15 கௌரவமானவர்கள்?

15 கௌரவமானவர்கள்...?

தான் செய்தது சரியா என்பது பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள் தூரிகை. அவளுக்கு சில நாட்களுக்கு முன்பே பரிச்சயமான ஒருவனின் வீட்டில் அவள் அமர்ந்திருக்கிறாள். எப்படி அவ்வளவு சுலபமாய் அவனை திருமணம் செய்து கொள்ள அவள் ஒப்புக்கொண்டு விட்டாள் என்று அவளுக்கே புரியவில்லை. அவளைப் பிடித்திருக்கிறது என்று அவன் கூறினான்... சிறிதும் யோசனை இன்றி, எப்படி அவள் அதை நம்பி விட்டாள்? அவளது சூழ்நிலை காரணமா? அல்லது கொலைகாரனின் மிரட்டல் காரணமா?

பிரட் டோஸ்ட்டும், ஆம்லெட்டும் தயார் செய்து கொண்டிருந்த ஓவியன் அவளை கவனித்தான். அதை ஒரு தட்டில் வைத்து அவளிடம் நீட்டிய அவன்,

"இதை சாப்பிட்டுட்டு, உங்க டவுட் என்னன்னு என்கிட்ட கேளுங்க" என்றான்.

அவனை திகைப்புடன் ஏறிட்டாள் தூரிகை.

"என்னை கல்யாணம் பண்ணிக்க எப்படி அவ்வளவு ஈஸியா ஒத்துக்கிட்டோம்னு தானே யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க?"

"அது... வந்து..."

"நான் உங்களை ஏமாத்திடுவேன்னு நினைக்கிறீங்களா?"

"உண்மையை சொல்லனும்னா, என்னைத் தவிர வேறு யாரையும் என்னால நம்ப முடியல. நடக்கிறதை எல்லாம் பாக்கும் போது, என்னால் பாசிட்டிவா யோசிக்கவே முடியல. இங்க யாருமே நம்பகமானவங்க இல்ல... பொம்பளைங்களும் சரி... ஆம்பளைங்களும் சரி..."

"உங்களை செக்யூர்டா ஃபீல் பண்ண வைக்க நான் என்ன செய்யணும்?"

"நிஜமா எனக்கு தெரியல"

"உங்களோட இன்கம் சோர்ஸ் என்ன?"

"எதுவுமே இல்ல... எங்களோட எல்லா சேமிப்பையும் போட்டு தான் எங்க அண்ணன் இந்த ஃபிளாட்டை வாங்கினான். அவனோட ஆஃபீசுக்கு பக்கத்துல வீடு இருக்கணும்னு காரணம் சொன்னான். அதனால எங்க பழைய வீட்டை கூட நாங்க வித்துட்டோம். மீதம் இருக்கிற பேங்க் பேலன்ஸ் தீர்ந்து போறதுக்கு முன்னாடி, எனக்கு ஒரு வேலையை தேடிக்கணும்னு தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்"

"அப்படின்னா இந்த ஃபிளாட்டையே உங்க இன்கம்மா மாத்திக்கோங்க"

"எப்படி?"

"இந்த ஃபிளாட்டை வாடகைக்கு விட்டு, வர்ற பணத்தை உங்க அக்கவுண்ட்ல போட்டு வச்சுக்கோங்க"

"அப்படி செஞ்சா?"

"ஒவ்வொரு மாசமும், உங்க அக்கவுண்ட்ல பணம் சேர்ந்துகிட்டே போகும் போது, அது உங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும்"

"அப்படின்னா, பணம் தான் எல்லாம்னு சொல்றீங்களா?"

"நிச்சயமா இல்ல. ஆனா, ஒரு பொண்ணு தன்னோட சொந்த கால்ல நிக்க நிச்சயம் பணம் தேவை. பணம் இருந்தா, யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்ல"

"நான் அதைப் பத்தி பேசல..."

