17 திருமணம்
17 திருமணம்
திருமண ஏற்பாடுகளை பார்த்த தூரிகை, அதிர்ந்து நின்றாள். இது, தன் வாழ்வின் முக்கியமான நாள் என்று ஓவியன் கூறியது இந்த அர்த்தத்தில் தானா?
"கல்யாணமா?" என்று திணறினாள் தூரிகை.
"இது என் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான நாள்னு நான் தான் சொன்னேனே" என்றான் ஓவியன்.
"ஆனா, நான் வேற என்னவோ நினைச்சேன்" தயங்கினாள் தூரிகை.
"எனக்கு வேண்டியதை கொடுப்பேன்னு நீங்க எனக்கு வாக்கு கொடுத்திருக்கீங்க" என்றான் கைகளைக் கட்டிக் கொண்டு.
"ஆனா, நான் இதை எதிர்பார்க்கல"
"இப்ப உங்க முடிவு என்ன?"
"முடிவா?"
"நீங்க கல்யாணத்துக்கு தயாரா இருக்கும் போது, எதுக்காக தாமதம் செய்யணும்? நம்ம கல்யாணம் ஒரு முகூர்த்த நாளில் நடக்கணும்னு தானே நீங்க விருப்பப்பட்டீங்க? இன்னிக்கு முகூர்த்த நாள் தான்"
பண்டிதரை நோக்கி திரும்பிய ஓவியன்,
"ஐயரே, இன்னிக்கு முகூர்த்த நாள் தானே?" என்றான்.
"ஆமாம் இன்னிக்கு ரொம்ப நல்ல முகூர்த்த நாள்" என்றார் பண்டிதர்
"இப்ப சொல்லுங்க..."
அங்கிருந்து ஓட்டமாய் ஓடிப்போனாள் தூரிகை.
"தூரிகை, நில்லுங்க" என்று பின்னாலிருந்து கத்தினான் ஓவியன்
தூரிகை நிற்காமல் போகவே, அவளை பின்தொடர்ந்து ஓடி வந்தான் ஓவியன். அம்மன் சிலையின் முன், கை கூப்பி, கண்களை மூடி நின்றிருந்தாள் தூரிகை. அதை கண்ட ஓவியன், அவளை தொந்தரவு செய்யாமல் நின்றான்.
"அம்மா தாயே, என்னோட வாழ்க்கையில ஏற்கனவே நிறைய எதிர்பாராத திருப்பங்களை பாத்துட்டேன். இதுக்கப்புறம் என் வாழ்க்கையில் என்ன நடக்க போகுதோ எனக்கு தெரியல. இந்த நிமிஷத்துல இருந்து, என்னோட வாழ்க்கையை நான் உங்ககிட்ட விட்டுடறேன். என்னோட வாழ்க்கை உங்க பொறுப்பு. என்னை நீங்க தான் வழி நடத்தணும்"
கண்ணை திறந்த தூரிகை, அங்கு, மேகா சந்தோஷமாய் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்ததை கண்டாள். இது தான் கடவுளின் விருப்பமோ? ஆம், அவள் ஓவியனை மணந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதற்கு மேகா தானே முக்கியமான காரணம்...! எல்லாம் கடவுளின் விருப்பப்படி நடக்கட்டும். தன்னருகில் நின்றிருந்த ஓவியனை பார்த்து, சரி என்று தலையசைத்தாள். நிம்மதி பெருமூச்சு விட்டான் ஓவியன்.
திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருந்த இடத்தை நோக்கி தன் கையை நீட்டி, போகலாம் என்பது போல் சைகை செய்தான் ஓவியன். அவனுடன் சென்று மேடையில் அமர்ந்தாள் தூரிகை. அவள் பதட்டத்துடன் இருந்தது நன்றாகவே தெரிந்தது ஓவியனுக்கு. ஆனால் எல்லாம் சீக்கிரமே சரியாகிவிடும் என்று அவன் நம்பினான். அவர்கள் இருவரும் ஒன்றாய் அமர்ந்திருப்பதை பார்த்த மேகா, அவர்களை நோக்கி ஓடினாள்.
