Part 25
பகுதி 25
யாழினி அவளுடைய அறையில் அமர்ந்து, தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். ஆதிகேசவனும் மஹாவும் ஒரு பார்ட்டிக்கு சென்றிருந்தார்கள். அவள் அறையின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறந்தவளின் கண்கள், வெளியில் வந்து விழும் அளவிற்கு பெரிதாய் போனது, அபிமன்யுவை பார்த்து.
"நீங்க எப்படி இங்க வந்தீங்க? யாராவது பாத்தா என்ன ஆகுறது? எப்ப பாத்தாலும் ஏன் இப்படி ரிஸ்க் எடுக்கறீங்க?"
"ஏன்னா, உன்னோட வாழ்க்கை ரிஸ்க்காயிட கூடாதுனு தான். எனக்கு தெரியும், உங்க அம்மா அப்பா வீட்ல இல்லனு. செக்யூரிட்டி கண்ணுல படாம தான் உள்ளே வந்திருக்கேன். அதனால கவலைப்பட வேண்டியதில்லை"
"ஆனா எப்படி வந்தீங்க? "
"பின்பக்கமா வந்தேன். அவன், அவள் கையில் ஒரு துணி கவரைக் கொடுத்தான். அதை திறந்து பார்த்தவள், அபிமன்யுவை ஆச்சரியத்துடன் பார்த்தாள். அது அபிமன்யு அவளுக்காக டிசைன் செய்த புடவை தான்.
"உன்னோட ஆக்சிடென்ட்க்கு முன்னாடி நீ என் கிட்ட கேட்டது. நான் உன்கிட்ட குடுக்குறதுக்கு முன்னாடி அந்த விபத்து நடந்து போச்சு. என்கிட்ட இருந்துச்சு." என்று தன் உணர்வுகளை கட்டுபடுத்தி கொண்டு கூறினான்.
"நிஜமாவா, ரொம்ப அழகா இருக்கு." என்று ஆவல் பொங்க கூறினாள் யாழினி.
"நான் கேட்க சொன்னத, உங்க அம்மாகிட்ட கேட்டியா?"
"நான் உங்க ஆஃபீஸ்ல இருந்து வந்தப்போ, அவங்க வீட்ல இல்ல பார்ட்டிக்கு போயிருக்காங்க. அவங்க வந்ததும் நான் நிச்சயமா கேட்கிறேன்"
"சரி நான் கிளம்புறேன்"
யாழினி அபிமன்யுவிற்க்கு முன் சென்று, அவனை வழிமறித்து தடுத்து நிறுத்தினாள்.
"நான் உங்களுக்கு ஜஸ்ட் ஃபிரண்ட் தானா?" அவள் கெஞ்சலாக கேட்டாள்.
சற்றே யோசித்தவன்,
"நீ தான் எனக்கு எல்லாமே"
என்றான்.
"அப்படின்னா?"
"எல்லாமும்னா எல்லாமுமே..."
"எந்த விதத்தில?"
"எல்லாவிதத்திலும்" என்றான் யாழினியை பரவசத்தில் ஆழ்த்தி.
இதுவரை எதற்காகவும் வாய் திறக்காத அவன், அவளுக்கு முதன் முறையாக, மறைமுகமாக தனது மனதை வெளிப்படுத்தினான். ஒருவேளை மாஹாவிடம் அவள் கேட்கும் போது, அவனுடைய எண்ண ஓட்டம், ஒரு நல்ல முடிவை எடுப்பதற்கு, அவளுக்குத் துணை நிற்கலாம்.
அங்கிருந்து நகர்ந்து சென்றவன், வெளியேறும் முன்பாக திரும்பி யாழினியை பார்க்க, அவள் அந்தப் புடவையை ஆசையோடு வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
*மறுநாள் காலை*
மகாவிற்கு ஒன்றுமே புரியவில்லை, யாழினி ஏன் இவ்வளவு தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறாள் என்று. திடீரென்று அவளுக்கு என்ன நேர்ந்துவிட்டது என்று அவருக்கு புரியவில்லை. மெதுவாக அவள் அறையருகில் சென்று எட்டிப் பார்த்தவர், யாழினி விட்டத்தை வெறித்து பார்த்து கொண்டு அமர்ந்திருந்ததை பார்த்தார்.
"யாழினி, உனக்கு ஒன்னும் இல்லையே? எதை பத்தியோ யோசிச்சிக்கிட்டு இருக்க மாதிரி தெரியுது?"
"அம்மா, நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேக்கணும்."
கேளு என்பது போல் தலையசைத்தார் மஹா.
