10 திருப்புமுனை
10 திருப்புமுனை
தூரிகையின் அண்ணன், கார்மேகத்தின் கைபேசியின் வரலாற்றை படித்துப் பார்த்த ஓவியன், அவனும் அந்த வழக்கில் தொடர்புடையவன் என்பதை புரிந்து கொண்டான். கார்மேகத்துடன் தொடர்பில் இருந்த அந்தப் பெண்ணையும், கொலைகாரன் கொன்று விட்டான். அதைப் பற்றி தூரிகைக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான், அவளை தன்னிடம் பேச விடாமல் அவன் தூரிகையை மிரட்டிக் கொண்டிருக்கிறான். இந்த வழக்கில், தூரிகை தனக்கு உதவி செய்தால், தான் சுலபமாய் கொலைகாரனை பிடித்து விடுவான் என்ற பயம் கொலைகாரனுக்கு இருக்கலாம். ஆனால் அது அவ்வளவு சுலபமாய் நடப்பதாய் தெரியவில்லை. தூரிகை பயந்திருக்கிறாள். முதலில் அந்த பயத்தை இவன் உடைத்தாக வேண்டும். அதற்கு அவள் ஒரு சந்தர்ப்பம் அளிப்பாளா என்று தெரியவில்லை. ஒரு நண்பனாய் அவளை அணுகினால் அது நடக்காது. அவன் தனது அதிகாரத்தை பயன்படுத்தியாக வேண்டும். வேறு வழியில்லை...
"யாரு மச்சான் இந்த பொண்ணு? இவளும் மத்தவங்களைப் போலவே..." என்ற பிரின்சின் பேச்சை அவசரமாய் வெட்டி,
"இல்ல... அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்ல..." என்றான்.
"ஓ... அவ அழகா இருப்பாளா?" என்ற
அவனைப் பார்த்து முறைத்தான் ஓவியன்
"ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்கு தான் பா கேட்டேன்...." என்று வழிந்தான் பிரின்ஸ்.
..........
யூடியூபை பார்த்து தான் சமைத்துக் கொண்டு இருந்த கிரேவியை கிளறிக் கொண்டிருந்தாள் தூரிகை. யாரோ அழைப்பு மணியை அழுத்தும் சத்தம் கேட்கவே, அடுப்பை சிம்மில் போட்டுவிட்டு வெளியே வந்து, கதவை திறந்தாள். கைகளை கட்டிக் கொண்டு நீண்டிருந்த ஓவியனை பார்த்து, அவளுக்கு அலுப்புடன் கலந்த பயம் ஏற்பட்டது.
"நான் உங்ககிட்ட பேசணும்" என்றான்.
"உங்க கிட்ட பேச எனக்கு விருப்பம் இல்லன்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன். தயவுசெய்து இங்கிருந்து போங்க"
கதவை சாத்தப் போனவள்,
"மிஸ் தூரிகை தமிழ்ச்செல்வன்... உங்க கிட்ட பேசிகிட்டு இருக்கிறது ஏசிபி ஓவியன். அதை மறந்துடாதீங்க... என்கொயரிக்கு வந்த போலீஸ் ஆஃபீசருக்கு பதில் சொல்ல வேண்டியது உங்க கடமை"
அவனது கண்டிப்பான குரலை கேட்ட தூரிகை விக்கித்து நின்றாள். அது நிச்சயம் எச்சரிக்கை தான். கதவின் கைப்பிடியை பிடித்துக் கொண்டு, சிலை போல் நின்றாள். அவள் முகத்தில் தெரிந்த பயம், அவளது மனதின் நிலையை, தெள்ளத்தெளிவாய் படம் போட்டு காட்டியது. உள்ளே வந்த ஓவியன், கதவை சாத்தி தாளிட்டான்.
"என்னால உண்மையை கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சீங்களா?" என்றான் கதவின் மேல் சாய்ந்து கொண்டு.
அவன் எந்த உண்மையை பற்றி பேசுகிறான் என்று புரியாவிட்டாலும் தூரிகையின் மனதை திகில் ஆட்கொண்டது.
"உண்ண்ண்...மையா....?" தினறினாள் அவள்.
"நான் ஒரு போலீஸ் ஆபீஸர் அப்படிங்கறதை நீங்க மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்..."
"தயவுசெய்து விஷயத்துக்கு வாங்க சார்"
"ஏன்? நான் எதைப் பத்தி பேசுறேன்னு உங்களுக்கு தெரியலையா?" என்றான் ஆழ்ந்த பார்வையுடன்.
"தெரியல" என்றாள் தலை குனிந்த படி.
"அன்னைக்கு ராத்திரி எங்க போயிட்டு வந்தீங்க? அன்னைக்கு நீங்க சினிமாவுக்கு போகலைன்னு நீங்களே சொன்னீங்க. அப்படின்னா எங்க போயிருந்தீங்க?"
