Part 16

பாகம் 16

*எ பி ஃபேஷன்ஸ்*

மீட்டிங்கை முடித்துக்கொண்டு அமருடன் வெளியே வந்த அபியின் கால்கள் அசைய மறுத்தன,  எதிரில் நின்ற யாழினியை கண்டவுடன். அதுவும் கிரீஷுடன் அவள் நின்றிருந்தாள்.

அபியை பார்த்து அவள் கையசைக்க, மெலிதாய் தலையசைத்தான் அபி.

"ஹாய்"

"யாழினி, நீ இங்க என்ன பண்ற?  என்றான் நந்தா.

"நாங்க இந்த பக்கமா போனோம். அப்ப தான் கிரீஷ் சொன்னான்,  இது தான் ஏபி ஃபேஷன்ஸ்னு.  அதான் உள்ள வந்து உங்க எல்லாரையும் விசிட் பண்ணிட்டு போலாம்னு வந்தேன்".

"நீங்க ரெண்டு பேரும் எங்க கிளம்பிட்டீங்க?" கிரிஷ்  மீது தனது பார்வையை நிலைநிறுத்தி கேட்டான் அபி.

"நாங்க சினிமாவுக்கு போறோம்" சந்தோஷமாக சொன்னாள் யாழினி.

அமரின் கண்கள் அபியின் மடக்கிய முஷ்ட்டியின் மீதே இருந்தது.

"எப்படி இருக்க, அபி?  உன்ன பாத்து ரொம்ப நாளாச்சு?" என்று பல்லைக் காட்டிக்கொண்டு கேட்ட கிரீஷை  கோபமாக பார்த்தான் அபி.

அபிக்கு தெரியும் அவன் தங்களுக்கிடையில்,  நேற்று ஹோட்டல் ஒயிட் லோட்டஸில் நடந்த சந்திப்பை நினைவு கூறுகிறான் என்று.

"அது உன் நல்ல நேரம். அதுக்காக நீ சந்தோஷம் தான் படணும்" என்று எச்சரிக்கும் தொனியில் கூறிய அமரை,  யார் இவன்? என்பதைப் போல பார்த்தாள்  யாழினி.

"யாழினி, உனக்கு ராமாயணம் தெரியுமா? என்று சம்பந்தமில்லாமல் கேட்டான் கிரீஷ்.

"ராமாயணமா?  டிவியில பார்த்திருக்கேன்" என்றாள்  யாழினி.

"இவர் தான் அமர். அபியோட லக்ஷ்மணன். அபி கூட  நம்ம செஞ்ச தப்பை ஒருவேளை மன்னிச்சிடலாம். ஆனால் அமர்....  சான்சே இல்ல.  அமர் கிழிச்ச கோட்டை தாண்டி தான்,  நம்ம அபியை நெருங்க முடியும். ரொம்ப டேஞ்சரஸ் ஃபெலோ".

"பாரு, யாரு, யாருக்கு, யாரை அறிமுகப்படுத்தறதுனுன்னு ஒரு விவஸ்தை இல்லாம போயிடுச்சு" என்று வெறுப்பை காட்டினான் அமர்.

"ஆனா, அவன் சொன்னது எதுவும் பொய் இல்லயே" என்றான் அபி.

"நீ சொன்ன எதையும்,  நீ மறக்காம இருந்தா,  உனக்கு நல்லது." கிரீஷை  பார்த்து எச்சரிக்கை தொணியில் கூறிய  அமர் மேலும் தொடர்ந்தான்,

"ஆனா ஒன்னு. இப்பெல்லாம் நாங்க,  ஒன்னுத்துக்கும் உதவாத ராவணன்களை தான் சந்திச்சுகிட்டு இருக்கோம்" என்று கிரீஷை மட்டம் தட்டினான் அமர்.

"எதிரியை குறைச்சி  மதிப்பிடுறது,  எப்பவும் உன்னோட ஸ்டைல் இல்லயேபா. யாருக்கு தெரியும்,  உங்களால செய்ய முடியாத சில விஷயங்களை அந்த வேலைக்கு ஆகாத இராவணன் செய்வானோ என்னமோ... " யாழினியை கடை கண்ணால் பார்த்துகொண்டு சொன்னான் கிரீஷ்.