"நீங்க நம்பிக்கை வைக்கிறதை பத்தி தான் பேசிகிட்டு இருக்கீங்க. நீங்க என்னை நம்ப வேண்டாம். இன்ஃபேக்ட், நீங்க யாரையுமே நம்ப வேண்டாம். உங்க மேல இருக்கிற நம்பிக்கையை வளர்த்துக்கோங்க. நிகழ்காலத்தை சந்தோஷமா அனுபவிங்க. நாளைக்கு என்ன நடக்கப் போகுதுன்னு யோசிக்காதீங்க. கோ வித் த ஃப்ளோ. நடந்ததை நினைச்சு கவலைப்படாம, அது சொல்லிக் கொடுத்த பாடத்தை மட்டும் மனசுல நிறுத்திக்கோங்க"

யாரையும் நம்பாமல் எப்படி வாழ்வது என்ற பாடத்தை அவளுக்கு கற்றுக் கொடுத்தான் ஓவியன். ஆனால் அவன் அதை சொல்லிக் கொடுத்த விதமே அவன் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. *என்னை நம்பாதே* என்று அவன் கூறியதற்கு, அவன் தந்த காரணம் அவளுக்கு பிடித்திருந்தது. சுய நம்பிக்கையை வளர்க்கும் ஒரு ஆண் துணையை விட ஒரு பெண்ணுக்கு வேறு என்ன வேண்டும்? சந்தோஷமாக வாழ, தன்னிச்சையான வழியை காண்பிக்கும் ஆண்மகன் எங்கிருக்கிறான்?

"நமக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும், உங்களுக்கு மனசுல சஞ்சலம் இருந்துக்கிட்டே தான் இருக்கும். அத பத்தி யோசிங்க"

"நீங்க என்னை வேலைக்கு போக விட மாட்டீங்களா?"

"துரதிஷ்டவசமா, மாட்டேன். என் அக்கா மகன் ஸ்கூலுக்கு போற வரைக்கும்... ஆனா, வீட்ல இருந்து நீங்க என்ன வேணா செய்யலாம், மேகாவையும் குழந்தையையும் பார்த்துக்கிட்டு. அதுக்கு என்னால முடிஞ்ச எல்லா ஹெல்ப்பையும் நான் செய்வேன்" என்று மேலும் அவளை திகைப்படையச் செய்தான்.

இது ஐந்தாண்டு காலத்திட்டம். ஓவியன் எல்லாவற்றையும் ஏற்கனவே திட்டமிட்டு விட்டது போல் தெரிகிறது... அவளைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும்...

"அதுக்கப்புறம், *நமக்குன்னு* ஒரு குழந்தை வேணுமுன்னு நினைச்சீங்கன்னா, அது உங்க விருப்பம்"

*சொந்த குழந்தையா?* விக்கித்து நின்றாள் தூரிகை...

"இந்த ரெண்டு குழந்தைகளை வளக்குறதுக்குள்ள உங்களுக்கு போதும் போதும்னு ஆயிடலாம்..." என்று சிரித்தான் ஓவியன்.

வெட்கம் கலந்த புன்சிரிப்பு தோன்றியது தூரிகையின் முகத்தில். தங்களது எதிர்காலத்தைப் பற்றி, அவளது அண்ணன் மகள் உட்பட, இவ்வளவு தெளிவான திட்டங்களை வகுத்து வைத்திருக்கும் இந்த மனிதனின் மீது ஏன் நம்பிக்கை ஏற்படாமல் போகப்போகிறது?

"இந்த கேஸ் முடிஞ்சதுக்கு பிறகு நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றாள் தூரிகை.

"கேஸ் முடிய, ஒரு வருஷம் ஆனா பரவாயில்லையா?"

"ஒரு வருஷமா?"

"எப்போ கொலைகாரன் பிடிப்படுவான்னு எப்படி சொல்ல முடியும்?"

"ஏன், உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?"

"நிறைய இருக்கு... ஆனா, இந்த கேஸ் நம்ம விஷயத்துக்குள்ள வர வேண்டாம்னு நான் நினைக்கிறேன்"

"அப்படின்னா நம்ம எப்ப கல்யாணம் பண்ணிக்கனும்னு நீங்க நினைக்கிறீங்க?"

"நாளைக்கு?"

"ஏன் அவசரப்படுறீங்க?"

"இதுக்கு நான் என்ன சொல்றது? எப்படியும் கல்யாணம் பண்ணிக்க தான் போறோம்... அதை நாளைக்கு பண்ணிக்கலாம்ல...?"

"உங்க அக்கா?"

