2 விசாரணை
2 விசாரணை
உதவி ஆணையர் ஓவியன், அவனிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்கின் கோப்பை படித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது முகம், தெளிந்த நீரோடை போல் இருந்தது. அவனது கையில் இருந்த கோப்பும் அப்படித் தான் இருந்தது. அதில் எந்த விவரமும் இல்லை. கோப்பை ஓரமாய் வைத்துவிட்டு தலையை நிமிர்ந்த அவனை பார்த்து, ஆய்வாளர் முருகன் சல்யுப் செய்து,
"இன்ஸ்பெக்டர் முருகன் ரிப்போர்ட்டிங் சார்" என்றான்.
லேசாய் தன் தலையை அசைத்தான் ஓவியன்.
"உங்க கூட சேர்ந்து வேலை செய்ய எனக்கு கிடைச்ச சந்தர்ப்பத்துக்காக நான் ரொம்ப சந்தோஷப்படறேன் சார்"
"கூடிய சீக்கிரமே அதுக்கு நேர்மாறா நினைப்பீங்க" என்ற ஓவியனை பார்த்து, திருதிருவென விழித்த முருகனிடம்,
"என் கூட வேலை செய்றது அவ்வளவு சுலபமா இருக்காது" என்றான் ஓவியன்.
"அது ரொம்ப நல்ல அனுபவமா இருக்கும்னு பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் சார்"
"நம்ம டிபார்ட்மெண்ட் எல்லாரையும் நல்லா ஏமாத்திக்கிட்டு இருக்குன்னு நினைக்கிறேன். அதை எல்லாம் நம்பாதீங்க"
தன் கண்களை சுருக்கிய முருகனைப் பார்த்து,
"நீங்க தானே மூணு மாசமா இந்த கேசை ஹேண்டில் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?" என்றான்.
"எஸ் சார்"
"இதுவரைக்கும் கொலைகாரனை பத்தி ஒரு க்ளூ கூடவா உங்களுக்கு கிடைக்கல?"
"ஆரம்பத்துல, இது கொலை தான்னு எங்களால நிச்சயமா சொல்ல முடியல சார்"
"ஏன்?"
"ஏன்னா, கொலை நடந்தது கிரவுடட் ஏரியாவுல சார். சந்தேகப்படுற மாதிரி அந்த ஏரியா உள்ள யாரும் நுழையல. அதே நேரம், எரிச்சு கொல்லப்பட்டவங்க கத்தி கூப்பாடு போடல"
"கொலைகாரன் ஏன் அதே ஏரியாவை சேர்ந்தவனாக இருக்கக் கூடாது?"
"இல்ல சார். மூணு கொலை நடந்ததும் வெவ்வேறு ஏரியாவுல. அதனால கொலைகாரன் அந்த ஏரியாவை சேர்ந்தவனா இருக்க வாய்ப்பில்ல"
"ஏதாவது சிசிடிவி கேமரா ஃபுட்டேஜ்?"
"இல்ல சார். கொலை நடந்த போது, அந்த ஏரியாவுல கரண்ட் கட் ஆகி இருக்கு"
"மூணு கொலை நடந்த போதும் கரண்ட் கட் ஆச்சா?"
"ஆமாம் சார்"
"அப்படின்னா இது நிச்சயம் கொலை தான். கொலை நடக்குறதுக்கு முன்னாடி, கொலைகாரன் தான் கரண்டை கட் பண்ணி இருக்கணும்"
"நீங்க சொல்றது சரிதான் சார். ஆனா கரண்ட் கட் பண்றதுக்கு முன்னாடி இருந்த சிசிடிவி புட்டேஜ்ல, அந்த ஏரியாவுக்குள்ள யாரும் புதுசா நுழையல"
"ம்ம்ம்... ஏதாவது ஃபிங்கர் பிரிண்ட் கிடைச்சதா?"
"இல்ல சார்"
"கொலையானவங்களை பத்தி அவங்க குடும்பத்துல விசாரிச்சீங்களா?"
