18 எங்கே அது?

18 எங்கே அது?

ஓவியன், இடக்கைப் பக்கம் திரும்பிய போது, அவன் தன்னை மேகா இருக்கும் அறைக்கு கொண்டு செல்வதை உணர்ந்தாள் தூரிகை. மேகாவின் பக்கத்தில் அவளை படுக்க வைத்தான். தூரிகைக்கு அப்பாடா என்றானது. ஆனால் அவளது நிம்மதி வெகு நேரம் நீடிக்கவில்லை. ஓவியன் கூறியதை கேட்டு அவள் திடுக்கிட்டாள்.

"நீங்க இன்னும் தூங்கலைன்னு எனக்கு தெரியும்" என்றான் அவளது காதில்.

மென்று விழுங்கியபடி மெல்ல கண் திறந்தாள் தூரிகை.

"ரிலாக்ஸ்... குட் நைட்..."

விளக்கை அணைத்துவிட்டு, அந்த அறையை விட்டு வெளியேறினான் ஓவியன்.

கட்டிலில் எழுந்து அமர்ந்த தூரிகை, தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

"என்ன வேலைக்கு தூரிகை பண்ணி தொலைச்ச நீ? கல்யாணம் ஆன முதல் நாளே கையும் களவுமா மாட்டிக்கிட்டியே... ஏசி சார் என்ன நினச்சாரோ தெரியலையே..."

மேலும் புலம்பி கொட்டியவாறு இருந்தாள்.

புன்னகையுடன் தன் கட்டிலில் படுத்திருந்தான் ஓவியன். தான் ஒரு போலீஸ்காரன் என்பதை தன் மனைவி மறந்து விட்டாள் போல தெரிகிறது. தூங்குவது போல் பாசாங்கு செய்த போது அவள் மேகாவை விட சிறுபிள்ளை போல் இருந்தாள். வரும் நாட்கள் தூரிகையுடன் ரகலையாய் இருக்கப் போகிறது... அதை எண்ணிய போது அவனுக்கு சிரிக்க வேண்டும் என்று தோன்றியது. புன்னகையுடன் கண்களை மூடிக்கொண்டான் ஓவியன்.

மறுநாள் காலை

தனக்கான காபியை கலந்து கொண்டிருந்தாள் தூரிகை. காபியின்றி, அவளது காலை புத்துணர்ச்சியுடன் விடிவதில்லை. சேர்ந்தார் போல், அவளுக்கு தலையை வேறு வலித்தது. முதல் நாள் இரவு, அவளுக்கு நிம்மதியான உறக்கமே இல்லை. ஓவியனை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற நினைப்பில், அவள் தூங்கவே இல்லை.

கலந்த காபியை, அவள் குவளையில் ஊற்றிய பொழுது, அவள் காதுக்கு வெகு அருகாமையில்,

"குட் மார்னிங்" என்றான் ஓவியன்.

உதடு மடித்து, கண்களை இறுக்கமாய் மூடி கொண்டாள் தூரிகை

"நேத்து ராத்திரி நிம்மதியா தூங்குனீங்களா?"

தலையை சாய்த்து அவள் முகத்தைப் பார்த்த அவன்,

"என்ன ஆச்சு?' என்றான்.

அதற்கு ஒன்றும் இல்லை என்பது போல் அவசரமாய் தலையசைத்தாள் தூரிகை. அவள் கலந்து வைத்திருந்த காபி குவலையை கையில் எடுத்து சுவைத்துவிட்டு,

"பரவாயில்லையே... காபி நல்லா போட்டிருக்கீங்க" என்றான்.

"அது வந்து... நேத்து ராத்திரி... நான்..." என்று தயக்கத்துடன் ஆரம்பித்தாள் தூரிகை.

"ஆங்... மேகாவை எப்படி தனியா தூங்க விட முடியும்?" என்றான்.

ஆமாம் என்று தலையசைத்தபடி சங்கடத்துடன் சிரித்தாள் தூரிகை.

"எனக்கு புரியுது. மேகாவை தனியா விட்டுட்டு, நம்மால ஒன்னா இருக்க முடியாது"

சிறிது சிறிதாய் சகஜ நிலைக்கு திரும்பினாள் தூரிகை.

"நமக்கு முதல் இரவு அவசியம்னு எனக்கு தோணல" என்ற அவனை, *நீ அவ்வளவு நல்லவனா?* என்பது போல் பார்த்தாள் தூரிகை.

புன்னகைத்தபடி காபி குவளையுடன் அங்கிருந்து நடந்தான் ஓவியன். தூரிகைக்கு சந்தோஷம் தாங்கவில்லை. பரவாயில்லையே ஓவியன் இவ்வளவு புரிதல் உள்ளவனாய் இருக்கிறானே,  என்று எண்ணினாள். அப்போது சமையலறையின் வாசலில் நின்று கதவை லேசாய் தட்டினான் ஓவியன்.

"நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி நம்மளை நம்ம மாத்திக்கணும். மேகாவை தனியா தூங்க வச்சிட்டு, நம்மால முதலிரவை பத்தி எல்லாம் யோசிக்க முடியாது. அதனால மேகாவை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு நம்ம *முதல் பகல்* வச்சுக்கலாம்" என்றான் ஓவியன்.

தன் விழிகளை விரித்து, பேயை பார்ப்பவள் போல் அவனை பார்த்துக் கொண்டு நின்றாள் தூரிகை.

"கண்ணை ரொம்ப அகல திறக்காதீங்க. கண்விழி கீழே விழுந்துற போகுது"
என்று, சிரிப்பை அடக்கியபடி அங்கிருந்து நடந்தான் ஓவியன்.

மேகாவை பள்ளிக்கு தயார் செய்யவே தயங்கினாள் தூரிகை. பிரட்டை டோஸ்ட் செய்து அதில் வெண்ணையும் ஜாமும் தடவி உணவு மேஜையின் மீது கொண்டு வந்து வைத்தாள் தூரிகை.

கைபேசியில் பேசியபடி உணவு மேஜைக்கு வந்தான் ஓவியன்.

"இன்னும் அரை மணி நேரத்துல நான் அங்கே இருப்பேன்..."

அதைக் கேட்ட தூரிகையின் இதழ்களை விட கண்கள் அதிகம் சிரித்தன.

"வந்துடுறேன்" அழைப்பை துண்டித்தான் ஓவியன்.

"நான் கொஞ்சம் அவசரமா போகணும். இன்னைக்கு நான் திரும்பி வர லேட் ஆகலாம்... ஜாக்கிரதையா இருங்க. யார் வந்து கதவை தட்டினாலும், தெரிஞ்சவங்களா இருந்தா மட்டும் கதவை திறங்க"

சரி என்று தலையசைத்தாள் தூரிகை.

இரண்டு பிரட் டோஸ்ட்களை அவசரமாய் சாப்பிட்டபடி,

"ஏதாவது வேணும்னா எனக்கு ஃபோன் பண்ணுங்க" என்றான் ஓவியன்.

" சரி"

"எது வேணும்னாலும்னா, எது வேணும்னாலும்..." என்றான் மர்ம புன்னகையுடன்.

அவள் முகம் சுளிப்பதை பார்த்து, சிரித்தபடி அங்கிருந்து கிளம்பினான் ஓவியன்.

........
ஓவியன் அலுவலகம் வந்த போது, அவனுக்காக அங்கு அகிலன் காத்திருந்தான்.

"குட் மார்னிங் சார்" என்றான்.

"நீங்க என்ன இங்க?"

"நான் நேத்தே உங்களை பார்க்க வந்தேன் சார். ஆனா நீங்க இல்ல. அப்ப தான் கிளம்பி போனீங்கன்னு முருகன் சார் சொன்னாரு"

"ஆமாம். என்ன விஷயம் சொல்லுங்க"

"நான் என்னோட ஃபிரண்டு கல்யாணத்துக்காக செங்கல்பட்டுக்கு போகணும் சார். அதுக்காக தான் உங்ககிட்ட பர்மிஷன் வாங்க காத்திருக்கிறேன்"

"விளக்கமா ஒரு ஸ்டேட்மென்ட் எழுதி கையெழுத்து போட்டு ஈஸ்வர் கிட்ட கொடுத்துட்டு போங்க. "

"சரிங்க சார்"

"எப்ப கிளம்ப போறீங்க?"

"இன்னைக்கு ராத்திரி கிளம்பறேன் சார்"

"நீங்க திரும்பி வந்த உடனே, எனக்கு ஃபோன் பண்ணுங்க"

"நிச்சயமா செய்றேன் சார்"

ஓவியன் கூறியபடியே, அனைத்தையும் விவரமாய் எழுதி கையெழுத்திட்டு ஈஸ்வரனிடம் கொடுத்துவிட்டு, வெளியே வந்தான் அகிலன். அவனை  பிடித்து இழுத்துக் கொண்டு தூரமாய் சென்றான் முருகன்.

"என்ன சார் ஆச்சு? எதுக்காக என்னை இப்படி இழுத்துக்கிட்டு வரீங்க?"

"எனக்கு ஒரு முக்கியமான விஷயம் தெரியணும்"

"எதைப் பத்தி சார்?"

"எதுக்காக நந்தகுமார் இங்க டிரான்ஸ்பர் வாங்கிக்கிட்டு வந்தான்னு விசாரிச்சு எனக்கு சொல்லுங்க"

"நந்தகுமார் இருக்கிறது தாலுக்கா ஆஃபீஸ். நான் இருக்கிறது கலெக்டர் ஆஃபீஸ். என்னால எப்படி சார் முடியும்?"

