16 முக்கியமான நாள்
16 முக்கியமான நாள்
இந்த வழக்கில் ஓவியனின் அணுகுமுறையை பற்றி யோசித்துக் கொண்டிருந்தான் முருகன். அப்பொழுது,
"சார்" என்று யாரோ அழைப்பது கேட்க, தலை நிமிர்ந்தான்.
அகிலன் அவனுக்கு முன்னால் நின்று கொண்டு இருந்தான். அந்த வழக்கில் முதலில் கொலையான சுபாஷினியின் கணவன் தான் அகிலன் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
"நீங்க என்ன இங்க வந்திருக்கீங்க? கொலையாளி பத்தி ஏதாவது துப்பு கிடைச்சுதா?" என்றான் முருகன்.
"இல்ல சார். நான் என் சொந்த ஊருக்கு போகணும். அதான் உங்ககிட்ட பர்மிஷன் வாங்கலாம்ன்னு வந்தேன்"
வழக்கு சம்பந்தப்பட்ட யாரும் சென்னையை விட்டு வெளியே எங்கும் செல்லக்கூடாது என்று சொல்லப்பட்டிருந்தது.
"ஏதாவது சீரியஸான விஷயமா?"
"ஆமாம் சார்"
"என்ன விஷயம்?"
"என் ஃப்ரெண்டுக்கு கல்யாணம் சார்"
"அதுல என்ன சீரியஸ் இருக்கு?"
"கல்யாணத்து மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு சார். யாராவது கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னா, அவங்களை பார்க்க பாவமா இருக்கு" என்றான் அகிலன்.
அவன் கூறியது சரி தான் என்று தோன்றியது முருகனுக்கு. இந்த வழக்கிற்கு பிறகு பெரும்பாலானவர்கள் அப்படித்தான் நினைக்கத் துவங்கி இருந்தார்கள்.
"திரும்பி வர எத்தனை நாள் ஆகும்?"
"ரெண்டு நாள்ல வந்துடுவேன் சார்"
"நீங்க ஓவியன் சார் கிட்ட தான் பர்மிஷன் கேட்கணும்"
"இன்னைக்கு அவர் வரமாட்டாரா சார்?"
"இப்ப தான் கிளம்பி போனாரு"
"நான் வேணும்னா அவங்க வீட்டுக்கு போய் அவர்கிட்ட பேசட்டுமா சார்?"
"இல்ல இல்ல... நானே அவரை கூப்பிடுறேன்"
முருகனுக்கு தெரியும். வழக்கு சம்பந்தப்பட்ட யாரும் தன் வீட்டிற்கு வருவது ஓவியனுக்கு பிடிக்காது என்று.
"உங்க சொந்த ஊர் எது?"
"செங்கல்பட்டு சார்"
"செங்கல்பட்டா?"
"ஆமாம் சார். என்னோட வைஃப் சென்னை ஹைகோர்ட்ல கிளர்க்கா வேலை பார்த்தாங்க. அதனால தான் நானும் சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்தேன்"
"செங்கல்பட்டுலையும் நீங்க ஆதார் செக்ஷன்ல தான் வேலை பார்த்தீங்களா?"
"இல்ல சார். அங்க ரேஷன் செக்ஷன்ல இருந்தேன்"
"ஓஹோ... உங்களுக்கு நந்தகுமாரை தெரியுமா?"
"எந்த நந்தகுமார்? இப்போ சென்னை தாலுக்கா ஆபீஸ்ல இருக்காரே, அவரா?"
"ஆமாம்"
"தெரியும் சார். அவர் அங்க வெள்ள நிவாரண செக்க்ஷன்ல வேலை பார்த்துகிட்டு இருந்தாரு. அவர் ஏன் சென்னைக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தாருன்னு எனக்கு புரியல சார்"
"நீங்க என்ன சொல்றீங்க?"