"என் ஃபிரண்ட்டை பாக்க போயிருந்தேன்"
"யார் உங்க ஃபிரண்டு? அவங்க போன் நம்பரையும், அட்ரஸையும் குடுங்க"
"அவ இப்போ இங்க இல்ல. முந்தா நேத்து சிங்கப்பூர் போயிட்டா"
"ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் அவங்க ஃபேமிலி கிட்ட என்கொயரி பண்ணிக்கிறேன்"
"அவளுக்கு ஃபேமிலி இல்ல..."
"அப்படின்னா ஏதாவது ஒரு ஹாஸ்டல்ல தானே அவங்க தங்கியிருந்திருப்பாங்க? அங்க போய் விசாரிக்கிறேன்... ஒருவேளை, தேவைப்பட்டா, சிங்கப்பூர் போலீஸ் உதவியோட அவங்களையே எங்களால இங்க கூட்டிக்கிட்டு வர முடியும்"
"ஆனா ஏன் சார்?" என்றாள் பரிதவிப்புடன்.
"நீங்க பொய் சொல்லலன்னு கன்ஃபார்ம் பண்ணிக்கத்தான்"
"நான் பொய் சொல்லல..."
"அப்படின்னா உங்களுக்கு கல்பனாவை தெரியாதா?"
தூரிகையின் முகம் வெளிறி போனது. கல்பனா வேறு யாருமல்ல, அவளது அண்ணன் கார்மேகத்துடன் உறவில் இருந்தவள்.
"அவளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?"
"எனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல"
"உங்க அண்ணனுக்கு இருந்துதா?"
வார்த்தைகள் அவள் தொண்டையில் சிக்கிக்கொண்டது.
"இங்க பாருங்க தூரிகை, எப்படி இருந்தாலும் உண்மை வெளியில வந்து தான் தீரும். நீங்க என்கிட்ட உண்மையை மறைச்சா, என்னால உங்களுக்கு உதவ முடியாது. நான் உங்களுக்கு உதவனும்னு தான் நினைக்கிறேன். அதனால உண்மையை சொல்லுங்க"
"உங்களுக்கு இப்போ என்ன தெரியணும்?"
"நேத்து ராத்திரி உங்களுக்கு ஃபோன் பண்ணது யாரு?"
திணறிப் போனாள் தூரிகை. ஏற்கனவே அவளை கொலைகாரன் மிரட்டிக் கொண்டிருக்கிறான். போதாத குறைக்கு, இப்பொழுது இவன் வேறு... இப்பொழுது இவள் என்ன செய்யப் போகிறாள்? கொலைகாரனை பற்றி ஓவியனிடம் கூறினால், கொலைகாரன் அவளை கொன்று விடுவான். உண்மையை கூறாவிட்டால், ஓவியன் அவளை கைது செய்ய தயங்க மாட்டான். என்ன இக்கட்டான சூழ்நிலை இது?
"கொலைகாரனை பத்தி உங்களுக்கு ஏதோ ஒரு விஷயம் தெரியும்னு எனக்கு தெரியும். இராத்திரி அவன் உங்களுக்கு ஃபோன் பண்ணியிருக்கான். நேத்து ராத்திரி மட்டும் இல்ல, கல்பனாவோட கொலைக்கு பிறகு, ரெண்டு தடவை உங்களுக்கு ஃபோன் பண்ணி இருக்கான். உங்க ஃபோனோட கம்ப்ளீட் ஹிஸ்டரி என்கிட்ட இருக்கு"
"அதை எடுக்குற ரைட்சை உங்களுக்கு யார் கொடுத்தா?" சீறினாள் தூரிகை.
"சைபர் கிரைம் ஆஃபீஸ்... நாங்க சந்தேகப்படுற யாரையும் டிரேஸ் பண்ற ரைட்ஸ் எங்களுக்கு இருக்கு" என்றான் அமைதியாக.
அது மறைமுக எச்சரிக்கை தான்.
"அன்னைக்கு ராத்திரி என்ன நடந்ததுன்னு சொல்லுங்க. உங்களுக்கு கொலைகாரனை பத்தி என்ன தெரியும்? உங்களை மிரட்டுறது யாரு?"
"சார், ப்ளீஸ்... தயவு செய்து என்னை எதுவும் கேட்காதீங்க. மேகாவுக்கு என்னை விட்டா யாருமில்லை. அவளை அனாதையாக்கிடாதீங்க"
"அதுக்கு என்ன அர்த்தம்?"
"என்னால அவனைப் பத்தி எதுவும் சொல்ல முடியாது. நீங்க நினைக்கிறது சரி. அவன் என்னை மிரட்டறது உண்மைதான். ஆனா, என்னால எதுவும் செய்ய முடியாது சார்"
"என்னை பத்தி நீங்க என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? நான் யாருன்னு தெரியும்ல?"
