29 அலட்சியம்
29 அலட்சியம்
தன் கைபேசியின் திரையில் ஒளிர்ந்த ஓவியனின் பெயரை பார்த்த பிரின்சின் முகம் அதைவிட அதிகமாய் ஒளிர்ந்தது.
"பரவாயில்லையே, என்னை நீ இன்னும் ஞாபகம் வச்சிருக்கியே..."
"வாய மூடு டா..."
"இந்த கேஸ் முடிஞ்ச பிறகு நீ எனக்கு ஃபோன் பண்ண மாட்டேன்னு நெனச்சேன்"
"நீ சொல்றது சரி தான். ஆனா, கேஸ் இன்னும் முடியல"
"என்னடா சொல்ற? அதான் கொலைகாரன் செத்துட்டானே..."
"இங்க பிரச்சனையே வேற... நீ நியூஸ் பாக்கலையா? அவங்க நிறைய பேர் இருக்காங்க"
பிரின்சிடம் கூட உண்மையை கூறவில்லை ஓவியன். எந்த விதத்திலும் உண்மை வெளியாவதை அவன் விரும்பவில்லை.
"பாத்தேன். இப்போ நான் என்ன செய்யணும்?"
"அகோர மூர்த்தியை யாரோ மிரட்டுறாங்க"
"அகோர மூர்த்தி.... அகோர மூர்த்தி.... ( தன் நெற்றியை தட்டி, யோசித்தான் பிரின்ஸ்) ஓ... அந்த ஆஸ்பயர் பில்டர் மேனேஜரா?"
"உனக்கு அந்த ஆளை இன்னும் ஞாபகம் இருக்கா?"
"மறக்கிற ஜென்மமா அது? அரை கிழவனா இருந்துகிட்டு, காதல் ரசம் சொட்ட சொட்ட, என்னென்ன டயலாக் பேசினான் அந்த ஆளு... *நீ என் தூக்கத்தை திருடிட்ட டி செல்லம்...*" வாய்விட்டு சிரித்தான் பிரின்ஸ்.
"தான் செஞ்சதுக்கான பலனைத் தான் இப்ப அவன் அனுபவிச்சுக்கிட்டு இருக்கான்... தூக்கமே வராம..." என்றான் எரிச்சலுடன் ஓவியன்.
"செம த்ரில்லிங்கா இருக்கு மச்சி..."
"ஆமாம். அவனை மிரட்டுறது யாராயிருக்கும்னு கூட நான் கெஸ் பண்ணிட்டேன்"
"அப்படி போடு அருவாளை... யாரு மச்சான் அந்த நல்லவன்?"
"சொல்றேன்... ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு"
"பிரின்ஸ்சோட ஹிஸ்டரியில் சிக்கல் அப்படிங்கிற வார்த்தைக்கு இடமே இல்ல... சில நிமிஷத்துல என்னால உனக்கு அவன் நம்பரை கொடுத்துட முடியும். என்னை பத்தி உனக்கு தெரியும்ல?"
"தெரியும். ஆனா, இந்த தடவை எனக்கு தேவை நம்பர் இல்ல..."
"வேற என்ன வேணும் உனக்கு?"
"அவனோட நம்பரை நான் கொடுக்கிறேன். நீ அவனை லொகேட் பண்ணா போதும்"
"அவ்வளவு தானே? வீடு செஞ்சிடலாம்"
அகோர மூர்த்தியின் கைபேசி எண்ணை அவனிடம் கூறினான் ஓவியன்.
"இது அதோட மூர்த்தியோட நம்பர்"
"அகோர மூர்த்தி நம்பரா? இதை ஏன் எனக்கு கொடுக்கிற?"
"ஆமாம். அவன் அகோர மூர்த்தியை மிரட்டுறதே, அகோர மூர்த்தியோட நம்பர்ல இருந்து தான்"
"அந்த ஆள் கிட்ட இருந்து அவன் ஃபோனை திருடிட்டானா?"
"ஆமாம்"
"பிரில்லியன்ட்... "
"இருக்கலாம்..."
