34 ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு..
33 ஏழு ஆண்டுகளுக்கு பிறகு...!
வெற்றிப் புன்னகையுடன் அந்த அழைப்பை துண்டித்தாள் சினேகா. ஆரத்தியோ திருப்தி புன்னகை பூத்தாள். அவள் கணித்து விட்ட விஷயம் சரிதானா என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால், நிச்சயம் யாழினியின் அவளை கண்டுபிடித்து விடுவான் என்ற நம்பிக்கை அவளுக்கு எழுந்தது. யாழினியன் மீது வைத்திருந்த நம்பிக்கையை அவள் எப்போதுமே கைவிட்டதில்லை. அதனால் தான், சாப்பிட்டு, உறங்கி தன்னைத்தானே தேற்றிக்கொண்டு வந்தாள்.
ஆர்த்தி கருவுற்றிருக்கிறாள் என்ற உண்மை சினேகாவுக்கு தெரிய வந்த போது, கருவை கலைத்து விடும் படி தான் கூறினாள் சினேகா. ஆனால் அதற்கு ஆர்த்தி ஒப்புக் கொள்ளவில்லை. ஆர்த்தியின் தாய்மை பற்று தான் நமக்குத் தெரியுமே...! ஆனால் சினேகாவால் அதை புரிந்து கொள்ள முடியாது தானே? திருமணம் ஆகாத ஒரு பெண்ணுக்கு, குழந்தை பெறும் தைரியம் எப்படி வந்தது என்று அவளுக்கு புரியவில்லை... அதுவும் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் போது...! ஆர்த்திக்கு குழந்தை மேல் இருந்த ஆர்வத்தை பார்த்த பிறகு, சினேகாவின் மனம் வேறு கோணத்தில் திட்டமிட்டது. அவளுக்கு பிடித்ததை எல்லாம் பறிப்பது தானே சினேகாவின் எண்ணம்? அதனால் அவளது குழந்தையையும் அவளிடம் இருந்து பறிக்க துணிந்தாள்.
ஆர்த்தியின் சான்றிதழில் இருந்த அவளது பெயரை, சட்டப்படி சினேகா என்று மாற்றினாள். அது தான், அவள் உண்மையிலேயே யாழினியன் மீது மிகவும் கோபமாக இருக்கிறாள் என்று வெங்கட்ராகவனையும் நம்ப வைத்தது. ஆனால் அவள் வெங்கட்ராகவனிடம், 'யாழினியன் அவளை கண்டுபிடித்து விடக்கூடாது' என்பதால் அவள் பெயரை மாற்றியதாய் கூறினாள். அவள் எண்ணியது போலவே, மன்னிக்க முடியாத பெரிய குற்றத்தை யாழினியன் செய்து விட்டதால் தான் ஆரத்தி அவனை மன்னிக்க விரும்பவில்லை என்று வெங்கட்ராகவனும் நம்பினார்.
ஆர்த்திக்கு குழந்தை பிறந்து, ஓராண்டு கழித்து, சினேகாவும் தனது கார்டியாலஜி படிப்பை முடித்தாள். அவளுக்கு லண்டனில் இருக்கும் ஹோலி கிறிஸ்ட் மருத்துவமனையில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அவளுடைய திட்டத்தை செயல்படுத்த கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை கைநழுவி விட அவள் தயாராக இல்லை. லண்டனுக்கு வந்து விடும்படி வெங்கட்ரகவனை அழைத்தாள். காயப்பட்ட தன் மனதிற்கு ஆறுதல் அளிக்க, ஒரு குழந்தையை தத்தெடுக்க போவதாகவும் அவரிடம் கூறி அவரை நம்ப வைத்தாள்.
