25 முடிவு?
25 முடிவு?
எதற்காக அகிலன் இங்கு தூரிகையை பற்றி பேச வேண்டும் என்று குழப்பம் அடைந்தான் முருகன். தூரிகையும் இந்த வழக்கில் ஏதாவது ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டிருப்பாளோ? தன் நாக்கை கட்டுப்படுத்த முடியாமல் கேட்டே விட்டான் முருகன்.
"உனக்கு தூரிகை சிஸ்டரை பத்தி எப்படி தெரியும்? நீ எதுக்கு தேவையில்லாம இப்ப அவங்களை பத்தி பேசுற?"
"தேவையில்லாம பேசுறேனா? நிச்சயமா இல்லை முருகன் சார். இந்த கேஸோட துருப்புச் சீட்டே அவங்க தான். அவங்களால தான், இப்போ நீங்க இங்க என் முன்னாடி நின்னுகிட்டு இருக்கீங்க. அவங்க மட்டும் இந்த கேஸ்ல தலையிடாமல இருந்திருந்தா, நீங்க எப்பவுமே என்னை நெருங்கியிருக்க முடியாது. நான் சொல்றது சரி தானே ஏ சி சார்?"
"என்ன சார் இவன் இப்படி சொல்றான்? அவன் சொல்றது உண்மையா?"
"ஏசி சார் பொண்டாட்டியை பத்தி நான் பொய் சொல்லுவேன்னு நீங்க நினைக்கிறீங்களா?"
திகிலுடன் ஓவியனை ஏறிட்டான் முருகன். அவன் காட்டிய அமைதி, அவனுக்கு பயத்தை உண்டு பண்ணியது. தூரிகை இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவளா?
"சார், உங்க போலீஸ் மூளைய வச்சி, இல்லாததையும் பொல்லாததையும் யோசிக்காதீங்க. அவங்க இந்த கேஸ்ல நேரடியா சம்பந்தப்பட்டவங்க இல்ல. அவங்க மட்டும் இல்லன்னா, உங்களுக்கு என் மேல சந்தேகம் வந்திருக்காதுன்னு தான் சொன்னேன்"
முருகன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
"ஆனா, அவங்க மட்டும் இந்த கேஸ்ல சம்பந்தப்படாம இருந்திருந்தா, ஏ சி சார் அவங்களை கல்யாணம் பண்ணி இருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன்" என்றான் புன்னகையுடன்.
முருகன் மேலும் குழப்பம் அடைந்தான்.
"நான் ஈஸ்வரன் சாரோட பையனுக்கு ஆதார் கார்டை கொடுக்க அவன் கைரேகையை கேட்ட போது தான், ஏசி சார் தூரிகை மேடம் சம்பந்தப்பட்ட விஷயத்தை தொடர்பு படுத்திப் பார்த்து நான் தான் கொலைகாரனா இருக்கணும்னு முடிவுக்கு வந்திருப்பார். நான் சொல்றது சரி தானே சார்?"
"என்ன தொடர்பு?" என்ற முருகன்.
"தூரிகை மேடம் கைரேகை பதிஞ்ச கத்தி தான் இந்த கேஸோட துருப்பு சீட்டு"
"கைரேகை பதிஞ்ச கத்தியா? நீ என்ன சொல்ற?" என்றான் அதிர்ச்சியுடன் முருகன்.
