4 வாழ்நாள் விருப்பம்

4 வாழ்நாள் விருப்பம்

நினைவலைகள் தொடர்கிறது...

யாழினியனும், மகேந்திரனும் சிமெண்ட் பென்சில் அமர்ந்து தங்கள் பாடத்தை பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். யாழினியனை லேசாய் இடித்து, நிமிர்ந்து பார் என்று சைகை செய்தான் மகேந்திரன். தலையை நிமிர்த்தி பார்த்தவன் அங்கு ஒரு பெண் குழைவாய் சிரித்தபடி  நின்று கொண்டிருப்பதை கண்டான். அவள் கணித பாடப்பிரிவை சேர்ந்த சம்யுக்தா.

"என்ன?" என்றான் யாழினியன்.

"நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என்றாள் சம்யுக்தா.

வெறுப்புடன் தன் தலையை சொறிந்தான் மகேந்திரன். அவன் அங்கிருந்து செல்ல முற்பட்ட போது, அவன் தோளை சுற்றி வளைத்துக் கொண்டு,

"இங்கேயே சொல்லு" என்றான் யாழினியன்.

"அது... வந்து..." என்று அவள் தடுமாற,

மகேந்திரன் கொட்டாவி விட்டான்.

"என்ன விஷயம்?" என்றான் யாழினியன்.

"ஐ லவ் யூ" என்றாள் சம்யுக்தா.

"ஓஹோ... "

அவனது ஆர்வம் இன்மையை பார்த்து,

"நான் உன்னை ரொம்ப டீப்பா லவ் பண்றேன்... உன்னை பார்த்த நாளிலிருந்து..."

"எனக்காக எவ்வளவு நாள் காத்திருப்ப?"

"லைஃப் லாங் காத்திருக்க தயாரா இருக்கேன்"

"அப்படின்னா, எட்டு வருஷம் கழிச்சு வா"

"எட்டு வருஷமா? ஆனா ஏன்?"

"நம்ம இப்ப தான் லெவன்த் படிக்கிறோம். நான் மெடிசன் முடிக்க எட்டு வருஷம் ஆகும். அப்பவும் நீ என்னை காதலிச்சுக்கிட்டே இருந்தா, நிச்சயம் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்"

"நான் நிச்சயம் காத்திருப்பேன். நம்ம இப்போ கமிட் ஆகலாம்"

"அதான் எனக்காக காத்திருக்கேன்னு சொல்றியே, அப்புறம் எதுக்கு கமிட் ஆகணும்?"

"இல்ல, அதுக்கு சொல்லல..."

"வேற எதுக்கு?"

"ஒன்னும் இல்ல..." அங்கிருந்து விரக்தியுடன் சென்றாள் சம்யுக்தா.

"இன்னும் எத்தனை பொண்ணுங்க கிட்ட நீ இதே டயலாக்கை சொல்றேன்னு நான் பாக்குறேன்" என்று சிரித்தான் மகேந்திரன்.

"நமக்கு பதினேழு வயசு தான் ஆகுது. இந்த வயசுல, எல்லாமே சரின்னு தோணும். ஒன்னை விட இன்னொன்னு பெட்டரா தெரியும். அதனால, நிச்சயமா என்னை விட பெட்டரானா ஒருத்தனை அவ தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருக்கு. என்னை பொறுத்த வரைக்கும், இந்த வயசுல, தேவையில்லாத விஷயத்துல கம்மிட் ஆகிறது சுத்த வேஸ்ட்"

அவர்கள் அமர்ந்திருந்த மரத்தின் அடுத்த பக்கத்தில் அமர்ந்து கொண்டு, அவர்கள் பேசுவதை ஆரத்தி கேட்டுக் கொண்டிருந்தது அவர்களுக்கு தெரியாது.

