49 இதய சிகிச்சை நிபுணர்
49 இருதய சிகிச்சை நிபுணர்...
புனிதா லேசாய் அசைவதை கண்ட ஆர்த்தி,
"அவங்க மூவ் பண்றாங்க" என்றாள்.
அவரது அசைவுகளை கவனித்தபடியே மருத்துவத்தை தொடர்ந்தார் மருத்துவர். மெல்ல கண்விழித்தார் புனிதா. அவரது பார்வை, அவருக்கு எதிரே நின்ற ஆர்த்தியின் மீது விழுந்தது. சந்தேகமின்றி, அவர் அவளை சினேகா என்று நினைத்துக் கொண்டார். தனக்கு ஏற்பட்ட விபத்துக்கு முன்னாள் நடந்த விஷயம் அவரது நினைவுக்கு வந்தது. அது அவரது முகத்தில் பதற்றத்தை வரவழைத்தது.
"சினேகா நான் சொல்றதை கேளு. தயவு செய்து அவரோட வாழ்க்கையை நாசம் பண்ணிடாத. அவருக்குன்னு இந்த சமுதாயத்தில் ஒரு மரியாதை இருக்கு. இதுல அவரோட தப்பு எதுவுமே கிடையாது. நான் தான் அவருக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம்னு நினைச்சி விலகியே இருந்துட்டேன். அவரை விட்டுடு சினேகா. தப்பு பண்ணவ நான் தான்" என்றார் புனிதா.
அவருக்கு அருகில் சென்று அமர்ந்த ஆரத்தி,
"நீங்க என்ன தப்பு செஞ்சீங்க?" என்றாள்.
"நான் அவரை சந்திக்கணும்னு நினைக்காததுக்கு ஒரு காரணம் இருக்கு. என் மாமாவுடைய முதலாளி என்னை கெடுத்துட்டான். அப்போ நீ மட்டும் என் வயித்துல இல்லாம இருந்திருந்தா நான் அப்பவே செத்திருப்பேன்"
"ஆனா நீங்க ஏன் சாகணும்? அதுல உங்க தப்பு என்ன இருக்கு?" என்றாள் ஆர்த்தி.
"இல்லாம இருக்கலாம்... ஆனா வெங்கட்ராகவனுக்குன்னு இந்த சமுதாயத்தில் ஒரு மரியாதை இருக்கு. என்னை மாதிரி கெட்டுப் போன ஒரு பொம்பளையை அவர் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு நினைச்சேன். அதே நேரம், என்னோட வயித்துல இருந்த உன்னையும் கலைக்க எனக்கு மனசு வரல. உன் ஒருத்திக்காக தான் நான் வாழனும்னு நெனச்சேன். நீ விருப்பப்பட்ட படியே உன்னை நான் படிக்க வச்சேன். தயவு செய்து அவரை தொந்தரவு செய்யாத. அவருக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு... மனைவியும், மகளும் இருக்காங்க. அவங்களுடைய வாழ்க்கையை அவங்கள வாழ விடு. என்னோட கதை, முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும்..."
ஆர்த்திக்கு தொண்டையை அடைத்தது. இந்த தன்னலமற்ற பெண்மணி தான் சினேகாவை பெற்றவர் என்பதை அவளால் நம்ப முடியவில்லை. சினேகா அனைவரது வாழ்க்கையிலும் வந்த சாபகேடு.
"நான் யாரையும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீங்க ரெஸ்ட் எடுங்க" என்றாள் ஆரத்தி, தான் சினேகா இல்லை என்பதை காட்டிக் கொள்ளாமல்.
அவளை அணைத்துக் கொண்ட புனிதா,
"ரொம்ப நன்றி சினேகா. உன்னோட படிப்புக்காக நான் கொஞ்சம் பணம் சேர்த்து வச்சிருக்கேன். அதை வச்சு, உனக்கு என்ன படிக்கணும்னு தோணுதோ, காலேஜ்ல சேர்ந்து படிச்சு முன்னுக்கு வந்துக்கலாம்" என்றார்.