இந்த இடைப்பட்ட காலத்தில், யாழினியனை நெருங்குவது பற்றி அவள் யோசிக்கவில்லை. ஆர்த்தி அவனைப் பற்றி கூறியதை யோசித்த போதெல்லாம், அவனை நெருங்கும் தைரியம் அவர்களுக்கு ஏற்படவில்லை. அவளுக்கு மதிவதனியிடம் இருந்து அழைப்பு வந்த போது, அவளுக்கு பதற்றம் ஏற்பட்டது. ஏனென்றால், அவள் இந்தியா செல்வதை பற்றி அதுவரை யோசித்து இருக்கவில்லை. ஆனால் ஸ்டெஃபியும் ரோஸும் அவளை இந்தியா செல்ல வற்புறுத்திய போது, அவளால் அதை தவிர்க்க முடியவில்லை. அவள் செல்ல இருப்பது வேறுங்கும் அல்ல, யாழினியனின் மருத்துவமனைக்குத் தான் என்று தெரிந்து கொண்ட பொழுது, அவரது மனம் வேகமாய் திட்டமிட்டு துவங்கியது. 'நான் தான் ஆரத்தி' என்று கூறினால், அவள் நிச்சயம் அகப்பட்டு விடலாம். அதனால் ஆட்டத்தை *திருப்பிப் போட்டு* ஆடினாள். நான் ஆரத்தி இல்லை என்று விடாமல் கூறி வந்தாள். யாழினியனும் அவனது நண்பர்களும் அவளை ஆர்த்தி தான் என்று நிரூபிப்பதிலேயே குறியாக இருந்தார்கள். அவள் ஆரத்தி அல்ல என்ற சந்தேகம் அவர்களுக்குள் எழவில்லை.
எல்லாம் சரி தான்... தான் வென்றுவிட்டதாக அவள் நினைத்ததும் சரி தான்... எல்லோரையும் ஏமாற்றி விட்டோம் என்று உயர பறந்ததும் சரி தான்... ஆனால், இந்த பொல்லாத விதி இருக்கிறதே... அது தனக்கென எல்லாவற்றையும் பிரத்தியகமாய் திட்டமிட்டு வைத்திருக்கும். ஆனால் அதே நேரம், நாம் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த தவறுகளை திருத்திக் கொள்ளவும் பல வாய்ப்புகளை நமக்கு வழங்கும். ஆனால் சினேகாவை போன்ற கர்வியிடம் அப்படிப்பட்ட நல்ல மாறுதல்களை நாம் எதிர்பார்த்து விட முடியாது அல்லவா? அவள், அந்த *வகை*யை சேர்ந்த பெண்ணாக இருந்திருந்தால், எந்தத் தவறும் செய்யாத ஆர்த்தியை இவ்வளவு கடுமையாய் தண்டித்திருப்பாளா? யாராக இருந்தாலும் விதைத்ததை அறுத்து தானே தீர வேண்டும்? தான் அனைத்தையும் புத்திசாலித்தனமாய் செய்து விட்டதாய் இறுமாந்து இருந்தாள் சினேகா.
ஆனால்... அவள் இறுமாந்து இருந்த அதே நேரம், வெங்கட்ராகவனின் நண்பர் தேவதானம், அவளது தொலைபேசி அழைப்பை ட்ராக் செய்து விட்டார். உடனடியாய் வெங்கட்ராகவனுக்கு ஃபோன் செய்தார்.
"என் மகளை பத்தி ஏதாவது க்ளூ கிடைச்சுதா?" என்றார் வெங்கட்ராகவன்.
"ஆமாம் சார். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சினேகா உங்க பொண்ணு ஆர்த்தி கூட பேசினா. ஆர்த்தி இருக்கிற இடத்தை, நாங்க லொகேட் பண்ணிட்டோம்"
"தேங்க் காட்..."
"அந்த இடம், மேல்மருவத்திற்கு பத்து கிலோமீட்டருக்கு முன்னாடி இருக்கிற சின்ன கிராமம்"
"அந்த அட்ரஸை எனக்கு அனுப்புங்க. நான் உடனே கிளம்புறேன்"
"இன்னைக்கு ஸ்ட்ரைக் சார். உங்களால தனியா போக முடியாது. நிறைய செக்கிங் இருக்கும்"
"ஆமாம், நான் மறந்துட்டேன்"
"கவலைப்படாதீங்க சார். போலீசை அனுப்பி ஆர்த்தியை மீட்க தேவையான ஏற்பாடை நான் செய்றேன்"
"என்னையும் அவங்க கூட கூட்டிக்கிட்டு போக சொல்லுங்க, சார். நான் என் மகளை பாக்கணும்"
"சரி சார். நான் போலீஸ் ஜீப்பை அனுப்புறேன். நீங்க அவங்க கூட கிளம்புங்க"
"ரொம்ப தேங்க்ஸ் தேவா... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..."
