5 பிரைவேட் நம்பர்
5 பிரைவேட் நம்பர்
"ஜிப்பை நிறுத்துங்க" வேலுவிடம் ஜீப்பை நிறுத்துமாறு பரபரத்தான் ஓவியன்.
அவன் அவசரமாய் கூறியதை கேட்டு, வேலு பிரேக்கை அழுத்த, ஜிப்பை விட்டு குதித்து திரையரங்கை நோக்கி ஓடிய ஓவியன், திரையரங்கின் மேலாளரின் அறைக்கு வந்தான்.
"நான் அசிஸ்டன்ட் கமிஷனர் ஓவியன்"
"சொல்லுங்க சார்" என்றார் மேலாளர் பவ்யமாய்.
"இந்த தியேட்டர்ல காரி படம் எவ்வளவு நாளா ஓடிக்கிட்டு இருக்கு?"
"ஒரு வாரமா ஓடிக்கிட்டு இருக்கு சார்"
"வேற ஏதாவது படத்தை ஸ்பெஷல் ஷோ ஓட்டினிங்களா?"
"இல்ல சார்... காரி படம் மட்டும் தான் நாலு ஷோவும் ஓடிக்கிட்டு இருக்கு. வேற எந்த படமும் இல்ல சார்"
"தேங்க்யூ"
குழப்பத்துடன் திரையரங்கை விட்டு வெளியே வந்த ஓவியன், அங்கிருந்து நேராக ராஜ் நகர் நோக்கி விரைந்தான். அதற்குள் அங்கு வந்து சேர்ந்து விட்டிருந்த முருகன், தனது விசாரணையை ஏற்கனவே துவக்கிவிட்டிருந்தான். ஓவியனை பார்த்ததும் அவனை நோக்கி ஓடி வந்தான் முருகன்.
"சொல்லுங்க முருகன்"
"கொலை செய்யப்பட்ட பொண்ணு, ஏதோ ஒரு பிரைவேட் செக்டார்ல வேலை செஞ்சுகிட்டு இருந்திருக்காங்க சார். அவங்களுடைய ஹஸ்பெண்ட் ஒரு கிலோத் மெர்ச்சன்ட். பர்சேசுக்காக அடிக்கடி சூரத்துக்கு போயிட்டு வரக்கூடியவர். நேத்தும் அவரு சூரத்துக்கு தான் போயிருந்தார். அவருக்கு ஏற்கனவே மெசேஜை பாஸ் பண்ணிட்டோம். அவர் அங்கிருந்து திரும்ப வந்துகிட்டு இருக்காரு சார்"
"இறந்தவங்களுடைய மொபைல் ஃபோனை கொண்டு வாங்க"
"இல்ல சார். வீடு ஃபுல்லா தேடி பார்த்து விட்டோம். அவங்களோட ஃபோன் எங்க தேடியும் கிடைக்கல"
"இதுக்கு முன்னாடி இருந்த கேஸ்லையும் அப்படி தானா?" என்ற கேள்வி வந்தது ஓவியனிடமிருந்து.
"ஆமாம் சார்"
இறந்தவர்களின் கைபேசியை பற்றி தீவிரமாய் சிந்திக்க துவங்கினான் ஓவியன். கொலையாளி திட்டமிடுவதில் வல்லவனாக இருக்க வேண்டும். எல்லா கொலைகளிலும், எந்த தடயத்தையும் விட்டுவிடாமல் புத்திசாலித்தனமாய், அவன் ஒரே விதமான வழியைத்தான் பின்பற்றிக் கொண்டிருக்கிறான். ஆனால், குற்றவாளிகள் தாங்கள் அறியாமல் ஏதோ ஒரு சிறிய தடையத்தையாவது விட்டு விட்டு செல்வார்கள் என்பது, அந்த குற்றத்தை துப்பு துலக்குபவர்களின் ஆணித்தரமான நம்பிக்கை. இந்த வழக்கிலும், அப்படி ஒரு தடயத்தை கொலையாளி நிச்சயம் விட்டுச் சென்றிருப்பான் என்பது ஓவியனின் அசைக்க முடியாத நம்பிக்கை. இறந்தவர்களின் கைபேசியை அவன் புத்திசாலித்தனமாய் மறைத்திருக்கலாம். ஆனால், எதற்காக அந்த கைபேசிகளுக்கு அவன் இவ்வளவு முக்கியத்துவம் வழங்க வேண்டும்?அந்த கைபேசிகளில் அப்படி என்ன இருக்கிறது? அப்படி என்றால், இறந்தவர்களின் கைபேசிகள், இந்த வழக்கில் மிக முக்கியமான பங்கு வகிக்க வேண்டும்.
