4 லவ்டுடே

 4 லவ்டுடே

தலைத் தெறிக்க ஓடி வந்த தூரிகை, தனது வீடு அமைந்திருக்கும் கட்டிடத்தின் முகப்பில், அதிர்ச்சி தாங்கிய முகத்தோடு நின்றிருந்த ஓவியனை பார்த்து சட்டென்று நின்றாள். அவள் அவனை கடந்து செல்ல முயன்ற போது,

"இந்த நேரத்துல எங்க போயிட்டு வரீங்க?"என்றான்.

என்னைக் கேட்க நீங்க யாரு? என்பது போல் ஒரு பார்வையை அவன் மீது வீசிவிட்டு, அவனுக்கு பதில் அளிக்காமல் அவள் அங்கிருந்து செல்ல முயன்ற போது, அவளுக்கு முன்னால் வந்து நின்று,

"நான் கேட்டது காதுல விழலையா?" என்றான்.

"நான் ஏன் உங்களுக்கு பதில் சொல்லணும்? நீங்க யாரு என்னை கேள்வி கேட்க?"

அவள் கேட்ட கேள்விக்கு வார்த்தையால் பதில் அளிக்காமல், தனது அடையாள அட்டையை எடுத்து அவள் முன் நீட்டினான் ஓவியன்.

"போலீஸ்... எனக்கு சந்தேகம் ஏற்பட்டா, நான் யாரையும் கேள்வி கேட்க முடியும். எனக்கு பதில் சொல்ல வேண்டியது உங்க கடமை. புரிஞ்சுதா?" அதைக் கூறும் பொழுது அவன் குரலில் அடக்கம் தெரிந்தாலும், கண்டிப்புடன் ஒலித்தது.

அதைக் கேட்டு திகில் அடைந்த தூரிகை, மென்று விழுங்கினாள்....

"போ... போலீசா...?"

ஆமாம் என்று தலையசைத்த ஓவியன்,

"சொல்லுங்க" என்றான்.

"என் ஃபிரண்டை பாக்க போயிருந்தேன்"

"இந்த நேரத்துலயா?"

"நாங்க சினிமாவுக்கு போயிருந்தோம்"

சந்தேகத்துடன் முகம் சுளித்தான் ஓவியன்.

"என் அண்ணன் பொண்ணு வீட்ல இல்ல. தனியா இருந்தா எனக்கு தூக்கம் வரும்னு தோணல. அதனால என் ஃப்ரெண்ட் கூப்பிட்டப்போ, சினிமாவுக்கு போனேன்"

"என்ன படம் பார்த்தீங்க?"

"லவ் டுடே"

"எந்த தியேட்டர்ல?"

"ரீகல் தியேட்டர்"

"இந்த நேரத்துல சினிமாவுக்கு தனியா போறது சேஃப்டி இல்ல. சினிமாவுக்கு போனோம்னு நினைச்சா, பகல் நேரத்தில் போயிட்டு வாங்க. பொம்பளைப் பிள்ளைகளுக்கு என்னவெல்லாம் அநியாயம் நடக்குதுன்னு நீங்க நியூஸ்ல பாக்குறதில்லையா?"

ஆமாம் என்று தலையசித்தபடி தலைகுனிந்தாள் தூரிகை.

"நீங்க தனியா இருக்கீங்க. ஜாக்கிரதையா இருக்கணும் இல்லையா?  உங்களுக்காக இல்லனாலும், மேகாவுக்காகவாவது கவனமா இருங்க. அவளுக்கு உங்களை விட்டா வேற யாரும் இல்லைங்குறதை ஞாபகம் வச்சுக்கிட்டு வீட்டை விட்டு வெளியே வாங்க"

"என்னோட ஃப்ரெண்டு, ஃபாரினுக்கு போறா. அதுக்கு முன்னாடி அவளை சந்திக்கலாம்னு நினைச்சி போனேன்"

"இருக்கலாம்... ஆனா, சில விஷயங்கள் போனா திரும்ப கிடைக்காது. இழந்தா இழந்தது தான்..."

