31 எங்கு போனான்?
31 எங்கு போனான்?
தன் அக்காவின் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்ல, தூரிகையுடனும், மேகாவுடனும் மருத்துவமனைக்கு சென்றான் ஓவியன். குழந்தையை தூரிகையின் கையில் கொண்டு வந்து கொடுத்தாள் ஒரு செவிலி. அவனை காண்பதற்காக எம்பி குதித்த வண்ணம் இருந்தாள் மேகா. ஒரு நாற்காலியில் அமர்ந்து, அவளை குழந்தையை பார்க்கும் படி செய்தாள் தூரிகை. ஏராளமான ஆசையுடன் குழந்தையின் கண்ணத்தை மெல்ல வருடி கொடுத்தாள் மேகா.
"இவன் எவ்வளவு குட்டியா இருக்கான்ல?" என்றாள் கண்ணில் மின்னலடிக்க.
"இப்போ தானே பொறந்திருக்கான்...! அதனால குட்டியா தான் இருப்பான்" என்றாள் தூரிகை.
"நம்ம இவனை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா?" என மேகா கேட்க, குழந்தையை தன்னிடம் கொடுத்த செவிலியை ஏறிட்டாள் தூரிகை.
"நீங்க தாராளமா அவனை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போகலாம். ஆனா, நீங்க அவனை ரொம்ப ஜாக்கிரதையா பாத்துக்கணும். ஏன்னா, அவனுக்கு ரொம்ப ஈஸியா இன்ஃபெக்ஷன் ஆகும்"
"அதுக்கு நாங்க என்ன பண்ணனும்?" என்றாள் மேகா.
"கையை கழுவாம அவனை தொடக்கூடாது. அடிக்கடி முத்தம் கொடுக்கக் கூடாது."
"நான் அவனுக்கு முத்தம் கொடுக்க கூடாதா?" என்றாள் மேகா சோகமாய்.
"கொடுக்கலாம்... குளிச்சு முடிச்சு சுத்தமா இருக்கும் போது தான் கொடுக்கணும். அவன் பக்கத்துல போறதுக்கு முன்னாடி, சுத்தமா கை காலை எல்லாம் கழுவிட்டு போகணும்"
"அப்புறம்?"
"டெய்லி வீட்டை துடைக்கணும். அவன் படுத்திருக்கிற பெட்ஷீட்டை தினமும் மாத்தணும்"
"ஓகே " பெரிய மனுஷியை போல் அனைத்தையும் கேட்டுக் கொண்டாள் மேகா.
அப்பொழுது அங்கு வந்தார் மருத்துவர்.
"குட் மார்னிங் டாக்டர்" என்றான் ஓவியன்
"குட்மார்னிங் ஏ சி பி சார்"
"நாங்க இவனை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போகலாமா?"
"தாராளமா கூட்டிக்கிட்டு போகலாம். ஃபாலோ பண்ண வேண்டிய இன்ஸ்டிரக்ஷன்சை கேட்டு தெரிஞ்சுக்கோங்க. அதை தவறாமல் ஃபாலோ பண்ணுங்க"
"ஷ்யூர் டாக்டர்"
"அக்கா எப்படி இருக்காங்க டாக்டர்?" என்றாள் தூரிகை.
"எந்த மாற்றமும் இல்ல. அப்படியே தான் இருக்காங்க" என்றார் மருத்துவர்.
"நாங்க கிளம்புறோம் டாக்டர்" என்றான் ஓவியன்.
"போயிட்டு வாங்க. அடுத்த வாரம் அவனை செக்கப்புக்கு கொண்டு வாங்க" என்றார்.
"சரிங்க டாக்டர்"
மருத்துவமனையின் மருந்தகத்திலிருந்து குழந்தைக்கு தேவையான சொட்டு மருந்துகளையும், பால் பவுடரையும் வாங்கிக்கொண்டு அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். ஓவியன் தனது இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்ய, குழந்தையை வைத்துக்கொண்டு பின்னால் அமர்ந்து கொண்டாள் தூரிகை. வழக்கம் போல் பெட்ரோல் டேங்க்கின் மீது அமர்ந்து கொண்டாள் மேகா.
