Part 27

பாகம் 27

எல்லோரும் ஆவலுடன் யாழினியை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவளுக்கு எப்படி அனைத்தும் தெரிந்தது? ஏதோ அனைத்தையும் நேரில் பார்த்தது போல் அல்லவா பேசுகிறாள்.

"யாழினி இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்? உனக்கு ஞாபகம் திரும்ப வந்திருச்சா?" என கேட்டார் மஹா.

"இல்லம்மா, என்னுடைய நினைவு திரும்பி வரலை"

"அப்புறம் உனக்கு எப்படி எல்லாம் தெரிஞ்சது?"

"நான் தான் சொன்னேன்"
என்று கூறிய கிரீஷின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியது.

"நீயா?" என்ற ஏகோபித்த குரல் ஒலித்தது.

அவனை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த ஆதிகேசவனை பார்த்து,

"அபியோட குடும்பம் தான் உங்களுக்கு சத்தியம் பண்ணி கொடுத்திருந்தாங்க. நான் இல்ல" என்றான்.

"நான் யாழினிகிட்ட எல்லாத்தையும் முதல் நாளே சொல்லிட்டேன். தேவையில்லாத பழிவாங்கும் படலத்தில் எனக்கு உடன்பாடு இல்ல. அனாவசியமா அடுத்தவங்க வாழ்க்கைக் கெடுக்கிற அளவுக்கு நான் மோசமானவனுமில்ல. என்னைக்கோ வாங்கின அடிக்கு பழிதீர்த்துக்க அல்பதனமா நடந்துக்கிறவனும் நான் இல்ல." என்றான் கிரிஷ் அபியை நோக்கி நடந்து கொண்டே.

"யாழினி என்னை அவளோட அண்ணனா ஏத்துகிட்டா. இப்போ எங்களோட ரிலேஷன்ஷிப்பை ஏத்துக்குறதுல உனக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னு நினைக்கிறேன்." என்றவனை இமை கொட்டாமல் பார்த்து நின்றான் அபி.

"சில சமயங்களில், செகண்ட் ஹீரோவும் இன்ட்ரஸ்டிங்கா இருக்கிறது உண்டு பாஸ்" என்றான்.

"ஆனா, ஒரு வில்லன் செகண்ட் ஹீரோவா மாறுவான்னு யார் எதிர்பார்த்தா?" என்றான் அமர்.

"நாங்க உன்னோட மொத்த சிஸ்டதயும் ஹேக் பண்ணி இருந்தோமே, அப்படியிருக்கும் போது, எங்களுக்கு இத பத்தி ஒண்ணுமே தெரியாம எப்படி போச்சு?" என்றான் ஆச்சரியத்துடன் அமர்.

"ஏன்னா, நாங்க இத பத்தி ஃபோன்ல பேசிகிட்டேதே இல்ல. ஏன்னா, நீங்க அப்படி எதையாவது செய்வீங்கன்னு நான் கெஸ் பண்ணினேன்"

தனது கரங்களை அபிமன்யுவை நோக்கி நீட்டி,

"ஃபிரண்ட்ஸ்?" என்றான் கிரீஷ். அவனுக்கு கை கொடுக்காமல் கட்டி அணைத்து, அவனுடைய நட்பை ஏற்றுக்கொண்டதை மனப்பூர்வமாக வெளியிட்டான் அபிமன்யு.

"ஆனா, உனக்கு தெரியும்னு ஏன் எங்ககிட்ட சொல்லாம மறைச்ச, யாழினி?" என்றாள் அஞ்சலி.

"அதை என் கிட்ட கேளுங்க, நான் சொல்றேன்" என்றான் கிரிஷ்

யாழினி உதட்டை கடித்து சிரித்தாள்.

"ஒரு விஷயத்தை நாம் ஒத்துக்கிட்டே ஆகணும். யாழினியை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்பா" என கிரீஷ் சொல்ல, களுக் என்று சிரித்தான் அபி.

