20.அவனுக்கு
தான் காலையில் முதல் வேலையாக அவனை சந்திக்க ஓடி வந்ததை அப்போதுதான் உணர்ந்திருந்தாள் அவள்.
'சே, மனதில் நினைத்ததை ஒழுங்காய் செயல்படுத்த முடியாத பைத்தியமாக இருக்கிறோமே.. அவனிடம் நமக்கு எந்த உறவும் வேண்டாம் என்றல்லவா முடிவெடுத்தோம்? பின் ஏன் வந்ததும் அவனைப் பார்க்க ஓடிவந்தோம்?
அட... லிஃப்ட்டில் இருந்து இறங்கியவுடன் அந்த அறைதான் முதலில் இருந்தது. எனவே எதேச்சையாக சென்றிருப்போம். நம் வேலை தானே அவனை தினமும் பரிசோதிப்பது?வேலையை முடிக்கலாம் எனப் போனது தவறா?
சரி, போனது தான் போனாய்... ஏன் அவன் சிரமப்பட்டதைப் பார்த்துப் பதபதைத்தாய்? தயவுசெய்து இறங்குங்க என்று ஏன் கெஞ்சினாய்?
அவன் நமது பேஷண்ட். அவனது நலமான வாழ்க்கைக்கும் ஆரோக்கியமான உடலுக்கும் நாம் தான் பொறுப்பு.
எத்தனை பேருக்கு நாம் இதுபோல் அக்கறை காட்டியிருக்கிறோம் ப்ரகதி?'
மனதின் கேள்விக்கு பதில் இல்லாமல் நின்றாள் அவள்.
தலையைத் தட்டியவாறே தனது அறைக்குள் அவள் நுழைய, வணக்கத்துடன் பின்தொடர்ந்து உள்ளே வந்தார் அவளது உதவியாளர்.
அன்றைய வேலைகளின் அட்டவணையை அவளது காரியதரிசி எடுத்து வந்து நீட்டவும், தன் எண்ணங்களைக் கலைத்துவிட்டு அந்த அட்டவணையை ஏறிட்டாள்.
சற்றே நீளமாக இருந்த அத்தாளின் கடைசி வரிகளில் அவள் கண்கள் நிலைக்குத்தி நின்றன.
"என்னதிது? எனக்கு இன்னிக்கு அஞ்சு சர்ஜரி போட்டிருக்கு? யாரைக் கேட்டு போட்டீங்க? நேத்து கொடுத்த லிஸ்ட்ல மூணு பேஷண்ட்டைத் தானே ஆபரேஷனுக்கு அப்ரூவ் பண்ணினேன்? அப்பறன் ஏன் எக்ஸ்ட்ரா ரெண்டு பேர் இருக்காங்க?"
"டாக்டர், அது.."
"இந்த ரெண்டு பேஷண்ட்டை யாரு அட்டெண்ட் பண்ணினது? யாரு எங்கிட்ட ரெஃபர் பண்ணினது? எங்கே ரெஃபரல் லெட்டர்?"
பொது மருத்துவத் துறையிலிருந்து மாற்றலாகி வந்திருந்தனர் அந்த இரு நோயாளிகள்.
Acute pancreatitis, Acute appendicitis- இரண்டுமே அவசர கட்ட அறுவை சிகிச்சைகள்.
"டாக்டர், இந்த ரெண்டு பேரும் எமர்ஜென்சி கேஸ்ல காலைல வந்தாங்க... வேற சர்ஜன்ஸ் இல்லாததால உங்களுக்கு ரெஃபர் பண்ணிருக்காங்க."
"என்னது? சர்ஜன் இல்லையா? பதினெட்டு ஜெனரல் சர்ஜன்ஸ் இருக்காங்க சார் இந்த ஹாஸ்பிடல்ல! அவங்க யாருமே பண்ணாத ஆபரேஷனையா நான் பண்ணனும்?"
"அது... "
"இன்னிக்கு யாரோட அட்மிஷன் டே? அந்த மெடிசன் யூனிட் சீஃப் டாக்டரைக் கூப்பிடுங்க ஃபோன்ல, நான் சொன்னதை சொல்லுங்க. அனஸ்தெடிஸ்ட்டையும் வர சொல்லுங்க. ஒரு நாளைக்கு அஞ்சு சர்ஜரி பண்ண நான் என்ன மனுஷியா ரோபோவா?"
