36 தொடரும் தவிப்பு...

36 தொடரும் தவிப்பு...

அவர்களுடைய கரங்கள் ஒருவரை ஒருவர் தழுவிய அதே நேரம், அவர்களது கண்கள், கண்ணீரை சொரிந்து மற்றவர் தோளை நனைக்க தவறவில்லை. ஒரு வழியாய், அவர்கள் சேர வேண்டிய இடம் வந்து சேர்ந்து விட்டார்கள்.

"ஆர்த்தி..."

"யாழ்..."

அவர்களது பெயர்களை தவிர, வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை... தாங்கள், நடுச்சாலையில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதும், அவர்களை சுற்றி சில பேர் இருக்கிறார்கள் என்பதும் கூட அவர்களுக்கு நினைவில்லை. எதைப் பற்றியும் அவர்கள் யோசிக்கவில்லை... யோசிக்கவும் விரும்பவில்லை.

அவளைக் கீழே இறக்கிவிட்டு, அவளது நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்த யாழினியன், அவள் நெற்றியோடு தன் நெற்றியை இணைத்து,

"ஐ அம் சாரி... ஐ அம் ரியலி சாரி..." என்றான்.

"இதுல உன்னோட தப்பு எதுவும் இல்ல. நான் தான் சைல்ட்டிஷா நடந்துக்கிட்டேன். அந்த ஒரு தப்பை செஞ்சதுக்காக நான் நிறைய அனுபவப்பட்டுட்டேன்... ஐ அம் சாரி"

"இல்ல ஆர்த்தி... இதுல எல்லாரையும் விட அதிகமா இழந்தது நீ தான். உனக்கு மட்டுமே சொந்தமான எல்லாத்தையும் நீ இழந்துட்ட. உனக்குன்னு எல்லாரும் இருந்தும், எல்லாரும் உன் கூட இருக்க வேண்டிய நேரத்துல, யாரும் இல்லாம தனியா அவஸ்தை பட்டிருக்க..."

"ஆனா, ஒரு நாள் நிச்சயம் நான் உன்கிட்ட வந்துடுவேன்னு எனக்கு நம்பிக்கை இருந்தது"

"நீ எனக்கு கிடைச்சிடுவேங்குற நம்பிக்கை எனக்கும் இருந்தது"

உணர்ச்சி வசப்பட்டவளாய் அவனை அணைத்துக்கொண்டாள் ஆர்த்தி. யாழினியனும் அதையே செய்ய தவறவில்லை.

அப்பொழுது, வெங்கட்ராகவன் அவர்களுக்கு அருகில் நிற்பதை அவர்கள் கவனித்தார்கள். யாழினியனை விட்டு விலகி, அவரைப் பார்த்து புன்னகைத்தாள் ஆர்த்தி. என்றும் இல்லாத அளவிற்கு தன் மகளை எதிர்கொள்ள சங்கடப்பட்டார் வெங்கட்ராகவன். அவரது சங்கடத்திற்கு காரணம், சினேகா, ஆர்த்தியிடம், புனிதாவைப்  (சினேகாவின் அம்மா) பற்றி அனைத்தையும் கூறிவிட்டு இருப்பாள் என்பது தான். 

அப்போது தான், அங்கு நின்றிருந்த போலீஸ் தீர்ப்பை கவனித்தான் ஹரி. அவனுக்குள் அலாரம் அடித்தது. ஆர்த்தி கொண்டு வந்த பையை கீழே வைத்துவிட்டு, அந்த இடத்தை விட்டு வேகமாய் தன் காரை கிளப்பிக் கொண்டு சென்றான் ஹரி.

"யாரது? எதுக்காக உன் கிட்ட போயிட்டு வரேன்னு கூட சொல்லாம இப்படி ஓடுறாரு?" என்றான் யாழினியன்.

"என்னை அடைச்சு வச்சிருந்தவங்கள்ல அவரும் ஒருத்தர்" 

"என்ன்னனது???? எதுக்காக அவனை போக விட்ட?" என்றான் யாழினியன் கோபமாக.

"போகட்டும் விடு யாழ்"

"உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு?"