"நீங்க என்ன பண்றிங்க?"
"நான் உங்க அத்தையை கல்யாணம் பண்ணிக்க போறேன்" என்று சிரித்தான் ஓவியன்.
"நிஜமாவா?"
ஆமாம் என்று தலையசைத்தான் ஓவியன்.
"ஹையா... ஜாலி... இனிமே முகில் என் கூடவே இருப்பான்" என்று கைத்தட்டி குதித்தாள் மேகா.
மேகாவை அழித்து தன் அருகில் அமர்த்திக் கொண்டான் ஓவியன். அவளது கன்னத்தில் சந்தனத்தை பூசி விட்டார் பண்டிதர். மேகா கலகலவென சிரித்தாள்.
தூரிகையின் கழுத்தில் தாலி கட்டிய ஓவியன், அவள் நெற்றியில் குங்குமம் இட்டான். இணைந்த கைகளுடன் இருவரும் அக்கினியை வலம் வந்து, சாஸ்திரப்படி தம்பதிகள் ஆனார்கள்.
ஒரு கையில் மேகாவை தூக்கிக்கொண்டு, மறு கையில் தூரிகையின் கரத்தை பற்றி கொண்டு, கோவிலில் இருந்து கிளம்பினான் ஓவியன், அவர்களுடைய பொறுப்பை தன் தோளில் ஏற்றுக்கொண்டு.
வட்டாட்சியர் அலுவலகம்
தனது அலுவலகத்தில் முருகனை பார்த்த நந்தகுமார் சந்தோஷம் அடைந்தான்.
"ஹாய் மாம்ஸ்..." என்று அவனிடம் ஓடி வந்தான்.
"எப்படி இருக்க?" என்றான் முருகன்.
நந்தகுமாருக்கு ஆச்சரியமாய் போனது. இது தான் முதல் முறை, அவன் முருகனை மாமா என்று அழைத்த பிறகும், அவன் எதுவும் கூறாமல் சாதாரணமாய் இருந்தது.
"நான் நல்லா இருக்கேன் நீங்க என்ன இந்த பக்கம்? மாளவிகாவை பத்தி இன்னும் ஏதாவது தெரிஞ்சிக்க வந்தீங்களா?" என்று அவன் வந்த காரணத்தை யூகித்தான் நந்தகுமார்.
"மாளவிகாவை பத்தி இல்ல... சுபாஷினியை பத்தி..."
"சுபாஷினியா? அது யாரு?" என்றான் நந்தகுமார் முகத்தை சுருக்கி.
"முதல் முதல்ல கொலையானவ"
"ஓ அவளா? அந்த பொம்பளை வேலை செஞ்சது சென்னை ஹைகோர்ட்ல... அவங்க வீட்டுக்காரர் அகிலன் என்கூட வேலை செஞ்சவரு. பாவம் அவர், பொண்டாட்டி மேல ரொம்ப பிரியமா இருந்தாரு. ஆனா அந்த பொம்பளை அவரை ஏமாத்திட்டா"
"உன் கூட வேலை செய்ற எல்லாரை பத்தியும் உனக்கு தெரியுமா?"
"பெரும்பாலும் எல்லாருக்கும் எல்லாரை பத்தியும் தெரியும். வேலை செய்யும் போது, கூட வேலை செய்றவங்களை பத்தி பேசிக்கிட்டே வேலை செய்றது ஆபீஸ்ல வழக்கம்."
"மத்தவங்க சொந்த பிரச்சினையை பத்தி பேசுறது உங்களுக்கு டைம் பாஸா?" என்று முறைத்தான் முருகன்.
"எல்லாரும் செய்யறது தானே?" என்று, நடைமுறையை சாதாரணமாய் கூறினான் நந்தகுமார்.
"உங்க அம்மாவும் தங்கச்சியும் எப்படி இருக்காங்க?"
அது மேலும் நந்தகுமாருக்கு ஆச்சரியத்தை வழங்கியது. ஏனென்றால், முருகன் எப்பொழுதும் அவனது தங்கையை பற்றி பேசியதே இல்லை.
