Part 13

பாகம் 13

யாழினி, காரில் அமர்ந்து கொண்டு சீட் பெல்ட்டால் தன்னைப் பிணைத்துக் கொண்டாள்.

"என் மேல கோவமா இருக்கீங்களா?  என்றாள்  அப்பாவியாக.

"நான் ஏன் உன் மேல கோவமா இருக்கணும்?" என்றான் வெடுக்கென்று.

"எனக்கு தெரியும். நீங்க மேல கோவமா இருக்கீங்க. உங்களோட முகம் மாறிப் போனதை  நான் பார்த்தேன். "

"என் முகம் மாறிப் போனதை பத்தி நீ ஏன் கவலைப்படுறே?" என்றான் விரைப்பாக.

"நிச்சயமா நான் கவலைப்படுகிறேன். ஏன்னா,  நம்ம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ்".

"அதனால்தான் உன் கல்யாணத்தை பத்தி சொல்லாம,  ஜாலியா ஏழுகல் விளையாட ஆரம்பிச்சியா?  இந்த விஷத்தை விட,  விளையாட்டு ரொம்ப முக்கியமா உனக்கு? "
கோவமாக கேட்டான்.

"ஆமா. முக்கியம் தான். இந்த கல்யாணம் ரொம்ப முக்கியம்னு நான் நினைக்கல. நீங்க என்னமோ கல்யாணத்துக்கு தேதியே குறிச்ச மாதிரி இவ்ளோ கோவபடுறீங்க?"

"அப்படிலாம் ஒன்னும் நடக்காது. புரிஞ்சுதா உனக்கு? "

"ஆனா ஏன்? "

"ஏன்னா,  அது அப்படித்தான்."

"கவலைப்படாதீங்க. நான் இனிமே எல்லாத்தையும் உங்க கிட்ட சொல்றேன்".

அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல்,  சாலையின் மீது கவனத்தை செலுத்தினான் அபி. அவளை ஆதிகேசவன் இல்லத்தில் இறக்கிவிட்டு,  தான் சேர வேண்டிய இடம் நோக்கிப் பயணித்தான்.

யாழினி வீட்டின் உள்ளே நுழைந்தபோது,  ஆதிகேசவன்னும்,  மஹாவும்,  வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர். ஆதிகேசவன் அறிவார்,  அவள் எங்கிருந்து வருகிறாள் என்பதை. அவளுடைய அபரிமிதமான சந்தோஷமே,  அவருக்கு அதை சொல்லியது.

"நீ ரொம்ப சந்தோஷமா இருக்குற மாதிரி தெரியுது" என்று வேண்டுமென்றே கேட்டாள் மகா.

"நான் ரொம்ப சந்தோஷமா தான் இருக்கேன். உங்களுக்கு தெரியுமா,  நந்தாவும் லாவண்யாவும் என்னை  வயிறு வலிக்க சிரிக்க வச்சுட்டாங்க. ஏழுகல்  விளையாட்டை சாக்கா வச்சு,  நந்தாவும்,  லாவண்யாவும்  மாறி மாறி அடிச்சுகிட்டாங்க. என்னால சிரிப்பை அடக்ககவே முடியல." அவள் சிரிப்பை அடக்க முடியாதவளாய் சொல்லி முடித்தாள்.

"யாரோட டீம் ஜெயிச்சது? "

"லேடிஸ் டீம் தான் ".

"நிஜமாவா?"

"ரொம்ப சந்தோஷ பட ஒன்னுமில்லை. அபி தான் எங்கள ஜெயிக்க வைச்சார்."

"அதை சொல்லு முதல்ல." மஹாவின் முகத்தில் பெருமிதம் தெரிந்தது.

"உங்களுக்கு தெரியுமா,  என் மேல ஒரு அடி கூட விழாம,  அபிதான் என்னை காப்பாத்தினார். சோ ஸ்வீட்... எனக்கு அவர ரொம்ப பிடிச்சிருக்கு."

அதை கேட்ட ஆதிகேசவன் முகம் இருளடைந்தது என்று சொல்ல வேண்டியதில்லை. ஆனால்,  மகாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை.