"அவர் தான் இப்போ என்னை வெளியே விட்டாரு..."

"அவன் உன்னை விடலனாலும், நாங்க வந்து உன்னை மீட்டிருப்போம்"

"அவங்களுக்கு இன்னைக்கு தான் குழந்தை பிறந்திருக்கு. போகட்டும் விடு..."

அப்போதைக்கு அவளிடம் விவாதம் செய்ய விரும்பவில்லை யாழினியன். தன் கண்களை சுருக்கி, பல்லை கடித்த படி, வெங்கட்ரகவனை ஒரு பார்வை பார்த்தான் அவன். அவன் பார்வையால் கூறியதை புரிந்து கொண்ட அவர், சரி என்று தலையசைத்து விட்டு, தன்னுடன் வந்த போலீசாரை நோக்கி சென்றார்.

"நமக்கு கிடைச்ச லொகேஷனுக்கு போய், அங்க இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணுங்க, எஸ்ஐ சார்" என்றார்.

"நான் ஏற்கனவே லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு விஷயத்தை சொல்லிட்டேன் சார். இந்த நேரம் அவங்க, அந்த வீட்டை சுத்தி வளச்சிருப்பாங்க" என்றார் உதவி ஆய்வாளர்.

"தேங்க்யூ சோ மச். அவங்களை அரெஸ்ட் பண்ணதுக்கு பிறகு, எனக்கு தயவு கொஞ்சம் ஃபோன் பண்ணி சொல்லுங்க"

"நிச்சயம் சொல்றேன் சார்"

மீண்டும் அவர்களிடம் வந்தார் வெங்கட்ராகவன். இன்னும் கூட அவர்கள் இருவரும் நடு சாலையில் தான் நின்று கொண்டிருந்தார்கள். கலைந்து விட்டிருந்த அவளது கூந்தலை, ஒதுக்கி, சரி செய்த யாழினியன்,

"நீ கொஞ்சம் கூட மாறவே இல்ல... காலேஜ் டேஸ்ல பாத்த மாதிரி அப்படியே இருக்க..." என்றான்.
 
"ஆனா நீ ரொம்ப மாறிட்ட. காலேஜ் டைம்ல இருந்ததை விட ரொம்ப ஹேண்ட்ஸமா இருக்க"

வலியோடு புன்னகைத்த யாழினியன்,

"போகலாமா?" என்றான்.

"இவரை ஏன் கூட்டிகிட்டு வந்த?" என்றாள் ஓரக்கண்ணால் வெங்கட்ராகவனை பார்த்தபடி.

இதற்காகத் தான், வெங்கட்ராகவன் அவனை, தன்னுடன் வரவேண்டாம் என்று கூறிய பொழுதும், கேட்காமல் வந்தே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்தான் யாழினியன். ஏனென்றால், ஆரத்தி அவனை எதிர்பார்த்து காத்திருப்பாள் என்று அவனுக்கு தெரியும். நல்லவேளை, வெங்கட்ராகவன் கூறியதற்கு அவன் ஒப்புக்கொள்ளவில்லை. இல்லாவிட்டால், ஆரத்தி ஏமார்ந்து போயிருப்பாள்.

"தன்னோட காண்டாக்ட்ஸை யூஸ் பண்ணி, அவர் தான் நீ இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சாரு. நீ எனக்கு ஃபோன் பண்றதுக்கு முன்னாடியே, நீ இருக்கிற இடத்துக்கு அவர் கிளம்பிட்டாரு"

"நடந்தது எல்லாத்துக்கும் அவர் தான் காரணம். சினேகா அவரோட பொண்ணு தான், தெரியுமா?"

"தெரியும். அவர் தான் சொன்னாரு. ஆனா நடந்ததுக்கு அவர் பொறுப்பு இல்ல"

"ஆனா, சினேகா, அவர் மேலயும், என் மேலயும் கடுமையான கோபத்தில் இருக்கா..."

"அவ எப்படிப்பட்டவன்னு எனக்கு நல்லாவே தெரியும்..."

"அவ புனிதாவை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தினான்னு உனக்கு தெரியுமா?"

