6 மீண்டும் வந்த அழைப்பு
6 மீண்டும் வந்த அழைப்பு
தனக்கு அனுப்பப்பட்டிருந்த குறுஞ்செய்தியை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தான் ஓவியன். அந்த செய்தியை அனுப்பியது கொலைகாரன் தான் என்பதில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவன் இந்த வழக்கில் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது அவனுக்கு எப்படி தெரியும்? கொலைகாரன் அவனை *ட்ராக்* செய்கிறானோ? ஏதோ ஒரு பிரைவேட் நம்பரிலிருந்து செய்தி அனுப்பி இருக்கிறான். அவன் எங்கிருக்கிறான்? பிரின்ஸ் இங்கு வந்து சேர்ந்தால் தான் இது அனைத்திற்கும் அவனுக்கு பதில் கிடைக்கும். கைபேசியை சோபாவின் மீது வீசிவிட்டு மீண்டும் சமையலறைக்கு சென்றான்.
......
தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முருகன், ஜி எம் மருத்துவமனையை கடந்த பொழுது, ஓவியன் அதற்குள் செல்வதை பார்த்து, அவனது கால்கள் அனிச்சையாய் பிரேக்கை அழுத்தின. இவர் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்? ஒருவேளை வழக்கு சம்பந்தமாய் இங்கு வந்திருப்பாரோ? *யூ டர்ன்* எடுத்து, ஓவியனை பின்தொடர்ந்த முருகன், வரவேற்பில் ஓவியனை பற்றி விசாரித்தான்.
"அசிஸ்டன்ட் கமிஷனர் ஓவியன் சார் இங்க எதுக்காக வந்திருக்காரு? அவரு ஏதாவது கேசை டீல் பண்ணிக்கிட்டு இருக்காரா?"
"அவரோட அக்கா இங்க அட்மிட் ஆகி இருக்காங்க சார்"
"அக்காவா? அவங்களுக்கு என்ன ஆச்சு?"
"அவங்க கோமாவில் இருக்காங்க"
"கோமாவா? அவங்களுக்கு என்ன நடந்துச்சு?"
"எனக்கு அதைப் பத்தி எதுவும் தெரியாது சார். வேணும்னா நீங்க டாக்டரை கேட்டு தெரிஞ்சுக்கோங்க"
"எவ்வளவு நாளா அவங்க இங்க இருக்காங்க?"
"மூணு மாசமா இங்க அட்மிட் ஆகி இருக்காங்க"
"என்ன கண்டிஷன்?"
"எந்த இம்ப்ரூவ்மெண்ட்டும் இல்ல சார்"
மேலும் ஏதோ கேட்கப் போனவன், படி இறங்கி வந்து கொண்டிருந்த ஓவியனை பார்த்து, அங்கிருந்து அவசரமாய் அகன்றான். ஓவியன் வெளியே வரும் வரை காத்திருந்த அவன், அவன் ஜிப்பில் ஏறும் முன், அவனுக்கு முன்னால் வந்து நின்றான்.
"குட் மார்னிங் சார்"
அவனை அங்கு பார்த்த ஓவியன் சில நொடி திகைத்தான்.
"குட் மார்னிங். நீங்க இங்க என்ன செய்றீங்க?"
"என்னோட ரிலேட்டிவை பார்க்க வந்தேன் சார்"
"என்ன ஆச்சு?"
"குழந்தை பிறந்திருக்கு. இன்னிக்கி சாயங்காலம் டிஸ்டார்ஜ் ஆகுறாங்க. அதனால் தான் அதுக்கு முன்னாடி வந்து பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்"
அதைக் கேட்டு ஓவியனின் முகத்தில் நிம்மதி தெரிந்தது. ஏன் என்று தான் முருகனுக்கு புரியவில்லை.
"நீங்க என்ன சார் இங்க?"
"என்னோட ஃபிரண்டு ஒருத்தன் அட்மிட் ஆகி இருந்தான். அவன் ஏற்கனவே டிஸ்சார்ஜ் ஆகிட்டானாம். அதான் கிளம்பிக்கிட்டு இருக்கேன்"
அவன் கூறிய பொய் முருகனை முகம் சுருக்க வைத்தது. ஏன் ஓவியன் பொய் உரைக்கிறான்?
"நம்ம ஆஸ்பயர் புரோமோட்டர்ஸ் போகணும்" என்றான் ஓவியன்.
"ஓ... நம்ம மூணாவது கேசை பத்தி விசாரிக்கப் போறோமா சார்?"
