27 புது குழப்பம்
27 புதுக் குழப்பம்
தன்னை படுக்கையறை நோக்கி இழுத்துச் சென்ற ஓவியனை தடுத்து நிறுத்தினாள் தூரிகை.
"நான் இப்போ தூங்க போறதில்லை ஏசி சார்" என்றாள்.
"அப்படின்னா உன்னை என் பெயரை சொல்ல வைக்கிறேன்"
"வேற ஏதாவது பேசுங்களேன்"
"படுத்துகிட்டே பேசலாமே..."
அவளை தன் அருகில் இழுத்து அவனும் படுத்து கொண்டான்.
"சொல்லு, என்ன பேசணும்?"
"எதுக்காக நீங்க டிபார்ட்மெண்ட்ல இருந்து ஒரு கேப் எடுத்தீங்க?"
அவளை நோக்கி திரும்பிய ஓவியன், அவளை ஆச்சரியமாய் பார்த்தான். அவனைப் பற்றி அவள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாள். ஒருவேளை, அவள் இன்டர்நெட்டில் கூட அதற்கான விவரங்களை தேடியிருக்கலாம்.
"அக்காவுக்காக தான் கேப் எடுத்தேன். உண்மையை சொல்லப் போனா, அக்காவோட ஆக்சிடென்ட்டுக்கு பிறகு, நான் டிபார்ட்மெண்ட்ல சேர்ற எண்ணத்திலேயே இல்ல. என் மூளை வேலை செய்யவே இல்ல. எனக்கு அக்கா தான் எல்லாம். ஆக்சிடென்ட்க்கு முன்னாடி அவங்க எனக்கு அனுப்புன மெசேஜை கேட்டு நான் நொறுங்கி போயிட்டேன். அவங்க தன் புருஷனை எவ்வளவு ஆழமா நேசிச்சாங்க தெரியுமா? அவர் அக்காவை ஏமாத்திட்டாருன்னு இப்ப கூட என்னால நம்ப முடியல. அக்கா ஆசைப்பட்ட எதையும் அவர் இல்லைன்னு சொன்னதே இல்ல. எந்த ஒரு ஈகோவும் இல்லாம, எல்லாரும் முன்னாடியும் அக்காவோட காலை அழுத்ததி விடுவாரு. ஆனா அதெல்லாம், அவர் மேல யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுங்குற ஒரே காரணத்துக்காக தான் செஞ்சாருன்னு எங்களுக்கு அப்ப தெரியாது" என்று தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு கூறிய ஓவியன்,
"நான் ஒருவேளை உன்னை ஏமாத்தினா நீ என்ன செய்வ?" என்றான்.
"நீங்க என்னை ஏமாத்த மாட்டீங்க ஏசி சார்"
"இரு..."
மேஜை டிராயரிலிருந்து குளோரோஃபார்ம் ஸ்பிரேவை எடுத்து அவளிடம் கொடுத்த ஓவியன்,
"இதை வச்சுக்கோ" என்றான்.
"என்ன இது?"
"ஒருவேளை நான் உன்னை ஏமாத்துறேன்னு உனக்கு தெரிஞ்சா, இத என் முகத்தில் அடி. நான் மயக்கம் போட்டு விழுந்திடுவேன். அதுக்கப்புறம் என் கையையும் காலையும் கட்டி போட்டு, என் வாயை பிளாஸ்டர் வச்சி ஓட்டிடு. என் தொடையிலிருந்து கொஞ்சம் சதையை வெட்டி எடுத்து, அதுல மிளகாய் தூள் போட்டு என்னை கொடுமை பண்ணு. அவ்வளவு சீக்கிரம் என்னை சாகடிச்சிடாத... கொஞ்சம் கொஞ்சமா டார்ச்சர் பண்ணி சாகடி"
இமைக்கவும் மறந்து திகிலுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் தூரிகை. தன்னைக் கொடுமைப் படுத்துவதற்கான உபாயங்களை அவளுக்கு அவனே சொல்லிக் கொடுக்கிறான். அவன் முகத்தை தன் கையில் ஏந்திய தூரிகை,
"ஏசி சார் ப்ளீஸ் ரிலாக்ஸ்..." என்றாள்.
"நான் அப்படிப்பட்ட ஆளுங்களை அடியோடு வெறுக்கிறேன் தூரி..."
அவனை இருக்கமாய் அணைத்துக் கொண்டாள் தூரிகை.
"எனக்கு தெரியும்" அவன் முதுகை வருடி கொடுத்தாள்.