"புனிதாவை மட்டுமில்ல... வெங்கட்ராகவன் அங்கிளையும் தான். தன்னோட மகள், ஏன் இப்படி கொடுமைக்காரியா மாறினான்னு தெரியாம, அவர் ரொம்பவே குழம்பிப் போயிருந்தார்... பாவம் அவர்"

"புனிதா எப்படி இருக்கா?"

"யாழ் இல்லத்துல ரொம்ப சந்தோஷமா இருக்கா"

"நான் அவளை பார்க்கணும்."

"வா, போகலாம்..."

அவள் கையைப் பிடித்து தன் காரை நோக்கி அழைத்து வந்தான் யாழினியன். வெங்கட்ராகவனை காரை ஓட்டச் சொல்லிவிட்டு, ஆர்த்தியுடன் தான் பின் இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம் என்று அவன் எண்ணியிருந்த போது,

"ஆர்த்தி, நம்ம வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி, நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றார் வெங்கட்ராகவன்.

யாழினியனும், ஆர்த்தியும் ஒருவரை ஒருவர் ஏமாற்றத்துடன் பார்த்துக் கொண்டார்கள். யாழினியனால் அவரை புரிந்து கொள்ள முடிந்தது. ஆர்த்தியின் மனதில் இருக்கும், தன்னைப் பற்றிய தவறான எண்ணத்தை களைய நினைக்கிறார் அவர். அது அவசியமும் கூட. அவரிடம் பேசச் சொல்லி ஆர்த்திக்கு சைகை செய்தான் யாழினியன். அவள், சரி என்று தலையசைத்துவிட்டு, வெங்கட்ராகவனுடன் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள். அவளது கையை பிடித்துக் கொண்டார் வெங்கட்ராகவன்.

"என்னை மன்னிச்சிடு ஆரத்தி... நான் செத்து மடிஞ்சிடுச்சின்னு நெனச்ச என்னோட கடந்த காலம், உன்னோட எதிர்காலத்தை உயிரோடு கொல்லும்னு நினைச்சி கூட பார்க்கல" என்று தனது பழைய கதையை கூறத் தொடங்கினார்.

இதற்கிடையில், யாழ் இல்லம்

புனிதாவை தேடிக் கொண்டு வந்தாள் சினேகா. இந்தியா வந்த பிறகு புனிதாவின் மொத்த வழக்கமும் மாறிவிட்டது. யாழ் குடும்பத்தினர் அவளுக்கு செல்லம் கொடுத்து கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அவளுக்கு நல்லதல்ல. சினேகா விரும்பியது இதுவல்ல. புனிதா, வெங்கட்ராகவனின் அறையில் இருப்பாள் என்று எண்ணி, அங்கு வந்தாள் சினேகா. ஆனால், அவரது அறை, காலியாய் கிடந்தது. எங்கு போனார் வெங்கட்ரராகவன்? அங்கிருந்து நேராய் யாழினியனின் அறைக்கு வந்தாள். அவனது அறையும் காலியாகவே கிடந்தது. அவர்கள் இருவரையும் தேட துவங்கினாள்.  ஆனால் அவர்கள் எங்கும் காணப்படவில்லை. அன்று தான் ஸ்ட்ரைக் ஆயிற்றே...! அப்படி இருக்கும் போது, அவர்கள் இருவரும் எங்கு சென்றார்கள்? வெங்கட்ராகவனுக்கு ஃபோன் செய்தாள் சினேகா. அவர் அவளது அழைப்பை ஏற்கவில்லை. ஆர்த்தியுடன் பேச வேண்டும் என்பதற்காக, தனது கைபேசியை சைலன்ட் மோடில் போட்டிருந்தார் அவர். மேலும் இரண்டு முறை அவரது எண்ணுக்கு முயற்சி செய்தாள் சினேகா. ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை. பின் யாழினியனுக்கு  ஃபோன் செய்ய, அவனது கைபேசி எங்கேஜ்டாய் இருந்தது. அவன், என்ன செய்ய வேண்டும் என்பதை, தனது நண்பர்களுக்கு கூறிக் கொண்டிருந்தான். இறுதியாய் புனிதாவை தேடி பாட்டியின் அறைக்கு வந்தாள் சினேகா. அவரும் அங்கு இருக்கவில்லை. யாழினியனின் முன்யோசனையின் படி அவர், புனிதாவை அழைத்துக் கொண்டு, வேலைக்காரர்கள் தங்கும் குவாட்டர்ஸுக்கு சென்று விட்டார். வீட்டில் ஒருவரும் இல்லாமல் போகவே, சினேகாவின் தலையில் அலாரம் அடித்தது. ஏதோ தவறாய் தெரிந்ததால், அவளை பதற்றம் தொற்றிக் கொண்டது. அதேநேரம், யாழ் இல்லத்தின் உள்ளே ஒரு கார் நுழைவதை கண்டாள் அவள். அங்கிருந்த ஒரு அடர்ந்த செடிக்கு பின்னால் மறைந்து கொண்டு அமர்ந்தாள். அந்த காரில் இருந்து நிலவனும், மைதிலியும் இறங்கினார்கள்.