"டிபிக்கல் போலீஸ் காரன் டா நீ... திறமைசாலிகள பாராட்ட தெரிஞ்சுக்கோ மச்சான்" என்றான் கிண்டலாய்.
"அவனை நான் நேர்ல பாக்கும் போது நிச்சயமா செய்றேன்." என்று சிரித்தான் ஓவியன்.
"அது சரி..." என்று சிரித்த பிரின்ஸ்,
"நீ யாரை சந்தேகப்படுற?" என்றான்.
தான் சந்தேகப்படும் நபரை பற்றி ஓவியன் கூறவும்,
"ஓ நீ அப்படி வரியா...? குட் கெஸ் மச்சான்"
"இதுல மார்தட்டிக்க எதுவும் இல்ல. அந்த ஒரு ஆளை விட்டா, இதை வேற யாரும் செய்ய மாட்டாங்க"
"உண்மை தான்"
"அவன் நம்பரை ட்ராக் பண்ணி, எங்க இருக்கான்னு கண்டுபிடிச்சு சொல்லு"
"கண்டிப்பா"
அவர்கள் அழைப்பை துண்டித்தாகள்.
......
முருகனுடன் அகோரமூர்த்தியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் ஓவியன். அங்கு ஏதோ மிகப்பெரிய கலோபரம் நடந்ததற்கான அறிகுறி தென்பட்டது. அந்த தெருவில் வசித்த மக்கள், கூடி நின்று, தங்களுக்குள் ஏதோ கிசுகிசுத்துக் கொண்டார்கள்.
ஜீப்பை விட்டு கீழே இறங்கிய ஓவியன், அகோரமூர்த்தியின் வீட்டிற்குள் நுழைய முற்பட்ட போது, அங்கிருந்த காவலாளி, அவனை தடுத்து நிறுத்தி,
"வீட்ல யாரும் இல்ல சார்" என்றான்.
"எங்க போயிருக்காங்க?"
"எல்லாரும் ஆஸ்பித்திரில இருக்காங்க சார்"
"ஏதாவது பிரச்சனையா?"
"அது வந்து சார்..." என்று தயங்கினான் அந்த காவலாளி.
"என்ன நடந்ததுன்னு சொல்றீங்களா இல்லையா?" என்றான் மிரட்டலாக.
"நேத்து ராத்திரி, அம்மா தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணாங்க சார்"
"தற்கொலையா? ஏன்?"
"அகோரமூர்த்தி சார் ஏதோ ஒரு பொம்பளைய வச்சிருந்தாராம். அந்த விஷயம் அம்மாவுக்கு தெரிஞ்சு போச்சு. அதனால அவங்க கையை வெட்டிக்கிட்டாங்க. எல்லாரும் ஆஸ்பித்திரியில தான் சார் இருக்காங்க" என்றான் கவலையுடன்.
"எந்த ஹாஸ்பிடல்?"
"கே எஸ் ஆஸ்பித்திரி சார்"
மீண்டும் ஜீப்பினுள் புகுந்தான் ஓவியன்.
"கே எஸ் ஹாஸ்பிடல் போங்க"
இன்ஜினை முடக்கிய முருகன், கே எஸ் மருத்துவமனையை நோக்கி வண்டியை ஓட விட்டான்.
"விஷயம் வெளியாயிடுச்சு போல இருக்கு சார்?" என்றான் முருகன்.
"ஆமாம்..."
"இது எப்படி சார் நடந்திருக்கும்? அகோரமூர்த்தியோட ஃபோன் கூட தொலைஞ்சு போச்சு. அது ஒன்னே ஒன்னு தானே சார் அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்த தொடர்புக்குக்கான ஒரே அத்தாட்சி? அப்படி இருக்கும் போது, எப்படி சார் அவங்க வைஃபுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது? எனக்கு என்னமோ அகோரமூர்த்தி இந்த விஷயத்தை சொல்லியிருப்பான்னு தோணல"
"நிச்சயமா சொல்லியிருக்க மாட்டான்"
"அப்புறம் எப்படி சார் இது வெளியில் வந்தது?"