"அவ நான் சொன்னது எதையுமே ஈசியா நம்பல. அது எப்படி ஒருத்தன் இப்படி கூட காதலிக்க முடியும்ன்னு கேள்வி மேல கேள்வியா கேட்டு என்ன வறுத்து எடுத்துட்டா" என்றான் கிரீஷ்.

"அப்போ அவளை நீ எப்படி நம்ப வச்ச?" என ஒரு இதழோர புன்னகையுடன் கேள்வி எழுப்பினான் அபிமன்யு.

"நான் அவகிட்ட பெட்டு கட்டினேன். இன்னும் 24 மணி நேரத்துக்குள்ள, நீயாவே, நான் அவள பொண்ணு பாக்க போன விஷயத்தை தெரிஞ்சுக்குவேன்னு. நான் சொன்ன மாதிரியே நடக்கவும் நடந்துச்சு".

"ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறதா ஏன் சொன்னீங்க? " என்றான் ஷியாம்.

"எங்க அப்பாவையும், ஆதி அங்கிளையும் நம்பவைக்க. அதே நேரம், யாழினிக்கும், அபிமன்யுவோட காதலை நேரில் பார்த்து உணர்வதற்கான சந்தர்ப்பமா அது அமைந்தது"

யாழினியின் பக்கம் தனது பார்வையை திருப்பிய அபிமன்யு, அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து மென்று முழங்கினான். இது ஒரு புதுவித அனுபவம். அவளுடைய கண்கள்.. அவளுடைய பார்வை... அவளுடைய முகபாவம்... அனைத்தும் இப்போது புதிதாக இருந்தது. அவனுக்கு புரியாத ஏதோ ஒரு கதையை அவை பேசிக் கொண்டிருந்தன. முன்பும் சரி, இப்போதும் சரி, அவன் யாழினியிடம் இப்படி ஒரு முகபாவத்தை பார்த்ததே இல்லை. அவனால் யூகிக்கவே முடியவில்லை, அப்படி அவை அவனிடம் என்ன தான் சொல்ல துடிக்கின்றன என்பதை. அவன் வயிற்றுக்குள் ஏதோ உருளுவதைபோல அவன் உணர்ந்தான். அவனுக்கு, மென்று விழுங்குவதை தவிர வேறு என்ன செய்வது என்பதே புரியாமல்இருந்தது.

"அதனால தான், ஒவ்வொரு தடவையும், கேள்வி மேல கேள்வி கேட்டு சின்னாவ தொலைச்சிக்கிட்டு இருந்தியா?" என்றாள் அஞ்சலி

"அதனால தான், அவங்க ரெண்டு பேரையும் அன்னைக்கு தியேட்டர்ல விட்டுட்டு நீ கிளம்பி போனியா?" என்றான் அமர்.

"ஆமா. ஆனா, நீங்க ரொம்ப கஷ்டம்பா. வாயை திறந்து ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேன்னு சொல்லி என்னை படுத்தி வச்சிட்டீங்க. யாழினி சொன்ன மாதிரி நடிக்கிறதுக்கு நான் ஒத்துக்கிட்டேன். ஆனா ஒவ்வொரு நாளும் பயத்துல் வியர்த்துகிட்டிருந்தது எனக்கு மட்டும் தான் தெரியும். தூக்கத்தில் கூட என்ன அபி குத்துற மாதிரியே இருந்தது" என்றான் கிரீஷ்.

அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர்.

ஆதிகேசவன் அருகில் வந்த யாழினி,

"அப்பா, மாமி விஷயத்துல நடந்த மாதிரி, ஏதாவது நடந்திடும்னு தான பயப்படுறீங்க? நீங்க பயப்படாதீங்க. உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம். ஒருவேளை மாமா, அந்த மாதிரி ஏதாவது தப்பு பண்ணா, நான் கண்டிப்பா தற்கொலை பண்ணிக்க மாட்டேன். அதுக்கு பதிலா மாமாவை நான் போட்டு தள்ளிடுறேன். ஓகேவா?" என்றாள்.

ஆதிகேசவன் அவளை அதிர்ந்து போய் பார்த்தார்.