"போற போக்கை பார்த்தா, நம்ம கார் வாங்க வேண்டி இருக்கும் போல இருக்கு. நம்ம குடும்பத்துக்கு பைக் பத்தாது" என்று சிரித்தான் ஓவியன்.
"ஆமாம். நம்ம குடும்பம் பெருசாயிடுச்சு" தூரிகையும் சிரித்தாள்.
வீட்டிற்கு வந்ததும் குழந்தையை கட்டிலின் மீது கிடத்திவிட்டு மேகாவை தேட, அவள் அங்கு இல்லை. அவளைத் தேடிக் கொண்டு வெளியே வந்தாள் தூரிகை.
"மேகா எங்க?" என்றாள்.
"அவ உன் பின்னால தான வந்தா?" என்றான் ஓவியன்.
"அவ ரூம்ல இல்லையே"
"கதவும் சாத்தி தானே இருக்கு? அப்படின்னு அவ இங்க தான் இருக்கணும்" என்று இருவரும் சேர்ந்து அவளை தேட துவங்கினார்கள்.
மீண்டும் மேகாவின் அறைக்கு வந்த தூரிகை, குளியலறையில் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டு, கதவை தட்டினாள்.
"மேகா..."
"நான் குளிச்சுகிட்டு இருக்கேன்"
"குளிக்கிறியா...?" இந்த நேரத்துலயா? ஏன்?"
"கொஞ்சம் இருங்க நான் வெளியில வரேன்"
ஒரு துண்டை சுற்றிக்கொண்டு வெளியே வந்தாள் மேகா.
"யார் உன்னை குளிக்க சொன்னது?"
"நர்ஸ் ஆன்ட்டி தான்... அவங்க தானே சொன்னாங்க, நம்ம எல்லாரும் சுத்தமா இருக்கணும்னு?" என அவள் கூற, தூரிகையை பார்த்து புன்னகை புரிந்த ஓவியன்,
"நம்ம இவகிட்ட இருந்து கத்துக்கணும்" என்றான்.
"ஆமாம், இவ நம்மளை விட ரொம்ப ஃபாஸ்ட்" என்று சிரித்தாள் துரிகை
தூரிகையின் கையைப் பிடித்து இழுத்துச் சென்ற மேகா,
"அம்மா நீயும் சீக்கிரம் போய் குளி. முகில் எழுந்தா நான் உன்கிட்ட சொல்றேன்" என்றாள்.
சரி என்று தலையசைத்து விட்டு குளிக்க சென்றாள் தூரிகை.
"அப்பா நீங்களும் உங்க ரூம்ல போய் குளிங்க" என்றாள் ஓவியனிடம்.
"போறேன் போறேன்" என்று தன் அறையை நோக்கி நடந்தான் ஓவியன்.
முகிலின் பக்கத்தில் அமர்ந்து கொண்ட மேகா, மெல்ல மெல்ல அவன் கை, கால், கண், மூக்கு என்று தொட்டு பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். தான் முதன்முதலாய் காணும் குழந்தையின் மீது இருந்த ஆவல் அவள் கண்களில் நன்றாகவே பிரதிபலித்தது.
குளித்து முடித்து விட்டு வந்த ஓவியன், அந்த கண்கொள்ளாக் காட்சியை கண்டு ஆனந்தித்தான். அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்ட அவன்,
"என்ன சொல்றான் உன் தம்பி?" என்றான்.
தன் உதட்டின் மீது விரலை வைத்து,
"ஷ்ஷ்ஷ்... மெதுவா பேசுங்க. அவன் தூங்குகிறான்ல?" என்றாள் ரகசியமாக.
"அவனை உன் மடியில தூக்கி வச்சிக்க ஆசையா இருக்கா?" என்றான் மெல்லிய குரலில்.