"*அவன்* தான் சொல்லி இருக்கணும்"
"நீங்க அப்படி சந்தேகப்படுறீங்களா சார்?"
"சந்தேகமே இல்ல. உறுதியா சொல்றேன். அகோர மூர்த்தியோட ஃபோனை திருடினது அவனா இருந்தா, சொன்னதும் அவனா தான் இருப்பான்"
"அவன் செஞ்சது தப்பு ஒன்னும் இல்லையே சார்..."
"நிச்சயமா கிடையாது"
"இப்போ நம்ம என்ன சார் செய்ய போறோம்?"
"ஏன், நீங்க ஏதாவது ஐடியா வச்சிருக்கீங்களா?" என்றான் கள்ள புன்னகையுடன்.
"அவன் பொண்டாட்டிக்கு உண்மை தெரிஞ்சதுக்கு பிறகு, அந்த ஆள் உயிரோட இருக்கணும்னு எந்த அவசியமும் இல்ல சார்"
தன் புருவம் உயர்த்தி அவனை நோக்கினான் ஓவியன்.
"அவன் சாகட்டும் விடுங்க சார்"
"போலீஸ்காரனா இருந்துகிட்டு, நம்ம இப்படி நினைக்கிறது தப்பில்லையா?"
"அந்த ஆள் செஞ்சது எதுவுமே சரி இல்லையே சார்... அந்த ஆளால தானே நான்சி செத்துப் போனா?"
"அப்படின்னா நான்சி மேல தப்பு இல்லன்னு சொல்றீங்களா?"
"செஞ்ச தப்புல ரெண்டு பேருக்குமே சரிசமமான பங்கு இருக்கு சார். நான்சி செத்தா, அகோர மூர்த்தியும் சாகணும். அவளுடைய வீக்னஸ் தெரிஞ்சு அவளை மடக்குனது இந்த ஆள் தானே சார்...? அவளோட கவனத்தை தன் பக்கம் திருப்பணும்னு அவளை என்னென்ன வார்த்தை சொல்லி அந்த ஆள் புகழ்ந்தான்...! அது ஒரு விதமான போதை சார். மதி மயக்குற வார்த்தைகளை யூஸ் பண்ணி அவளை தனக்கு அடிமையா மாத்தி, தன்னோட காமபசியை தீர்த்துக்கிட்டவன் சார் அவன். அவன் எல்லாம் உயிரோட இருக்கவே தகுதி இல்லாதவன்"
"நிலைமை என்னன்னு முதல்ல தெரிஞ்சுக்கலாம் வாங்க"
இருவரும் கே எஸ் மருத்துவமனையை வந்து அடைந்தார்கள். அகோரமூர்த்தியின் மனைவி அனுமதிக்கப்பட்டிருக்கும் அறை எண்ணை விசாரித்துக் கொண்டு வந்தான் முருகன்.
"கிரவுண்ட் ஃப்ளோர், ரூம் நம்பர் 98 சார்"
இருவரும் அந்த அறையை நெருங்கிய போது, உள்ளிருந்து வந்த குரல், அவர்களை மேலும் நகர விடாமல் தடுத்தது.
"நான் உங்களை அடியோடு வெறுக்கிறேன். நீங்க இவ்வளவு கீழ்த்தரமானவரா இருப்பீங்கன்னு நான் கற்பனை கூட செஞ்சு பாக்கல. காலேஜுக்கு போற பிள்ளைங்களுக்கு அப்பாவா இருந்துகிட்டு, இன்னொருத்தன் பொண்டாட்டி கிட்ட இப்படி எல்லாம் நடந்துக்க உங்களுக்கு வெக்கமா இல்ல? அப்படியெல்லாம் செய்யும் போது உங்களுக்கு என்னோட நினைப்பே வரலயா? உங்களுக்கு நல்ல மனைவியா இருந்ததுக்கு எனக்கு இது தான் பரிசா?"