அவன் எதைப் பற்றி பேசுகிறான் என்று புரிந்து கொண்ட தூரிகை, தன்னைத் தானே நொந்து கொண்டாள்.

"உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா, தாராளமா என்னை கேளுங்க"

சரி என்று தலையசைத்தாள் தூரிகை. *செல்லுங்கள்* என்பது போல் அவன் லிஃப்ட் இருந்த திசையை நோக்கி கை நீட்ட, லிஃப்ட்டை நோக்கி சென்றாள் தூரிகை. அவளை பின்தொடர்ந்தான் ஓவியன். இருவரும் தத்தம் வீடுகளுக்கு அருகில் வந்து சேர்ந்தார்கள்.

"குட் நைட்" என்றான் ஓவியன்.

"குட் நைட்" என்றபடி தன் வீட்டில் நுழைந்தாள் தூரிகை.

தூரிகை கூறிய எந்த பதிலும் ஓவியனுக்கு திருப்தி அளிக்கவில்லை. தனக்கு ஒரு நேர்முகத் தேர்வு இருப்பதாக கூறி, அன்று காலை மேகாவை அவள் பாட்டியுடன் தூரிகை  அனுப்பியது அவனுக்கு தெரியும். அவள் கூறியது போல், மறுநாள் அவளுக்கு நேர்முகத் தேர்வு இருக்கும் போது, சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்று அவளுக்கு எப்படி தோன்றியது? அதுவும், இரவு ஆட்டத்திற்கு? சினிமாவை ரசிக்கும் அளவிற்கு அவளது மனோநிலை இருப்பதாய் அவனுக்கு தெரியவில்லை. முதல் நாள், அவனிடம் கூட அவள் கடுகடுவென்று தானே பேசினாள்? அப்பொழுது அவள் வெகு கம்பீரமாய் காணப்பட்டாள். ஆனால் இன்று, அவளது கண்களில் தயக்கம் தெரிந்தது. ஏதோ தப்பாய் தெரிகிறது. ஒருவேளை அவள் பொய் சொல்கிறார்களோ? ஆனால் ஏன்?

தலையணையை அணைத்தபடி கட்டிலில் சுருண்டு படுத்திருந்தாள் தூரிகை. அவள் அழுது கொண்டிருந்தாள். வெளியில் சென்றதற்காக அவளது மனம் அவளை வைது கொண்டிருந்தது. அது உண்மையில் தேவையில்லாதது தான். அவளது எதிர் வீட்டில் இருக்கும் அந்த மனிதன் ஒரு போலீஸ்காரன். இப்படி ஒரு பிரச்சனையில் அவள் மாட்டிக் கொள்வாள் என்று அவள் சிறிதும் எதிர்பார்த்து இருக்கவில்லை. ஒருவேளை அவனுக்கு உண்மை தெரிந்து விட்டால் என்ன செய்வது? அவனைப் பார்க்கும் போதே கண்டிப்பான அதிகாரி போல் தெரிகிறான். அவளைப் பற்றி அவனுக்கு ஏதாவது சந்தேகம் தோன்றினால், நிச்சயம் அவன் கண்டுபிடித்து விடுவான். இதிலிருந்து எப்படி வெளிவரப் போகிறாளோ அவளுக்கே புரியவில்லை.

திடீரென்று ஒலி எழுப்பிய அவளது கைபேசி, அவளை திடுக்கிட செய்தது. பயத்துடன் கட்டிலில் எழுந்து அமர்ந்தாள். அவள் கடிகாரத்தை பார்க்க அது மணி 1:00 என்றது. இந்த நேரத்தில் அவளுக்கு ஃபோன் செய்வது யார். இந்த நேரத்தில் அவளுக்கு இதற்கு முன் எப்பொழுதும் கைபேசி அழைப்பு வந்ததே இல்லையே. அவளது கைபேசியை மெல்ல எடுத்து பார்த்த பொழுது  *பிரைவேட் நம்பர்* என்று இருந்தது.