"ஆமாம் மாமா, அப்படி ஒரு வேளை நடந்தா, கண்டிப்பா யாழினிக்கு நான் ஹெல்ப் பண்றேன்" என ஓடிவந்து கூறினாள் அஞ்சலி.

அபிமன்யு தனது சிரிப்பை அடக்க போராடிக் கொண்டிருந்தான், இந்த இரண்டு பெண்களும் வேறு விதத்தில் ஆதிகேசவனின் சம்மதத்தைப் பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்ததை பார்த்தபோது.

"நல்ல காலம்பா நான் இந்த கொலைகார குடும்பத்தில் இருந்து தப்பிச்சிட்டேன் என்றான்" கிரீஷ்.

"அவங்க கொலைகாரக் குடும்பம் இல்ல. மறைமுகமா அபிமன்யுவுக்கு ஆதரவை திரட்டுறாங்க. பாரு, அபி சிரிப்பை எப்படி அடக்கிக்கிட்டு இருக்கான்னு" என்றார் ஆதிகேசவன்.

"அப்பா ப்ளீஸ்..." என ஆரம்பித்த யாழினியை, கை அமர்த்தினார் ஆதிகேசவன்.

"ஐ அம் ரியலி சாரி மா. நான் உங்க ரெண்டு பேரையும் ரொம்ப கஷ்ட படுத்திட்டேன். நான் அப்படி செஞ்சதுகாக ரொம்ப வருத்தப்படறேன்."

அபிமன்யுவை பார்த்து "என்ன மன்னிச்சிடு அபி" என்றார் இருகரம் கூப்பி.

அவசரமாக இரண்டு அடி எடுத்து வைத்தவன், அவர் கைகளை பற்றிக்கொண்டான்.

"நீங்க என் வாழ்க்கையை திருப்பி கொடுத்திருக்கீங்க. எனக்கு அதுவே போதும், என்னோட வாழ்க்கைல நடந்த எல்லா கஷ்டத்தையும் நான் மறக்க" என்றான் அபி.

அப்போது ஒரு பரிதாப குரலைக் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

"சார் நான் இருக்கணுமா, போகணுமா" என்றார் ஐயர்.

"அட ஏன் போறீங்க? வந்த வேலைய முடிச்சுட்டு போங்க. நான் சொல்றது சரி தானே அங்கிள்?" என்றான் நந்து

"சிம்பிளான விதத்தில கல்யாணம் பண்ணிக்க, ஃபேஷன் கிங் ரெடியா இருந்தா, எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல" என சிரித்தார் ஆதிகேசவன்.

"நீங்க சரின்னு மட்டும் சொல்லுங்க. அபி தானாவே மந்திரத்தை சொல்லி கல்யாணம் பண்ணிகிறானா இல்லையான்னு மட்டும் பாருங்க" என்றான் நந்தா.

யாழினி தான் வெட்கப்படுவது தெரிந்து விடாமல் இருக்க, மகாவின் பின் தனது முகத்தை மறைத்துக்கொண்டு நின்றாள்.

"சிம்பிளா கல்யாணம் பண்ணிக்கிறது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல. நம்ம ரிசப்ஷன கிராண்டா நடத்திடலாம்" என்றான் அபிமன்யு.

"நான் சொல்லல?" என்றான் நந்தா.

"அப்புறம் என்ன, நீங்க ஆரம்பிக்கலாம்" என்று ஐயருக்கு அனுமதி கொடுத்தான் ஷியாம்.

"ஆமா, சீக்கிரம் ஆரம்பிங்க. இல்லனா ஆதிகேசவன் அங்கிள் மனசு மாறிடப் போறார்" என்று மெல்லிய குரலில் சொன்னான் நந்தா.

அவன் பக்கத்தில் நின்றிருந்த அமர் அதைக்கேட்டு களுக் என்று சிரித்தான்.

"அவர் மாற மாட்டார். அப்படியே மாறினாலும், யார் விடப்போறது?" என்றான்.

"ஆமா, அப்படி அவர் சொன்ன அடுத்த நிமிஷம், யாழினியை தூக்கிகிட்டு செவ்வாய் கிரகத்துக்கோ, வியாழன் கிரகத்துக்கோ பறந்து போயிடுவான், அபி" என்றான் நந்தா.