"விசாரிச்சோம் சார். ஆனா, அவங்க கிட்ட இருந்து நமக்கு எந்த விவரமும் கிடைக்கல"
"அப்படின்னா, நம்ம முதல்லயிருந்து ஆரம்பிக்க வேண்டியது தான்"
"சரிங்க சார்"
"இறந்தவங்க மூணு பேரும் யாரு?"
"சுபாஷினி, மாளவிகா, நான்சி"
"அவங்களைப் பத்தி விவரமா சொல்லுங்க"
"எல்லாமே அந்த ஃபைலில் இருக்கு சார்"
"ஏன்? நீங்க சொல்ல மாட்டீங்களா?" என்றான் ஓவியன்.
"ஷ்யூர் சார்"
"ஷூட்..."
"சுபாஷினி வேலை செஞ்சுகிட்டு இருந்தது சென்னை ஹைகோர்ட்ல களார்க்கா சார்... அவங்க வீடு இருந்தது இந்திரா நகர். மாளவிகா வேலை செஞ்சது, ரெவின்யூ டிபார்ட்மெண்ட். அவங்க வசிச்சது, சரோஜினி நகர்ல இருக்கிற கவர்மெண்ட் கோட்டர்ஸ்ல. நான்சி ஒரு பிரைவேட் செக்டார் ஒர்க்கர். அவங்க வீடு இருக்கிறது சக்தி நகர்"
"இவங்க மூணு பேருக்கும் என்ன ஒற்றுமை?"
"மூணு பேரும் கல்யாணம் ஆனவங்க சார். அவங்க வேலை செஞ்ச இடம், டிபார்ட்மென்ட், அவங்க வீடு இருக்கிற ஏரியா, அவங்களோட ஸ்டேட்டஸ், எல்லாமே வித்தியாசமானது சார். அவங்க படிச்சதும் கூட, வேற வேற ஸ்கூல் அண்ட் காலேஜ். எல்லாத்துக்கும் மேல, மூணு பேருக்கும் வயசு வித்தியாசமும் இருக்கு. அதனால, அவங்க ஒரே பேச்சா இருக்க வாய்ப்பில்ல"
"ம்ம்ம்... நீங்க என்ன நினைக்கிறீங்க? இது இதோட முடியும்னு நினைக்கிறீங்களா?"
"ஒருவேளை, அந்த கொலைகாரன் நம்ம டிபார்ட்மெண்ட்டை பத்தி போதிய அளவுக்கு நாலெட்ஜ் இருக்கிறவனா இருந்தா, இந்த கேசை இப்போ யார் எடுத்திருக்கிறதுனு தெரிஞ்சி, இதோட இதை நிறுத்திக்குவான் சார்" என்று ஓவியனுக்கு மறைமுகமாய் புகழாரம் சூட்டினான்.
"அப்படின்னா, முதல் கொலைக்குப் பிறகு நடந்த மத்த ரெண்டு கொலைக்கும் நீங்க தான் காரணம்னு சொல்றீங்களா?" என்றான் முகத்தில் எந்த பாவமும் இன்றி ஓவியன்.
"என்ன சார் சொல்றீங்க?" என்று அதிர்ந்தான் முருகன்.
"உங்க திறமையை பார்த்து அவன் பயந்திருந்தா, முதல் கொலைக்கு பிறகு மத்த கொலைகளை செஞ்சிருக்க மாட்டான் இல்லையா? அவன் அப்படி செய்யாம தொடர்ந்துகிட்டே இருக்கான்னா, உங்க திறமை மேல அவனுக்கு அவ்வளவு நம்பிக்கைன்னு தானே அர்த்தம்?"
நிச்சயம் அது சரியான நக்கல் தான். ஆனால், அதை செய்யும் பொழுது, துளி அளவு கூட முகத்தில் சிரிப்பே இல்லாமல் செய்ய, ஓவியனுக்கு மிகப்பெரிய திறமை வேண்டும். தான் பேசிய வார்த்தை தன்னையே பதம் பார்க்கும் என்று எதிர்பார்க்காத முருகன், என்ன பதில் கூறுவது என்று திணறினான்.