"ஆமாம், எனக்கு தெரியும். நீங்க அசிஸ்டன்ட் கமிஷனர். இந்த கேசை நீங்க தான் டீல் பண்றீங்க. நான் உண்மையை சொன்னா, இந்த கேஸ் முடியுற வரைக்கும் நீங்க எனக்கு பாதுகாப்பு கொடுப்பீங்க. அதுக்கப்புறம் என்ன நடக்கும்? இந்த கொலையெல்லாம் செய்றது ஒரே ஒருத்தன் தானா, இல்ல அவங்க ஒரு டீமான்னு எனக்கு நிச்சயமா தெரியல. ஒருவேளை அவங்க என்னை கொன்னுட்டா? நான் சாகுறதை பத்தி கவலைப்படல. மேகாவை பத்தி தான் கவலைப்படுறேன்."
"நீங்க பயப்பட வேண்டிய அவசியமில்ல. நான் அவனை உங்ககிட்ட நெருங்க விட மாட்டேன்"
"எப்படி? நேத்து என்ன நடந்ததுன்னு உங்களுக்கு தெரியுமா? நானும் மேகாவும், எங்களை மோத வந்த லாரியிலிருந்து மயிரிழியில உயிர் தப்பினோம். அது ஒரு கோயின்ஸிடன்ஸ்னு நெனச்சேன். ஆனா இல்ல. அதை செஞ்சது அவன் தான்"
அதை கேட்ட ஓவியன் அதிர்ச்சி அடைந்தான்.
"சார், தயவு செய்து புரிஞ்சுக்கோங்க... இந்த உலகத்துல தனியா வாழறது ரொம்ப கஷ்டம் சார். மேகாவை கவனிச்சுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு. என்னை விட்டா அவளுக்கு வேற யாருமே இல்ல... எங்களை விட்டுடுங்க சார்..." கைகூப்பி கெஞ்சினாள் தூரிகை.
ஒருவேளை தன் எதிரில் இருப்பது தூரிகையாக இல்லாமல் இருந்திருந்தால், அவளை காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்று, தனது விசாரணையை துவங்கி இருப்பான் ஓவியன். ஆனால் இப்பொழுது அதை செய்யும் எண்ணம் கூட அவனுக்கு தோன்றவில்லை. அது ஏன் என்று அவனுக்கும் புரியவில்லை. அவள் கூறுவதை எல்லாம் ஏன் அமைதியாய் அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்றும் அவனுக்கு தெரியவில்லை.
கண்களை மூடி சற்று நேரம் யோசித்தவன், திடமாய் கண் திறந்தான்.
"உங்களுக்கு நான் எப்பவும் பாதுகாப்பு கொடுப்பேன்னு சொன்னா...?"
"சார், தயவு செஞ்சி என் மனசை மாத்த முயற்சி பண்ணாதீங்க. உங்களுக்கே தெரியும், நிச்சயம் அப்படி நடக்க வாய்ப்பே இல்லைன்னு..."
"இருக்கு"
" எப்படி சார் நடக்கும்?" அலுத்துக் கொண்டாள் தூரிகை.
"நடக்கும்... நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா... என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க"
தூரிகைக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. தான் பேசும் திறனை இழந்து விட்டதாய் உணர்ந்தாள் அவள்.
"என்....என்ன?" திக்கி திணறினாள்.
"நீங்களும் மேகாவும் என்னோட பாதுகாப்பில் இருப்பீங்க... வாழ் நாள் முழுக்க..."
"சார், ப்ளீஸ் தயவு செய்து நிறுத்துறீங்களா?"
"என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?"
அவனுக்கு முகத்தை காட்டாமல் எதிர் புறமாய் திரும்பிக் கொண்டாள் தூரிகை.
"உங்ககிட்ட இருந்து உண்மையை வர வைக்க தான் நான் இப்படி எல்லாம் செய்றேன்னு நீங்க நினைக்கலாம். ஆனா உங்களுக்கே தெரியும், அதை என்னால சுலபமா செய்ய முடியும்... வேற விதத்துல..."
அதிர்ச்சியுடன் அவனை நோக்கி திரும்பினாள் தூரிகை.
"என்னால முடியாதுன்னு நினைக்கிறீங்களா? நம்ம வாழ்க்கையோட மிகப்பெரிய திருப்புமுனை இது. புத்திசாலித்தனமா முடிவெடுங்க... மேகாவை மனசுல நிறுத்தி. ஏன்னா, நிச்சயம் என்னை விட ஒரு நல்ல *மாமா* அவளுக்கு கிடைக்க மாட்டான்"
அவன் *உறவு முறையை* குறிப்பிட்டு பேசிய போது, அவள் உடலில் பல மின்னல்கள் பாய்வது போல் இருந்தது அவளுக்கு. மேகாவின் அத்தையின் கணவன் தானே மேகாவுக்கு மாமாவாக முடியும்?
"நான் உங்களை ஃபோர்ஸ் பண்ண வேண்டாம்னு நினைக்கிறேன்... எதுக்காகவும்... நீங்க புரிஞ்சிக்குவீங்கன்னு நினைக்கிறேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
திகைப்பும் திகிலும் கலந்த உணர்வுடன் சிலை போல் நின்றாள் தூரிகை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top