அவர்கள் அழைப்பை துண்டித்துக் கொண்டார்கள். ஆர்த்தி இருக்கும் இடம் செல்ல தயாரானார் வெங்கட்ராகவன். சினேகா வீட்டில் இல்லை என்ற விஷயம் அவருக்கு தெரியும். ஆர்த்தியை கண்டுபிடித்துவிட்ட விஷயத்தை யாழினியனிடம் கூற வேண்டும் என்று நினைத்தார். ஆனால் சினேகா தான் அவனுடன் இருக்கிறாளே... சினேகாவுக்கு விஷயம் தெரிந்து விட்டால் வம்பாய் போகுமே... அவள் தனது ஆட்கள் மூலமாக ஆர்த்தியை ஏதாவது செய்து விட்டால் என்ன செய்வது? ஆர்த்தியை சுற்றி எத்தனை பேர் இருக்கிறார்களோ தெரியவில்லை... அவள் இங்கு வந்த பிறகு யாழினியன் அவளை பார்த்துக் கொள்ளட்டும் என்று எண்ணியபடி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
இதற்க்கிடையில்...
அன்று வேலை நிறுத்தம் என்பதால், லட்சுமியின் கணவன் ஹரி, தனது காரின் இன்ஜினை இறக்கி பழுது பார்த்துக் கொண்டிருந்தான். அன்று வாகனங்கள் எதுவும் ஓடாது என்பதால், அந்த நாளை, உபயோகமாய் பயன்படுத்திக் கொள்ள நினைத்தான் அவன்.
அவனிடம் பதட்டத்துடன் வந்தாள் லட்சுமி.
"மெதுவா நட. ஏன் இப்படி பறக்கிற?" என்றான் ஹரி.
"சினேகா இந்தியா வந்திருக்கா"
ஹரியின் முகபாவம் கல்லென மாறியது.
"அதனால?" என்றான்.
"நான் கர்ப்பமா இருக்கிறது அவளுக்கு தெரிஞ்சிட்டா என்ன செய்யறது?"
"தெரிஞ்சா இப்ப என்ன? அவ என்ன செஞ்சிடுவா? அவளால தான் கல்யாணமாகி ஏழு வருஷமா நம்ம குழந்தை பெத்துக்காம இருந்தோம். அவ சொல்றத நம்ம ஏன் கேக்கணும்? அவளுக்குத் தான் நம்மளோட உதவி தேவை. அதை நம்ம செஞ்சுகிட்டும் இருக்கோம். நம்மளோட சொந்த விஷயத்துல அவளை மூக்கை நுழைக்க வேண்டாம்னு சொல்லு. நம்ம குழந்தை பெத்துக்கலாமா வேணாமான்னு முடிவு பண்ண அவ யாரு?" என்று கோபத்தில் கத்தினான் ஹரி.
சினேகா அவர்களை குழந்தை பெற்றுக்கொள்ள கூடாது என்று கூறி இருந்ததால், ஹரி சினேகாவின் மீது படு பயங்கர கோபத்தில் இருந்தான். அவள், தங்கள் மீது செலுத்திய ஆதிக்கம் அவனுக்கு அறவே பிடிக்கவில்லை. அவளுக்கு இந்தியாவிற்கு வரும் எண்ணமே இல்லாமல் இருந்ததால், நாட்கள் செல்ல செல்ல, அவர்களுக்கு கொடுத்து வந்த பணத்தையும் வெகுவாய் குறைத்துக் கொண்டாள் சினேகா. ஆரத்தியின் காதலன், அவளைப் பிரிந்த பின், வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி இருப்பான் என்று நினைத்தாள் சினேகா. எந்த முட்டாளாவது தன் காதலிக்காக ஏழு ஆண்டுகளாய் காத்திருப்பானா என்பது தான் அவளது எண்ணம். அதனால், அவள் லட்சுமியையும், ஹரியையும் பற்றி கவலைப்படவில்லை.
