30 ஸ்திர முடிவு

30 ஸ்திர முடிவு

தனது வீட்டின் பால்கனியில் அமர்ந்திருந்த ஓவியன், அகோரமூர்த்தி தன் மனைவியிடம் நடந்து கொண்ட முறை பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். என்ன மனிதன் அவன்? எப்படி ஒரு மனிதனுக்கு இவ்வளவு அகங்காரமும், ஆணவமும் இருக்கிறது? குற்ற உணர்ச்சியில்லை, வருத்தமில்லை, துரோகம் செய்து விட்டோம் என்ற உறுத்தல் இல்லை... இந்த உலகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? சிறிது கூட உறுத்தலே இல்லாமல் துரோகம் செய்யும் அளவிற்கு மனிதர்கள் மாறிவிட்டார்களா? அவனது உண்மை முகம் தெரிந்த போது, அவனது மனைவியின் உள்ளம் எவ்வளவு குமுறி இருக்கும்?

நீண்ட மூச்சை இழுத்து விட்டு நிமிர்ந்தவன், தூரிகை தன்னை பார்த்தபடி நின்று இருப்பதை கண்டான்.

"ஏதாவது பிரச்சனையா?"

ஒன்றும் இல்லை என்று அவன் தலையசைக்க,

"உங்க முகத்தை பார்த்தா அப்படி தெரியலையே" என்றாள் தூரிகை.

"என் மூஞ்சே அப்படித்தான்" என்று வெட்டிச் சிரித்தான்.

"எல்லா நேரமும் அப்படி இல்ல... எப்போ நீங்க அப்செட்டா இருக்கீங்களோ அப்ப மட்டும் தான் உங்க முகம் இப்படி இருக்கும்..."

"இருக்கலாம்..."

"என்ன பிரச்சனைன்னு என்கிட்ட சொல்ல மாட்டீங்களா?"

அகோர மூர்த்தியின் கதையை அவளிடம் கூறினான்.

"பாவம் அவனோட வைஃப்"

தூரிகை ஒன்றும் கூறாமல் இருக்கவே,

"என்ன யோசிச்சிக்கிட்டு இருக்க?" என்று வினவினான்.

"பாவம், அவங்க புருஷனை ரொம்ப நம்பியிருக்காங்க... இதுக்கு அப்புறம் அவங்க என்ன செய்வாங்க? தன்னுடைய புருஷன் கிட்ட இருந்து பிரிஞ்சு போகணும் அப்படிங்கற தன்னோட முடிவுல அவங்க தீர்க்கமா இருப்பாங்கன்னு நினைக்கிறீங்களா?"

"அது எனக்கு தெரியல. ஆனா, அவங்க தன் முடிவை மாத்திக்க கூடாது"

"நம்மால அவங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாதா?"

"நிச்சயம் முடியும். ஆனால நம்ம செய்யக்கூடாது"

"ஏன் செய்ய கூடாது?"

"மிஸஸ் அகோர மூர்த்தி மாதிரி இந்தியாவில் பல பெண்கள் இருக்காங்க. அவங்க எல்லாருக்கும் நம்ம ஹெல்ப் பண்ண முடியாது. மிஸஸ் அகோரமூர்த்தி தன்னோட சொந்தக்காலில் தன்னால நிக்க முடியும்னு நிரூபிச்சி காட்டிட்டா, அவங்க மத்த பெண்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பாங்க. இப்போ இந்த சமுதாயத்துக்கு அது தான் தேவை"

"ஒருவேளை அவங்களால அது முடியாம போச்சுன்னா?"

"உறுதியாக இருக்கிறத தவிர வேற வழியே இல்லைங்குற நிலைமை ஏற்படும் போது தான், நம்ம எவ்வளவு உறுதியானவங்கன்னு ஒவ்வொருத்தருக்கும் புரியும். இப்படிப்பட்ட இக்கட்டான நிலைமையில் தள்ளப்படுற வரைக்கும், நம்முடைய ஸ்திரத்தன்மை எப்படிப்பட்டதுனு யாருக்கும் புரியுறதில்ல. மிஸஸ் அகோரமூர்த்தி, தான் எவ்வளவு உறுதியானவள்னு புரிஞ்சிக்க கிடைச்ச சந்தர்ப்பம் இது. இந்த சந்தர்ப்பத்துல அவங்க உறுதியா இல்லன்னா, அப்படிப்பட்ட சுயமரியாதை இல்லாத ஒரு பொம்பளைக்காக நம்ம வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்ல"

"அந்த கொலைகாரன், அந்த அகோர மூர்த்தியை போட்டு தள்ளாம தற்கொலை பண்ணிக்கிட்டு இருந்திருக்கக் கூடாது..." என்று முனுமுனுத்தாள் தூரிகை.