"பயப்படாதீங்க முருகன் சார். நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல. நான் கல்பனா வீட்டுக்கு போன போது, அங்க தூரிகை மேடத்தை பார்த்தேன். நான் அவளை எரிச்ச போது, அவங்க அங்க தான் ஒளிஞ்சிக்கிட்டு இருந்தாங்க. அவங்க கொண்டு வந்த கத்தியை பயத்துல கீழ போட்டுட்டு அங்கிருந்து ஓடி போய்ட்டாங்க. அவங்க முகத்தைக் கூட நான் சரியா பாக்கல. அவங்க விட்டுட்டு போன கத்தி தான் அவங்க யாருன்னு கண்டுபிடிக்க எனக்கு உதவியா இருந்துச்சு. நான் ஆதார் செக்ஷன்ல வேலை செய்றதால, அவங்களோட கைரேகை பதிஞ்ச கத்தியை ஸ்கேன் பண்ணி, அவங்க யாருன்னு கண்டுபிடிச்சேன். அதுவரைக்கும் அவங்க யாருன்னு எனக்கு எதுவும் தெரியாது. நான் எடுத்த டீடைல்ஸை வச்சி, அவங்க தான் கல்பனாவோடு கள்ள தொடர்பு வச்சிருந்த, கொஞ்ச நாளைக்கு முன்னாடி தன் மனைவியோடு செத்துப்போன கார்மேகத்தோட தங்கச்சின்னு தெரிஞ்சுகிட்டேன். தூரிகை அங்க ஏன் வந்தாங்கன்னு யூகம் பண்றதுல எனக்கு எந்த சிரமமும் இருக்கல. தன்னோட வாழ்க்கையை மோசமான நிலைக்குத் தள்ளிவிட்ட கல்பனாவை மிரட்டத் தான் அவங்க கத்தியோட அங்கு வந்திருக்கணும்"
"இல்ல... அவ அங்க வந்தது, தன் அண்ணியோட சாவுக்கு காரணமான கல்பனாவை அந்த கத்தியால காயப்படுத்த" என்றான் ஓவியன்.
அதைக் கேட்ட முருகன் அதிர்ச்சி அடைந்தான். தனக்குத் தெரியாத பல விஷயங்கள் அந்த வழக்கில் இருப்பது அவனுக்கு நம்ப முடியாததாய் இருந்தது.
"அப்படியா? எதுவா வேணும்னாலும் இருக்கட்டும். கல்பனா மேல கோவத்துல இருந்த அவங்க, நிச்சயம் ரொம்ப நல்ல பொண்ணா தான் இருக்கணும்"
"அவ நல்ல பொண்ணுன்னு தெரிஞ்சிருந்தும், அவளை எதுக்காக மிரட்டின?"
"ஏன்னா, நீங்க ரெண்டு பேரும் பக்கத்து வீட்டுக்காரங்க. என்னை கண்ணால பார்த்த ஒரே ஒரு சாட்சி அவங்க மட்டும் தான். நான் மாஸ்க் போட்டு இருந்தாலும் கூட, இந்த விஷயத்துல நான் ரிஸ்க் எடுக்க விரும்பல. அதுவும் அவங்களை உங்க கூட ஷாப்பிங் மால்ல பார்த்த பிறகு, நான் உஷாரானேன்"
"அதுக்காக, அவளை லாரி வச்சு இடிக்க பாப்பியா நீ?" என்றான் பல்லை கடித்துக் கொண்டு கோபமாய் ஓவியன்.
"இல்ல சார். சத்தியமா அது எதிர்பாராம நடந்த ஒரு விபத்து தான். அதை நான் எனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டேன் அவ்வளவு தான். ஆனா அதுக்காக நீங்க எனக்கு நன்றி தான் சொல்லணும். அதுக்கு பிறகு தானே நீங்க அவங்களை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டீங்க...!"
அதைக் கேட்ட முருகன் மேலும் அதிர்ச்சியானான். அப்படி என்றால், திருமணத்திற்கு முன்பே அவர்கள் இருவரும் ஒன்றாகவா வாழ்ந்து கொண்டிருந்தார்கள்?