*பிரைவேட் நம்பரா?* என்று யோசித்தபடி அந்த அழைப்பை ஏற்காமல் தயக்கத்துடன் நின்றாள் தூரிகை. மணி அடிப்பது நின்றது. ஆனால் மறுபடியும் அடிக்கத் துவங்கியது. அதே பிரைவேட் நம்பர். அழைப்பை ஏற்றாள் தூரிகை.

"யார் பேசுறீங்க?"

"தூரிகை..."

"ஆமாம். தூரிகை தான் பேசுறேன்"

"நீ தூங்கி இருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும். உன்னால தூங்க முடியாது"

"யார் நீங்க?"

"அதுக்குள்ள என்னை மறந்துட்டியா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே நம்ம சந்திச்சோம்?"

தூரிகையின் விழிகள் விரிவடைந்தன.

"ஒரு பொண்ணா இருந்துகிட்டு, அதை செய்ய உனக்கு ரொம்ப தைரியம் வேணும்"

"நான் எதுவும் செய்யல"

"அப்படின்னா எதுக்காக கத்தியோட அவ வீட்டுக்கு வந்த? அவ செத்துட்டா தெரியுமா?"

தூரிகையின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

"நீ வாயை மூடிக்கிட்டு இருந்தா, உன்னை ஒன்னும் செய்ய மாட்டேன். ஏதாவது செய்ய நினைச்சா, நீ கம்பி எண்ண வேண்டியது தான். ஏதாவது புத்திசாலித்தனமா செய்யலாம்னு யோசிக்காத. என்கிட்ட உன்னோட மொத்த குடும்பதோட சரித்திரமே இருக்கு"

"இல்ல, நான் சொல்றத கேளுங்க"

 அழைப்பு துண்டிக்கும் ஓசை கேட்டது.

வெடித்து அழுதாள் துரிகை. பயத்தில் அவளுக்கு தூக்கமே வரவில்லை. அவளுக்குள் கடுமையான நடுக்கம் ஏற்பட்டது. அவளுக்கு ஃபோன் செய்தது யார்? அவளுடைய கைப்பேசி எண் அவனுக்கு எப்படி தெரிந்தது? அவள் அவனை சந்தித்தது தற்போது தானே? ஒரு மணி நேரத்திற்குள்ளாக அவளது கைபேசி எண் அவனுக்கு எப்படி கிடைத்திருக்க முடியும்? ஒருவேளை, அவன் அவளுக்கு தெரிந்தவனாக இருப்பானோ? இருக்கலாம்... ஆனால் யார்? தன்னிடம் பேசியது யார் என்பதில் அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அது *அவன்* தான். ஆனால் அவளுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்?

அவளுக்கு தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. தூக்கம் அவளுக்கு தூரமானது. அழுது அழுது அவளுக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. இறுதியாய், மீதம் இருந்த சக்தி முழுவதையும் இழந்தபின், உறக்கம் அவளை தன் உலகத்திற்குள் இழுத்துக் கொண்டது.

மறுநாள்

காலை பத்து மணி. வெகு தாமதமாய் உறங்கியதால், இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள் தூரிகை. யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு, திடுக்கிட்டு எழுந்தாள். அவளது உடல் சற்றென்று வியர்வையில் நனைந்தது. அது யாராக இருக்கக்கூடும்? ஒருவேளை அவனாக இருக்குமோ? கதவை தட்டும் சத்தம் அதிகரித்தது. இங்கும் அங்கும் எதையோ தேடியவள், உணவு மேஜையின் மேல் இருந்த கத்தியை கண்டாள். அதை கையில் எடுத்துக் கொண்டு, கதவை நோக்கி நடந்தாள். கதவில் பொருத்தப்பட்டிருந்த *மேஜிக் ஹோலின்* வழியாக பார்த்த போது, அங்கு யாரும் இருக்கவில்லை. கதவை அகல திறந்து, கத்தியை உயர்த்தினாள். எதிரில் ஓவியன் நிற்பதை பார்த்து, திடுக்கிட்டாள். ஓவியனோ அவள் கையில் இருந்த கத்தியை பார்த்து பின் வாங்கினான்.

"நீங்களா?"