"நீ ஏதாவது சொன்னியா?" என்றான் ஓவியன்.

"ஒன்னும் இல்ல"

"மேகா எங்க?"

"அவ எதையோ டிராயிங் பண்ணிக்கிட்டு இருக்கா. அவ அதை முடிக்கிற வரைக்கும், என்னை அங்க வரக்கூடாதுன்னு சொல்லிட்டா"

"எதுக்கு?"

"தெரியல"

அவளது அறைக்கு சென்ற ஓவியன், மெல்ல கதவை திறந்தான். தான் வரைந்த படத்திற்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தாள் மேகா.

"நான் உள்ள வரலாமா?" என்றான் ஓவியன்.

"வேண்டாம் பா ப்ளீஸ், ப்ளீஸ்..." என்றாள் மேகா.

"சரி, சரி"

"கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க பா. நான் வந்துடுவேன்"

"சரி டா"

கதவை மூடிவிட்டு, வெளியே வந்த ஓவியன், தூரிகையை பார்த்து தன் கண்களால் *என்ன விஷயம்?* என்று கேட்க, அவள் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல் தோள்களை குலுக்கினாள்.

மேகா வரும் வரை காத்திருப்பது என்று சோபாவில் அமர்ந்த ஓவியன், தூரிகையை தன் பக்கத்தில் அமருமாரு சைகை செய்தான். சற்று இடைவெளி விட்டு அமர்ந்த அவளை, தன் பக்கத்தில் இழுத்துக் கொண்டான்.

"மேகா வந்துடுவா"

"வரட்டும்" என்றான்.

"நம்ம இப்படி நெருக்கமா இருக்கிறத அவளுக்கு வித்தியாசமா தோணாதா?"

"அவளுக்கு வித்தியாசமா தோன கூடாதுன்னு தான் இப்படி உட்கார சொல்றேன். அப்போ தான், நம்ம நெருக்கமா இருக்கிறதை பார்த்தா கூட அது அவ மனசுல ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தாது"

"ஓ..."

"இது நம்ம குடும்பம். குழந்தைங்க எப்பவும் நம்ம கூட தான் இருப்பாங்க. எல்லா நேரமும் நம்ம விலகியே இருக்க முடியாது. இது குழந்தைகளுக்கு பழகிட்டா, அவங்க சாதாரணமா எடுத்துக்குவாங்க" தன் தலையை அவள் தலையோடு லேசாய் மோதினான்.

அப்பொழுது, தான் வரைந்த காகிதத்துடன் அங்கு வந்தாள் மேகா.

"என்ன அது?" என்றான் ஓவியன் குரலில் ஆர்வம் காட்டி.

"இத நான் உங்களுக்காக தான் வரைஞ்சேன்"

"எனக்காகவா?"

"ஆமாம்"

"குடு பாக்கலாம்" என்று அதை அவளிடம் இருந்து பெற்றுக் கொண்டான் ஓவியன்.

மேகா அதை அவனிடம் கொடுத்தாள். அந்த ஓவியத்தில் ஒரு குட்டி பெண், ஒரு மனிதனின் விரலை பற்றிக்கொண்டு நிற்பது போலவும், அவன் பக்கத்தில் ஒரு பெண்மணி கையில் குழந்தையுடன் நிற்பது போலவும் இருந்தது. அந்த ஓவியம் குழந்தைத்தனமாய் இருந்தது. அது ஒரு குழந்தையால் வரையப்பட்டது தானே...!

"இது உங்களுக்கு... நம்ம ஃபேமிலி போட்டோ. அம்மா, அப்பா, மேகா முகில்..."

