32 துப்பு...
32 துப்பு
ஆஸ்பயர் பில்டர்ஸ் அலுவலகத்தை வந்து அடைந்தார்கள் ஓவியனும், முருகனும். இங்கும் அங்கும் தன் தங்கள் கண்களை ஓட விட்டார்கள். அங்கிருந்த சிசிடிவி கேமரா அவர்கள் கண்ணில் பட்டது. அந்த அலுவலகத்தின் துணை மேலாளரிடம் சென்றார்கள். அவர்களைப் பார்த்தவுடன் துணை மேலாளர் பதட்டமானார்.
"ஐ அம்..." என்ற ஓவியனது பேச்சை வெட்டி,
"ஏசிபி ஓவியன்... எனக்கு தெரியும் சார். நான்சியை பத்தி விசாரிக்க இங்க வந்தப்போ நான் உங்களை பாத்திருக்கேன்"
"இப்போ நாங்க இங்க வந்திருக்கிறது அகோரமூர்த்தியை பத்தி விசாரிக்க" என்றான் முருகன்.
"அவருக்கு இப்படி ஒரு பக்கம் இருக்கும்னு என்னால நம்பவே முடியல சார். அவரு ஆஃபீஸ்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பாரு"
"நான்சி ஒருத்தியை தவிர... இல்லையா?" என்றான் முருகன்.
"அவங்களுக்குள்ள ஒரு நல்ல நட்பு இருக்கிறதா நான் நினைச்சேன். ஆனா இப்படி ஒரு விஷயத்தை நான் யோசிக்கல சார்"
"அகோரமூர்த்தி உங்களுக்கு ஃபோன் பண்ணாரா?"
"ஆமாம் சார், ஹாஸ்பிடல்ல இருந்து ஃபோன் பண்ணியிருந்தாரு. கொஞ்ச நாளைக்கு அவரால ஆஃபீசுக்கு வர முடியாதுன்னு, என்னை மேனேஜ் பண்ணிக்க சொன்னாரு"
"இப்போ அவர் எங்க இருக்காருன்னு உங்களுக்கு தெரியுமா?"
"வேற எங்க சார்? அவரோட வைஃபை சமாதானப்படுத்த முயற்சி பண்ணிக்கிட்டு இருப்பாரு"
"சமாதானப்படுத்தவா?"
"ஆமாம் சார். ஏற்கனவே, அவருக்கு இருந்த மரியாதை போயிடுச்சு. அதை முழுசா அவரு இழக்க விரும்பமாட்டாரு. அதை காப்பாத்திக்க அவருக்கு இருக்கிற ஒரே வழி, அவங்க வைஃபை சமாதானப்படுத்துறது தான்"
"ஆனா இப்ப அவங்க அவர்கூட இல்ல" என்றான் ஓவியன்.
"என்ன சார் சொல்றீங்க?" என்றார் அதிர்ச்சியாக.
"அவங்க அவரை விட்டு போயிட்டாங்க."
"அப்படின்னா அவங்க அவரை டைவர்ஸ் பண்ண போறாங்கன்னு சொல்றீங்களா?"
"அத பத்தி எனக்கு தெரியாது. இப்போதைக்கு அவங்க அவர் கூட இல்ல. அவங்க வீட்டை விட்டு போயிட்டாங்க"
"அட கடவுளே, இப்போ கோர்மூர்த்தி சார் எப்படி சார் இருக்காரு?"
"எனக்கும் அவர் எப்படி இருக்காருன்னு தெரியல. அவர் வீட்லயும் இல்ல"
"அப்போ அவங்க வைஃபை பார்க்க போயிருப்பாரு"
"இல்ல, அங்கயும் போகல"
"இப்போ நான் என்ன சார் செய்யணும்?"