சிரித்துக்கொண்டே கல்யாண ஏற்பாடு நடந்து கொண்டிருந்த சிறிய மண்டபத்தை நோக்கி அனைவரும் நகர்ந்தனர்.

அபிமன்யுவும், mnயாழினியும் அமர வைக்கப்பட்டு மந்திரங்கள் ஓதப்பட்டன.

அபிமன்யுவும், யாழினியும் ஆச்சரியத்தில் இருந்தார்கள். அவர்களால் நம்பவே முடியவில்லை, அவர்களுக்கு திருமணம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை. இன்று காலை அவர்கள் தூங்கி எழுந்த போது கூட, இப்படி ஒரு திருப்புமுனையாக இந்த நாள் அமையும் என்பதை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த எதிர்பாராத திடீர் திருப்பத்தை நினைத்து இருவரும் சிரித்துக் கொண்டே இருந்தார்கள்.

யாழினியின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்த போது, இதுவரை தான் பெற்ற அனைத்து வெற்றிகளும் சிறு துரும்பென எண்ணினான் அபிமன்யு. இனி காலம் முழுக்க அவனுடைய பெயரை சொல்லிக்கொண்டு இருக்கப்போகும் குங்குமத்தை அவள் நெற்றியில் பெருமிதத்துடன் நிரப்பினான் அவன்.

அபிமன்யு, யாழினி இருவரும் சட்டப்படி தம்பதிகள் ஆனார்கள். இந்த நேரம் அவர்கள் வாழ்வில் எப்போது வரும் என்று காத்திருந்தவர்கள், பரவசமாக உணர்ந்தார்கள். அவர்களுடைய காத்திருப்பு இனிதாய் முடிவுற்றது. முக்கியமாக அபியின் காத்திருப்பு. அவன் ஒருவனே அறிவான் கடந்த சில மாதங்களாக அவன் நரகத்தில் வாழ்ந்தான் என்பதை.

*சாந்தி நிலையம்*

ஆலம் சுற்றி மணமக்கள் வரவேற்கப்பட்டனர். அனைவரின் ஆரவார கரவொலிகிடையில் மணமக்கள் இருவரும் இணைந்த கைகளுடன் சாந்தி நிலையத்தில் அடியெடுத்து வைத்தனர்.

....

அலங்கரிக்கப்பட்ட அபியின் அறையில் யாழினி தனித்து விடப்பட்டாள். இப்போதிலிருந்து அது அவளுடைய அறையும் கூட.

வாழ்க்கையில் முதல் முறையாக தர்மசங்கடம் என்றால் என்ன என்பதை அபி உணர்ந்தான். அவன் யாழினியை காதலித்தான் என்பது, யாழினிக்கு தெரிந்திருந்தாலும், அவளிடம் மேற்கொண்டு எப்படி நடந்து கொள்வது என்பதில் அவனுக்கு மிகப்பெரிய குழப்பம் இருந்தது. ஏனெனில், அவர்களுடைய முந்தைய கால நெருக்கம் பற்றி யாழினிக்கு எதுவும் தெரியாது. இவனுடைய ஆர்வக்கோளாறால் எதுவும் தவறாகிவிட கூடாது. முதலில் அவள் சகஜமாக பழக ஆரம்பிக்கட்டும். அவள் இவனுடையவள் என்றான போது, காத்திருப்பதில் என்ன பெரிய கஷ்டம் இருந்துவிடப் போகிறது? அந்த ஒரு எண்ணமே அவனுடைய நிம்மதியான உறக்கத்திற்கு வழி வகுக்காதா? தன்னுடைய எண்ண ஓட்டத்தை நினைத்து அவனே சிரித்துக்கொண்டான். தூக்கமா? அதுவும் யாழினி அருகில் இருக்கும் போதா? அவளுடன் தன் வாழ்நாளை கழிக்க எவ்வளவு ஏங்கி இருப்பான்?