"ஆனா,  என்னோட கல்யாண விஷயத்தை கேள்விப்பட்ட உடனே,  அவர்  முகம் எப்படி தெரியுமா மாறிச்சு? அவருக்கு வந்ததே ஒரு  கோவம்... அப்பப்பா  அளவே இல்லை". என கண்கள் விரிய சொன்னாள் யாழினி.

"உன் கல்யாண விஷயத்தை பத்தி,  நீ அவன் கிட்ட சொன்னியா? "என கேட்டாள் மஹா.

"இல்லம்மா, நான் எதுவுமே சொல்லல. சொல்லப் போனா விளையாட்டு ஸ்வாரஸ்யத்துல,  நான் அத பத்தி  மறந்தே போயிட்டேன். ஆனா அத பத்தி அபிக்கு எப்படி தெரியும்னு எனக்கு தெரியல"

அதுகேட்டு ஆதிகேசவன் பதட்டம் அடைந்தார். தனது போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நழுவி சென்றார்.

யாழினி  தங்களது விளையாட்டை பற்றி மஹாவிடம் சந்தோஷமாக விவரித்து கூறிக் கொண்டே இருந்தாள்.

ஆதிகேசவன் அவசரமாக போன் செய்தார்.

"எங்க இருக்க....?  தனியாவா இருக்க.....?  தனியா எங்கேயும் போகாதே..... சொல்லாம கொள்ளாம எங்கேயும் போய் சுத்தாதே... நான் என்ன சொல்றேனோ அதை மட்டும் செய்"

அழைப்பை துண்டித்துவிட்டு திரும்பியவர், மகா நிற்பதைப் பார்த்தார்.

"கிரீஷுக்கு எச்சரிக்கை பண்ணியாச்சா?"

எனக்கேட்ட மகாவிடம் பதிலேதும் சொல்லாமல் அங்கிருந்து சென்றார் ஆதிகேசவன்.

"எத்தனை நாளைக்கு நீங்க இந்த கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுறீங்கன்னு நான் பார்க்கிறேன். "
என தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள் மகா.

*ஹோட்டல் ஒயிட் லோட்டஸ்*

கிரீஷ்,  தன்னுடைய நண்பனின் பிறந்த நாளை கொண்டாட வந்திருந்தான்.  ஆதிகேசவனுடன் பேசி முடித்து,  அழைப்பை துண்டித்தவனுக்கு,  பின்னால் யாரோ நிற்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. அவன் திரும்பியபோது,  அபி தனக்கு வெகு அருகில் நின்று கொண்டிருப்பதைக் கண்டு பின்வாங்கினான். அவன் சுதாரித்துக் கொள்வதற்கு,  முன்னால் அபி அவனுடைய சட்டை காலரை பற்றினான்.

"வாழனும்னு ஆசை இல்லையா உனக்கு?  ஜாக்கிரதையா நடந்துக்கோ. உயிரை விட்டுடாத.  உனக்கு, வாங்கின அடி மறந்து போச்சுனு நெனைக்கிறேன்? "

ஆவேசமாக கத்தினான்அபி.

கிரீஷ் தனது கைக்கடிகாரத்தை பார்த்துக்கொண்டு பேசினான்.

"வாவ்... 24 மணி நேரம் கூட முடியல,  அதுக்குள்ள உனக்கு விஷயம் தெரிய வந்தாச்சா? (பெருமூச்சு விட்டான் )  நான் எப்படி உங்கிட்ட வாங்கின அடிய மறக்க முடியும்,  அபி?"

அவன் அபியிடம் உதைபட்ட தனது  உதட்டு ஓரத்தைக் தொட்டு சிரித்தான்.

"உனக்கு நான் எச்சரிக்கை பண்றேன். யாழினிகிட்டயிருந்து விலகி போ.  இல்ல... உன்னை  கொல்லக் கூட நான் தயங்க மாட்டேன்".