"இந்த ஆஃபீஸோட சிசிடிவி கேமரா ஃபுட்டேஜை செக் பண்ணணும்"
"கண்டிப்பா சார்"
இன்டர்காமை எடுத்து, யாரோ ஒருவரை தன் அறைக்கு வருமாறு அழைத்தார் துணை மேலாளர். டிப் டாப்பாய் உடை அணிந்த நடுத்தர வயது மனிதன் அவர் அறைக்கு வந்தான்.
"சூர்யா, சாருக்கு சிசிடிவி கேமரா ஃபுட்டேஜை போட்டு காட்டுங்க"
"ஓகே சார்" என்றான் சூர்யா.
கம்ப்யூட்டரின் முன் அமர்ந்த சூர்யா,
"எந்த ஃபுட்டேஜை
சார் நீங்க பார்க்கணும்?" என்றான்.
"அகோரமூர்த்தி கடைசியா ஆபீசுக்கு வந்த அன்னைக்கு, காரிடார்ல இருக்கிற கேமராவை போட்டு காட்டுங்க."
"சரிங்க சார்" என்று அதை ஓட்ட துவங்கினான் சூர்யா.
"காலையில அகோரமூர்த்தி ஆஃபீசுக்கு வந்த டைமை ப்ளே பண்ணுங்க"
அந்த வீடியோவை ரீவைண்ட் செய்தான் சூர்யா. அலுவலகத்துள் நுழைந்த அகோரமூர்த்தி, டி-ஷர்ட்டுடன் தலையை சேர்த்து மறைக்கும் ஹூடிஸ் அனிந்த ஒரு மனிதனுடன் மோதிக்கொண்டான்.
"ஸ்டாப்" என்றான் ஓவியன்.
சூர்யா அதை பாஸ் செய்தான்.
"அந்த ஃபுட்டேஜை ஜூம் பண்ணுங்க"
சூர்யா அதை ஜூம் செய்ய, அகோரமூர்த்தியுடன் மோதிய அந்த மனிதன், அகோரமூர்த்தியின் பாக்கெட்டில் இருந்து அவனது கைபேசியை எடுப்பதை கண்டார்கள். ஒரு நொடிக்குள் அவன் அந்த கைபேசியை தன் ஹூடீஸின் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.
"சார், அவன் அவரோட மொபைலை திருடிட்டான் சார்" என்றார் துணை மேலாளர்.
அந்த மனிதன், கேமராவிற்கு தன் முதுகை காட்டியபடி நின்றிருந்தான். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த மனிதனைப் பார்த்து அகோரமூர்த்தி புன்னகை புரிந்தது தான். அந்த மனிதனிடம் முப்பது வினாடிகளுக்கு மேல் பேசிக் கொண்டிருந்து விட்டு, அவனிடம் கைகுலுக்கி விட்டு, அங்கிருந்து சென்றான் அகோரமூர்த்தி. ஓவியனும் முருகனும் பொருள் பொதிந்த பார்வை பார்த்துக் கொண்டார்கள். அப்படி என்றால், அந்த மனிதன் அகோரமூர்த்திக்கு நன்கு பரீடச்சையமானவன். அவர்களுடைய சகஜமான பேச்சு அதை தெள்ளத் தெளிவாக காட்டியது.
"அன்னைக்கு அகோர மூர்த்தியை தேடி வேற யாராவது ஆஃபீசுக்கு வந்தாங்களா?" என்றான் ஓவியன்.
"யாரும் வரல சார்"
"எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்றீங்க?"
"யாராவது ஆஃபிஸ்க்கு வந்தா, விசிட்டர்ஸ் ரிஜிஸ்டர்ல என்ட்ரி போட்டு, ரிசெப்ஷனிஸ்ட் அவங்க கிட்ட கையெழுத்தும் வாங்குவாங்க சார். தன்னை பார்க்க யாராவது வந்தாங்களான்னு அகோரமூர்த்தி சார் ரிசப்ஷனிஸட் கிட்ட விசாரிச்சாரு. அவங்க இல்லைன்னு சொல்லும் போது நான் அங்க தான் சார் இருந்தேன்"
"ஓஹோ... சரி அந்த ஃபுட்டேஜை மறுபடியும் ரீவைண்ட் பண்ணுங்க"
அதை மறுபடி ரீவைண்ட் செய்தான் சூர்யா.