"தூரிகை ரொம்ப நல்ல பொண்ணு. அவங்களுக்கு ஒரு பாதுகாப்பான இடமும், சாஞ்சிக்க உண்மையான தோளும் கிடச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். அதோட மட்டுமில்லாம, கல்யாணமே பண்ணிக்க கூடாதுன்னு நினைச்சுக்கிட்டு இருந்த ஏசி சாருக்கு, தூரிகை நல்ல பொண்ணு தெரிஞ்ச பிறகு தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு எண்ணமே வந்தது"
"இதெல்லாம் உன்னை சட்டத்துக்கிட்ட இருந்து காப்பாத்தும்னு நீ நினைக்கிறியா?" என்றான் முருகன்.
"நிச்சயமா இல்ல... எனக்குன்னு தனி சட்டம் இருக்கு. நான் செஞ்சது தப்புன்னு எனக்கு தோணல"
"நீ செஞ்சது தப்பு தான். நீ எப்படி இவ்வளவு ஓரவஞ்சனை செய்ய முடியும்? நீ கொன்னது பெண்களை மட்டும் தான். ஏன், ஆம்பளைங்களும் தானே தப்பு செஞ்சாங்க ? அப்படின்னா அவங்களையும் தானே நீ கொன்னு இருக்கணும்? எதுக்காக பொம்பளைங்களை மட்டும் கொன்ன? ஆம்பளைங்க ஏமாத்துக் காரங்க இல்லையா?"
"நிச்சயமா அவங்க ஏமாத்துக்காரங்க தான். ஆனா, ஏமாத்துகரங்களோட மனைவிங்க ரொம்ப நல்லவங்க சார். தன் புருஷன் தன்னை ஏமாத்திட்டாருன்னு தெரிஞ்சா, அவங்க எவ்வளவு உடஞ்சி போவாங்க தெரியுமா? தான் செய்யாத ஒரு தப்புக்காக அவங்க ஏன் சார் தண்டனையை அனுபவிக்கணும்? ஆரம்பத்துல கஷ்டப்பட்டாலும், ஆம்பளைங்களுக்கு தன்னோட மனசை மாத்திக்கிறது அவ்வளவு கஷ்டம் இல்ல. ஆனா பொம்பளைங்களால அதை அவ்வளவு ஈஸியா செய்ய முடியாது. அதுவும் நேர்மையா வாழற பொம்பளைங்களா அதை செய்யவே முடியாது. தான் ஏமாற்றத்திற்கு ஆளாயிட்டோம்னு தெரிஞ்சா, செத்து செத்து பிழைக்கணும் சார். துரோகத்தை தாங்கிக்கிட்டு வாழுறது ரொம்ப கொடுமையான விஷயம். அவங்க தற்கொலை பண்ணிக்கவும் வாய்ப்பிருக்கு... ஏசி சாரோட அக்காவும், தூரிகையோட அண்ணியும் செஞ்ச மாதிரி... ஏன்னா, அவங்களைப் பொறுத்த வரைக்கும், அவங்களுக்கு, அவங்க குடும்பம் தான் உலகம். தன் புருஷன் தன்னோட அன்புக்கு யோகியதையானவர் இல்லன்னு தெரிஞ்சா, அந்த உலகம் நரகமா மாறிடும். அதே யோக்கியதை இல்லாத ஒரு ஆளுக்காக, சுத்தமா நொறுங்கிப் போயிடுவாங்க. அப்படி நடக்கிறதுல எனக்கு விருப்பம் இல்ல. அதனால தான் இந்த மாதிரி வாழ்க்கை வாழற எல்லாரையும் நான் மிரட்ட ஆரம்பிச்சேன். கொலைகாரன் கிட்ட இருந்து மிரட்டல் வந்தா, அவங்களோட மனநிலை எப்படி இருக்கும் தெரியுமா சார்? ஒவ்வொரு நாளும் அவங்க பயத்துல சாகணும். ஏசி சாரோட மாமா, நான் லாரி ஏத்தி கொன்னதால செத்துப் போனான். மாளவிகாவோட தொடர்பு வச்சிருந்த ஆள், அவங்க வைஃப் தற்கொலை பண்ணிக்கிட்டதால, இப்போ ஜெயில்ல இருக்கான். தூரிகையோட அண்ணனும் செத்துப் போயிட்டான். ஆஸ்பயர் ப்ரமோட்டர்ஸ் அகோர மூர்த்தி ஒருத்தன் தான் இன்னும் உயிரோட இருக்கான். அவனோட மனைவி ரொம்ப நல்லவங்க. அந்த ஆளை கடவுள் மாதிரி நினைக்கிறாங்க. அந்த ஆளைப் பத்தின உண்மை தெரிஞ்சா நிச்சயம் அவங்க உயிரோட இருக்க மாட்டாங்க. அது நடக்கணுமா? அப்படிப்பட்ட நல்ல பொம்பளை சாகணும்னு நீங்க நினைக்கிறீங்களா சார்?"