முதன்முறையாக, தனது அறைக்குள் பிரவேசிக்க, அபிமன்யு தன்னை தயார்படுத்திக்கொண்டு ஆயத்தமானான். என்ன ஒரு வேடிக்கை...!

அவன் அறைக்குள் நுழைந்தபோது, அவளும் கிட்டதட்ட இவனுடைய மனநிலையில் இருப்பதை அவனால் உணர முடிந்தது. அபியை பார்த்ததும் கட்டிலிலிருந்து கீழே இறங்கி, எழுந்து நின்றாள் யாழினி.

பேச்சை சகஜமாக தொடங்கினான் அபிமன்யு.

"யாழ்ழ்னி, இன்னும் அந்த புடவையை மாத்திகலயா? அது ரொம்ப வெயிட்டா இருக்குமே?" என்றான்.

ஆமாம் என்று தலையசைத்து, அவள் தனது உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். அவள் திரும்பி வந்த போது, அபியும் தனது உடைகளை ஏற்கனவே மாற்றிக் கொண்டு இருந்தான்.

யாழினியை பார்த்து சிரித்தவன்

"தேங்க்ஸ்" என்றான்.

"எதுக்கு?"

"நான் செஞ்சு கொடுத்த சத்தியத்தை காப்பாத்துனதுக்கு"

"சத்தியமா? என்ன சத்தியம்?"

"உன்னோட கல்யாண புடவையை நான் தான் டிசைன் பண்ணி கொடுப்பேன்னு சத்தியம் செஞ்சிருந்தேன். நம்ம கல்யாணத்தன்னைக்கு நீ அந்த புடவை கட்டி, என் சத்தியத்தை காப்பாதிட்ட. எனக்கு ஒண்ணு புரியல. நீ ஏன் நான் கொடுத்த புடவைய கட்டியிருந்தே? உங்கப்பா உனக்கு வாங்கி கொடுத்திருப்பாறே?"

"உண்மைய சொல்லப்போனா, அப்பா எனக்கு கல்யாண ஏற்பாடு பண்றாருன்னு எனக்கு தெரியாது. ஆனா, அவர் எனக்கு ஒரு பட்டுப்புடவையை கொடுத்தப்போ, நான் தப்பா உணர்ந்தேன். எனக்கு ஒரே பதட்டமாயிருந்தது. ஒருவேளை ஏதோ தப்பா நடக்கும்னா, எனக்கு அதில் உடன்பாடு இல்லைன்னு எங்க அப்பாவுக்கு காட்ட நான் விரும்பினேன். அதனால தான், நீங்க கொடுத்த புடவை கட்டிக்கிட்டேன். அதை கட்டிக்கும் போது நீங்க என்கூட இருக்கற மாதிரி தைரியமாய் இருந்துச்சு" என்றாள்.

அவளை நம்ப முடியாமல் பார்த்து நின்றான் அபிமன்யு. அவளுடைய மனதில் தனக்கான இடம் எப்படிப்பட்டது என்பது அவனுக்கு நம்ப முடியாததாக இருந்தது. ஏனெனில், அவன் அளித்த புடைவையில், அவனுடைய அருகாமையை உணர்வது என்பது அவ்வளவு சாதாரணமானதல்ல.

தன்னையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த யாழினியுடன் பேச்சை துவங்கினான் அபி.

"நான் கேட்க சொன்னத, உங்க அம்மா கிட்ட கேட்டியா?"

"ஓ கேட்டேனே" என்றாள்.

"என்ன சொன்னாங்க?"

"உங்களைப் பத்தி யோசிக்க ஒன்னும் இல்லைன்னு சொன்னாங்க." என நமுட்டு சிரிப்புடன் கூறிய யாழினியை, தனது கைகளை கட்டிக்கொண்டு,

"ஓ அப்படியா? அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி, உன் எண்ணத்தை மாத்தினது எது?" என்றான்.

"பாவம், வாழ்க்கையில ஏற்கனவே நீங்க ரொம்ப அழுதுட்டீங்க. இன்னும் உங்களை அழ வைக்க வேண்டாம்னு தான் உங்கள கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்" என்றாள் கிண்டலாக.