"மெதுவா..."
அதை அவன் மெல்ல மெல்ல ஜூம் செய்த போது, அந்த மனிதனை கண்டவுடன் அகோரமூர்த்தியின் முகத்தில் முதலில் ஒரு அதிர்ச்சி வெட்டியதை கவனித்தார்கள். அதற்குப் பிறகு தான், அவன் தன்னை சமாளித்துக் கொண்டு அந்த ஹூடீஸ் அணிந்த மனிதனுடன் பேச துவங்கினான்.
"தேங்க்யூ ஃபார் யுவர் கோஆப்பரேஷன்" என்றான் ஓவியன்
"இட்ஸ் மை ப்ளஷர் சார்" என்றார் துணை மேலாளர்.
"இது என்னோட நம்பர். அகோரமூர்த்தி உங்களுக்கு ஃபோன் பண்ணா, எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க"
"நிச்சயமா செய்றேன் சார்"
ஓவியனும் முருகனும் ஜீப்பை வந்து அடையும் வரை ஒன்றும் பேசவில்லை.
"நீங்க என்ன நினைக்கிறீங்க சார்?" என்றான் முருகன் ஜீப்பை ஸ்டார்ட் செய்த படி.
"அகோடமூர்த்தியோட வீட்டு செக்யூரிட்டிக்கு கால் பண்ணி, அவர் வீட்டுக்கு வந்துட்டாரான்னு கேளுங்க"
"சரிங்க சார்."
தன் கைபேசியை எடுத்து அகோரமூர்த்தியின் வீட்டு காவலாளிக்கு ஃபோன் செய்தான் முருகன்.
"குட்மார்னிங் சார்" என்றான் அவன்.
"அகோரமூர்த்தி வீட்டுக்கு வந்துட்டாரா?"
"இன்னும் வரல சார்"
"அவரு கார்ல போனாரா? இல்ல பைக்ல போனாரா?"
"கார்ல தான் சார் போயிருக்காரு. நான் வீட்டுக்கு திரும்பி வந்த போது ஷெட்ல கார் இல்ல சார்" என்றான் அந்த கவலாளி
"சரி அவரோட கார் நம்பரை எனக்கு மெசேஜ் பண்ணுங்க"
"உடனே பண்றேன் சார்."
அழைப்பை துண்டித்த அடுத்த நிமிடம், அவனது கைபேசிக்கு, அகோரமூர்த்தியின் வீட்டு காவலாளியிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.
கண்ட்ரோல் ரூமுக்கு ஃபோன் செய்த ஓவியன்,
"ஏசிபி ஓவியன் பேசுறேன். நான் சொல்ற கார் நம்பரை குறிச்சுக்கோங்க. இதை எல்லா செக்போஸ்ட் அண்ட் டோலுக்கும் அனுப்பி வையுங்க. இந்த கார் பாஸ் பண்ணுதான்னு கவனிக்க சொல்லுங்க"
அந்த எண்ணை குறித்துக் கொண்ட போலீஸ் கான்ஸ்டபிள் துணுக்குற்றார். சற்று நேரத்திற்கு முன்பு தான், சென்னையின் புறநகர் பகுதியில் ஒரு கார் ஆளில்லாமல் நிற்பதாய் கண்ட்ரோல் ரூமுக்கு ஒரு செய்தி வந்திருந்தது.
"சார் ஒரு நிமிஷம் சார்" என்றார் அந்த கான்ஸ்டபிள்.
"சொல்லுங்க"
"சார், இந்த கார் இருக்கிற இடம் ஏற்கனவே தெரிஞ்சிருச்சு சார்"
"எப்போ?"
"அரை மணி நேரத்துக்கு முன்னாடி சார்"
"யார் அதைப்பத்தி சொன்னது?"