"ரொம்ப ஆசையா இருக்கு"
"சரி இரு, நான் அவனை உன் மடியில தூக்கி வைக்கிறேன்" என்று அவனை தொடச் சென்ற ஓவியனை தடுத்த மேகா,
"இப்போ வேண்டாம். இப்போ அவன் தூங்கட்டும். அவன் எழுந்ததுக்கு அப்புறம் நான் தூக்கி வச்சிக்கிறேன்"
"சரிடா கண்ணா" என்று வாஞ்சையுடன் அவள் தலையை வருடி கொடுத்தான் ஓவியன்.
அப்பொழுது அவனது கைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டு, அதை தன் பாக்கெட்டில் தேடினான். அப்பொழுது தான் அதை அவன் சார்ஜில் போட்ட ஞாபகம் வந்தது. தன் அறைக்கு சென்று அவன் எடுப்பதற்குள் மணி அடிப்பது நின்றது. அந்த அழைப்பு முருகனிடம் இருந்து வந்ததை பார்த்து, ஓவியனே முருகனுக்கு ஃபோன் செய்தான்.
"சொல்லுங்க முருகன்"
"சார், அகோரமூர்த்தி அவன் வீட்ல இல்லயாம்"
"என்ன சொல்றீங்க?"
"ஆமாம் சார். அவங்க வைஃபும், பிள்ளைங்களும் வீட்டை விட்டு போயிட்டாங்களாம்"
"எங்க போனாங்க?"
"மேடத்தோட அம்மா வீட்டுக்கு சார்"
"அப்படின்னா அவங்களுக்கு போறதுக்கு ஒரு இடம் இருக்கு..."
"ஆனா அவங்களை பார்த்தா வசதியானவங்களா தெரியல சார்"
"அப்படியா? சரி அகோரமூர்த்தி எங்கே போனான்?"
"தெரியல சார்"
"அவங்க வீட்டு செக்யூரிட்டியை கேளுங்க"
"அவன் தான் சார் எனக்கு இந்த விஷயத்தை சொன்னதே"
"என்னன்னு சொன்னாரு?"
"மிஸ்ஸஸ் அகோரமூர்த்தியை அவங்க அம்மா வீட்டுல விடறதுக்காக அவர் போனாராம்... "
"அவர் ஏன் போனாரு?"
"நமக்காக தான் சார் போனாரு"
"நீங்க சொல்றது எனக்கு புரியல"
"நம்ம முதல் நாள் தானே சார் வந்து அகோரமூர்த்தியை பத்தி விசாரிச்சோம்...! ஒருவேளை நம்ம திரும்பி வந்து ஏதாவது கேட்டா, நமக்கு விவரம் சொல்வறதுக்காக அவங்க வீட்டை தெரிஞ்சுக்க போனாராம்"
"ஓஹோ..."
"அவங்களை வீட்டில விட்டுட்டு அவர் திரும்பி வந்து பார்க்கும் போது, வீடு பூட்டி இருந்துதாம் சார்"
"அவனோட புது நம்பருக்கு ஃபோன் பண்ணி பார்த்தீங்களா?"
"பார்த்தேன் சார். அந்த நம்பர் சுவிட்ச் ஆஃப் ஆகி இருக்கு"
"சரி, நம்ம நாளைக்கு காலையில அகோரமூர்த்தியை போய் பாக்கலாம். அவன் இன்னைக்கு ராத்திரி வீட்டுக்கு திரும்பி வந்தாலும் வந்துடலாம்"
"சரிங்க சார்"
அழைப்பை துண்டித்தான் ஓவியன்.
