21 சப்பாத்தியும் கைப்பழக்கம்
21 சப்பாத்தியும் கைப்பழக்கம்...
தூரிகை, ஓவியனின் காலை தட்ட, திடுக்கிட்டு எழுந்தான் ஓவியன்.
"என்ன ஆச்சு?"
"நான் மேகாவை எழுப்ப போறேன்"
"ஓ..."
சோபாவில் இருந்து இறங்கிய அவன், தூரிகை தடுப்பதற்கு முன், கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான்.
"நான் உங்களை உங்க ரூமுக்கு போக சொல்ல தான் எழுப்பினேன்"
"ஏன்? மேகா என்னை இங்க தானே தூங்க சொன்னா?"
"அவ உங்களை இந்த பார்த்தா, தினமும் அவ தூங்கி எழுந்துக்கும் போது, நீங்க இங்க இருக்கணும்னு நினைப்பா"
"அப்படியா?" என்று கூறிவிட்டு,
அவனே மேகாவை தட்டி எழுப்ப, *என்ன மனிதன் இவன்?* என்பது போல் அவனை பார்த்துக் கொண்டு நின்றாள் தூரிகை. ஓவியனை பார்த்த மேகா, பளிச்சென்று புன்னகைத்தாள்.
"குட் மார்னிங் மாமா"
"குட் மார்னிங் டா கண்ணா"
"நீங்களும் எங்க கூட தான் தூங்கினீங்களா?"
"பின்ன? நான் இங்க தான் தூங்கணும்னு நீ சொன்ன பிறகு, நான் எப்படி என்னோட ரூமுக்கு போவேன்?" என்றான், தன்னைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்ற தூரிகையை பார்த்தபடி.
"போய் சீக்கிரமா ஸ்கூலுக்கு ரெடியாகு. இன்னைக்கு சாயங்காலம் நீ உன்னோட பாட்டி வீட்டுக்கு போகணும் இல்ல?" என்றான் ஓவியன்.
"ஆமாம். நகுல் வர போறான்"
கட்டிலை விட்டு கீழே இறங்கி குளியல் அறைக்கு சென்றாள் மேகா.
"என்ன வேலை செஞ்சு வச்சிருக்கீங்க நீங்க?" என்றாள் துரிகை.
"நான் என்ன செஞ்சேன்?"
"மேகா நிறைய கேள்வி கேட்பா"
"அதனால?"
"நீங்க சோபாவுல தூங்குறத பாத்து, அவ கேட்டா என்ன சொல்றது?"
"நீ கவலைப்படாதே, அவ கேள்வி கேக்குற மாதிரி நான் வச்சிக்க மாட்டேன்"
"அப்படின்னா?"
"கட்டில தூங்குவேன்... சிம்பிள்..." என்றபடி சிரித்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றான்.
தூரிகை அலுப்புடன் பெருமூச்சு விட்டாள்.
சமையலறை
மேகாவுக்கு பிடிக்கும் என்பதற்காக சப்பாத்தி செய்து கொண்டிருந்தாள் தூரிகை. பாவம் அவள், எவ்வளவு முயன்ற போதும் அந்த சப்பாத்தி வட்ட வடிவில் வரமாட்டேன் என்றது. ஆஸ்திரேலியா வரைபடம் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளின் வரைபடங்களை, அவள் சப்பாத்தி என்ற பெயரில் உருட்டிக் கொண்டு இருந்தாள்.
"கடவுளே, எப்படித் தான் அம்மாவும் அண்ணியும் அவ்வளவு அழகா சப்பாத்தி சுட்டாங்களோ தெரியல..." தனக்குத்தானே புலம்பினாள்.
"அவங்களுக்கு அடிக்கடி செஞ்ச அனுபவம் இருந்தது" என்ற குரல் கேட்டு சமையலறையின் நுழைவு வாயில் பக்கம் திரும்பினாள். அங்கு ஓவியன் புன்னகையுடன் நின்றிருந்தான்.
"சித்திரம் மட்டும் கைப்பழக்கம் இல்ல... சப்பாத்தியும் கைப்பழக்கம் தான்" என்றான்.
"என்னோட அண்ணி என்னை சமைக்க விட்டதே இல்ல" என்றாள் சலிப்புடன்.
"சரி விடு... நான் சொல்லி தரேன்"
அவள் எதிர்பாராத வண்ணம், அவள் பின்னால் வந்து நின்றவன், ஒரு சப்பாத்தி மாவின் உருண்டையை எடுத்து, சப்பாத்தி கல்லில் வைத்தான். அவளது கரங்களை பற்றி கொண்டு, எப்படி மாவை உருட்டுவது என்று கற்றுத்தர துவங்கினான்.