வாழ்க்கை பல விசித்திரங்கள் நிறைந்தது. எப்பொழுது எது எப்படி மாறும் என்று தெரியாது. அப்படித்தான், பன்னிரண்டு வருடங்களாக ஆறு பேருடன் இருந்த மெடிக்கல் டீமில் தவிர்க்க முடியாதவளாய் இணைந்தாள் ஆரத்தி. அவளுடைய எளிமையால் கவரப்பட்ட மைதிலியும், வானதியும் தான்  ஆரம்பத்தில் அவளுக்கு தங்கள் இருக்கைக்கு அருகில் இடம் கொடுத்தவர்கள். அவர்கள் மூலமாக மற்ற நால்வரும் அவளுக்கு நெருக்கமானார்கள். மெடிக்கல் டீமில் இணைந்து விட்ட, ஜர்னலிஸ்ட்டை பார்த்து அந்தப் பள்ளியின் மற்ற மாணவர்கள் வியப்படைந்தார்கள்.

இதற்கிடையில், ஆரத்திக்கு அந்தப் பள்ளி மாணவர்களிடையே இருந்த மவுசு அதிகரித்துக் கொண்டே சென்றது. நிறைய பேருக்கு அவளை பிடித்தது. ஒரு நாளைக்கு ஒருவராவது அவளிடம் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். அவளிடமிருந்த  அழகும், படிப்பும், திறமையும், எளிமையும், கருணையும், ஏதோ ஒரு விகிதத்தில் அனைவரையும் கவர்ந்தது. அவளது ஒரு பார்வைக்காக மாணவர்கள் லோலோ என்று அவள் பின்னால் அலைந்தார்கள். ஆனால் அவளோ எதற்காகவும் அலட்டிக் கொள்ளவில்லை.

சில மாணவர்கள், ஆர்த்தியை மடக்கிப் பிடிக்க, யாழினியனையும், மகேந்திரனையும் கூட அணுகினார்கள். ஆர்த்தியை விடாது தொந்தரவு செய்த சில மாணவர்களை யாழினியனும், மகேந்திரனும் உதைக்க கூட செய்தார்கள். ஆர்த்தி அவர்களுடன் இருந்தபோது மாணவர்கள் அவளிடம் நெருங்கவே பயந்தார்கள்.

ஆரத்தி தங்களுடன் இணைந்த பிறகு வானதியும், மைத்திலியும், தங்கள் நண்பர்களை வெகுவாய் கிண்டலும் கேலியும் செய்ய தொடங்கினார்கள். அதனால் அவர்களுடைய டீம் முன்பை விட உயிர்ப்புடன் காணப்பட்டது.

எப்பொழுதெல்லாம் ஆர்த்தியின் தந்தை வெளியூர் பயணம் செல்கிறாரோ, அப்பொழுதெல்லாம் ஆர்த்தி, வானதியின் வீட்டிலும், மைதிலியின் வீட்டிலும் தங்கினாள். அவர்களது வீட்டில், அவள் தங்குவதற்கு பெரிய சம்பிரதாயங்கள் எதுவும் இருக்கவில்லை. அவளும் அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாகி போனாள்.

யாழினியனுக்கு ஆர்த்தியை மிகவும் பிடித்துப் போனது. அவன் பெரும்பாலும் ஆர்த்தியுடன் சேர்ந்தே காணப்பட்டான். ஆர்த்தி தான் யாழினியனின் முதல் க்ரஷ் என்று கூறினால் அது மிகையாகாது. நட்புக்கு மீறிய ஒரு ஈர்ப்பு அவனுக்கு அவளிடம் ஏற்பட்டது. ஆனால் அதை எப்பொழுதும் அவன் காட்டிக் கொண்டதே இல்லை. அவன் அவளுடைய ரகசிய ரசிகன் ஆனான். அவளை தன் நெருங்கிய தோழியாக கொண்டதற்காக கர்வம் கொண்டான். அவளும் அவனுக்கு அதே முக்கியத்துவத்தை வழங்கினாள். அவன் அவளுடைய டாப் ப்ரியாரிட்டி ஆனான். ஆர்த்தியிடம் யாழினியனின் இடத்தை பெற அனைவரும் ஏங்கினார்கள். ஆர்த்தியிடம் தன் காதலை வெளிப்படுத்திய மாணவர்களின் முன்னால், தான் அவளுக்கு எவ்வளவு சிறப்பானவன் என்ற அளவிற்கு அலட்டிக் கொண்டான் யாழினியன்.

