20 திருமண ஊர்ஜிதம்
20 திருமண ஊர்ஜிதம்
காவலர்கள் குடியிருப்பில் இருந்த தன் வீட்டின் பால்கனியில் அமர்ந்திருந்த முருகன், ஆச்சரியத்தில் ஆழ்ந்திருந்தான். ஓவியனுக்கு தூரிகையுடன் திருமணம் முடிந்து விட்டது. எதற்காக அவன் அவளை ரகசியமாய் திருமணம் செய்து கொண்டிருக்கிறான்? அதற்கு என்ன அவசியம் வந்தது? அவனுக்கு மேலும் ஆச்சரியம் அளித்தது என்னவென்றால், நந்தகுமாரின் கோபம். அவனுக்கு நந்தகுமாரை பல ஆண்டுகளாய் தெரியும். அவன் இவ்வளவு கோபப்பட்டு முருகன் இதற்கு முன் பார்த்ததில்லை.
ஆம், ஓவியனும், தூரிகையும் நந்தகுமாரை சந்தித்த அதே சூப்பர் மார்க்கெட்டில் முருகனும் இருந்தான். நந்தகுமாரை மீது அவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால், அவனை பின்தொடர்ந்து வந்தான் முருகன். அவனுக்குத் தெரிந்த வரையில், நந்தகுமார் அவனுடைய வட்டாரத்தின் நகைச்சுவை நாயகன். அவன் எதையுமே இவ்வளவு சீரியஸா எடுத்துக் கொண்டதில்லை... யார் அவனை எவ்வளவு கிண்டல் செய்தாலும் கூட... நந்தகுமார் கோபம் கொண்டு முருகன் பார்ப்பது இது தான் முதல் முறை. நந்தகுமாரை பற்றி மேலும் ஆராய முடிவெடுத்தான் முருகன்.
........
ஓவியனின் கையைப் பிடித்து தங்கள் அறைக்கு அழைத்து வந்தாள் மேகா. துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்த தூரிகை, அதை பார்த்து ஒரு நிமிடம் திகைத்து நின்றாள்.
"நீங்களும் எங்க கூடயே தூங்குங்க மாமா. பாவம், நீங்க தனியா தூங்குனா உங்களுக்கு பயமா இருக்கும் இல்ல?" என்றாள் குழந்தைத்தனம் மாறாமல்.
"நீ ரொம்ப நல்ல பொண்ணு. உனக்கு என் மேல எவ்வளவு அக்கறை...! ஆனா, உங்க அத்தை என்னை பத்தி கவலைப்படறதே இல்ல" என்றான். அது மேகாவுக்கு குதூகலத்தை தந்தது.
"நீங்க கவலைப் படாதீங்க. நான் உங்களை பார்த்துக்கிறேன்"
"தேங்க்யூ டா கண்ணா"
"அவ குழந்தை. அவளுக்கு எதுவும் தெரியாது" என்றாள் தூரிகை.
"அவ குழந்தை தான்... ஆனா, உன் கதை என்ன? உனக்கு எதுவும் தெரியாதா?"
"உங்களுக்கும் கூட தான் எல்லாம் தெரியும்... சூழ்நிலை... சந்தர்ப்பம்... எல்லாம் தெரியும் தானே?"
" தெரிஞ்சதனால தானே, பேசிக்கிட்டு மட்டும் ( என்பதை அழுத்தி) இருக்கேன்"
அவனுக்கு பதில் கூற தூரிகை விழியும் முன், அவளது கைபேசியின் மணி அடித்தது. அதில் ஒளிர்ந்த பெயரை பார்த்து அவள் பெருமூச்சு விட்டாள்.
"என்ன ஆச்சு? யாரோட கால்?" என்றான் ஓவியன்.
தன் ஆள்காட்டி விரலை தன் உதட்டின் மீது வைத்து,
"ஷ்ஷ்ஷ்...." என்றாள் தூரிகை.