"சப்பாத்தி மாவுல, கோதுமை மாவை நல்லா பிறட்டிக்கோ. சப்பாத்தி கல்லுல வச்சி லேசா அழுத்தி, மெதுவா தேய்க்க தொடங்கு..."
எனக்குத் தெரிந்தவரை, இந்த விதத்தில் சப்பாத்தி செய்ய கற்றுக் கொடுத்தால், எந்த பெண்ணும் உருப்படியாய் கற்றுக் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. தூரிகையின் நிலையும் அது தான். இதுவரை அவளைதொட்டுக் கூட இல்லாத அவளது கணவன், அவளை கட்டி பிடிக்காத குறையாய் பின்னால் நின்று கொண்டு, அவளுக்கு கற்றுக் கொடுத்தால், அவளது நிலைமை என்னவாகும்? இந்த விதத்தில் சப்பாத்தி செய்ய கற்றுக் கொடுத்த ஒரே ஒருவன், நமது ஓவியனாகத் தான் இருப்பான். சப்பாத்தி செய்ய கற்றுக் கொள்கிறேன் பேர்வழி என்று, தன் கணவனின் கைகளுக்குள் மாட்டிக் கொண்ட ஒரே பெண் தூரிகையாக தான் இருப்பாள்.
"உன்னால இப்ப செய்ய முடியுமா?" என்றான்.
முடியும் என்பது போல், மாவை பார்த்தபடி தலையசைத்தாள் தூரிகை. தன் கைகளை அவள் தோள்களின் மீது வைத்துக் கொண்டு,
"ஒண்ணு ட்ரை பண்ணு" என்றான்.
அவன் உண்மையிலேயே மிகவும் சாதாரணமாக தான் இருக்கிறானா? அல்லது இருப்பது போல் காட்டிக் கொள்கிறானா? தான் என்ன செய்கிறோம் என்று அவனுக்கு புரிந்து தான் இருக்கிறதா? ஆம், தான் செய்வது என்ன என்பது அவனுக்கு தெரிந்து தான் இருந்தது.
மற்றும் ஒரு மாவு உருண்டையை எடுத்து, கோதுமை மாவில் நனைத்து, அதை உருட்ட முயன்றாள் தூரிகை. ஆனால் பாவம், அவளால் வட்ட வடிவ சப்பாத்தி செய்ய முடியவில்லை.
அங்கிருந்த ஒரு டப்பாவின் மூடியை திறந்து, அதை மாவில் வைத்து அழுத்தி எடுத்தான் ஓவியன். அதன் வட்ட வடிவத்தை பார்த்த தூரிகையின் முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடியது.
"நீ சரியா கத்துகிற வரைக்கும், இந்த டெக்னிக்கை ஃபாலோ பண்ணிக்கோ"
அந்த இடத்தை விட்டு அகன்றான் ஓவியன். தூரிகைக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவளுக்கு வட்ட வடிவ சப்பாத்தி செய்யும் விதம் பிடிபட்டுவிட்டது அல்லவா?
.......
ஓவியன் அலுவலகம் வந்த போது, ஈஸ்வரன் முருகனிடம் எரிச்சலுடன் பேசிக்கொண்டிருந்தான்.
"நான் எத்தனை நாளைக்கு கலெக்டர் ஆஃபீசுக்கு நடையா நடக்கணும்னு தெரியல"
"என்ன ஆச்சு?" என்றான் ஓவியன்.
"அவரோட பையன், ஆதார் கார்டை தொலைச்சிட்டானாம் சார்" என்றான் முருகன்.
"அதோட ஜெராக்ஸ் காப்பி எதுவும் இல்லையா?" என்றான் ஓவியன்.
"ஜெராக்ஸ் எடுக்க போகும் போது தான் சார் தொலைச்சுட்டான்"
ஓவியனுக்கு சிரிக்க வேண்டும் என்று தோன்றியது.
"உங்களுக்கு தான் தெரியுமே சார்... அவன் கோயம்புத்தூரில் படிச்சுக்கிட்டு இருக்கான். எக்ஸாமுக்கு அப்ளை பண்றதுக்கு, அவனுக்கு ஆதார் கார்டு அவசரமா தேவை. அதுக்கு தான் சார் ஜெராக்ஸ் எடுக்க போயிருக்கான். போன இடத்துல, எங்கேயோ தவற விட்டுட்டான்" என்றார் கவலையாக ஈஸ்வரன்.
"முருகன், அகிலனுக்கு ஃபோன் பண்ணி, இதுக்கு என்ன வழின்னு கேளுங்க" என்றான் ஓவியன்.
"அட ஆமாம்... அகிலன் ஆதார் செக்ஷன்ல தானே வேலை செய்றாரு..." என்றான் குதூகலமாய் முருகன்.
