Part19
பாகம்-19
ஆதிகேசவன் தன் நிம்மதியை மொத்தமாக தொலைத்திருந்தார். நடு இரவு வரை தூக்கமின்றி, பிரண்டு, பிரண்டு, அவர் படுத்திருந்ததே அதற்கான சான்று. எந்த நாள், அவருடைய வாழ்வில் வந்துவிடக்கூடாது என்று பயந்திருந்தாரோ, அது வந்தே விட்டது. இன்று இருப்பது போல, இரக்கமற்ற அபிமன்யுவை ஒரு நாள் எதிர்கொள்ள வேண்டிவரும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. ஈஸ்வரின் முட்டாள்தனத்தால் இன்று அவருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அவர் சிறிது முன்னெச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும். "அபிமன்யு"விற்கும், "அபி"க்கும் அவருக்கு வித்யாசம் நன்றாகவே தெரியும். "அபி" உணர்வுகளால் சுலபமாக கட்டுப்படுத்த கூடியவன். ஆனால் ஃபேஷன் உலகின் முடி சூடா மன்னனான "அபிமன்யு" அப்படியல்ல. அவன் எதற்கும் துணிந்தவன். ஒருவேளை, யாழினியை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஓட்டத்தில், "அபி" ஓரம் கட்டப்பட்டுவிட்டு "அபிமன்யு! உயர்ந்து நின்றால், அவனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தன் வழியில் வரும் எவரையும் தகர்த்தெரிவான் அபிமன்யு. ஆதிகேசவன், வரப்போகும் நாட்கள் எப்படி இருக்குமோ என்று கவலைகொண்டார்.
*மறுநாள் காலை*
முழுவதும் தயாரான நிலையில், தனது அறையை விட்டு வெளியே வந்தாள் யாழினி. கிரிஷ், பூங்கொத்துடன் அவளுக்காக காத்திருந்ததை பார்த்தபோது அழகாக சிரித்தாள்.
ஆதிகேசவனிடமும், மகாவிடமிருந்தும் ஆசீர்வாதங்களை பெற்றாள்.
"ஹாப்பி பர்த்டே யாழினி" என்றான் கிரிஷ்.
"தேங்க்யூ கிரீஷ்"
" நான் தான் முதலில் விஷ் பண்ணியிருக்கேன்னு நினைக்கிறேன்? " என்று பெருமையாக கேட்டான் கிரீஷ். ஆதிகேசவன் முகத்திலும் பெருமை தாண்டவமாடியது.
"இல்ல, அபி தான் ஃபர்ஸ்ட்... சரியா 12 மணிக்கு அபி என்னை விஷ் பண்ணாரு".
அதைக் கேட்ட ஆதிகேசவனின் முகம் மாறிப்போனது.
"ஆனா, அவன் உனக்கு போன்ல தானே விஷ் பண்ணி இருப்பான்?" என்றான் கிரிஷ்.
"அதான் இல்ல. நேரில் வந்து ஒரு மூவி ஹீரோ மாதிரி எனக்கு விஷ் பண்ணிட்டு, இந்த செயினையும் கிஃப்டா கொடுத்தாரு".
தன் கழுத்தில் அணிந்திருந்த செயினை காட்டிக்கொண்டு சொன்னாள் யாழினி. அவளுடைய மகிழ்ச்சி ததும்பிய முகத்தை வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டு நின்றார் ஆதி.
"என்ன? அபி இங்க வந்தானா? எப்படி வந்தான்?" அதிர்ச்சியுடன் கேட்டார்.
"ஆமா, அவரு எனக்கு போன் பண்ணி கதவைத் திறக்கச் சொன்னார்"
எந்த கதவை என்ற விவரத்தை யாழினி சொல்லவில்லை.
