12.அவனிடம்

காலை எட்டு மணி.

அமிஞ்சிக்கரை இதுவரை என்றுமில்லாத பரபரப்போடு இயங்கியது. இருக்காதா பின்னே? நேற்று மக்கள் நாயகன் நிவீஷ் அவனது ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒன்பது மணிக்கு ப்ரஸ்மீட்டில் சந்திப்பதாகப் பதிவிட்டிருந்தானே!

ப்ரகதி வந்தபோது, மருத்துவமனையே களை கட்டியிருந்தது. நர்சுகள் தங்கள் உடைகளை சரிசெய்து கொண்டு அங்குமிங்கும் நடந்தவாறிருந்தனர். உதவியாளர்கள் ஓரிடத்தில் நில்லாமல் துள்ளிக்கொண்டு அலைந்தனர். மருத்துவர்கள் சிலரும் தரைத் தளத்திலேயே பழியாகக் கிடந்தனர். மேலும் புறநோயாளிகள் பிரிவு என்றுமில்லாத அளவிற்கு இன்று கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. வாசலிலும் கேமரா வைத்த வாகனங்கள் சாரிசாரியாக நின்றிருந்தன. செக்யூரிட்டிகள் பலரும் காரிடாரில் காத்திருந்தனர் உற்சாகமாக.

அந்தக் கூச்சல் குழப்பம் எல்லாமே அந்தக் காலை நேரத்தில் ப்ரகதிக்கு எரிச்சலை வரவைத்தது. தனது தோழி ஹரிதாவும் கூட்டத்தில் நின்றிருக்க, அவளருகில் சென்று,
"இப்ப என்ன நடக்குதுன்னு இவ்ளோ கூட்டம் இங்க?" என வினவினாள் ப்ரகதி.

"ஹூம்... இதுக்கு தான் கொஞ்சமாச்சும் வெளி உலகத்துல வாழணும்னது; சோஷியல் மீடியா பக்கம் பாக்கணும்றது. ட்விட்டர் பார்த்திருந்தா தெரிஞ்சிருக்கும் உனக்கு. இன்னிக்கு நிவீஷ் நம்ம லவுஞ்ச்ல ப்ரஸ்மீட் குடுக்கறார். அவரோட ரசிகர்களுக்காகவாம். அதான்.. அவரைப் பாக்கறதுக்கு எல்லாரும் வெய்ட் பண்றாங்க"

"நீயுமா ஹரி?"

"என்ன நீயுமா? நீதான் என்னை அவர் ரூம் பக்கத்திலயே விடலையே! இப்ப பாத்தா தான் உண்டு"

அவளை நம்ப முடியாமல் தலையசைத்துவிட்டு, தன் அறைக்கு நடந்தாள் ப்ரகதி. அவளுக்கு முன்பாகவே அங்கே மேத்தாவும் சங்கரும் நின்றிருந்தனர்.

"Good morning, Dr. Pragathi!"

"Good morning, sir"

"வணக்கம் டாக்டர்"

"வணக்கம்.."

"ம்..ப்ரகதி, நம்ம நிவீஷ் டிஸ்சார்ஜ் ஆனதும் ஒரு ப்ரஸ்மீட் வைக்கிறதா அன்னவுன்ஸ் பண்ணிருக்காராம். நீங்க செக்கப் பண்ணி, அவருக்கு ப்ராப்ளம் இல்லைனு சைன் பண்ணினா தான் அவரை டிஸ்சார்ஜ் பண்ண முடியும். So.."

"எனக்கு அட்டெண்டன்ஸ் போடறதுக்கு கூட அவகாசம் இல்லையா சார்?"

"ஓகே டாக்டர் ரிலாக்ஸ்... காலைலயே ஏன் இவ்ளோ டென்ஷன்? எங்களுக்கு அவரசமே இல்ல. Do take your time. We'll wait in his room."