"யாரு?" என்றான் ஈஸ்வரன்.
"செங்கல்பட்டுக்கு, ஃபிரண்டு கல்யாணத்துக்கு போறேன்னு ஸ்டேட்மெண்ட் எழுதி கொடுத்துட்டு போனாரே... அவர் தான்" என்றான் முருகன்.
"அவரால ஹெல்ப் பண்ண முடியுமா?"
"நிச்சயமா முடியும்"
தனது கைபேசியை எடுத்த முருகன், அகிலனுக்கு ஃபோன் செய்தான்.
"குட் மார்னிங் சார்" என்றான் அகிலன்.
"செங்கல்பட்டுக்கு போய் சேர்ந்துட்டீங்களா?"
" நேத்து ராத்திரியே வந்துட்டேன் சார்"
"நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்"
"சொல்லுங்க சார். எந்த ஹெல்ப்பா இருந்தாலும் செய்றேன்"
"நம்ம ஸ்டேஷன்ல இருக்குற ஈஸ்வரோட பையன், ஆதார் கார்டை தொலைச்சிட்டான். மறுபடியும் ஆதார் கார்டு வாங்கணும்னா என்ன செய்யணும்?"
"அதோட ஜெராக்ஸ் காப்பி இருந்தா போதும் சார்"
"ஜெராக்ஸ் காப்பி எடுக்கறதுக்கு முன்னாடி தான் தொலைச்சிட்டான்"
"அப்படின்னா அவரை ஆஃபீசுக்கு வர சொல்லுங்க சார். நான் ஒரு நாளில் எடுத்துக் கொடுத்துடுறேன்"
"அவனால சென்னைக்கு இப்ப வர முடியாது. அவன் கோயம்புத்தூரில் படிச்சுக்கிட்டு இருக்கான். எக்ஸாமுக்கு அப்ளை பண்ணனுமாம். அதனால தான் அவசரமா தேவைப்படுது"
"அப்படியா சார்..." என்று தீவிரமாய் யோசித்த அகிலன்,
"சரி. அவனோட பெருவிரல் ரேகையை மட்டும் வாட்ஸ் அப்ல அனுப்பி வைக்க சொல்லுங்க"
"அது போதுமா?" என்றான் முருகன்.
"போதும் சார். அதை ஸ்கேன் பண்ணி, நான் அவனோட ஆதார் டீடைல்ஸை எடுத்துடுவேன்"
"பரவாயில்லையே... சரி நான் அவர்கிட்ட அனுப்ப சொல்றேன்"
"நான் நாளைக்கு தான் சார் சென்னைக்கு வருவேன். நாளன்னைக்கு உங்களுக்கு ஆதார் கார்டு கிடைச்சிடும்"
"தேங்க்யூ" என்று அழைப்பை துண்டித்த முருகன்,
"பிரச்சனை முடிஞ்சது" என்றான் ஈஸ்வரிடம்.
"பிரச்சனை முடிஞ்சிடுச்சா?" என்றான் ஓவியன்.
"முடிஞ்சிடுச்சு சார். உங்க ஐடியாவுக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்றான் ஈஸ்வர்.
"தேங்க்ஸை அகிலனுக்கு சொல்லுங்க" என்றான் ஓவியன்.
.......
தனது பாட்டி வீட்டிற்கு செல்ல தயாரானாள் மேகா. தான் எடுத்து வைத்திருந்த மேகாவின் பொருள்களை அவளது பாட்டியிடம் கொடுத்தாள் தூரிகை.
"நீங்க எப்ப மும்பை போறீங்க ஆன்ட்டி?"
"நாளைக்கு ராத்திரி கிளம்பறோம் மா"
"நாளைக்கு காலையில நான் வந்து மேகாவை கூட்டிக்கிட்டு வந்துடறேன்" என்றாள் தூரிகை.
"நாளைக்கு சனிக்கிழமை. மேகாவுக்கு ஸ்கூல் லீவு தானே? அவ நாளைக்கு சாயங்காலம் வரைக்கும் என் கூட இருக்கட்டும்"
"அவ இங்க வரணும்னு அடம் பிடிச்சா, எனக்கு எப்ப வேணும்னாலும் கால் பண்ணுங்க"
"சரி மா... உன்னோட வீட்டுக்காரர் எப்ப வருவாரு?"
"அவர் வர லேட் ஆகும் ஆன்ட்டி"
"நான் அவரை பார்க்கலாம்னு நினச்சேன்"
தனது கைபேசியை எடுத்து, முதல் நாள், ஓவியன் அவளுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவரிடம் காட்டினாள் தூரிகை.
"இவர் தான் என்னோட ஹஸ்பண்ட்"
"இவரா? இவர் தானே நம்ம கொண்டல் கேசை விசாரிக்கிறவர்?"