"நம்ம குழந்தை பெத்துக்கிட்டா, ஆர்த்தியை கவனிக்க மாட்டோம்னு சினேகா நினைக்கிறா போல இருக்கு" என்றாள் லட்சுமி.
"நம்ம ஏன் அந்த பெண்ணை கவனிச்சுக்கணும்? இன்னும் எத்தனை வருஷத்துக்கு அந்த பொண்ணை நம்ம கவனிச்சுக்க முடியும்? உன்னோட ஃப்ரெண்டு லண்டன்ல உல்லாச வாழ்க்கை வாழ்ந்துகிட்டு சந்தோஷமா இருப்பா... ஆனா, அவளுக்காக நம்மளோட சந்தோஷத்தை எல்லாம் இழந்து, நம்ம இங்க அடைப்பட்டு கிடைக்கணுமா?"
"அவ இங்க வந்துட்டா என்னங்க செய்யறது?"
"வரட்டும்... வந்தா நான் பாத்துக்கிறேன். அவ சொல்ற பேச்சுக்கு எல்லாம் ஆட, நம்ம ஒன்னும் அவளுக்கு அடிமைங்க கிடையாது. அவ பேரை சொல்லி என்னை கண்ட்ரோல் பண்றதை நிறுத்து. நம்ம எவ்வளவு பெரிய ரிஸ்க்ல இருக்கோம்னு உனக்கு தெரியுமா? நம்ம மட்டும் போலீஸ்ல மாட்டினா நம்ம கதி என்ன ஆகும்? வாழ்க்கை ஃபுல்லா கம்பி எண்ண வேண்டியது தான். அப்போ உன்னோட ஃபிரண்டு வந்து நம்மளை காப்பாத்துவான்னு எனக்கு தோணல. மரியாதையா எல்லாத்தையும் நிறுத்த சொல்லு. நான் மிரட்டுறதா நினைச்சா கூட எனக்கு கவலை இல்ல." தன் வேலையை தொடர்ந்தான் ஹரி.
ஹரியை பற்றி லட்சுமிக்கு நன்றாகவே தெரியும். அவன் கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை. பணத்திற்காகத் தான் அவர்கள் ஆர்த்தியை கவனித்துக் கொள்ள ஒப்புக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் பணம் கேட்கும் போதெல்லாம் எரிச்சல் அடைந்தாள் சினேகா. ஹரி கூறுவது சரி தான். சினேகாவிற்காக அவர்களது வாழ்க்கையை அவர்கள் சிக்கலில் இட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் அவர்களது குழந்தை, இந்த மண்ணை தொட இருக்கிறது. அதன் பிறகு அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனையை அவர்கள் சந்திக்க வேண்டி இருக்கும்.
இதைப் பற்றி எல்லாம் யோசித்த வண்ணம் உள்ளே வந்தாள் லட்சுமி. ஹரி எடுத்துச் சென்ற கிரீஸ் டப்பாவில் இருந்து தரையில் சிந்தியிறுந்த கிரீசை அவள் கவனிக்காமல் காலை வைக்க, வழுக்கி விழுந்தாள் லட்சுமி. அவளுடைய அலறல், ஹரி மற்றும் ஆர்த்தியின் செவிப்பறைகளை கிழித்தது. ஜன்னல் வழியாக வெளியே பார்த்த ஆர்த்தி, விஷயத்தின் தீவிரத்தை புரிந்து கொண்டாள். உள்ளே ஓடி வந்த ஹரி, லட்சுமி தரையில் விழுந்து துடித்துக் கொண்டிருப்பதை பார்த்து திகைத்து நின்றான்.
அன்று ஸ்ட்ரைக்... அவனது காரோ ஓடும் நிலையில் இல்லை. அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவனது மூளை வேலை செய்யவே இல்லை. லட்சுமியோ வலி தாங்காமல் தரையில் கிடந்து கதறிக் கொண்டிருந்தாள்.