அவரிடமிருந்து தன்னை பின்னால் இழுத்துக் கொண்ட ஆர்த்தி,
"நம்ம அதைப் பத்தி அப்புறமா பேசலாம். இப்போ நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க"
அப்பொழுது, புனிதாவின் பார்வை அங்கிருந்த நாள்காட்டியின் மீது விழுந்தது. அதில் இருந்த தேதியை பார்த்து முகம் சுளித்தார். யாழினியனும், ஆர்த்தியும் அவர் பார்த்த திசையை நோக்கி திரும்பினார்கள். அவர் உண்மையை புரிந்து கொண்டது அவர்களுக்கு புரிந்து போனது. குழப்பத்துடன் ஆரத்தியை பார்த்த புனிதா, அப்பொழுது தான் அவள் கழுத்தில் இருந்த தாலி சரடை கவனித்தார்.
"என்ன சினேகா இதெல்லாம்? உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா? இது 2022ஆ? எனக்கு என்ன ஆச்சு? என்னை கார் இடிச்சதுக்கு பிறகு, என்ன நடந்தது? என்னால எதுவுமே ஞாபகப்படுத்த முடியலையே..."
"நீங்க கோமாவில் இருந்தீங்க..."
"கோமாவுலயா?" என்று அதிர்ந்தார் புனிதா.
"ஆமாம். கடந்த பதினைஞ்சு வருஷமா நீங்க கோமாவில் தான் இருந்தீங்க" என்றான் யாழினியன்
"உனக்கு எப்போ கல்யாணம் ஆச்சு? யார் உன்னோட புருஷன்? சொல்லு சினேகா"
"அவ சினேகா இல்ல" என்ற குரல் வந்த திசையை நோக்கி திரும்பிய புனிதா, அங்கு வெங்கட்ராகவன் நின்றிருந்ததை பார்த்து, அவரை அடையாளம் கண்டு கொண்டு அதிர்ச்சி அடைந்தார்.
"நீங்களா?"
ஆமாம் என்று தலையசைத்த வெங்கட்ராகவன்,
"இவ சினேகா இல்ல... ஆர்த்தி" என்றார்.
"அப்படின்னா, உங்க பொண்ணா?"
ஆமாம் என்று தலையசைத்தார்.
"நீங்க எப்படி இங்க?"
யாழினியனை சுட்டிக்காட்டிய வெங்கட்ராகவன்,
"இவர் என்னோட மாப்பிள்ளை. இது அவருடைய ஹாஸ்பிடல். ஆர்த்தியும் டாக்டர் தான். யாழினியன் தான் உனக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்துக்கிட்டு இருக்காரு"
தன் கைகளை குவித்த புனிதா,
"ரொம்ப நன்றிங்க" என்றார்.
அந்த *நன்றியை ஏற்றுக் கொண்டேன்* என்பது போல் லேசாய் தலையசைத்தான் யாழினியன்
தயக்கத்துடன் ஆர்த்தியை பார்த்த புனிதா,
"என்னை மன்னிச்சிடுமா. நான் வேணுமுன்னு உங்க அப்பாவை பத்தின உண்மையை உன் கிட்ட சொல்லல... உன்னை சினேகான்னு நினைச்சிட்டேன்"
"தெரியும். உங்களுக்கு ரெஸ்ட் வேணும். நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்க"
"சினேகா எங்க இருக்கா?"
"நம்ம அவளைப் பத்தி அப்புறம் பேசலாம்" என்றான் யாழினியன்.
யாழினியன் அதை கூறிய விதத்திலிருந்தே ஏதோ தவறாகப்பட்டது புனிதாவுக்கு.
"எங்கப்பா சினேகா? தயவு செய்து சொல்லுங்க" என்றார் பதட்டத்துடன்.
"அவ நல்லா தான் இருக்கா. ஆனா இங்க இல்ல" என்றார் வெங்கட்ராகவன்.
"அப்படின்னா?"
"நான் உன்கிட்ட அப்புறமா சொல்றேன். இப்போ நீ ரொம்ப பலவீனமா இருக்க. எங்களுக்கு கொஞ்சம் டைம் கொடு" என்றார் வெங்கட்ராகவன்.
