33 தடயம்

33 தடயம்

அகோர மூர்த்தியின் மகன் ராஜா பைக்கை நிறுத்திவிட்டு, தன் கண்ணாடியை கழட்டியபடி கீழே இறங்கினான். அந்த வீட்டின் காவலாளி அவனை நோக்கி ஓடினார்.

"சின்னையா, இவர் தான் ஏசி"

"ஹலோ சார், ஐ அம் ராஜா" கைகுலுக்கலுக்காக சம்பிரதாயமாய் கை நீட்டினான். அவன் கையை பற்றிய ஓவியன்,

"ஐ அம் ஓவியன்" என்றான்.

"நீங்க என்னை எதுக்காக வர சொன்னிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா சார்?"

"உங்க அப்பா மிஸ்ஸிங்"

"அப்படியா?" என்றான் எந்த ஆர்வமும் இல்லாமல்.

"நாங்க அதை பத்தி விசாரிச்சுக்கிட்டு இருக்கோம். உங்க வீட்டை சோதனை போட்டா ஏதாவது க்ளு கிடைக்கும்னு நினைக்கிறேன்"

"ஆனா என்கிட்ட சாவி இல்ல சார். வேணும்னா நீங்க பூட்டை உடைச்சி பாருங்க"

" வேற வழி இல்லைனா நாங்க அதை இதான் செய்யப்போறோம். அதுக்காக தான் உங்களை வர சொன்னோம்"

"தாராளமா செய்யுங்க சார்"

ஓவியன் முருகனுக்கு ஜாடை கட்ட, அவன் காவலாளியிடம்,

"ஒரு சுத்தியல் கிடைக்குமா?" என்றான்.

"கார் ஷெட்டில் இருக்கு சார். இதோ கொண்டு வரேன்" கார் ஷெட்டை நோக்கி சென்றார் காவலாளி.

அவர் கொண்டு வந்த சுத்தியலை வைத்து கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தார்கள். எறும்புகள் அணிவகுத்து வந்த அந்த குறிப்பிட்ட அறையை நோக்கிச் சென்றான் ஓவியன். அந்த அறையின் கதவை அவன் மெல்ல தள்ளவும், அவனது கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. அவனை பின்தொடர்ந்து வந்த முருகன் உறைந்து நிற்க, அகோரமூர்த்தியின் மகன் ராஜா, அந்த காட்சியை காண முடியாமல் தன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

அரை நிர்வாணமாய் கிடந்த அகோரமூர்த்தியின் உயிரற்ற உடலை, கொத்து கொத்தான எறும்புகள் தின்று கொண்டிருந்தன. அவனது வாய், கை, கால்கள் இறுக்கமாய் கட்டப்பட்டிருந்தன. அவனது உடலுக்கு அருகில், ஒரு சாக்லேட் சிறப்பு டப்பா காலியாய் கிடந்தது. அதில் இருந்த சாக்லேட் சிரப், அவன் மீது கொட்டப்பட்டு இருக்க வேண்டும். அவனது உடல் கிட்டத்தட்ட ஒரு குலைந்து போயிருந்தது.

அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், சம்பந்தப்பட்ட அனைத்து துறையினரும் அகர மூர்த்தியின் வீட்டை வந்தடைந்தார்கள்.

"சார், பாடியை நம்ம போஸ்ட்மாட்டத்துக்கு கொண்டு போகணும். ஆனா இந்த எறும்பை எல்லாம் எப்படி கிளீன் பண்ண போறோம்னு தெரியல" என்றான் முருகன்.

"ஆமாம். அந்த எறும்பை கொல்ல, நம்ம எறும்பு மருந்து கூட யூஸ் பண்ண முடியாது. அது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை மொத்தமா மாத்திடும்"

"இப்போ நம்ம என்ன சார் செய்றது?"

அவர்கள் இருவரும் அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்த அதே நேரம், அங்கு வந்த மருத்துவ குழுவினர், எதைப் பற்றியும் கவலைப்படாமல், அப்படியே அந்த உடலை தூக்கி ஸ்ட்ரச்சரில் வைத்து கொண்டு சென்றனர்.