"அவங்களை பத்தி நம்ம யோசிக்காம இருக்கிறது நல்லது. அவங்க குணமானா சந்தோஷம் தான். அவங்களைப் பத்தி எந்த எதிர்பார்ப்பையும் வளர்த்துக்க நான் விரும்பல. அவங்களோட டெலிவரி டைம்லையே அவங்க கோமாவில் இருந்து வெளியே வந்துடுவாங்கன்னு நினைச்சேன். ஆனா அது நடக்கல..."

"சரி, அப்படினா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா நாளைக்கு இல்ல. அது ஒரு முகூர்த்த நாளில் தான் நடக்கணும்"

"சரி, உங்க இஷ்டம்"

இறுதியாய், அவர்கள் திருமணம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தார்கள்.

........

தமிழகம் மட்டுமல்ல, இந்திய தேசம் முழுவதும் அந்த வழக்கை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தது. ஓவியன் கேட்டுக்கொண்டபடி, கொலைக்கான காரணத்தை ஊடகங்களிடம் தெரிவித்தார் ஆணையர். அந்த விஷயம் காட்டுத்தீ போல் பரவத் தொடங்கியது. ஊடகங்களின் வாயிலாக மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். டிவி சேனல்கள் தங்கள் டிஆர்பிஐ உயர்த்த  அதை பற்றி விவாதிக்க தொடங்கின. ஃபேஸ்புக்கில் லைக்குகள் குவிந்தன. அப்படிப்பட்ட கீழ்த்தரமான மனிதர்களை, மக்கள் எவ்வளவு தூரம் வெறுத்தார்கள் என்பதை அது காட்டியது.

அதேநேரம், சில உயர் தட்டு மக்கள் அந்த வழக்கை முடக்க முயன்றார்கள். அவர்கள் எல்லாரும் பல தொடர்புகளை வைத்திருந்தவர்கள் தான். கொலைகாரனை சீக்கிரம் பிடிக்கச் சொல்லி அவர்கள் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார்கள்.

ஆனால், நமது கதாநாயகன், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதாக தெரியவில்லை. தனது பணியை சாவகாசமாக செய்து கொண்டிருந்தான். கொலைகாரன் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி, பல தொலைபேசி அழைப்புகள் அவனது அலுவலகத்திற்கு வந்த வண்ணம் இருந்தது. முருகனும், ஈஸ்வரனும் அந்த அழைப்புகளை ஏற்று பதில் அளித்து சோர்ந்து போனார்கள். அப்படிப்பட்ட ஒரு தொலைபேசி அழைப்பிற்கு ஈஸ்வரன் பதிலளித்துக் கொண்டிருந்த போது, அவர் கையில் இருந்த ரிஷிவரை வாங்கி பேசினான் ஓவியன்.

"யார் பேசுறீங்க?"

"நான் கனகராஜ் பேசுறேன்"

அவன் யார் என்று ஓவியனுக்கு நன்றாகவே தெரியும். சென்னையின் முக்கிய புள்ளிகளில் ஒருவன். தனது கைபேசியை எடுத்து, கனகராஜின் கைபேசி எண்ணை பிரின்ஸ்க்கு குறுஞ்செய்தியாய் அனுப்பிய படி,

"சொல்லுங்க சார்" என்றான்.

"கொலைகாரனை எப்ப பிடிக்க போறீங்க?"

"நாங்க ட்ரை பண்ணிக்கிட்டு தான் சார் இருக்கோம்"

"எவ்வளவு நாளா ட்ரை பண்ணிக்கிட்டு இருப்பிங்க?"

"நீங்க ஏன் சார் அவனைப் பத்தி இவ்வளவு கவலை படுறீங்க? இதுக்கு முன்னாடி எந்த கேஸ்காகவும் நீங்க எங்களுக்கு ஃபோன் பண்ணதா எனக்கு ஞாபகம் இல்லையே..."

"மக்கள் பாதுகாப்பா இருக்கணும்னு தான்..."

"ஏன் சார், உங்களுக்கும் அவன் கிட்ட இருந்து மிரட்டல் வந்துதா?"

"இல்லையே... இல்ல இல்ல..."

"அப்புறம் என்ன சார் கவலை? நாங்க அவனை பார்த்துக்குறோம்"

"என்னோட ஃப்ரெண்டுக்கு மிரட்டல் வந்தது"

"அப்படின்னா, அவரை நேர்ல வந்து ஒரு ரிட்டன் கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்லுங்க"

"அது எப்படி சார் முடியும்?"