"ஆமாம் நான்ஸி கேஸ்"
சென்னையில் மிகப் பிரபலமான கட்டுமான கம்பெனி தான் ஆஸ்பயர் ப்ரொமோட்டர்ஸ். அதன் முகப்பே கூறியது, அந்த நிறுவனத்தார் எவ்வளவு திறமையான கட்டிட வல்லுநர்களை கொண்டிருந்தார்கள் என்பதை. அந்த நிறுவனத்தின் மேலாளர், குளிர்பானங்களுடன் அவர்களை வரவேற்றார். தன் வயதில் அரை சதத்தை கடந்து விட்டிருந்த அவர், நான்ஸிக்காக வெகுவாய் வருத்தப்பட்டார்.
"ரொம்ப நல்ல பொண்ணு சார். எங்க ஆஃபீஸ்லயே ரொம்ப சின்சியரான ஒர்க்கர். அவளோட மரணம் எங்க கம்பெனிக்கு ரொம்ப பெரிய இழப்பு" என்று வருத்தத்துடன் கூறினார்.
"கோ-ஒர்க்கர்ஸ் கிட்ட அவங்க எப்படி பழகுவாங்க?"
"ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பா சார். யார் என்ன கேட்டாலும், கொஞ்சம் கூட ஈகோவோ, பொறாமையோ இல்லாம தனக்கு தெரிஞ்சதை சொல்லிக் கொடுப்பா"
"எனிதிங் பர்டிகுலர்?"
"யாராவது அவளை கொஞ்சம் புகழ்ந்து பேசினா விழுந்திடுவா சார். ( லேசாய் சிரித்தார் ) அவகிட்ட உங்களுக்கு ஏதாவது வேலை ஆகணும்னா நாலு வார்த்தை அவளை புகழ்ந்தா போதும். ரீசார்ஜ் பண்ண ஒய்-ஃபை மாதிரி ஃபாஸ்ட் ஆயிடுவா. ஆனா அதே நேரம், யாராவது *டிகிரேட்* பண்ற மாதிரி ஏதாவது சொல்லிட்டா, அன்னிக்கு முழுக்க ரொம்ப அப்செட்டா இருப்பா. அந்த சோகத்தில் இருந்து அவளை வெளிய கொண்டு வர்றது ரொம்ப கஷ்டம்"
"ஓ... இன்ட்ரஸ்டிங்... அவளோட ஃப்ரெண்ட் யாரு?"
"பர்ட்டிக்குலரா யாரும் இல்ல சார். எல்லார்கிட்டயுமே சகஜமா பேசுவா"
"எனக்கு உங்க ஃபோன் நம்பர் கிடைக்குமா?"
தனது நிறுவனத்தின் அட்டையை அவனிடம் நீட்டிய அவர்,
"நான் ஆபீஸ்ல இருக்கும் போது, நீங்க என்ன வேணா பேசலாம். ஆனா வீட்ல இருக்கும் போது நான் எந்த காலையும் அட்டென்ட் பண்றது இல்ல..."
"ஓ... குடும்பத்து மேல ரொம்ப அக்கறையா இருக்கீங்க...?"
"சந்தேகமில்லாம..." என்று சிரித்தார் அவர்.
"தேங்க்யூ ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன் சார்"
அவருடன் கைக்குலுக்கி விட்டு, முருகனுடன் அவரது அறையை விட்டு வெளியே வந்தான் ஓவியன். அப்பொழுது அந்த நிறுவனத்தில் இருந்தவர்களுக்கு தேநீரை வழங்கிக் கொண்டிருந்தார் அந்த நிறுவனத்தின் உதவியாளர். அவரை தன்னிடம் வருமாறு சைகை செய்தான் ஓவியன். அவன் தயக்கத்துடன் அவனிடம் வந்தான்.
"நான் கேட்கிற கேள்விக்கு நீ பதில் சொல்லலன்னா, உன்னை ஸ்டேஷனுக்கு கூட்டிகிட்டு போயி, எல்லாத்தையும் கக்க வச்சுடுவேன்"
"சார், எல்லாரையும் விட்டுட்டு ஏன் சார் என்னை மட்டும் கூப்பிட்டு பயமுறுத்துறீங்க?" என்றான் நடுக்கத்துடன்.