"எனக்கு ரொம்ப பயமா இருக்கு. எதுவுமே சரியா படல. சினேகா ஏதாவது தப்பு செஞ்சுட்டாளா?" என்று பதறினார் அவர்.
அனைவரும் அமைதி காத்தனர்.
"எனக்கு சினேகாவை பத்தி நல்லா தெரியும். அவ ரொம்ப கோவக்காரி. கண்டிப்பா ஏதாவது தப்பு செஞ்சுருப்பா"
யாழினியனும், வெங்கட்ராகவனும், அவருக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவரை பொருளுடன் பார்த்தார்கள்.
"அவங்க கிட்ட உண்மையை மறைக்கிறதுல எந்த பிரயோஜனமும் இல்ல. ஏன்னா, நீங்க மறைக்கிற விஷயம் அவங்களுக்கு புரிஞ்சு போச்சு. அவங்க அதையே நெனச்சு அவங்களை ஸ்ட்ரெஸ் பண்ணிக்க போறாங்க... உண்மையை சொல்லிடுங்க" என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் அந்த மருத்துவர்.
"சினேகா செஞ்சது எல்லாமே மன்னிக்க முடியாத தப்பு மட்டும் தான்" என்றார் வெங்கட்ராகவன்.
"அவ என்ன செஞ்சா?"
"நீ டென்ஷன் ஆகாம அமைதியா இரு"
"சரி டென்ஷன் ஆகாம இருக்கேன். அவ என்ன செஞ்சான்னு சொல்லுங்க"
அவள் செய்த அத்தனை வித்தைகளையும் கூறினார் வெங்கட்ராகவன். இடிந்து போனார் புனிதா. தனது மகள் இரக்கமற்ற காட்டேரியாக இருப்பாள் என்று அவர் சிறிதும் எதிர்பார்த்து இருக்கவில்லை. தனக்கு வசதியான வாழ்க்கை கிடைக்கவில்லை என்பதற்காக, இப்படியா ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீர்குலைப்பது? அவளது தந்தையை பறித்து, குழந்தையை பறித்து, அனைத்தையும் பறித்து, நிற்கதியில் நிற்க வைத்து அப்படி என்ன சந்தோஷத்தை கண்டு விட்டாள்? தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதார் புனிதா. அவரது கையை பிடித்து தடுத்த ஆர்த்தியை பார்த்து,
"என்னை மன்னிச்சிடு மா... உன் முன்னால நிக்க கூட எனக்கு தகுதி இருக்கான்னு எனக்கு தெரியல. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாத ஒரு மிருகத்தை பெத்த எனக்கு, இந்த உலகத்துல வாழற தகுதி கூட கிடையாது"
"இதுல உங்க தப்பு எதுவும் இல்ல"
"எல்லாமே என்னோட தப்பு தான். அவளை நான் பெத்திருக்கவே கூடாது. அவளை நல்லவளா வளர்க்காம போனதும் என்னோட தப்பு தான். அவளை நினைச்சி நான் ரொம்ப வெட்கப்படுறேன். நான் அவளை பார்க்க கூட விரும்பல" என்று கதறினார் புனிதா.
"தயவு செய்து அழாதீங்கம்மா"
ஆர்த்தி தன்னை *அம்மா* என்று அழைத்ததை கேட்டு, திடுக்கிட்டு அழுகையை நிறுத்தினார் புனிதா.
"என் பொண்ணு உன்னோட வாழ்க்கையை சின்னாபின்னமாக்கினா... உன் குழந்தையை உன்கிட்ட இருந்து பிரிச்சா... ஆனாலும் நீ என்னை அம்மான்னு கூப்பிடுற... நான் உன்னை பெத்திருக்கக் கூடாதா..." முகத்தை மூடிக்கொண்டு அழுத அவரைப் பார்த்து, யாழினியனும் வெங்கட்ராகவனும் உணர்ச்சிவசப்பட்டார்கள்.