"அப்படின்னா, பொம்பளைங்க விஷயத்துலயும் நீ அதையே செஞ்சிருக்கலாமே...?"
"இப்போ நான் அதைத் தான் செஞ்சு கிட்டு இருக்கேன். நான் ஏற்கனவே சில பேரைக் கொன்னதால, இப்போ நிச்சயம் எல்லாருக்கும் என் மேல பயம் இருக்கும்."
ஓவியனின் கையில் இருந்த கைபேசியை சுட்டிக்காட்டிய அகிலன்,
"அந்த ஃபோன்ல இருக்கிறது எல்லாமே அப்படிப்பட்ட பொம்பளைங்களோட நம்பர் தான். அந்த லிஸ்ட்டை பார்த்தா மயக்கம் போட்டு விழுந்திடுவீங்க. நம்ம சமுதாயம் அந்த அளவுக்கு கேடு கெட்டு போய் கிடக்குது சார். நல்லவங்க ரொம்ப குறைஞ்சு போயிட்டாங்க" என்றான் அலுப்புடன்.
"எத்தனை, பெரிய மனுஷனுங்க உன்னை பிடிக்கறதுக்காக எங்களுக்கு பிரஷர் கொடுக்கிறாங்கன்னு உனக்கு தெரியுமா?"
"அப்படித்தான் நடக்கும்னு எனக்கு நல்லா தெரியும். ஒவ்வொரு நொடியும் நான் என்னோட சாவை எதிர்பார்த்துகிட்டு தான் இருக்கேன். நான் அதை பத்தி கவலைப்படல. ஆனா, என் சாவுக்குப் பிறகு காம வெறி பிடிச்ச மிருகங்க நிம்மதியாயிடும். அதை நினைச்சுத்தான் நான் கவலைப்படுறேன்"
"உன்னோட சாவு, நீ நினைக்கிற அளவுக்கு, அவளுக்கு சுலபமா இருக்காது"
அதை கேட்டு அகிலன் வாய்விட்டு சிரித்தான்.ஓவியனும் முருகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"எதுக்காக இப்ப நீ சிரிக்கிற?" என்றான் ஓவியன்.
"நான் என்னோட சாவு எப்படி இருக்கும்னு நினைக்கல... அது எப்படி இருக்கணும்னு திட்டம் போட்டு கிட்டு இருக்கேன்"
"நீ என்ன சொல்ற?" என்றான் ஓவியன் பதட்டத்துடன்.
"நான் ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர். அகடமிக்ல நான் ரொம்ப ஸ்மார்ட் இல்லனாலும், ஹேக்கிங்லயும் புது விஷயங்களை கண்டுபிடிக்கிறதுலையும் எனக்கு ரொம்ப ஆர்வம் அதிகம்"
"அதனால?"