"என்னோட வைஃப் இங்க வேலை பார்த்தாங்கன்னு நான் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்தேன். ஆனா அவர் விஷயத்துல அப்படி எந்த காரணமும் இருக்கிறதா தெரியல. அவருக்கு ட்ரான்ஸ்ஃபர் கொடுக்கிற விருப்பமே எங்க உயரதிகாரிக்கு இல்ல. ஆனா பிடிவாதமா நின்னு டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கிட்டு வந்துட்டாரு நந்தகுமார். ஏன்னு தெரியல. இன்னும் அவங்க அம்மாவையும் தங்கச்சியையும் கூட இங்க கூட்டிக்கிட்டு வரல. அடிக்கடி செங்கல்பட்டுக்கு போய் அவங்களை பார்த்துக்கிட்டு இருக்காரு"
தன் முகத்தை சுருக்கி ஆழமாய் யோசித்தான் முருகன். தன்னை சந்திப்பதற்காகவும், தனது தங்கைக்காகவும் தான் சென்னைக்கு மாறுதல் பெற்றுக் கொண்டு வந்ததாய் கூறினானே நந்தகுமார். அப்படி இருக்கும் பொழுது, ஏன் அவன் இன்னும் அவன் அது தங்கையை இங்கு அழைத்து வரவில்லை? இரண்டாவது கொலைக்கான அத்தனை காரணிகளையும் அவன் தானே அவர்களுக்கு தெரியப்படுத்தினான்...! அப்படி என்றால் மற்றவர்களை பற்றிய விவரம் கூட அவனுக்கு தெரிந்திருக்குமோ?
"சார், ஓவியன் சார் கிட்ட பர்மிஷன் வாங்க எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?" என்றான் அகிலன்.
"எப்போ நீங்க ஊருக்கு போகணும்?"
"நாளைக்கு போகணும் சார்"
"சரி நாளைக்கு காலையில வந்து, ஸ்டேட்மெண்ட்ல கையெழுத்து போட்டுட்டு போங்க"
"சரிங்க சார்"
அங்கிருந்து கிளம்பினான் அகிலன். நந்தகுமார் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தான் முருகன்.
.....
தனக்கும் மேகாவுக்கும் புது துணிகளை வாங்கி வந்து கொடுத்த ஓவியனை ஆச்சரியத்துடன் பார்த்தாள் தூரிகை.
"நம்ம ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும். ரெண்டு பேரும் ரெடி ஆகுங்க" என்றான் ஓவியன்.
"எங்க போக போறோம்?" என்றாள் தூரிகை.
"அப்புறமா சொல்றேன்"
"ஏதாவது பார்ட்டியா?"
"இல்ல?"
"அப்படின்னா வேற எங்க?"
"நம்ம கோவிலுக்கு போறோம்"
"கோவிலுக்கா?"
"இன்னிக்கு உங்களுக்கு பர்த்டேவா?" என்றாள் மேகா.
"இல்லடா கண்ணா"
"நான் கேர்ள்... நான் கண்ணா இல்ல"
அவள் முன் முழங்காலிட்டு அமர்ந்த ஓவியன்,
"எதுக்காக எல்லாரையும் கண்ணான்னு கூப்பிடுறாங்கன்னு உனக்கு தெரியுமா?" என்றான்.
தெரியாது என்று தலையசைத்தாள் மேகா.
"எல்லா குழந்தைகளையும் கண்ணனுக்கு ரொம்ப பிடிக்கும். யாரையெல்லாம் கண்ணான்னு கூப்பிடுறாங்களோ, அவங்களுக்கு கண்ணன் ரொம்ப ஹெல்ப் பண்ணுவாராம். அதனால தான் நான் உன்னை அப்படி கூப்பிடறேன்" என்று இல்லாத *பிட்டை* போட்டு விட்டான் ஓவியன். ஏனென்றால் அவனுக்கு மேகாவை அப்படி கூப்பிடுவது பிடித்திருந்தது.
யோசனையுடன் தலையசைத்தாள் மேகா.
"போய் ரெடி ஆகு" என்றான்
சரி என்று தனது புதிய உடைகளுடன் ஓடிப் போனாள் மேகா.
"எதுக்காக எங்களை கோவிலுக்கு கூட்டிகிட்டு போறீங்க?" என்றாள் தூரிகை.
