21 சரி பார்க்கும் படலம்

21 சரி பார்க்கும் படலம்...

எண்ணச் சுழலில் மாட்டிக்கொண்டவன் போல, சினேகாவின் வார்த்தைகளுக்கும், எதார்த்தத்திற்கும் இடையில் சிக்கித் தவித்தான்  யாழினியன். அவனைப் பார்த்து கள்ள புன்னகை வீசிக்கொண்டு நின்றாள்  சினேகா.

*இவள் பார்க்க ஆர்த்தியை போல் இருக்கிறாள். ஆனால் அவளுடைய நடவடிக்கைகள் எதுவுமே ஆரத்தி போல் இல்லை. அவளது செயல்கள் ஒவ்வொன்றுமே ஆர்த்திக்கு நேர்மாறாய் இருக்கிறது. எவ்வளவு தான் ஆர்த்தி என் மீது கோபமாக இருந்தாலும், இந்த அளவிற்கு அவள் அடாவடியாக நடந்து கொள்பவள் அல்ல... அதுவும் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு என்னை பார்க்கும் அவள், நிச்சயம் இப்படி நடந்து கொள்ள மாட்டாள். அவனை விட்டு அவள் பிரிந்து இருந்தாலும், நிச்சயம் அவனை பற்றி விசாரித்து அறிந்திருப்பாள். அவன் அவளுக்காக தான் காத்திருக்கிறான் என்பது தெரிந்தும், இவ்வளவு இறுக்கமாய் இருக்க மாட்டாள்.* என்று தனக்குள் யோசித்த யாழினியன், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

"நீ சினேகாவா இல்லன்னா, நான் நிச்சயம் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்"

"நான் சினேகா தான்"

ஒன்றும் கூறாமல் அந்த இடம் விட்டு அகன்றான் யாழினியன். சர்வ சாதாரணமாய்  தன் வேலையை தொடர்ந்தாள் சினேகா.

அங்கிருந்து நேராக மகேந்திரனின் அறைக்கு  சென்றான் யாழினியன்.  சினேகாவை பற்றி மைதிலி கூறிய விஷயத்தை யோசித்துக் கொண்டிருந்தான் மகேந்திரன். ஒருவேளை சினேகா, சினேகா தானோ? அப்படி இருந்தால், மீண்டும் யாழினியன் ஏமாற்றம் அடைவான் அல்லவா? அதை நினைத்த போதே, மகேந்திரனுக்கு பதற்றம் ஏற்பட்டது. யாழினியன் வருவதை பார்த்த அவன், நிமிர்ந்து அமர்ந்தான்.

"எனக்கு டாக்டர் ரோஸோட நம்பர் கிடைக்குமா?" என்றான் யாழினியன்.

ஒருவேளை, மைதிலி தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அவர்களிடம் கூறாமல் இருந்திருந்தால், நிச்சயம் மகேந்திரன் அவனுக்கு ரோஸின் கைபேசி எண்ணை கொடுக்க மாட்டேன் என்று மறுத்தலித்திருப்பான். ஆனால் இப்பொழுது அவன் அதை செய்யும் மனோ நிலையில் இல்லை. தருகிறேன் என்பது போல் தலையசைத்து விட்டு தனது கைபேசியை எடுத்து, ரோஸின் எண்ணை யாழினியனுக்கு அனுப்பி விட்டு,

"உனக்கு அனுப்பிட்டேன்" என்றான்.

"தேங்க்ஸ்" என்றபடி அங்கிருந்து நடந்தான் யாழினியன்.

நேரத்தை வீணாக்காமல் உடனே ரோஸுக்கு ஃபோன் செய்தான் யாழினியன். அதை உடனே ஏற்று பேசினாள் ரோஸ்.

"நான் யாழினியன்... இந்தியாவில் இருந்து பேசுறேன்... யாழ் ஹாஸ்பிடல் டீன்...!" என்றான்.

