8.அவளால்
"வணக்கம் டாக்டர்"
நிவீஷின் அருகில் மென்முறுவலுடன் நின்றிருந்த சங்கரை ஆச்சரியமாகப் பார்த்தாள் ப்ரகதி.
"அட, டிஸ்சார்ஜ் ஆன மறுநிமிஷம் இங்க வந்து நிக்கறீங்க?"
"நான் தானே பாத்துக்கணும் டாக்டர். என்னை நம்பித் தான் இவரை இங்க விட்டிருக்காங்க."
குரலில் கவலையும் கலக்கமும் போட்டி போட்டது. ப்ரகதி அதைக் கவனிக்கத் தவறவில்லை. ஆனால் அதன் காரணங்கள் இன்னும் பிடிபடவில்லை அவளுக்கு.
"சரி, என்ன சொல்றது?... அவரை செக் பண்ணி பாத்ததுல, மூட்டுல ஒரு சவ்வு கிழிஞ்சிருக்கறதைப் பார்த்தோம். அதை அவர்கிட்டவும் சொல்லியாச்சு. அப்றம் கழுத்தில ஒரு சின்ன கன்கஷன். இப்போதைக்கு தொந்தரவில்லை. மறுபடி டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம் அப்பறமா.. அவர் எடுக்கற treatment optionஅ பொறுத்து எத்தனை நாள் இங்க தங்கறதுன்னு முடிவாகும். அவருக்குத் தேவையான கிட் எல்லாம் எங்க ஹாஸ்பிடல்லயே குடுப்போம். அவருக்கு ட்ரெஸ் மட்டும் நீங்க எடுத்துட்டு வந்தா போதும்"
"நான் வந்தர்றேன் டாக்டர், ஒரு மணி நேரத்தில வந்தர்றேன், தேங்க்யூ டாக்டர்."
சங்கர் சென்றதும் அறையில் வெறுமனே நிற்கப் பிடிக்காமல், அவனது case-fileஐ வாங்கிப் படித்துப் பார்த்தாள் அவள். தன்னருகில் நின்றிருந்த இளம் பெண் செவிலியர்கள் இருவர் அவன் தூங்குவதையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு நிற்க, அவளுக்குள் லேசாக எரிச்சல் மூண்டது.
"என்ன இங்க நிக்கறீங்க.. வேற வேலை எதுவும் இல்லையா வார்ட்ல?"
"டாக்டர், ப்ளீஸ் டாக்டர்.. ஒரே ஒரு செல்ஃபி.. அதுக்கப்றம் தொல்லை பண்ணமாட்டோம்.. அச்சோ.. Peoples' star நிவீஷ் நம்ம ஹாஸ்பிடல்ல! எங்களால நம்பவே முடியல!!"
அவளுக்கு கோபம் வந்தாலும், 'இவன் அவ்ளோ பெரிய ஆளா' என வியப்பும் வந்தது.
டில்லியில் மூன்று வருடங்கள் வெளிக்காற்றுப் படாமல் படிப்பு, படிப்பு என்று மட்டுமே இருந்ததால் மற்ற எந்தத் துறையைப் பற்றியும் அவள் பெரிதாக அறிந்திருக்கவில்லை.
'ஒரு காரணமாகத் தானே மூன்றாண்டுகள் தவம் போலக் கழித்தாய் ப்ரகதி...'
மேலும் ஸ்மார்ட்போன் வைத்திருக்காததாலும், எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லாததாலும் திரைத்துறையைப் பற்றி ஏதும் அறிந்திருக்கவில்லை. படம் பார்க்குமளவு என்றுமே நேரம் இருந்ததில்லை அவளுக்கு. ஆங்கில செய்தித்தாள் மட்டும் படிப்பாள். எந்த உலகத்தில் இருக்கிறாய் நீ என்று தோழி ஹரிதா சிரிப்பாள்.
'தானும் மற்றவர் போல பட்டாம்பூச்சியாய் சிறகடித்த நாட்கள்....'
அந்த செவிலியர்களின் கெஞ்சல் குரல் அவளை சுயநினைவுக்கு வரச் செய்தது.
"ஒரே ஒரு ஃபோட்டோ டாக்டர்..."