"அவங்க எக்ஸ்பர்ட்ஸ். நம்ம தான் தேவையில்லாம கவலைப்பட்டோம்" என்றான் ஓவியன்.

"உண்மைதான் சார்"

அவர்களது பார்வை, அதிர்ச்சி மாறாமல் நின்றிருந்த அகோரமூர்த்தியின் மகன் ராஜாவின் பக்கம் சென்றது. அவனை பார்க்க அவர்களுக்கு பாவமாய் இருந்தது. என்ன இருந்தாலும், அவன் அகோரமூர்த்தியின் பிள்ளை அல்லவா?

அவனது தோளை தொட்ட ஓவியன்,

"ஐ அம் ரியலி சாரி. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. உங்களுக்கு எப்படி சமாதானம் சொல்றதுன்னும் புரியல. நம்பிக்கையை கைவிட்டுடாதீங்க. நீங்க தான் உங்க அம்மாவுக்கு சப்போர்ட்டிவா இருக்கணும்"

"இந்த மாதிரியான எறும்பை எங்க வீட்ல இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்ல சார். இதை வேணுமின்னு யாரோ கொண்டு வந்து இருக்கணும்னு நினைக்கிறேன்" என்றான்.

ஓவியனும் முருகனும் ஒருவரை ஒருவர் பொருள் பொதிந்த பார்வை பார்த்துக் கொண்டார்கள்.

"உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?" என்றான் ஓவியன்.

"இது அந்த கொலைகார கும்பலா இருக்கும்னு எனக்கு தோணல சார்"

"எப்படி சொல்றீங்க?"

"அவங்க இந்த ஸ்டைல்ல கொல்லறது இல்லையே சார். தப்பு செய்றவங்களை எரிச்சு போட்டுட்டு போய்கிட்டே இருப்பாங்க. அதுவும் அவங்களை மயங்க வச்சி... ஆனா, இது வேற மாதிரி இருக்கு சார். அப்பா மேல பர்சனலான வெறுப்பியிருந்த யாரோ தான் சார் இதை செஞ்சிருக்கணும்"

"உங்களுக்கு அப்படி யாரையாவது தெரியுமா?"

"எந்த ஆதாரமும் இல்லாம யார் பேரையும் சொல்றது தப்பு சார்"

அவன் யாரையோ சந்தேகப்படுவதும், தனக்கு நிச்சயம் இல்லாத ஒரு விஷயத்தை பற்றி அவன் கூற தயங்குவதும் ஓவியனுக்கு புரிந்தது.

" நீங்க சந்தேகப்படுறதுனால மட்டும் நாங்க யாரையும் அரெஸ்ட் பண்ணிட மாட்டோம். ஆனா, நீங்க சொல்ற ஒவ்வொரு தகவலும் எங்களுக்கு உபயோகமாக இருக்கும்" என்றான் ஓவியன்.

"நான் உங்களுக்கு அப்புறமா ஃபோன் பண்றேன் சார். இப்போ நான் எங்க அம்மா கூட இருக்க விரும்பறேன்"

ஓவியன் சரி என்ற தலையசைக்க, அங்கிருந்து கிளம்பி சென்றான் ராஜா.

"நீங்க இதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க சார்?" என்றான் முருகன்.

"அவன் ரொம்ப ஸ்ட்ராங்கா யாரையோ சந்தேகப்படுறான். யார் கொலை செஞ்சி இருப்பான்னு அவனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கு"

"நம்ம அதை எப்படி சார் தெரிஞ்சுக்கிறது?"

"ஒருவேளை நமக்கு மெசேஜ் அகோர மூர்த்தி ஹெல்ப் பண்ணலாம்"

......

அரசு பொது மருத்துவமனை

முருகனுடன் பிரேத பரிசோதனை பகுதிக்குள் நுழைந்தான் ஓவியன். ஐம்பது வயது மதிக்கத்தக்க, எக்ஸிக்யூட்டிவ் கண்ணாடி அணிந்த டாக்டர் மேத்யூ அவனை பார்த்து புன்னகைத்தார்.