அவர்களுடைய பள்ளி வாழ்க்கை இன்னும் சில நாட்களில் முடிவு பெற இருப்பதால், மெடிக்கல் டீம் சோகத்தில் மூழ்கியது. ஏனென்றால் அதற்குப் பிறகு ஆர்த்தி அவர்களுடன் இருக்க மாட்டாள் அல்லவா? அவள் ஏதாவது ஒரு கலைக்கல்லூரியில் ஜர்னலிசம் பாடத்தில் சேர்ந்து விடுவாள். அவளிடமிருந்து அவர்கள் நிரந்தரமாய் பிரியப் போகிறார்கள். அதை நினைக்கும் போதெல்லாம் வானதியும் மைதிலியும் அழுதார்கள். ஆரத்தி ஒருத்தி தான், அவர்கள் டீமில் இணைந்த ஒரே ஒருத்தி. இப்பொழுது அவள் அவர்களிடமிருந்து பிரியப் போகிறாள். ஆனால் ஆர்த்தி எந்த கவலையும் இல்லாமல் தெளிவாக இருந்தாள். அவர்களையும் அப்படியே இருக்க அறிவுறுத்தினாள். அது அவர்களை மேலும் ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் ஆரத்தி எந்த அளவிற்கு மென்மையான பெண் என்று.

பள்ளியின் இறுதி நாள்

அது தான் அவர்களது பள்ளியின் இறுதி நாள். வழக்கம் போலவே அவர்களுடன் இருந்தாள் ஆர்த்தி. வானதியும், மைதிலியும் ஓயாமல் அழுதுக் கொண்டிருந்தார்கள். நிலவனால் கூட கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. மற்ற மூவருடைய கண்கள் கூட கலங்கி தான் இருந்தன.

"நீ எங்களை மறந்துட மாட்டல்ல, ஆர்த்தி?" என்றான் நிலவன்.

"வாய மூடு. அவ எப்படி நம்மளை மறப்பா?" என்றாள் மைதிலி.

"எங்க கூட எப்பவும் டச்ல இரு, ஆர்த்தி. டைம் கிடைக்கும் போது ஃபோன் பண்ணு" என்றான் மகேந்திரன்.

"பேசாம நானும் ஆர்த்தி கூட  ஜர்னலிசம் சேர்ந்திடப் போறேன்" என்றான் நிலவன் தொண்டை அடைக்க.

அனைவரும் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். யாழினியனிடம் வந்தாள் ஆர்த்தி.

"ஐ வில் மிஸ் யூ... மறக்காம எனக்கு கால் பண்ணு" என்றான் யாழினியன்.

"இங்கிருந்து போறதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும், யாழ்"

"சொல்லு, ஆர்த்தி"

"ஐ லவ் யூ"

அவளை நம்ப முடியாத பார்வை பார்த்தபடி,

"நீ இப்போ என்ன சொன்ன?" என்றான்.

"நீ கேட்டது சரி தான். ஐ லவ் யூ சோ மச்"

அவன் ஏதோ சொல்ல முயலும் போது அவனை தடுத்து நிறுத்தி,

"நீ மெடிசனை முடிக்கிற வரைக்கும் நான் வெயிட் பண்ணுவேன்."

மெல்ல கண்ணிமைத்தான் யாழினியன்.