"சரி, அவர் எந்திரிச்சதும் அவர்கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு எடுத்துக்கங்க"
அவர்கள் பேச்சு சத்தத்தில் அவன் முழித்துவிட, ஒருநொடியும் தாமதிக்காமல் இருவரும் அவனிடம், "சார் சார், நாங்க உங்க பெரிய ஃபேன் சார்.. ஒரே ஒரு செல்ஃபி சார்.. ப்ளீஸ் " எனக் கெஞ்சத் தொடங்கினர்.
அவளுக்கே பார்க்கக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அவன் முகமோ கோபத்தில் கடுகடுத்தது.
"யாரா இருந்தாலும் என்ன, பேஷண்ட்டா மட்டும் தான் பார்ப்போம்னு சொன்னீங்க, then what the heck is this?" என அவளைப் பார்த்துக் கத்தினான் அவன்.
அவள் சற்றே திகைத்தாலும் தாமதிக்காமல், "மிஸ்டர், நீங்களாச்சு உங்க ரசிகர்கள் ஆச்சு! உங்களை நல்லா தெரிஞ்சவங்க தானே... என்னவோ பண்ணுங்க" என்றபடி எழுந்து வெளியேறினாள்.
அவன் ஏதோ கத்துவது வெளிவரை கேட்டது. அவள் ஒருநிமிடம் யோசித்துவிட்டு, உதவியாளர் ஒருவரை அழைத்து சில கட்டளைகள் தந்தாள். மீண்டும் உள்ளே வந்தபோது அவன் சுரத்தின்றி கேமராவைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். நர்சுகள் இருவரும் அவனருகில்—மிக அருகில்—முகத்தை வைத்துப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். அவள் உள்ளே வந்ததும், "தேங்க்ஸ் சார்.. தேங்க்ஸ் டாக்டர் " என்றுவிட்டு வெளியே சென்றனர்.
"என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?" என அவள் வினவ, அவன் தாடையை சொரிந்துவிட்டு, எதற்கு என்பதுபோல் பார்த்தான்.
"ப்ச்... ligament tear treatment."
"ஆ..அதுவா.. நான் என் மேனேஜர் கிட்ட கொஞ்சம் பேசி டிஸ்கஸ் பண்ணனும். வேற நல்ல ஹாஸ்பிடல் போலாமான்னும் யோசிக்கனும்"
அவளுக்கு சுள்ளென்று கோபம் வந்தது. இருப்பினும் இளக்காரச் சிரிப்புடன் மொழிந்தாள்.
"உங்களை இங்கயே வச்சு அழகு பார்க்கணும்னு எங்களுக்கு எந்த ஆசையும் இல்ல சார். இப்ப க்ரிடிகல் கேர்ல இருந்து உங்களை வேற வார்டுக்கு ஷிஃப்ட் பண்ணனும்"
"எதுக்கு? அங்கயும் ஆயிரம் பேர் வந்து என்னை சுத்தி ஏதோ exhibit மாதிரி பாத்து செல்ஃபி எடுக்கிறதுக்கா? Don't you people have any sense of privacy?"
உதவியாளர் வந்து, "டாக்டர், டீன் கிட்ட பர்மிஷன் வாங்கியாச்சு. இவரை ப்ரைவேட்டடா உங்க ப்ளோர்ல இருக்க executive wardக்கு மாத்த ஓகே சொல்லிட்டார்" என்று அவனுக்கும் கேட்குமாறு சொன்னார்.
அவனது தலை லேசாக தொங்கியது.
சே..அவசரப்பட்டுவிட்டோமே!
அவன் ஏதோ சொல்லத் தொடங்க, "தேவையில்லை" என்று சொல்லிவிட்டு நேராக உதவியாளரைப் பார்த்தாள்.
"தேவையில்லை சார். இவருக்கு இந்த ஹாஸ்பிடல் பிடிக்கல. டிஸ்சார்ஜ் தான் ஆகப் போறாராம். வார்ட் மாத்த வேணாம்"
அவரது பதிலுக்குக் காத்திராமல் அவள் வெளியே சென்றுவிட, அந்த உதவியாளர் இவனை ஒருமுறை பார்த்துவிட்டு நகர்ந்தார்.
சிறிது நேரத்தில் சங்கர் வந்தார்.
"சங்கர்.."
