13 என்ன நடந்தது?

13 என்ன நடந்தது?

தூரிகையுடன் மருத்துவமனையை வந்தடைந்தான் ஓவியன். அவனது அக்கா அனுமதிக்கப்பட்டிருந்த அவசர சிகிச்சை பிரிவை நோக்கி சென்றான். அவனுக்காக மருத்துவர் அங்கு காத்திருந்தார்.

"என்னாச்சு டாக்டர்?"

"பேபியோட பொசிஷன்ல காம்ப்ளிகேஷன் இருக்கு. குழந்தையோட கழுத்தை நச்சுக்கொடி சுத்தியிருக்கு"

"இப்போ என்ன செய்யலாம் டாக்டர்?"

"இம்மிடியேட்டா ஆப்பரேஷன் பண்ணியாகணும். அப்போ தான் குழந்தையை காப்பாத்த முடியும்"

"அப்படின்னா அக்கா?"

"இப்போதைக்கு அதைப்பத்தி எதுவும் சொல்ல முடியாது. அவங்க கோமாவுல இருக்கிறதால, எப்படி இருந்தாலும் ஆபரேஷன் தான் பண்ண வேண்டி இருக்கும்ன்னு நான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லி இருந்தேனே"

"சரிங்க டாக்டர். செஞ்சிடுங்க"

"நீங்க ஃபார்ம்ஸ்ல ஸைன் பண்ணிட்டா ஆரம்பிச்சுடலாம்"

தேவைப்பட்ட இடங்களில் கையெழுத்திட்டு விட்டு, அறுவை சிகிச்சை பிரிவின் வெளியில் அமர்ந்தான் ஓவியன். அவன் அருகில் வந்தமர்ந்த தூரிகை,

"கவலைப்படாதீங்க. அவங்களுக்கு ஒன்னும் ஆகாது" என்றாள்

"அவங்களுக்கு சரியாக வாய்ப்பே இல்ல"

"ஏன் இப்படி விரக்தியா பேசுறீங்க?"

"யாரும் கற்பனை பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு அவங்க உடைஞ்சு போயிருக்காங்க. அவங்களுக்கு குணமானா கூட, அதிலிருந்து அவங்களால வெளியில வர முடியாது"

"அவங்களுக்கு என்ன நடந்துச்சு?"

"துரோகம். அவங்களோடது லவ் மேரேஜ். உலகத்திலேயே தான் ரொம்ப பெரிய அதிர்ஷ்டசாலின்னு நினைச்சுக்கிட்டு இருந்தாங்க. பைத்தியக்காரத்தனமா அவங்க புருஷனை காதலிச்சாங்க. ஒவ்வொரு நொடியையும் அனுபவிச்சு வாழ்ந்தாங்க. அவங்க புருஷனோட பைக் சத்தம் கேட்டா, சின்ன குழந்தை மாதிரி துள்ளி குதிச்சு எழுந்து வெளிய ஓடுவாங்க. நல்ல புருஷனை தனக்கு கொடுத்ததுக்காக, கடவுளுக்கு நன்றி சொல்ல மட்டுமே கோவிலுக்கு போனவங்க அவங்க. தனக்காக அவங்க எப்பவும் சாமி கும்பிட்டதே இல்ல. அவங்க புருஷனுக்காக சாமி கும்பிட ஒரு நாள் கூட தவறினதே இல்ல. ஆனா, அவங்க புருஷன் அவங்களை மாதிரி இல்ல. அந்த ஆளோட வாழ்க்கையில, வேறொரு பொம்பளை இருந்தா. அது அவங்களுக்கு தெரிஞ்சப்போ, அவங்க நொறுங்கி போயிட்டாங்க. பொய் சொல்லி அவங்களை சமாதானப்படுத்தினான். அந்த பொம்பளையை விட்டுட்டேன்னு சொல்லி நம்ப வச்சான். ஆனா, அப்படி செய்யல. எங்க அக்கா முழுசா அவங்க நம்பிக்கையை இழந்தப்போ, தற்கொலை பண்ணிக்கனும்னு முடிவுக்கு வந்தாங்க. தெரிஞ்சே காரை கொண்டு போய் மரத்துல மோதினாங்க. ஆனா விதியோட கணக்கு வேற மாதிரி இருந்தது. அவங்க கோமாவுக்கு போயிட்டாங்க. அந்த ஆக்சிடென்ட் நடக்கும் போது, அவங்க அஞ்சு மாச குழந்தையோட பிரக்னண்டா இருந்தாங்க"

"நீங்க உங்க மாமா கிட்ட எதுவும் கேட்கலையா?"

