9.அவளுடன்
நிவீஷ் பேசிவிட்டு நிமிர்ந்து பார்க்க, சங்கர் பயத்தில் முகம் வெளிறி நின்றிருந்தார். அவரது பார்வை வாசலில் பதிந்திருந்தது.
என்னவெனப் புரியாமல் அதைத் தொடர்ந்து பார்த்தபோது, அவனது மூச்சும் ஒரு கணம் நின்றது.
வாசலில் ப்ரகதி நின்றிருந்தாள்.
உதவியாளர் ஒருவர் அவனுக்கான சாப்பாட்டை ஒரு தட்டில் ஏந்தி அவளருகில் நின்றிருந்தார். அவர் முகமும் பயத்தில் வெளிறியிருந்தது. ப்ரகதியைப் பற்றி ஐந்து நிமிடம் அறிந்த சங்கரே பயந்திருந்தார், பின் ஆறு மாதம் பார்த்த உதவியாளர் எப்படி பயப்படாமல் இருப்பார்!
ப்ரகதியின் முகம் சலனமற்று இருந்தது. உதவியாளரை உள்ளே போகுமாறு கண்ணால் சைகை காட்டிவிட்டு, அவள் அங்கேயே நின்றாள். அவரும் அவசரமாக உள்ளே சென்று கட்டில் அருகில் இருந்த மேசையை இழுத்துச் சரிசெய்து, உணவுத் தட்டை அதில் வைத்துவிட்டு வேகவேகமாக வெளியே நகர்ந்தார்.
சங்கர் அவளையும் அவனையும் மாறிமாறிப் பார்த்தார். ஒரு கனத்த மௌனம் அறையில் நிலவியது.
அவளே அதைக் கலைத்தாள்.
"நான் ஒண்ணும் வேலை வெட்டி இல்லாம இங்க உங்ககூட இல்ல, மிஸ்டர் நிவீஷ். நான் இந்த ஹாஸ்பிடல்ல சீனியர் சர்ஜிகல் ரெசிடெண்ட். என்னோட ஒரு சர்ஜரி இன்னும் முடிக்காம இருக்கு. ஏகப்பட்ட போஸ்ட்-ஆப் பேஷண்ட்ஸ் இருக்காங்க. என்னோட ஃப்ரெண்டுக்காக மட்டும்தான் இங்க வந்தேன். உங்களைத் தெரிஞ்சுக்காதது ஒண்ணும் பெரிய கொலைக் குத்தம் கிடையாது, உலகத்தில இருக்கறதுக்கே எனக்குத் தகுதியில்லாமப் போறதுக்கு"
அவளது ஒவ்வொரு சொல்லும் தீப்பிழம்பாய்ச் சுட்டன. சொல்லிவிட்டு ஒரு நொடி கூட நில்லாமல் கதவை அடித்து சாத்திவிட்டு புயலாய் நடந்தாள் அவள். லிஃப்ட்டில் ஏறி, தன்னறைக்கு வரும்வரை கண்ணீர் கண்ணைவிட்டு வெளியேறாமல் தடுக்கக் கண்களை இறுக்க மூடிக்கொண்டாள். ஆனால் அது வேறு பல நினைவுகளை நெஞ்சின் அடியாழத்தில் இருந்து மீட்டுக் கொண்டுவந்தது.
"நீயெல்லாம் வாழவே தகுதி இல்லாதவள். தயவுசெய்து எங்கயாச்சும் போய் செத்துடு"
ஆவேசமாகத் தன்னறைக்கு வந்தவள் அழத் தொடங்கிய கண்களை அழுத்தித் துடைத்து வலிக்கச் செய்தாள். தன் வெள்ளைக் கோட்டின் காலரால் கன்னத்தில் வழிந்த ஈரத்தை சுவடில்லாமல் அழித்தாள். பிடிவாதமாக அழமாட்டேன் என்று மூச்சை இழுத்துப் பிடித்தாள். இரண்டு நிமிடங்களில் அழுகை தோற்றுப்போய் மறைந்தது. நினைவுகளும் கிளம்பியதுபோலவே மறுபடி அடியில் சென்று மறைந்தன.
தன் உதவியாளரை அழைத்து, "அடுத்த சர்ஜரிக்கு ரெடி பண்ணிட்டு கூப்டுங்க" என்றாள் அவள்.