ஓவியனுக்கும் முருகனுக்கும் ஒரே மாதிரியான கேள்விகள் தான் எண்ணத்தில் உழன்று கொண்டிருந்தன. நான்சியுடன் அகோரமூர்த்திக்கு தகாத உறவு இருந்தது. அந்த உண்மை வெளியே வரக்கூடாது என்பதில் அகோரமூர்த்தி தீவிரமாய் இருந்தான். ஆனால் அந்த உண்மை வெளியே வந்த போது, தன் மனைவியிடம் தன் அகங்காரத்தை காட்டினான். ஏனென்றால், தன் மனைவி தன்னை விட்டுப் பிரிந்து, தன் சொந்த காலில் நிற்க முடியும் என்பதை அவன் எண்ணி பார்த்திருக்க வில்லை. ஆனால் அவரது மனைவி தான் எவ்வளவு உறுதியானவள் என்பதை நிரூபித்து விட்டார்.
இப்பொழுது கேள்வி என்னவென்றால், அகோரமூர்த்தி எங்கு போனான்? நிச்சயம் அவன் வேறு எந்த பெண்ணுடனும் உறவு கொண்டிருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால், அவனுக்கு நன்றாகவே தெரியும், தான் கொலைகாரனின் லேசர் பார்வையில் சிக்கி இருக்கிறோம் என்பது. அவன் எவ்வளவு பயங்கொள்ளி என்று அவர்கள் அறிந்ததே...! தன்னைக் காப்பாற்ற சொல்லி அவர்களிடம் கெஞ்சியவன் ஆயிற்றே அவன்...! அப்படி இருக்கும் பொழுது வெளியே செல்லும் தைரியம் அவனுக்கு எப்படி வந்தது? ஒருவேளை அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு விட்டானோ?அல்லது யாராவது அவனை கடத்திச் சென்று இருப்பார்களோ?அல்லது அந்த புதிய கொலைகாரன் அவனை கொன்று இருப்பானோ?
தனது கைபேசியை எடுத்து, பிரின்ஸுக்கு ஃபோன் செய்தான் ஓவியன்.
அவனது அழைப்பை உடனே ஏற்றான் பிரின்ஸ்.
"ஹாய்..."
"நான் உனக்கு கொடுத்த வேலை என்ன ஆச்சு?"
"அத பத்தி கேட்காதே. நான் அந்த லொகேஷனை கண்டுபிடிக்க எவ்வளவோ ட்ரை பண்ணேன். ஆனா என்னால முடியல"
"அப்படின்னா அந்த ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆயிடுச்சா?"
"அது விஷயமே இல்ல. ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தா கூட என்னால அதை லொகேட் பண்ண முடியும்"
"வேற என்ன பிரச்சனை?"
" ஃபோனை உடச்சி இருக்கணும்"
"அந்த ஃபோன் கடைசியா எந்த சிக்னல் ரேஞ்சில இருந்ததுன்னு கண்டுபிடிக்க முடியாதா?"
"அதை நான் செஞ்சிட்டேன்"
"எங்க?"
"ஆஸ்பயர் பில்டர் ஆஃபீஸ்"
"ஓ..."
"அகோரமூர்த்திக்கு அந்த மிரட்டல் மெசேஜை அனுப்பிட்டு, அந்த ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ணி இருக்கணும்"
"ஓகே"
"உன்னால இந்த மொத்த நெட்வொர்க்கையும் பிடிக்க முடியும்னு நினைக்கிறாயா ஓவியா?"
"உனக்கு ஏன் அந்த சந்தேகம்?"
"இவனுங்க தற்கொலைப்படை மாதிரி நடந்துக்கிறாங்க... தங்களை யாரும் பிடிச்சிட கூடாது அப்படிங்கிறதுல ரொம்ப உறுதியா இருக்காங்க. தன்னைத்தானே அழிச்சுக்கிறாங்களே தவிர, மாட்டிக்க மாட்டேங்குறாங்க, அகிலன் செஞ்ச மாதிரி. அப்படி இருக்கும் போது நீ என்ன செய்யப் போற?"
"பாக்கலாம்" என்று அழைப்பை துண்டித்தான் பிரின்ஸ் அவனை மேலும் ஏதாவது கேள்வி கேட்பதற்கு முன். அவன் மேலும் பிரின்சிடம் பொய் கூற விரும்பவில்லை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top