"அது தெரியல சார். யாரோ அந்த காரை பத்தி சொன்னாங்க"
"என்ன சொன்னாங்க?"
"அந்த கார் கிட்டத்தட்ட ரெண்டு நாளா அங்க நிக்கிறாதா சொன்னாங்க சார்"
"முந்தா நேத்து ராத்திரியில் இருந்தா? "
"ஆமாம் சார்"
"வேற ஏதாவது சொன்னாங்களா?"
"இல்ல சார்"
"ஓகே ஃபைன். நான் ஸ்பாட்டுக்கு போறேன்"
அழைப்பை துண்டித்து விட்டு, முருகனைப் பார்த்து,
"பொன்னேரி பக்கம் வண்டியை திருப்புங்க. அகோரமூர்த்தியோட கார் அங்க தான் நிக்குது"
காரை திருப்பிய படி,
"கார் மட்டும் தானா? இல்ல... "
"கார் மட்டும் தான்"
"இந்த ஆள் எங்க சார் போயிருப்பான்?
பதில் கூறாமல் எதையோ தீவிரமா யோசித்துக் கொண்டிருந்தான் ஓவியன்.
"யாராவது அவனை கடத்தியிருப்பாங்கன்னு நினைக்கிறீங்களா சார்?"
"எனக்கு ஒரு ஐடியாவும் இல்ல"
சென்னையின் வாகன நெரிசலை மீறி அந்த இடத்தை சென்று அடைந்தார்கள் ஓவியனும் முருகனும். அங்கு நின்றிருந்த கான்ஸ்டபிள் அவர்களை பார்த்தவுடன் ஒரு சல்யூட் வைத்தார்.
"செக் பண்ணீங்களா?" என்றான் ஓவியன்.
"பன்னேன் சார். கார்ல பெட்ரோல் நிறையவே இருக்கு. எஞ்சினும் நல்ல கண்டிஷன்ல இருக்கு. கார் ஸ்டார்ட் ஆகுது"
"ஸ்டார்ட் ஆகுதா?"
"ஆமாம் சார். காரோட டேஷ் போர்டுல சாவி இருந்துச்சு சார்"
"ஹும்..."
ஓவியனும் முருகனும் அந்த காரை ஒரு அங்குலம் விடாமல் தேடிப் பார்த்தார்கள். ஆனால் அதில் ஒரு துண்டு சீட்டு கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஒருவரை ஒருவர் ஏமாற்றத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.
மிகவும் கலைப்பாய் வீடு திரும்பினான் ஓவியன். அவன் வீட்டிற்கு வந்த போது, தூரிகை எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.
"என்ன தேடிக்கிட்டு இருக்க?" என்றான்
"மேகாவைத்தான்"
"என்னது மேகாவை காணோமா? எங்க போனா அவ?" என்றான் பதட்டத்துடன்.
"இல்ல, நாங்க ரெண்டு பேரும் கண்ணாமூச்சி ஆடிட்டு இருக்கோம்" என அவள் கூறியவுடன் நிம்மதி பெருமூச்சு விட்டான் ஓவியன்.
எல்லா அறையிலும் தேடிப் பார்த்துவிட்டு, மேகா கிடைக்காமல் போகவே, முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு அமர்ந்து கொண்டாள் தூரிகை.
"மேகா, நான் தோத்துட்டேன்னு ஒத்துக்குறேன். வெளியில வா" என்றாள்.
கலகலவென சிரித்தபடி தன் அறையில் இருந்து வெளியே வந்தாள் மேகா.
"அட கடவுளே, நீ உன்னோட ரூம்லயா ஒளிஞ்சிகிட்டு இருந்த?" என்றாள் தூரிகை.