"என்னோட ஃபிரண்டு ஒரு டாக்டர். அவனோட கிளினிக்கில, அவனுக்கு ஹெல்பரா கொஞ்ச நாள் வேலை செஞ்சிருக்கேன். சின்ன சின்ன ஆபரேஷன் கூட என்னால தனியா பண்ண முடியும் தெரியுமா? ரெவன்யூ டிபார்ட்மெண்ட்ல சேர்ந்ததுக்கு பிறகு, என்னோட இன்ஜினியரிங் திறமையை பயன்படுத்துற சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கல. என் பொண்டாட்டி கூட நேரம் செலவு பண்ணவே எனக்கு டைம் கிடைக்கலையே... அப்புறம் நான் எங்க இதை பத்தியெல்லாம் யோசிக்கிறது?" என்று வலி நிறைந்த புன்னகை சிந்தினான் அகிலன்.
ஓவியனும் முருகனும், அவன் ஏன் இப்பொழுது தனது வாழ்க்கை வரலாற்றை கூறுகிறான் என்று ஒன்றும் புரியாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"ஆனா, என்னோட வைஃப் இறந்ததுக்கு பிறகு, எனக்கு புதுசா சில விஷயங்களை கண்டுபிடிக்க நிறைய டைம் கிடைச்சது. என்னால அதை எல்லாம் இப்பவும் செய்ய முடியுதுன்னு நினைச்சா எனக்கு ஆச்சரியமா இருக்கு"
"நீ என்ன செஞ்ச?" என்றான் ஓவியம் பதட்டத்துடன்.
"ஒரு சாட்டிலைட் ஃபோன்... அப்புறம் ஒரு மைக்ரோ சிப்"
"என்ன சிப்?"
"அதை *சூசைட் சிப்*புன்னு சொல்லலாம்"
"என்ன சொல்ற நீ?" என்றார்கள் ஓவியன் முருகனும் ஒருமித்த குரலில்.
"நான் எப்ப வேணா பிடிபடலாம்னு எனக்கே தெரியும் போது, நான் எல்லாத்துக்கும் தயாரா தானே இருப்பேன்?"
அவனுடைய கண்கள் ஓவியனின் மீது நிலை குத்தி நின்றது.
"நீ என்ன செய்யப் போற?" என்றான் ஓவியன் நடுக்கத்துடன்.
"நீங்க என்ன நெனச்சிட்டு இருக்கீங்க? எதுக்காக ஒரு நல்ல ஸ்டுடென்ட் மாதிரி எல்லாத்தையும் நான் உங்ககிட்ட ஒப்பிச்சிக்கிட்டு இருக்கேன்?" என்று சிரித்தவன்,
"எனக்காக ஒரு விஷயம் செய்யுங்க... இது எல்லா புருஷனுங்களுக்காகவும்... மனைவியோட செலவு பண்ண நேரம் ஒதுக்குங்க. வேலை முக்கியம் தான்... அதேநேரம், குடும்பமும் முக்கியம். உங்களோட இடத்தை வேற ஒருத்தன் பிடிக்க சந்தர்ப்பம் கொடுத்துடாதீங்க." தன் விழியோரம் கசிந்த நீரை துடைத்துக் கொண்டு,
"தூரிகை சிஸ்டருக்கு என்னோட திருமண வாழ்த்துக்களை சொல்லிடுங்க... குட் பை"
தன் கழுத்தில் அணிந்திருந்த சிறிய டாலரை பற்றினான். அவனை நோக்கி ஓவியன் செல்ல முனைந்தான்... ஆனால் அதற்கு முன்பாகவே அகிலன் அந்த டாலரை அழுத்திவிட்டான். அகிலனின் இதயத்திற்கு வெகு அருகில், அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டிருந்த அந்த சூசைட் சிப் வெடித்துது. ஓவியனின் கையை பற்றி அவனை பின்னால் இழுத்தான் முருகன். பின்னால் சென்று விழுந்த அவர்கள், அகிலனை ஏறிட்டார்கள். போலியில்லாத புன்னகை ஏந்திய அகிலனின் உயிரற்ற உடல், தரையில் சரிந்து கிடந்தது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top