"நடந்தது நடந்தது தான். அதை யாராலும் மாத்த முடியாது. அதுக்காக இப்ப வருத்தப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்ல. நம்ம எல்லாருமே பாதிக்கப்பட்டவங்க. எந்த தப்பும் செய்யாம தண்டனை அனுபவிச்சவங்க. அதையெல்லாம் மறக்குறது தான் நமக்கு நல்லது" என்றாள் ஆர்த்தி.
புனிதாவிடம் அனுசரணையாய் பேசிய ஆர்த்தியை பார்த்து நிம்மதி அடைந்தான் யாழினியன். ஆர்த்தி கூறுவது சரிதான் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் சினேகாவால் பாதிக்கப்பட்டவர்கள் தானே? அனைவரும் நல்லவர்கள்... ஆனால் அவர்கள் அனுபவித்தவை அனைத்தும் கொடுமை... எப்படியோ, புனிதாவின் விஷயம் ஆரத்தியால் நல்ல விதமாக தீர்க்கப்பட்டு விட்டது.
யாழினியனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. இந்த இரண்டு சகோதரிகளுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்...! வெளிப்பார்வைக்கு இருவரிடையிலும் எந்த வித்தியாசமும் இல்லை. இருவருக்கும், ஒரே முகம், ஒரே உடலமைப்பு, இருவரும் இருதய சிகிச்சை நிபுணர்கள். ஆனால், இதயத்தால் முற்றிலும் மாறுபட்டவர்கள். சினேகா, இதயத்தை வெறும் உறுப்பாக மட்டுமே பார்த்து வந்தவள். ஆனால் ஆர்த்தியோ, அந்த இதயத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய உயர்ந்த இதயம் படைத்தவள். இந்த இதய நிபுணரின் இதயம் ஆராதனைக்குரியது. என்று எண்ணி புன்னகைத்தான் யாழினியன்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு,
இப்பொழுது ஆரத்தி முழு இதய சிகிச்சை நிபுணர் ஆகிவிட்டாள். அவளுடைய கனவு நினைவாகிவிட்டது. இன்று யாழ் மருத்துவமனையின் இதய சிகிச்சை பிரிவின் மருத்துவராக பொறுப்பேற்க இருக்கிறாள்.
அவளுக்கு இனிப்பை ஊட்டி விட்டார் பாட்டி. அவரது காலை தொட்டு ஆசி பெற்றாள் ஆர்த்தி.
"ஒரு அம்மாவா இருந்துகிட்டு படிச்சு முன்னுக்கு வர்றது சாதாரண விஷயம் இல்ல. நீ அதை சாதிச்சிருக்க. இதோட நிக்காம இன்னும் நிறைய விஷயங்களை உன்னோட வாழ்க்கையில நீ சாதிக்கணும். பெரிய டாக்டர்னு பேர் எடுக்கணும்" என்றார் பாட்டி.
"யாழும் இந்த குடும்பமும் தான் பாட்டி என்னுடைய பலம்"
"நாங்க உனக்கு ஆதரவாளர்கள் மட்டும் தான். உன்னோட கடின உழைப்பும் விடாமுயற்சியும்தான் உன்னுடய பலம்" என்றார் பாட்டி.
"நீங்க சொல்றது சரி பாட்டி. ஆனா அதை ஆர்த்தி ஒத்துக்கவே மாட்டா... அவளுக்கு அது தெரிஞ்சாலும் கூட..." என்று சிரித்தான் யாழினியன்.
"கிளம்பலாமா?" என்றாள் ஆர்த்தி அவனை மேலும் பேச விடாமல்.
அவளது புராணத்தை பாட ஆரம்பித்தால், சலிக்காமல் பாடிக் கொண்டே இருப்பானே யாழினியன்...
மருத்துவமனையை நோக்கி அவர்களது பயணம் தொடங்கியது. அவளது பிரத்தியேக அறைக்கு அழைத்துச் சென்றான் யாழினியன். அவள் ஒரு இதய சிகிச்சை நிபுணர் என்ற அதிகாரப்பூர்வமான இருக்கை அவளுக்காக காத்திருந்தது.
"இந்த ஹாஸ்பிடலோட கார்டியாலஜிஸ்ட் அப்படிங்கற பொறுப்பை ஏத்துக்கிட்டு, எங்களை கௌரவிப்பீங்களா மேடம்?" என்றான் யாழினியன்.