"ரொம்ப அழகா வரைஞ்சு இருக்கே டா கண்ணா. எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு. தேங்க்யூ"

"இதை நீங்க முகில் கிட்ட காட்டுவீங்களா?"

ஏனோ, இந்த குட்டி பெண்ணின் கவனம் முழுவதும், அந்த வீட்டில் இன்னும் அடி எடுத்து வைக்காத அந்த குழந்தையை சுற்றியே வலம் வந்து கொண்டிருந்தது.

"நிச்சயமா" என்றான் ஓவியன்.

"அவனை எப்போ வீட்டுக்கு கூட்டிகிட்டு வருவீங்க?"

"நாளைக்கு"

"வாவ்... நிஜமாவா?"

ஆமாம் என்று தலையசைத்தான்.

"நாளைக்கு கூட்டி கிட்டு வர போறீங்களா?" என்றாள் தூரிகை.

"அப்படித்தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்" என்றான் ஓவியன்.

ஓவியனை சந்தோஷமாய் கட்டிக்கொண்டாள் மேகா.

இதற்கிடையில்...

அகோரமூர்த்தியின் இல்லம்,

தன்னுடைய உடமைகளை பையில் அடுக்கிக் கொண்டிருந்த தன் மனைவியை பார்த்து அதிர்ச்சி அடைந்தான் அகோரமூர்த்தி. தன்னுடைய பட்டப் படிப்பிற்கான சான்றிதழ்களை அவர் எடுத்த போது, அவரை தடுத்தான் அகோரமூர்த்தி.

"நீ என்ன செய்றன்னு தெரிஞ்சு தான் செய்றியா? உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு? நம்ம குழந்தைகளை பத்தி நீ யோசிச்சி பார்த்தியா? அவங்க வசதியான வாழ்க்கை வாழ வேண்டாமா?"

"குழந்தைகளை காரணம் காட்டி என்னை பலவீனப்படுத்த நினைக்காதீங்க. உங்களுடைய வார்த்தை என் மனசுல எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த போறதில்ல"

"இங்கிருந்து போனா, சோத்துக்கு என்ன செய்வ?"

"உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லனாலும் சொல்றேன். ஏன்னா, நான் எப்படி வாழ்க்கை நடத்துறேன்னு உங்க மனசுல கேள்வி எழக்கூடாது. ஏன்னா, உங்களை மாதிரி தப்பானவங்க எப்பவும் தப்பா தான் யோசிப்பீங்க. உங்களை சொல்லி குத்தம் இல்ல, உங்க டிசைன் அப்படி..."

"உனக்கு நாப்பது வயசாகுது. இந்த வயசுக்கு அப்புறம் நீ வேலைக்கு போக போறியா?"

"இந்த வயசுல உங்களால இவ்வளவு கீழ்த்தரமா இறங்க முடியும் போது, இந்த வயசுல என்னாலயும் என்னை உயர்த்திக்க முடியும்"

"சினிமா டயலாக் பேசுறதை நிறுத்து. அதெல்லாம் நடைமுறைக்கு சரிப்பட்டு வராது. உனக்கு யார் வேலை கொடுப்பா?"

"டெக்னாலஜியை நீங்க மத்தவங்க வாழ்க்கையை கெடுக்குறதுக்கு பயன்படுத்திக்கிட்டிங்க. ஆனா நான், அதை சரியான வழியில் பயன்படுத்திக்கிட்டேன். என்னோட காலேஜ் வாட்ஸாப்ப் குரூப்ல எனக்கு வேலை வேணும்னு கேட்ட ஒரு மணி நேரத்துல, ஏழு பேர் எனக்கு வேலை ஆஃபர் பண்ணி இருக்காங்க."

"வேலை செய்றது அவ்வளவு சுலபம் இல்ல. நீ கிட்டத்தட்ட எல்லாத்தையும் மறந்துட்ட..."

"அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க என்னை பத்தி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல"

"என்னைத் தவிர வேற யார் உன்னை பத்தி கவலைப்படுவா, சந்தா?"

"இப்போ, நீங்க சினிமா டயலாக் பேசுறதை நிறுத்துங்க."

"நான் நடிக்கிறேன்னு நினைக்கிறியா? நம்ம எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தோம்னு மறந்துட்டியா?"