அமராலேயே,  அவனுடைய அலட்டலை பொறுக்க முடியவில்லை என்றால், அபியை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. உண்மையில் சொல்லப் போனால்,  அவர்கள் இருவரிடமிருந்தும் யாழினி தான் கிரீஷை காத்து கொண்டிருக்கிறாள். இல்லாவிட்டால்,  நமது ராம,  லட்சுமணன்  இருவருமாக சேர்ந்து,  அவன் தலையை உடைப்பதை பற்றி கவலைப்பட்டிருக்க மாட்டார்கள், அவன் உண்மையிலேயே இராவணனைப் போல் பத்து தலைகளைக் கொண்டிருந்திருந்தாலும்.

அவர்களுடைய கவனத்தை,  யாழினியின் குரல்,  அவள் பக்கம் திருப்பியது.

"ஐ அம் இம்ப்ரெஸ்ட் அபவுட் யூ, அமர்"

அழகான புன்னகையுடன் அமரை நோக்கி தன் கையை நீட்டினாள்  யாழினி. அபியின் அனுமதியை,  அவனது பார்வையின் மூலம் பெற்ற பின், அவளுடன் கைகுலுக்கினான்  அமர்.

"அபி,  நீயேன் அவங்களோட சினிமாவுக்கு போக கூடாது?" என்று அபியை பார்த்து கேட்டான் அமர்.

"ஆனா, அபிமன்யுவுக்கு அதுக்கெல்லாம் நேரம் இருக்குமான்னு தெரியலையே" என்றாள்  யாழினி.

"அபிய என்ன சொல்லி கூப்பிட்ட நீ?  அபிமன்யூவா?" கலகலவென சிரித்தான் கிரிஷ்.

"ஏன்?  ன்ன ஆச்சு?  என்றாள்  யாழினி.

"இந்த உலகத்திலேயே,  அவனை வித்தியாசமான ஒரு பேரை சொல்லி கூப்பிடுற ஒரே ஆளு நீ மட்டும் தான்". மறுபடியும் சிரித்தான் அவன்.

"அது என்னன்னு உனக்கு தெரியுமா?  ப்ளீஸ் எனக்கு சொல்லேன்." என்று ஆவலாய் கேட்டாள்  யாழினி

"வெள்ளக்காரதுரை" சொல்லிவிட்டு அவன் சிரிக்க,

"என்னது,  வெள்ளக்காரதுரையா?  நிஜமாவா?" என்று தானும் சிரித்தாள் யாழினி.

அபி தன்னை சுற்றி நடப்பது அனைத்தையும் மறந்து போனான். அவளின் கள்ளங்கபடமற்ற சிரிப்பை பார்த்து எத்தனை நாளாயிற்று? 

"வெள்ளக்கார துரைங்க, எல்லாத்தையும் அவங்க கண்ட்ரோலில் வச்சிருப்பாங்க,  இல்லையா?" என அபியை பார்த்தபடி நமுட்டு சிரிப்பு சிரித்தான் கிரீஷ்.

"ஓ அதுக்கு அது தான் அர்த்தமா?"

"யோசிச்சு பாரு,  எல்லாத்தையும் தன்னோட கண்ட்ரோல்ல வச்சிருக்கிற ஒருத்தன், நீ அவனை வெள்ளக்கார துரைன்னு கூப்பிடுறத பத்தி கவலை படலைனா, நீங்க எவ்வளவு  கிளோஸ்ஸா  இருந்திருக்கணும்?" ஒரு துஷ்ட சிரிப்பு சிரித்தான்.

"இப்ப எதுக்கு இவன்,  இங்க வந்து நம்ம  எல்லாரையும் வெறுப்பேத்திகிட்டு இருக்கான்?  அவன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்கான்?" என்று அபியின் காதுகளில் முணுமுணுத்தான் நந்தா.

அவர்களுக்கு மிக அருகில் நின்றுகொண்டிருந்த அமர் அதற்கு பதிலளித்தான்.

"அவன்,  அபிய வெறுப்பத்துறதா  நெனச்சிகிட்டு,  தனக்குத்தானே ஒரு கல்லறைய கட்டிகிட்டு இருக்கான்".

அதைக்கேட்டு களுக்கென்று சிரித்தான்  நந்தா

"யாழினி,  நமக்கு நேரம் ஆகுது. கிளம்பலாமா?" என மிடுக்காக கிரீஷ் கேட்க,

யாழினி, அபியை, *நீ வருகிறாயா?*  என்பதை போல் ஒரு பார்வை பார்த்தாள்.

"நானும் வரேன்" என்றான் அபி.

"நான் சொல்லல,  நீங்க ரெண்டு பேரும் ரொம்ப குளோஸ்னு"
என்றான் கிரீஷ்.

"உண்மையிலேயே என்ன தான் இவன் ஐடியா?  இவன் பாம்பா கயிறா?" என்று அமரின் காதுகளில் கேள்வி எழுப்பினான்  நந்தா.