"போன் பன்னானா? ஆனா எனக்கு சத்தம் கேட்கலையே? "
"நீங்க தூங்கியிருப்பீங்க அங்கிள்." என்றான் கிரீஷ்
ஆனால் ஆதிகேசவன் தூக்கம் வராமல் வெகுநேரம் பிரண்டு படுத்து கொண்டு இருந்தார் என்பது நாம் அறிந்ததே. மஹாவின் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது. அவள் தான் அபியின் வேண்டுகோளுக்கிணங்க, யாழினியின் அறையில் இருந்த இன்டர்காமை தவிர, மற்ற அனைத்தையும் மியூட்டில் போட்டிருந்தார் . ஆனால் அபி நேரில் வந்தான் என்பதை கேட்ட போது, மகாவும் அசந்தே தான் போனார்.
"சரி, நீ என் கூட லஞ்ச் சாப்பிட வரியா? " என்றான் கிரீஷ்.
"ஸாரி கிரிஷ். இன்னைக்கு என்னால நிச்சயமா முடியாது. நான் சாந்தி நிலையம் போய் எல்லார்கிட்ட இருந்தும் பிலஸ்ஸிங்ஸ் வாங்க போறேன். விருப்பப்பட்டா நீயும் என் கூட வரலாம்".
"பரவாயில்லை யாழினி, நாம இன்னொரு நாள் போய்க்கலாம். இன்னைக்கு நீ போயிட்டு வா."
"சரி, நம்ம ரெண்டு பேரும் இன்னொரு நாள் அங்க போவோம்"
ஆதிகேசவன் அவளுக்கு மின்னும் காகிதத்தில் மடிக்கப்பட்டபட்டிருந்த பிறந்தநாள் பரிசை கொடுத்தார். அதை தன் கைப்பைக்குள் திணித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரான அவளை, ஆதிகேசவன் தடுத்து நிறுத்தினார்.
"சாப்பிட்டுட்டு போ யாழினி"
"இல்லப்பா. அபி ஆபீசுக்கு போறதுக்கு முன்னாடி நான் அங்க போயாகணும். இல்லன்னா நான் அபியை மிஸ் பண்ணிடுவேன். கவலைப்படாதீங்க, நான் சாந்தி நிலையத்தில் நிச்சயம் சாப்பிடுகிறேன்".
"ஆனால் யாழினி... "
"அப்பா ப்ளீஸ்... புரிஞ்சுக்கோங்க. அவ்வளவு சூப்பரா அபி எனக்கு பர்த்டே கிஃப்ட் கொடுத்தப்ப, நான் எவ்வளவு ஸ்பெஷலாக உணர்ந்தேன் தெரியுமா? என்ன ஒரு ராணி மாதிரி உணரவச்சார். இது என்னோட டர்ன். ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ".
கூறிவிட்டு அங்கிருந்து விரைந்தாள் யாழினி
"அங்கிள், நீங்க சொன்னீங்க, அபிமன்யு, அவனுடைய சத்தியத்தை எப்பவுமே மீற மாட்டான், நான் யாழினியை கல்யாணம் பண்ணிக்கலாம்னு. ஆனா நடக்குறத எல்லாம் பார்க்கும்போது, அபிமன்யு உங்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை பத்தி கவலைபடுற மாதிரியே எனக்கு தெரியலை. என்னமோ அவனும் கூட அவனுடைய கடந்த காலத்தை மறந்த மாதிரி, நிகழ்காலத்தில் என்னென்ன செய்யணுமோ அதை அழகா செஞ்சுகிட்டு இருக்கான். போற போக்க பாத்தா, யாழினி மறுபடியும், அபிமன்யுவ விரும்ப ஆரம்பிச்சிடுவா போல இருக்கு"
"எதுக்காக நீ அவ கூட சாந்தி நிலையம் வரமாட்டேன்னு சொன்னே?" என்று எரிந்து விழுந்தார் ஆதி கேசவன்.