"நீங்க அவ்வளவு கீழ்தரமா நடந்துக்க மாட்டீங்க. எனக்கு தெரியும். நான் உங்களை நம்புறேன்"
அவனும் அவளை அணைத்துக் கொண்டு,
"நான் எப்பவும் உன் நம்பிக்கையை உடைக்க மாட்டேன்" என்றான்.
"நீங்க எனக்கு ப்ராமிஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்ல. உங்களை மாதிரி நல்லவங்க எல்லாம் அப்படிப்பட்ட தப்பை செய்ய மாட்டீங்க"
"என்னை நம்பாதே... என்னை சந்தேகப்படு. என்னை நிறைய கேள்வி கேளு. என்னை சுதந்திரமா விடாதே"
"ரிலாக்ஸ்... என்ன ஆச்சு உங்களுக்கு?"
அவன் மன அழுத்தத்தில் இருப்பதை நன்றாகவே உணர்ந்தாள் தூரிகை. தன் அக்காவை பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் அவன் இப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகத் தான் செய்கிறான் போல் தெரிகிறது. அதனால் தான், பல மாதங்களாக அனைவரிடமிருந்தும் விலகியே இருந்திருக்கிறான்.ஊரே மெச்சும் ஒரு காவல் துறை அதிகாரி, தன் அக்காவின் நிலையால் ஆட்டம் கண்டு போயிருக்கிறான். எது அவன் மனதை இப்படி அழுத்திக் கொண்டிருக்கிறது? தன்னை சித்திரவதை செய்ய சொல்லி தானே யாருக்காவது உபாயம் சொல்வார்களா?
"நீ என்னை திட்டினப்போ எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது. நீ என் மேல இன்ட்ரஸ்ட் காட்டாதப்போ நான் ரொம்ப இம்ப்ரஸ் ஆனேன்" உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டே சென்ற அவன், அவளது மேற்கையைப் பிடித்து அழுத்தினான். அவளது உடலின் ரத்த ஓட்டமே அந்த இடத்தில் நின்று விட்டது போல் இருந்தது அவளுக்கு. அவனது பிடி அழுத்தமாய் பதிந்தது. அவனுக்குள் என்ன நடக்கிறது என்று அவளுக்கு புரியவில்லை.
"ஏசி சார்..." என்றாள்.
அவள் கூறிய விதம், அவளது வேதனையை சொன்னது. அவன் அழுத்திப் பிடித்திருந்த அவளது கரத்தை நோக்கி அவனது பார்வை சென்றது.
"ஐ அம் சாரி..."
தன் முஷ்டியை மடக்கி நெற்றிக்கு முட்டு கொடுத்தபடி கீழே பார்த்தபடி அமர்ந்தான் ஓவியன்.
"பரவாயில்லை விடுங்க" என்று அவன் தோளை தொட்டாள் தூரிகை.
"நான் இதுவரைக்கும் யார்கிட்டயும் என்னோட வாழ்க்கையில நடந்த பிரச்சனைகளை சொன்னதே இல்ல. அதை மறுபடியும் நினைச்சு பார்க்க நான் விரும்புறதில்ல. நான் உன்னை ஹர்ட் பண்ணிட்டேன். ஆனா அதை வேணும்னு செய்யல"
"எனக்கு தெரியும்"
"என்னை பார்த்தா உனக்கு பயமா இருக்கா?"
இல்லை என்று தலையசைத்தாள்.
"நீ பொய் சொல்ற"
"இல்லன்னு சொல்றேனே..."
"இப்போ நான் உன்னை கிஸ் பண்ணா உனக்கு பயமா இருக்குமா?"
இல்லை என்று தலையசைத்தாள். ஆனால் மெதுவாக.
"நான் உன்கிட்ட நெருங்கி வந்தா நீ பயப்படுவியா?"
அவனுக்கு பதில் கூறாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் தூரிகை.
"உன்னால என்னை கூல் பண்ண முடியும்னு நினைக்கிறேன்"
"அப்படி நடந்தா நான் சந்தோஷப்படுவேன்" என்றாள் தூரிகை.
"நம்ம நிறைய பேசிட்டோமே... கொஞ்ச நேரம் ஒண்ணா இருக்க முடியாதா?" என்றான்.
மெல்ல கண்களை மூடி தலையசைத்தாள் தூரிகை.
"என் பெயரை நீ சொல்லி நான் கேட்கணும்" என்று அவள் கழுத்தில் முத்தமிட்டான்.