"அவன் எதுவா வேணா இருந்துட்டு போகட்டும். நாம பாம்பையே அடிக்கத் தயாரா இருக்கும்போது,  கயிறை பத்தி ஏன் கவலைப் படணும்?" என்றான் அமர்.

"நீ சொல்றதும் சரி தான்" என்று ஆமோதித்தான் நந்தா.

"அப்ப நீங்க எங்க கூட வரீங்களா?  என்று அபியை பார்த்து கேள்வி எழுப்பினாள்  யாழினி. அதற்கு ஆமாம் என்பது போல தலையசைத்த அபி,  அமரைப் பார்க்க,  அவன் *நீ கிளம்பு,  நான் பாத்துக்கறேன்*  என்பதுபோல புன்னகை புரிந்தான்.

மூவரும் ஏ பி  ஃபேஷன்ஸை  விட்டு வெளியேறினர்.

"இந்த கிரிஷ்,  எந்த டேமேஜூம் இல்லாம திரும்பி வருவான்னு நீ நினைக்கிற?"  என்று கேட்டான் நந்தா.

அதைக்கேட்டு களுக்கென்று சிரித்த,  அமர்.

"நிச்சயமா சொல்றதுக்கு இல்ல" என்றான்.

"நீங்க, எங்களோட கிரீஷ்  கார்ல வரிங்களா,  இல்ல உங்க கார்ல வரீங்களா?"  என்றாள் யாழினி.

"நான் பெட்டு கூட கட்டுவேன். அவன் நம்ம கூட தான் வருவான்." என்றான் கிரிஷ் நக்கல் சிரிப்புடன்.

"நீ சொல்றது சரி தான். நான் உங்க கூட தான் வரப் போறேன்". என்று கிரீஷுக்கு பக்கத்தில்,  முன் இருக்கையில் அமர்ந்தான் அபி. யாழினி பின்னிருக்கையை  ஆக்கிரமித்து கொண்டாள்.

அப்போது ஆதிகேசவனிடமிருந்து கிரீஷுக்கு ஃபோன் வந்தது.

"சொல்லுங்க அங்கிள்.... ஆமா,  போய்க்கிட்டு இருக்கோம்.... இன்னும் பத்து நிமிஷத்துல போய்  சேர்ந்திடுவோம்... சரிங்க அங்கிள்... ஓகே. நீங்க யாழினிய  பத்தி கவலைப்படாதீங்க. தேங்க்யூ".

ஃபோனை துண்டித்தவன்,  ரியர் வியூ மிரர் மூலமாக யாழினியை பார்த்துக்கொண்டு சொன்னான்.

"அங்கிளும்,  ஆன்ட்டியும், பக்கத்துல ஒரு பங்ஷனுக்கு போறாங்களாம். அவங்க உன்னையும் என்னையும் வெளியவே டின்னர் முடிச்சிட்டு வர சொன்னாங்க." என்று கூறி அபியை கேலியாக பார்த்தான் கிரிஷ்.

விட்டால் அவனையே இன்று டின்னர் செய்து விடுவான் என்பது போல அவனை முறைத்தான் அபி.

அவர்கள் சினிமா அரங்கத்தை அடைந்த நேரம், லேசாய் இருட்ட ஆரம்பித்திருந்தது. அவர்களுக்கு ஓரமான இருக்கைகள் கிடைத்தன.

உள்ளே செல்ல முயன்ற யாழினியை, கையை பிடித்து தடுத்து நிறுத்தி, கிரீஷை  உள்ளே செல்ல சொன்னான்,  அபி.

"திஸ் இஸ் டூ மச். நான் தான் அங்கிள் கிட்ட பர்மிஷன் வாங்கி,  அவளை சினிமாவுக்கு கூட்டிட்டு வந்தேன். நீ என்னமோ  என்னை  ஓரம் கட்ட பாக்குற?" என கடுப்படித்தான் கிரிஷ்.

"கொஞ்ச நேர சந்தோஷத்துக்காக,  உயிரை விட்டுடாதே. உள்ள போ" என்று விரட்டினான் அபி.

முனுமுனுத்து கொண்டே உள்ளே சென்று கிரிஷ் அமர,  இருவருக்கும் மத்தியில் ஜம்மென்று அமர்ந்து கொண்டான் அபி.

திரை ஒளிர ஆரம்பித்து சிறிது நேரத்தில், கிரிஷுக்கு ஃபோன் வந்தது.