தனது கைபேசியை எடுத்து யாருக்கோ ஃபோன் செய்தான் ஓவியன். அவனது அழைப்பு உடனடியாய் ஏற்கப்பட்டது.
"டேய் மச்சான்..." என்ற சந்தோஷக் குரல் தெறித்தது.
"ஹாய் பிரின்ஸ்..." என்றான் ஓவியன்.
"பிரின்ஸ்ன்னு ஒருத்தன், இன்னும் உயிரோட இருக்கான்னு, அசிஸ்டன்ட் கமிஷனர் ஓவியனுக்கு எது மச்சான் ஞாபகப்படுத்துச்சி?"
"நீ கொஞ்ச நாள் என் கூட தங்க வேண்டியிருக்கும்" என்றான் அவனது வேடிக்கை கேள்விக்கு பதில் அளிக்காமல் ஓவியன்.
"வாவ்... நெஜமா தான் சொல்றியா?" என்றான் நம்ப முடியாமல் பிரின்ஸ்.
"ஆமாம், ஒரு கேஸ் விஷயமா..."
"அத சொல்லு முதல்ல... இல்லன்னா நீயாவது எனக்கு கால் பண்றதாவது..." என்று அலுத்துக் கொண்டான் பிரின்ஸ்.
"கூல் பட்டி"
"சரி, என்ன கேஸ்?"
"நீ இப்போ எங்க இருக்க?"
"கொல்கத்தாவுல இருக்கேன்"
"எப்போ சென்னைக்கு திரும்பி வருவ?"
"இன்னும் ரெண்டு நாள்ல வருவேன்"
"நீ நேர்ல வரும் போது நான் உனக்கு கேஸ் டீடைல்ஸ் பத்தி சொல்றேன். சென்னைக்கு வந்த உடனே என்னை வந்து பாரு"
"சீக்கிரம் வரேன்"
"அது தான் உனக்கு நல்லது"
அழைப்பை துண்டித்தான் ஓவியன்.
"இவன் மாறவே மாட்டான்... இன்னும் ரெண்டு நாள்ல சென்னைக்கு போகலன்னா, நேர்ல வந்து அரெஸ்ட் பண்ணாலும் பண்ணிடுவான்" என்று தன் கைபேசியை பார்த்து சிரித்தான் பிரின்ஸ்.
அன்று மாலை
தூரிகையின் வீட்டு கதவை தட்டினான் ஓவியன். அவசரம் காட்டாமல், நேரம் எடுத்துக்கொண்டு, கதவை திறந்தாள் தூரிகை. ஓவியனை பார்த்து அவள் புன்னகைக்க, அவனும் பதிலுக்கு புன்னகைத்தான்.
"உங்க அண்ணன் பொண்ணு எங்க?இன்னும் வரலையா?" என்றான் ஓவியன் தன் கண்களை அந்த அறையில் துழாவ விட்டு.
"வந்துட்டா. அவ பெட்ரூம்ல இருக்கா"
"ஓஹோ... சரி படம் எப்படி இருந்தது?"
"படமா? என்ன படம்?"
"நேத்து ராத்திரி உங்க ஃபிரண்டு கூட போய் பாத்துட்டு வந்தீங்களே... அந்த படத்தை பத்தி தான் கேக்குறேன்."
"ஓ... அதுவா? நல்லா இருந்தது" என்று திக்கி திணறி சமாளித்தாள் தூரிகை.
"உங்களுக்கு பிடிச்சிருந்தா?"
"அஃப்கோர்ஸ்..."
