16. அவனை

ப்ரகதி தன்னால் இயன்றவரை எடுத்துரைத்தும் மேத்தா அவளது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். சங்கர் அவளுக்கு முன்பே அவரிடம் தொலைபேசியில் பேசிவிட்டது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

"நோ, நோ, டாக்டர். உங்க மேற்பார்வையிலயே அவர் இருக்கட்டும். அதுதான் எனக்கு நிம்மதி. ஒரு தெரபிஸ்ட்ட நான் ஸ்பெஷலா உங்க தளத்துக்கு மாத்துறேன். அவரை நீங்களே supervise பண்ணிக்கங்க. Remember, நீங்கதான் அவரோட ரெகவரிக்கு முழுப் பொறுப்பும்!"

சோர்ந்து போய்த் தன்னறைக்கு வந்தவள் அன்றைய பணி அட்டவணையில் தன்னைத் தொலைத்து ஆறுதல் தேடினாள். எத்தனை கஷ்டம் இருந்தாலும், சர்ஜரி தியேட்டரில் வேறு மனுஷியாக இருப்பாள் அவள். கண்களும் கைகளும் அவள் ஆணையின்றி ஒரு அணுவளவும் அசையாது. அந்த அறுவை சிகிச்சை ஒரு நடனம்போல், அத்தனை அசைவுகளும் முன்கூட்டியே அவள் மனதால் முடிவு செய்யப்பட்டிருக்கும்.

இன்றா , நேற்றா.. நான்கு வருடங்களாக அவள் செய்து வரும் தவமல்லவா அது! அத்தனை தியேட்டர்கள் முன்னிலும், பின்னர் உள்ளிலும் பழியாகக் கிடந்து, பேராசிரியர்களிடம் கற்றுக்கொண்ட கலை அது. தூக்கம் தொலைத்துப் படித்த படிப்பு... பசி, தாகம் தொலைத்து வாங்கிய வாய்ப்புகள்... சமூகப் பிணைப்பையே அறுத்துக்கொண்டு குகைக்குள் தியானம் செய்யும் சந்நியாசி போலத் தானே வாழ்ந்திருந்தாள்...

'ஒன்றல்ல இரண்டு காரணங்களுக்காக...'

மனதின் குரலை அதட்டி அடக்கிவிட்டு பணியில் கவனம் பதித்தாள் அவள்.

மதியம் ஒரு மணி அளவில் அவனைக் காண அவனது அறைக்குச் சென்றாள் ப்ரகதி.

அவன் கட்டிலில் சம்மனமிட்டு அமர்ந்து, மடியில் உணவுத் தட்டை வைத்திருந்தான். தனது தட்டிலிருந்த ரொட்டியைச் சுருட்டிப் பிடித்துக் கடித்துக் கொண்டே சங்கரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். இவள் வந்ததும் அதைக் கீழே வைத்துவிட்டு,

"ஹாய் டாக்டர்! வாங்க, சாப்டறீங்களா? என்ன, உங்க கோரிக்கை டீனால மறுக்கப்பட்டுருச்சா?" எனக் கேட்டுக் கொண்டே கையசைத்தான்.

அவனது தட்டைப் பார்த்து தனக்கும் பசித்தாலும், அவன் விளையாட்டுத் தொனியில் அவளிடம் கேள்வி கேட்ட விதத்தில் சூடானாள் அவள்.

"எனக்கு நேர்வழி தவிர வேற வழி தெரியாது சார்... இல்லைனா உங்களை மாதிரி என்னைக்கோ முன்னேறியிருப்பேன்" என்றாள்.

அவள் அன்று நடந்த விஷயத்தையே இயல்பாகப் பேசியிருந்தாள். ஆனால் அது வேறுவிதமாக அவர்கள் இருவருக்கும் தெரிந்தது.

வழக்கமாக நிவீஷ் மட்டும் இறுகுவான்... இன்றேனோ சங்கர் முகமும் அவள் பேச்சில் இறுகியது.