"என்னமோ நான் போய் அவகிட்ட என் காதலை சொன்ன மாதிரி குதிக்கிற?  உன் மாமா தான் என்னை அவள கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டாரு. எங்க அப்பா அதுக்கு ஒத்துக்கிட்டாரு. உனக்கு வேணும்னா,  நீ போய் அவங்களை முதல்ல  கொல்லு. "

"உனக்கு நல்லா தெரியும் யாழினிக்கும் எனக்கும் நடுவில் இருக்கிற உறவு என்னென்னு"

"அப்ப அந்த உறவை பத்தி நீயே  அவகிட்ட சொல்லிடு.  உன்னை சொல்ல கூடாதுனு யாரு தடுக்கப் போறா?  அவள விட,  ஒரு சத்தியம்,  அவ்வளவு முக்கியமா?" சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு,  கிண்டலாக கேட்டான் கிரீஷ்.

அவன் சட்டை காலரை பற்றியிருந்த அபியின் கரங்கள் தளர்வடைந்து.

"அவ எனக்கு எவ்வளவு முக்கியம்ன்னு   நீ  எனக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை "

"அவ உனக்கு எவ்வளவு முக்கியம்ன்னு  என்னைவிட யாருக்குபா தெரியும்?"
என்றான் நக்கலாக.

"தெரிஞ்சிருந்தும் உனக்கு அவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது? "

"சரி,  நீ தான் போய் தைரியமா சொல்லேன். எதுக்காக அவள உண்மைகிட்ட இருந்து தூரமா வச்சிருக்கே?  பிரச்சனைக்கு தீர்வ உன்கிட்டயே வச்சுக்கிட்டு,  எங்கிட்ட வந்து ஏன் சண்டை போட்டுகிட்டு இருக்க?  இது வெறும் அஞ்சு நிமிஷ விஷயம். நீ நினைச்சா இப்பவே இத முடிச்சிடலாம். அதை விட்டுட்டு எதுக்கு தேவையில்லாத பிரச்சனை பண்ணிட்டு இருக்க?  உன்னால முடிஞ்சா,  நீ அவ கிட்ட உண்மைய சொல்லு. நான் உன்னை தடுக்கல. ஆனா அத நான் செய்வேன்னு எதிர்பார்க்காதே. ஏன்னா இது உங்க மாமா முடிவு பண்ண கல்யாணம்."

"உன்னோட நாள எண்ணிக்கோ. உனக்கு கெட்ட காலம் ஆரம்பமாயிடுச்சி. நான் எப்பவுமே உன்னோட பாதையில் குறுக்கிட்டதில்ல. ஆனா நீயும் உங்க அப்பாவும்,  என்னை தொட்டு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க. அதுக்கான பலனை அனுபவிக்கத்தான் போறீங்க. "

"உனக்கு நிறைய டைம் இருக்குபா,  எங்க கல்யாண நாள் வரைக்கும் நீ முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கலாம்."

"கல்யாணமா?  அது எப்பவுமே நடக்காது. யாழினி பக்கத்துல உட்கார,  என்னை தவிர ஒரு ஆம்பள இன்னும் பிறக்கல.  அப்படி ஒருத்தன் முயற்சி பண்ணினா,  அவன் இந்த உலகத்தில இருக்க மாட்டான். "

"ஒரு நாள் நீ எங்கள ஏத்துக்க தான் போற. அது நடக்கத்தான் போகுது."

அபி அவன் முஷ்டியை மடக்கிக் அவனை குத்த முயன்றன்.

"ஹாய் யாழினி" என கிரீஷ் சொல்லவும்,

அபியின் முகம் ஒரு நொடியில் மாறிப்போனது. அவன் தன்னை சுதாரித்துக் கொண்டு திரும்பி பார்த்தபோது அங்கு யாழினி இருக்கவில்லை.

கலகலவென சிரித்தான் கிரீஷ்.

"வாழ்கைச் சக்கரம் எப்படி சுத்துதது பார்த்தியா அபி?  எந்த பொண்ணுக்காக என்னோட மூஞ்ச ஒடச்சியோ,  அதே பொண்ணு,  இன்னைக்கு உன் குத்துல இருந்து என்னை காப்பாத்தியிருக்கா. இன்ட்ரஸ்டிங்கா இல்ல?  ஜஸ்ட் ஒரு சாம்பிள்தான். உன்னோட இந்த குத்தாட்டம் போடுற குணத்தை பற்றி அவளுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு கொஞ்சம் யோசிச்சு பாரு. ரவுடித்தனம் பண்ணாம,  அவ கிட்ட நல்ல பேர் எடுக்க முயற்சி பண்ணு".