"இட்ஸ் எ பியூர் ஆண்ட் பைட் டெத். அவரு முழுக்க முழுக்க எறும்பு கடிச்சி தான் இறந்திருகார். அவரு ரொம்ப நரக வேதனையை அனுபவிச்சு தான் உயிரை விட்டிருக்கணும். இப்படி சாகிறது ரொம்ப பெரிய சித்திரவதை"

"அவர் எப்போ இறந்தார் டாக்டர்?"

"இன்னைக்கு காலையில"

"இன்னிக்கு காலையில தானா?"

"ஆமாம்"

"அப்படின்னா, அவரு இந்த எறும்புக் கடியை இரண்டு நாளா பொறுத்துக்கிட்டு இருந்து இருக்காரா?"

"அப்படித்தான் இருந்திருக்கணும். அவரோட வாயில நிறைய துணியை வச்சி அடைச்சதால, அவரால குரல் எழுப்ப முடியாம போயிருக்கு. அந்த எறும்புகளையும் அந்த கொலைகாரன் தான் கொண்டு வந்திருக்கணும். ஏன்னா, நீங்க அவரை கானோம்னு தேட ஆரம்பிச்ச அந்த சாயங்காலம் தான் அந்த எறும்புகள் அவரை கடிக்கத் தொடங்கி இருக்கு"

"வேற ஏதாவது காயங்கள் இருக்கா டாக்டர்?"

"லேசான சிறாய்ப்பு இருக்கு. அவ்வளவுதான். அந்த கொலைகாரன் பலசாலியா இருந்திருக்கணும். அவர் தன்னை ஆசுவாசப் படுத்திக்குறதுக்கு முன்னாடி, அவன் அவரை கட்டி போட்டிருக்கணும்"

"ம்ம்"

"கொலைகாரங்க ரொம்ப திறமைசாலியா இருக்காங்க"

"நாங்களும் சளைச்சவங்க இல்ல டாக்டர்" என்றான் முருகன்.

"அதை நான் மறுக்கல. ஆனா நீங்க அவங்களை விட ரொம்ப ரொம்ப திறமைசாலியா இருந்தா தான் அவங்களை பிடிக்க முடியும்"

"சீக்கிரமே வெடிச்சிடுவோம் டாக்டர்" என்றான் முருகன்

"ஆல் த பெஸ்ட்" என்றார் மேத்யூ.

அகோரமூர்த்தியின் பிரேத பரிசோதனை முடிவில் கையெழுப்பு விட்டு அதை ஓவியனிடம் கொடுத்தார் மேத்யூ. அதைப் பெற்றுக் கொண்டு ஓவியன் வெளியே வந்த போது, அகோரமூர்த்தியின் குடும்பம் அவருடைய உடலை பெறுவதற்காக காத்திருந்தார்கள். அவரது உடலை பார்த்தவுடன் அவரது மனைவி கதறி அழுதார். மனைவி, மனைவி தான்... கணவன் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருந்தாலும் சரி, என்று எண்ணினான் ஓவியன்.

ராஜாவிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு, அகோரமூர்த்தியின் உடலை அவர்களிடம் ஒப்படைத்தான். முருகன்.

இதற்கிடையில்,

ஃபாரன்சிக் துறையினர் ஒரு அங்குலம் விடாமல் அகோரமூர்த்தியின் வீட்டை அலசி ஆய்ந்து கொண்டு இருந்தார்கள். அவர்களது தலைமை அதிகாரியான கமலாயதாட்சி அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தார். அகோரமூர்த்தி கட்டப்பட்டு கிடந்த அந்த அறையின் மூளையில் இருந்த ஏதோ ஒன்று அவர் கவனத்தை கவர்ந்தது.

"மிஸ்டர் ஆளவந்தான்..." என்று தன் அணியில் இருந்த ஒருவரை அழைத்தார்.

"எஸ் மேடம்?"

"அங்க பாருங்க" என்று அந்த பொருளை சுட்டிக்காட்டினார்.

கையுறை அணிந்த ஆளவந்தான், அதை எடுத்து அவரிடம் காட்டினார். அதைக் கண்ட கமலாய காட்சியின் கண்கள் விரிவடைந்தது.

அது தங்கத்தால் ஆன ஒரு சிலுவை டாலர்.