"ஏன்னா, பியூனுக்கு தான் ஆஃபீஸ்ல வேலை செய்யற எல்லாரைப் பத்தியும் எல்லாமும் தெரியும். அவங்க தான் எல்லார் மத்தியிலயும் சுத்தி வர்றவங்க..."
"உங்களுக்கு இப்போ என்ன சார் தெரியணும்?" என்று மென்று விழுங்கினான்.
"நான்ஸியை பத்தி சொல்லு"
"ரொம்ப நல்லவங்க சார்"
"அவங்க யார்கிட்ட நெருக்கமா பழகிக்கிட்டு இருந்தாங்க?"
"நெருக்கமான ஃபிரண்ட்ன்னு அவங்களுக்கு யாரும் இல்ல சார்..."
"ஆனா அவங்களுக்கு மேனேஜரை ரொம்ப பிடிக்கும் தானே?"
அதை கேட்ட முருகன் வாயை பிளந்தான்.
"சார்... உங்களுக்கு எப்படி சார் தெரியும்?" என்றான் பியூன் தயங்கியபடி.
"அவர் தான் சொன்னாரு..."
*என்ன மனுஷன் இவரு?* என்று எண்ணினான் முருகன்.
"நெஜமாவே அவர் உங்ககிட்ட சொன்னாரா சார்?"
"நேரடியா சொல்லல... மறைமுகமா சொன்னாரு"
"ஆமாம் சார்... அவங்க நல்லா வேலை பாப்பாங்க அப்படிங்கிறதால, அவரு அவங்களை எப்பவுமே புகழ்ந்துக்கிட்டே இருப்பாரு. அவங்க பெரும்பாலான நேரம் அவரு கேபின்ல தான் இருப்பாங்க"
"ம்ம்ம்ம்"
"சார்... நான் உங்ககிட்ட சொன்ன விஷயத்தை அவர் கிட்ட சொல்லிடாதீங்க சார்"
"மாட்டேன்"
முருகனுடன் அந்த இடம் விட்டு அகன்றான் ஓவியன்.
"சார், நீங்க மேனேஜரை சந்தேகப்படுறீங்களா?" என்றான் முருகன்.
"இல்ல... அவர் கொலைகாரன் இல்ல..."
"அப்படின்னா நீங்க அவருக்கும் நான்ஸிக்கும் இடையில தொடர்பு இருக்கிறதா சந்தேகப்படுறீங்களா?"
"ஆமாம்"
"ஏன் சார்?"
"அவ புகழ்ச்சிக்கு விழுந்திடுவான்னு அவர் சொன்னதை நீங்க கவனிக்கலையா? வேலை நடக்கணும் அப்படிங்கிறதுக்காக மேனேஜரை விட வேற யார் நான்ஸியை அதிகமா புகழப் போறா? அவர் பேசின பேச்சுக்கு அவ விழுந்திருப்பா"
"ஆனா அவர் வயசானவரா தெரியுறாரே சார்"
"அதனால?"
"சமுதாயத்திலையும் அவருக்கு நல்ல மதிப்பிருக்கு"
அதைக் கேட்டு மென்று விழுங்கிய ஓவியன்,
"தறி கெட்ட மனசு இருக்கிற ஆம்பளைங்க, காமம்னு வரும்போது வேற எதை பத்தியும் யோசிக்கிறது இல்ல. தன்னை நம்புறவங்களுடைய இதயங்களை உடைக்கறதை பத்தி அவங்க கவலைப்படறதும் இல்ல. அவனுங்களுக்கு தேவை எல்லாம் வெறும் உடல் சுகம் மட்டும் தான்" என்றான் தன் பல்லை கடித்த படி.
அவனை வியப்புடன் பார்த்தான் முருகன். எதற்காக ஓவியன் திடீரென்று இப்படி உணர்ச்சிவசப்படுகிறான்? இந்த காமம் சம்பந்தப்பட்ட விஷயத்திற்கும், அவனுடைய அக்காவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?
அவர்கள் இருவரும் ஜீப்பில் ஏறி அமர்ந்து கொண்டாவுடன் ஜீப்பை ஸ்டார்ட் செய்தார் வேலு.
அப்பொழுது, வழியில் இருந்த சூப்பர் மார்க்கெட் ஒன்றில் தூரிகை, மேகாவுடன் நுழைவதை கவனித்தான் ஓவியன்.
"வேலு, ஜிப்பை நிறுத்துங்க" என்றான்.
"என்னாச்சு சார்?" என்றான் முருகன்.