"ஒருவேளை நான் அபியை கல்யாணம் பண்ணிக்க நெனச்சா, நீங்க என்ன சொல்லுவீங்க?"
மகாவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவள் விரிந்த விழிகளோடு யாழினியை பார்த்துக்கொண்டே இருந்தார். உண்மையிலேயே யாழினி தான் இதை கேட்கிறாளா?
"நீங்க என்னோட மமுடிவை ஏத்துக்குவீங்களா?"
"அப்படி ஒரு முடிவ நீ எடுத்தா, இந்த உலகத்திலேயே சந்தோஷமானவள் நானாத்தான் இருப்பேன்"
"ஆனா, அப்பா நிச்சயமா வருத்தப்படுவாரே"
"எது உன்னை இப்படி கேட்க வச்சிதுன்னு எனக்கு தெரியல. ஆனா நான் ஒன்னே ஒன்னு மட்டும் தான் சொல்லிக்க விரும்பறேன். எந்த ஒரு முடிவையும் எடுக்கக் கூடிய முழு உரிமையும் உனக்கு இருக்கு. உங்க அப்பாவோட கடமை உனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்ததோடு முடிஞ்சிடும். ஆனா, அதுக்கப்புறம் உன்னோட வாழ்க்கையை நீ தான் வாழப்போற. அதுல ஏற்படக்கூடிய அத்தனை ஏற்றத்தாழ்வுகளையும் நீதான் சந்திக்க போற. அதனாலதான் சொல்றேன், உன்னோட வாழ்க்கையோட முடிவை நீயே எடு. மத்த எல்லாத்தையும் விடு. உனக்கு என்ன தோணுதோ, அதை செய்."
"ஆனா, அப்பா ஈஸ்வர் அங்கிளுக்கு வாக்கு கொடுத்திருக்காறே?"
"அவங்க ரெண்டு பெரும் வியாபாரிங்க. அவங்கள பொறுத்த வரை எல்லாமே வியாபாரம் தான். ஒத்துக்குறேன், உங்க அப்பா நிச்சயமாக மனசு கஷ்டப்படுவார் தான். ஆனா, அபியை கல்யாணம் பண்ணிக்கணும் அப்படிங்கிற எண்ணம் உன் மனசுல வந்ததுக்கப்புறம் நீ வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்குறது தப்பில்லையா? அப்புறம் உன்னுடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்னு நினைக்கிறாயா?"
யாழினி இல்லை என்று தலையசைத்தாள்.
"உனக்கு அபிய பிடிச்சிருக்கா?"
"ரொம்ப பிடிச்சிருக்கு மா. நான் அவரோட இருக்கும்போது, ரொம்ப பாதுகாப்பா உணரறேன். என்னமோ அவர் கூடவேயிருக்கணும்னு எனக்கு தோணுது".
மஹாவின் கண்கள் சட்டென்று கலங்கிப் போயின. இதற்கு பெயர்தான் உள்ளுணர்வு என்பதோ. இல்லாவிடில் இப்படி ஒரு எண்ணம் அவளுடைய மனதில் எப்படி தோன்றியிருக்கும்? அபியை பற்றிய எண்ணம் அவளின் ரத்தத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது, இது நிகழ்வது சகஜம் தானே?
"அப்படின்னா நீ எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அபி எல்லாத்தையும் சரி பண்ணிடுவான். ஆரம்பத்துல உங்க அப்பா வருத்தத்துல இருக்கத்தான் செய்வார். ஆனால் அபி கூட நீ சந்தோஷமா வாழுறத பார்க்கும்போது, அவர் மனசு நிச்சயமாக மாறும். அதனால், தயவு செய்து மற்றவர்களை பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் உன் கூட இருக்கேன். உனக்காக நான் என் புருஷனையும் எதிர்க்க தயாரா இருக்கேன்".
"தேங்க்யூ அம்மா" என்று மகாவை கட்டிக்கொண்டாள் யாழினி.
*ஏ பி ஃபேஷன்ஸ்*
அப்போதுதான் உள்ளே நுழைந்த அபிமன்யுவிற்கு, சுரேஷிடம் இருந்து அழைப்பு வந்தந்தது. அந்த அழைப்பிற்கு பதிலளித்து கொண்டே தனது அறையை நோக்கி நடந்தான் அபி.
"எப்படி இருக்கீங்க சுரேஷ்?"
"உங்களால, நான் சந்தோஷமா இருக்கேன். ஆனா இப்ப நான் உங்களுக்கு கால் பண்ணது ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி சொல்றதுக்காக".