ஓவியன் அதை கண்டு பின் வாங்கினான்.
"மேகாவோட பாட்டி பேசுறாங்க"
"ஒ..."
அந்த அழைப்பை ஏற்றாள் தூரிகை.
"எப்படி இருக்கீங்க, ஆன்ட்டி?"
"நல்லா இருக்கேன் மா"
"மேகா எப்படி இருக்கா?"
"அவளும் நல்லா இருக்கா, ஆன்ட்டி"
"கொண்டலோட ( தூரிகையின் அண்ணி) தங்கச்சி நாளைக்கு மும்பையில் இருந்து வறா. நான் அவ கூட மும்பையில இருக்கணும்னு அவ விரும்புறா. நான் அவ கூட மும்பைக்கு போகலாம்னு இருக்கேன்"
"இது ரொம்ப நல்ல முடிவு, ஆன்ட்டி. நீங்களும் இங்க தனியா இருந்து என்ன செய்யப் போறீங்க?"
"நான் நாளன்னைக்கு மும்பை போறேன். அதனால, நாளைக்கு ஒரு நாள், மேகா என் கூட இருந்தா சந்தோஷ படுவேன்"
"ஆனா, மேகா ஒரு நாள் ஃபுல்லா உங்க கூட இருப்பான்னு எனக்கு தோணல ஆன்ட்டி"
"இருப்பா மா... அவளுக்கு என்னோட பேரன் நகுல் கூட விளையாடனும்னா ரொம்ப பிடிக்கும். நகுல் யாருன்னு உனக்கு தெரியுமில்ல? கொண்டலோட தங்கச்சி பையன்"
"அப்படின்னா சரிங்க, ஆன்ட்டி. நான் கூட உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்"
அவள் கூற நினைப்பது என்ன என்பதை, அவளது தயக்கமே ஓவியனுக்கு புரிய வைத்தது.
"எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, ஆன்ட்டி"
"என்னது? கல்யாணமா? எப்போ?" என்றார் அதிர்ச்சியுடன்.
"ரெண்டு நாளைக்கு முன்னாடி"
"யாரை கல்யாணம் பண்ணிக்கிட்ட? நீயும் அவரும் காதலிச்சீங்களா? என்னை ஏன் உங்க கல்யாணத்துக்கு கூப்பிடல?"
"எதுவும் பிளான் பண்ணி நடக்கல ஆன்ட்டி"
"சரி மா. ஆனா, உன்னோட கல்யாணத்தை ஊர் அறிய தெரியப்படுத்து. இப்படி ரகசியமா வைக்கிறது நல்லதில்ல. ஏன்னா, உனக்குன்னு யாருமே இல்ல... நான் என்ன சொல்றேன்னு புரியுதா?"
"அவர் ஒரு போலீஸ் ஆஃபீசர் ஆன்ட்டி. அவர் ஒரு கேஸ்ல ரொம்ப பிசியா இருக்காரு. அது முடிஞ்சதுக்கு பிறகு எங்க கல்யாணத்தை ஊரறிய தெரியப்படுத்துவோம்"
"போலீஸ் ஆஃபீஸரா? சரிம்மா. நான் நாளைக்கு அங்க வந்து மேகாவை கூட்டிகிட்டு வரேன்"
"சரிங்க ஆன்ட்டி" அவர்கள் அழைப்பை துண்டித்துக் கொண்டார்கள்.
அவளையே கூர்மையாய் பார்த்துக் கொண்டிருந்த ஓவியனை ஏறிட்டாள் தூரிகை.
"அவங்க என்ன சொன்னாங்க?"
ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தாள்.
"அவங்க சொல்றதுல தப்பு ஒன்னும் இல்ல" என்றபடி தனது கைபேசியை எடுத்தான்.
"உனக்கு ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருக்கா?" என்றான்.