"எங்க அக்கா என்கிட்ட எதுவும் சொல்லல. சொன்னா, நான் அவனை கொன்னுடுவேன்னு அவங்களுக்கு தெரியும். ஆக்சிடென்ட்க்கு முன்னாடி எனக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தாங்க. அப்போ தான் எனக்கு விஷயம் தெரிஞ்சது"

"அவங்க ஹஸ்பண்ட் எங்க?"

"ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டான்"

"அவனுக்கு அது தேவை தான். இப்படிப்பட்ட ஆளுங்க உயிரோடவே இருக்க கூடாது"

"அவன் தொடர்பு வச்சிருந்தது யார் கூட தெரியுமா?"

"யார் கூட?"

"முதல்ல கொலை செய்யப்பட்ட சுபாஷினி"

அதைக் கேட்டு அதிர்ச்சியானாள் தூரிகை.

"நிஜமாவா? அப்படின்னா அந்த கொலைகாரன் தான் அவளை கொன்னிருக்கணும்"

"இருக்கலாம்"

"அவன் ஏன் எங்க அண்ணனை மட்டும் கொல்லாம விட்டான்?"

"உங்க அண்ணனும், அண்ணியும் எப்படி இறந்தாங்க?"

"எங்க அண்ணியோட கதையும் உங்க அக்காவோட கதை மாதிரி தான். எங்க அண்ணன் மேல அண்ணிக்கு ரொம்ப பொசசிவ்னஸ் ஜாஸ்தி. உங்க அக்கா தன்னைத்தானே அழிச்சுக்க நினைச்சாங்க. ஆனா, எங்க அண்ணி, தன்னோட புருஷனும் தன்னோட சேர்ந்து சாகணும்னு நினைச்சாங்க. தன் புருஷனை வேற யாருக்காகவும் விட்டுக் கொடுக்க அவங்க தயாரா இல்ல. சாப்பாட்டுல விஷத்தை கலந்து, அவனுக்கு கொடுத்துட்டு, அவங்களும் சாப்பிட்டுட்டாங்க. எனக்கு எங்க அன்னியை ரொம்ப பிடிக்கும். ஆனா அவங்க, என்னைப் பத்தியும் மேகாவை பத்தியும் நினைச்சு பார்க்கவே இல்ல. எங்களை விட்டுட்டு போயிட்டாங்க. அந்த கல்பனாவால தான், நானும் மேகாவும் அனாதையாயிட்டோம்"

"அதுக்காக தான் அன்னைக்கு ராத்திரி அவளை கொல்ல அவ வீட்டுக்கு போனீங்களா?"

"இல்ல... நான் அவளை கொல்ல போகல. அட்லீஸ்ட், அவளை காயமாவது படுத்தி, எங்க அண்ணியோட ஆத்மாவை சாந்தியடைய வைக்க தான் போனேன்"

"அதுக்கு ராத்திரியில ஏன் போனீங்க?"

"அவளோட புருஷன் சூரத்துக்கு போயிருக்கிறதா கேள்விப்பட்டேன். அதனால போனேன்"

"அவளை காயப்படுத்தினீங்களா?"

"இல்ல, அதுக்கு முன்னாடி அந்தக் கில்லர் அங்க வந்துட்டான்"

"நீங்க அவனை பார்த்தீங்களா?"

"பார்த்தேன். முகம் தெரியாத மாதிரி முகமூடி, கைல கிளவுஸ், கால்ல சாக்ஸ், போட்டிருந்தான்"

"அங்க என்ன நடந்தது?"

