Part 29

பாகம் 29

திருமணம் நடந்ததிலிருந்து பத்தாவது நாள், திருமண வரவேற்பு என்று நிச்சயிக்கப்பட்டது. அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை, அவரவர்களும் முடித்துக் கொண்டிருந்தார்கள். தனது நண்பன் அபிமன்யு, நீண்ட விடுப்பில் இருந்ததால், அனைத்து வேலைகளையும் வழக்கம் போல் தன்னுடைய தலையில் போட்டுக் கொண்டான் அமர். பெரும்பாலும் அபிமன்யு வீட்டிலேயே இருந்தான். தேவைப்படும்போது மட்டும் ஆபீஸுக்கு சென்று வந்தான். அவனையும் யாழினியையும் அனைவரும் "வைத்து செய்து" கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களுடைய கிண்டலையும் கேலியையும் பற்றி யார் கவலைப்பட்டது?

பெண்கள் அனைவரும் ஷாப்பிங்கிற்காக ஒரு முழு வாரத்தை எடுத்துக் கொண்டார்கள். ஒருவழியாக திருமண வரவேற்பிற்கான அனைத்து வேலைகளும் முடிந்தன. நாளை திருமண வரவேற்பு.

அபிமன்யு சில இ-மெயில்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தான். திடீரென குளியலறையில் இருந்து வந்த அலறல் சத்தத்தை கேட்டு அவனுக்கு தூக்கி வாரிப்போட்டது. ஓடிச்சென்று குளியல் அறையின் கதவை தட்டியவனுக்கு, எந்த பதிலும் கிடைக்கவில்லை. வேறு எந்த வழியும் இல்லாமல் போகவே, குளியல் அறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தவன், யாழினி தரையில் மயங்கி கிடப்பதைக் கண்டான். சோப்பு நீரில் அவள் வழுக்கி விழுந்திருக்கவேண்டும். அவளை அப்படியே அள்ளிக் கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினான். சத்தத்தைக் கேட்டு அனைவரும் அவனுடைய அறையில் திரண்டனர்.

"என்ன ஆச்சு?" என்றான் நந்தா

"பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டா" என்றான் அபிமன்யு

"டாக்டருக்கு கால் பண்ணுங்க" என்றாள் அஞ்சலி.

நந்தா அவனுடைய மொபைலில் இருந்து டாக்டரை அழைத்தான்.

யாழினியின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து, அவள் கன்னத்தை தட்டினான் பதட்டத்துடன், அபி.

மெதுவாக கண்ணைத் திறந்தவளின் கண்கள் கலங்கின. அபியை கட்டிக்கொண்டு ஓவென்று அழுதாள் யாழினி.

"மாம்ஸ்... "

"யாழினி ரிலாக்ஸ். உனக்கு ஒன்னும் இல்லை" என்றான்.

"நான் சொன்ன மாதிரியே நடந்துருச்சு. அப்பா நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு. நல்ல வேலை நீ என்னை இங்க கூட்டிட்டு வந்துட்டே. நான் இனிமே இங்கருந்து போகவே மாட்டேன்" என்று அழுது கொண்டே கூறினாள்.

அங்கிருந்தவர்களுக்கு ஆரம்பத்தில் ஒன்றும் புரியவில்லை. அதன்பிறகு அவர்களுக்கு விஷயம் புரிய, அனைவரும் சிரித்தார்கள்.

அபிமன்யுவின் அணைப்பிலிருந்து வெளி வந்தவள், அவர்கள் அனைவரையும் குழப்பத்துடன் பார்த்தாள்.

"நான் இங்க அழுதுகிட்டு இருக்கேன், உங்களுக்கு என்னை  பார்த்தா சிரிப்பா இருக்கா? " என்றாள்.

அவள் கழுத்தில் இருந்த புது தாலிக்கயிறை உயர்த்திப் பிடித்து அவளுக்கு காட்டினான் அபிமன்யு.

"என்னை, இங்க தூக்கிட்டு வரும்போது கழுத்தில் கட்டி கூட்டிட்டு வந்தியா?" என்றாள் அதிர்ச்சியுடன்.

தனது கண்களை சுழற்றி, அவள் முகத்தை திருப்பி, சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த அவர்கள் திருமண புகைப்படத்தை பார்க்கச் செய்தான் அபி.

"வாவ்... கிராபிக்ஸ் பண்ணியா? நிஜ போட்டோ மாதிரியே இருக்கு" என்றாள் குதுகலமாய்.