"நீங்க அவளை என்கூட லஞ்ச்க்கு வர சொல்லுவீங்கன்னு நான் நினைச்சேன்"
அவனுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் ஆதிகேசவன்.
"ஒரு விஷயம் சொல்லுங்க, ஒருவேளை யாழினி மறுபடியும் அபிமன்யுவ காதலிக்க ஆரம்பிச்சா என்ன செய்வீங்க?"
அந்தக் கேள்விக்கு ஆதிகேசவனிடம் பதில் இல்லை. அவளை, இதைத்தான் செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்று கட்டுப்படுத்தக்கூடிய நிலையில் அவர் இல்லை. அவளின் மன அழுத்தத்திற்கு அவர் காரணமாக முடியாது. அவள் அபிமன்யு மீது கொண்டிருக்கும் ஆர்வம், அவரை கலங்கத்தான் வைக்கிறது. அவரை குழப்பமும் கோபமும் வாட்டி வதைத்தது.
*சாந்தி நிலையம்*
சாந்தி நிலையத்தின் கதவுகளை திறந்தபோது, யாழினியின் மீது ரோஜா இதழ்கள் கொட்டி வரவேற்றன.
"வாவ்... இதை நான் எதிர்பார்க்கவே இல்லை" சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள் யாழினி.
அவளை ஆலம் சுற்றி வரவேற்றார் பாட்டி. அனைவரும் ஆளாளுக்கு பரிசளித்து அவளை திக்குமுக்காட செய்து விட்டனர்.
"நீ அவளுக்கு எதுவும் கொடுக்கலையா, அபுன்ஸ் ?" என்றான் அபியை பார்த்து நந்தா.
அவன் அளித்த பரிசை பற்றி யாழினியாகவே சொல்ல வேண்டுமென்று எதிர்பார்த்திருந்தான் அபி. ஆனால் அவளோ, மஸ்கோட் அல்வாவை சப்புக்கொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். யாருக்கும் பதில் சொல்லாமல் அமைதியாக அமர்ந்து, அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் அபிமன்யு.
"என்ன மச்சான், அவளுக்கு நீ எதுவும் வாங்கித்தரலையா? " என்றான் ஷ்யாம்.
யாழினி "டோன்ட் கேர்" என்று இருப்பதை பார்த்த போது அபிக்கு கோவமாக வந்தது.
அவள் கையிலிருந்த மஸ்கோத் அல்வாவை பிடுங்கினான் அபி.
"என்ன பண்றீங்க? கொடுங்க என்னோட அல்வாவை" என்றாள்.
"இவங்க கேட்கிறது உன் காதில் விழலையா? "
"அஃப்கோர்ஸ் விழுந்துச்சு"
"அப்ப சொல்ல வேண்டியது தானே? "
"ஆனா அவங்க, அவங்களுடைய அபுன்ஸையும், மச்சானையும் இல்ல கேள்வி கேட்டாங்க? நான் அபுன்சும் இல்ல, மச்சானும் இல்லையே?" என்றாள் கூலாக.
"அப்போ நீ எதுவும் சொல்ல போறதில்லையா? "
அவள் இல்லை என்று தலை அசைத்தாள். அபி அங்கிருந்து செல்ல எத்தனித்தபோது,
"சின்னா, நீ நேத்து ராத்திரி, பன்னண்டு மணிக்கு அவளுக்கு போன் பண்ணத பற்றி, சொல்லவேண்டிய அவசியமே இல்லை" என்றார் பாட்டி.
"நீ ஜன்னலைத் திறக்க சொன்னதைக் கூட நீ சொல்ல வேண்டியதில்லை" என்றாள் அஞ்சலி.
" ஜன்னல் வழியா எகிரி குதித்து உள்ளே போனதையும் சொல்ல வேண்டாம்" என்றாள் பிரியா.
"பர்த்டே விஷ் பண்ணதையும் நீ சொல்ல வேண்டாம்" என்றாள் லாவண்யா.