"நான் அங்க போனப்போ, அவங்க வீட்டு கதவு திறந்தே இருந்தது. நான் மறச்சு வச்சிருந்த கத்தியை எடுத்துக்கிட்டு அவளை தேடினேன். அவ ஹால்ல இல்ல. அப்போ யாரோ வர்ற காலடி சத்தம் கேட்டு, பக்கத்துல இருந்த ரூம்ல ஒளிஞ்சிகிட்டேன். அவ புருஷன் தான் திரும்பி வந்துட்டான்னு நினைச்சு, நான் நடுங்கி போயிட்டேன். அப்போ கல்பனா, *யார் நீ?*னு கேட்டது என் காதுல விழுந்தது. மெதுவா வெளியில எட்டிப் பார்த்தேன். அப்போ, அந்த முகமூடி போட்ட மனுஷன், அவ முகத்துல எதையோ ஸ்பிரே பண்ணான். கல்பனா மயங்கி கீழே விழுந்தா. அவ மேல பெட்ரோலை தெளிச்சி, அவன் அவளை கொளுத்திடான். அத பாத்த நான், பயந்து என் கையில் இருந்து கத்தியை கீழே போட்டுட்டேன். அந்த சத்தம் கேட்டு, திரும்பின அவன், என்னை பார்த்துட்டான். நான் அங்கிருந்து ஓடி வந்துட்டேன். அந்தப் பக்கமா போன பஸ்ல ஏறி, அந்த இடத்தை விட்டு வந்தேன். ஆனா அது நம்ம ரூட் பஸ் இல்ல. அதைப் பத்தி எல்லாம் யோசிக்கிற நிலைமையில நான் இல்ல. அதனால தான் அன்னைக்கு அவ்வளவு லேட்டா வீட்டுக்கு வந்தேன். ஆனா, அந்த கில்லர் எனக்கு கால் பண்ணுவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. அவனுக்கு எப்படி என்னோட ஃபோன் நம்பர் தெரிஞ்சதுன்னு எனக்கு தெரியல. என்னோட பேரை கூட சரியா சொன்னான்"

"உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?"

"இல்ல... உங்களுக்கும் எந்த க்ளூவும் கிடைக்கலையா?"

"அவன் ரொம்ப ஜாக்கிரதையா எல்லாத்தையும் பிளான் பண்ணி செஞ்சுகிட்டு இருக்கான். அதனால தான், எங்களுக்கு எந்த க்ளூவும் கிடைக்கல"

"அவனும், நம்மள மாதிரியே பாதிக்கப்பட்டவனா இருப்பான்னு நினைக்கிறேன்"

"எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு"

அப்பொழுது, அறுவை சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்தார் மருத்துவர். ஓவியனும் தூரிகையும் எழுந்து நின்றார்கள்.

"குழந்தை நல்லாயிருக்கு. உங்க அக்காவோட பல்ஸ் தான் கொஞ்சம் குறைவா இருக்கு. ஆனா நாங்க அதை நார்மலுக்கு கொண்டு வந்துடுவோம்"

"தேங்க்யூ டாக்டர்"

"நாங்க குழந்தையை பாக்கலாமா?" என்றாள் தூரிகை.

"பார்க்கலாம். ஆனா கொஞ்ச நாளைக்கு அவனை இன்குபேட்டர்ல வைக்க வேண்டிய அவசியம் இருக்கு"

புதிதாய் பிறந்த அழகிய பொட்டலத்துடன் அங்கு வந்த ஒரு செவிலி, அதை ஓவியனின் கையில் கொடுத்தாள். குழந்தையை பார்த்த ஓவியன் உணர்ச்சிவசப்பட்டான். அவனைப் பார்த்தபடி இமைக்க மறந்து நின்றான். அவன் கையில் இருந்த குழந்தையை பெற்றுக் கொண்டாள் தூரிகை.

"இவனைப் பார்த்தா மேகவுக்கு சந்தோஷம் தாங்காது" என்றாள் புன்னகையுடன்.

"அவளை இங்க ஒரு நாள் கூட்டிக்கிட்டு வரலாம்"

"ஆமாம், அவளுக்கு இவனைப் பத்தி தெரிஞ்சா, இங்க வரணும்னு அடம் பிடிப்பா"

அப்பொழுது, குழந்தை அழ ஆரம்பித்தது.