--------------
அவள் சென்ற நொடியில் இருந்து சிலைபோல அமர்ந்திருந்தான் நிவீஷ். சங்கர் வேகமாக அவள் பின்னால் செல்ல முயன்று தோற்றார். அவள் எந்தப் பக்கம் போனாள் என அவரால் கண்டறிய முடியவில்லை. தொங்கிய தலையுடன் சோர்வாக திரும்பினார். நிவீஷ் உதட்டைக் கடித்தான்.
"எல்லாத்தையும் கேட்டுட்டா...ங்களா சங்கர்?"
"அ...அப்டிதான் நினைக்கறேன் சார்"
"இருக்கட்டுமே.. நான் ஒண்ணும் தப்பாப் பேசலையே.. என்னால ஜீரணிக்க முடியாத ஆற்றாமை.. அது அவள--அவங்களை பாதிச்சா நான் எதுவும் பண்ண முடியாது "
அவன் அவருக்குக் கூறாமல் தனக்குத் தானே கூறிக் கொள்வது போல் தெரிந்தது.
ஒன்றும் பேசாமல் நின்றிருந்தார் சங்கர்.
"நாம வேற ஹாஸ்பிடல் பாக்கலாம் சங்கர். மறுபடியும் என்னால அந்த டாக்டரை..."
அவனது கர்வம் அவனை மேலும் பேசவிடாமல் தடுத்தது.
'அவளைப் பார்த்து பயப்படுகிறாயா நீ? யார் அவள், நீ எதற்காக அவளை மீண்டும் பார்க்கத் தயங்கவேண்டும்? நீ நாயகன். நீ நட்சத்திர நடிகன். உனது பிம்பம் உன்னைவிடப் பெரியது. உன் வாழ்வில் எத்தனை பேரை சட்டென்று பேசி மூக்கறுபடச் செய்திருப்பாய்... எத்தனை பேரை ஒரு பார்வையால் உன் அருகில் வர விடாமல் செய்திருப்பாய்... நிவீஷ்... நீயா ஒரு டாக்டரைப் பார்த்து பயப்படுகிறாய்?'
சங்கர் ஒரு யோசனை சொன்னார்.
"அவங்க கிட்ட சாரி கேக்கலாம் சார்"
சட்டென அவன் முறைக்க, அவர் பேச்சை மாற்றினார், "..அ..நான் சாரி கேக்கறேன் சார்.. அவங்க மனசில ஒண்ணும் வச்சிக்க மாட்டாங்க...ன்னு நெனக்கிறேன்"
" வேணாம்.. நீங்க டீனை வர சொல்லுங்க. நான் அவர்கிட்ட பேசணும்"
"அது-"
"சொன்னதை செய்யுங்க சங்கர்"
அவர் ஒரு பெருமூச்சுடன் நடந்தார். ஒரு செவிலியரிடம் மருத்துவமனை முதல்வரின் அறையைக் கேட்டறிந்து, கட்டிடத்தின் பத்தாவது மாடியில் இருந்த அவரது அறையில் அவரைச் சந்தித்தார் சங்கர்.
டீன் மேத்தா.
வடநாட்டில் பிறந்திருந்தாலும் பதினைந்து வருடமாகத் தமிழ்நாட்டில் இருப்பதால் நன்றாகவே தமிழ் பேசுவார். அதில் ஒட்டியிருக்கும் மார்வாரிச் சாயலுக்கு ரசிகர்கள் அதிகம். லிவ்வெல் மருத்துவக் குழுமத்தின் ஏக சர்வ முதலாளி. அதன் சென்னைக் கிளையின் முதல்வர். முதுநிலை மருத்துவர், பதினைந்து வருட அனுபவம். ஆயினும் இப்போது மருத்துவப் பயிற்சி செய்வதில்லை, மருத்துவமனையைக் கட்டிக் காப்பதிலேயே அவரது நேரம் செலவிடப்பட்டதால்.
அவரது ஆசை மகள் பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கிறாள். அவளிடம் இதைச் சொன்னால் நம்பவே மாட்டாள்! ஆம்.. அவளது கனவு நாயகன் நிவீஷ் அவளது தந்தையின் தலைமையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான் அல்லவா!
அவளிடம் கைபேசியில் பேசிவிட்டுத் தான் சங்கரை உள்ளே வரச்சொன்னார் மேத்தா.