தலையில் அடித்துக் கொள்ளும் சத்தம் கேட்டது.
"இல்ல... என்னை தொடாதீங்க... உங்களை மாதிரி ஒரு பெண் பித்து பிடிச்சவர் தொடுறதை நான் விரும்பல. உங்க முகத்தை பார்க்க கூட நான் விரும்பல. நான் என் குழந்தைகளோட போறேன். நீங்க ஒரு ஏமாத்துக்காரர். என்னை மாதிரி ஒரு நல்ல பொம்பளைக்கு தகுதி இல்லாதவர்"
அப்படி அழுதவர் திருமதி அகோரமூர்த்தி தான். எரிந்து கொண்டிருந்த தன் மனதை, அழுது கொட்டி தீர்த்துக் கொண்டிருந்தார் அவர். அவைகள் வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, ஏமாற்றங்கள்... உண்மையான அன்பு தந்த ஏமாற்றம்... அவர் கொண்டிருந்த எதிர்பார்ப்புக்கு கிடைத்த ஏமாற்றம்... அவர் கொண்டிருந்த நம்பிக்கைக்கு கிடைத்த ஏமாற்றம்...
தன் முஷ்டியை இறுக்கமாய் மூடினான் ஓவியன். அவனால் தன் அக்காவை நினைக்காமல் இருக்க முடியவில்லை. உண்மையான அன்பு செலுத்தும் பெண்மணிகளுக்கு இறுதியில் மிஞ்சுவது இது தானா? பெண்களின் ஆழமான உணர்வுகளை ஏன் ஆண்கள் புரிந்து கொள்வதில்லை? ஏன் இவ்வளவு இதயமற்றவர்களாய் இருக்கிறார்கள்? கட்டிய மனைவியையும், பெற்ற பிள்ளைகளையும் விட அப்படி என்ன முக்கியமாய் போய் விடுகிறது அவர்களுக்கு? எவ்வளவு சுயநலம்...!
ஓவியனையே உற்று கவனித்துக் கொண்டிருந்தான் முருகன். அவன் இருக்கும் நிலை என்னவென்று முருகனுக்கு நன்றாகவே புரிந்தது. ஆனால் அகோர மூர்த்தியின் அடுத்த வார்த்தைகள் அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
"சாந்தா, ஒரு தடவை யோசிச்சு பாரு... நான் உனக்கு ஏதாவது குறை வச்சேனா? உனக்கு வேண்டியதை எல்லாம் நான் செய்யலையா? அதைவிட வேற என்ன வேணும் உனக்கு? உன்கிட்ட என்ன இல்ல? வீடு... கார்... நகை நட்டு... இதெல்லாம் உனக்கு போதாதா சந்தோஷமா வாழ?"
கோபத்தில் ஓவியன் பல்லை கடிக்க, முருகனுக்கு அகோர மூர்த்தியின் பல்லையே உடைக்க வேண்டும் என்று தோன்றியது.
"இதெல்லாம் எனக்கு சந்தோஷத்தை தரும்னு நினைக்கிறீங்களா? நீங்க எனக்கு கொடுத்தது எல்லாமே உயிர் இல்லாதது. அதையெல்லாம் நான் உங்ககிட்ட கேட்டேனா? நீங்க தான் உங்க வாழ்க்கையை வசதியா வாழனும்னு ஆசைப்பட்டு அதையெல்லாம் தேடிக்கிட்டீங்க. இந்த மாதிரி அல்ப சந்தோஷத்துக்கு நான் எப்பவுமே ஆசைப்பட்டதில்லன்னு உங்களுக்கே தெரியும். நான் உங்ககிட்ட எதிர்பார்த்தது எல்லாமே அன்பை மட்டும் தான். உங்களை கண்மூடித்தனமா நம்புனது என்னோட முட்டாள் தனம். உங்க கூட வாழ நான் விரும்பல... அதுவும் வாழ்க்கையை பத்தி நீங்க பேசுனதை கேட்டதுக்கு பிறகு நிச்சயமா இல்ல..."
