18 நிகழ்காலம்
17 நிகழ்காலம்
மீண்டும் எனது விரல்களை சொடுக்கி, நிகழ்காலத்தில் நுழைவதற்கு முன், என்னை ஆசுவாசி படுத்திக்கொள்ள எனக்கு சிறிது நேரம் தேவை. இது மிகவும் வேதனையான விஷயம். இவர்கள் ஏன் இப்படி செய்து விட்டார்கள்? அவர்களுக்கு இடையில் இருந்த மிக உன்னதமான புரிதல் என்னை வியக்க வைத்தது...! எவ்வளவு அழகான ஜோடி அவர்கள்...! தனது காதலை வார்த்தைகளால் கூறாவிட்டாலும், தனது செயலால் அதை எவ்வளவு அழகாய் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் யாழினியன்...! தன்னிடம் அவனது காதலை வார்த்தைகளால் கூறாவிட்டாலும், அதைப் பற்றி கவலைப்படாமல், எவ்வளவு ஆழமாய் அவனை காதலித்தாள் ஆர்த்தி...! உண்மையான அன்பின் முன், வார்த்தைகளுக்கு சக்தி இல்லை என்பதை அவர்கள் உணர வைத்திருந்தார்கள்.
ஆனால் இப்போது, அவர்களே வார்த்தைகள் எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதையும் உணர வைத்து விட்டார்கள். யாழினியனின் வார்த்தைகள் ஆர்த்தியின் மனதை கிழித்தது... அவனது வார்த்தைகளை கேட்பதற்காக பல ஆண்டுகளாக காத்திருந்த ஆர்த்தி, அவனுடைய விளையாட்டான பேச்சைக் கேட்டு குலைந்து போனாள்.
ஏன் தனது காதலை அவளிடம் நேரடியாக கூறாமல் போனான் யாழினியன்? தன்னையே அவனுக்காக அவள் அர்பணித்தாளே...! அவள் அவனை எவ்வளவு ஆழமாய் காதலித்திருக்க வேண்டும்...! அவன் மீது எவ்வளவு நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்...! விளையாடுவதற்கு இதுவா நேரம்? அவளை எப்பொழுதும் கேலி கிண்டல் செய்ய மாட்டேன் என்று அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்திருந்தானே! அவன் அதை எப்படி மறந்தான்? அவனது வாழ்க்கையின் எவ்வளவு முக்கியமான கட்டம் அது...! எவ்வளவு முட்டாள்தனமாய் நடந்து விட்டான்...! தனது காதலை அவளிடம் கூறிவிட்டு, வாழ்க்கை முழுவதும் அவளுடன் விளையாடி இருக்கலாமே...! அவளது மனதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லையா? இது கத்தியின் மீது நடக்கும் சமாச்சாரம் அல்லவா? அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட போது, அவளுக்கு எப்படி இருந்திருக்கும்? இதைக் கேட்கவா அவள் இத்தனை வருடமாய் காத்திருந்தாள்? எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறதே...! அவளுடன் எல்லை கடந்த பின், அவளது உணர்வுகளுடன் விளையாடும் தைரியம் எப்படி வந்தது யாழினியனுக்கு? சில வினாடிகளுக்கு தான் என்றாலும், அவை, அவளது காதில் திராவகத்தை வார்த்த வார்த்தைகள் அல்லவா...? யாழினியன் அப்படிப்பட்ட வார்த்தைகளை கூறியிருக்கக் கூடாது. அதுவும், அவர்களுக்கு இடையில் எல்லாம் நடந்து முடிந்த பின், நிச்சயம் கூறி இருக்கக் கூடாது. ஆர்த்தியும் சில நிமிடங்கள் தாமதித்திருக்கலாம் தான். ஆனால் அவளை நாம் குறை கூறுவதற்கில்லை. இப்படிப்பட்ட வார்த்தைகளை யாராலுமே பொறுத்துக் கொள்ள முடியாது.
இறுதியில், எல்லாம் முடிந்து போனது... ஒரு அழகான காதல் கதை... ஈடு இணை இல்லா இரண்டு காதல்... சில ஆழமான நட்பு... அனைத்தும் முடிந்து போனது.