முகத்தில் மாறாத புன்னகையுடன், அபி அவளை நோக்கி அடி எடுத்து வைக்க, அவனைப் பார்க்காமல், தனது விழிகளை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள் யாழினி. அவள் அருகில் வந்தவன் மென்மையாக முணுமுணுத்தான்.

"என் மேல நீ காட்டுன கருணைக்கு ரொம்ப நன்றி" என்றான்.

"ஒருவேளை நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லியிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?"

"உன்னோட விபத்துக்கு முன்னாடி நீ எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்த. அதை பயன்படுத்திக்காம, ரொம்ப நல்லவனா இருந்ததுக்காக என்னை நானே சாபிச்சிருப்பேன்" என்றான் குறும்பு புன்னகையுடன்.

"நான் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தேனா?"

"ஆமாம், நான் மாத்தி யோசிச்சேன். அது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்"

"அது என்ன?"

"அதைப் பத்தி நான் உன்கிட்ட அப்பறமா சொல்றேன்."

யாழினியால் உணர முடிந்தது, அவன் ஏதோ ஒரு கடந்தகால நிகழ்வைப் பற்றி யோசிக்கிறான் என்ன்று .

"நீ படுத்துக்கோ. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் முடிச்சுட்டு வந்துடுறேன். ரிலாக்ஸ்டா இரு"
என்று கூறிவிட்டு நீச்சல் குளம் பக்கம் போக எத்தனித்தவனை, யாழினியின் குரல் தடுத்து நிறுத்தியது.

"முடியாது. நான் உன்னை பாக்குற வரைக்கும் ரிலாக்சா இருக்க முடியாது. நான் உன் மடியில் உட்காரணும்"

இது, யாழினி அவளுடைய விபத்திற்கு முந்தைய நாள் அவனிடம் ஃபோனில் கூறியது. அதிர்ச்சியில் அவளின் பக்கம் திரும்பிய அபிமன்யு, யாழினி அவளுடைய ஃபோனை கையில் வைத்துக்கொண்டு அவனை பார்த்துக் கொண்டு நிற்பதை பார்த்தான். இன்று காலை அவள் பார்த்த அதே பார்வை...

அவளுடைய ஃபோன் அவளுக்கு கிடைத்துவிட்டதா? அப்படியென்றால், அவர்களுக்கிடையில் நடந்த அனைத்தும் அவள் அறிவாளா? என்ன செய்வது என்று புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான் அபி.

"நான் உங்க மடியில உட்காரலாமா?" என தலைசாய்த்து கேட்ட யாழினியை நம்ப முடியாதவனாய் பார்த்தான் அபிமன்யு.

இத்தனை நாள் தன்னுள் கட்டுப்படுத்தி வைத்திருந்த உணர்வுகள், அவனை விட்டு கண்ணீர் வடிவமாய் வெளியேறியது. அவள் இப்படி அனுமதி கேட்டு நிற்பதைப் பார்த்த போது அவன் என்ன தான் செய்ய முடியும்? ஆனால், அவனுடைய பதிலுக்கு காத்திருக்காமல், யாழினி ஓடிச் சென்று அவனுடைய கழுத்தை கட்டிக்கொண்டாள். அவளை சுற்றி தனது கரங்களை படர விட்டவன், தரையில் இருந்து தூக்கி, இறுக அணைத்துக் கொண்டான்.

எத்தனை நாட்கள்... அவளிடம் நெருங்க முடியாமல் தவியாய் தவித்ததிருப்பான்? எத்தனை நாட்கள்... இந்த ஒரு நொடிக்காக அவன் ஏங்கி இருப்பான்? அவளைப் பிரிந்து எத்தனை நாள் உயிருடன் செத்திருப்பான்? அவர்களின் கண்களில் வழிந்த கண்ணீரை நம்மால் விவரிக்க முடியவில்லை. அவை சந்தோஷம் சம்பந்தப்பட்டவையா? அல்லது உணர்வுகள் சம்பந்தப்பட்டவையா? ஒருவேளை இரண்டும் கலந்ததாக இருக்கலாம்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top