"எழுந்துட்டீங்களா சார்? எப்படி இருக்கு? இப்ப பரவால்லயா? நான் அம்மா அப்பாக்கு சொல்லலை; உங்களுக்குப் பிடிக்காதுன்னு தான். அப்றம் இன்னிக்கு அவார்ட் ஃபங்ஷன்ல உங்களுக்கு நாலு அவார்ட்ஸாம். Best Debut Actor, Best Actor, Best Commercial Hero, Best Romantic Actor.. எல்லாமே நீங்க தான். உங்க சார்பில சந்தோஷ்ராஜா வாங்கிக்கிட்டாராம். அவரும் எனக்கு நாலு தடவை ஃபோன் பண்ணினார். எடுத்துப் பேசி, நடந்ததை சொன்னேன். அவர் இப்ப வந்துட்டு இருக்கார்"
மூச்சு விடாமல் அவர் பேசி முடிக்க, அவன் முகத்தில் ஒரு சோகச் சிரிப்பு.
"என்ன சார்.. ஆக்சிடெண்ட் ஆனதால நேர்ல போய் அமைச்சர் கையால அவார்டு வாங்க முடியலன்னு வருத்தமா?"
"ஆமா சங்கர்... சரி, நம்ம ட்ரைவர் மணி என்ன ஆனார்?"
"அவனுக்கு ஒண்ணும் ஆகல. ஆள் நல்லா தான் இருந்தான். நம்மளை இங்க சேர்த்துட்டு போலீஸ்லயும் சொல்லிட்டு, இங்க இருந்தா பிரச்சனை ஆயிடும்னு வீட்டுக்குப் போயிட்டான். நான் போனப்போ பார்த்தேன்"
"ஓ.."
"கேஸ் எல்லாம் நான் பாத்துக்கறேன் சார். நீங்க கவலைப்படாதீங்க. அப்றம், ட்ரீட்மெண்ட் பத்தி நீங்க ஏதோ முடிவெடுக்கணும்னு சொன்னாங்க. அது என்னன்னு ஃபைனல் பண்ணிடலாமா சார்?"
"அது... வேற நல்ல ஹாஸ்பிடல் பாக்கலாமா சங்கர்?"
அவர் சற்றே ஆச்சரியமாக அவனைப் பார்த்தார்.
"உங்களுக்கு இங்க பிடிக்கலையா சார்? பிடிக்கலைன்னா பரவால்ல. வேற ஹாஸ்பிடல் பாக்கலாம். ஆனா..."
"என்ன ஆனா?"
"நம்ம மறுபடியும் ஹாஸ்பிடல் மாத்தினா மீடியால இன்னும் பரபரப்பா பேசுவாங்க"
அவர் பேசிக்கொண்டே தன் ஸ்மார்ஃபோனில் ஒரு நியூஸ் சேனலைப் போட்டுக் காட்டினார்.
"Just in: People's star Niveesh who has had a car accident earlier this day has won four National awards. He is still unavailable to address the media" என்ற செய்தி ஓடிக்கொண்டு இருந்தது.
"நீங்க வெளிய போனீங்கன்னா ப்ரெஸ், வெப்சைட், மீடியா, பேப்பர்னு எல்லோரும் புடிச்சுக்குவாங்க.. ஒரு இன்டர்வியூ வேற நிச்சயம் குடுத்தே ஆகணும்"
தான் இருக்கும் நிலையில் வெளியே சென்று பேசுவதோ நேர்காணல் தருவதோ இயலாத காரியம் எனப் புரிந்தது அவனுக்கு.
"இப்ப என்ன பண்றது?"
"இது ஒண்ணும் மோசமான ஹாஸ்பிடல் இல்லையே சார்... சென்னையில பெஸ்ட் டென் ஹாஸ்பிடல்ஸ்ல இதுவும் ஒன்றுதான் சார். அதுமட்டுமில்லாம, டாக்டர் ப்ரகதியை பாத்தா ரொம்ப டேலண்ட்டடா தெரியறாங்க. நல்ல பாதுகாப்பான கைகள்ல நீங்க இருக்கீங்கனு தோணுது எனக்கு"
அவர் சொல்ல சொல்ல அவன் முகம்சுழித்தான்.
"யாரு அவளா? அவளுக்கு நான் யார்னு தெரியல சங்கர்!! I simply can't believe it! உலகத்தில அவள மாதிரியும் ஆளுங்க இருக்காங்க.."
அவன் பேசிவிட்டு நிமிர்ந்து அவரைப் பார்த்தபோது, அவரது முகம் பயத்தில் வெளிறியிருந்தது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top