"ஒரு மாவட்டத்துல வேலை செய்ற எல்லாரை பத்தியும், எல்லாருக்கும் தெரியுமாமே... நந்தகுமார் தான் இதை என்கிட்ட சொன்னான்"

அகிலன் அமைதியானான்.

"விசாரிச்சு சொல்லுவீங்க இல்ல?"

"சொல்றேன் சார்"

"தேங்க்ஸ்"

"நான் நாளைக்கு திரும்பி வந்த பிறகு, கேட்டு சொல்றேன் சார்"

"சரி"
.......

வழக்கை பற்றி யோசித்தபடி, பேப்பர் வெயிட்டை மேஜையின் மீது உருட்டிக் கொண்டிருந்தான் ஓவியன். அப்பொழுது அவனது மனதில் ஏதோ ஒன்று உரைத்தது. கடைசி கொலை பற்றிய விவரங்கள் அடங்கிய கோப்பை எடுத்து ஆராயத் தொடங்கினான். மீண்டும் மீண்டும் ஏதோ ஒன்றை அவன் அதில் சரி பார்த்தான். கல்பனாவின் வீட்டிற்கு, ஒரு கத்தியுடன் சென்றதாய் தூரிகை கூறினாள். ஆனால் அந்த கோப்பில் அந்த கத்தியை பற்றிய எந்த விபரமும் குறிப்பிடப்படவில்லை. கல்பனாவின் வீட்டிலேயே அந்த கத்தியை தவற விட்டுவிட்டு வந்ததாய் தூரிகை கூறினாள். அந்த கத்தி கீழே விழும் சத்தத்தை கேட்டு தான் கொலைகாரன் தன் பக்கம் திரும்பி தன்னை பார்த்ததாய் அவள் கூறியிருந்தாள். ஒருவேளை, அந்த கத்தியை எடுத்துக் கொண்டு அவள் அங்கிருந்து வந்திருப்பாளோ? இல்லை அப்படி தூரிகை அவனிடம் கூறவில்லை. அப்படி ஒரு கத்தியை கல்பனாவின் வீட்டிலிருந்து போலீசரும் கண்டெடுக்கவில்லை. அப்படி என்றால், அந்த கத்தி எங்கே? ஒருவேளை அந்த கத்தி கொலைகாரனிடம் இருக்குமோ? தூரிகையின் கைரேகை நிச்சயம் அந்த கத்தியில் பதிந்திருக்கும். ஒருவேளை, அதை வைத்து கொலைகாரன் தூரிகையை வேறு ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைத்து விட்டால் என்ன செய்வது?

கைபேசியை எடுத்து தூரிகைக்கு ஃபோன் செய்ய சென்றவன் ஒரு நிமிடம் தாமதித்தான். இதைப் பற்றி தூரிகையுடன் ஃபோனில் பேசுவது சரியாய் வராது. அவனது அலுவலகத்தில் அதை வேறு யாராவது கேட்டு விட வாய்ப்புள்ளது. மேலும், கொலைகாரனும் அவர்களது தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்டுக் கொண்டிருப்பது ஓவியனுக்கு தெரியும். அவனுக்கு இதைப் பற்றி தெரிய கூடாது. அவசரமாய் அலுவலகத்தில் இருந்து கிளம்பினான் ஓவியன்.

தூரிகை *முதல் பகலை* பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். செய்வதற்கு வேறு எதுவும் வேலை இல்லை என்றால், அவள் வேறு என்ன செய்வாளாம்? அப்போது, யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டாள். *மேஜிக் ஹோலின்* வழியாக வெளியே பார்த்தவள், ஓவியன் நின்றிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். அவன் கூறியது போலவே *முதல் பகலுக்காக* உண்மையிலேயே வந்து விட்டானா? அவளை பதட்டம் ஆட்கொண்டது. என்ன செய்வது என்று புரியாமல், திகைப்புடன் நின்றாள்.  மீண்டும் கதவை தட்டினான் ஓவியன். நகத்தை கடித்தபடி பதட்டத்துடன் கண்களை மூடினாள் தூரிகை. அவள் கதவை திறக்காமல் போகவே, தன் கையில் இருந்த மற்றொரு சாவியை கதவின் துவாரத்தில் நுழைத்தான். மெல்ல பின்னோக்கி நகர்ந்த தூரிகை, ஓடி சென்று குளியல் அறையில் புகுந்து கதவை சாத்தி தாளிட்டுக் கொண்டாள்.

அவளை சமையல் அறையில் தேடி பார்த்த ஓவியன், மேகாவின் அறைக்கு வந்தான். அவன் குளியலறையின் கதவை தள்ள, அது உள்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. கதவை தட்டியபடி,

"தூரிகை..." என்றான்.