"நீங்க யாரை எதிர்பாத்திங்க?"

"யாரையும் இல்ல"

அவள் கையில் இருந்த கத்தியையும், அவள் முகத்தையும் மாறி மாறி பார்த்தான் ஓவியன். அந்த கத்தியை தூக்கி எறிந்து நேராய் நின்றாள் தூரிகை.

"தனியா இருக்கிறதால, யாரையுமே நம்ப முடியல. அதனால தான்..."

அவளை சந்தேக கண்ணோடு பார்த்த ஓவியன்,

"வந்திருக்கிறது யாருன்னு தெரியாமலேயே கத்தியை தூக்கிடுவீங்களா?"

"ஐ அம் சாரி. எதுக்காக கதவை தட்டினீங்க?"

"வீட்டை விட்டு கிளம்பறதுக்கு முன்னாடி, நீங்க எப்படி இருக்கீங்கன்னு பார்க்க வந்தேன்"

"நல்லா இருக்கேன்" என்றாள் தலை குனிந்த படி.

"நெஜமா தான் சொல்றீங்களா?"

"ஆமாம்"

"பார்த்தா அப்படி தெரியலையே"

அமைதியாக இருந்தாள் தூரிகை.

"நீங்க எங்க போகணும்?"

"நான் எங்க போகணும்?"

"இன்னைக்கு உங்களுக்கு இன்டர்வியூ இருக்குல்ல?"

திடுக்கிட்டாள் தூரிகை. இவனுக்கு எப்படி தெரியும்?

"நான் வேணும்னா உங்களை டிராப் பண்ணட்டுமா?"

"இல்ல இல்ல... வேண்டாம் சார். நான் போய்க்கிறேன்" என்றாள் அவசரமாக.

"ஆர் யூ ஷ்யூர்??"

"எஸ்"

அவன் சரி என்று தலை அசைத்தான். அவள் கதவை சாத்த முயன்ற போது, அவன் பேசுவதை கேட்டு நிறுத்தினாள்.

"உங்களுக்கு ஏதாவது தேவைன்னா, என்னை கேட்க தயங்காதிங்க"

சரி என்று தலையாசைத்தாள். அவளது விசித்திரமான நடவடிக்கைகளை பற்றி எண்ணியபடி அங்கிருந்து நடந்தான் ஓவியன். அப்போது அவனுக்கு முருகனிடமிருந்து அழைப்பு வந்தது.

"சொல்லுங்க முருகன்"

"சார் உடனே ராஜ் நகருக்கு வாங்க"

"ராஜ் நகருக்கா? எதுக்கு?"

"சார், ராஜ் நகர்ல நாலாவது கொலை நடந்திருக்கு சார். அதே ஸ்டைலில்..."

"என்ன்னனது? எப்போ?"

"நேத்து ராத்திரி, "

"வேலு, ராஜ் நகருக்கு போங்க" என்று ஓட்டுனரிடம் கூறிய ஓவியன்,

"நீங்க ஸ்பாட்டக்கு போய்ட்டீங்களா முருகன்?" என்றான் முருகனிடம்.

"ஆன் தி வே சார். எனக்கும் இப்பதான் சார் மெசேஜ் கிடைச்சது"

"சரி, நானும் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வந்து விடுவேன்"

"ஓகே சார்"

அழைப்பை துண்டித்தான் ஓவியன். அவர்களது கார் ராஜ் நகர் நோக்கி பயணமானது. முந்தைய மரணங்களில் இருந்தே அவர்களுக்கு இன்னும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. அதற்குள் மற்றொரு மரணமா? என்று எண்ணிக் கொண்டிருந்த பொழுது அவன் முகத்தில் புன்னகை அரும்பியது, அவர்களது ஜீப், ரீகல் தியேட்டரை கடந்த போது... இங்கு தானே நேற்று இரவு லவ்டுடே படம் பார்த்தேன் என்று தூரிகை கூறினாள்? அவனுடைய புன்னகை மாயமாய் மறைந்தது, அங்கு லவ்டுடே திரைபடத்திற்கு பதிலாக, *காரி* திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்து...

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top