"ஆமாம். நீ எல்லா ரூம்லயும் தேடுன. என்னோட ரூம்ல மட்டும் தேடாம விட்டுட்ட. நான் அங்கதான் பெட்டுக்கடியில ஒளிஞ்சிருந்தேன்"
"நீ இவ்வளவு ஈஸியான இடத்துல ஒளிஞ்சிக்குவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. அதனால தான் மத்த இடத்துல தேடினேன்" என்றாள் தூரிகை.
அவளை கிண்டல் செய்வது போல் மேலும் சிரித்தாள் மேகா. தன் தலையை அசைத்தபடி சிரித்துக்கொண்டு குளியலறையை நோக்கி நடந்தான் ஓவியன்.
"அப்பா நீங்களும் எங்க கூட வந்து விளையாடுங்க"
"யா, ஷ்யூர்... குளிச்சிட்டு வரேன்"
"சீக்கிரமா வாங்கப்பா..."
"ஃப்யூ மினிட்ஸ்..."
ஷவரை திறந்துவிட்டு, தண்ணீருக்கு அடியில் வழக்கை பற்றி சிந்தித்தபடி கண்களை மூடி நின்றான் ஓவியன். அவன் மனதில் ஏதோ பொறி தட்ட, சட்டென்று கண்ணை திறந்தான். தூரிகையும், மேகாவும் பேசிக்கொண்டதை எண்ணிப் பார்த்தான். எப்படி அவன் இந்த ஒரு முக்கியமான விஷயத்தை தவறவிட்டான்? அகோரமூர்த்தியின் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று ஏன் அவனுக்கு தோன்றவில்லை? அங்கு அவனுக்கு தேவையான தடயம் ஏதேனும் கிடைக்கலாமே...! ஒருவேளை, அவன் தொழில் முறை கொலைகாரனாக இல்லாவிட்டால், நிச்சயம் ஏதாவது தடயத்தை விட்டுச் சென்று இருப்பான்... குறைந்தபட்சம் கைரேகையாவது...
துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு, வெளியே ஓடினான். தூரிகையும், மேகாவும் அவனை ஆச்சரியமாய் பார்த்தார்கள்.
"அதுக்குள்ளயா குளிச்சிட்டிங்க?"
"இல்ல இல்ல நான் அவசரமா போகணும்"
சரசர வென உடைமாற்றிக்கொண்டு, முருகனுக்கு ஃபோன் செய்த படி வீட்டை விட்டு வெளியேறினான் ஓவியன். அவனது அழைப்பை ஏற்ற முருகன்,
"சொல்லுங்க சார்" என்றான்.
"அகோரமூர்த்தி வீட்டுக்கு வாங்க"
"அகோர மூர்த்தி வீட்டுக்கா?"
"ஆமாம். நான் கிளம்பிட்டேன்" தன் பைக்கை உதைத்த படி கூறினான்.
"நானும் கிளம்பிட்டேன் சார்" என்று தன் பைக்கில் ஏறி அமர்ந்தான் முருகன்.
அகோரமூர்த்தியின் வீட்டை ஓவியன் வந்தடைந்த போது, காவலாளியுடன் அவனுக்காக காத்திருந்தான் முருகன்.
"எனி க்ளூ சார்?"
"அகோடமூர்த்தி வீட்ல இருந்து எப்படி கிளம்பி போனாருன்னு யாராவது பாத்தாங்களான்னு விசாரிச்சீங்களா?"
"இல்ல சார். நான் மேடமையும் பிள்ளைகளையும் அவங்க அம்மா வீட்டுல விட்டுட்டு வீட்டுக்கு திரும்பி வரும் போது இருட்டிப் போயிருந்தது. அதனால என்னால யாரையும் விசாரிக்க முடியல. வீடு வெளிப்பக்கமா பூட்டி இருந்தது. கார் ஷெட்ல கார் இல்ல. சார் தான் காரை எடுத்துக்கிட்டு போயிருக்கணும்னு நினைச்சேன்"
"உங்ககிட்ட வீட்டோட இன்னொரு சாவி இருக்கா?"