"இன்னைக்கு, என் வாழ்க்கையோட ரொம்ப முக்கியமான நாள். அதனால தான் கோவிலுக்கு கூட்டிக்கிட்டு போறேன்"
"என்ன ஸ்பெஷல் இன்னைக்கு?"
"அதை கோவிலுக்கு வந்து நீங்களே தெரிஞ்சிக்குவீங்க"
தூரிகையின் மனதில் ஒரு யோசனை எழுந்தது. அந்த நாள் ஓவியனுக்கு முக்கியமான நாளாக இருந்தால், அவனுக்கும் கூட ஏதாவது பரிசு கொடுக்கலாம் என்று எண்ணினாள் அவள்.
"இன்னைக்கு என்ன நாள்னு சொல்லுங்க"
"உங்களுக்கு, என்னை கேள்வி கேட்க போரே அடிக்காதா?" என்றான்.
"எதுக்கு கேக்குறன்னா..."
"நீங்க கேள்வி கேட்கிறதை நிறுத்துற வரைக்கும் உங்களுக்கு பதில் கிடைக்காது"
"இன்னைக்கு ஸ்பெஷல் டேன்னு சொன்னீங்க. உங்களுக்கு ஏதாவது கிஃப்ட் கொடுக்கலாம்னு நினைக்கிறேன். அதனால தான் கேட்டேன்"
ஓவியனின் முகத்தில் மெல்லிய புன்னகை இழையோடியது.
"போய் ரெடி ஆகுங்க" என்றான்.
"உங்களுக்கு நான் கிஃப்ட் கூட கொடுக்க கூடாதா சார்?" என்றாள்
"என்ன கிஃப்ட் குடுப்பீங்க?"
"உங்களுக்கு தேவையான ஏதோ ஒன்னை கொடுப்பேன்"
"எனக்கு என்ன வேணும்னு தெரியுமா?"
"உங்களுக்கு என்ன வேணும்? சொல்லுங்க"
"நீங்க எது கொடுத்தாலும் வாங்கிக்குவேன்"
"ஆனா உங்களுக்கு பிடிச்சதை கொடுத்தா எனக்கும் திருப்தியா இருக்கும் இல்லையா?"
"நெஜமா தான் சொல்றீங்களா?"
"ஆமாம்"
"சரி, நிச்சயம் சொல்றேன்"
"எப்போ?"
"கோவில்ல"
"ப்ராமிஸ்?"
"யா ப்ராமிஸ்"
"ஓகே"
தனக்கு வழங்கப்பட்டிருந்த அழகிய புடவையை பார்த்து வாயடைத்துப் போனாள் தூரிகை. அந்த அழகிய புடவையை ஆசையாய் அணிந்து கொண்டாள். அவள் அதை அணிந்து கொண்ட பின், அந்த புடவையின் அழகு பறிபோனது... அந்த புடவையை விட, அவள் மிக அழகாய் இருந்ததால்.
புத்தாடை அணிந்து கொண்ட மேகா, துள்ளி குதித்தபடி ஓடி வந்தாள். தன் அத்தையுடனும், ஓவியனுடனும் வெளியில் செல்ல போகும் சந்தோஷத்தில் இருந்தாள் அவள். அடர் நீல நிற பேண்ட்டும், வெள்ளை lமுழு கை சட்டையும் அணிந்து, அதை டக்-இன் செய்து கொண்டு, பார்ப்பவர் கண் படும் அளவிற்கு திவ்யமாய் இருந்தான் ஓவியன். தன் எதிரில் புடவையில் வந்து நின்ற பெண்ணை பார்த்ததும் தொலைந்து போனான் ஓவியன். அவளைப் பார்க்கவே கூடாது என்ற முடிவுக்கு வந்தான் அவன். அவளை பார்த்தால், அவனது கண்களை அவளிடமிருந்து அகற்ற முடியாது என்று அவனுக்கு தெரியும்.
"நான் ரெடி" என்றாள் தூரிகை.
"நானும் ரெடி" என்றாள் மேகா.