"அந்தப் படத்துல யாரெல்லாம் நடிச்சிருந்தா?"
"அது... யாரோ புதுமுகம்னு நினைக்கிறேன். எனக்கு பேர் சரியா தெரியல..."
"தெரிஞ்ச நடிகர்கள் ஒருத்தர் கூடவா இல்ல? "
"தெரியல சார்..."
"ராதிகா, சத்யராஜ், யோகிபாபு இவங்க பேர் கூட உங்களுக்கு தெரியாதா?"
"இல்ல... வந்து..."
"ரீகல் தியேட்டர்ல ஓடிக்கிட்டு இருக்கிறது லவ் டுடே இல்ல... காரி."
அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டாள் தூரிகை.
"பொய் சொல்ல தெரியாதுன்னா, கத்துகிட்டு சொல்லுங்க. அதுவும் ஒரு போலீஸ் ஆஃபீஸர் கிட்ட பொய் சொல்லும் போது கொஞ்சம் கவனமா இருங்க"
அந்த இடத்தை விட்டு அகன்றான் ஓவியன், அவன் அவளை கையும் களவுமாய் பிடித்து விட்டான் என்பதை அவளுக்கு தெரிய வைத்து விட்டு.
பயத்தில் நடுங்கினாள் தூரிகை. தொலைக்காட்சியை ஆன் செய்துவிட்டு அன்றைய செய்தியை கவனித்தாள். அவள் எதிர்பார்த்தபடியே அந்த *குறிப்பிட்ட* செய்தி ஒளிபரப்பானது. அவளுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வண்ணம், அந்த செய்தியில் ஓவியன் இடம்பெற்றிருந்தான். அந்த வழக்கை கையாள்வதே அவன் தான் என்று தெரிந்த பொழுது, அவளை பயம் பிடுங்கி தின்றது. அவள் சினிமாவுக்கு போகவில்லை என்பதை அவன் கண்டுபிடித்து விட்டான். இதற்கு மேல் அமைதியாய் இருப்பது புத்திசாலித்தனமாகாது. அவனுடைய சந்தேகத்திலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும். அவனது வீட்டை நோக்கி விரைந்தாள். கதவு திறந்தே இருந்த போதிலும் கதவை தட்டினாள். சமையல் அறையிலிருந்து எட்டிப் பார்த்தான் ஓவியன். தூரிகையை பார்த்த அவனது புருவங்கள், மேலே உயர்ந்தது.
"உள்ள வாங்க" என்று கூறிவிட்டு மீண்டும் தன் தலையை சமையலறையின் உள்ளே இழுத்துக் கொண்டான்.
ஒரு அடி மட்டும் உள்ளே எடுத்து வைத்து நின்றாள் தூரிகை. இரண்டு குவளை காப்பியுடன் வந்த ஓவியன், அவள் வாசலிலேயே நிற்பதை பார்த்து,
"நான் உங்களை உள்ளே வர சொன்னேனே..." என்றான், ஒரு காபி குவளையை அவளை நோக்கி நீட்டியபடி.
"பரவாயில்ல சார். மேகா வீட்ல தனியா இருக்கா நான் போகணும்..."
"இந்த காபியை குடிக்க ஒரு மணி நேரமா ஆகப்போகுது?"
தயக்கத்துடன் அவனிடமிருந்து அந்த குவளையை பெற்றுக் கொண்டாள் தூரிகை. காபியை பருகியபடி, அவள் என்ன கூற போகிறாள் என்று அவளை பார்த்துக் கொண்டு நின்றான். ஓவியன்.
"ஆக்சுவலி.... ஐ அம் ரியலி சாரி. நான் உங்ககிட்ட பொய் சொல்லிட்டேன். நான் நேத்து சினிமாவுக்கு போகல" என்றாள்.
தெரியும் என்பது போல் தலையசைத்தான் ஓவியன்.
"நீங்க என்னை தப்பா நினைச்சுக்க கூடாதுன்னு தான் பொய் சொன்னேன். அதுலயும், நீங்க போலீஸ் ஆஃபீஸர்னு தெரிஞ்ச பிறகு, நான் ரொம்பவே பயந்துட்டேன்"
"குற்றவாளிங்க தான் எங்களைப் பார்த்து பயப்படனும். நீங்க ஏன் பயப்படுறீங்க?" என்றான் சாதாரணமாய்.