"அந்த போலியான வாழ்க்கையை நினைச்சு பாக்க நான் விரும்பல"

தன் பையை எடுத்துக் கொண்டு, அறையை விட்டு வெளியே நடந்தார். அங்கு தன் மகனும், மகளும் கூட வீட்டை விட்டு செல்ல தயாராக இருப்பதை பார்த்த அகோரமூர்த்தி, மேலும் அதிர்ச்சி அடைந்தான்.

"ராஜா, நீயுமா வீட்டை விட்டு போற?"

"ஒரு நல்ல உறவுக்கு அடித்தளமே, நம்பிக்கை தான். நீங்க அம்மாவுக்கே உண்மையா இல்லாத போது, உங்க மேல எங்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?" அங்கிருந்து வெளியே நடந்தான் அவரது மகன்.

அங்கு நின்று, தன் மீது பார்வையை ஓட்டிக் கொண்டிருந்த தன் மகளை பார்த்த,போது தான் அவருக்கு சற்றே குறுகுறுத்தது. அவரை நோக்கி வந்த அந்தப் பெண்,

"உங்களை ரியல் ஹீரோனு நினைச்சி, உங்களை நான் ரொம்ப ரசிச்சேன். ஆனா நீங்க என்னை ஏமாத்திட்டீங்க. நீங்க என்னோட ஹீரோ இல்ல. உங்களை மாதிரி ஒரு மட்டமான ஆள் என்னுடைய ஹீரோவா இருக்கவே முடியாது." என்று கத்தி கூச்சலிட்டாள், ஒரு காலத்தில் தன் அப்பாவின் ஒரு பார்வைக்கு அடங்கிய அந்த பெண்.

அவளது கையை பற்றி கொண்டு வெளியே இழுத்துச் சென்றார் சாந்தா. அகோரமூர்த்தி வெளியே வரவில்லை. அங்கிருந்த சோபாவில் தொப்பென அமர்ந்தான். தன் முடிவில் சாந்தா இவ்வளவு உறுதியாய் இருப்பார் என்பதை அவன் எதிர்பார்த்து இருக்கவில்லை.

அவர்கள் அனைவரும் டாக்ஸியில் ஏறி அமர்ந்தார்கள். அப்போது அந்த வீட்டின் கவலாளி,

"அம்மா, நீங்க எங்க போறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றான்.

"இப்போதைக்கு நாங்க எங்க அம்மா வீட்டுக்கு போறோம்"

"உங்க அம்மா வீடு எங்கம்மா இருக்கு?"

"நீங்க எதுக்கு அதை பத்தி கேக்குறீங்க?" என்றான் அவரது மகன்.

"நீங்க ஹாஸ்பிடல்ல இருந்தப்போ, ஏசிபி ஓவியன் சார் வந்து உங்களை பத்தி விசாரிச்சார். அவர் மறுபடியும் வந்து கேட்டா அவருக்கு சொல்லனும்னு தான் கேட்கிறேன்"

"சரி, நீங்களும் எங்க கூட வாங்க. எங்க பாட்டி வீட்டை தெரிஞ்சுக்கோங்க. அவர் மறுபடி வந்தா, எங்க கிட்ட கூட்டிக்கிட்டு வாங்க" என்றான் அவரது மகன்.

மறுப்பு கூறாமல் அவர்களுடன் சென்றார் அந்த காவலாளி. சாந்தாவின் அம்மா, தன் மகள், இத்தனை வயதிற்கு பிறகு, ஒரேடியாய் தன் வீட்டிற்கு திரும்பி விட்டதை எண்ணி மனம் கலங்கினார். அவரது அப்பா, அவருக்கு ஆறுதல் கூறினார். அந்த வயதான பெரியவர்களை பார்க்கவே பாவமாய் இருந்தது அந்த காவலாளிக்கு.

அந்த காவலாளிக்கு காபி கொடுத்து வழி அனுப்பி வைத்தார் சாந்தா.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு, அகோரமூர்த்தியின் வீட்டை வந்தடைந்தார் அந்த காவலாளி. அவர் வீட்டுக்கு வந்த போது, வீடு வெளிப்புறமாய் பூட்டப்பட்டிருந்தது.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top