"எங்க போவ? என்ன செய்வ? ஆத்திரத்துல முடிவெடுக்காத சாந்தா. நான் இல்லாம உன்னால எதுவுமே செய்ய முடியாது. நீயும் பிள்ளைகளும் சோத்துக்கு பிச்சை தான் எடுக்கணும்" எச்சரித்தான் அகோர மூர்த்தி.
"உங்க கூட இருக்கிறதை விட, பிச்சை எடுக்கிறது எவ்வளவோ மேல்" என்றார் சாந்தா.
"அதுக்கு மேல உன் இஷ்டம்"
அந்த அறையில் இருந்து வெளியே வந்த அகோரமூர்த்தி, அங்கு ஓவியனும், முருகனும் நின்றிருப்பதை பார்த்து தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டான்.
"குட் மார்னிங் ஏசி, சார்" என்றான்.
தன் தலையசைப்பை பதிலாக தந்தான் ஓவியன்.
"மேடம்க்கு விஷயம் தெரிஞ்சிருச்சு போல இருக்கு?" என்றான் முருகன்.
"அவ சரியாயிடுவா" என்றான் அகோர மூர்த்தி அலட்சியமாக.
"ஆனா, அவங்க ரொம்ப உடைஞ்சு போய் இருக்கிற மாதிரி தெரியுது... " என்றான் ஓவியன்.
"கோவத்துல எல்லா பொம்பளைங்களும் அப்படி தான் சார் பேசுவாங்க. அவங்களுக்கு கத்துறதை விட்டா வேற எதுவும் தெரியாது. கொஞ்ச நாள்ல எல்லாத்தையும் மறந்துடுவாங்க"
"எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்றீங்க?"
"இந்த பொம்பளைகளை பத்தி எனக்கு தெரியாதா சார்? அவளுக்கு வாழறதுக்கு வேற வழியே கிடையாது. நிச்சயமா என்கிட்ட திரும்பி வந்து தான் ஆகணும்"
தன் கோபத்தை அடக்க கைகளை கட்டிக் கொண்டு திடமாய் நின்றான் ஓவியன்.
"அது கிடக்குது விடுங்க சார். நீங்க என்னோட ஃபோனை கண்டுபிடிச்சிட்டீங்களா?"
"இன்னும் இல்ல"
"ஏன் சார்? என் ஃபோனோட ஐஎம்இஐ நம்பரை வச்சி கண்டுபிடிக்க முடியாதா?"
"ட்ரை பண்ணோம்... ஆனா அந்த கொலைகாரன் உங்க ஃபோனை உடச்சிட்டான் போல தெரியுது. அந்த நம்பரை எங்களால டிராக் பண்ண முடியல "
"அய்யய்யோ...! என்ன சார் இப்படி சொல்றீங்க? எப்படியாவது என்னை காப்பாத்துங்க சார். நீங்க கற்பனை பண்ணி பாக்க முடியாத அளவுக்கு, உங்களுக்கு நான் பணம் கொடுக்கிறேன்"
"நிஜமாவா?" என்றான் ஓவியன் நக்கலாக.
"மிஸ்டர் அகோரமூர்த்தி, நீங்க அந்த பணத்தை ஏன் உங்களை கொலை செய்ய நினைக்கிற கொலைகாரனுக்கு கொடுக்கக் கூடாது?" என்றான் முருகன்.
"அவங்களைப் பத்தி தான் உங்களுக்கு தெரியுமே சார்... செத்துப் போவானுங்களே தவிர, யாரையும் விடமாட்டானுங்க..." என்றான், முருகன் அவனை கிண்டல் செய்கிறான் என்பதை கூட உணராமல்.
"நாங்க அவங்களை கண்டுபிடிக்கிற வரைக்கும், நீங்க ஜாக்கிரதையா இருங்க" என்றான் ஓவியன்.