"எப்படியோ, யாழ் நம்ம ஆர்த்தியை கண்டுபிடிச்சிட்டான். எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? அந்த சினேகா கழுத்தை நெறிக்குறேனா இல்லையா பாரு" என்றாள் மைதிலி.

"இல்ல. நம்ம அவளை போலீஸ்ல ஒப்படைக்கணும். அவ வாழ்நாளோட மீதி காலத்தை ஜெயில்ல கழிக்கட்டும். நம்ம ஆர்த்தியை டார்ச்சர் பண்ணதுக்கு, அது தான் அவளுக்கு சரியான தண்டனை." என்றான் நிலவன்.

இருவரும் வீட்டிற்குள் விரைந்தார்கள். சினேகாவின் முகம் வெளிரி போனது. யாழினியன், ஆர்த்தியை கண்டுபிடித்து விட்டானா? அப்படி என்றால் அவன் அவளை இங்கு தான் அழைத்து வரப்போகிறானா? சினேகாவிற்கு உதறல்  எடுக்கத் தொடங்கியது. ஆர்த்தி மட்டும் இங்கு வந்தால் என்ன ஆகும்? அவளது நண்பர்களும், குடும்பத்தினரும் சினேகாவை தலைவேறு, கால்வேறாக பிய்த்து எறிவார்கள்... அவள் இங்கு இருக்கக் கூடாது. அவர்கள் நிச்சயம் அவளை சிறையில் தள்ளி விடுவார்கள்... ஒரு பெண்ணை கடத்தி வைத்ததற்காக... அவளது குழந்தையை அவளிடம் இருந்து பிரித்ததற்காக... ஆள் மாறாட்டம் செய்ததற்காக... அவளது மருத்துவ சான்றிதழில் அவளது பெயரை மாற்றி  பயன்படுத்திக் கொண்டதற்காக...

இத்தனை குற்றங்களையும் செய்ததற்காக சிறை சென்றால், அவள் நிச்சயம் சிறையில் இருந்து வெளியே வரவே முடியாது. மெல்ல செக்யூரிட்டி அறையை நோக்கி நகர்ந்தாள் சினேகா. இரு காவலர்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து அவள் செல்ல எத்தனித்த போது, மற்றும் ஒரு காரில் உள்ளே நுழைந்தான் மகேந்திரன். அந்த அறையின் பின்னால் ஒளிந்து கொண்டாள் சினேகா. அவன் உள்ளே செல்லும் வரை காத்திருந்தவள், அங்கிருந்து தலை தெறிக்க ஓட துவங்கினாள்... இலக்கின்றி. அன்று ஸ்ட்ரைக்... அவள் கையில் எதுவும் இல்லை, அவளது கைபேசியை தவிர... அதுவும் இந்தியன் சிம் கார்டு போடப்பட்ட கைபேசி. அவள் கையில் சல்லி காசு இல்லை.

........