விளையாட்டாய் அவனது தோளில் தட்டினாள் ஆர்த்தி. அவள் தோள்களைப் பற்றி அந்த நாற்காலியில் அமர வைத்து, ஸ்டெதஸ்கோப்பை எடுத்து அவள் கழுத்தில் போட்டு,
"வெல்கம் டு யாழ் ஹாஸ்பிடல்..." என்றான்.
"மை பிளஷர்" என்றாள்.
அப்பொழுது அந்த அறையிலுள் நுழைந்த வெங்கட்ராகவன்,
"கங்கிராஜுலேஷன்ஸ் ஆர்த்தி" என்றார்.
"தேங்க்யூ டாட்... அம்மா எப்படி இருக்காங்க?" என்றாள்.
"இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ண போறாங்க"
"நிஜமாவா?"
"அவளை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போகலாம்னு இப்போ தான் டாக்டர் சொன்னாரு"
"அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்களே டாட்?"
"இருக்க மாட்டாளா பின்னே? பதினஞ்சு வருஷமா கோமாவில் இருந்திருக்காளே... எதிர்ப்பு சக்தியே சுத்தமா இல்ல. அவ தேரி வர கொஞ்ச நாள் ஆகும்"
"நீங்க தான் டாட் அவங்களை பார்த்துக்கணும்"
"நிச்சயமா செய்வேன் டா"
"இன்னைக்கு சாயங்காலம் நான் ஃபிளாட்டுக்கு வந்து, திங்ஸை எல்லாம் அரேஞ்ச் பண்ண உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்"
"தேங்க்ஸ் மா"
"ஆனா, எனக்கு இது சுத்தமா பிடிக்கல" என்றான் யாழினியன்.
அப்பாவும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.
"இது ரொம்ப சங்கடமான விஷயம் யாழ். எப்படி புனிதாவை கூட்டிக்கிட்டு உங்க வீட்ல வந்து நான் தங்க முடியும்?"
"யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க அங்கிள். நீங்க என்னை நம்பலாம்"
"யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்கன்னு எனக்கு தெரியும். ஆனாலும்..."
"டாட்... நீங்க யாழை சீரியஸா எடுத்துக்காதீங்க. நம்ம சரியா தான் செய்றோம்னு அவருக்கு தெரியும். இருந்தாலும் மாப்பிள்ளையோட கடமையை சரியா செய்றாராம்..." என்று கிண்டலாய் சிரித்தாள் ஆர்த்தி. யாழினியன் அவளை பார்த்து முறைத்தான்.
"அவர் ஒரு நல்ல மாப்பிள்ளை. அதனால தான்... " என்ற வெங்கட்ராகவன், சிரித்தபடி அங்கிருந்து சென்றார்.
"இதெல்லாம் ரொம்ப டூ மச். அவர் என்னைப் பத்தி என்ன நினைப்பாரு?" என்றான் யாழினியன்.
"அவரு ஒன்னும் நினைக்க மாட்டாரு. புனிதாம்மாவை நினைச்சு ரொம்ப வருத்தப்படுறாரு. அதுக்கு ஏதாவது பரிகாரம் தேடணும்னு நினைக்கிறாரு. அதை அவரை செய்ய விடு..."
" சரி, உன் இஷ்டம் "
"இப்போ என் கேபினை விட்டு கிளம்பு. நான் பேஷன்ட்ஸை கவனிக்கணும்"
"நல்லா கவனி... " என்றபடி அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.
"நீ இங்க என்ன செய்யப் போற?"
"என் பொண்டாட்டி பேஷண்ட்டுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்குற அழகை ரசிக்க போறேன்"
சிரித்தபடி, தான் கவனிக்க வேண்டிய நோயாளியை அழைத்தாள் ஆர்த்தி. மாறாத புன்னகையுடனும் பெருமைடனும் அவளை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் யாழினியன். ஏன் இருக்காது? அவள் என்னவாக வேண்டும் என்று ஆசைப்பட்டாளோ, அதுவாகவே ஆகச் செய்து விட்டானே அவன்...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top