18.அவளை
ஹரிதாவின் பார்வை அவனது முகத்தில் நிலைகுத்தி நின்றது.
அவனது பார்வையோ ப்ரகதியை நீங்காமல் மொய்த்தது.
அரை கணமே ஆனாலும், அவன் கண்ணில் ஏதோ தெரிந்தது அவளுக்கு. அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஹரிதா செறுமினாள்.
"அ... எனக்கு ஒரு..." என்றவாறு அர்த்தமாகப் ப்ரகதியைப் பார்க்க, நினைவு வந்தவளாய் அவளும், "அ.. அதாவது.." என இழுத்தாள்.
நிவீஷ் அவர்களிருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கேள்வியாய்ப் புருவம் உயர்த்தினான்.
'எப்படிக் கேட்பது... அவன் என்ன நினைப்பான்..' என்று தயங்கினாள் அவள். ஏற்கனவே செவிலியர் இருவர் இதேபோல் புகைப்படம் எடுக்கக் கேட்டபோது நடந்த களேபரம் நினைவுக்கு வந்ததால் சற்றே திணறினாள். ஹரிதாவோ, அவளே சொல்லட்டும் என்பதுபோல் அவளைப் பார்த்தவாறே நின்றாள்.
ஒரு பெருமூச்சு விட்டபடி, "ஹரிதாவுக்கு உங்க கூட ஒரு செல்ஃபி எடுக்கணும்" என ஒருவழியாக சொல்லி முடித்தாள் ப்ரகதி, அவன் முகத்தைப் பார்க்காமல், ஜன்னல் வழியே திரும்பிப் பார்த்தவாறே.
"ஓ... அவ்ளோதானா? இதுக்கென்ன? With pleasure!"
அவன் இயல்பாகச் சொல்லவும், ப்ரகதியும் சங்கரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.
அவனது பதிலில் வியந்த ஹரிதா படபடத்தவாறே தன் கைப்பையில் துழவி அவளது ஸ்மார்ஃபோனை எடுத்தாள். ப்ரகதியும் வருவாளோ என்பதுபோல் அவன் பார்க்க, அவளோ இரண்டடி தள்ளிச் சென்று கேமரா படாத இடத்தில் நின்றுகொண்டாள். அவன் அதைப் பார்த்துவிட்டு உதட்டை சுழித்தவாறு கேமராவிடம் திரும்பினான்.
ஒரு சிரிப்பை சாயம்போல் முகத்தில் அப்பிக் கொண்டு அவன் கேமராவை நோக்க, ஹரிதாவும் புன்னகையுடன் அதில் தன் முகத்தையும் காட்டிப் படம்பிடித்தாள். அவனே கைபேசியை வாங்கி இன்னும் இரண்டொரு புகைப்படங்கள் எடுத்துத் தந்தான். ஹரிதா வியப்பின் விளிம்புக்குச் சென்றுவிட்டாள்.
"ரொம்ப தேங்க்ஸ் சார்..."
"Anything for my doctor."
புன்னகையுடன் அவன் கூற, இப்போது ஆச்சரியமாகப் பார்த்தவர்களில் ஹரிதாவும் அடக்கம். ப்ரகதி திடுக்கிட்டாலும், முகத்தில் எதையும் காட்டாமல், "லேட்டாச்சு... போலாம் ஹரி. வரேன் சங்கர் சார்" என்றபடி ஹரிதாவைத் தள்ளிக் கொண்டு வேகமாக வெளியே நடந்தாள்.
அவள் போவதை ஒரு புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவனது சிரிப்பைக் கவனித்து சங்கர் இன்னும் குழப்பமானார்.
"என்ன ப்ரகதி டாக்டர்... எனிமி டாக்டர்.. நீங்க எப்போ 'மை டாக்டர்' ஆனீங்க?" கிண்டலோடு ஹரிதா வினவ, அவளோ எதையும் கண்டு கொள்ளாமல் தன்னறைக்கு வந்து தாள்களை எடுத்து அடுக்கத் தொடங்கினாள்.
"ஹரி.. அவன் ஏதோ.. ப்ச், I think he meant it something else. Maybe just a friendly affinity. அதை பெரிசு பண்ணாத."
"ப்ரகதி, ஏன் உனக்கு மட்டும் இப்படித் தோணுது?"