"ஹலோ டாக்டர்... எப்படி இருக்கீங்க? சினேகா எப்படி இருக்கா? எல்லாம் நல்லபடியா போய்கிட்டு இருக்கு இல்லயா...?"

"ஆமாம் ஒன்னும் பிரச்சனை இல்ல"

"சொல்லுங்க, என்ன விஷயமா எனக்கு கால் பண்ணீங்க?"

"உங்ககிட்ட இருந்து எனக்கு ஒரு உதவி வேணும்"

"நிச்சயமா செய்றேன்"

"நீங்க ஃப்ரீயா இருந்தா, நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்"

"தாராளமா பேசலாம். நான் இப்ப தான் டியூட்டியை முடிச்சுட்டு வரேன்"

"உங்களுக்கு சினேகா யாருன்னு தெரியுமா?"

அதை கேட்ட ரோஸ் முகத்தை சுருக்கினாள். சினேகாவை பற்றி முதன் முதலில் மகேந்திரனிடம்  கூறியதே அவள் தானே...! அப்படி இருக்க சினேகாவை அவளுக்கு தெரியுமா என்று இவன் ஏன் கேட்கிறான்?

"நீங்க என்ன கேக்குறீங்கன்னு எனக்கு புரியல"

தங்களது கதையை எளிமையாகவும், சுருக்கமாகவும் கூறி முடித்தான் யாழினியன். அதை கேட்ட ரோஸ் அதிர்ந்து போனாள். எவ்வளவோ நெருக்கமாக பழகி வந்த போதும், இதுவரை, ஒரு நாள் கூட, அப்படிப்பட்ட ஒரு விஷயம், தன் வாழ்வில் நடந்ததாக சினேகா காட்டிக்கொண்டதே இல்லை.

"ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ல நாங்க பிரிஞ்சிட்டோம். அதை சரி செய்ய நீங்க எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?"

"இதுல என்னால செய்ய முடிஞ்சது என்ன?"

"உங்களால் முடியும்... நீங்க நெனச்சா இவ சினேகாவா இல்ல ஆர்த்தியான்னு நிச்சயம் கன்ஃபார்ம் பண்ணி சொல்ல முடியும்."

"எப்படி?"

"அவளோட ரெக்கார்ட்ஸை கொஞ்சம் செக் பண்ண முடியுமா? அவளுடைய மெடிக்கல் சர்டிபிகேட்ல என்ன பேர் இருக்குன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்"

"டீன் பெர்மிஷன் இல்லாம, என்னால் அதை செய்ய முடியாது"

"டாக்டர் ரோஸ், ப்ளீஸ் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க. இதுல என்னோட வாழ்க்கை மட்டுமல்ல, ஆர்த்தியோட ஃப்யூச்சரும் அடங்கி இருக்கு. இதை செய்யறதால, ரெண்டு பேருடைய வாழ்க்கையை உங்களால மாத்த முடியும்..."

"சரி, ஆனா எனக்கு கொஞ்சம் டைம் வேணும்" என்றாள் தயக்கத்துடன் ரோஸ்.

"தாராளமா எவ்வளவு டைம் வேணும்னாலும் எடுத்துக்கோங்க. நான் காத்திருக்கேன்"

அவர்கள் அழைப்பை துண்டித்துக் கொண்டார்கள். தனக்கு நேரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போதிலும், அவளுடைய அழைப்புக்காக பொறுமை இழந்து காத்திருந்தான் யாழினியன்.

லண்டன்

அந்த மருத்துவமனையின் ஆவன அறை, கம்ப்யூட்டர் கோடினால் பாதுகாக்கப்பட்டிருந்தது. அவ்வளவு சுலபமாய் யாராலும் அதில் நுழைந்து விட முடியாது. அதனால், புத்திசாலித்தனமாய் ஏதும் செய்கிறேன் என்று மாட்டிக் கொள்வதற்கு பதிலாக, நேரடியாய் சென்று டீன் ஸ்டெஃபியிடம் அனுமதி பெறுவது என்று முடிவு செய்தாள் ரோஸ்.  உண்மை நிலவரத்தை, ஸ்டெஃபியிடம் விளக்கிக் கூறினாள். தனது சீட்டில் சாய்ந்தமர்ந்து, யோசனையில் ஆழ்ந்தார்  ஸ்டெஃபி.