"நீ ஒரு செயின்ன கிஃப்டா கொடுத்தத கூட சொல்ல வேண்டாம்" என்றான் ஷ்யாம்.
"இதெல்லாம் சரியா 12 மணிக்கு நடந்தது" என்றான் அஜய்.
"நீ இதெல்லாம் எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" என்று சிரித்தாள் மாமி.
ஒருவர் மாற்றி ஒருவரை, வாயைப் பிளந்துகொண்டு பார்த்து நின்றான் அபிமன்யு.
தன் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு, புருவத்தை உயர்த்தி, கிண்டலாக சிரித்தபடி தன்னைப் பார்த்துக் கொண்டு நின்ற யாழினியை பார்த்து கண்களை சுழற்றினான் அபி.
"யாழினி, காலைலயே போன் பண்ணி எங்க எல்லார்கிட்டயும் சொல்லிட்டா" சிரித்தாள் அஞ்சலி.
அனைவரும் கொல்லென்று சிரிக்க ஆரம்பிக்க, தானும் அவர்களுடன் இணைந்து கொண்டான் அபிமன்யு.
"உங்களுக்கு மட்டும்தான் சர்ப்ரைஸ் கொடுக்க தெரியுமா?" என்றாள் யாழினி.
"சிலசமயம், நீ உன்னுடைய நினைவை இழந்திட்டேன்னு என்னாலே நம்ப முடியுறதே இல்ல. உன்கிட்ட எந்த வித்தியாசமும் இல்லை. நீ எப்போவும் போலதான் இருக்கே." என்றான் அபி.
"அப்படியா? அப்படின்னா என்னுடைய நினைவு திரும்பி வந்தா கூட, வராத மாதிரி நான் நடிக்க போறேன்" என்று சிரித்தாள் யாழினி.
" அது உன்னால முடியாது. உன்னோட நினைவுகள் திரும்பி வந்தா, உன்னால உன்னை தடுத்து நிறுத்த முடியாது. நீ இப்போ இருக்கிற மாதிரி, அப்போ இருக்க மாட்ட."
"அப்படி நான் என்ன செய்வேன்?" என்றாள் ஆர்வத்துடன் யாழினி.
அபிக்கு, அவளுடைய விபத்திற்கு முந்தைய சந்திப்பை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
"நானும் கூட ஆவலா தான் இருக்கேன். உனக்கு நினைவு வந்ததுக்கப்புறம், நீ என்ன செய்யப் போறேன்னு" என்றான் அபி.
"நான் ஏன் உங்க கிட்ட கேக்குறேன்னா... ஒருவேளை என் நினைவு திரும்பி வந்துருச்சுன்னா, இப்ப நடந்த எல்லாத்தையும் நான் மறந்திடுவேன் தானே? " என்றாள்.
"இருக்கலாம். ஆனா இப்ப இருக்கிற மாதிரி, அப்ப கஷ்டமா இருக்காது" என்றான்.
"அப்படின்னா, இப்போ உங்களுக்கு கஷ்டமா இருக்கா?" என்று அவன் கண்களுக்குள் எதையோ தேடினாள் யாழினி.
"ரொம்ப... "
"ஆனா ஏன்? நான் தான் உங்க முன்னாடியே நிக்கிறேனே. உங்க கூட ஃபிரெண்ட்லியாவும் இருக்கேன். அப்புறம் ஏன் உங்களுக்கு கஷ்டமா இருக்கு? "
அவன் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறான் என்பதை மனதை விட்டு கத்த வேண்டும் போலிருந்தது அவனுக்கு. அவனுடைய உணர்வுகளை கட்டுப்படுத்திகொண்டு, அவள் மூக்கில் லேசாகத் தட்டிவிட்டு, சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தான். எதையோ சிந்தித்தவாறே, அவனையே பார்த்துக்கொண்டு அசையாமல் நின்றாள் யாழினி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top