சரி... போனது போய்விட்டது. அடுத்தது என்ன? உண்மையிலேயே, சினேகா தான் நமது ஆர்த்தியா என்பதை பார்க்க வேண்டும். அவள் ஆர்தியாக இருந்தாள், அவளது அடையாளத்தை அவள் ஏன் மாற்றிக் கொண்டு விட்டாள் என்பதில் நமக்கு எந்த குழப்பமும் இல்லை. தன்னை யாரும் கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக அவள் அதை செய்திருக்க வேண்டும். ஆனால் அவளுக்கு யாழினியன் மீது அவ்வளவு கோபமா? தான் எடுக்க முடிவில், அவள் எவ்வளவு திடமாய் இருப்பவள் என்பதைத்தான் நாம் பார்த்திருக்கிறோமே... அந்த குணம் இன்னும் மாறாமல் இருந்தால், யாழினியனின் நிலை என்ன ஆவது? யாருமின்றி, ஏழு ஆண்டுகளை தன்னந்தனியாய் கடந்து வந்திருக்கிறாள். அவள் கடந்து வந்த சூழ்நிலைகள் அவளை கல்லாய் மாற்றி இருக்கலாம். தன்னந்தனியாய் வாழ்வதற்கு, தன் மனதை அவள் பழக்கபடுத்திக் கொண்டிருக்கலாம். உறுதியான மனம் படைத்த யாருக்குமே, இனிமையான கடந்த காலம் இருக்க வாய்ப்பில்லை. அப்படி பார்க்க போனால், அவள் உறுதியான மனம் படைத்தவளாய் தானே இருக்கிறாள்...? இந்த நிலையில் இனி நடக்கப் போவது என்ன? நிச்சயம் அவள் தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்தப் போவதில்லை... அவளது உள்ள உறுதியை உடைத்து, அவள் *தன்னுடைய* ஆரத்தி தான் என்பதை நிரூபிப்பானா யாழினியன்?
வாருங்கள் மீண்டும் நிகழ்காலத்திற்குள் நுழையலாம்...
தற்போது...
யாழினியன் ஒருவனைத் தவிர, மற்ற அனைத்து நண்பர்களும், நிலவன், மைதிலியின் அறையில் கூடியிருந்தார்கள்.
"எனக்கு நிச்சயமா தெரியும். அவ நம்ம ஆரத்தி தான்" என்றாள் மைதிலி.
"எனக்கும் அதுல எந்த சந்தேகமும் இல்ல" என்றாள் மதிவதனி.
"யாராலயும் மறுக்க முடியாது" என்றான் கதிரவன்.
"நான் மறுப்பேன்" என்றான் நிலவன்.
"என்னடா சொல்ற?" என்றான் கதிரவன்.
"ஆமாம். நானும் மறுக்குறேன். அவ பார்க்க நம்ம ஆர்த்தி மாதிரி இருக்கா. ஆனா, நீங்க அவளோட ஆட்டிட்யூடை கவனிக்கலயா? நம்ம ஆர்த்தி எவ்வளவு ஸ்வீட்டானவ? நம்ம எல்லாரையும் ஒரே இடத்துல பார்த்ததுக்கு பிறகு கூட, தன்னை கட்டுப்படுத்திக்க முடியுமா அவளால? நம்ம ஆரத்தி அவ்வளவு கல் மனசுக்காரியா?" என்றான் மகேந்திரன்.
"நானும் அப்படித்தான் நினைக்கிறேன். இவ நம்ம ஆரத்தியா இருக்க வாய்ப்பில்ல" என்றான் நிலன்.
"வாய்ப்பிருக்கு. நம்மகிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம, நம்ம எல்லாரையும் விட்டுட்டு போனது ஆரத்தி தான் அப்படிங்கறதை மறந்துடாதீங்க. அவளால அப்படி செய்ய முடியும்னா, இப்படியும் செய்ய முடியும்னு தான் எனக்கு தோணுது" என்றாள் வானதி.
"எக்ஸாக்ட்லி... அதே நேரம், அவ எதுக்காக நம்மளை விட்டுட்டு போனான்னு காரணம் நமக்கு தெரியாது... முக்கியமா அவ ஏன் யாழினியனை விட்டுட்டு போனான்னு நமக்கு தெரியுமா? அவ எவ்வளவு பைத்தியக்காரத்தனமா அவனை காதலிச்சான்னு நமக்கு தெரியுமில்ல...? இருந்தாலும் அவனை விட்டுட்டு போனா... அவங்களுக்குள்ள ஏதோ ரொம்ப சீரியஸா நடந்திருக்கணும். அது அவ மனசை உடைச்சிருக்கணும். அதனால் தான் அவ நம்மளை விட்டுட்டு போயிட்டா" என்றாள் மைதிலி.