யாழினியை சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை. அவளுக்கு எப்படி தெரியும், என்ன நடந்தது என்று? அவள் தனது சுயநினைவை இழந்தது பற்றி அறிந்திருக்க வாய்ப்பே இல்லையே. அவளைப் பொறுத்தவரை, அவளுடைய அப்பா திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அங்கிருந்து தப்பி வரும் பொழுது வழியில் மயக்கமடைந்து விட்டாள். அவ்வளவு தான் அவளுக்கு தெரிந்தது.

"நான் எவ்ளோ டென்ஷனா இருந்தேன் தெரியுமா? எனக்கு தூக்கமே வரல" என்றாள் யாழினி.

"ஒரே ஒரு நாளைப் பற்றி நீ இவ்ளோ கவலைப்படுற. கடந்த சில மாசமா அபி எவ்ளோ கஷ்டப்பட்டான்னு அவனுக்கு தான் தெரியும்" என்றான் நந்தா.

"கடந்த சில மாசமாவா? நீ எதை பத்தி பேசுற?" என்றாள்  யாழினி

"அவளுக்கு நான் புரிய வைக்கிறேன். உனக்கு ஞாபகம் இருக்கா, நீ உங்க வீட்டை விட்டு வெளியே வரணும்னு நினைச்சப்ப என்ன நடந்ததுன்னு?" என்றான் அபிமன்யு சிரித்த முகத்துடன்.

"எனக்கு ஷாக் அடிச்ச மாதிரி இருந்தது. நான் தூக்கி எறியப்பட்ட மாதிரி உணர்ந்தேன். என் தலையில கூட அடிபட்டது"

"எக்ஸாக்ட்லி. அதோட நீ உன்னுடைய நினைவே சுத்தமா இழந்துட்ட"

"என்னது? நிஜமாவா?" தாங்கமுடியாத ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"ஆமா, நீ எல்லாத்தையும் மறந்துட்டே"

"உன்னை கூடவா நான் மறந்துட்டேன்? " என்றாள் கவலையாக.

"நீ உன்னையே மறந்துட்டே" என்றான் அபிமன்யு.

"அப்புறம் என்ன ஆச்சு?"

"அப்புறம் என்ன? உங்க அப்பா உனக்கும் கிரீஷுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் நினைச்சார்"

"என்ன்ன்ன்னது? நீ அந்த பரதேசியை சும்மாவா விட்ட?" தனது பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டாள் யாழினி.

அவன் ஆமாம் என்று தலையசைக்க அதிர்ந்துபோய் பார்த்தாள் யாழினி.

"பின்ன என்ன? நீதான் அவன உன்னோட அண்ணனா தத்து எடுத்திட்டியே"

" சத்தியமா எனக்கு ஒண்ணுமே புரியல" என்றாள் தன் தலையை அழுத்திக் கொண்டு.

"நீ சின்னாவ கல்யாணம் பண்ணிக்க கிரீஷ் உனக்கு உதவி செஞ்சான்" என்றார் பாட்டி.

"நிஜமாவா?" என்றாள் நம்ப முடியாதவளாய்.

ஆமாம் என்று தலையசைத்தான் அபி.

"அப்புறம்?" என்று ஆர்வமாக கேட்க,

"அப்புறமென்ன...நீயும் அபியும் சினிமாவுக்கு போனீங்க, ஏழு கல் விளையாடினீங்க" என்றான் நந்தா சிரித்துக்கொண்டு.

"யாழினி... நடந்த ஒட்டு மொத்த கதையையும், நீ அப்புறமா சின்னா கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ. இப்போ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு" என்றாள் அஞ்சலி.

"அக்கா, யாழினியோட டாக்டர்கிட்ட நாளைக்கு அப்பாயின்மென்ட் வாங்கிடுங்க. அவளை ஒரு தடவை செக் பண்ணிடலாம்"

"ஆனா நாளைக்கு உங்களுடைய ரிசப்ஷன் சின்னா" என்றாள்  அஞ்சலி.

"என்னது, நாளைக்கு நமக்கு ரிசப்ஷனா?" என்று குதூகலமாய் கேட்டாள் யாழினி.

ஆமாம் என்று தலையசைத்தான் அபி.

"ரிசப்ஷன், ஈவினிங் தானே, நாங்க காலையில சீக்கிரம் முடிச்சுட்டு வந்துடறோம்" என்றான் அபி.

"சரி, அப்ப நான் அப்பாயின்மென்ட் வாங்கிடுறேன்" என்றாள் அஞ்சலி.

அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

"மாம்ஸ்... நமக்கு நெஜமாவே கல்யாணம் ஆயிடுச்சா? என்னால நம்பவே முடியல, நம்ம ரெண்டு பேரும் ஹஸ்பன்ட் அண்ட் வைஃப்னு" என்றாள் சந்தோஷமாக.

" உனக்கு நினைவு திரும்ப வந்துடுச்சிங்கிருந்த,  என்னாலயும் நம்ப முடியல" என்றான் அபி.

"ப்ளீஸ்,  ப்ளீஸ் என்ன ஆச்சி, என்னெல்லாம் நடந்துச்சுன்னு எனக்கு சொல்லு"

"ரிலாக்ஸ். நாம அதைப்பற்றி எல்லாம் அப்புறம் நிதானமா பேசிக்கலாம்"

"அதெல்லாம் முடியாது. எனக்கு இப்பவே சொல்லு"

"உன்னோட ஃபர்ஸ்ட் நைட்ட, நீ கதை பேசியே கழிக்க போறியா?" என்றான் அபி.

"என்னோட ஃபர்ஸ்ட் நைட்டா?"

"ஆமா, எனக்கு இது ஒன்பதாவது நைட் " ரகசியமாக சொன்னான்.

ஏதோ தக்காளிப்பழத்திடமிருந்து சிவப்பு வண்ணத்தை கடன் வாங்கியதைப் போல, அவளுடைய கன்னங்கள் செக்கச்செவேலென்று சிவந்து போயின.

"அதுதான் எல்லாம் முடிஞ்சிடுச்சுடிச்சி இல்லை, அப்பறம் என்ன அவசரம்?" என்றாள் யாழினி தலையை குனிந்து கொண்டு.

"அதனாலென்ன? எத்தனை நாட்கள் கடந்தாலும் நான் இப்படித்தான் இருப்பேன். அதோட மட்டும் இல்லாம, டெக்னிக்கலா பார்க்க போனா,  உனக்கும் எனக்கும் இதுதான் பர்ஸ்ட் நைட். உண்மையான யாழினியோட, உண்மையான ஃபீலிங்ஸ, இன்னைக்கு தான் நான் பாக்க போறேன்" என்றான் குறும்புச் சிரிப்புடன்.

"நேற்று, என்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடிப் போன, அந்த அபியா, பேசுவது?" என்றாள்  யாழினி.

அவளைப் பொறுத்தவரை,  விபத்திற்கு முதல் நாள் நடந்தவைகள் தான், நேற்று நடந்தவை.

"நான் தப்பிச்சு ஓடிப்போகல. எல்லாமே முறையா நடக்கணும்னு நினைச்சேன்"

"நான் உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேனா?" என்றாள் கவலையாக.

"நான் அப்படி நினைக்கல. நீ காதலோட மறுபக்கத்தை எனக்கு காட்டின. உன்னை மறுபடியும் என்னை காதலிக்க வைக்கிறது, ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது"

"நான் மறுபடியும் உன்னை
காதலிச்சேனா?"

"ரொம்ப ஆழமா"

"எனக்கு எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. சொல்லு...என்ன நடந்துச்சுன்னு, எனக்கு சொல்லு. ப்ளீஸ்... "

"அத பத்தி நாம அப்புறமா பேசலாம். பாரு, நான் எவ்வளவு லக்கி... ரெண்டு ஃபர்ஸ்ட் நைட்... ரெண்டு டிஃபரண்ட் ஃபீல்...." அவளைப் பார்த்து கண்ணடித்தான்.

அவன் தோளில் குத்தியவள்,

" அதெல்லாம் முடியாது. எனக்கு இப்போ எல்லாத்தையும் கேட்கணும்" என்றாள்.

"ஓகே ஓகே. நான் சம்பந்தப்பட்ட விஷயத்தை மட்டும் தெரிஞ்சுக்கணுமா இல்ல, ஒன்னு விடாம எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணுமா? "

"ஒன்னு விடாம எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்" என்றாள் ஆவலாக.

"அப்படின்னா, அத சொல்றதுக்கு சரியான ஆள் நான் இல்லை. நான் அவங்கள உனக்கு சொல்ல சொல்றேன். அவங்களுக்கு தான் ஆரம்பத்திலிருந்து எல்லாமே தெரியும். ஒன்றுவிடாமல் எழுதி வச்சிருக்காங்க". என்றான் அபி

"அப்படியா? யார் அவங்க?" என்றாள் குழப்பத்துடன் யாழினி.

"நிரஞ்சனா நெப்போலியன்" என்றான் புன்னகை தவழ அபிமன்யு.

முற்றும்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top