"இருக்கு"
"என்னோட ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை அக்செப்ட் பண்ணு"
தூரிகைக்கு பேஸ்புக்கில் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பினான் ஓவியன். அதை ஏற்றாள் துரிகை. அவளது தோளை சுற்றி வளைத்து, ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்ட ஓவியனை வியந்து பார்த்தாள் தூரிகை. அடுத்த நிமிடம், தூரிகைக்கு ஃபேஸ்புக்கில் ஒரு நோட்டிஃபிகேஷன் வந்தது. தன்னுடைய *மெரிடல் ஸ்டேட்டஸை*(திருமணம் சார்ந்த ஸ்டேட்டஸ்) *காட் மேரீட் டு தூரிகை* (தூரிகையை திருமணம் செய்து கொண்டேன்) என்று மாற்றி இருந்தான் ஓவியன், அவன் அவளுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன்.
"நமக்கு வேண்டப்பட்ட எல்லாருக்கும் நமக்கு கல்யாணம் ஆன விஷயம் தெரிஞ்சிருச்சு. சந்தோஷமா?" என்றான்.
"நீங்க எப்பவுமே இப்படித்தானா?"
"இப்படி தானான்னா, எப்படி?"
"எல்லா முடிவையும், இப்படி சட்டுனு எடுத்துடுவீங்களா?"
"நான் எடுத்த முடிவு எப்பவும் தப்பா போனதில்ல. அது தானே முக்கியம்?"
"அப்படியே நம்புவோம்..."
நண்பர்களின் கமெண்ட்டுகள் வந்து அவர்களது இன்பாக்ஸை நிரப்பின.
*ஹாப்பி மேரீட் லைஃப்*
*கங்கிராஜுலேஷன்ஸ்*
*காட் பிளஸ் யூ* என இன்பாக்ஸ் நிரம்பி வழிந்தது.
சில நண்பர்கள், தங்களை திருமணத்திற்கு அழைக்காததற்காக கோபித்தும் கொண்டார்கள். தூரிகை அவர்களுக்கு பதில் அளிக்க துவங்க, மேகாவுடன் கட்டிலில் படித்துக் கொண்டான் ஓவியன்.
"மேகு, நாளைக்கு உன்னை கூட்டிகிட்டு போக, உன்னோட பாட்டி இங்க வர போறாங்க"
"போ அத்தை, நான் அவங்க கூட போக மாட்டேன்" என்றாள் மேகா.
"உன்னோட கசின் நகுல் நாளைக்கு உன்னை பார்க்க வர போறானாம்"
"என்னை பார்க்க நகுல் வரப் போறானா?" என்றாள் சந்தோஷம் மேலோங்க.
"ஆமாம். அவன் உன் கூட விளையாடனும்னு சொல்றானாம். அதனால தான், உன்னோட பாட்டி உன்னை அவங்க வீட்டுக்கு கூட்டி கிட்ட போக வறாங்க"
"ஐயா ஜாலி..."
"நகுல் யாரு?" என்றான் ஓவியன்.
"அவனும் என்னோட பிரதர் தான்... முகில் மாதிரி"
ஓவியனின் இதழ்களில் புன்னகை துளிர்த்தது. மேகா ஒரு அற்புதமான குழந்தை. அவளது மனதில் பொறாமை என்ற வார்த்தைக்கே இடமில்லை.
"அவன் என் கூட நல்லா விளையாடுவான்" என்றாள் மேகா.
"அப்படின்னா, நீ அவன் கூட ரொம்ப ஜாலியா இருப்ப தானே?" என்றான் ஓவியன்.
"ஆமாம் ரொம்ப ஜாலியா இருக்கும்"
"சரி, நாளைக்கு ஃபுல்லா நீ அவன் கூட ஜாலியா இருக்கலாம். இப்போ நீ தூங்கு"
"நீங்களும் இங்க தானே தூங்குவீங்க?"
"நிச்சயமா" என்றான் தூரிகையை பார்த்தபடி.
மேகா படுத்துக்கொண்டாள். மேகா உறங்கும் வரை காத்திருந்தான் ஓவியன். மெல்ல கட்டிலை விட்டு இறங்கி, தூரிகையின் முன் நின்றான்.