......
பூட்டி இருந்த வீட்டை பார்த்து, ஓவியனும் முருகனும் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஓவியன் எதிர் வீட்டின் கதவை தட்டினான். நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் கதவை திறந்தார்.

"உங்களுக்கு என்ன வேணும் சார்?"

"நான் ஏசி ஓவியன். எட்வின் எங்க போயிருக்காரு?"

"அவர் வீட்டை வித்துட்டாரு சார்"

"வீட்டை வித்துட்டாரா? எப்போ?"

"போன மாசம் தான் சார் வித்தாரு. அவங்க வைஃப் கொல்லப்பட்டாங்க. அதுக்கு பிறகு அவர் ரொம்ப மன அழுத்தத்தோட இருந்தாரு. அவருடைய பையனையும் யாருக்கோ தத்து கொடுத்துட்டாரு"

"நீங்க என்ன சொல்றீங்க? அவர் பையனை தத்து கொடுத்துட்டாரா?"

"ஆமாம் சார்"

"யாருக்கு தத்து கொடுத்தார்னு தெரியுமா?"

"அது எனக்கு தெரியாது. சார்"

"சரி, இந்த போட்டோவை பாருங்க" என்று தன் கைபேசியில் இருந்த அந்த சிலுவை புகைப்படத்தை அவரிடம் காட்டினான் ஓவியன்.

"நீங்க இதை, எப்பயாவது எங்கேயாவது பார்த்திருக்கீங்களா?"

"இதை எட்வின் கழுத்தில் நான் பார்த்திருக்கேன் சார்"

"நிஜமா தான் சொல்றீங்களா?"

"ஆமாம் சார்"

அப்பொழுது ஓவியனுக்கு கமிஷனரிடமிருந்து அழைப்பு வந்தது.

"எஸ் சார்?" என்றான்.

"உடனே என்னுடைய ஆஃபீஸ்க்கு வாங்க"

"சரிங்க சார்"

முருகனுடன் ஆணையர் அலுவலகத்தை வந்தடைந்தான் ஓவியன்.

"உங்களுக்கு ஒரு ஃபோன் வந்தது"

"யார்கிட்ட இருந்து சார்?"

"யாருன்னு எதுவும் சொல்லல. அவருக்கு உங்க கிட்ட பேசணுமாம்"

"சரிங்க சார்"

அவர்கள் காத்திருந்தார்கள். சற்று நேரத்திற்கு பிறகு, மீண்டும் ஒரு அழைப்பு வந்தது. அதை ஏற்று பேசிய ஆணையர்,

"ஒரு நிமிஷம்" என்று ரிசிவரை மேஜையின் மீது வைத்து விட்டு, ஸ்பீக்கரை ஆன் செய்தார்.

"ஏசிபி சார்" என்றது மறுபக்கம்.

"ஏசிபி தான் பேசுறேன்" என்றான் ஓவியன்.

"நான் யார்னு கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்"

ஓவியன் ஆணையரை பார்க்க, அவர் சரி என்று தலையசைத்து அந்த அழைப்பை ட்ராக் செய்யும்படி உத்தரவிட்டார்.

"எட்வின்..." என்றான் ஓவியன்.

"நீங்க சொல்லி அடிக்கிறீங்க சார்... ஆமாம், நான் எட்வின் சாமுவேல் தான் பேசுறேன்"

அவன் யார் என்பதை வாசகர்கள் இந்நேரம் யூகித்திருப்பீர்கள். ஆம், அவன் அகோரமூர்த்தியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த, நான்சியின் கணவன் எட்வின் சாமுவேல்.

"நீ இப்ப எங்க இருக்க?"

"இந்தியாவோட ஏதோ ஒரு மூலையில..."

"எதுக்காக அகோரமூர்த்தியை கொன்ன?"

"நான் யாருன்னு உங்களால கெஸ் பண்ண முடியுதுன்னா, நான் எதுக்காக அவனை கொன்னேன்னும் நீங்க கெஸ் பண்ணி இருக்கணுமே... காரணம் உங்களுக்கு தெரியும்னு எனக்கு தெரியும்"

"இங்க பாரு, நீங்க சரண்டர் ஆனா..."

"நான் எதுக்காக சரண்டர் ஆகணும்?"