மகேந்திரனும், நிலவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இவர்கள் பேசுவதை பார்த்தால், வந்திருப்பவள் ஆர்த்தி இல்லை என்பதை நம்ப வைக்க முடியாது போலிருக்கிறது. தங்களை விட இவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் என்று நினைத்தார்கள் இருவரும்.
"அவ வாயாலயே அவ ஆர்த்தி தான்னு நான் சொல்ல வைக்கிறேன்னா இல்லையான்னு பாருங்க" என்றாள் மைதிலி.
"நானும் தான்... நிச்சயம் என்னால முடிஞ்சதை நான் செய்வேன்" என்றாள் வானதி.
உறுதிமொழி எடுப்பதை அவர்கள் நிறுத்திக் கொண்டார்கள், யாழினியின் வருவதை பார்த்து.
"எல்லாரும் இங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க?" என்றான் யாழினியன்.
"இது என்ன கேள்வி? நாம எல்லாரும் ஒண்ணா தானே இருப்போம்?" என்றான் மகேந்திரன்.
"நீங்கெல்லாம் என்ன நினைக்கிறீங்க?"
"எதைப் பத்தி?" என்றான் நிலவன்.
"ஆரத்தி தான் சினேகான்னு எனக்கு நிச்சயமா தெரியும்"
அனைவரும் அமைதியா இருந்தார்கள்.
"எனக்கு உங்க எல்லாருடைய ஹெல்ப்பும் வேணும்... அவளை மறுபடி நம்ம கூட சேர்க்கறதுக்கு..."
"எங்க ஹெல்ப் உனக்கு வேணும்னா, உனக்கும் ஆரத்திக்கும் நடுவுல என்ன நடந்ததுன்னு நீ சொல்லணும்." என்று தன் கோரிக்கையை முன்வைத்தான் மகேந்திரன்.
மென்று விழுங்கினான் யாழினியன்.
"ஆமாம்... என்ன நடந்ததுன்னு முழுசா தெரியாம, எங்களால எதுவுமே செய்ய முடியாது" என்றான் நிலவன்.
"ஆமாம் யாழ்... இத்தனை வருஷமா ஒரு சின்ன மெசேஜ் கூட அனுப்பணும்னு அவளுக்கு தோணாத அளவுக்கு அப்படி உங்களுக்குள்ள என்ன தான் நடந்தது?" என்றாள் மைதிலி.
அவர்களுக்கு பதில் கூற முடியாமல், அவர்களுக்கு எதிர் திசையில் திரும்பி நின்றான் யாழினியன்.
"நீ எதுவுமே சொல்லாம இருந்தா, அதனால எந்த பிரயோஜனமும் இல்ல, யாழ்" என்றாள் மதிவதனி.
"அக்கா, ப்ளீஸ்... எங்களுக்குள்ள என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுகிட்டு இப்ப எதுவுமே ஆகப்போறது இல்ல... அதை நான் பார்த்துக்கிறேன்"
"யாழ், வந்துருக்கிறவ நம்ம ஆர்த்தியா இல்லையான்னு கூட நமக்கு தெரியல..."
"நம்ம ஆர்த்தி தான்..."
"எப்படி நிரூபிப்ப? இவ நம்ம ஆர்த்திக்கு அப்படியே நேர் எதிரா நடந்துக்கிறா. அவளைப் பத்தி, ஆரம்பத்தில் இருந்து உன் ஒருத்தனுக்கு தான் நல்லா தெரியும். அப்படி இருக்கும் போது, இவ நம்ம ஆர்த்தியா தான் இருப்பானு நீ எதை வச்சு நம்புறேன்னு எனக்கு புரியல" என்றான் மகேந்திரன்.
"அதனால தான் நான் நிச்சயமா சொல்றேன். அவ என்னோட ஆரத்தி..."
"அப்படியே இருக்கட்டும்... ஆனா அவ பிடிவாதமா இருக்காளே... அவ அப்படி நடந்துக்கிற அளவுக்கு, நீ என்ன செஞ்சு வச்சேன்னு யாருக்கு தெரியும்?"