"ஆக்சுவலா நான் எங்க போனேனா..."
அவளது பேச்சை துண்டித்து,
"அது உங்க பர்சனல் விஷயம். நான் உங்களை ஜஸ்ட் வார்ன் பண்ணேன் அவ்வளவு தான்"
அவள் மீது அவனுக்கு சந்தேகம் இருந்ததை அவன் காட்டிக் கொள்ளவில்லை. ஏற்கனவே பயந்திருக்கும் அவளை மேலும் பயமுறுத்த அவன் விரும்பவில்லை.
"தேங்க்யூ சார்"
"உங்க இன்டர்வியூவை எப்படி பண்ணிங்க?"
"நான் ரொம்ப லேட்டா போனதால, அட்டென்ட் பண்ணல சார்..."
"உங்க டெசிக்னேஷன் என்ன?"
"எம்எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ்"
"ஓ..."
"நான் கிளம்புறேன் சார்" என்றாள் காபி குவளையை மேஜை மீது வைத்தபடி.
சரி என்று தலையசைத்தான் ஓவியன்.
ஓவியனை சமாளித்து விட்டோம் என்ற நிம்மதியுடன் அங்கிருந்து சென்றாள் தூரிகை. தன்னை சமாளித்து விட்டதாய் அவளை நம்ப வைத்து விட்டோம் என்று எண்ணியபடி புன்னகையுடன் கதவை சாத்தினான் ஓவியன்.
அப்பொழுது அவனுடைய கைபேசி, ஒரு குறுஞ்செய்தியை சுமந்து வந்து குரல் எழுப்பியது.
*பிரைவேட் நம்பர்* என்று இருந்ததை பார்த்து முகத்தை சுருக்கினான் ஓவியன்.
அந்த குறுஞ்செய்தியை திறந்து படித்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
*இந்த வழக்கிற்குள் ஒரு *ஹேக்கரை* கொண்டு வந்த உங்களது புத்திசாலித்தனத்திற்கு எனது பாராட்டுக்கள்* என்றிருந்தது.
ஆடிப் போனான் ஓவியன் என்று தான் கூற வேண்டும். அதைப் பற்றி இது வரை அவன் யாரிடமும் வாய் திறக்கவில்லை. அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டும் என்ற எண்ணம் கூட அவனுக்கு இருக்கவில்லை. அப்படி இருக்கும் போது அதை பற்றி இந்த *பிரைவேட் நம்பர்* மனிதனுக்கு எப்படி தெரிந்தது? எல்லாவற்றிற்கும் மேலாக, பிரின்ஸ் ஒரு ஹேக்கர் என்பது யாருக்குமே தெரியாத ரகசியம். அவர்களது நண்பர்களின் வட்டாரத்திலேயே, ஓவியனைத் தவிர அதை பற்றி வேறு யாருக்கும் தெரியாது. அது கூட, அவன் காவல்துறையை சேர்ந்தவன் என்பதால் மட்டும் தான் அதைப்பற்றி அவனிடம் கூறி இருந்தான் பிரின்ஸ். அப்படி இருக்கும் போது, அது இந்த மனிதனுக்கு எப்படி தெரிந்தது? யார் இவன்? எப்படி இவ்வளவு வேகமாய் இருக்கிறான்?
தான் எதிர்கொண்டிருப்பது ஒரு லேசுப்பட்ட எதிரி அல்ல என்பதை உணர்ந்தான் ஓவியன். அவன் செய்த காரியத்தை பாராட்டி, அவனுக்கே ஒருவன் குறுஞ்செய்தி அனுப்புகிறான் என்றால், அவன் லேசு பட்டவனாக இருக்க முடியாது அல்லவா...
எது எப்படி இருந்த போதிலும், பிரின்ஸ் உடனடியாக சென்னைக்கு வந்து தீர வேண்டியது அவசியம் என்று எண்ணினான் ஓவியன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top