"ஏன் சும்மா நின்னு அவளையே பார்த்துகிட்டு இருக்கீங்க? உடனே அவளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்க... அவ டேஞ்சரான கட்டத்துல இருக்கா. உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க" என்று கத்தினாள் ஆர்த்தி.
"என் கார் ரிப்பேரா இருக்கு. இன்னைக்கு ஸ்ட்ரைக். எந்த வண்டியும் கிடைக்காது. என்னால இப்போ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக முடியாது..."
"அப்படின்னா, என்னையாவது வெளியில விடுங்க. என்னால அவளை காப்பாத்த முடியும். நான் டாக்டர்னு உங்களுக்கு தெரியும் இல்ல?" என்று பதறிய ஆர்த்தியை, நம்ப முடியாமல் பார்த்தான் ஹரி.
அவளுடைய வாழ்க்கை சீரழிந்ததற்கு அவர்கள் தான் காரணம். ஆனால், அவளோ லட்சுமியை காப்பாற்ற தயாராக இருக்கிறாள். அவளுடைய குழந்தையை அவளிடம் இருந்து பிரித்தார்கள். ஆனால் அவள், அவர்களது குழந்தையை காப்பாற்ற துடிக்கிறாள். அது தானே ஆரத்தி...!
"இங்க பாருங்க, யோசிக்க நேரமில்ல. நீங்க என்னை நம்பலனா, வெளிப்பக்கமாக கதவை பூட்டிக்கோங்க. அவங்களை ட்ரீட் பண்ணலைன்னா, அம்மா, குழந்தை ரெண்டு பேர் உயிருக்குமே ஆபத்து. ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க" கெஞ்சினாள் ஆரத்தி.
அவளது அறையின் கதவை திறந்தான் ஹரி. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த அறையை விட்டு வெளியே வந்தாள் ஆரத்தி. ஆனால், அதை கொண்டாடும் நிலையில் அவள் இல்லை. அவள் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் இருக்கிறது... பிரசவம் பார்க்க வேண்டும்... கையுறை கூட அணியாமல்... வெறும் கையோடு...!
ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள் லட்சுமி. அந்த குழந்தையை தாங்கிய ஆரத்தியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. சந்தேகம் இல்லாமல், அது சந்தோஷ கண்ணீர் தான். குழந்தையை சுத்தப்படுத்தி, ஒரு பூ துவாலையில் சுற்றி , ஹரியிடம் நீட்டினாள் அவள்.
மீண்டும் தன் அறைக்குள் செல்ல அவள் முயன்ற போது, அவளை தடுத்த ஹரி, தனது கைபேசியை அவளிடம் நீட்டினான். அவனை நம்ப முடியாமல் ஏறிட்டாள் ஆரத்தி.
"நீ இங்கிருந்து போயிடு மா. உனக்கு வேண்டப்பட்டவங்களுக்கு ஃபோன் பண்ணி, நீ நல்லா இருக்கேன்னு சொல்லு. என் காரை அசெம்பிள் பண்ண உடனே, நான் உன்னை கூட்டிகிட்டு போய் விட்டுட்டு வரேன்" தன் கைபேசியை அவள் கையில் திணித்த ஹரி,
"முடிஞ்சா எங்களை மன்னிச்சிடு மா" என்றான்.
இப்பொழுது நடந்து கொண்டிருப்பது எதுவும் கனவல்ல என்பதை நம்பவே முடியவில்லை ஆர்த்தியால். அவளது விரல் நுனியில் இருந்த யாழினியனின் கைபேசி எண்ணை, அவளது கரங்கள் அணிச்சையாய் அழுத்தின.
சினேகாவுடன் தன் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தான் யாழினியன். தனது கைபேசியில் ஒளிந்த புதிய எண்ணை பார்த்துவிட்டு, தனது ப்ளூடூத்தை ஆன் செய்தவன், ஏழு வருடங்களுக்குப் பிறகு,
"யாழ்..." என்ற ஆர்த்தியின் குரலை கேட்டு திக் பிரம்மை பிடித்து நின்றான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top