"என் முகத்துக்கு நேரா என்னை பாராட்டி பேசுறது எனக்கு சுத்தமா பிடிக்காது. புரிஞ்சுதா?" என்றான் ஓவியன்.
சரி என்று தலையசைத்தான் முருகன்.
"அவன் இதோட நிறுத்த மாட்டான். இந்த கொலைகளுக்கு பின்னாடி நிச்சயம் ஏதோ ஒரு காரணம் இருக்கு. அவனுக்கு அதுல திருப்தி ஏற்படாத வரைக்கும் இந்த கொலைகள் தொடரும்" என்றான் ஓவியன்.
...........
சன் ரைஸ் அபார்ட்மெண்ட்ஸ்
ஆறு, எட்டடுக்கு கட்டிடங்களை உள்ளடக்கியிருந்த, தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் முன், ஜிப்பிலிருந்து கீழே இறங்கினான் ஓவியன். அன்று அவன் வசித்த கட்டிடத்தில் மரணம் நிகழ்ந்திருந்தது. அதுவும், அவன் தங்கி இருந்த அதே தளத்தில். அதுவரை அந்த வீட்டில் தங்கியிருந்தது யார் என்பது கூட அவனுக்கு தெரியாது. ஒரு தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய நாலு வயது பெண் குழந்தை, அவர்களை எழுப்ப முயன்று கொண்டிருந்ததை பார்க்கவே பரிதாபமாய் இருந்தது. அந்த குழந்தையை பார்த்து மென்று முழுங்கினான் ஓவியன். அதில் அவன் கவனத்தைக் கவர்ந்த விஷயம் என்னவென்றால்,
"அண்ணி..." என்று அழுது கதறிய ஒரு பெண்.
அவள் *அண்ணி* என்று அழுகிறாள் என்றால், அவளது அண்ணியுடன் சேர்ந்து இருந்தது அவளது அண்ணன் தானே? அப்படி என்றால், அவள் அண்ணனுக்காக அழாமல், அண்ணிக்காக ஏன் அழுகிறாள்? அது அவனுக்கு விசித்திரமாய் இருந்தது. அந்தப் பெண் பார்க்கவே மிகவும் பாவமாய் இருந்தாள். அவளது சிவந்திருந்த முகம், அவள் விடாமல் அழுதிருக்கிறாள் என்பதை உணர்த்தியது. கலைந்த கூந்தலும், அழுது வீங்கியிருந்த கண்களும், அந்தப் பெண்ணை மேலும் பரிதாபமாய் கட்டின.
"அம்மா எழுந்திடுமா" என்று கூறிய குழந்தையை பார்த்தவர் மனம் பதறியது.
அந்த குழந்தையை கட்டிக்கொண்டு அழுத அந்த பெண், சுற்றி இருந்தவர்களை துயரத்தில் ஆழ்த்தினாள்.
அங்கு கூடியிருந்த மக்கள் பேசிய பேச்சு ஓவியனின் காதில் நன்றாகவே விழுந்தது.
"பாவம் இந்த பொண்ணு, எப்படி இந்த குழந்தையை வச்சுக்கிட்டு தன்னந்தனியா இந்த உலகத்துல வாழ போகுதோ" என்றார் ஒரு பெண்மணி.
"அவங்க அண்ணி, தூரிகையை தன்னுடைய சொந்த குழந்தை மாதிரி, பொத்தி பொத்தி வச்சிருப்பா..." என்றார் மற்றொருவர்.
"எந்த உதவியும் இல்லாம, ஒரு பொம்பள புள்ள இந்த சமுதாயத்துல வாழறது ரொம்ப கஷ்டம்"
"தூரிகைக்கு ஒண்ணுமே தெரியாது. எப்படித் தான் அவ கரையேற போறாளோ..."
அவர்கள் பேசிக் கொண்டிருந்த, தூரிகையின் மீது தன் பார்வையை ஒட்டிவிட்டு, அமைதியாய் தன் வீட்டிற்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டான் ஓவியன். ஏனோ தெரியவில்லை, அந்த மரணக் காட்சி அவன் கண் முன்னால் வளம் வந்து கொண்டிருந்தது... போலீஸ் புத்தி இல்லையா...!