"நான் ஐஜி ஆஃபீஸ் போக வேண்டிய வேலை இருக்கு. நீங்க ஆஃபீசுக்கு போங்க. நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் வரேன்"
"சரிங்க சார்"
ஜீப்பிலிருந்து இறங்கிக் கொண்டான் ஓவியன். ஆணையர் அலுவலகத்தை நோக்கி வண்டியை செலுத்தினார் வேலு.
சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே நுழைந்த ஓவியன், தூரிகையை தேடினான். அவர்கள் *மளிகை* பிரிவில் இருந்தார்கள். தனக்கு ஐஸ்கிரீம் வேண்டும் என்று அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் மேகா. *வேண்டாம்* என்று அவளை மறுத்தலித்துக் கொண்டிருந்தாள் தூரிகை. அவர்களுக்கு அருகில் இருந்த, குளியல் பொருள்கள் இருந்த பிரிவிற்கு சென்றான் ஓவியன். அவர்கள் கண்ணில் படும்படி நின்று கொண்டு, ஆஃப்டர் ஷேவ் லோஷனை கையில் எடுத்துக் கொண்டான். அவன் எதிர்பார்த்தபடியே மேகா அவனைப் பார்த்து விட்டாள்.
"அங்கிள்..." என்று சந்தோஷமாய்க் கத்தினாள் அவள்.
அந்த திசை நோக்கி எட்டிப் பார்த்த தூரிகை, ஓவியனை பார்த்து புருவம் உயர்த்தினாள். அப்பொழுது தான் அவர்களை பார்ப்பவனை போல, புன்னகையுடன் அவர்களை நோக்கி சென்றான் ஓவியன்.
"ஹாய்"
"ஹலோ சார்"
"மேகா என்ன கேக்குறா?"
"ஐஸ்கிரீம்" என்றாள் மேகா.
"ஏன் வேண்டாம்னு சொல்றீங்க? அவளுக்கு கோல்ட் இருக்கா?"
"இல்ல சார். அவ ஒரு ஐஸ்கிரீமோட நிறுத்த மாட்டா"
"அப்படியா?"
"எனக்கு எல்லா ஃப்ளேவரும் பிடிக்குதே..." என்றது அந்த குழந்தை முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு.
அதைக் கேட்டு சிரித்த ஓவியன்,
"என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. வா போகலாம்" என்றான்.
அவனது கைவிரலை பிடித்துக் கொண்டு, அவனுடன் குதித்த படி சென்றாள் மேகா.
தயக்கமின்றி அவனுடன் சென்ற மேகாவை, *அடிப்பாவி* என்பது போல் பார்த்துக் கொண்டு நின்றாள் தூரிகை.
மேகவுடன் ஐஸ்கிரீம் ஃப்ரீசரின் அருகில் வந்த ஓவியன், சிறிய சைஸ் ஐஸ்கிரீம் பாக்கெட்டுகளை சேகரித்து, அதை மேகாவிடம் கொடுத்தான்.
"ஒரு பெரிய சைஸ் ஐஸ்கிரீமும் இதுவும் ஈக்குவல் தான்" என்றான்.
"ஹையா... ஜாலி..." என்று துள்ளி குதித்தாள், தனக்கு பிடித்தமான அனைத்து ஃபளேவரும் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில்.
தூரிகையோ பெருமூச்சு விட்டாள்.
"நீங்க போய் திங்ஸை எடுங்க. நான் மேகாவோட இருக்கேன்" என்றான் ஓவியன்.
சரி என்று தலையசைத்து விட்டு, பொருள்களை எடுக்கச் சென்றாள் தூரிகை. மேகா அனைத்தையும் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தான் ஓவியன். பை நிறைய பொருள்களுடன் வந்தாள் தூரிகை. அவள் வாங்கியது அனைத்தும் ரெடிமேட் உணவுப் பொருட்கள்.
அதை பார்த்த ஓவியன்,
"உங்களுக்கு சமைக்க தெரியாதா?" என்றான்.
"அத்தைக்கு சமைக்கவே தெரியாது" என்று சிரித்தாள் மேகா.
அவளைப் பார்த்து முறைத்த தூரிகை,
"எங்க அண்ணி என்னை சமைக்கவே விட்டதில்ல... எனக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ, அவங்களே எல்லாத்தையும் சமைச்சு கொடுத்துடுவாங்க"
"அவங்களை ரொம்ப மிஸ் பண்றீங்க இல்ல?"