"ஐ அம் சாரி. என்னால தான் நம்ம அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டு, இப்ப நீ எல்லார் கேள்விக்கும் பதில் சொல்லிக்கிட்டு இருக்க. ஆனா எனக்கு வேற வழி தெரியல. அதனால தான் அப்படி செய்ய வேண்டியதா போச்சு"
"ஏன்?"
"அழகான பொண்ண மிஸ் பண்ணிட கூடாதுன்னு தான்" என்றான் புன்னகையுடன்.
"ஜோக் அடிக்கிறதை நிறுத்துங்க"
"ஜோக்கா? எது? நான் சொன்ன காரணமா? இல்லை என்னோட பதிலா?"
"ரெண்டும் தான்"
"ஏன்? நீ அழகு இல்லையா?"
"நீங்க நிறைய அழகான பொண்ணுங்கள உங்க வாழ்க்கையில் பார்த்திருப்பீங்க..."
"ஆனா, என்னோட மனசுக்கு ஒத்து போற மாதிரி ஒரு அழகான பொண்ண நான் பார்த்ததில்ல"
"ஒத்து போறதுனா எப்படி?"
"எங்க அக்காவோட ஆக்சிடென்ட்டுக்கு பிறகு, நான் கல்யாணமே பண்ணிக்க கூடாதுன்னு இருந்தேன். ஏன்னா, இங்க யாருமே நம்பகமானவங்க இல்ல. எல்லாமே போலி. உறவுகளுக்கு எந்த மரியாதையும் இல்லை. எல்லாமே வேஷம் தான். நேர்மைக்கும் நாணயத்துக்கும் அர்த்தமே இல்ல. எல்லாருமே தங்களோட உண்மையான முகத்தை மறச்சிக்கிட்டு முகமூடியோட அலையிறாங்க"
"நானும் கூட அப்படித் தான் நினச்சேன்"
"எனக்கு தெரியும். நீ இன்னமும் கூட அப்படித்தான் நினைச்சுக்கிட்டு இருக்க"
அமைதி காத்தாள் தூரிகை.
"கல்பனா வீட்டுக்கு நீ கத்தியோடு போனப்போ, அப்படிப்பட்ட பொம்பளைங்களை நீ எந்த அளவுக்கு வெறுக்கிறேன்னு நான் தெரிஞ்சுகிட்டேன். அப்போ தான், நல்ல பொண்ணுங்க இன்னும் இருக்காங்கன்னு எனக்கு நம்பிக்கை பிறந்தது. ஏன்னா, அப்படிப்பட்ட பொண்ணுங்களை வெறுக்கிற ஒரு பொண்ணு, நல்லவளா தான் இருக்க முடியும். அன்னைக்கு தான் நான் விழுந்துட்டேன். நீ நியாயமான பொண்ணுன்னு ஒரு உத்தரவாதத்தை உன்னை அறியாமலே நீ கொடுத்த. நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்"
கண்ணிமைக்காமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் தூரிகை.
"நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரிஞ்சிருக்கும். என்னை பத்தி நினைச்சோ, இல்ல நம்மளுடைய உறவு முறையை நினச்சோ நீ பயப்பட வேண்டிய அவசியமில்ல. நான் உனக்கு உண்மையா தான் இருப்பேன்னு நான் சொல்ல மாட்டேன். ஏன்னா, சில விஷயங்களை வெறும் வார்த்தைகளால உறுதிப்படுத்த முடியாது. அதுக்கு மொத்த வாழ்நாளும் கூட தேவைப்படலாம்"
ஆம் என்று தலையசைத்தாள் தூரிகை. அவனிடம் அவளுக்கு சிறிது நம்பிக்கை ஏற்பட்டது போல் தெரிந்தது.
"தூங்கு... நான் காலையில தான் என் ரூமுக்கு போனேன்னு மேகாகிட்ட சொல்லு."