"ஓகே மேடம், நான் பேசறேன் மேடம்."
அவர் வெளியேற, வேறோரு உதவியாளர் அவளிடம் வந்தார்.
"டாக்டர், நிவீஷ் சார் உங்களை வர சொன்னார்."
அவ்வளவு நேரம் தனது கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்த கோபம் எரிமலையாய் வெடித்தது அவளுக்குள்.
'யாரிவன்? பெரிய மகாராஜாவா? என்னை வரச் சொல்லி அணையிடுவதற்கு? எப்போதிருந்து நான் என்ன செய்ய வேண்டுமென மற்றவர்கள் சொல்லத் தொடங்கினார்கள்? ஒரு இருபத்தி ஐந்து வயதுப் பெண்ணுக்கு, அறுவை சிகிச்சை மருத்துவருக்கு, அவள் என்ன செய்யவேண்டும், செய்ய வேண்டாம் என சொல்ல இவர்கள் யாருக்கும் அருகதையில்லை. இன்று இதற்கு ஒரு முடிவு காணாமல் விடுவதில்லை ப்ரகதி.'
வேங்கையின் சீற்றத்துடன் அவள் விரைய, எதிரிலிருந்த காட்சிகள் அனைத்தையும் அவள் விழிகள் எடுத்துக்கொள்ள முடியாமல் கோபம் கண்ணை மறைத்தது. வேகமாக நடந்து வந்து, கதவைக் கூடத் தட்டாமல் சடாரெனத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள் அவள்.
அவன் கட்டிலில் ஓரமாக அமர்ந்து கால்களைத் தொங்கவிட்டிருந்தான்.
சங்கரும் அவனும் ஏதோ ஆர்வமாகப் பேசிக் கொண்டிருந்ததுபோல் தெரிந்தது. அவள் வந்த சத்தம் கேட்டு இருவரும் திரும்பினர்.
சங்கர் எழுந்து நின்றார். "குட் மார்னிங் டாக்டர்"
அவருக்கு ஒரு தலையசைப்பை மட்டும் தந்துவிட்டு, அவனை எரிப்பதுபோல் பார்த்தவள், "சிஸ்டர்!" என கர்ஜித்தாள்.
அறையின் மூலையில் நின்றிருந்த இளம் செவிலியர் நடுங்கிக் கொண்டு அவள்முன் வந்தார்.
"பேஷண்ட்டுக்கு வைட்டல்ஸ் பாத்தீங்களா? ஹார்ட் ரேட் செக் பண்ணீங்களா? என்ன பண்ணிட்டு இருந்தீங்க இவ்ளோ நேரம்?"
"டாக்டர், நான் இ.. இப்ப, உ.. உங்க பின்னால தான் வந்தேன் டாக்டர். "
"ஹ்ம், இதெல்லாம் பண்ணாம ஏன் ஒரு சீனியர் சர்ஜனை, ஏதோ நாய கூப்பிடற மாதிரி கூப்டறீங்க? ம்?"
பாதி வாக்கியத்தில் அவன்புறம் திரும்பி கழுத்து நரம்புகள் புடைக்க அவள் கத்த, திகைப்பில் பேச்சின்றி உறைந்தான் அவன். அந்த செவிலியர் கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்திருந்தார். அவளை அழைத்த உதவியாளரும் அங்கே நடுங்கிக்கொண்டு நின்றிருக்க, அவரைத் திரும்பிப் பார்த்தவள்,
"அவர் வர சொன்னார், இவர் வர சொன்னார்னு வந்து கூப்பிட நான் ஒண்ணும் அவங்க வீட்டு வேலைக்காரி இல்ல. இது அவருக்குப் புரிஞ்சாலும் புரியலைன்னாலும் உங்களுக்குப் புரியணும். மொதல்ல ஒரு டாக்டர்கிட்ட எப்படி பேசணும்னு கத்துக்கங்க. பொண்ணுன்னா, என்ன வேணா பேசுவீங்களா?"
அவர் பதில் கூறுமுன் நிவீஷ் பேசத் தொடங்கினான்.
"டாக்டர், உங்களை யார் என்ன சொல்லிக் காயப்படுத்தினானு எனக்குத் தெரியல. ஆனா எதுவா இருந்தாலும், பொறுமையா பேசலாம். நான் தான் உங்களை கூப்பிட சொன்னேன். ஆக்சுவலா, நீங்கதான் என்னை ரெடியாகிட்டு உங்களை கூப்பிட சொன்னீங்க. மறந்துட்டீங்களா?