அவளைப் புரிந்துகொண்டு மேத்தா நகர, ஒரு தயக்கமான பார்வையை வீசியவாறு சங்கரும் பின்தொடர்ந்தார். அவர் ஏதோ சொல்ல வந்து, பின் மௌனமாக வெளியேறுவதை அவளும் பார்த்தாள். சற்றே துணுக்குற்றாலும், தனது பணியை செய்ய விரைந்தாள்.

ப்ரகதி தன் கணினியைத் திறந்து அன்றைய அலுவல்களை ஆராய்ந்தாள். டீன் மேத்தா அவளுடைய மற்ற வேலைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்திருந்தார். அது சற்றே சந்தோஷமாக இருந்தது அவளுக்கு. ஆனாலும் மீண்டும் அந்த முட்டாள் நடிகனை சந்திக்க வேண்டுமென நினைத்தபோது சோர்வானாள். தனது வருகைப் பதிவை செய்துவிட்டு எழுந்து, மனமின்றி அந்த executive அறைக்கு நடந்தாள் அவள்.

"Good morning, doctor!"
நிவீஷின் உற்சாகக் குரல் அவளது எரிச்சலைக் கலைக்க முயன்று தோற்றது. சோர்வாக அவனைப் பார்த்தாள் அவள்.

அவன் புத்தம் புதியவனாய் அமர்ந்திருந்தான். முகத்தின் சிரிப்பு இன்று கண்கள் வரை எட்டியிருந்தது. தலைக்குக் குளித்திருப்பான் போல... காற்றில் கேசம் அலையலையாய் ஆடியது. சிவப்பு வண்ண டிஷர்ட்டும், கொஞ்சம் தளர்வான கால்சட்டையும் அணிந்து, ஆணழகனாக வீற்றிருந்தான் அவன்.

ஒருகணம் பார்த்துவிட்டு, அவனைக் கண்டுகொள்ளாமல் செவிலியரிடம் திரும்பினாள் அவள்.

"ம்.. சிஸ்டர், இவருக்கு எல்லா டெஸ்ட்டும் எடுத்தாச்சா?"

அந்த செவிலியர் அவனிடமிருந்து கண்ணை எடுக்காமல் தலையசைத்தாள். அதில் ப்ரகதியின் முகம் இறுகியது. மேத்தாவும் சங்கரும் அதைக் கவனிக்கத் தவறவில்லை.

"சிஸ்டர்! நான் கேட்கறது காதுல விழல??"
ப்ரகதி தன் கோபம் அனைத்தையும் குரலில் கொட்டினாள்.

"ச...சாரி டாக்டர் ... சாரி சார்...அது.."

"போதும். ஒண்ணும் சொல்ல வேணாம். போய் ரிப்போர்ட்ட ரெடி பண்ணுங்க"

செவிலியர் சென்றதும் அவனருகே நடந்தவள், அவனது கண்களைப் பாராமல் தன் ஸ்ட்டெத்தை அவன் மார்பில் வைத்துப் பார்த்தாள். இதயத் துடிப்பு சீராக இருந்ததை அரைநொடி தோன்றி மறைந்த திருப்தியான பார்வை சொல்லியது. அவன் காலைப் பிடித்து அழுத்திப் பரிசோதித்துவிட்டு, "எங்கயாச்சும் வலிக்குதா?" என வினவ, அவன் "ம்ம்.. ஆமா... இங்க.." என இதயத்தைக் காட்டினான்.

"What?"

"ப்ச், உங்களை எல்லாம் பிரியப் போறேனே... அதான்!"

அதில் என்ன நகைச்சுவை இருந்ததோ... மேத்தாவும் சங்கரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அவளுக்கு ஆயாசமாக இருந்தது. கண்களை சுழற்றியவள் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் செவிலியர் வரும்வரை அவனை உள்ளுக்குள் முறைத்தவாறே நின்றாள்.

அவனும் அசராமல் அவளைப் பார்த்தான்.