"நீ ஒரு கொலைகாரன்"

"யாரை நான் கொலை பண்ணேன்?"

"அகோர மூர்த்தியை..."

"இல்ல, நான் எறும்புகளுக்கு அவனை உணவா போட்டேன்"

"வாயை மூடு. நீ அதை செய்யும்போது அவர் உயிரோட இருந்தாரு"

"நானும் இன்னும் உயிரோட தான் சார் இருக்கேன். ஆனா, ஒவ்வொரு நிமிஷமும் செத்து செத்து பொழைச்சுக்கிட்டு இருக்கேன்"

"நீ செஞ்சது ரொம்ப தப்பு எட்வின்"

"அகோரமூர்த்தி செஞ்சது மட்டும் சரியா? என் குடும்பத்தோட சந்தோஷத்தை அவன் கொன்னான்... என் மன நிம்மதியை கொன்னான்... என் தூக்கத்தை கொன்னான்... என்னுடைய எல்லாத்தையும் கொன்னவன் அவன். என்னோட வைஃப் சாகறதுக்கு அவன் தான் காரணம். இதுக்கெல்லாம் என்ன சார் தண்டனை? உங்க சட்டத்துல இதுக்கெல்லாம் தண்டனை இருக்கா?"

அமைதியாய் நின்றான் ஓவியன்.

"ஏன் சார் அமைதியாயிட்டீங்க? உங்களால பதில் சொல்ல முடியாது. ஏன்னா, உங்க பாழா போன சட்டத்துல இதுக்கெல்லாம் தண்டனை இல்ல"

"நீ அவனுக்கு கொடுத்தது ரொம்ப கொடுமையான தண்டனை"

"அவன் வெறும் ரெண்டு நாள் தானே சார் அவஸ்தை பட்டான்? ஆனா, என் வைஃப் எனக்கு பண்ண துரோகத்தை நினைச்சி நான் வாழ்நாள் முழுக்க அவஸ்தைப்பட போறேன். அதுக்கு உங்க பதில் என்ன? நான் அவனை ஒரு தடவை தான் சார் கொன்னேன். ஆனா அவன் என்னோட உணர்வுகளை கொன்னவன். அவனால நான் தினம் தினம் செத்துக்கிட்டு இருக்கேன். அவனுக்கு இன்னும் கூட அதிகமான தண்டனை கிடைச்சிருக்கணும். அவனை உயிரோட விட்டா, இன்னும் கொஞ்ச நாள்ல இன்னொரு பெண்ணை தேடுவான் சார். அவனுக்கெல்லாம் இதயமே கிடையாது. என் பொண்டாட்டியை தொட்டவனை சும்மா விட நான் ஒன்னும் கையாலாகாதவன் இல்ல சார்" என்று உறுமினான் எட்வின்.

"நீ எங்க போக போற?"

"இந்தியாவில இருக்கிற எல்லா சர்ச்சையும் போய் பார்க்க போறேன்"

"பாவமன்னிப்பு கேக்கவா?"

"நான் எதுக்கு சார் பாவமன்னிப்பு கேட்கணும்? நான் என்ன பாவம் பண்ணேன்? ஒரு புருஷனோட இடத்துல இருந்து யோசிச்சு பாருங்க. நான் செஞ்சது சரின்னு உங்களுக்கு தோணும்"

அழைப்பை துண்டித்தான் எட்வின் சாமுவேல்.

கண்ட்ரோல் ரூமில் இருந்து உடனடியாய் ஆணையருக்கு அழைப்பு வந்தது அதை ஏற்ற ஆணையர்,

"சொல்லுங்க" என்றார்.

"அந்த கால் வந்தது, கேரளா,கோழிக்கோட்டில் இருந்து, சார்"

"கோழிக்கோடா?"

"ஆமாம் சார். அதோட, அந்த மொபைல் சிக்னல் கட்டாயிடுச்சு சார்"

"அதை ட்ராக் பண்ணிக்கிட்டே இருங்க. ஸ்விட்ச் ஆன் ஆகுதான்னு பாருங்க"

"சரிங்க சார்"

ஓவியன் முருகனை பார்க்க, அவன் ஒரு நக்கலான புன்னகை சிந்தினான். இவ்வளவு தைரியத்துடன் ஆணையருக்கே ஃபோன் செய்து ஒருவன் பேசுகிறான் என்றால், அவன் தனது கைபேசியை மறுபடியும் ஆன் செய்யவா போகிறான்?