"வணக்கம் சார். நான் நடிகர் நிவீஷோட மேனேஜர், என் பேர் சங்கர்"
"வணக்கம். உட்காருங்க சார். நிவீஷ் சார் எங்க ஹாஸ்பிடலுக்கு வந்ததை எங்களால நம்ப முடியல. In fact, என் பொண்ணு அவரோட பெரிய ஃபேன்... அவளால நம்பவே முடியல.."
"ரொம்ப சந்தோஷம் சார். நிவீஷ் உங்களைப் பார்க்கணும்னு சொன்னார்.. அதான்.."
"ஓ.. no problem. நான் ரவுண்ட்ஸ் போகக் கிளம்பிட்டேன். வாங்க ஃபர்ஸ்ட் அவரையே போய்ப் பார்க்கலாம் "
சங்கரையும் அழைத்துக்கொண்டு அவனிருந்த அறைக்கு விரைந்தார் மேத்தா. அவன் இன்னும் அவசர சிகிக்கை முன்னறையிலேயே இருப்பதைக் கண்டு துணுக்குற்றார் அவர். அருகிலிருந்த செவிலியரை கடுமையாக அழைத்தார்.
"ராஜூ... ஏன் சாரை இன்னும் இந்த ரூம்லயே வச்சிருக்கீங்க? நான்தான் executive room க்கு மாத்த பர்மிஷன் குடுத்துட்டனே?" என்றவர், அவன் அதற்காகத்தான் அழைத்திருப்பான் என நினைத்துக்கொண்டு,
"டெரிப்ளி ஸாரி மிஸ்டர் நிவீஷ்... உங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு புரியுது. பட் நீங்க இதுமாதிரி எதுவா இருந்தாலும் என்கிட்டயே கேக்கலாம். இதோ உடனே மாத்திடுவாங்க" என மன்னிப்பு வேண்டத் தொடங்கினார்.
நிவீஷ் சலிப்பாகத் தடுத்தான்.
"அதில்லை சார்.."
"வேற எதாவது பிரச்சனையா?"
"ஆமா. எனக்கு assign பண்ணின டாக்டர் என்னை ஒழுங்கா அட்டெண்ட் பண்ணல சார். அதான் உங்ககிட்ட பேசலான்னு கூப்டேன்"
மேத்தா அதிசயித்தார்.
"யாரு, டாக்டர் ப்ரகதியா? She never behaves like that. She's a gem of a surgeon. She is-"
"Cut the crap, sir. அவங்களுக்கு என்னைப் பிடிக்கல..அதனாலதான் இப்டி நடந்துக்கறாங்க."
அவன் பேசப்பேச சங்கர் அதிர்ந்துபோய் அவனை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
'ஏன் இவர் இப்படியெல்லாம் பேசுகிறார்...அந்த மருத்துவர் இவரைப் பிடிக்கவில்லை என எதுவுமே சொல்லவில்லையே! ஏன், அவர்களுக்கு இவர் யாரென்றே தெரியாதே! அபாண்டமாக அவர்மீது குற்றம் சொல்கிறாரே..?'
டீன் மேத்தா கூட அதிர்ச்சியுடன் நின்றார். உடனே தன் கைபேசியை எடுத்தார்.
"Pragathi, Dr. Mehtha here. Could you please come to Critical care now?"
"சார்.. நான் ஆபரேஷன் தியேட்டருக்குள்ள போய்ட்டிருக்கேன். என்னோட சர்ஜரி ஒண்ணு பென்டிங். நான் ஒரு மணி நேரத்தில வர்றேன்."
"ஓகே, டாக்டர். Take your time, but don't forget. You owe me an explanation."
"Sure, sir."
கைபேசியை வைத்துவிட்டு அவன்புறம் திரும்பியவர்,
"அவங்க ஒருமணி நேரத்தில வருவாங்க. உங்க கேஸ் ஷீட்டை நான் படிச்சிட்டேன். உங்க ஆப்ஷனை நீங்க இன்னும் சொல்லவே இல்லையே?"
"நான்... ligament replacement surgery பண்ணிக்கறேன்.."
"வெல்... டாக்டர் ப்ரகதி தான் அதில எக்ஸ்பர்ட்."
மேத்தா சலமின்றிச் சொன்னார்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top