'உன் எண்ணம் எனக்குத் தெரியும் டாக்டர் பெண்ணே... நீ என்னை ஈர்ப்பதற்காக இப்படி நாடகமாடுகிறாய்... ஆனால் நான் உன்னைப் போல் ஆயிரம் பேரைப் பார்த்திருக்கிறேன்... நீ என் கால் தூசுக்கு சமம்... பார்க்கத்தானே போகிறாய்! இன்றைய தினத்தை உன் வாழ்க்கையில் நீ மறக்கவே மாட்டாய்.'

ஒரு இளநிலை மருத்துவரும் செவிலியரும் வந்து சில தாள்களை அவளிடம் தந்துவிட்டு நின்றனர். அவள் அதைப் படிக்கப் படிக்க, முகம் சற்றே மாறுதலடைந்தது.

மேத்தாவைத் தனியே அழைத்து ஏதோ சொல்ல, அவர் முகமும் மாறியது. இருவரும் மருத்துவ மொழியில் ஏதோ பேச, சங்கரும் நிவீஷும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

பேசிவிட்டு மேத்தா அவனருகில் வந்தார்.

"நிவீஷ்... உங்க டெஸ்ட் ரிசல்டைப் பார்த்தோம். ஐம் ஸாரி. உங்களை இன்னிக்கு டிஸ்சார்ஜ் பண்றதுல ஒரு சின்ன காம்ப்ளிகேஷன்..."

'காம்ப்ளிகேஷன்' எனக் கேட்டதும் அதிர்ந்தான் நிவீஷ்.

"What?? என்ன சொல்றீங்க? சர்ஜரில காம்ப்ளிகேஷனா? I knew it! நான் அப்பவே சொன்னனே...இந்த டாக்டர் வேணான்னு... இப்ப பாருங்க... ஆபரேஷன்ல ஏதோ தப்பு பண்ணி... என்னை.. எனக்கு..."

அதற்கு மேல் என்ன பேசுவதெனத் தெரியவில்லை அவனுக்கு. என்ன பிரச்சினை என்றே புரியாமல் கத்துவது அவனுக்கே தெரிந்தது. ப்ரகதியோ உக்கிரத்தின் உச்சத்தில் இருந்தாள்.

"கத்தாதீங்க மிஸ்டர். அவர் சொல்ல வந்ததைப் பொறுமையா கேளுங்க. அப்றம் பேசுங்க."

"சார்.. உங்ககிட்ட ப்ரகதி சொல்லியிருப்பாங்கனு நினைக்கறேன்... விபத்து நடந்தப்ப உங்க கழுத்து எலும்பில ஒரு whiplash injury, அதாவது கழுத்து நரப்பு பிறழ்வு இருந்தது. உங்களுக்கு வலி இல்லாததால, அது எந்தப் பிரச்சினையும் குடுக்காதுன்னு நினைச்சோம். அதனால நாங்க எதுவும் ட்ரீட் பண்ணல... ஆனா இப்ப, காலைல எடுத்த ஸ்கேன்ல, அது லேசா பெருசாயிருக்கறது மாதிரித் தெரியுது. அதான் ரிப்போர்ட்ல இருக்கு. ஒரு எச்சரிக்கைக்காக ப்ரகதி எங்கிட்ட சொன்னாங்க. அவ்ளோதான்."

மேத்தா பதவிசாகக் கூற, ப்ரகதி அழுத்தமான பார்வையால் அவனைத் துளைத்தாள். அதில் திமிரும் கேலியும் கலந்து மின்னியது.

அவன் சற்றே அமைதியானான்.
'கொஞ்சம் அதிகமாகக் கத்திவிட்டோமோ...'

கண்ணில் சந்தேகத்தோடு சங்கரைத் திரும்பிப் பார்த்தான் அவன். அவர் தவிப்போடு நின்றிருந்தார். ஏனெனப் புரியாமல் அவன் பார்க்க, அவரோ மெல்ல அவன் கட்டிலருகில் குனிந்தார்.

"சார்.. மணி ஒன்பதாகப் போகுது..."

அவர் கூறியதும்தான் நேற்று முடிவு செய்த அவனது திட்டம் நினைவுக்கு வர, திகைப்பில் முகம் வெளிறியது அவனுக்கு.

ப்ரஸ்மீட்?

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top