"நல்லா இருக்காங்க"
"உன் வீடு எங்க இருக்கு? என்னை உங்க வீட்டுக்கு கூப்பிட மாட்டியா?" என்றான் முருகன்.
நந்தகுமாருக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. இதையெல்லாம் கேட்பது உண்மையிலேயே முருகன் தானா?
"அவங்க இன்னும் சென்னைக்கு வரல"
"நீ என்ன சொல்ற?"
"அவங்க இன்னும் செங்கல்பட்டில் தான் இருக்காங்க"
"என்னை அடிக்கடி பார்க்கத் தான் இங்க ட்ரான்ஸ்பர் வாங்கிகிட்டு வந்தேன்னு சொன்ன...? உன் தங்கச்சி என்னை பார்க்கணும்னு சொன்ன...?"
"நான் கொஞ்சம் வேலையில பிஸியா இருக்கேன். எனக்கு வீடு மாத்த நேரமே கிடைக்கல"
"அதை நீயே செய்யணும்னு என்ன அவசியம் இருக்கு? அது தான் நிறைய பார்சல் சர்வீஸ் இருக்கே... அவங்க எல்லாத்தையும் கொண்டு வந்து சென்னையில் சேர்த்துட்டு போறாங்க..."
"என்னோட பட்ஜெட்டுக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. அந்த பணம் இருந்தா, வேற ஏதாவது உபயோகமா செலவு செய்யலாம். அதனால தான் லீவு கிடைக்கட்டும்னு காத்திருக்கேன்"
"எப்போ நீ வழக்கமா செங்கல்பட்டுக்கு போவ?"
"ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் போவேன்"
"அப்படியா, சரி, நான் கிளம்புறேன்"
அங்கிருந்து கிளம்பினான் முருகன். அவனுடைய அணுகு முறையில் வித்தியாசத்தை கவனித்தான் நந்தகுமார். ஒருவேளை, முருகன் தன்னை சந்தேகப்படுகிறானோ என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது.
.........
ஓவியனும், தூரிகையும், மேகாவுடன் *தங்கள்* இல்லம் வந்து சேர்ந்தார்கள்.
"சாரி, உங்களை ஆலம் சுத்தி வரவேற்க இங்க யாரும் இல்ல"என்றான் பூட்டைத் திறந்த படி ஓவியன்.
"அது தான் எனக்கு தெரியுமே" என்றாள் தூரிகை.
கதவை திறந்தவுடன், அவர்களுக்காக காத்திராமல், உள்ளே ஓடினாள் மேகா. உள்ளே நுழையப் போன தூரிகை, ஸ்தம்பித்து நின்றாள். தன் கை விரல்களை, அவளது விரல்களுடன் ஓவியன் பிணைத்துக் கொண்ட போது. அவர்களது இணைந்த கைகளையும், பிறகு ஓவியனையும் ஏறிட்டாள் தூரிகை.
"இப்போ உள்ள போகலாம், வாங்க" என்றான்.
தூரிகையின் மனம் அல்லாட துவங்கியது. கைகளை இணைத்துக் கொண்டு, இருவரும் ஒன்றாய் அடி எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்தார்கள்.
அன்றைக்கு சமைக்கும் மனநிலையில் ஓவியன் இல்லாததால், தேவையான உணவு, வெளியில் இருந்து வரவழைக்கப்பட்டது. இரவு உணவு நேரம் வரை, ஓவியனோ தூரிகையோ அதிகம் பேசிக்கொள்ளவில்லை. முகில் பற்றியும், அவர்களது திருமணம் பற்றியும், மேகா தான் விடாமல் பேசிக்கொண்டே இருந்தாள்.