"இங்க பார். எனக்குத் தேவையில்லாத விஷயங்களை நான் லட்சியம் பண்ண மாட்டேன். சில விஷயங்களைப் பத்திப் பேசாம இருந்தாலே அது தானா மறைஞ்சு போயிடும்."
"ம்ஹூம். எல்லாத்தையும் அப்படிப் பேசாமலே இருந்தா, வேற வேற அர்த்தங்கள் தான் வரும் ப்ரகதி.."
"எனக்கு டைம் ஆச்சு. நான் போறேன். நீ வேணா அவன் கூட உட்கார்ந்து பேசிட்டு இரு, வரட்டா?"
பேசிக்கொண்டே தன் வருகைப் பதிவில் கைரேகை வைத்துவிட்டு, பின்னர் மேசை ட்ராயரை இழுத்துப் பூட்டிவிட்டு, கம்ப்யூட்டரை அணைத்துவிட்டு, அலுவலகம் விட்டுக் கிளம்பப் போனாள் அவள். அவளிடம் பேச முடியாது எனப் புரிந்து ஹரிதா எப்போதோ சென்றிருந்தாள். அதைக் கவனித்துத் தனக்குள் சிரித்துக்கொண்டாள் அவள்.
பெருமூச்சுடன் தரைத்தளம் வந்தவள் தன் வண்டியை எடுத்துக்கொண்டு அந்த கண்ணாடிக் கோட்டையைப் பின்னேற்றி வெளியே விரைந்தாள். மாலைக் காற்று— சென்னைக் காற்று— சூடாய் அவள் முகத்தைத் தழுவிச் சென்றது.
அடையாரில் ஒரு அபார்ட்மெண்ட்டில் குடியிருந்தாள் அவள். மூன்றாவது மாடியில், அடையாறின் முகத்துவாரத்தைப் பார்க்க ஏதுவான பால்கனியோடு இருந்தது அவளது வீடு. பார்த்ததுமே பிடித்துப்போய் அட்வாண்ஸ் தந்துவிட்டாள் அவள். அவளது வீட்டை மிகவும் பிடிக்கும் அவளுக்கு.
' ஆனாலும் பழைய வீடு போல எப்போதுமே வராது தானே..'
மனது காரணமே இல்லாமல் பழையதைத் தூண்ட, பெருமூச்சுடன் எண்ணங்களைக் கலைத்தாள்.
வீடு வந்து சேர்ந்தாலும் அவள் மனம் மருத்துவமனையையே சுற்றி வந்தது. தன் பால்கனியில் நின்று மறையும் மாலைச் சூரியனை ரசித்தவாறே அன்று நடந்தவற்றை அசைபோட்டாள்.
'காலையில் ப்ரஸ் மீட்டில் என்னை மட்டந்தட்ட நினைத்தான்... பின், அவனே நன்றி சொன்னான்... என்னிடம் மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்வேன் என்றான்... வீட்டுக்குப் போக மாட்டேன் என்றான்... anything for my doctor என்றான்...
யாரிவன்? என்னிடம் என்ன எதிர்பார்க்கிறான்? எதற்காக அத்தனை பேர் இவனை மொய்த்தாலும் என்னை விடாமல் துரத்துகிறான் இவன்?'
ப்ரகதி ஒன்றும் சிறுபிள்ளை அல்லவே! மூச்சுவிடும் சத்தத்தில் இருந்தே நோயைக் கண்டறியும் வித்தகி... அவனது செயல்களை வைத்து அவனது மன ஓட்டத்தைக் கணிக்க முடியாதா அவளால்...
'இது நல்லதற்கல்ல ப்ரகதி... உன் வாழ்க்கையில் இன்னொரு ஆணுக்கு இடமில்லை. அவன் எந்த எண்ணத்தோடு உன்னை அணுகினாலும், அது நட்போ, காதலோ, உனக்கு வேண்டாம். அவன் வந்தபோது சொன்ன வார்த்தைகள் நினைவிருக்கட்டும்!'
என்னதான் மனதுக்கு சமாதானம் கூறினாலும், அவன் யாரென்று அறிந்துகொள்ள ஆர்வம் மேலோங்கியது அவளுக்கு. தன் மடிக்கணினியை எடுத்தவள் நீண்ட நாட்களுக்குப் பிறகு இணையத்தில் நுழைந்தாள். கூகுளில் அவன் பெயரைத் தேடினாள்.
நிவீஷ் சந்திரமோகன்...
இருபத்தைந்து வயது இளம் நட்சத்திரம்.