"என்னது?  எப்போ?  எங்க?  காட்... ஓகே,  நான் உடனே வரேன்."என்று ஃபோனை துண்டித்தான் கிரீஷ்.

"நாம உடனே கிளம்பணும். என் ஃப்ரெண்டுக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சு. ஐ அம் ரியலி சாரி" என்றான்.

"உன் ஃபிரண்டுக்கு தானே ஆக்சிடென்ட் ஆச்சு, அப்ப நீ போ." என்றான் அபி.

"என்ன?  நான் எப்படி உங்களை விட்டுட்டு போறது?"

"எப்படி வந்ததியோ, அப்படியே போ". என்றான் அபி

"யாழினி,  உனக்கு இங்க இருக்குறதுல ஒன்னும் பிரச்சனை இல்லயே?" என்றான் கிரிஷ்

"அவளுக்கு ஏன் கூட இருக்கிறதுல எந்த பிரச்சினையும் இருக்காது. நீ கிளம்பு" என்று பல்லை கடித்து கோபக் கனலை பாய்ச்சினான் அபி.

"ஆமா, எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல. நான் இந்த படத்தை பாத்துட்டு வரேன்".

பெருமூச்சு விட்டு அங்கிருந்து சென்றான் கிரிஷ்

"கடவுளே, கிரிஷ் ஃபிரண்ட்டுக்கு ஒன்னும் ஆகக்கூடாது. எப்படியாவது அவனை காப்பாத்திடுங்க" என்று கண்களை மூடி கடவுளை வேண்டினாள் யாழினி.

யாழினி எப்பொழுதுமே யாழினி தான்... மனதில் நினைத்துக்கொண்டான் அபி.

"நல்ல வேளை,  நீங்க வந்தீங்க. இல்லன்னா நான் இந்த படத்தை மிஸ் பண்ணியிருப்பேன்" என்று யாழினி சொல்ல,  ஆமாம் என்று தலையசைத்தான்  அபி.

கிரிஷ் சொன்னது சரி தான். அவன் தான் ஆதியிடம்  அனுமதி பெற்று,  யாழினியை  அழைத்து வந்தான். ஆனால் எதிர்பாராதவிதமாக அவளுடன் சந்தோஷமாக சினிமா பார்க்கப்போவது அபி.

அபிக்கு மனதில் ஒரே ஒரு ஆசை தான். யாழினி இந்த  சினிமாவைப் பற்றி எதுவும் கேட்டு விடக்கூடாது என்பதே. அவனுக்கு அந்த படத்தில் யாரெல்லாம் நடித்திருந்தார்கள் என்பது கூட தெரிந்திருக்கவில்லை. அதைப் பற்றியெல்லாம் யார் கவலைப் பட்டது, அவன் கண்முன்னே யாழினி விதவிதமான முகபாவனைகளை காட்டிக் கொண்டிருந்த போது?  அவன், அவள் முகத்தையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

தன் காரை அனுப்ப சொல்லி அமருக்கு குறுஞ்செய்தியை அனுப்பினான் அபிமன்யு.

அவர்கள் படம் முடிந்து,  திரையரங்கை விட்டு வெளியே வந்த போது, அமரிடம் இருந்து அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அவனுடைய கார்,  போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும்,  அவன் வந்து சேர சிறிது தாமதம் ஆகும் எனவும் அந்த குறுஞ்செய்தி சொன்னது. அவன் யாழினியிடம்  அதை பற்றி சொன்னான்.

"ஓ... நோ..." என்றாள்  யாழினி.

"ஓ.. எஸ்..." என்றான் அபி.

"கார் வர்ற வரைக்கும்,  ஒரு வாக் போகலாமா?  என்றாள் யாழினி.

"நாட் பேட்" என்று  புருவத்தை உயர்த்திக் கொண்டு சொன்னான் அபி.

அவர்கள் கூட்ட நெரிசலில்லிருந்து,  சற்று தூரம் தள்ளி வந்தார்கள்.

"நீங்க,  ஏன் இப்படி இருக்கீங்க?" என்ற யாழினியை,  முகத்தை சுருக்கி பார்த்துக்கொண்டு

"எப்படி?" என்றான் அபி.

"உங்கள பத்தி நான் என்னெல்லாம் கேட்டேனோ,  அதுக்கெல்லாம் நேரெதிரா இருக்கீங்க. அம்மா எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டாங்க."

"எல்லாத்தையுமா?"

"எல்லாத்தையும்" என்று கைகளை விரித்து அளவு காட்டினாள்  யாழினி.

"நெஜமாவா?  அப்படி அவங்க என்னை பத்தி உன்கிட்ட என்ன சொன்னாங்க?"