ஓவியன் வெகு சாதாரணமாய் இருந்தான். ஆனால், தூரிகைக்கோ நிலை கொள்ளவில்லை. அடுத்து ஓவியன் என்ன செய்யப் போகிறான் என்பது பற்றி அவளுக்கு எந்த தெளிவும் இல்லை. இன்று அவள் ஓவியனின் அறையில் தங்க வேண்டுமா? நேற்று வரை மேகாவின் அறையில் அவளுடன் தானே தங்கினாள்? இப்பொழுது என்ன செய்யப் போகிறாள்? ஓவியனின் அறையில் தங்கினால், மேகா கேள்வி எழுப்புவாள். மேகவுடன் தங்கினால், ஓவியன் கேள்வி எழுப்புவான். என்ன செய்வது என்று புரியவில்லை அவளுக்கு. மேகாவால் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அவள் குழந்தை. ஆனால், ஓவியன் புரிந்து கொள்வான்... புரிந்து கொள்வான்?
ஓவியன் சாதாரணமாக இருப்பதைப் போல் தெரிந்தாலும், அவன் மனதிலும் இதைப் பற்றிய எண்ணம் தான் ஓடிக் கொண்டிருந்தது. தூரிகை என்ன செய்கிறாள் பார்க்கலாம் என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தான். இதுநாள் வரை, அவர்கள் இருவருமே வெகு சாதாரணமாகத் தான் பேசிக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களது வாழ்வில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றத்தை எதிர்கொள்ள, அவர்கள் இருவருக்குமே சற்று சங்கடமாக தான் இருந்தது.
இரவு உணவு சாப்பிட்டு முடித்த பின், டிவியை ஆன் செய்து, மேகாவின் விருப்பமான கார்ட்டூன் சேனலை வைத்தாள் தூரிகை. தூரிகையின் மடியில் படுத்தபடி அதை பார்த்துக் கொண்டிருந்தாள் மேகா. தூரிகைக்கு தெரியும், மேகா சீக்கிரமே உறங்கிப் போவாள் என்று. அதனால் அவளும் சோபாவில் சாய்ந்து கண்களை மூடினாள். அவளுக்கு தூக்கம் வராவிட்டாலும், தூங்குவது போல் நடிப்பதை தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.
அதைப் பார்த்த ஓவியன், *நல்ல நாடகம்* என்று மனதில் எண்ணி சிரித்துக் கொண்டான். பாவம், தன் கணவன் ஒரு போலீஸ்காரன் என்பது தூரிகைக்கு நினைவில் இல்லை போலும்...! திடீரென்று நடந்த திருமணம் என்பதால், தான் ஒரு போலீஸ்காரன் மனைவி என்ற கதாபாத்திரத்திற்குள் அவள் இன்னும் தன்னை பொறுத்திக் கொள்ளவில்லை.
தூரிகை எதிர்பார்த்தபடியே, சற்று நேரத்தில் உறங்கிப் போனாள் மேகா. அவள் உறங்கி விட்டதை கவனித்த ஓவியன், அவளை தூக்கிக்கொண்டு போய், அவர்களது அறையில் படுக்க வைத்தான். மீண்டும் வரவேற்பறைக்கு வந்த அவன், தூரிகையை எழுப்ப முயன்றான்.
லேசாய் அவள் கன்னத்தை தட்டியபடி,
"தூரிகை... எழுந்திருங்க" என்றான்.
அவளிடம் எந்த அசைவும் தென்படாமல் போகவே,
"வேற வழி இல்ல" என்று பெருமூச்சு விட்டான்.
மேகாவை தூக்கிச் சென்றது போல், அவளையும் தன் கையில் தூக்கிக் கொண்டான், தூரிகையின் இதயத்துடிப்பை ஏடாகூடமாய் எகிரச் செய்து. தூங்குவது போல் பாசாங்கு செய்ய, படாத பாடுபட்டாள் தூரிகை. ஓங்கி ஒலித்த அவளது இதயத்துடிப்பை ஓவியன் கேட்டு விடுவானோ என்ற பயம் அவளுக்குள் எழுந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவன் தன்னை எந்த அறைக்கு அழைத்துச் செல்ல போகிறான் என்று புரியாமல் தவித்தாள் தூரிகை. அவள் இன்னும் தூங்கவில்லை என்பதை தெரிந்து வைத்திருந்த ஓவியன், அவளை அனாயாசமாய் தூக்கிச் சென்றான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top