"மேடம்... நீங்க வேற எதோ மனசில வச்சிக்கிட்டு அவரைக் காயப்படுத்தனும்னு பேசறீங்க. அவர் நீங்க நினைக்கற மாதிரிக் கிடையாது. அவர் தன்--"

அவன் தன் கையை உயர்த்தி அவரைத் தடுத்தான்.

"யாருக்கும் விளக்கம் குடுக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை சங்கர். அவங்க தான் நினைச்சது நடக்கலைன்ற எரிச்சல்ல பேசறாங்க"

தான் கூறிய வார்த்தைகளுக்கு மற்றொரு அர்த்தம் கூட இருக்கக்கூடும் என்பதை அப்போது தான் உணர்ந்தாள் அவள். வேண்டுமென்று சொல்லவில்லை என்றாலும் சட்டென சங்கடப்பட்டாள். ஆனால் அவனிடம் போய் மன்னிப்புக் கேட்கவும் அவள் தன்மானம் தழையவில்லை.

எனவே வாய்க்குள் "whatever" என முணுமுணுத்துவிட்டு தன் பணியைப் பார்க்கத் தொடங்கினாள்.

அவனது இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம் நாடித்துடிப்பு, மூச்சு வேகம் என எல்லாம் சரியாக இருக்கிறதா எனப் பரிசோதித்துவிட்டு, அவனது கேஸ் ஷீட்டைப் பிரித்து அதில் அவற்றைப் பதிவிட்டாள். அவள் அதெல்லாம் செய்யும்வரை மௌனமே வியாபித்திருந்தது இருவரிடமும். அவளும் செவிலியரும் பேசிக் கொள்ளும் சத்தம் மட்டும் இடையிடையே அந்த மௌனத்தைக் கலைத்தது.

"தெரபிஸ்ட் வந்துட்டாங்களா சிஸ்டர்?"

"பத்து மணிக்கு வந்தாங்க டாக்டர். செக் பண்ணிட்டு ஒரு ரிப்போர்ட்டை உங்க டேபிள்ல குடுத்தாங்களாமே?"

"நான் ரூம் பக்கமே இன்னும் போகல.."

"என்ன டாக்டர்.... போங்க, அதைப் பாருங்க..."

அந்த செவிலியர் கொஞ்சம் வயது முதிர்ந்தவர். இன்னும் ஒரு வருடத்தில் தலைமைச் செவிலியர் (மேட்ரன்) ஆகப் போகிறவர்.

இவரைப் போன்ற சிலருக்கு அங்கிருந்த மருத்துவர்களை விட அதிகம் தெரிந்திருக்கும். எனவே மருத்துவர்களிடம் பயமும் குறைந்திருக்கும். ப்ரகதி போன்ற திறமையான மருத்துவரைக் கூடப் பயமின்றி அணுகும் தைரியம் அவருக்கு உண்டு. எனவே தான் அவள் அந்த ரிப்போர்ட்டைப் பார்க்காததற்கு அவர் தைரியமாகக் கடிந்துகொண்டார்.

அவளும் அதைப் பொருட்படுத்தவில்லை, ஆனால் அவன் தான் அதை விழிவிரித்துப் பார்த்திருந்தான்.

அவள் வேறோரு உதவியாளரை அனுப்பி தன் மேசையில் கிடந்த தாள்களை எடுத்து வருமாறு பணித்தாள். அவை வந்ததும் அதைக் கவனமாகப் படித்துவிட்டு, அவனிடம் திரும்பினாள்.

"உங்களுக்கு muscle power analysis பண்ணதுல, கொஞ்சம் அதிகமாகவே பலம் இருக்கறது தெரியுது--"

"அடடே, தேங்க்ஸ். Well, that's because I workout"

"ப்ச். நான் பேசும்போது நடுவில பேசறது எனக்குப் பிடிக்காது. "

"ஏன்? ஓ.. நீங்க பேச வந்தது மறந்துடும்னு தானே?"

நக்கலாக அவன் வினவ, மீண்டும் கோபம் தலைக்கேறியது அவளுக்கு. ஆனால் வார்த்தையை விடக்கூடாது என்பதில் கவனம் இருந்தது.

"Nothing like that... என்ன பேசுணும்னாலும் என்னைக் கைகாட்டி நிறுத்திட்டு பேசலாம். நான் ஒண்ணும் அவ்வளவு கெடுபிடி ஆள் கிடையாது."