"ஆமாம் ஆன்ட்டி.
"இவருக்கு உங்க அண்ணனை பத்தி தெரியுமா?"
"அவருக்கு எல்லாம் தெரியும். அது மட்டும் இல்ல. முதல் முதல்ல கொலையான சுபாஷினியால பாதிக்கப்பட்டது அவங்க அக்கா தான்"
"நெஜமாவா சொல்ற?"
"ஆமாம். அவங்க அக்காவோட வீட்டுக்காரரும் என் அண்ணனை மாதிரி தான். அவங்க அக்கா, தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணி, இப்போ கோமா ஸ்டேஜ்ல இருக்காங்க"
"மத்தவங்க செஞ்ச தப்புக்காக தண்டனை அனுபவிக்கிறதே நல்ல பொம்பளைங்களுடைய தலையெழுத்தா போயிடுச்சு" என்று நொந்து கொண்டார் மேகாவின் பாட்டி.
"அது அவருக்கும் தெரியும் ஆன்ட்டி. அவரும் நேரடியா பாதிக்கப்பட்டவர் அப்படிங்கிறதால, அவர் என்னை ஏமாத்த மாட்டார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு"
"அப்படி இருந்தா எல்லாருக்கும் சந்தோஷம்." என்று சற்றே நிறுத்தியவர்,
"உங்களுக்கு ஆட்சேபனை இல்லனா, நான் மேகாவை மும்பைக்கு கூட்டிகிட்டு போயிடுறேன்" என்றார்.
அவருக்கு தூரிகை பதிலளிக்கும் முன்,
"எங்களுக்கு நிச்சயமா ஆட்சேபனை இருக்கு" என்றான் அங்கு வந்த ஓவியன்.
"நான் எதுக்கு சொல்றேன்னா..." என்று தயங்கினார் அவர்.
"நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்கு புரியுது. நீங்க மேகாவை பத்தி கவலைப்பட வேண்டாம். அவ எங்க குழந்தை. நாங்க அவளை பார்த்துக்குவோம்" என்றான் ஓவியன்.
"நான் அதுக்கு சொல்லல தம்பி. நீங்க புதுசா கல்யாணம் ஆனவங்க. உங்களுக்கும் பிரைவசி வேணுமில்லையா?"
"மேகாவுக்கு அப்பாற்பட்டு எங்களுக்கு பிரைவசி அவசியமில்ல. அவ எங்கள்ல ஒருத்தி. அவளுக்கு நாங்க வேணும். அதே மாதிரி தான் எங்களுக்கும் அவ வேணும்"
அவனது வார்த்தைகள், மேகாவின் பாட்டிக்கே நெகழ்ச்சியை அளித்ததென்றால், தூரிகையைப் பற்றி கூற வேண்டியது இல்லை அல்லவா...? அவளும் நெகழ்ந்து தான் போனாள்.
"சரி... நான் மேகாவை கூட்டிக்கிட்டு போறேன்"
"சரிங்க ஆன்ட்டி"
"நாங்க நாளைக்கு வந்து மேகாவை கூட்டிக்கிட்டு வரோம்" என்றான் ஓவியன்.
சரி என்று தலையசைத்தார் மேகாவின் பாட்டி.
"மேகு, உனக்கு ஏதாவது வேணும்னா எனக்கு கால் பண்ணு" என்றான் ஓவியன்.
"ஓகே மாமா, பை..."
"பை..."
கை அசைத்தபடி தன் பாட்டியுடன் சென்றாள் மேகா.
"நீங்க லேட்டா வருவீங்கன்னு நினைச்சேன்" என்றாள் தூரிகை.
"மேகா அவ பாட்டியோட போறான்னு தெரிஞ்சு, நான் எப்படி லேட்டா வருவேன்?"
"ம்ம்ம் "
"அதே நேரம், நான் எப்படி என் வைஃபை தனியா விட்டிட முடியும்?"
அவன் கூறியது காதில் விழாதது போல, கதவை சாத்தினாள் தூரிகை.
"உங்களுக்கு காபி வேணுமா?"
"கண்டிப்பா"
சமையலறைக்கு சென்றாள் துரிகை.
"நீயாவே காபி போட்டுடுவியா? இல்ல, நான் ஹெல்ப் பண்ணணுமா... காலையில ஹெல்ப் பண்ண மாதிரி?" என்றான்.
தன் விழிகளை விரித்து அவனை வெறித்த பார்த்தாள், அதை நீ வேண்டுமென்று தான் செய்தாயா? என்பது போல். அவன் உதட்டில் தவழ்ந்த கள்ள புன்னகை கூறியது, அவன் அதை தெரிந்து தான் செய்தான் என்று.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top