"நீங்க தான் எனக்கு எல்லாமுமா இருந்திங்கன்னு சொன்னாங்க"

ஒரு நிமிடம் அசையாமல் நின்ற அபி, இல்லை என்று தலையசைத்து,

"நாம ரெண்டு பேரும்,  ஒருத்தருக்கு ஒருத்தர், எல்லாமுமா இருந்தோம்" என்றான்.

"கரெக்ட். எனக்காக,  நீங்க நிறைய பேரை அடிச்சிருக்க்கீங்கன்னு கூட சொன்னாங்க.  யாருக்கோ ரத்தம் கூட வந்துச்சாமே?"

பொங்கி வந்த சிரிப்பை  அடக்கிக் கொண்டு சொன்னான் அபி,
"அந்த ஒருத்தன் வேற யாரும் இல்ல,  கிரிஷ் தான்."

"என்னது?  உண்மையாவா? ஆனா ஏன்?" அதிர்ச்சியாய் கேட்டாள் யாழினி.

"அவனுக்கு,  உன் கூட ஃப்ரெண்டா இருக்கணும்னு ஆசை. ஆனா,  உனக்கு என்னை தவிர வேற யாரையும் பிடிக்காது. அதனால கடுப்பாகி, உன்னை சீண்டிக்கிட்டே இருந்தான். அப்படித்தான் ஒரு நாள் உன் முடியை பிடிச்சி இழுத்த போது அவன் வாயில் இரத்தம் வந்துருச்சு".

"என் முடியை பிடிச்சி இழுத்தா,  அவன் வாயில எப்படி ரத்தம் வரும்?  என்று புரியாதவளாய் கேட்டாள் யாழினி

"கண்டிப்பா வருமே... யாராவது தைரியம் வந்து உன்னை தொடும் போது,  நான் அங்க இருந்தா,  அடுத்த நிமிஷம் என் கை அவங்க  முகத்தைப் பார்த்து ஒரு குத்து குத்தும் இல்லயா?" என்று சாதாரணமாக கேட்டான் அபி.

"நீங்க சொல்றது உண்மையா?  ஆனா,  அப்பா,  நானும் அவனும் ரொம்ப பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்னு  சொன்னாரே?"

"ஒருவேளை நீயும் அவனும் ஃபிரண்டா இருக்கணும்னு அவர்  நினச்சிருக்கலாம்"

"அதுமட்டுமில்லை,  அவர் என்னோட கல்யாணத்துக்கு காரணமா சொன்னதே அவனோட ஃப்ரெண்ட்ஷிப்பைத் தான்".

"அப்படியா?  அப்படி என்ன சொன்னார் அவர்?"

"நான் கிரீஷைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா,  என்னோட நினைவு திரும்பி வந்தா கூட,  நான் அவனோட சந்தோஷமா இருப்பேன்னு சொன்னார்".

அதைக்கேட்டு வாயைப் பிளந்தான் அபி. அடுத்த நிமிடம் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.  அவனை புரியாதவளாய் பார்த்துக் கொண்டு நின்றாள் யாழினி.

"ஒருவேளை உன்னோட நினைவு திரும்ப வந்தா,  இந்த நாட்டை விட்டு ஓடுற  முதல் ஆள்  கிரிஷா தான் இருப்பான்"

"ஆனா ஏன்? " நகத்தைக் கடித்துக்கொண்டு கேட்டாள்  யாழினி.

"உயிர காப்பாத்திக்க தான். வேற எதுக்கு?  பொய் சொல்லி உன்கூட ஃப்ரெண்டா இருந்ததுக்கே,  நீ அவனை கொன்னுடுவ.  கல்யாணத்தை பத்தி கேக்கவே வேணாம் "

யாழினி அவன் சிரிப்பதை ஒரு சிறு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன்  சிரிக்கும் போது மிக அழகாக இருந்தான். அவன் இப்படி சிரிப்பதையும்,  அவள் முதல் தடவையாக பார்கிறாள்.  அதை புரிந்துகொண்டு தனது சிரிப்பை அடக்கினான் அபி.

"ஒரு வேளை,  நம்ம ரெண்டு பேரும் காதலிச்சிருந்தா,  நல்லா இருந்திருக்கும் இல்ல?" என்று எதிர்பாராத கேள்வியை, அவன் மீது,  குண்டென  தூக்கி போட்டாள் யாழினி.

அவளுக்கு பதில் சொல்ல முடியாதவனாய் அதிர்ச்சியில் உறைந்து நின்றான் அபி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top