"இந்த காரணத்துக்காக தான் சினேகா இந்தியாவுக்கு போகாம இருந்தான்னு நினைக்கிறேன்" என்றாள் ரோஸ்.

"ம்ம்ம்"

"யாழினியன் சொல்ற மாதிரி, இது ஒரு மிஸண்டஸ்டாண்டிங்கா இருந்தா, அதை சரி பண்ண நம் நிச்சயம் ஹெல்ப் பண்ணணும் டாக்டர்"

"ஆனா, அஃபிசியல் பர்பஸ் இல்லாம, யாருடைய ரெக்கார்டையும் நம்ம செக் பண்ண முடியாதுன்னு உனக்கு தெரியாதா?"

"ஏன் செய்ய முடியாது டாக்டர்? யாழினியன் சொல்ற மாதிரி, ஒருவேளை, அவ சினேகாவா இல்லாம ஆர்த்தியா இருந்தா என்ன செய்யறது?  ஒருவேளை அவளோட சர்டிபிகேட் போலியா இருந்தா என்ன செய்றது? அந்த சந்தேகத்தோட பலனை நம்ம யாழினியனுக்கு கொடுக்கலாமே..."

"எடுத்த காரியத்தை முடிக்கணும்னு ஒரு தீர்மானத்தோடு இருக்க போல இருக்கே..." என்று சிரித்தார் ஸ்டெஃபி.

"நம்ம அவங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம், டாக்டர்" என்று சங்கடத்துடன் சிரித்தாள் ரோஸ்.

"சரி வா போகலாம்"

இருவரும் அந்த ஆவன அறைக்கு வந்தார்கள். அந்த அறையின் கணினியின் ரகசிய சொல்லை பதிவு செய்து அதன் கதவை திறந்தார் ஸ்டெஃபி.

"சினேகா நம்ம ஹாஸ்பிடல்ல அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வேலைக்கு சேர்ந்தா. அந்த வருஷத்தோட ஃபைல்ஸ் இருக்கிற ரேக்ல தேடி பாரு"

அவர் கூறியது போலவே, ஒரு குறிப்பிட்ட அலமாரியில் தேடினாள்  ரோஸ். அதில் இருந்த ஒவ்வொரு கோப்பாய் தேடிக் கொண்டு வந்த போது, இறுதியில் சினேகாவின் கோப்பு அவர்களுக்கு கிடைத்தது.

"இங்க இருக்கு டாக்டர்"

அந்த கோப்பை ரோஸ் திறந்த போது, அவளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அது அவளது முகத்திலும் பிரதிபலித்தது. அவளுடைய மருத்துவக் கல்லூரி சான்றிதழ், ஆர்த்தி என்று பெயரிடப்பட்டிருந்தது. அவளுடைய பெயரை, *சினேகா* என்று சட்டப்படி மாற்றியிருந்தாள் ஆர்த்தி. அவளுடைய சான்றிதழுடன், இந்திய அரசால் வெளியிடப்பட்ட, அவளுடைய பெயர் மாற்றத்திற்கான அதிகாரப்பூர்வமான விளம்பரமும் இணைக்கப்பட்டிருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அப்படி என்றால், சினேகா தான் ஆர்த்தி.

உடனடியாய் யாழினியனுக்கு ஃபோன் செய்தாள் ரோஸ். அவளது அழைப்புக்காகவே காத்திருந்த யாழினியன், உடனே அந்த அழைப்பை ஏற்றான்.

"சொல்லுங்க, ரோஸ்"

"நாங்க சினேகாவுடைய ரெக்கார்டை  செக் பண்ணிட்டோம்"

"அப்படியா?"

"அவ தன்னுடைய பெயரை சினேகான்னு மாத்தியிருக்கா"

"அப்படின்னா?"