"நான் உங்களை தான் சார் நம்புறேன். எனக்கு தெரியும் நீங்க என்னை எப்படியும் காப்பாத்திடுவீங்கன்னு" என்று சிரித்த அவனை, ஐயோ பாவம் என்று பார்த்தான் முருகன்.
"என்னோட புது நம்பரை நோட் பண்ணிக்கோங்க சார்" என்றான் அகோர மூர்த்தி.
"ஓ... புது நம்பர் வாங்கியாச்சா?"
"ஆமாம் சார். என் பொண்டாட்டிக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு. இனிமே அந்த பழைய நம்பரை பத்தி எனக்கு கவலை இல்ல" என்றான் சகஜமாய்.
அந்த எண்ணை குறித்துக் கொண்டான் ஓவியன்.
"இந்த நம்பரை என்னைத் தவிர வேற யார்கிட்டயாவது கொடுத்திருக்கீங்களா?"
"ஆமாம் சார். என்னோட எல்லா ஃப்ரெண்ட்ஸ்க்கும் கொடுத்து இருக்கேன்"
"ம்ம்ம்"
"சார், நான் உங்க திறமையை ரொம்ப நம்புறேன், சார்" தன் பயத்தை மறைத்து பல்லை காட்டி சிரித்தான் அகோரமூர்த்தி.
லேசாய் தலையசைத்து அங்கிருந்து அகன்றான் ஓவியன். முருகன் அவனை பின் தொடர்ந்தான்.
"இந்த ஆளு இப்படி மாறுவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை சார்" என்றான் முருகன்.
ஆம் என்று தலையசைத்தான் ஓவியன்.
"அப்படியே தலைகீழா மாறிட்டானே சார்... கொஞ்சம் கூட இதயமே இல்லாதவன். ஏற்கனவே ஒடஞ்சு போயிருக்கிற அவங்க வைஃபோட மனசை, கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் உடைக்க தயங்கவே இல்லையே சார் இந்த ஆளு... அவன் நம்ம நினைச்ச மாதிரி இல்ல சார்..."
"இது தான் அவனுடைய உண்மையான முகமா இருக்கும்"
"வாழ்க்கையோட முடிவுல நிக்கிறோம்னு தெரிஞ்சி கூட, எப்படி சார் அவனால இவ்வளவு அலட்சியமா இருக்க முடியுது?"
"வாழ்க்கையோட முடிவா?"
"ஆமாம் சார். கொலைகாரன் கிட்ட இருந்து அவனுக்கு தான் மிரட்டல் வந்திருக்கே..."
"ஆனா, நம்ம அவனை காப்பாத்துவோம்னு அவன் நம்புறான்"
"நம்ம காப்பாத்த போறோமா சார்?"
தனது கூலிங் கிளாசை அணிந்து கொண்டு,
"கிளம்பலாம்" என்றான் ஓவியன்.
இருவரும் ஜீப்பில் ஏறி அமர்ந்தார்கள். ஜீப்பை ஸ்டார்ட் செய்த முருகன்,
"இதுக்கப்புறம் அகோர மூர்த்தியோட ஒய்ஃப் எப்படி சார் வாழ்க்கையை ஓட்டுவாங்க?"
"எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருக்கு. இங்க எதுவும் யாருக்காகவும் நிக்க போறதில்ல... அகோரமூர்த்தி அவங்க கூட இருந்தாலும் சரி இல்லனாலும் சரி. சூழ்நிலை அவங்களை கீழே தள்ளிவிட முயற்சி செய்யும் போது அவங்க தானாவே பறக்க கத்துக்குவாங்க"
"அவங்க சகஜ நிலைமைக்கு திரும்புவாங்கன்னு நீங்க நினைக்கிறீங்களா சார்?"
"அதுக்கு காலம் தான் பதில் சொல்லனும்"
அகிலனின் கைபேசியை வெளியே எடுத்த ஓவியன், அகோர மூர்த்தியின் புதிய எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தியை தட்டினான்.
"உன் வாழ்வின் கடைசி மணித்துளிகளை எண்ணத் துவங்கு"
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top