடியும் சிரித்தாள் மேகா. ஓவியனும் அவளுடன் இணைந்து கொண்டான்.

அவர்கள் ஒன்றாக உணவருந்தினார்கள். ஓவியனின் அக்காவை பற்றியும், குழந்தையை பற்றியும் நிறைய கேள்விக் கணைகளை தொடுத்தாள் மேகா. அதில் சிலவற்றிற்கு பதில் அளித்த ஓவியன், பலவற்றிற்கு மௌனம் காத்தான்.

"உங்க பிரிப்பரேஷன் ரொம்ப டெலிஷியஸ்சா இருந்தது. வி ஹேட் எ குட் டைம் வித் யூ..." என்றாள் தூரிகை.

"மீ டூ..."

"தேங்க்யூ சோ மச்"

"டைம் கிடைக்கும் போது மேகாவை பார்க்குக்கு கூட்டிக்கிட்டு போங்க அவ ரிலாக்ஸா இருப்பா"

சரி என்று தலையசைத்தாள் தூரிகை.

அவர்களிடமிருந்து விடைபெற்ற ஓவியன், அலுவலகம் கிளம்பிச் சென்றான். உண்மையை கூறப்போனால், அவனுக்கு தலைக்கு மேல் வேலை இருந்தது. பிரின்ஸ் வருவதற்கு முன் அனைத்தையும் ஒழுங்குப்படுத்தி வைக்க வேண்டியது இருந்தது. ஆனால் மேகாவுக்காகவும், தூரிகைக்காகவும் வீட்டில் இருந்து விட்டான். ஆனால், அப்படி இருந்ததற்கு நல்ல பலன் கிடைத்தது. அவனுக்கு அன்று மனம் நிறைவாய் இருந்தது.

மாலை

தங்கள் குடியிருப்பின் அருகில் இருந்த ஐஸ்கிரீம் பார்லருக்கு மேகாவை அழைத்துச் சென்றாள் தூரிகை. ஓவியன் கற்றுக்கொடுத்த பாடத்தை அவள் பின்பற்றினாள். எல்லா ஃப்ளேவர்களில் இருந்தும் சிறிய பாக்கெட்டுகளை வாங்கி, அதை மேகாவிடம் கொடுத்தாள். அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டு, அதை ஒன்றன்பின் ஒன்றாக சாப்பிட்டு மகிழ்ந்தாள் மேகா. அவள் சாப்பிட்டு முடித்த உடனே அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப முயன்றாள் தூரிகை.

அவள் சில அடிகள் தான் அங்கிருந்து நகர்ந்திருப்பாள், அப்பொழுது வேகமாய் வந்த லாரி ஒன்று அவர்கள் அமர்ந்திருந்த சிமெண்ட் பெஞ்சின் மீது மோதி நின்றது. மேகாவை தூக்கி அணைத்துக் கொண்டு அதிர்ச்சியுடன் நின்றாள் துளிகை. கடவுள் புண்ணியத்தில் அவர்கள் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். சில நொடிகள் தாமதித்திருந்தால் கூட அவர்கள் உயிர் போய்விட்டிருக்கும்.

தனது இல்லத்திற்கு ஓடோடி வந்து கதவை தாளிட்டுக் கொண்டாள். அப்பொழுது எழுந்த கைபேசியின் ஒளி அவளை மேலும் பீதிக்கு உள்ளாக்கியது. அவள் பயந்தது சரிதான். அந்த அழைப்பு அவனிடமிருந்து தான் வந்தது. ஓவியனிடம் பழகக் கூடாது என்று மிரட்டப் போகிறான். பயந்தபடி அந்த அழைப்பை ஏற்றாள் தூரிகை.

"அந்த லாரி கிட்ட இருந்து அதிர்ஷ்டத்தால தான் நீ உயிர் தப்பிச்சேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா?"

அதிர்ச்சியில் உறைந்தாள் தூரிகை.

"நான் தான் உனக்கு வாழ இன்னொரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கேன். ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி கூட என்னால அந்த பென்ச்சை இடிச்சிருக்க முடியும். விலைமதிப்பில்லாத உன்னோட உயிரையும், உன் அண்ணன் குழந்தை உயிரையும் காப்பாத்திக்கோ. ஓவியன் கிட்ட இருந்து விலகி இரு. இது தான் என்னோட கடைசி எச்சரிக்கை"

அவன் அழைப்பை துண்டித்தான் தூரிகையை நடுக்கத்தில் விட்டு.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top