"சரி வாங்க போகலாம்"
அவர்களை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தான் ஓவியன். வழக்கம் போல், சாதனாவிடம் எந்த மாற்றமும் இல்லை. ஒரு செவிலி அவர்களிடம் குழந்தையை கொண்டு வந்து கொடுத்தாள். அவனது கால் சட்டையை இழுத்த மேகா, அவனை தன்னிடம் கொடுக்குமாறு கேட்டாள். அவளை ஒரு நாற்காலியில் அமர செய்து, அவள் மடியில் குழந்தையை வைத்தான் ஓவியன். மேகாவின் முகத்தில் கோடி மின்னல்கள் மின்னியது.
"அத்தை இங்க பாரு இவன் எவ்வளவு அழகா இருக்கான்... இவன் பேச மாட்டானா? எப்ப விளையாடுவான்? என்ன சாப்பிடுவான்? இவனுக்கு என்ன பிடிக்கும்?"
"அவன் ரொம்ப குட்டி பாப்பா இல்லையா, அவனுக்கு எதுவும் தெரியாது. நீ சொல்லி கொடுத்தா அவன் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்குவான்" என்றான் ஓவியன்.
"நான் அவனுக்கு எல்லாத்தையும் சொல்லித் தரேன். இவன் பேர் என்ன?"
"நீயே அவனுக்கு ஒரு நல்ல பெயர் வையேன்"
"நானா?" என்றாள் குதூகலமாக.
"நீ தான்"
"முகில்" என்றாள் மேகா.
"வாவ் சூப்பர் நேம்" என்றபடி தூரிகையை பார்த்தான் ஓவியன். அவள் முகம் வாடிப்போய் இருந்தது.
"என்ன ஆச்சு?"
"மேகாவுக்கு தம்பி பிறந்தா, அந்த பேர் தான் வைக்கணும்னு அண்ணி சூஸ் பண்ணி வச்சிருந்தாங்க" என்றாள் தூரிகை.
மேகாவின் தலையை அன்பாய் வருடி கொடுத்தான் ஓவியன்.
"சரி நம்ம கிளம்பலாமா?"
"எங்க?" என்றாள் மேகா.
"கோவிலுக்கு"
"முகிலும் நம்ம கூட வருவானா?"
"இல்லடா கண்ணா, முகில் நம்ம கூட வர முடியாது"
"ஏன்?"
"டாக்டர்ஸ் அலோ பண்ண மாட்டாங்க. ஏன்னா, அவன் ரொம்ப குட்டி பாப்பா இல்லையா?"
"எப்போ இவன் நம்ம வீட்டுக்கு வருவான்?"
"சீக்கிரமே வருவான்"
"அப்படின்னா சரி" என்று முகிலின் கன்னத்தில் அன்பாய் முத்தமிட்டாள் மேகா.
முகிலை அங்கிருந்த செவிலியிடம் கொடுத்துவிட்டு, அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.
"வாங்க போகலாம்"
அந்த நாள் உண்மையிலேயே ஓவியனின் வாழ்வில் மிக முக்கியமான நாளாக தான் இருக்க வேண்டும். அதனால் தான் மருத்துவமனைக்கு வந்து அவனது அக்காவை பார்த்துவிட்டு, பின்பு கோவிலுக்கு அழைத்துச் செல்கிறான் என்று நினைத்தாள் தூரிகை.
அவர்கள் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள். ஓவியனை பார்த்த புரோகிதர் புன்னகைத்தார்.
"நீங்க ரெடியா?" என்றார்.
ஆம் என்று தலையசைத்தான் ஓவியன்.
"சரி வாங்க" என்று அவர் கோவிலின் பின்புறம் நடந்தார்.
எங்கே என்பது போல் அவனை ஏறிட்டாள் தூரிகை.
"எனக்கு வேண்டியதை கொடுப்பேன்னு நீங்க சொன்னீங்க இல்ல?"
"ஆமாம் சொன்னேன்"
"நிச்சயமா குடுப்பீங்களா?"
"குடுப்பேன்"
"அப்படின்னா, என் அக்கா குழந்தையை பார்த்துக்க, ஒரு வைஃபா எனக்கு உங்க சப்போர்ட்டை கொடுங்க"
அவள் கையைப் பிடித்து கோவிலின் பின்புறம் அழைத்துச் சென்றான். அங்கு, திருமண ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார் புரோகிதர்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top