"அவளுடைய உண்மையான பெயர் ஆர்த்தி"

"நெஜமா தான் சொல்றீங்களா?" மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான் யாழினியன்.

"ஆமாம். அவளோட பெயரை கெஸட்டில் சட்டப்படி அவ மாத்தி இருக்கா"

"தேங்க்யூ சோ மச் டாக்டர்"

"யூ ஆர் வெல்கம் " அழைப்பை துண்டித்தாள் ரோஸ்.

சினேகாவின் அறையை நோக்கி ஓடினான் யாழினியன். யாழ் மருத்துவமனையில் குழுமியிருந்த நோயாளிகள் அனைவரும், அவன் அப்படி சந்தோஷமாய் சிரித்தபடி ஓடுவதை விசித்திரமாய் பார்த்தார்கள்.

தனது அறையின் கதவை தட்டாமல் உள்ளே நுழைந்த அவனை சினேகாவும் விசித்திரமாய் தான் பார்த்தாள்.

"வா கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றான் சிரித்தபடி மூச்சிரைக்க.

சினேகாவின் முகம் அதிர்ச்சியை வாரி இறைத்தது. அவளை நோக்கி முன்னேறி வந்த யாழினியன்,

"மமதியோட ஆபரேஷன் முடிஞ்சதுக்கு பிறகு, நம்ம கல்யாணம் நடக்கும். ரெடியாயிரு" என்றான்.

"நெஜமா தான் சொல்றீங்களா?"

"ஆமாம்..."

"ஆனா, நான் ஆரத்தி இல்ல"

"ஆமாம், ஆமாம், நீ ஆர்த்தி இல்ல சினேகா..."

"நான் சினேகாவா இருந்தா உங்களுக்கு பரவாயில்லயா?"

"பரவாயில்ல, ஆர்த்தி..."

"நான் ஆரத்தி இல்ல"

"அதனால என்ன?"

"என்னை ஆரத்தின்னு கூப்பிடறதை நீங்க நிறுத்தாத வரைக்கும், நான் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்"

"சரி, நான் உன்னை ஆரத்தின்னும் கூப்பிடல, சினேகான்னும் கூப்பிடல"

"அப்படி சொன்னா எப்படி?"

"நீ ஒரு தடவை என்கிட்ட என்ன சொன்னேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?"

தங்களது பழைய நினைவுகளை அவளிடம் இருந்து பெற முயன்றான் யாழினியன்

"நான் தான் சொன்னேனே, நான் ஆர்த்தி இல்லன்னு..."

"உனக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம்?"

"பிடிவாதம் பிடிக்கிறது நான் இல்ல... நீங்க தான். என்னை சினேகாவா ஏத்துக்கோங்க..."

யாழினியனுக்கு எரிச்சலாய் வந்தது. இந்த பெண்ணுக்கு என்ன பிரச்சனை? தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அந்த இடம் விட்டு உடனே அகன்றான், அவள் முன்னாள் நின்று கோபத்தை அங்கு வெளிப்படுத்த வேண்டாம் என்று எண்ணி.

வெளியே வந்த அவன்,

"பொறுமையா இரு யாழ்... உன்னோட கோபத்தை காட்ட இது நேரமில்ல. அவ யாருன்னு சீக்கிரமே அவ ஒத்துக்குவா. அப்படி இல்லன்னா, அவளை ஒத்துக்க வைக்கணும். அவளுடைய பெயர் மாற்றத்திற்கான கெஸட்  காப்பியை ரோஸ் அனுப்பினா எல்லாம் சரியாயிடும்" என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான் யாழினியன்.

மீண்டும் அவளது அறையின் கதவை திறக்கப் போனவன், சினேகாவின் கைபேசி உரையாடலை கேட்டு அதிர்ந்து நின்றான்.

"சொன்னா கேட்கணும்... அம்மா சீக்கிரமே வந்துடுவேன்..." என்றாள் சினேகா.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top