"சொல்லுங்க"
"இன்னைக்கி நான் லக்ஷ்மி ஜூவல்லர்ஸ் ஓனர், மிஸ்டர் அசோக்கை பார்த்தேன். அவர் உங்க மாமா வீட்ல நடக்கப்போற ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி என்கிட்ட கேட்டாரு, நான் இன்னும் அவங்களோட பார்ட்னராக இருக்கிறதா நினைச்சுகிட்டு"
அபிமன்யுவிற்கு தெரியும் ஆதிகேசவன் எப்போதுமே லக்ஷ்மி ஜுவல்லர்ஸ்ஸில் தான் நகைகளை வாங்குவார் என்பது.
"என்ன பங்க்ஷன்?"
"கல்யாணமாய் இருக்கனும்னு நினைக்கிறேன். ஆதிகேசவன் தாலி செய்ய சொன்னதா கேள்விப்பட்டேன். ஒருவேளை அது அவர் பொண்ணோட கல்யாணமா இருக்கலாம். நீங்க என்னோட பிசினஸ்ஸை காப்பாத்தி கொடுத்தீங்க. அத எதுக்காக செஞ்சீங்கனும் எனக்கு தெரியும். நீங்க அதை இழந்திட வேண்டாம்னு நினைக்கிறேன்.
இது உங்களுக்கு மறு உதவி செய்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பா நான் நினைக்கிறேன்."
"இப்ப நீங்க எனக்கு செஞ்சிருக்க உதவிக்கு முன்னால, நான் செஞ்சது ஒண்ணுமே இல்ல".
"அதுக்காக நான் ரொம்ப சந்தோஷப்படறேன்".
அவர்கள் ஃபோனை துண்டித்தார்கள்.
அபிமன்யு தனது முஷ்டியை மடக்கி அருகில் இருந்த சுவற்றில் ஓங்கி ஒரு குத்து குத்தி தன்னுடைய கோபத்தை தணித்துக் கொள்ள முயன்றான். அதேநேரம் துப்பாக்கியில் இருந்து விடுபட்ட தோட்டாவை போல உள்ளே நுழைந்தான் அமர்.
அவன் எதுவும் கூறுவதற்கு முன்,
"ஆதி மாமா தாலி வாங்கியிருக்கிறார். சரியா?" என்றான் அபி
அதைக் கேட்டு பிரமித்து நின்றான் அமர். இவ்வளவு சீக்கிரம் அபிக்கு இந்த விஷயம் எப்படி தெரிய வந்தது?
"அதுமட்டுமில்ல, ஈஸ்வர் குடும்பம் எங்கேயோ போறாங்க. அதுல என்ன முக்கியமான ஒரு விஷயம்னா, கூடவே ஒரு ஐயரையும் கூட்டிட்டு போறாங்க. நம்ம தயாராகனும். நம்ம காலம் கடத்துர ஒவ்வொரு நிமிஷமும் நமக்கு பிரச்சனையை தரலாம்".
" நீ செய்ய வேண்டியது என்னனு நான் சொல்ல வேண்டியதில்லைனு நினைக்கிறேன்" என்றான் அபிமன்யு
"நான் அதை எல்லாம் ஏற்கனவே செஞ்சுட்டேன். என்னுடைய ஆளுங்க அவங்களை பின்தொடர்ந்து போய்கிட்டு இருக்காங்க. நீ செய்ய வேண்டியது மட்டும்தான் பாக்கி."
சரி என தலை அசைத்துவிட்டு, தனது அலுவலகத்தை விட்டு அமருடன் கிளம்பினான் அபிமன்யு.
*ஆதிகேசவன் இல்லம்*
யாழினியின் அறைக்கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தார் ஆதிகேசவன். அவர் முகத்தில் பதற்றம் கண்கூடாக தெரிந்தது.
"வாங்கப்பா" என்று அவரை வரவேற்றாள் யாழினி.
"நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும். நீ என்ன நம்பர இல்ல?"
ஆமாம் என்று தலையசைத்தாள் யாழினி.
"நான் எது செஞ்சாலும் உன்னுடைய நல்லதுக்காக தான் செய்வேன்னு, தெரியும் இல்ல?"
அதற்கு தலையை அசைக்காமல் அவரையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி. அவள் கையில் ஒரு கவரைக் கொடுத்தவர்,
"இந்த டிரஸ்ஸை மாத்திகிட்டு வாம்மா. எனக்காக செய்வதானே?" என்றார்.
சரி என்று தலையசைத்தாள் யாழினி. ஏதும் பேசாமல் ஆதிகேசவன் அவள் அறையை விட்டு வெளியேறினார்.