"நீங்க என்ன காலேஜ் லெக்சரரா? கைய தூக்கிட்டு டவுட் கேட்கறதுக்கு..."

"You have no idea... I am also a lecturer"

"அ... பாத்தீங்களா, நடுவில பேசினா என்ன பேச வந்தோம்னு மறந்துட்டு வேற கதை பேசிட்டு இருக்கீங்க.."

சட்டென அது உரைக்க, தன் தலையைத் தட்டிக் கொண்டாள் அவள். 'சே! அவன் சொன்னதுபோல் ஆகிவிட்டதே!'

"ம்... well.. as I was saying, உங்க தசைகள் நல்லபடியா இருக்கறதால, ரெண்டே வாரத்துல உங்க கழுத்தெலும்பை சரியாக்கிடலாம். ஆனா மறுபடியும் எந்தக் காயமும் வராமப் பாத்துக்கணும். தலையை சடனா படக்குன்னு திருப்பக் கூடாது. அழுத்தம் குடுக்கக் கூடாது. டீன் ஆர்டர் படி, பதினைஞ்சு நான் உங்களுக்கு இங்கயே தெரபி நடக்கும். நான் என்னோட ரவுண்ட்ஸ் அப்போ வந்து பாத்துக்கறேன். எதாவது சந்தேகம் இருக்கா இனி?"

கை தூக்கினான் அவன், குழந்தைபோல முகத்தை வைத்துக்கொண்டு. சங்கர் சிரிப்பை அடக்க முயன்றது அவளுக்கும் தெரிந்தது. அவளும் லேசாக சிரித்தவாறு, 'என்ன' எனப் புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.

"ரெண்டு வாரம் நான் ஹாஸ்பிடல்  அரெஸ்டா? பெட் ரெஸ்ட் தானா? வெளிய எங்கயும் போகக் கூடாதா?"

"வெல்... ஒரு healing process நடக்கும்போது மற்ற வேலைகள் பாக்கறது அவ்ளோ advisable இல்ல..." என்றவள் குரலைத் தாழ்த்தி, "ஹாஸ்பிடல் பில் ஏத்தறதுக்கு இதுவும் ஒரு வழி.." என்றிட அவர்கள் இருவரும் சிரித்தனர்.

அவளும் சிரித்தாள். ஆனால் மறுகணமே, "பட், சீரியஸ்லி, கால்ல தண்ணி படாம பாத்துக்கணும், ஓய்வெடுக்கணும், உடம்புக்கு அதிகமா வேலை குடுக்கக் கூடாது. வீட்ல இதெல்லாம் கொஞ்சம் கஷ்டம், இல்லியா? அதனால, ஹாஸ்பிடல்ல இருக்கறது கொஞ்சம் பெட்டர்." என அறிவுரைத்தாள்.

"நான் இருந்துப்பேன். உங்களால தான் எங்களை சகிச்சுக்க முடியாதே டாக்டர்?"

உதட்டைப் பிதுக்கி அப்பாவித்தனமாய் அவன் மீண்டும் வேண்டுமென்றே சீண்ட, அவள் முறைத்தாள்.

"நான் அப்படி சொல்லலை."

"வேற எப்படி?"

"தேவையில்லாம என் வேலையை குறை பேசறதும், உங்க சோஷியல் மீடியா செல்வாக்கை என்கிட்ட காட்றதும் எனக்கு ஜீரணிக்க முடியலை. ஆனா நீங்க இப்படித்தான் இருப்பீங்கனு சொன்னா, உங்களை இங்க வெச்சுக்க என்னாலயும் முடியாது. நீங்க விரும்பினா நாளைக்கே டிஸ்சார்ஜ் ஆகிட்டு, உங்க வீட்ல இந்த தெரபியை பண்ணிக்கலாம். எங்க டீன்கிட்ட நான் சந்தோஷமா சொல்லிக்கறேன்."

"நோ!!!"

சட்டென்று அவன் சொல்ல, அனைவருமே அவனைத் திரும்பிப் பார்த்தனர்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top