"ஏன் சார் முடியாது?"

"அவரு ரொம்ப கௌரவமான மனுஷன் சார்"

"கௌரவமான மனுஷன் கள்ளத்தொடர்பு மட்டும் வச்சுக்க முடியும். ஆனா கம்ப்ளைன்ட் கொடுக்க முடியாதா?"

அங்கிருந்த ஃபேக்ஸ் மெஷினில் தனது பார்வையை பதித்தபடி பேசிக் கொண்டிருந்தான் ஓவியன். அவன் எதிர்பார்த்தபடியே, பிரின்சிடமிருந்து அவனுக்கு ஃபேக்ஸ் வந்தது. அதை எடுத்துக் கொடுக்கச் சொல்லி ஈஸ்வரனுக்கு கைகை செய்தான். அதைஅவனிடம் கொடுத்தார் ஈஸ்வரன். அது கனகராஜின் கைப்பேசி உரையாடல் விவரம்.

"தேவையில்லாம பேசாதீங்க சார்... நான் யாருன்னு தெரியுமா உங்களுக்கு? நான் நெனச்சா இந்த கேஸ்ல நீங்க இல்லாம செய்ய முடியும்" என்றான் கனகராஜ்.

"சந்தோஷமா இந்த கேசை விட்டு நான் வெளியில போவேன் சார். ஆனா அதுக்கு முன்னாடி, எல்லாரை பத்தின உண்மையையும் வெட்ட வெளிச்சமாகிட்டு தான் போவேன். உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன். இப்ப தான் உங்களுடைய சாட்டிங் ஹிஸ்டரி என் கைக்கு வந்தது. பபிதா யாரு சார்? ரொம்ப ரொமான்டிக்கா அவங்க கூட சாட் பண்ணியிருக்கீங்க...?"

"எப்படி... எப்படி... நீங்க அப்படி செய்யலாம்? நான் உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறேன்" என்று தடுமாறினான் கனகராஜ்.

"தாராளமா செய்யுங்க... உங்களோட சேட்டிங் விவரத்தை உலகத்துக்கு சொல்ல அது எனக்கு சௌகரியமாக இருக்கும்."

"இல்ல... ப்ளீஸ் அப்படி செய்யாதீங்க..."

"பயமா இருக்குல்ல? அப்படின்னா உங்க பொண்டாட்டிக்கு நல்ல புருஷனா நடந்துக்கோங்க"

அழைப்பை துண்டித்தான் ஓவியன். கனகராஜ் மறுபடியும் ஃபோன் செய்தான். ஆனால், அந்த அழைப்பை ஓவியன் ஏற்கவில்லை.

முருகனுக்கு ஆச்சரியமாகவும் அதே நேரம் குழப்பமாகவும் இருந்தது. ஏன் ஓவியன் இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறான்? எதற்காக கொலைகாரனை பிரபலப்படுத்திவிட்டான்? இதன் மூலம் அவன் செய்ய நினைப்பது என்ன? மக்களிடம் அந்த கொலைகாரன் செல்வாக்கு பெறுவது நல்லதா? அதை அவன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயல்வானே... முருகன் நினைத்தது தவறல்ல.

கள்ளத் தொடர்பாளர்கள் பலரும், *பிரைவேட் நம்பரில்* இருந்து மிரட்டல்கள் பெற தொடங்கினார்கள்.

*நீ கண்காணிக்கப்பட்டு கொண்டிருக்கிறாய்- கொலைகாரன்*

இந்த குறுஞ்செய்தி பெற்றவர்கள் நடுங்க துவங்கினார்கள். ஆனால், ஒருவரும் அது சம்பந்தமாய் வழக்கு பதிவு செய்யவில்லை. எப்படி பதிவு செய்வார்கள்? சமுதாயத்தைப் பொறுத்தவரை, அவர்கள் *உயர்ந்த* மனிதர்களாயிற்றே...! பெரும்பாலானவர்கள் தங்களது கீழ்த்தரமான நடத்தையை மாற்றிக் கொள்ள துவங்கினார்கள்... திருந்தி விட்டதால் அல்ல... பயத்தினால்...!

தொடரும்...


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top