"அவனுக்கு பசிக்குதுன்னு நினைக்கிறேன்" என்றாள் தூரிகை.

அவர்களிடமிருந்து குழந்தைகளை பெற்றுக் கொண்டு, மீண்டும் உள்ளே சென்றாள் அந்த செவிலி. தலையை பிடித்தபடி நாற்காலியில் அமர்ந்தான் ஓவியன்.

"என்ன ஆச்சு சார்?"

"நான் இவனை எப்படி வளர்க்க போறேன்னு எனக்கு தெரியல"

"நீங்க சொல்றதும் சரிதான்.  குழந்தையை வளர்க்கிறது சாதாரண விஷயம் இல்ல. அதுவும் ஒரு ஆம்பளையாள அது  முடியாது"

"நீங்க என்கூட இருக்க மாட்டீங்களா?"

அதை எதிர்பார்க்காத தூரிகை, திகைத்து நின்றாள்.

"நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது" என்றாள்.

"ஏன்?"

"எனக்கு பாதுகாப்பு கொடுக்க தானே கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறீங்க?"

"ஆமாம்"

"ஒருவேளை, வரப்போற அடுத்த கேஸ்லையும் ஏதாவது ஒரு பொண்ணுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டு, நீங்க அவளுக்கும் பாதுகாப்பு கொடுக்க நினைச்சா, என் நிலைமை என்ன ஆகிறது?" என்றாள் முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு.

புன்னகையுடன் உதடு கடித்தான் ஓவியன்.

"இதுக்கு முன்னாடி, இப்படிப்பட்ட கேசை நான் டீல் பண்ணதில்லைன்னு நினைக்கிறீங்களா? பாதுகாப்பு தேவைப்பட்ட எத்தனையோ பேரை, நான் ஹோமுக்கு அனுப்பி வச்சிருக்கேன்"

"அப்புறம், என் விஷயத்துல மட்டும் ஏன் உங்களுக்கு வேற எந்த ஐடியாவும் தோணல?"

"உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்குறதுக்காக மட்டும் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி நான் கேட்கல. என்னோட இதயத்தை, திருட்டுப் போகாம உங்க கிட்ட இருந்து என்னால பாதுகாக்க முடியல. அதனால தான், என் இதயத்தை திருடின ஆளை அரெஸ்ட் பண்ணி, ஆயுள் தண்டனை கொடுத்து, என் மனசுல பூட்டி வச்சுக்கலாம்னு முடிவு பண்ணேன்" என்று, தன் காதலைக் கூட அசல் போலீஸ்காரனாய் வெளிப்படுத்தினான் ஓவியன்.

தன் புன்னகையை மறைக்க முடியவில்லை தூரிகையால்.

"எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால தான் உங்களை ப்ரொபோஸ் பண்ணேன். எனக்கு என் அக்கா குழந்தையை பார்த்துக்க ஒரு ஆள் வேணும். உங்களுக்கும் மேகாவை பார்த்துக்க ஒரு ஆள் வேணும் தானே?"

ஆம் என்று தலையசைத்தாள் தூரிகை.

"அதுக்கு தான் சொல்றேன். நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்"

"எனக்கு சமைக்கத் தெரியாது"

"கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கலாம். அது வரைக்கும் நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்"

"மறுபடியும் ஒரு தடவை யோசிச்சுக்கோங்க... அதுக்கப்புறம் என்னை குறை சொல்லக்கூடாது"

"மேகா, ஆஸ்திரேலியா மேப்பை பத்தி சொன்னப்போ, நான் ஏதாவது சொன்னேனா?" என்றான், தனக்கும் நையாண்டி செய்ய தெரியும் என்று காட்டி.

அதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தாள் தூரிகை. வெகு நாட்களுக்கு பிறகு தானும் மனம் விட்டு சிரித்தான் ஓவியன்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை வேறொருவன் கேட்டுக் கொண்டிருந்தது அவர்களுக்கு தெரியாது. அது வேறு யாருமல்ல, ஆய்வாளர் முருகன் தான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top