தன் பல்லை கடித்த படி கோபமாய் அங்கிருந்து சென்றான் யாழினியன். அவன் வெளியே வந்த போது, மதுசூதனன் மட்டும் தனியாய் வருவதை பார்த்தான்.
"மமதி எங்க மாமா?" என்றான்.
"அவ சினேகா ரூம்ல இருக்கா. அவளுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு"
சரி என்று தலையசைத்து விட்டு சினேகாவின் அறையை நோக்கி நடந்தான். அவளது அறையை அவன் நெருங்கிய பொழுது, சினேகா மற்றும் மமதியின் சிரிப்பொலி வெளியில் கேட்டது. அவனை பார்த்தவுடன் முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டாள் சினேகா.
"மாமா, உங்களுக்கு தெரியுமா, இவங்க உங்களை மாதிரி இல்ல. இவங்க என்னை சாக்லேட் சாப்பிட விடுறாங்க" என்றாள் மமதி.
"ஆமாம், அவ எப்பவுமே வித்தியாசமானவ தான்... சரி தானே, ஆர்த்தி?"
அதைக் கேட்ட சினேகா எரிச்சல் அடைந்தாள்.
"மாமா, இவங்க ஆர்த்தி மாமி இல்ல. என்னோட டாக்டர்" என்றாள் மமதி .
"நீ சின்ன குழந்தை, மமதி. உனக்கு அவளைப் பத்தி தெரியாது. நீங்கல்லாம் நினைக்கிற மாதிரி இல்ல அவ... நான் சொல்றது சரி தானே, ஆர்த்தி?"
"என்னை ஆர்த்தின்னு கூப்பிடறதை நிறுத்துங்க"
"ஏன்? நான் உன் பேரை சொல்றதை கேட்கும் போது, உனக்கு என் மேல மயக்கம் வருதா?"
"நாக்கை அடக்கி பேசுங்க, மிஸ்டர்..."
"ஓ... என் பேரை சொல்ல கூட உனக்கு பயமாயிருக்கு போலருக்கு..."
"உண்மை தான்... உங்களை மாதிரி பைத்தியக்காரனோட என் நேரத்தை வீணாக்க நான் விரும்பல"
அதைக் கேட்டு மெலிதாய் சிரித்தான் யாழினியன்.
"என்னை எப்படி வேணா கூப்பிட்டுக்கோ... எனக்கு கவலை இல்ல. உன் குரலைக் கேட்டு எத்தனை வருஷம் ஆச்சு... நீ பேசினாலே போதும் எனக்கு"
"இந்த வீட்ல ஒரு கார்டியாலஜிஸ்ட் இருக்கிறதை விட, ஒரு சைக்கியாட்ரிஸ்ட் இருக்கிறது தான் அவசியம்" என்றாள் சினேகா.
"அப்படி பார்க்க போனா, கார்டியாலஜிஸ்ட்டே சைக்கியாட்ரிஸ்ட் ஆகவும் மாற முடியும். உன்னைத் தவிர வேற யாராலையும் இதை குணப்படுத்த முடியாது, ஆர்த்தி"
தனது கைபேசியை எடுத்து மகேந்திரனுக்கு ஃபோன் செய்தாள் சினேகா.
"டாக்டர் மகேந்திரன், ப்ளீஸ் என்னை தயவு செஞ்சி காப்பாத்துறீங்களா?" என்று அழைப்பை துண்டித்தாள்.
அடுத்த நிமிடம் அங்கு வந்து சேர்ந்தான் மகேந்திரன். அங்கு யாழினியனை பார்த்து பெருமூச்சு விட்டான் மகேந்திரன்.
"யாழ்..."
"டாக்டர் மகேந்திரன், நான் இங்க இருக்கணும்னு நீங்க நினைச்சா, தயவு செஞ்சி அவரை என்கிட்ட இருந்து விலகி இருக்க சொல்லுங்க" என்றாள் சினேகா எரிச்சலுடன்.
யாழினியனின் ஊடுருவும் பார்வையை உதாசீனம் செய்துவிட்டு, அவனை தள்ளிக் கொண்டு வெளியே வந்தான் மகேந்திரன். அவன் கையை தட்டி விட்டு அங்கிருந்து கடும் கோபத்துடன் சென்றான் யாழினியன். ஆர்த்தி அவனை அடியோடு தவிர்ப்பதை அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top