"அது வீட்டுக்குள்ள தான் சார் இருக்கணும். இல்லன்னா மேடம் கிட்ட இருக்கணும்"
"அகோரமூர்த்தியோட பையன் நம்பரை குடுங்க"
"இதோ தரேன் சார்"
ராஜாவின் கைபேசி எண்ணை ஓவியனிடம் கொடுத்தார் காவலாளி. ராஜாவிற்கு ஃபோன் செய்த ஓவியன்,
"ஏசி ஓவியன் பேசுறேன்" என்றான்.
"சொல்லுங்க சார்"
"உங்களால கொஞ்சம் உங்க வீடு வரைக்கும் வர முடியுமா?"
"எதுக்காக சார்? ப்ளீஸ், அந்த ஆள் சொல்றதை கேட்காதீங்க. நான் அவரை நம்ப தயாரா இல்ல" என்றான்.
"நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க" என்றான் ஓவியன்.
"சாரி சார். சொல்லுங்க"
"உங்க அப்பாவை காணோம்"
"அந்த ஆள், எங்க, யார் கூட இருக்கிறாரோ..." என்று அவன் முணுமுணுத்தது ஓவியனின் காதில் விழுந்தது.
"நாங்க உங்க வீட்ல ஒரு என்கொயரிக்காக வந்திருக்கோம். நான் உங்க அம்மாவை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைக்கிறேன். அதனால தான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன்"
"சரிங்க சார். இன்னும் அரை மணி நேரத்துல நான் அங்க இருப்பேன்"
"தேங்க்யூ"
அழைப்பை துண்டித்து விட்டு, வீட்டை சுற்றி மெல்ல நடக்கத் தொடங்கினான் ஓவியன், அந்த வீட்டை கவனமாய் ஆராய்ந்த படி. அந்த வீட்டின் பின்புற கதவையும், ஜன்னல் களையும் சோதித்துப் பார்த்தான். ஒரு விசித்திரமான விஷயம் அவன் கண்ணில் பட்ட போது, அவனது நடையின் வேகம் குறைந்தது. பெரிய அளவிலான சிவப்பு எறும்புகள், ஜன்னல் வழியாக அணிவகுத்து வெளியே வந்து கொண்டிருந்தன. அந்த அறையின் ஜன்னலை அவன் திறக்க முயன்ற போது, அது உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது.
"செக்யூரிட்டி..." காவலாளியை அழைத்தான் ஓவியன். அவர் அவனை நோக்கி ஓடி வந்தார்.
"இது கிச்சனா?" என்றான்.
"இல்ல சார். கிச்சன் முன்பக்கம் இருக்கு"
"அப்படின்னா இது என்ன ரூம்?"
"இது ஸ்டடி ரூம் சார்"
"ஸ்டடி ரூமா? இது ஸ்டடி ரூமா இருந்ததா, எதுக்காக இந்த ரூம்லயிருந்து எறும்புங்க வருது?"
"படிக்கும் போது எதையாவது சாப்பிட்டுட்டு அப்படியே போட்டிருப்பாங்க சார்" என்றான் முருகன்.
"அதுக்கு வாய்ப்பில்ல"
"எப்படி சார் சொல்றீங்க?"
"ரெண்டு நாளா வீட்ல யாருமே இல்ல. அதுக்கு முன்னாடி, எதையாவது சாப்பிட்டுக்கிட்டே புக் படிக்கிற மனநிலையில அவங்க இல்ல. அவங்க வீட்ல ரொம்ப பெரிய பிரச்சனை ஓடிக்கிட்டு இருந்தது இல்லையா?"
"நீங்க சொல்றது சரி தான் சார். அப்படின்னா, இந்த எறும்புங்க இந்த கேஸ்ல ரொம்ப பெரிய ரோல் ப்ளே பண்ணும்னு நினைக்கிறீங்களா?"
"மெயின் ரோல்... ராஜா வரட்டும்... அதுவரைக்கும் காத்திருப்போம்" என்றான் ஓவியன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top