அவள் கூற தன் பெயரைக் கேட்ட பிறகு, தன்னைத்தானே ஆசிவாசி படுத்திக் கொண்டு, அவள் மீது சரிந்தான் ஓவியன்.
"நான் உன்னை கஷ்டப்படுத்துறேனா?"
"இல்ல?"
"பொய் தானே சொல்ற?"
"அப்படியும் வச்சுக்கலாம்" என்று சிரித்தாள்.
"ஐ அம் சாரி. என்னோட கதையை பத்தி பேசாத. நான் மனுஷனாவே இருக்கிறது இல்ல"
"முகிலை எப்போ வீட்டுக்கு கூட்டிட்டு வர போறீங்க?"
"அவன் ரொம்ப வீக்கா இருக்கான். இன்னும் கொஞ்ச நாள் இன்குபேட்டர்ல இருக்கணும்னு டாக்டர் சொல்லிட்டாங்க"
"இப்போ நீங்க கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்றீங்களா?"
ஆம் என்று தலையசைத்த அவன்,
"உனக்கு தெரியுமா, நீ ரொம்ப அண்டர்ஸ்டாண்டிங்" என்றான்.
"தேங்க்ஸ்"
"நம்ம மேகாவை கூப்பிட போகணும்"
"ஆமாம்... இன்னும் டைம் இருக்கு"
"நீ போய் ரெடியாகு"
" சரி" என்று குளியல் அறையை நோக்கி சென்றாள் தூரிகை.
தனது கைபேசியை எடுத்து, சைலன்ட் மோடை மாற்றினான் ஓவியன். அப்பொழுது அவனது கைபேசியில் சில மிஸ்டு கால்கள் இருந்ததை பார்த்தான். அனைத்தும் ஒரே எண்ணில் இருந்து வந்திருந்தது. அந்த எண்ணுக்கு ஃபோன் செய்ய, அழைப்பு உடனே ஏற்கப்பட்டது.
"ஏசி சார், நான் தான் ஆஸ்பயர் ப்ரமோட்டர்ஸ் மேனேஜர் அகோர மூர்த்தி பேசுறேன்"
"சொல்லுங்க சார்"
"எனக்கு கொலைகாரன் கிட்ட இருந்து மெசேஜ் வந்திருக்கு சார்" அழாத குறையாய் கூறினான் அகோர மூர்த்தி.
தனது சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டான் ஓவியன். அந்த அழைப்பை எல்லோருக்கும் அனுப்பியதே அவன் தானே? ஆனால் ஓவியனின் முகம் மாறியது, அகோர மூர்த்தி கூறியதை கேட்டபோது.
"என்னை கொல்ல போறதா அந்த மெசேஜ்ல எழுதி அனுப்பி இருக்கான், சார்"
கொல்லப் போறதாகவா? அப்படி ஒரு குறுஞ்செய்தியை அவன் அனுப்பவில்லையே...? துணுக்குற்றான் ஓவியன்.
"அந்த மெசேஜ் பிரைவேட் நம்பர்ல இருந்தா வந்தது?"
"இல்ல சார். அது என்னோட நம்பர்ல இருந்து வந்தது"
"என்ன உளறுறீங்க?"
"என்னோட ஃபோன் நேத்து காணாம போச்சு சார்"
"ஃபோன் காணாம போனதுக்கு நீங்க போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலையா?"
"குடுக்கல சார். என்னால கொடுக்கவும் முடியாதே சார்..."
"ஆனா ஏன்?"
"அந்த ஃபோன்ல இருந்து நான் நான்சிக்கு நிறைய மெசேஜ் அனுப்பி இருக்கேன் சார். ஒரு வேலை, அவன் எல்லா மெசேஜையும் வெளியில விட்டுட்டா, என் மானம், மரியாதை எல்லாம் காத்துல போயிடும் சார். எனக்கு உங்களை விட்டா வேற யாருமே இல்ல சார். எனக்கு நான்சியோட தொடர்பு இருந்தது உங்களுக்கு மட்டும் தான் தெரியும். தயவுசெய்து எப்படியாவது என்னை காப்பாத்துங்க சார்" ஓவியனின் காலை பிடிக்காத குறையாய் கதறினான் அகோர மூர்த்தி.
தன் ஆள்காட்டி விரலால் தன் நெற்றியை தட்டினான் ஓவியன். இது என்ன புது குழப்பம்? யார் அவனுக்கு அப்படி ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியது? அவனுக்கு புரியவில்லை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top