"ரொம்ப..." என்று கூறிய போதே தூரிகைக்கு கண்களில் கண்ணீர் கட்டியது. கண்ணீரை அடக்க எவ்வளவோ முயன்றும் அவளால் அது இயலவில்லை. சில நொடிக்குள் தாரை தாரையாய் கண்ணீர் கொட்டியது. அதை பார்த்த மேகாவின் முகம் வாடிப்போனது.
"ஹேய்... கம்போஸ் யுவர்செல்ஃப். மேகாவும் எமோஷனல் ஆகுறா. நீங்க அழுது, அவளையும் வருத்தப்பட வைக்காதீங்க" என்றவுடன் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள் தூரிகை.
"நாங்க கிளம்புறோம் சார்"
"நான் உங்களை டிராப் பண்றேன்"
"இல்ல சார். நீங்க கிளம்புங்க. நாங்க போய்கிறோம்"
"நிஜமாத்தான் சொல்றீங்களா? இந்த வெயிட்டான பேக்கை உங்களால தூக்கிக்கிட்டு போக முடியுமா?"
"இதையெல்லாம் நான் பழகி தானே சார் ஆகணும்? என்னோட சுமையை வேற ஒருத்தர் சுமப்பாங்கன்னு நான் எதிர்பார்க்க முடியாது இல்லையா? எல்லா நேரமும் அது நடக்கவும் நடக்காதே" என்ற அவளது பேச்சில் வலி தெரிந்தது.
அவளை கூர்மையான பார்வை பார்த்துக் கொண்டு நின்றான் ஓவியன்.
"வா மேகா போகலாம்"
"என் மேல கோவமா இருக்கியா அத்தை?"
"இல்ல"
"அப்படின்னா என்னை ஏன் மேகான்னு கூப்பிட்ட? நீ எப்பவுமே என்னை மேகுன்னு தானே கூப்பிடுவ?"
"நான்... வந்து... ஐ அம் சாரி மேகு..."
"ஓக்கி...(ஓகே )"
"நாங்க கிளம்புறோம் சார்"
"மேகா உங்களை கவனிச்சுக்கிட்டு இருக்கான்னு மறந்துடாதீங்க"
ஆமாம் என்று தலையசைத்து விட்டு,
மேகாவின் கரத்தை பற்றி கொண்டு நடக்கத் தொடங்கினாள் தூரிகை.
ஏனோ ஓவியனுக்கு தன் அக்காவின் நினைவு வந்தது.
சன் ரைஸ் அபார்ட்மெண்ட்ஸ்
தன் கையில் இருந்த பையை மேஜையின் மீது வைத்து விட்டு, சோபாவில் சாய்ந்து அமர்ந்தாள் தூரிகை. உள்ளே ஓடிச்சென்ற மேகா, தண்ணீர் கொண்டு வந்து தூரிகையிடம் நீட்டினாள். புன்னகையுடன் அதை பெற்றுக்கொண்ட தூரிகை அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
"நீ மண்டேயில் இருந்து ஸ்கூலுக்கு போகணும். ஓகே?"
"ஓகே..."
அப்பொழுது எழுந்த, தூரிகையின் கைபேசி அழைப்பு மணி, அவர்களின் கவனத்தைக் கவர்ந்தது. *பிரைவேட் நம்பர்* என்று ஒளிர்ந்ததை பார்த்த தூரிகையின் உடல், வியர்வையில் நனைந்தது. அவளது கைபேசியை பிடித்திருந்த கரங்கள் நடுங்கின. ஆனால் அவளால் அந்த அழைப்பை தவிர்க்க முடியாது. அதை அவள் ஏற்று தான் ஆக வேண்டும். கைபேசியை தன் காதுக்கு கொடுத்தாள் தூரிகை.
"நீயும் அந்த போலீஸ்காரனும் ரொம்ப நெருக்கமாயிட்டிங்க போல இருக்கு... *உன்னோட கேசை* டீல் பண்றது அவன்தான்னு உனக்கு தெரியுமா? அதைப்பத்தி அவன்கிட்ட ஏதாவது சொல்லணும்னு நினைக்காதே... உன்னை நான் எச்சரிக்கை பண்றேன். அவன் கிட்ட இருந்து விலகி இரு. ரொம்ப ஸ்மார்ட்டா ஏதாவது செய்ய நினைக்காத. உன் வாழ்நாள் முழுக்க அவன் உன் கூட வரமாட்டான்"
அழைப்பு துண்டிக்கப்பட்டது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top