அவன் தனது சட்டையை சரி செய்து கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். கோபத்தின் உச்சியில்  அபியை நிறுத்திவிட்டு.

*சாந்தி நிலையம்*

வரவேற்பறையில் இருந்த எவருக்கும் அபியை தடுத்து நிறுத்த தைரியம் இருக்கவில்லை. அவனுடைய முகமே சொன்னது அவன் என்ன  மனநிலையில் இருக்கிறான் என்பதை. அவன் புயலென தனது அறை  புகுந்து,  தனது நண்பனான அமரை போனில் அழைத்தான்.

"அமர்,  எனக்கு ஈஸ்வர்,  அவனோட குடும்பத்தை பத்தி அத்தனை டீடைல்சும் வேணும்...இன்ச் பை இன்ச்... எதுவுமே விட்டுப் போகக்கூடாது. என்ன வேணா செஞ்சுக்கோ,  எவ்வளவு பணம் வேணாலும் செலவு பண்ணிக்கோ,  எத்தனை பேரை வேணாலும் யூஸ் பண்ணிக்கோ,  தட்ஸ் இட்"

போனை கட் செய்துவிட்டு நிமிர்ந்தவன் அஞ்சலி தன் எதிரில் நிற்பதைக் கண்டான்.  அவன்,  கலங்கிய தன்  கண்களை காட்ட விரும்பாதவனாய் முதுகை காட்டி திரும்பிக்கொண்டு,

"அக்கா ப்ளீஸ் கொஞ்ச நேரம் என்னை  தனியா விடுங்க" என்றான்.

"உன் பக்கத்துல,  உனக்கு அவசியமா ஒருத்தர் தேவைப்படும் போது நான் எப்படி உன்னை விட்டுட்டு போறது, சின்னா?"

என்று சொல்லி தோளைத் தொட்டவளை, தன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாதவனாய்,  அணைத்துக்கொண்டான்.

"அந்த ஒருத்தி, என்னை  மறந்துட்டாக்கா. வாழ்க்கையில ஒவ்வொரு நிமிஷமும் என் கூடவே இருந்தவ,  என்னை  கையாலாகாதவனா ஆக்கிட்டு,  என்னை சுத்தமா மறந்துடாக்கா. "

அஞ்சலியின்  கண்ணில் கண்ணீர் பெருகியது, தன் சின்னாவை இப்படி பலவீனமாய் பார்த்தபோது.

"நம்பிக்கையை இழந்துடாதே சின்னா. ஒரு விஷயம் நாம நினைச்ச மாதிரி நடக்கலைன்னா,  அது வேறு ஒரு விதத்தில் இன்னும் சிறப்பா நடக்கும்னு நம்பு. நிச்சயமாக நடக்கும். "

"அத நானும் நடத்தாம  விடமாட்டேன் கா".

அஞ்சலி தலையசைத்து சிரித்தாள்.

"அவ ஏன் அப்படி செஞ்சாக்கா?  அவள் எனக்காக காத்திருந்து இருக்கக் கூடாதா?  அப்படி என்ன அவசரம்?  அவ என்னை முழுசா நம்பினா...அப்பறம் என்ன அவசரம்?  கொஞ்ச நேரம் அமைதியா இருந்திருக்க கூடாதா? " என்றான் வேதனையாக.

"அது அப்படி இல்ல சின்னா. அவளுக்கு அவசரம் தான்,  உன்கிட்ட சீக்கிரம் வந்து சேர்ந்திடனும்னு. அவ உன்னை இழக்க விரும்பலை.  அதனாலதான் அவசரமா அப்படி ஒரு முடிவு எடுத்துட்டா."

அக்கா தம்பி இருவரும் மறக்கமுடியாத அவர்களுடைய கடந்த காலத்தில் மூழ்கினார்கள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top