சரி என்று தலையசைதாள் தூரிகை.
பெருமூச்சு விட்ட ஓவியன்,
"நீ சரியான கல்நெஞ்சக்காரி" என்றான்.
முகம் சுருக்கினாள் தூரிகை.
"நான் எவ்வளவு எமோஷனலா பேசினேன்... அப்படி இருந்தும், என்னை என் ரூமுக்கு அனுப்புற... என்னோட எல்லா முயற்சியும் வேஸ்ட் ஆயிடுச்சு"
"தயவுசெஞ்சி முன்னுக்கு பின் முரணா பேசி என்னை டென்ஷன் ஆக்காதீங்க" என்றாள் அலுப்புடன்.
"என்னை நம்புறதா வேண்டாமான்னு குழப்பமா இருக்கா?"
அவனுக்கு பதில் கூறாமல் நின்றாள். அவள் கரத்தை பற்றினான்.
"உன்னை மாதிரியே நானும் பாதிக்க பட்டிருக்கேன். ஏமாற்றத்தோட வலி எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும். நான் உன்கிட்ட விளையாடுறேன் தான். ஆனா அதுக்காக, எல்லாம் விளையாட்டில்ல... "
அவன் அங்கிருந்து செல்ல எண்ணிய போது,
"நீங்களும் இங்கயே தூங்குங்க " என்றாள் தூரிகை.
"என்னை அவ்வளவு ஈஸியா நம்பிடாதே... நான் உன் நம்பிக்கையை கெடுத்துடுவேன்..."
மேஜையின் மீது இருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து, அவன் மீது வீச, கையை ஓங்கினாள். திடுக்கிட்டு பின் வாங்கிய
ஓவியன், வாய் விட்டு சிரித்தான். தூரிகையும் புன்னகைக்க,
"நான் எங்க இருக்கலாம் இல்ல?" என்றான்.
ஆம் என்று தலையசைத்தாள் தூரிகை.
"நான் சோபாவுல படுத்துகிறேன்"
சரி என்று கட்டிலை நோக்கி நடந்தாள் தூரிகை.
"ஆனா, ராத்திரி பூரா நான் சோபாவுலேயே படுத்திருப்பேன்னு சொல்ல முடியாது. எனக்கும் கொஞ்சம் இடம் விட்டு படுத்துக்கோ" என்றான் கிண்டலாய்.
பெருமூச்சு விட்ட தூரிகை,
"குட் நைட்" என்றாள் வேறு எதுவும் பதில் கூறாமல். அவளுக்கு தெரியும் அவன் அதற்கும் ஏதாவது வம்பு செய்வான் என்று.
........
கட்டிலில் படித்திருந்த அந்த மனிதன், சில நினைவுகளால் அலைக்கழிக்கப்பட்டு கொண்டிருந்தான்.
*அவர் என்னை ஏமாத்திட்டார் தம்பி. இதுக்கு அப்புறம் நான் வாழ விரும்பல. என்னால இந்த ஏமாற்றத்தை தாங்கிக்கவே முடியல*
*நான் வயிறு எரிஞ்சு சொல்றேன்... என்னோட புருஷனை என்கிட்ட இருந்து பிரிச்சதுக்கான தண்டனையை நீ நிச்சயமா அனுபவிப்ப. என்னோட சாபம் உன்னை சும்மா விடாது.*
முதல் வரிகளை கூறியது, ஓவியனின் அக்கா சாதனா.
இரண்டாவது வரிகளை கூறியது, தன் கணவனுக்கு இருந்த கள்ள உறவினால் தன்னை மாய்த்துக் கொண்ட பெண் கூறியது. அந்தப் பெண் சபித்தது இரண்டாவதாக கொலை செய்யப்பட்ட மாளவிகாவை.
இதைப் பற்றி யோசித்த அந்த மனிதன், தனக்குஅறுவை சிகிச்சை நடந்த இடத்தை தடவி விட்டுக் கொண்டான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top