தன் மனதை அழுத்தும் விஷயங்களில் இருந்து தன் மனதை திசைத் திருப்பவது ஒன்றும் ஓவியனுக்கு கடினமான காரியமாக இருந்ததில்லை. வழக்கு சம்பந்தமான கோப்புகளில் தன் கவனத்தை செலுத்துவதன் மூலம், அதை சுலபமாய் செய்து விடுவான் ஓவியன். ஆனால் அவன் மனதிற்கு ஏதாவது விசித்திரமாய் பட்டால், அவ்வளவு சுலபத்தில் அவன் மனம் அமைதி அடைந்து விடுவதில்லை.
தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்கின் கோப்புகளை மறுபடியும் மறுபடியும் எடுத்து பார்க்கும் பழக்கம் இல்லாதவன் ஓவியன். ஒருமுறை அட்ச்சர சுத்தமாய் அவன் அதை படித்து முடித்து விட்டால், மறுபடியும் அதை தொடுவதே இல்லை. அது அவனுக்கு மனப்பாடம் ஆகாத வரை, அவன் அதை கீழே வைப்பதும் இல்லை.
இப்பொழுதும் அப்படித் தான், தன்னிடம் கொடுக்கப்பட்டிருந்த வழக்கை எப்படி முன்னே கொண்டு செல்வது என்பதை ஒரு சார்ட் பேப்பரில் வரைந்தான். அதை முடித்துவிட்டு, நாளை எங்கிருந்து எப்படி வழக்கை துவங்குவது என்று எண்ணியபடி கட்டிலில் சாய்ந்தான். அவன் கையாள வேண்டிய மிகப்பெரிய சவால் அவன் கண் முன்னே உருவெடுத்து நிற்கிறது. அவனது மனமும் அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தது. என்றாலும், அதற்கிடையில் அவன் மனதில் தோன்றி மறைந்த தூரிகையின் அழுத முகமும், அண்ணி என்ற கதறலும் அவனை ஏதோ செய்யத்தான் செய்தது.
மறுநாள் காலை
தனது வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே வந்த ஓவியனின் கண்கள், அணிச்சயாய் எதிர் வீட்டை அலசின. அதன் கதவுகள் சாத்தப்பட்டிருந்தது. தனது காதுகளை கூர்மையாக்கி கொண்டு ஏதாவது உள்ளிருந்து சத்தம் கேட்கிறதா என்று உற்றுக்கேட்டான். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. அதனால், அந்த இடத்தை விட்டு அகன்றான்.
அவன் தரைதளம் வந்த போது, அங்கு அவனுக்காக முருகன் காத்திருந்தான். இந்த வழக்கில் அவன் காட்டிய ஆர்வம் ஓவியனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜீப்பில் ஏறி அமர்ந்து, டிரைவர் வேலுவை, காரை கிளப்ப சொல்லி பணித்தான்.
"நம்ம இப்ப என்ன சார் செய்ய போறோம்?" என்றான் முருகன்.
"முதல் கொலையாளி, சுபாஷினியோட ஹஸ்பண்டை பாக்க போறோம்"
"அவர் வேலை செய்றது கலெக்டர் ஆஃபீஸ்ல சார்"
"அப்ப கலெக்டர் ஆஃபீஸ்க்கு போகலாம். நம்ம டீமை அங்க வர சொல்லுங்க"
அவர்கள் ஆட்சியர் அலுவலகம் வந்து சேர்ந்தார்கள். முருகனை நோக்கி சைகை செய்தான் ஓவியன். உள்ளே சென்ற முருகன் சில நிமிடங்களில் திரும்பி வந்தான்.
