1 நடந்தது என்ன?

1 நடந்தது என்ன?

அந்த மழைக்கால இரவின் இருள், தமிழகத்தின் தலைநகரை மொத்தமாய் விழுங்கி கொண்டிருந்தது. அதற்கு அடுத்த நாள் அமாவாசை என்பதால், வெள்ளை சட்டை அணிந்து வந்தவர்களை கூட, அருகில் வந்தால் தான் பார்க்க முடிந்தது.  போதாத குறைக்கு,  மழையும் விடாமல் பெய்து கொண்டிருந்தது. ஆனால் இந்த தடைகள் எதுவும், தமிழக போலீசாரின் செயல் வேகத்தை இமையளவும் குறைக்கவில்லை. மழை கோட்டை அணிந்து கொண்டு, கொட்டும் மழையில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

தலை நகரத்தின் இதயம் என்று கருதப்பட்ட அந்த முக்கியமான பகுதியில் அமைந்திருந்த ஒரு கட்டிடத்தை காவல்துறையின் வண்டிகள் சூழ்ந்து இருந்தன. அங்கு நடந்த ஒரு கொலையை பற்றி அவர்கள் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அது கொலையா, தற்கொலையா என்று அவர்களுக்கு சரியாக தெரியாவிட்டாலும், அதை கொலை என்று தான் அவர்கள் எண்ணினார்கள்.

ஒரு பெண் உயிரோடு எரித்து சாம்பலாக்க பட்டிருந்தாள்... அக்கம் பக்கத்து வீட்டாருக்கு அதைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை... ஏனென்றால், எரியும் பொழுது அந்தப் பெண் குரல் எழுப்பவே இல்லை...

அதனால் அது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தான் ஆய்வாளர் முருகன். ஏனென்றால், தன் உடல் மொத்தமாய் எரிந்து சாம்பலாக்கும் வரை, கத்தி குரல் எழுப்பாமல் இருக்கும் அளவிற்கு மனோதிடம் வாய்ந்த ஒரு பெண் இந்த உலகில் இருக்கவே முடியாது என்பது அவனது கருத்து. அவன் எண்ணியதும் சரி தானே? எப்படி ஒரு பெண் சிறு முனங்கல் கூட இல்லாமல் மமுழுதாய் எரிந்து சாம்பலாக முடியும்? எதார்த்தமாய் யோசித்தான் முருகன்.

மேலும், இது அவர்கள் பார்க்கும் முதல் மரணம் அல்ல. கடந்த மூன்று மாதத்தில், இதே போன்ற மரணம், ஏற்கனவே இரண்டு முறை நடந்திருந்தது தான் அவன் அப்படி எண்ணியதற்கு காரணம். இது மூன்றாவது மரணம். ஆனால், அது கொலையா, தற்கொலையா என்பது பற்றி ஒரே ஒரு துப்பு கூட அவர்களுக்கு இது வரை கிடைக்கவில்லை. இந்த மரணங்கள் சம்பவித்த அனைத்து பகுதிகளும் மிகவும் பரபரப்பு வாய்ந்தவை. சென்னை நகரின் பிரசித்தி பெற்ற பகுதிகள் அவை. மூன்று மரணங்களும் ஒரே விதமாய் நிகழ்ந்தவை. இறந்தவரின் மரண ஓலத்தை யாருமே கேட்கவில்லை. அந்த குறிப்பிட்ட பகுதியில், சந்தேகிக்கும் படி யாருமே நுழையவில்லை. அந்நிய ஆட்களையும் அந்த பகுதி மக்கள் பார்க்கவில்லை.

இந்த மரணங்களுக்கு இடையில் இருந்த ஒரே ஒரு ஒற்றுமை, அவர்கள் மூவரும், திருமணமான, வேலைக்குச் செல்லும் பெண்கள் என்பது மட்டும் தான்.

ஆய்வாளர் முருகன், தனது பேனாவின் நுனியால் தனது நெற்றியை தட்டியபடி, கண்களை மூடி யோசித்துக் கொண்டிருந்தான்.

*இந்த மூன்று மரணமும் நிச்சயம் தற்கொலையாய் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை, அவை கொலைகள் என்றால், இந்த கொலைகளை செய்வது யார்? எதற்காக செய்கிறார்கள்? முக்கியமாய், ஒரு சிறிய ஆதாரத்தைக் கூட விடாமல் எப்படி செய்கிறார்கள்? இதுவரை ஒரு கைரேகை கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த கொலைகளை எல்லாம் செய்பவன் கைத்தேர்ந்தவனாய் இருக்க வேண்டும். ஆனால், இந்த கொலைகளின் பின்னணி என்ன?

தன் கண் முன்னால் அசுரத்தனமாய் வளர்ந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய சவாலை உணர்ந்து தான் இருந்தான் முருகன். அவனை கவலைப்பட வைத்த விஷயம் என்னவென்றால், ஒருவேளை இது கொலைகள் என்றால், அது இத்தோடு முடிந்து விடுமா அல்லது தொடரப்போகிறதா என்பது தான். ஒருவேளை தொடர்ந்தால், அது அவனுக்கு மிகப்பெரிய சவாலாய் இருக்கப் போகிறது.

ஜி எம் மருத்துவமனை

அவசர சிகிச்சை பிரிவு

முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன் அவசர சிகிச்சை பிரிவு அறையின் கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் எண்ணில்லா உணர்வுகளை நம்மால் காண முடிகிறது. சொல்ல முடியாத எதையோ அவனது கண்கள் கூறிக் கொண்டிருந்தன. அங்கு போடப்பட்ட இரும்பு நாற்காலியில் அமர்ந்து கொண்ட அவன், மருத்துவரின் வரவுக்காக அவன் காத்திருந்தான்.