நீங்க ஒரு பொண்ணுங்கறதாலையோ, இல்ல வயசுல சின்னவர் அப்டிங்கறதாலையோ உங்க மேல எல்லாரும் அட்வாண்டேஜ் எடுத்துக்கறதா நீங்க நினைக்கறீங்க... மேபீ.. உங்க வேலைல அதுமாதிரி சம்பவங்கள் நடக்கலாம், அதனால உங்களுக்கு அப்டி தோணியிருக்கலாம். ஆனா இங்க யாரும் அப்படி எல்லாம் பண்ணல. ஜஸ்ட் ரிலாக்ஸ்... நாங்க என்ன தப்பு பண்ணினோம்னு சொன்னா எங்க தரப்பில என்ன நியாயம் இருக்குன்னு நாங்க சொல்லுவோம். அதை விட்டுட்டு இப்படி கத்தினா என்ன அர்த்தம்? உங்களுக்கு என்ன பிரச்சினைனாலும் சொல்லுங்க.."
அவனது குரல் அத்தனை சாந்தமாக இருந்தது. விழிகளில் குடியிருந்த கரிசனம் முகம் முழுதும் பரவியிருந்தது. அவன் கண்களை சந்தித்த அவளது விழிகள் அதனோடே நிலைக்குத்தி நின்றன. அவனது ஒவ்வொரு சொல்லும் அவள் மனக் காயத்துக்கு மருந்திடுவதுபோல் இருந்தது.
'எப்போதும் ஒரு பேச்சுக்கு இரண்டு பேச்சுப் பேசி சண்டை வளர்க்கும் இவனா இன்று இத்தனை அமைதியாகப் பேசுகிறான்? இவன் முகத்தில் தெரியும் கரிசனம் உண்மை தானா? உண்மையெனில் எதற்காக?
என்னை எல்லோரும் துச்சமாக மதிக்கும்போது இவன் மட்டும் ஏன் இப்படி எனக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான்?'
"Doctor, are you alright?"
அவனது கேள்வி அவளை சுயநினைவுக்கு வரச்செய்தது.
அந்த உதவியாளர் அவளிடம், "சாரி மேடம். சார் வந்து உங்களைப் பார்க்கணும், நீங்கதான் கூப்பிட சொல்லியிருந்தீங்க, இப்ப வர முடியுமான்னு கேட்டார்...நான் தான் அவசரத்துல, எல்லாம் ஒண்ணுதானேன்னு அப்டி, 'வரச்சொன்னார்'னு சொல்லிட்டேன். மன்னிச்சிடுங்க" என்றிட,
"பரவால்ல சார்... நானும் இவ்ளோ அதிகமா ரியாக்ட் பண்ணியிருக்கக் கூடாது.. சரி, நீங்க போங்க, நான் பேசிக்கறேன்" என அவரை அனுப்பினாள்.
"டாக்டர், சாரி டாக்டர், நான்தான் உங்ககிட்ட வந்து பேசியிருக்கணும். திடீர்னு ஒரு முக்கியமான ஃபோன் வந்ததால, அந்த அட்டண்டரை அனுப்ப வேண்டியதாப் போச்சு. இனி எப்பவும் இப்படி நடக்காது. சாரி டாக்டர்."
சங்கர் குரலில் உண்மையான வருத்தம் தெரிந்தது.
"இல்ல சார்... நான் ஏற்கனவே வேற டென்ஷன்ல இருந்தேன்... அதான்.. பரவால்ல விடுங்க. சிஸ்டர், அந்த bp apparatus எடுங்க"
அவனது அருகில் சென்று அழுத்தமானியைத் தானே அவன் கையில் சுற்றினாள் அவள். ஏதோ தோன்றவும் மெல்லிய குரலில் "தேங்க்ஸ்" என அவள் முணுமுணுக்க, "Anything for my doctor" என அதேபோல் சன்னமான குரலில் அவனும் பதிலளித்தான்.
சட்டென அவள் முகம் மாறியது. ஓரடி தள்ளி நகர்ந்தவள், அவன் முகத்தைக் கூர்மையாக்ப் பார்த்தாள்.
"Never ever say that again"
**
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top