"அவர் பேரு அகிலன் சார். ஆதார் கார்டு டிபார்ட்மெண்ட்ல இருக்காரு. ஆனா அவர் இன்னைக்கு ஆஃபீசுக்கு வரல சார். அவங்க வைஃப் இறந்ததுக்கு பிறகு, அவர் ஒழுங்கா வேலைக்கு வர்றதே இல்லையாம்"
ஜிப்பை விட்டு கீழே இறங்கிய ஓவியன் நேராக ஆதார் பிரிவை நோக்கி சென்றான். உதவி ஆய்வாளருடன் அவனை பின்தொடர்ந்தான் முருகன். அங்கு, எண்ணெய் வைத்து படிய சீவிய தலையும், மஞ்சள் நிற நைலான் புடவைக்கு ஏற்ற மேட்சிங் பிளவுஸ்சும் அணிந்த ஒரு பெண், கணினியில் வேலை செய்து கொண்டிருந்தாள். ஓவியனின் மடித்துவிடப்பட்ட அரைக்கை சட்டையும், முறுக்கு மீசையும், பிரவுன் நிற காலணிகளும், வந்திருப்பவன் யார் என்பதை அந்த பெண்ணுக்கு கூறியது.
"நான் அசிஸ்டன்ட் கமிஷனர் ஓவியன்" அவளிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான் ஓவியன்.
அதைக் கேட்ட அந்த பெண்மணி எழுந்து நின்றார்.
"உட்காருங்க மேடம். எனக்கு அகிலனை பத்தி சில விவரங்கள் தேவை"
"கேளுங்க சார்"
"உங்க பேர் என்னமா?"
"சீதா"
"சீதா, அகிலனை பத்தியும், அவருக்கும் அவரோட மனைவிக்கும் இருந்த உறவுமுறை பத்தியும் உங்களுக்கு என்ன தெரியும்?"
தங்களுடன் வந்திருந்த உதவி ஆய்வாளருக்கு சைகை செய்தான் ஓவியன். அவர் அந்த பெண் கூறியதை, தான் கொண்டுவந்திருந்த சிறிய ரெக்கார்டரில் குரல் பதிவு செய்ய தயாரானார்.
"அவரு ரொம்ப நல்ல மாதிரி சார். கூட வேலை செய்றவங்க யாருக்கு எந்த உதவி வேணும்னாலும், முகத்துல வெறுப்பை காட்டாம செஞ்சி கொடுப்பாரு. ரொம்ப சின்சியரான ஆளு. நேர்மையானவரும் கூட. அப்படிப்பட்ட ஒரு ஆளை கவர்மெண்ட் ஆபீஸ்ல பார்க்கிறது ரொம்ப கஷ்டம் சார். அவங்க கல்யாண வாழ்க்கையை பத்தி சொல்லனும்னா, அவருக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆச்சு சார். பொண்டாட்டினா அவருக்கு உயிரு. ரெண்டு பேருக்கும் நடுவுல ரொம்ப நல்ல பிணைப்பு இருந்தது சார். அவங்களுக்கு குழந்தை இல்ல. ஆனா, அவரு அவங்க மனைவி மேல வச்சிருந்த அன்பை அது எந்த விதத்திலும் குறைக்கல. அவங்க இறந்ததுக்கு பிறகு, மனுஷன் நொறுங்கி போயிட்டாரு சார். சரியா வேலைக்கு கூட வர்றதில்லை. அவர் இப்படியெல்லாம் இருந்ததே இல்ல சார். அவங்க மனைவி உயிரோட இருந்த போது, அவர் ஆபீசுக்கு ஒரு நாள் கூட லீவு எடுத்ததே இல்ல"
"உங்ககிட்ட அவர் ஃபோன் நம்பர் இருக்கா?"
"இருக்குது சார். ஆனா இப்ப அவர் யார் ஃபோன் பண்ணாலும் எடுக்கறதே இல்ல" என்றபடி அவரது கைபேசி எண்ணை ஒரு சீட்டில் எழுதி அவர்களிடம் கொடுத்தாள் சீதா.
"உங்க ஒத்துழைப்புக் ரொம்ப நன்றி சீதா" என்ற ஓவியன், ஆதார் பிரிவை விட்டு வெளியே வந்தான்.