"எனக்கு தெரியும் எப்படியும் நீ என்னை லவ் பண்ண போறதில்ல. வரப்போற நாள்ல, நான் என்னோட பாய் ஃப்ரெண்டை மாத்திக்குவேன்னு நீ நினைக்கலாம். அதனால தான், இவ்வளவு நாள் நான் என் காதலை உன்கிட்ட சொல்லாம இருந்தேன். இப்போ நான் உன்கிட்ட சொல்லிட்டேன். ஏன்னா, இந்த நிமிஷத்திலிருந்து ஒவ்வொரு கட்டத்திலும் என்னோட காதல் எப்படிப்பட்டதுன்னு நீ உணருவ"

யாழினியன் மட்டுமல்ல, மற்ற அனைவருமே ஆச்சரியப்பட்டு போனார்கள். இன்று ஒரு நாள் தான் அவள் அவர்களுடன் இருக்கப் போகிறாள். இன்றிலிருந்து அவர்கள் பயணிக்க போகும் பாதைகள் வேறு. அப்படி இருக்கும் போது, எப்படி ஒவ்வொரு கட்டத்திலும் அவள் தன்னை நிரூபிக்க போகிறாள்?

"ஆல் தி பெஸ்ட்" என்ற ஆர்த்தி தன் கையை யாழினியன் முன்பாக நீட்டினாள்.

மீளாத ஆச்சரியத்துடன் மெல்ல அவள் கையை பற்றி குலுக்கினான். ஆர்த்தி அவனை காதலிக்கிறாள் என்பது அவனை  மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. அவனுக்கு தெரியும், அவளுக்காக எத்தனை பேர் ஏங்கித் தவித்தார்கள் என்று. ஆனால் அவர்கள் யாரையுமே அவள் சட்டை செய்ததில்லை. அவன் வாழ்நாளிலேயே அவன் ரசித்த ஒரே பெண் ஆரத்தி தான். அதீத திறமைகளுடன் அனைவரையும் சுண்டி இழுக்கும் பெண்ணாக இருந்தாள் ஆரத்தி. என்றுமே அவள் தான் வகுப்பில் முதலிடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவளுடன் கை குலுக்கி புன்னகை புரிந்தான் யாழினியன். எப்படியும், அவளது முடிவில், அவள் நிச்சயம் உறுதியாய் இருக்கப் போவதில்லை என்ற எண்ணம் அவனுக்கு. புதிய கல்லூரியில், அவளுக்கு பல புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். மேலும் பலர் அவள் பின்னால் சுற்றித் திரியப் போகிறார்கள். நிச்சயம் அவளை அவர்கள் சிங்கிளாக இருக்க விடப் போவதில்லை. அவர்களது பள்ளியில் இருந்தே சிலர் அவள் சேரும் அதே கல்லூரியில் சேர்வது என்று பேசிக் கொண்டது அவனுக்கு தெரியும். எது எப்படியோ, ஆரத்தியின் முதல் காதல் தானாக இருப்பது அவனுக்கு மிகுந்த பெருமை.

.........

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.

மாவட்டத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருந்தாள் ஆர்த்தி. நல்ல மதிப்பெண்களை பெற்று, சென்னை மருத்துவக் கல்லூரியில் நமது மெடிக்கல் டீம் சேர்ந்தாகிவிட்டது.

( குறிப்பு: அப்பொழுதெல்லாம் நீட் தேர்வு இருக்கவில்லை. பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது)

அவர்கள் அனைவரும் தங்கள் கல்லூரியில் ஆர்த்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். வானதியும், மைத்திலியும் ஓடி சென்று அவளை அணைத்துக் கொண்டார்கள்.

"ஆர்த்தி, நீ இங்கேயா?"

"ஆமாம்"

"உன்னோட ஜர்னலிஸ்ட் கனவு என்ன ஆச்சு?"

"டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்ததால, என்னை மெடிசன் படிக்க சொல்லி எல்லாரும் கெஞ்சினாங்கப்பா. என்னோட சேவை நாட்டுக்கு தேவையாம். அவங்களை எல்லாம் பார்த்தா எனக்கு ரொம்ப பாவமா இருந்தது. அதனால தான் என்னோட ஆசையை போனா போகுதுன்னு விட்டுட்டேன்"

"நாங்க நம்பிட்டோம்" என்று யாழினியனை பார்த்தபடி கூறிய  அவர்கள் இருவரும், ஆர்த்தியை அணைத்துக் கொண்டு சிரித்தார்கள்.

யாழினியனை பார்த்து புன்னகை புரிந்தாள் ஆர்த்தி.

"உன்னோட அட்வெஞ்சரஸ் ஆம்பிஷனை மறந்துட்டியா?" என்றான் யாழினியன்.

"அது இன்னும் அப்படியே தான் இருக்கு" என்றாள் கூலாக.

"எப்படி?" என்றான் ஆச்சரியமாக.

"உன்னை லவ் பண்றதே பெரிய அட்வென்ச்சர் தானே?"

தன் உதடு கடித்து சிரித்தான் யாழினியன்.

"என்னை லவ் பண்ணவே மாட்டான்னு தெரிஞ்சி ஒருத்தனை நான் லவ் பண்றேனே... அது அட்வென்சர் இல்லயா?"

"நிஜமாவே எனக்காகவா உன்னோட ஆம்பிஷனை நீ விட்டுட்ட?"

 ஆமாம் என்று தலையசைத்தாள்.

"நீ செஞ்சது சரியில்ல"

"ஒரு தராசை கையில எடுத்தேன். அதுல ஒரு பக்கம் என்னோட ஆம்பிஷனையும், இன்னொரு பக்கம் உன்னையும் வச்சேன்.  உன்னை வச்ச தட்டு டக்குனு கீழே இறங்கிடுச்சு..."

அவனுடைய புன்னகை மேலும் விரிவடைந்தது.

"பை த வே... மெடிசனும் டேபிள் ஜாப் கிடையாது. ஒவ்வொரு தடவையும், நம்ம ஒரு சர்ஜரி அட்டென்ட் பண்ணும் போது அதுவும் பெரிய அட்வென்சரா தானே இருக்கும்?"

ஆமாம் என்று தலையசைத்தான் யாழினியன்.

"நான் தான் சொன்னேனே, இனிமே ஒவ்வொரு கட்டத்திலும் நீ என்னோட காதலை பார்ப்பேன்னு..."

ஒரு புறம் ஆச்சரியமாகவும், ஒரு புறம் பெருமையாகவும் இருந்தது அவனுக்கு. அவனுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு பெண், தன் வாழ்நாள் லட்சியத்தையே அவனுக்காக கைவிட்டு இருக்கிறாள் என்றால், அது மிகப்பெரிய விஷயம் தானே! மென்மையாய் புன்னகைத்தான் யாழினியன்.

நினைவலைகள் கரை ஒதுக்க, கண்விழித்தான் யாழினியன். அவன் நின்று கொண்டிருந்தது தன் அறை என்பதையும், சுற்றும் மற்றும் பார்த்து தான் நிகழ்காலத்தில் இருப்பதையும் உணர்ந்தான். எதார்த்தத்தை உணர்ந்த அவனது கண்கள் கலங்கின.

"நீ எங்க இருக்க, ஆர்த்தி? நான் இல்லாம நீ எப்படி இருக்க? எனக்கு தெரியும் ஒவ்வொரு நொடியும் நீ என்னை தான் நினைச்சுகிட்டு இருப்ப. என்கிட்ட திரும்பி வந்துடு, ஆரத்தி. நான் உனக்காக தான் காத்துக்கிட்டு இருக்கேன். ப்ளீஸ் வந்துடு..." தன் கண்களை மூடி கண்ணீரை சிதற விட்டான் யாழினியன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top