தன்னுடைய கதையை வெங்கட்ராகவன் விவரித்துக் கொண்டிருந்த பொழுது, ரியர் வியூ கண்ணாடியின் வழியாக யாழினியனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆர்த்தி. அவனும் அந்த கண்ணாடியை, ஆர்த்தியின் முகம் தனக்கு தெளிவாக தெரியும்படி மாற்றி அமைத்துக் கொண்டான். வெங்கட்ராகவன் கூறியதை, எந்த குறுக்கீடும் செய்யாமல் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாள் ஆர்த்தி. தான் தெரியாமல் செய்த தவறுக்காக வருத்தப்பட்டு கொண்டார் வெங்கட்ராகவன், அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது புரியாமல்.

"போனதெல்லாம் போகட்டும் டாட்... நம்மால எதையும் மாத்த முடியாது"

"யாழினியன் லண்டனுக்கு வந்த பிறகு தான், நான் உங்க ரெண்டு பேரையும் பத்தி எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன்"

 ரியர் வியூ கண்ணாடியின் மூலமாக, *நீ லண்டனுக்கு சென்றாயா?* என்பது போல் அவனை ஒரு பார்வை பார்த்தாள் ஆர்த்தி.

"புனிதவோட டிஎன்ஏ வை டெஸ்ட் பண்ணி அவ தன்னோட குழந்தைதானு கன்பார்ம் பண்ணிகிட்டாரு"

யாழினியனும், ஆர்த்தியும் ஒருவரை ஒருவர் சங்கடத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.

"யாழ் உன் மேல ரொம்ப பிரியம் வச்சிருக்காரு" என்றார் வெங்கட்ராகவன்.

"தெரியும் டாட் " என்றாள் அவனை பார்த்தபடி.

யாழினியன் மிகவும் பலவீனபட்டிருப்பதாய் தோன்றியது அவளுக்கு. ஏன் இருக்காது? அவளிடம் பேசி தீர்க்க எவ்வளவோ விஷயங்கள் இருந்த போதிலும், சந்தர்ப்பம் அவர்களுக்கு சாதகமாய் இருக்கவில்லையே...! தங்கள் பேச்சின் ஊடே அவனையும்  இழுத்துக் கொண்டால், அவன் சற்று ஆஸ்வாஸபடுவான் என்று நினைத்தாள் அவள்.

"வந்திருக்கிறவ நான் இல்லைன்னு நீ எப்படி கண்டுபிடிச்ச?" என்றாள்.

யாழினியன் பதில் கூறுவதற்கு முன்,

"மகேந்திரனும், நிலவனும் சேர்ந்து, அவளோட பிளட்டை டெஸ்ட் பண்ணி, அவ நீ இல்லன்னு கண்டுபிடிச்சிட்டாங்க"

"ஓ...."

தான் கேட்ட கேள்விக்கு, யாழினியனை பதில் கூற விடாமல், வெங்கட்ராகவன் முந்திக் கொண்டது அவளுக்கு ஏமாற்றம் அளித்தது.

"உனக்கு ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க ஆர்த்தி...  எல்லாரும் ஜெம் ஆஃப் த பர்சன்ஸ்..."

"ஆமாம்... " என்று கூறிய அவள் வெங்கட்ராகவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

"தூக்கம் வருதா ஆர்த்தி?" என்றார் அவர்.

"ஆமாம் டாட்" என்ற அவளை, *நிஜமாகவா?* என்பது போல் ஒரு பார்வை பார்த்தான் யாழினியன்.

அவனுக்கு தெரியாதா ஆர்த்தியை பற்றி? ஆர்த்தியாவது தூங்குவதாவது... அதுவும் இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலா? அவனுக்கு சந்தேகம் வந்தது. அவன் சந்தேகத்தபடியே அவள் தூங்கவில்லை. வெங்கட்ராமனின் தோளில் சாய்ந்த படி, சென்னை வந்து சேரும் வரை, யாழினியனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டதால், யாழினியனுக்கும் கூட, சாலையில் கவனத்தை செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட பின்பு கூட, மனம் விட்டு நான்கு வார்த்தை பேச முடியவில்லையே என்று இருவரும் தவித்து தான் போனார்கள். ஆர்த்தியை விட, யாழினியனின் நிலை தான், கவலைக்கிடமாய் இருந்தது. யாருமற்ற ஒரு தீவிற்கு அவளை தனியாய் அழைத்துச் சென்று விட முடியாதா என்று எண்ணினான் அவன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top