முருகன் தங்கள் ஜிப்பை நோக்கி நடக்க, தேர்தல் பிரிவை நோக்கி சென்றான் ஓவியன். அதைக் கண்ட முருகன், அவசரமாய் அவனை பின் தொடர்ந்தான். தேர்தல் பிரிவின் தலைமை அலுவலரான, தேர்தல் பிரிவின் வட்டாட்சியர் இப்ராஹிம், துணை வட்டாட்சியருக்கு அவர் செய்ய வேண்டிய வேலையை பற்றி கூறிக் கொண்டிருந்தார். தன் அறையின் உள்ளே நுழைந்த ஓவியனை பார்த்து புருவம் உயர்த்தினார். தன்னைத்தானே அறிமுகம் செய்து கொண்ட ஓவியனுடன் கைகுலுக்கினார் இப்ராஹிம். சீதாவிடம் கேட்ட அதே கேள்விகளை இப்ராஹீமிடமும் கேட்டான் ஓவியன். சீதாவிடமிருந்து பெற்ற அதே பதிலை தான் அவன் அங்கிருந்தும் பெற்றான். அவருக்கு நன்றி கூறிவிட்டு வெளியே வந்தான் ஓவியன்.
"சார், அகிலன் வேலை செய்றது ஆதார் டிபார்ட்மெண்ட்ல. அப்படி இருக்கும் போது, மத்த டிபார்ட்மெண்ட்ல அவரைப் பத்தி ஏன் விசாரிக்கணும்?" என்றான் முருகன் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்.
"அகிலன் ஒரு நேர்மையான ஊழியர்னு சீதா சொன்னாங்க. அவர் நேர்மையான ஆளா இருந்தா, அவரை பத்தி நிச்சயமா எல்லா ஹை அஃபிஷியல்சுக்கும் தெரிஞ்சிருக்கும். அதேநேரம், ஒரே ஒருத்தருடைய வாக்குமூலத்தை வச்சு நம்ம எந்த முடிவுக்கு வர முடியாது. ஏன்னா, அந்த ஒருத்தர், அவங்களுக்கு வேண்டாதவங்களாகவும் இருக்கலாம், வேண்டியவங்களாகவும் இருக்கலாம். வேலை செய்ற இடத்துல, எல்லாரும், எல்லாருக்கும் நல்லவங்களாகவும் இருக்க முடியாது, கெட்டவங்களாகவும் இருக்க முடியாது. அகிலனை சந்திச்ச பிறகு, நம்ம மறுபடியும் கலெக்டர் ஆஃபீசுக்கு வர வேண்டி இருக்கும்..."
"பிரமாதம் சார்"
"எனக்கு புகழுறது பிடிக்காதுனு நான் ஏற்கனவே சொன்னேன்" என்று எச்சரித்தான் ஓவியன்.
"ஐ அம் சாரி சார்"
"நம்ம அகிலனை சந்திக்கணும். அவர் எங்க இருக்காருன்னு கேளுங்க"
"ஆனா, அவர் தான் ஃபோனையே எடுக்கிறது இல்லைன்னு சீதா சொன்னாங்களே சார்"
"நம்ம ட்ரை பண்ணி பார்ப்போம். எப்படி இருந்தாலும், நம்ம அவங்க வீட்டுக்கு போய் தான் ஆகணும்"
அகிலனின் கைபேசி எண்ணுக்கு முருகன் முயன்ற பொழுது, அவர்கள் எதிர்பார்த்தபடியே அந்த அழைப்பை அவன் ஏற்கவில்லை. மறுபடியும் முயன்ற போதும் அவன் ஏற்கவில்லை. ஆனால் மூன்றாவது முறை அந்த அழைப்பை ஏற்றான் அகிலன். முருகன் அவனிடம் விஷயத்தை கூற, அவர்களை தன் வீட்டிற்கு வருமாறு அழைத்தான் அகிலன்.
அழைப்பை துண்டித்த முருகன்,
"இந்த ஆபீஸ்ல, ரெண்டு தடவைக்கு மேல அவருக்கு யாருமே ஃபோன் பண்ணி பார்த்ததில்ல போல இருக்கு சார்" என்று கிண்டலாய் கூறி சிரித்தான் முருகன்.
அது ஓவியனின் முகத்திலும் புன்னகையை வரவழைத்தது. அவர்கள் அகிலனின் இல்லம் நோக்கி விரைந்தார்கள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top