அவர் கொடுத்த அந்த கவருக்குள் ஒரு பட்டுப்புடவை இருந்ததைப் பார்த்தபோது யாழினிக்கு தூக்கி வாரிப்போட்டது.
மகாவின் நிலை சொல்லக் கூடியதாக இல்லை. இன்று தான், யாழினி, தன் மனதில் இருப்பதை வெளியிட்டாள். அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அபிமன்யு தெரிந்து கொள்வதற்கு முன், ஆதி இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்பதை அவள் நினைத்து பார்க்கவில்லை. ஆனால் அவர் உயிருடன் இருக்கும் வரை ஆதிகேசவன் எண்ணம் ஈடேற போவதில்லை. அவர் அபிக்கு போன் செய்ய எத்தனித்த போது, அவர் கையில் இருந்த போன் ஆதிகேசவனால் பறிக்கப்பட்டது.
"இதை செய்யணும்னு கனவில் கூட நினைக்காத மஹா, அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்" என எச்சரித்தார் ஆதி கேசவன்.
"என்னமோ, இப்ப மட்டும் நீங்க மனுஷனா இருக்கிற மாதிரி பேசுறீங்க?"
"உன்னோட பேச்சு எதுவும் இங்க எடுபட போறதில்ல. வாய மூடிக்கிட்டு போய் கிளம்பு"
"முடியாது. நான் இதை நான் நிச்சயமா நடக்க விடமாட்டேன். நீங்க ஒரு ஏமாத்துக்காரர். யாழினி உங்ககிட்ட டைம் வேணும்னு கேட்திருந்தா. நீங்க அவளுடைய அனுமதிய வாங்காம எப்படி இந்த மாதிரி ஒரு ஏற்பாடு செஞ்சிங்க? "
"ஏன்னா, நான் அவளோட அப்பா"
"நான் அவளோட அம்மா. எனக்கும் அவளுடைய வாழ்க்கைல முடிவெடுக்கும் உரிமை இருக்கு".
"நான் சொல்றத கவனமா கேளு. இன்னைக்கு ஏதாவது தப்பா போச்சுனா, நீ என்னை உயிரோடவே பார்க்க முடியாது".
வழக்கமாய் எல்லோரும் பயன்படுத்தும் கடைசி துருப்புச் சீட்டை பயன்படுத்தினார் ஆதிகேசவன். கிட்டத்தட்ட அவர் அதில் வெற்றியும் பெற்றார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், அவருக்கு அதிர்ச்சி ஊட்டும் வண்ணம் மகா தன்னை சமாளித்துக் கொண்டார்.
அவரை கோபத்தில் ஒரு தள்ளு தள்ளினார் மகா.
"உங்களோட மிரட்டலுக்கு நான் பயப்படுவேன்னு நினைச்சிங்களா? நீங்க அப்பாவா இருக்கிறதுக்கு தகுதியில்லாதவர். நீங்க ஒரு சுயநலவாதி. உங்களுக்கும் எங்க அண்ணனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? அவன் தன்னுடைய சந்தோஷத்துக்காக என் அண்ணிய ஏமாத்தினான். இப்ப நீங்களும் அதையே தான் செய்றீங்க. அபிமன்யுவ ஜெயிக்கணும்ங்கற ஒரே ஒரு காரணத்திற்காக, சொந்த பொண்ணோட வாழ்க்கையை அழிக்க நீங்க துணிஞ்சிட்டீங்க. இப்ப நான் சொல்லப்போறது சத்தியம். ஒருவேளை இந்தக் கல்யாணம் நடந்தா, என் கையால நானே உங்களை கொல்லுவேன். உங்களை கொன்னுட்டு, நானும் செத்துப் போவேன். என்னால அதை செய்ய முடியாதுனு நினைக்கிறீர்களா? ஒவ்வொரு நிமிஷமும், பெத்த பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டேன்னு குற்றவுணர்ச்சியில் வாழறதை விட, சாவது எவ்வளவோ மேல். என் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க, நான் சாகுறதுக்கும் தயங்க மாட்டேன்... உங்களை கொல்றதுக்கும் தயங்க மாட்டேன்... "
தரையில் தொப்பென்று அமர்ந்து, அழத் தொடங்கிய மகாவை, பார்த்து விக்கித்து நின்றார் ஆதிகேசவன்.
இந்த உலகில், எதிர்த்து நிற்க முடியாத, எதற்கும் துணிந்த, மிக பெரிய சக்தி என்பது, தன் பிள்ளையின் வாழ்வை காப்பாற்ற துணியும் தாய் தான் என்பதை நிரூபித்தார் மஹா.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top