"இந்த விஷயம் ரொம்ப சிவியர் ஆயிகிட்டே போகுது ஓவியன்" என்றார் ஆணையர்.

"ஆமாம் சார்"

"கள்ளத்தொடர்பு விஷயம் இவ்வளவு மோசமா நம்ம சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்னு நான் கனவுல கூட நினைச்சு பார்த்ததில்ல"

"நமக்கு நடக்காத வரைக்கும் எல்லாமே வெறும் செய்திதானே சார்" என்றான் முருகன்.

"என்னை இந்த கேஸ்ல இருந்து ரிலீவ் பண்ணிடுங்க சார்" என்றான் ஓவியன்.

"ஏன் ஓவியன்?" என்றார் ஆணையர் அதிர்ச்சியாய்.

"என்னோட பெஸ்ட்டை இந்த கேஸ்ல கொடுக்க முடியும்னு எனக்கு தோணல சார். இந்த கேசை எடுத்ததிலிருந்து, நான் சட்டத்துக்கும், மனசாட்சிக்கும் நடுவுல போராடிக்கிட்டிருக்கேன். என்னை விட்டுடுங்க சார்"

"ஆனா நீங்க உங்க பெஸ்ட்டை தானே கொடுத்து இருக்கீங்க?"

"எனக்கு திருப்தி இல்ல சார். என்னால என்னோட எமோஷன்சை கட்டுப்படுத்த முடியல"

"ரெண்டு நாள் டைம் எடுத்து, யோசிச்சு சொல்லுங்க"

ஓவியனும் முருகனும் ஆணையர் அறையில் இருந்து வெளியே வந்தார்கள்.

"எதுக்காக சார் இப்படி ஒரு முடிவு எடுத்தீங்க?" என்றான் முருகன்.

"நான் சொன்னது உண்மை தான் முருகன். எட்வின் கொலைகாரனாவே இருந்தாலும், அவன் பண்ணது தப்புன்னு எனக்கு தோணல. அவன் என்னை கேட்ட கேள்வி உண்மை தான். ஒரு புருஷனா, என் பொண்டாட்டியை யாராவது தொட நினைச்சாலே அவனை நான் கொன்னுடுவேன், கள்ளதொடர்பை பத்தி நான் யோசிக்கக்கூட விரும்பல. அகோரமூர்த்தி, நான்சி கிட்ட நடந்துகிட்ட விதம் தான், இன்னைக்கு எட்வினை இதயம் இல்லாதவனா மாத்தியிருக்கு. அவனுடைய இதயத்தை கொன்னது அகோரமூர்த்தி தான். அகோரமூர்த்தி எட்வினை விட ரொம்ப குருரமானவன். இந்த தண்டனை அவனுக்கு தேவை தான்"

"அடுத்து என்ன சார் செய்ய போறீங்க?"

"கோழிக்கோட்டுக்கு போக போறேன்"

"நீங்க இந்த கேஸ்ல இருந்து ரிலீவ் ஆகறதா சொன்னீங்களே சார்?"

"ஆமாம், ரிலிவாகுறதுக்கு முன்னாடி, எட்வின் என்ன செய்றான்னு நிச்சயமா தெரிஞ்சுக்கிட்டு ரிலீவாக விரும்புறேன்"

"ஆனா எட்வின் அங்க இருப்பான்னு எனக்கு தோணல சார்"

"நிச்சயமா இருக்க மாட்டான்"

"அவன் அங்க இல்லனா, அவன் என்ன செய்றன்னு எப்படி சார் தெரிஞ்சுக்குவீங்க?"

"எவ்வளவு திறமையான குற்றவாளியா இருந்தாலும், அவன் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுட்டு தான் போவான். இப்போ, எட்வினும் விட்டுட்டு தான் போயிருக்கான்" என்று புன்முறுவல் பூத்தான் ஓவியன்.

தொடரும்...

அடுத்த பகுதியுடன் *ரகசியமாய்...!* முடிவடைகிறது.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top