அம்மா ஷைலஜா-அப்பா சந்திரமோகன்.
பூர்வீகம் திருஷ்ஷூர்.
வளர்ந்தது, படித்தது எல்லாம் அமெரிக்காவில்.
Vis-com graduate.
மலையாள சினிமாவில் சின்னச் சின்ன பாத்திரங்கள் பண்ணிவிட்டு தமிழில் சந்தோஷ்ராஜா அறிமுகம்.
முதல் படம் -வானம் பொழிகிறது.
முதல் படமே தேசிய விருது.
அடுத்தடுத்து மூன்று படங்கள்... 'சத்தம்', 'பாலா', 'உண்மை' பெயர்போன இயக்குனர்களுடன்...அதுவும் இரண்டு இரண்டு மாத இடைவெளிகளில்.
அதில் ஒன்றும் தேசிய விருது.
லேசாக மலைத்துப் போனாள் அவள்.
'இத்தனை சாதனைகள் இவ்வளவு சின்ன வயதிலா? இவ்வளவு திறமையானவனையா நேர்வழி குறுக்குவழின்னு பேசிட்டோம்... அவனைப் பார்த்தால் இது எதுவும் தெரியவில்லையே... ரொம்பவே சாதாரணமாகத் தானே இருக்கிறான்... '
காலையில் அவள் பேசியது காதில் ஒலித்தது.
"அவர் எவ்வளவு பெரிய ஆளுன்னு எனக்கு இப்பதான் தெரியும். அவர் என்னோட சரிசமமா... பேசறது அவரோட பெரிய மனசைக் காட்டுது"
பொய் சொல்வதாக நினைத்தாளே... அவனை காப்பாற்றுவதற்காக ஏதேதோ பேசுவதாக நினைத்தாளே.. தன்னையறியாமல் தான் பேசியது அத்தனையும் மெய் தானா?
அவனது போட்டோக்களையும் கூகுளில் பார்த்தாள் அவள். அவனது சிரிப்பும், வித்தியாசமான போஸ்களும், விதவிதமான ஸ்டைல்களும் அவளுக்குப் புன்னகையை வரவைத்தன.
'இதையெல்லாம் செய்யக் கொஞ்சம் தைரியம் வேண்டும் தான்... ஒரு படத்தில் வழுக்கை விழுந்த இளைஞனாக, ஒரு படத்தில் குருடனாக, மேலும் முதல் படத்தில் ஆங்கிலம் அறியாத பட்டிக்காட்டு வாலிபனாக.. அவனது கதைத் தேர்வுகள் எத்தனை சிறப்பாக இருக்கிறது...'
'ஷ்ஷ்...ப்ரகதி என்ன இது? உன் எதிரி அவன். அவனைப் போய்ப் பாராட்டுகிறாயா?'
நல்ல குணம் எங்கிருந்தாலும் பாராட்டலாமே... அதில் தப்பில்லை. அதிலும் அவன் எனக்கு எதிரியெல்லாம் இல்லை. ஒரு பேஷண்ட். அவ்வளவே.
'இது வேண்டாம் ப்ரகதி... இவன் ஆபத்து... ஆண்கள் எல்லோரும் ஆபத்து...'
'நான் ஒன்றும் இன்றே அவனைக் காதலிக்கத் தொடங்கவில்லையே... என் பேஷண்ட்டாக வந்திருக்கிறான் அவன். அவனைப் பற்றித் தெரிந்து கொள்ள முயன்றது தவறா?'
'அத்தோடு நிறுத்திக்கொள்வோம் ப்ரகதி'
அவள் மனது சொன்னது சரியென்றே பட்டது அவளுக்கும். எனவே மேற்கொண்டு எதையும் நோண்டாமல், தன் வேலைகளில் ஈடுபட்டாள். வீட்டை ஒழுங்குபடுத்தியவள், தனக்கு அளவாக சமைத்து உணவருந்தி, பாத்திரங்களைக் களைந்துவிட்டு, கட்டிலில் சாய்ந்து அமர்ந்து ஒரு மருத்துவப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தாள். அயர்ச்சியில் கண்கள் செருக, அப்படியே ஏதேதோ கனவுகளோடு உறங்கிப் போனாள் அவள்.
அங்கே மருத்துவமனையில் ஒரு இதயம் உறங்காமல் அவளை எண்ணித் துடித்துக் கொண்டிருந்தது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top