கையை பிசைந்தபடி நின்றாள் துரிகை.

"தூரிகை, சீக்கிரமா வெளியில வாங்க. ரொம்ப அவசரம்" என்றான்.

"அவசரமா??? அய்யய்யோ இப்ப நான் என்ன செய்யறது?"

"தூரிகை..."

"சொல்லுங்க ஏசி சார்"

"தூரிகை, என் அவசரம் உங்களுக்கு புரியல.  நான் இதுக்காக எவ்வளவு வேலையை விட்டுட்டு வந்திருக்கேன்னு உங்களுக்கு தெரியாது. சீக்கிரம் வாங்க"

கண்களை அகல விரித்தாள் தூரிகை.

"ஏன் சார்?"

"என்னை கேள்வி எல்லாம் கேட்காதீங்க. நீங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க?"

"குளிச்சுகிட்டு இருக்கேன்"

"காலையில ஏற்கனவே குளிச்சிட்டீங்களே..."

"வந்து... சாஸ்... சாஸ் என் மேல கொட்டிக்கிச்சு"

"சரி சீக்கிரம் வாங்க. நான் ஆஃபீசுக்கு போகணும்"

*ஆஃபீசுக்கு போகணுமா?* என்று யோசித்தாள் தூரிகை.

"டைம் ஆகுது, வாங்க..."

*அப்படி என்றால், ஓவியன் இங்கு வந்திருப்பது முதல் பகலுக்காக இல்லையா?*

ரோபை அணிந்து கொண்டு வெளியே வந்தாள் தூரிகை, அவள் குளித்துக் கொண்டு தான் இருந்தாள் என்று ஓவியனை நம்ப வைக்க.

அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று கட்டிலின் மீது அமர வைத்தான் ஓவியன். அவன் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறான் என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் துரிகை.

"தூரிகை, நான் சொல்றத கவனமா கேளுங்க. அன்னைக்கு நீங்க கல்பனா வீட்டுக்கு கத்தி எடுத்துக்கிட்டு போய் அவளை காயப்படுத்தனும்னு நினைச்சீங்க... யாரோ வர்ற காலடி சத்தம் கேட்டு, பக்கத்துல இருந்த ரூமுக்குள்ள ஒளிஞ்சிகிட்டீங்க. வர்றது அவளோட புருஷன்னு நினைச்சீங்க. அப்போ *யார் நீ?* அப்படின்னு கல்பனா கேட்கிறதை கவனிச்சு, ரூமில் இருந்து வெளியே எட்டி பார்த்தீங்க... கரெக்டா?"

"ஆமாம்"

"அப்புறம்?"

"அந்த கொலைகாரன் கல்பனா முகத்துல ஏதோ ஒரு ஸ்ப்ரே அடிச்சதை பார்த்தேன். கல்பனா நினைவிழந்து கீழே விழுந்தா. அவ மேல பெட்ரோலை தெளிச்சு, கல்பனாவை உயிரோட அவன் எரிச்சிட்டான். அதை பார்த்த பயத்துல நான் கத்தியை கீழே போட்டேன். அந்த சத்தம் கேட்டு கொலைகாரன் என்னை திரும்பிப் பார்த்தான். நான் அங்கிருந்து ஓட்டமா ஓடி வந்துட்டேன்"

"சரி"

"என்னாச்சு ஏசி சார்?"

"அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு கிளியர் பண்ணிக்க, மறுபடியும் உங்க ஸ்டேட்மெண்ட்டை தெரிஞ்சிக்க நினைச்சேன்"

"ஓ..."

"நான் கிளம்புறேன்"

சரி என்று தலையசைத்தாள் தூரிகை.

"நான் இன்னைக்கு வர லேட் ஆகலாம். ஜாக்கிரதையாக இருங்க"

"சரி"

அந்த கத்தியை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான் ஓவியன். தூரிகை கூறியதை வைத்து பார்க்கும் பொழுது அவள் அங்கிருந்து கத்தியை எடுத்துக் கொண்டு வரவில்லை. அந்த கத்தியை பற்றிய விவரம் போலீஸ் ரெக்கார்டிலும் இல்லை. அப்படி என்றால், அந்த கத்தி நிச்சயம் கொலைகாரனிடம் தான் இருக்க வேண்டும். அவனுடைய நோக்கம் என்ன? அந்த கத்தியை வைத்துக்கொண்டு அவன் என்ன செய்ய திட்டமிட்டு இருக்கிறான்? ஓவியனின் பதட்டம் தாறுமாறாய் அதிகரித்தது. தூரிகையை காக்க அவன் ஏதாவது செய்தாக வேண்டும்... அவளுக்கே தெரியாமல்.

தொடரும்...










Bạn đang đọc truyện trên: AzTruyen.Top