சிறிது நேரத்திற்கு பிறகு அங்கு வந்த மருத்துவரை பார்த்து எழுந்து நின்றான்.

"அக்கா எப்படி இருக்காங்க டாக்டர்?" என்றான்.

"அப்படியே தான் இருக்காங்க. அவங்க கிட்ட எந்த முன்னேற்றமும் இல்ல. நான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லி இருந்தேன், அவங்க *கோமா* ஸ்டேஜ்ல இருக்காங்க. அதுல இருந்து அவங்க எப்ப மீளுவாங்கன்னு நம்மால நிச்சயமா சொல்ல முடியாது"

சோகமாய் தலையசைத்தான் அவன்.

"நம்பிக்கையை இழக்காதிங்க ஓவியன். நம்மால முடிஞ்ச எல்லா முயற்சியையும் செஞ்சி பாக்கலாம்"

"தேங்க்யூ டாக்டர்" என்றான் ஓவியன்.

அவனது அக்கா ஆராதனாவை  பரிசோதனை செய்ய, அவசர சிகிச்சை பிரிவின் உள்ளே சென்றார் மருத்துவர். ஓவியனின் அக்கா அங்கு அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். கடந்த மூன்று மாதங்களாக, தினமும் அவரை வந்து பார்த்துவிட்டு செல்வது அவனது வழக்கமாக இருந்தது. மருத்துவரிடமிருந்து அவனுக்கு ஒரே விதமான பதில் தான் கிடைத்துக் கொண்டிருந்தது என்றாலும், அவன் மனம் தளரவில்லை. இன்றும், வழக்கம் போல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான் ஓவியன்.

ஆணையர் அலுவலகம் ( கமிஷனர் ஆஃபீஸ் )

ஆணையர் முன்பு நின்று கொண்டிருந்தான் முருகன்.

"இன்ஸ்பெக்டர் முருகன், இந்த கேசை, நாங்க ஒரு ஸ்பெஷல் டீம் கிட்ட கொடுக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்" என்றார் ஆணையர்.

அதைக் கேட்ட முருகன் நிச்சயம் வருத்தம் தான் அடைந்தான். கடந்த மூன்று மாதத்தில் கொலையாளியை பற்றி அவனால் ஒரு துப்பு கூட துலக்க முடியவில்லை. அது கொலை தான் என்பதை முடிவு செய்யவே அவனுக்கு மூன்று மாதம் ஆகிவிட்டது.

"அந்த டீம்ல நீங்களும் இருக்கணும்னு நான் விரும்புறேன். ஏன்னா, ஆரம்பத்தில் இருந்தே இந்த கேசை பத்தி, உங்களுக்கு தான் நல்லா தெரியும்"

சரி என்று தலைசைத்தான் முருகன்.

"கொலையாளியை கண்டுபிடிக்க உங்களால முடிஞ்ச உதவியை நீங்க செய்வீங்கன்னு நம்புறேன்"

"நிச்சயம் செய்வேன் சார்... இந்த டீமை லீட் பண்ண போறது யாரு சார்?" என்றான் கொஞ்சமும் ஈகோ இல்லாத இன்ஸ்பெக்டர் முருகன்.

அது யார் என்று தெரிந்து கொண்ட முருகன், மகிழ்ச்சியில் திளைத்தான்.

"அசிஸ்டன்ட் கமிஷனர் ஓவியன்... இந்த ஸ்பெஷல் கேசுக்கு அவரைத் தான் நாங்க அப்பாயிண்ட் பண்ணி இருக்கோம். நீங்க ஒரு நல்ல டீமா இருப்பீங்கன்னு நினைக்கிறேன்..." என்றார் ஆணையர்.

"நிச்சயமா சார்... ஆனா எனக்கு தெரிஞ்ச வரைக்கும், ஓவியன் சார் கடந்த மூணு மாசமா *ஆஃப் டியூட்டில* இருக்கிறதா கேள்விப்பட்டேனே..."

"ஆமாம்... மறுபடியும் டியூட்டில ஜாயின் பண்ண அவருக்கு விருப்பமே இல்ல. நான் தான் அவரை கட்டாயப்படுத்தி இந்த கேசை எடுத்துக்க சொன்னேன். ஆரம்பத்துல அவருக்கும் பெருசா இன்ட்ரஸ்ட் இல்ல.  ஆனா இப்போ, ஹி இஸ் இன்..."

நிம்மதி பெருமூச்சு விட்டான் முருகன். ஒட்டுமொத்த காவல்துறையும் ஓவியனின் திறனை நன்கறியும். ஜெயிக்கும் வரை விட்டுக் கொடுக்காத பிடிவாத குணம் கொண்டவன். காற்று நுழைய முடியாத இடத்திலும் நுழையக்கூடியவன் என்றும்... நெருப்பு கூட வெளிவர முடியாத இடத்தில் இருந்தும் வெளிவந்து விட கூடியவன் என்றும் அவனை காவல்துறையினர் கொண்டாடினர். எதை எப்படி கையாள வேண்டும் என்று அலசி ஆராய்ந்து செய்வதில் வல்லவன். முடிவுகளை வேகமாய், அதே நேரம் விவேகத்துடன் எடுக்க கூடியவன்.

முருகனுக்கு மகிழ்ச்சி அளித்த வேறு ஒரு விஷயமும் இருந்தது அவர்கள் சிறப்பு காவல் குழு என்பதால் சீருடை அணிந்து பணிபுரிய வேண்டியதில்லை. மஃப்டியில் சாதாரணமாய் வளம் வரலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, திறமை மிக்க தனது மேலதிகாரியான ஓவியனை சந்திக்க ஆவலாய் இருந்தான் முருகன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top